அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குமுத வாய்க்கனி
- திருச்சிராப்பள்ளி
முருகா! மாதர் மயலில்
விழுந்த அடியேன் ஈடேற அருள்
தனன
தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
குமுத
வாய்க்கனி யமுத வாக்கினர்
கோலே வேலே சேலே போலே ...... அழகான
குழைகள்
தாக்கிய விழிக ளாற்களி
கூரா வீறா தீரா மாலா ...... யவரோடே
உமது தோட்களி லெமது வேட்கையை
ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் ...... எனவேநின்
றுடைதொ
டாப்பண மிடைபொ றாத்தன
மூடே வீழ்வே னீடே றாதே ...... யுழல்வேனோ
தமர
வாக்கிய அமரர் வாழ்த்திய
தாதா வேமா ஞாதா வேதோ ...... கையிலேறீ
சயில
நாட்டிறை வயலி நாட்டிறை
சாவா மூவா மேவா நீவா ...... இளையோனே
திமிர
ராக்கதர் சமர வேற்கர
தீரா வீரா நேரா தோரா ...... உமைபாலா
திரிசி
ராப்பளி மலையின் மேற்றிகழ்
தேவே கோவே வேளே வானோர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
குமுத
வாய், கனிஅமுத வாக்கினர்,
கோலே வேலே சேலே போலே ...... அழகான
குழைகள்
தாக்கிய விழிகளால், களி
கூரா வீறா தீரா மால் ஆய், ...... அவரோடே
"உமது தோட்களில் எமது வேட்கையை
ஓரீர் பாரீர் வாரீர் சேரீர்" ...... எனவே, நின்று
உடை தொடாப் பணம் இடை பொறாத் தனம்
ஊடே வீழ்வேன், ஈடேறாதே ...... உழல்வேனோ?
தமர
வாக்கிய அமரர் வாழ்த்திய
தாதாவே! மா ஞாதாவே! ...... தோகையில்ஏறீ!
சயில
நாட்டு இறை, வயலி நாட்டு இறை,
சாவா மூவா மேவா நீவா ...... இளையோனே!
திமிர
ராக்கதர் சமர வேல்கர!
தீரா! வீரா! நேரா! தோரா ...... உமைபாலா!
திரி
சிராப்பளி மலையின் மேல்திகழ்
தேவே! கோவே! வேளே! வானோர் ...... பெருமாளே!
பதவுரை
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதாவே ---
ஒலிசெய்யும் துதிச் சொற்களால் தேவர்கள் வாழ்த்துகின்ற கொடை வள்ளலே!
மா ஞாதாவே --- சிறந்த ஞானமூர்த்தியே!
தோகையில் ஏறீ ---
மயிலின் மீது ஏறி வருகின்றவரே!
சயில நாட்டு இறை --- மலை நாடுகட்குத்
தலைவரே!
வயலிநாட்டு இறை --- வயலூர் நாட்டுக்குத்
தலைவரே!
சாவா மூவா மேவா நீ வா --- இறவாமையும், முதிர்ச்சி அடையாமையும், அடையாத தேவரீர்! வருக,
இளையோனே --- என்றும் இளையவரே!
திமிர ராக்கதர் சமர வேல்கர --- இருள்
போல் கருநிறமுடைய அரக்கருடன் போர் செய்த வேலை ஏந்திய திருக்கரத்தினரே!
தீரா --- தைரியமுடையவரே!
வீரா --- வீரமூர்த்தியே!
நேரா --- நேர்மை யுடையவரே!
தோரா உமை பாலா --- தோல்வியில்லாத
உமாதேவியின், குமாரரே!
திரிசிராப்பள்ளி மலையின் மேல் திகழ் தேவே
--- திரிசிராப்பள்ளி மலைமீது விளங்குகின்ற, கடவுளே!
கோவே --- அரசே!
வேளே --- உபகாரியே!
வானோர் பெருமாளே --- தேவர்கள் போற்றும்
பெருமையுடையவரே!
குமுத வாய்க் கனி அமுத வாக்கினர் ---
குமுத மலர் போன்ற வாயினின்றும் பழம் போலவும், அமுதம் போலவும் இனிமையாகப் பேசுபவர்.
கோல், வேல், சேல் போலே --- அம்பு, வேலாயுதம், சேல்மீன் போன்ற
அழகான குழைகள் தாக்கிய
விழிகளால் களிகூரா --- அழகிய காதிலுள்ள குழைகளைத் தாக்குகின்ற கண்களினால், மகிழ்ச்சி மிகுதியாக அடைந்து,
வீறா தீரா மால் ஆய் அவரோடே = பெருமையுடன் முடிவு
இல்லாத மோக மயக்கத்தையடைந்து, அப்பொது மாதர்களுடன்,
உமது தோள்களில் எமது வேட்கையை ஓரீர், பாரீர்,
வாரீர், சேரீர் எனவே நின்று --- உங்கள் தோள்களின் மீது எமக்கு உள்ள ஆசையை நீர்
ஆராயமாட்டீர், எம்மைப்
பார்க்கமாட்டீர், எம்மிடம் வர மாட்டீர், எம்மைச் சேரமாட்டீர், என்றெல்லாம் கூறிக்கொண்டு நின்று,
உடை தொடா பணம் --- அவர்களின் ஆடையைத் தொட்டு பாம்பின்
படம் போன்ற அல்குல் இடத்தும்,
இடை பொறா தனம் --- இடை தாங்கமுடியாத பருத்த
கொங்கைகளின் இடத்தும்
ஊடே
வீழ்வேன் --- வீழுகின்ற நாயினேன்,
ஈடேறாதே உழல்வேனோ --- ஈடேறும் வழியறியாமல், திரிவேனோ?
பொழிப்புரை
ஒலிமிகுந்த துதி வாக்கியங்களுடன்
தேவர்கள் வாழ்த்துகின்ற கொடைவள்ளலே!
ஞானமூர்த்தியே!
மயில்வாகனரே!
மலை நாட்டுக்கு அதிபரே!
வயலூர் நாட்டுக்குத் தலைவரே!
சாவாதவரே!
மூப்பு அடையாதவரே!
நீர் அடியேன்பால் வருக,
இளைஞரே!
இருள்போன்ற கரிய அரக்கருடன் போர் செய்த
வேலை
யேந்திய திருக்கரத்தினரே!
தைரியமுடையவரே!
வீரமூர்த்தியே!
நேர்மையுடையவரே!
தோல்வியில்லாத பார்வதியம்மையின் பாலகரே!
திரிசிராப்பள்ளி மலையின்மீது விளங்குகின்ற
தெய்வமே!
அரசரே!
உபகாரியே!
தேவர்கள் போற்றும் பெருமிதமுடையவரே!
குமுத மலர் போன்ற வாயினின்று கனிபோலவும், அமுதம் போலவும், இனிமையாகப் பேசுபவர்கள், அம்பு, வேல், சேல்மீன், போன்ற அழகுடையதும், காதுகளில் உள்ள தோடுவரை நீண்டு அவைகளைத்
தாங்குகின்றதுமான கண்களைக் கொண்டு அடியேன் களிப்பு மிகுந்து, பெருமையுடன் முடிவில்லாத மோகத்தை அடைந்து, அப்பொது மாதருடன், ‘உமது தோள்களில் எமக்குள்ள ஆசையை நீர்
ஆராய்கிலீர்; எம்மைப் பார்க்கிலீர்; எம்பால் வருகிலீர்; எம்மைச் சேர்கிலீர்’ என்றெல்லாம் கூற
நின்று, அவருடைய உடையைத்
தொட்டு, பாம்பின் படம் போன்ற
அல்குலிலும், இடையை தாங்கமாட்டாத
பருத்த தனங்களிலும் விழுகின்ற நாயினேன் ஈடேறும் வழியை யறியாமல் திரியலாமோ?
விரிவுரை
குமுத
வாய்க் கனிஅமுத வாக்கினர் ---
பொதுமகளிர்
வாய் குமுதமலர் போல் அழகாக இருக்கும். அவ்வாயினின்றும் கனிந்த கனிரசம்போலும், அமிர்தம் போலும், இனிக்கின்ற சொற்கள் உதிரும், அதனால் அவர்பால் செல்லும் ஆடவர்கள்
மயங்கித் தியங்கி உழலுவார்கள்.
கோலே
வேலே சேலே போலே ---
கண்கள்
அம்பு போலவும், வேல்போலவும், சேல்மீன் போலவும் கூர்மையாகவும்
அழகாகவும் இருக்கும்.
குழைகள்
தாக்கிய விழிகள் ---
கண்கள்
காதுவரை நீண்டிருக்கும். கண்களின் கருவிழி பிறழ்ந்து பிறழ்ந்து சென்று, அக்காதின் குழையுடன் போர் புரிவதுபோல்
திகழும்.
தாதாவே
---
தாதா-கொடைவள்ளல்.
உலகில்
புலவர்கள் அறிஞர்கள் வீரர்கள் பலப்பலர் இருந்தார்கள், இருக்கின்றார்கள். வள்ளல்கள் மட்டுஞ்
சிலர்தான். உலகந் தோன்றிய நாள் தொட்டு இன்றுவரை இருபத்தொரு வள்ளல்கள் என்று
கணக்கிடப்பட்டுள்ளது.
ஆர்த்த
சபை நூற்று ஒருவர், ஆயிரத்து ஒன்றாகும் புலவர்,
வார்த்தை
பதினாயிரத்தில் வாய்க்குமே, -பூத்தகுழல்
தண்
தாமரைத் திருவே! தாதா கோடிக்கு ஒருவர்
உண்டாயின்
உண்டு என்று உறு.
தாதாவாகிய
கொடை வள்ளல்கள் அனைவருக்கும் தலைவர் முருகவேள். பன்னிரு கரங்களாலும் அள்ளி
வழங்கும் வள்ளல்.
“வேண்டும்அடியர் புலவர் வேண்ட அரிய
பொருளை
வேண்டும் அளவில் உதவும் பெருமாளே” --- கோங்கமுகையு)
திருப்புகழ்.
“வேண்டிய போதுஅடியர் வேண்டிய போகம்அது
வேண்ட வெறாது உதவு பெருமாளே” --- (சாந்தமில்) திருப்புகழ்.
“அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன
அவைதரு வித்துஅருள் பெருமாளே” --- (கலகலெனச்சில) திருப்புகழ்.
“யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும்
த்யாகாங்க சீலம் போற்றி” --- (நாகாங்க) திருப்புகழ்.
"எவ்வண்ணம்
வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே
இரங்கி
ஈந்து அருளும் பதம்" --- திருவடிப்
புகழ்ச்சி.
"எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம்" --- திருவருட்பா.
"வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" --- அப்பர்.
ஞாதாவே
---
ஞாதா-அறிஞன்.
ஞானமே வடிவாய தெய்வம் முருகவேள்
“ஞானாந்தா னுருவாகிய நாயகன்” --- கந்தபுராணம்.
“ஞானபண்டித சுவாமீ நமோநம” --- திருப்புகழ்.
“ஞானாகர சுர பாஸ்கனே” ---கந்தரலங்காரம்.
சயில
நாட்டு இறை ---
மலையும்
மலையைச் சார்ந்த நிலமும் குறிஞ்சி. குறிஞ்சி நிலக்கடவுள் குமரன். அவன்
தெய்வசிகாமணி. அதனால் பழந்தமிழர்கள் மலைமீது வைத்து மலைக்கடவுளாக வழிபட்டார்கள்.
“மலைக்கு நாயக” என்று
சுவாமிகள் திருக்கொணாமலைத் திருப்புகழில் கூறுகின்றார்கள்.
“சேயேன் மேய மைவரை யுலகும்” --- தொல்காப்பியம்.
வயலிநாட்டு
இறை ---
வயலூர்
முருகனுக்கு உகந்த திருத்தலம். இத்தலத்தில் முருகவேள் பரம வரதராக விளங்குகின்றார்.
அந்த வயலூருக்கும், அதைச் சார்ந்த
நாட்டுக்கும் தலைவர் முருகர்.
சாவா
மூவா மேவா ---
முருகன்
பிறப்பும் இறப்பும் இல்லாதவன்.
“என்றும் அகலாத
இளமைக்கார” --- (சந்தனசவாது) திருப்புகழ்.
“பெம்மான் முருகன்
பிறவான் இறவான்” --- கந்தர்அநுபூதி.
தோரா
உமைபாலா ---
தோரா-தோலாத.
“தோரா வென்றிப்
பேரா! மன்றல்
தோளா! குன்றைத் தொளையாடீ” --- (ஓராதொன்றைத்) திருப்புகழ்.
கருத்துரை
திருச்சிராப்பள்ளி
மேவும் தேவே! மாதர் மயலில் வீழ்ந்து உழலாவண்ணம் காத்தருள்வீர்.
No comments:
Post a Comment