திருச்சிராப்பள்ளி - 0339. குவளை பூசல்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குவளை பூசல் ---  திருச்சிராப்பள்ளி

முருகா! மாதர் மயல் அற அருள்.


தனன தானன தத்தன தந்தன
     தனன தானன தத்தன தந்தன
          தனன தானன தத்தன தந்தன ...... தனதான


குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்
     கடுவ தாமெனு மைக்கண்ம டந்தையர்
          குமுத வாயமு தத்தைநு கர்ந்திசை ...... பொருகாடை

குயில்பு றாமயில் குக்கில்சு ரும்பினம்
     வனப தாயுத மொக்குமெ னும்படி
          குரல்வி டாஇரு பொற்குட மும்புள ...... கிதமாகப்

பவள ரேகைப டைத்தத ரங்குறி
     யுறவி யாளப டத்தைய ணைந்துகை
          பரிச தாடன மெய்க்கர ணங்களின் ...... மதனூலின்

படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ
     அவச மாய்வட பத்ரநெ டுஞ்சுழி
          படியு மோகச முத்ரம ழுந்துத ...... லொழிவேனோ

தவள ரூபச ரச்சுதி யிந்திரை
     ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்
          சமுக சேவித துர்க்கைப யங்கரி ...... புவநேசை

சகல காரணி சத்திப ரம்பரி
     யிமய பார்வதி ருத்ரிநி ரஞ்சனி
          சமய நாயகி நிஷ்களி குண்டலி ...... யெமதாயி

சிவைம நோமணி சிற்சுக சுந்தரி
     கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
          த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் ......முருகோனே

சிகர கோபுர சித்திர மண்டப
     மகர தோரண ரத்நஅ லங்க்ருத
          திரிசி ராமலை அப்பர்வ ணங்கிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


குவளை, பூசல் விளைத்திடும் அம்கயல்,
     கடு அதாம் எனு மைக்கண் மடந்தையர்,
          குமுத வாய் அமுதத்தை நுகர்ந்து, சை ...... பொருகாடை

குயில் புறா மயில் குக்கில் சுரும்பு இனம்
     வனபதாயுதம் ஒக்கும் எனும்படி
          குரல் விடா, இரு பொன் குடமும் புள ...... கிதமாக,

பவள ரேகை படைத்த அதரம் குறி
     உற, வியாள படத்தை அணைந்து, கை
          பரிச தாடன மெய்க்கர ணங்களின் ...... மதன்நூலின்

படியிலே செய்து, உருக்கி முயங்கியெ,
     அவசமாய் வட பத்ர நெடுஞ்சுழி
          படியும் மோக சமுத்ரம் அழுந்துதல் ...... ஒழிவேனோ?

தவள ரூப சரச்சுதி, இந்திரை,
     ரதி, புலோமசை, க்ருத்திகை, ரம்பையர்,
          சமுக சேவித துர்க்கை, பயங்கரி, ...... புவந ஈசை,

சகல காரணி, சத்தி, பரம்பரி,
     இமய பார்வதி, ருத்ரி, நிரஞ்சனி,
          சமய நாயகி, நிஷ்களி, குண்டலி, ...... எமது ஆயி,

சிவை, மநோமணி, சிற்சுக சுந்தரி,
     கவுரி, வேத விதக்ஷணி, அம்பிகை,
          த்ரிபுரை, யாமளை அற்பொடு தந்து அருள்..... முருகோனே

சிகர கோபுர சித்திர மண்டப
     மகர தோரண ரத்ந அலங்க்ருத
          திரி சிராமலை அப்பர் வணங்கிய ...... பெருமாளே.


பதவுரை

     தவள ரூப சரச்சுதி --- வெண்ணிறமுடைய சரஸ்வதி,

     இந்திரை --- இலக்குமி,

     ரதி --- இரதி தேவி,

     புலோமசை --- இந்திராணி,

     க்ருத்திகை --- கார்த்திகை மாதர்கள்,

     ரம்பையர் --- அரம்பையர் ஆகிய,

     சமூக சேவித --- கூட்டத்தினர்கள் வணங்குகின்ற,

     துர்க்கை --- துர்க்கை தேவி,

     பயங்கரி --- தீயவர்க்கு அச்சத்தைச் செய்கின்றவள்,

     புவந ஈசை --- புவனங்கட்குத் தலைவி,

     சகல காரணி --- சகல காரியங்கட்குங் காரணமாயிருப்பவள்,

     சக்தி --- ஆற்றலாகத் திகழ்பவள்,

     பரம்பரி --- முழுமுதலாம் தேவி,

     இமய பார்வதி --- இமயமலையரையன் மகளாய் வந்த பார்வதி,

     ருத்ரி --- உருத்ரி,

     நிரஞ்சனி --- அழுக்கற்றவள்,

     சமய நாயகி --- சமயங்களுக்குத் தலைவி,

     நிஷ்களி --- உருவமில்லாதவள்,

     குண்டலி --- குண்டலம் அணிந்தவள்,

     எமது ஆயி --- எங்கள் தாய்,

     சிவை --- சிவபிரானுடைய தேவி,

     மநோமணி --- மனத்தை ஞானநிலைக்கு எழுப்புபவள்,

     சிற்சுக சுந்தரி --- அறிவு ரூப ஆனந்த அழகி,   

     கவுரி --- பொன்னிறமுடையவள்,

     வேத விதட்சணி --- வேதத்தில் சிறப்பாக எடுத்து ஓதப்பட்டவள்,

     அம்பிகை --- அம்பிகை,

     த்ரிபுரை --- இடை பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளிலும் இருப்பவள்,

     யாமளை --- சியாமள நிறம் படைத்தவள் ஆகிய பார்வதி அம்மை,

     அற்பொடு தந்து அருள் முருகோனே --- அன்புடன் பெற்றருளிய முருகக் கடவுளே!

     சிகர --- மலைஉச்சியும்,

     கோபுர --- கோபுரமும்,

     சித்திர மண்டப --- சித்திரங்கள் எழுதிய மண்டபங்களும்,

     மகர தோரண --- மகர மீன் வடிவில் அமைந்த தோரணங்களும்,

     ரத்ன அலங்க்ருத --- இரத்தின மயமான அலங்காரங்களும் உடைய,

     திரிசிரா மலை அப்பர் வணங்கிய --- திரிசிராமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் வணங்கிய,

     பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!

     குவளை --- குவளை மலர் போலவும்,

     பூசல் விளைத்திடும் அம் கயல் --- போர் புரியும் அழகிய கயல் மீன் போலவும்,

     கடு அது ஆம் எனும் --- விஷம் போலவும் உள்ள,

     மை கண் மடந்தையர் --- மைபூசிய கண்களையுடைய மாதர்களின்,

     குமுத வாய் அமுதத்தை நுகர்ந்து --- குமுதமலர் போன்ற வாயிதழ் அமுதத்தைப் பருகி,

     இசை பொரு காடை --- ஒலி பொருந்திய காடை என்னும் பறவை,

     குயில் புறா மயில் --- குயில் புறா மயில்,

     குக்கில் --- செம்போத்து,

     சுரும்பு --- வண்டு,

     அனம் --- அன்னம்,

     வனபதாயுதம் ஒக்கும் எனும்படி --- அழகிய கோழி என்ற இப்பறவைகளின் குரலை நிகர்க்கும் என்று சொல்லத்தக்க,

     குரல் விடா --- குரல்களைக் காட்ட,

     இரு பொற்குடமும் புளகிதம் ஆக --- இரண்டு தங்கக் குடம் போன்ற தனங்கள் புளகிதம் எய்த,

     பவள ரேகை படைத்த அதரம் குறி உற --- பவள ரேகை போன்ற வாயிதழில் குறியுண்டாக,

     வியாள படத்தை அணைந்து --- பாம்பின் படம் போன்ற அல்குலை அணைந்து,

     கை பரிச தாடனம் --- கையால் தொட்டு தட்டுகை முதலிய,

     மெய் கரணங்களின் --- உடலில் செய்யும் தொழில்களை,

     மதன் நூலின் படியிலே செய்து --- காம நூலின் முறைப்படி செய்து,

     உருக்கி --- பெண்களின் உள்ளத்தை உருக்கி,

     முயங்கியெ --- கூடி,

     அவசமாய் --- தன்வசம் அழிந்து,

     வடபத்ர நெடும் சுழி படியும் --- ஆலிலை போன்ற வயிற்றுச் சுழியிலே முழுகும்,

     மோக சமுத்திரம் அழுந்துதல் ஒழிவேனோ --- மோகக் கடலில் அழுந்தும் துயரத்தைத் தவிர மாட்டேனோ?


பொழிப்புரை

         வெண்ணிறம் படைத்த கலைமகள், இலக்குமி, இரதி, இந்திராணி, கார்த்திகை மாதர்கள், அரம்பையர் முதலிய குழுவினரால் வணங்கப் பெற்ற துர்க்காதேவி, தீயவர்க்கு அச்சத்தை செய்பவள், புனேசுவரி, எல்லாக் காரியங்கட்குங் காரணமாயிருப்பவள், சக்தி, பெரிய பொருளாக இருப்பவள், இமவானுடைய புதல்வியாக வந்த பார்வதி, உருத்திரி, அழுக்கற்றவள். சமயங்கட்குத் தலைவி, உருவமில்லாதவள், குண்டலமணிந்திருப்பவள், எங்கள் அன்னை, சிவபத்தினி, மனோன்மணி, அறிவின் வடிவாய் ஆனந்த அழகி, பொன்னிறம் படைத்தவள், வேதங்களால் புகழ்ந்து பேசப்பட்டவள், அம்பிகை, திரிபுரை சியாமள நிறமுடையவள் ஆகிய எம்பிராட்டி பெற்றருளிய முருகக் கடவுளே!

     மலையுச்சியும் கோபுரமும் சித்திரமண்டமும் மீன் வடிவில் அமைந்த தோரணங்களும், இரத்தினமயமான அலங்காரங்களும் உடைய திருச்சிராமலையில் எழுந்தருளிய சிவபெருமான் வணங்கிய பெருமிதமுடையவரே!

         நீலோற்பலம் போலவும், போர்புரியும் அழகிய கயல்மீன்களைப் போலவும், நஞ்சைப் போலவும், மைபூசிய கண்களையுடைய மாதர்களின் குமுதம் போன்ற வாயிதழ் அமுதத்தைப் பருகி, ஒலியை எழுப்பும், காடை, குயில், புறா, மயில், செம்போத்து, வண்டு, அன்னம், அழகிய சேவல் என்ற பறவைகளின் குரலை நிகர்க்கும் என்று சொல்லத்தக்க குரலைக் காட்ட, இரண்டு தங்கக் குடங்களை யொத்த தனங்கள் பூரிப்பு அடைய, பவளரேகை போன்ற வாயிதழிற் குறியுண்டாகப் பாம்பின்படம் போன்ற அல்குலைச் சேர்ந்து, கையால் தடவித் தட்டுதல் முதலிய உடல் கொண்டுசெய்யும் தொழில்களைக் காமநூலின் முறைப்படி செய்து அம்மாதரின், உள்ளத்தை உருக்கிக் கலந்து தன்வசம் அழிந்து, ஆலிலை போன்ற வயிற்றின் சுழியில் முழுகுகின்ற மோக சமுத்திரத்தில் அழுந்துந் தன்மையை ஒழிவேனோ!


விரிவுரை

         இத்திருப்புகழில் முதற்பகுதி பொதுமாதரின் கலவிச் செயல்களைப் பற்றிக் கூறி, அதனினின்றும் உவர்ப்பு அடைதல் வேண்டும் என்று இறைவனிடம் அடிகள் வேண்டுகின்றார்.

     பிற்பகுதியில் அம்பிகையைப் பற்றி விரிவாகக் கூறுகின்றார். அம்பிகையின் இருபத்தொரு திருநாமங்கள் இங்கே கூறப்பட்டுள்ளன.

கருத்துரை

         திரிச்சிராப்பள்ளி மேவிய திருமுருகா! மாதர் வயப்பட்டு அழியாவண்ணம் ஆண்டருள்வீர்.







No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...