திருச்சிராப்பள்ளி - 0336. இளையவர் நெஞ்சு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இளையவர் நெஞ்சு (திருச்சிராப்பள்ளி)

முருகா! 
பொதுமாதர் பால் வைத்த அன்பை மாற்றி,
உனது திருவடியில் அன்பு வைக்க அருள்


தனதன தந்தத் தனதன தந்தத்
     தனதன தந்தத் ...... தனதான


இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற்
     றிடைகொடு வஞ்சிக் ...... கொடிபோல்வார்

இணையடி கும்பிட் டணியல்குல் பம்பித்
     திதழமு துந்துய்த் ...... தணியாரக்

களபசு கந்தப் புளகித இன்பக்
     கனதன கும்பத் ...... திடைமூழ்குங்

கலவியை நிந்தித் திலகிய நின்பொற்
     கழல்தொழு மன்பைத் ...... தருவாயே

தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற்
     சதுமறை சந்தத் ...... தொடுபாடத்

தரிகிட தந்தத் திரிகிட திந்தித்
     தகுர்தியெ னுங்கொட் ...... டுடனாடித்

தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற்
     சிறுவஅ லங்கற் ...... றிருமார்பா

செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத்
     திரிசிர குன்றப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இளையவர் நெஞ்சத் தளையம் எனும் சிற்-
     றிடை கொடு, வஞ்சிக் ...... கொடி போல்வார்,

இணை அடி கும்பிட்டு, ணி அல்குல் பம்பித்து,
     இதழ் அமுதும் துய்த்து, ...... அணி ஆரக்

களபசு கந்தப் புளகித இன்பக்
     கனதன கும்பத்து ...... இடை மூழ்கும்

கலவியை நிந்தித்து, லகிய நின் பொன்
     கழல் தொழும் அன்பைத் ...... தருவாயே.

தளர்வு அறும் அன்பர்க்கு உளம் எனும் மன்றில்
     சதுமறை சந்தத் ...... தொடுபாட,

தரிகிட தந்தத் திரிகிட திந்தித்
     தகுர்தி எனும் கொட்டு ...... உடன் ஆடித்

தெளிவுற வந்துஉற்று, ளிர் சிவன் அன்பில்
     சிறுவ! அலங்கல் ...... திருமார்பா

செழுமறை அம் சொல் பரிபுர! சண்!
     திரிசிர குன்றப் ...... பெருமாளே.

பதவுரை

       தளர்வு அறும் அன்பர்க்கு உளம் எனும் மன்றில் --- சோர்வு இல்லாத அன்பர்களின் உள்ளமாகிய மன்றத்தில்,

     சது மறை சந்தத்தொடு பாட --- நான்கு வேதங்களும் சந்தத்துடன் பாட,

     தரிகிட தந்தத் திரிகிட திந்தித் திந்தித் தகுர்தி எனும் கொட்டு உடன் ஆடி --- தரிகிட தந்தத் திரிகிட திந்தித் திந்தித் தகுர்தி என்ற ஒலியை யுண்டாக்கி முழவங்கள் கொட்ட நடனஞ் செய்து,

     தெளிவு உற வந்து உற்று ஒளிர் --- அன்பர்கள் தெளிவு பெறும் வண்ணம் அந்த அன்பர்களின் உள்ளத்தில் வந்து இருந்து விளங்கும்

     சிவன் அன்பின் சிறுவ --- சிவபெருமானுடைய அன்புக் குழந்தையே!

      அலங்கல் திருமார்பா --- பூமாலை அணிந்த திருமார்பை உடையவரே!

      செழு மறை அம் சொல் பரிபுர --- வளமுள்ள வேதங்களை அழகாகச் சொல்லுகின்ற சதங்கையை அணிந்தவரே!

      சண்ட --- வலிமையுடையவரே!

      திரிசிர குன்ற பெருமாளே --- திரிசிரமலையில் வாழும் பெருமையில் சிறந்தவரே!

      இளையவர் நெஞ்ச --- இளைஞர்களுடைய நெஞ்சுக்கு,

     தளையம் எனும் சிறு இடைகொடு ---

     வஞ்சிக் கொடி போல்வர் இணை அடி கும்பிட்டு --- வஞ்சிக் கொடிப்போன்ற பொது மாதரது இரண்டு கால்களையும் கும்பிட்டு,

     அணி அல்குல் பம்பித்து --- அழகிய அல்குல் பூரிப்பு அடைய,

     இதழ் அமுதும் துய்த்து --- இதழின் அமுதத்தைப் பருகி,

     அணி ஆர --- அழகிய முத்துமாலையும்,

     களப சுகந்த --- கலவைச் சாந்தின் நறுமணமும்,

     புளகித இன்ப --- புளகிதமும் இன்பமும் கொண்ட,

     கனதன கும்பத்து இடை மூழ்கும் கலவியை நிந்தித்து ---  பருத்த கொங்கைக்குடத்துள் மூழ்கும் கலவியின்பத்தை வெறுத்துத் தள்ளி,

     இலகிய நின்பொன் கழல் தொழும் அன்பைத் தருவாயே --- விளங்குகின்ற உமது அழகிய, திருவடியைத் தொழுகின்ற அன்பினை அடியேனுக்குத் தந்தருளுவீராக.


பொழிப்புரை

         சோர்வில்லாத அன்பர்களின் உள்ளமாகிய மன்றத்தில் நான்கு வேதங்களும் சந்தத்தோடு பாட, தரிகிட என்ற தாள ஒத்துடன் முழவங்கள் முழங்க, நடனஞ் செய்து, அன்பர்கள் தெளிவு பெறுமாறு அவர்கள் உள்ளத்தில் வந்து இருந்து விளங்குகின்ற சிவபெருமானுடைய இளங் குழந்தையே!

     மாலை அணிந்த அழகிய திருமார்பினரே!

     வளமையான வேதங்களை ஒலிக்கும் தண்டையணிந்த வலிமையுடையவரே!

     திரிசிரகிரியில் விளங்கும் பெருமிதமுடையவரே!

         இளைஞர்களுடைய நெஞ்சுக்கு விலங்கு என்று சொல்லத்தக்க சிற்றிடையுடைய வஞ்சிக்கொடி போன்ற பொது மாதரது, இரு கால்களையுங் கும்பிட்டு, அழகிய அல்குல் பூரிப்பு அடைய, வாயிதழ் அமுதைப் பருகி, அழகிய முத்து மாலையும், கலவைச் சாந்தின் நறுமணமும் புளகிதமும் கொண்ட பருத்த கொங்கைக் குடத்தில் முழுகும் கலவியின்பத்தை வெறுத்து விலக்கி விளங்குகின்ற உமது அழகிய திருவடியைத் தொழும் அன்பைத் தந்தருளுவீராக.

விரிவுரை

இளையவர் நெஞ்சத் தளையம் எனும் சிற்றிடை ---

பொது மாதரது சிற்றிடை இளைஞரது உள்ளத்தைச் சிறையில் இட்டுத் தளை பூட்டிவிடும் வன்மையுடையது.

கழல்தொழும் அன்பைத் தருவாயே ---

இறைவனுடைய திருவடியைத் தொழுதால் பிறவிப் பிணிதீரும். அன்புடன் தொழுதல் வேண்டும்.

தளர்வறும் அன்பர்க்கு உளமெனும் மன்றில் ---

சிவபெருமான் அடியார்களது உள்ளமாகிய நடனசாலையில் நடனம் ஆடுகின்றார். இதனையே அருட்பிரகாச வள்ளலார் கூறும் அழகான இப்பாடலைப் படியுங்கள்.

எத்துணையும் பேதம் உறாது, எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி, உள்ளே
ஒத்து, உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர்? அவர் உள்ளந்தான், சுத்த
சித்து உருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன்; அந்த
வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த தாலோ.

சதுர்மறை சந்தத் தொடுபாட................ஆடி ---

வேதங்கள் தாமே ஒலி செய்ய இறைவன் நடம் புரிந்தருளுகின்றார்.

செழுமறை அஞ்சொல் பரிபுர ---

முருகப் பெருமான் திருவடியில் அணிந்துள்ள தண்டை சதங்கை முதலிய அணிகலன்கள் வேத மந்திரங்களை உச்சரித்து ஒலிக்கின்றன.

மறைசதுர்விதந் தெரிந்து வகைசிறு
     சதங்கை கொஞ்ச மலரடி”        --- (அனைவரு) திருப்புகழ்.
  
கருத்துரை

         திரிசிரகிரித் திருமுருகா! மாதரது உறவை மறந்து உனது திருவடியைத் தொழும் அன்பைத் தந்தருளும்.

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...