திருச்சிராப்பள்ளி - 0337. ஒருவரொடு கண்கள்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஒருவரொடு கண்கள் (திருச்சிராப்பள்ளி)

முருகா! 
பொதுமாதர் மயக்கத்தை ஒழித்து,
உன் திருவடியில் அன்பு பொருந்த அருள்


தனதனன தந்த தனதனன தந்த
     தனதனன தந்த ...... தனதான


ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை
     ஒருவரொடு செங்கை ...... யுறவாடி

ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை
     ஒருவரொடி ரண்டு ...... முரையாரை

மருவமிக அன்பு பெருகவுள தென்று
     மனநினையு மிந்த ...... மருள்தீர

வனசமென வண்டு தனதனன வென்று
     மருவுசர ணங்க ...... ளருளாயோ

அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க
     அடலிடுப்ர சண்ட ...... மயில்வீரா

அமரர்முத லன்பர் முநிவர்கள்வ ணங்கி
     அடிதொழவி ளங்கு ...... வயலூரா

திருவையொரு பங்கர் கமலமலர் வந்த
     திசைமுகன்ம கிழ்ந்த ...... பெருமானார்

திகுதகுதி யென்று நடமிட முழங்கு
     த்ரிசிரகிரி வந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஒருவரொடு கண்கள், ஒருவரொடு கொங்கை,
     ஒருவரொடு செங்கை ...... உறவாடி,

ஒருவரொடு சிந்தை, ஒருவரொடு நிந்தை,
     ஒருவரொடு இரண்டும் ...... உரையாரை

மருவ, மிக அன்பு பெருக உளது என்று
     மனம் நினையும் இந்த ...... மருள் தீர,

வனசம் என வண்டு தனதனன என்று
     மருவு சரணங்கள் ......  அருளாயோ?

அரவம் எதிர் கண்டு நடுநடு நடுங்க,
     அடல் இடு ப்ரசண்ட ...... மயில்வீரா!

அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி
     அடிதொழ விளங்கு ...... வயலூரா!

திருவை ஒரு பங்கர், கமலமலர் வந்த
     திசைமுகன் மகிழ்ந்த ...... பெருமானார்

திகுதகுதி என்று நடம்இட முழங்கு
     த்ரிசிர கிரி வந்த ...... பெருமாளே.

பதவுரை

       அரவம் எதிர் கண்டு நடு நடு நடுங்க --- பாம்பு எதிரில் கண்டதும் நடு நடுங்கும்படி
    
     அடல் இடு ப்ரசண்ட வலிமையைக் காட்டுகின்ற, மிக்க வேகமுள்ள,

     மயில் வீரா --- மயிலை வாகனமாக உடையவரே!

      அமார் முதல் அன்பர் முனிவர்கள் வணங்கி --- தேவர்கள் முதலான அன்பர்களும் முனிவர்களும் வணங்கி

     அடிதொழ விளங்கு வயல் ஊரா --- திருவடியைத் தொழ விளங்குகின்ற வயலூரில் வாழுகின்றவரே!

      திருவை ஒரு பங்கர் --- இலக்குமியை ஒரு பங்கில் உடைய திருமாலும்,

     கமல மலர் வந்த திசைமுகன் --- தாமரை மலரில் தோன்றிய பிரமதேவரும்

     மகிழ்ந்த பெருமானார் --- மகிழ்ந்து போற்றுகின்ற சிவபெருமான்,

     திகுதகுதி என்று நடம் இட --- திகுதகுதி என்ற தாளவகையுடன் திருநடம் புரிய,

     முழங்கு --- வாத்தியங்கள் ஒலிக்கின்ற,

     த்ரிசிர கிரி வந்த பெருமாளே ---  திரிசிரகிரியில் எழுந்தருளியுள்ள பெருமையில் மிகுந்தவரே!

      ஒருவரொடு கண்கள் --- ஒருவருடன் கண்களைக் கொண்டு உறவாடியும்,

     ஒருவரொடு கொங்கை --- ஒருவருடன் தனங்களைக் கொண்டு உறவாடியும்,

     ஒருவரொடு செங்கை உறவு ஆடி --- ஒருவருடன் சிவந்த கையைக் குலுக்கி உறவாடியும்,

     ஒருவரொடு சிந்தை --- ஒருவரை மனதில் வைத்து விரும்பியும்,

     ஒருவரொடு நிந்தை --- ஒருவரை நிந்தித்தும்,

     ஒருவரொடு இரண்டும் உரையாரை --- ஒருவரிடம் விருப்பு பெறுப்பு என்ற இரண்டும் காட்டாமல் மௌனம் சாதித்தும் சாகசம் புரிகின்ற பொது மாதரை,

     மருவ --- சேர்வதற்கு

     மிக அன்பு பெருக உளது என்று --- மிகுந்த காதல் பெருக உள்ளது என்று

     மனம் நினையும் இந்த மருள் தீர --- மனத்தில் நினைக்கின்ற இந்த மயக்கம் தீருமாறு,

     வனசம் என --- தாமரை என்று எண்ணி,

     வண்டு தனதனன என்று மருவு --- வண்டுகள் தனதனன என்று ஒலி செய்து பொருந்துகின்ற

     சரணங்கள் அருளாயோ --- திருவடிகளை அருளமாட்டீரோ?

பொழிப்புரை

         எதிரில் கண்டதும் பாம்பு நடுநடுங்கும்படி வலிமையைக் காட்டுகின்ற, மிகுந்த வேகமுடைய மயிலை வாகனமாகக் கொண்ட வீரமூர்த்தியே!

     தேவர் முதலிய அன்பர்களும், முனிவர்களும், உமது திருவடியைத் தொழ விளங்குகின்ற வயலூர் அண்ணலே!

     இலக்குமி நாயகரும், தாமரையில் தோன்றிய பிரமதேவரும் மகிழ்ந்து தொழுகின்ற சிவபெருமான் திகுதகுதி என்று திருநடனம் புரிய முழவங்கள் முழங்கும் திரிசிர கிரியில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!

         ஒருவருடன் கண்களால் உறவு செய்தும், ஒருவருடன் தனங்களால் உறவு செய்தும், ஒருவருடன் கைகளால் உறவு செய்தும், ஒருவரை மனதில் விரும்பியும், ஒருவரை வெறுத்து நிந்தித்தும், ஒருவரை விருப்பு வெறுப்பு என்ற இரண்டும் இன்றி மௌன மாயிருந்தும், சாகசம் புரிகின்ற பொதுமாதரைச் சேர மிகவும் விரும்பி மனத்தில் நினைகின்ற இந்த மயக்கந் தீருமாறு, தாமரை மலர் என்று வண்டுகள் தனதனன என்று ஒலித்துப் பொருந்துகின்ற உமது திருவடியைத் தந்து அருள் புரிய மாட்டீரோ?


விரிவுரை

ஒருவரொடு கண்கள் ---

பொது மகளிர் ஒருவரைக் கண்களால் அழைத்தும் கண்களால் இனிது பார்த்தும் உறவாடுவார்கள்.


ஒருவரொடு கொங்கை ---

ஒருவரிடம் தழுவி தமது தனங்களால் உறவாடுவார்கள். தனங்களைத் தந்து தனங்களைக் கவர்வார்கள்.


ஒருவரொடு செங்கை ---

ஒருவரிடம் கை குலுக்கியும் கைகாட்டி அழைத்தும் கைகளினால் உறவாடுவார்கள்.


ஒருவரொடு சிந்தை ---

ஒருவரிடம் அன்பாகப் பேசி உறவு செய்கின்ற போதே மற்றொருவர் மீது மனதை வைத்திருப்பார்கள்.


ஒருவரொடு நிந்தை ---

பொருள் கொடுக்கவில்லையானால் உலோபி, கஞ்சன் என்று நிந்திப்பார்கள்.


ஒருவரொடு இரண்டும் உரையாரை ---

ஒருவரிடம் விருப்பு வார்த்தையும் வெறுப்பு வார்த்தையும் கூறாமல் மௌனம் சாதிப்பார்கள்.

 
வனசமென வண்டு தனதனன என்று மருவு சரணங்கள் ---

முருகனுடைய திருவடிகளில் வண்டுகள் தாமரையென்று கருதி ஒலித்துக்கொண்டு பொருந்துகின்றன.

அடியார்கள் ஆனந்தத் தேன் துளிக்கின்ற பாத தாமரையில் துதிகள் ஓதிப் பொருந்துகின்றார்கள் என்பது குறிப்பு.


அரவம் எதிர்கண்டு நடுநடு நடுங்க ---

மயிலைக் கண்டு பாம்பு மிகவும் நடுங்கும். பாம்பு என்பது மாயை. மயில் என்பது விந்து தத்துவம். விந்துவைக் கண்டு மாயை நடுங்கி ஒடுங்கும்.


திருவை ஒரு பங்கர் ---

திரு-இலக்குமி. இலக்குமி நாயகர் திருமால்.

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ”      --- பெரிய திருமொழி.

திரு-பார்வதியெனக் கொண்டு பார்வதி பங்கர் சிவபெருமான் என்றும் பொருள் கொள்ளலாம்.

பேழையாழ்வார்சடைப் பெருந் திருமகள் தனைப்
     பொருந்த வைத்து ஒருபாகம்”        ---திருஞானசம்பந்தர்.


த்ரிசிர கிரி ---

திரிசிரன் என்ற அரக்கன் பூசித்த திருத்தலம். மலைக் கோயில் மிகவும் அழகியது. அரிய பெரிய சிறப்பு வாய்ந்தது.


கருத்துரை

திருசிராப்பள்ளி மேவும் தேவா! உமது பாதமலர் தந்து அருள் செய்வீர்.


No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...