அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சத்தி பாணீ (திருசிராப்பள்ளி)
முருகா! மாதர் மயலில்
விழுவதை விடுத்து,
உன் திருவடிகளில் விழ
அருள்
தத்த
தானா தனாதன தத்த தானா தனாதன
தத்த
தானா தனாதன ...... தந்ததான
சத்தி
பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
தத்வ வாதீ நமோநம ...... விந்துநாத
சத்து
ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
தற்ப்ர தாபா நமோநம ...... என்றுபாடும்
பத்தி
பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
பச்சை பாடீர பூஷித ...... கொங்கைமேல்வீழ்
பட்டி
மாடான நானுனை விட்டிரா மேயு லோகித
பத்ம சீர்பாத நீயினி ...... வந்துதாராய்
அத்ர
தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி
யர்க்ய சோமாசி யாகுரு ...... சம்ப்ரதாயா
அர்ச்ச
னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய
அக்ஷ மாலா தராகுற ...... மங்கைகோவே
சித்ர கோலா கலாவிர லக்ஷ்மி சாதா ரதாபல
திக்கு பாலா சிவாகம ...... தந்த்ரபோதா
சிட்ட
நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
தெர்ப்பை யாசார வேதியர் ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
சத்தி
பாணீ! நமோ நம, முத்தி ஞானீ! நமோ நம,
தத்வ வாதீ! நமோ நம, ...... விந்துநாத
சத்து
ரூபா! நமோ நம, ரத்ந தீபா! நமோ நம,
தற் ப்ரதாபா! நமோ நம, ...... என்று பாடும்,
பத்தி
பூணாமலே, உலகத்தின் மானார் சவாது
அகில்
பச்சை பாடீர பூஷித ...... கொங்கைமேல் வீழ்,
பட்டி
மாடு ஆன நான், உனை விட்ட் இராமே, உலோக இத
பத்ம சீர்பாதம் நீ இனி ...... வந்துதாராய்.
அத்ர
தேவ ஆயுதா! சுரர் உக்ர சேனாபதீ! சுசி
அர்க்ய சோமாசியா குரு ...... சம்ப்ரதாயா!
அர்ச்சன
ஆவாகனா! வயலிக்குள் வாழ் நாயகா! புய
அக்ஷ மாலாதரா! குற ...... மங்கை கோவே!
சித்ர கோலாகலா! விர லக்ஷ்மி சாதாரதா! பல
திக்கு பாலா! சிவாகம ...... தந்த்ர போதா!
சிட்ட
நாதா! சிராமலை அப்பர் ஸ்வாமீ! மகாவ்ருத
தெர்ப்பை ஆசார வேதியர் ...... தம்பிரானே.
பதவுரை
அத்ர தேவ ஆயுதா --- படைக்கல நாயகமாகிய
வேலாயுதத்தை ஏந்தியவரே!
சுரர் உக்ர சேனாபதீ --- தேவர்களைச்
சேனைகளாகக் கொண்ட வேகமுடைய அதிபதியே!
சுசி அர்க்ய --- தூய்மையான மந்திர
நீரோடு கூடியதும்,
சோமாசியா குரு சம்ப்ரதாயா --- சோமரசம்
பிழிந்து செய்யத் தக்கதுமாகிய வேள்விகட்கு குருமூர்த்தமாக நின்ற, தொன்று தொட்டு வந்த வழக்கமுடையவரே!
அர்ச்சன, ஆவாகனா --- பூசை காலத்தில்
செய்யும் அருச்சனைகளுக்கும், ஆவாகனங்களுக்கும்
உரியவரே!
வயலிக்குள்
வாழ் நாயகா --- வயலூர் என்னும் திருத்தலத்தில் வாழ்கின்ற
தலைவரே!
புய அக்ஷ மாலை ஆதரா ---
திருப்புயங்களில் உருத்திராட்ச மாலையை அணிந்து கொண்டுள்ள அன்பரே!
குறமங்கை கோவே ---
வள்ளிபிராட்டியாருக்கு மணவாளரே!
சித்ர கோலா கலா --- அழகும் ஆடம்பரமும்
உடையவரே!
விர லக்ஷ்மி சாதாரதா ---
வீரலக்ஷ்மியாகிய ஆதாரத்துடன் விளங்குபவரே!
பல திக்கு பாலா ---திசைகள் பலவற்றையும்
காப்பாற்றுபவரே!
சிவ ஆகம தந்த்ர போதா --- சிவபரம்
பொருளைப்பற்றிப் பேசும் ஆகமங்களாகிய அறிவு நூல்களைப் பக்குவான்மாக்கட்கு
உபதேசித்தவரே!
சிட்ட நாதா --- ஒழுக்கமுடைய
ஞானிகட்கெல்லாம் தலைவரே!
சிராமலை அப்பர் ஸ்வாமி ---
திரிசிராமலைமீது வீற்றிருக்கும் சிவபெருமான் உடைமையாக உடையவரே!
மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர்
தம்பிரானே --- சிறந்த விரதங்களோடும், தருப்பை
புல்லுடன் விளங்கும், வேதபாரகர்களுக்குத்
தலைவரே!
சக்தி பாணீ நமோ நம --- வேற்படையைத்
தாங்கிய திருக்கையரே! போற்றி போற்றி,
முத்திஞானீ நமோ நம --- முத்தியைத்
தரவல்ல ஞான பண்டிதரே போற்றி போற்றி,
விந்துநாத சத்து ருபா நமோ நம ---
சிவதத்துவங்கள் ஐந்தினுள் விளங்கும் விந்துதத்துவம் நாத தத்துவம் என்ற இரண்டையுங்
கடந்து நிற்கும் உண்மை வடிவினரே! போற்றி போற்றி,
ரத்ன தீபா நமோ ---மணி விளக்குபோல்
ஒளிர்பவரே போற்றி போற்றி,
தன் ப்ரதாபா நமோ நம --- தனக்கே உரிய
புகழ் மிக்கவரே போற்றி போற்றி,
என்று பாடும் பத்தி பூணாமல் --- என்று
இவ்வண்ணம் வாயாரப் பாடித் துதிக்கும்படியான, அன்புநெறியை மேற்கொள்ளாமல்(ஏ-அசை),
உலகத்தின் --- இவ்வுலகின் கண்,
மானார் --- மான்போன்ற பெண்களது,
சவாது அகில் பச்சை பாடீர பூஷித கொங்கை மேல் ---சவ்வாது
அகிற்சாந்து பச்சைக் கற்பூரம் சந்தனம் ஆகிய நறுமணக் கலவைகளை அணிந்துள்ள தனங்களின்
மேல்
வீழ் --- மோக அந்தகாரத்துடன் விழுந்து
மயங்குகின்ற,
பட்டிமாடு ஆன நான் --- திருட்டு மாட்டைப்
போன்ற அடியேன்,
உனை விட்டு இராமே --- தேவரீரை அரைக்கண
நேரமேனும் விட்டுப் பிரிந்திராமல்,
உலோக இத --- உலகங்கட்கு நன்மையைச் செய்வதும்,
பத்ம சீர்பாதம் --- தாமரையைப் போன்றதும்
சிறப்புமிக்கதுமாகிய உமது திருவடிகளை,
இனி நீ வந்து தாராய் --- இனியாவது தேவரீர்
அடியேன்முன் எழுந்தருளி வந்து தந்தருள்வீர்.
பொழிப்புரை
படைக்கல அரசராகிய வேலாயுதத்தைத்
தாங்கியவரே!
தேவர்களைச் சேனைகளாகக் கொண்ட வேகமுடைய
அதிபதியே!
தூய்மையான மந்திர நீரைக்கொண்டு சோமரசம்
பிழிந்து செய்யும் சிவவேள்விகட்குத் தொன்றுதொட்டு குரு மூர்த்தமாக நின்றவரே!
அருச்சனைகளும் பூஜாகாலத்தில் செய்யும்
வயலூர் என்னும் புண்ணியத்தலத்தில் வாழ்கின்ற பெருமானே!
திருப்புயங்களில் உருத்திராட்ச மாலையை
அணிந்து கொண்ட அன்புடையவரே!
வள்ளியம்மையாருடைய கணவரே!
அழகும் ஆடம்பரமும் உடையவரே!
வீரலக்ஷுமியாகிய ஆதாரத்துடன்
விளங்குபவரே!
திசைகள் பலவற்றையும் காப்பாற்றுபவரே!
சிவபரம்பொருளைப்பற்றிப் பேசும்
ஆகமங்களாகிய அறிவுநூல்களைப் பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசிப்பவரே!
ஒழுக்கமுடைய ஞானிகட்கெல்லாம் தலைவரே!
திரிசிராமலைமீது உறைகின்ற சிவமூர்த்தியை
உடைமையாக உடையவரே!
சிறந்த விரதங்களும் தருப்பையும்
தூய்மையும் உடைய சிவவேதியர்கட்குத் தலைவரே!
வேற்படையைத் தாங்கிய திருக்கையரே!
போற்றி போற்றி,
முத்தியைத் தரவல்ல ஞான பண்டிதரே போற்றி
போற்றி,
சிவதத்துவங்கள் ஐந்தினுள் விளங்கும்
விந்துதத்துவம் நாத தத்துவம் என்ற இரண்டையுங் கடந்து நிற்கும் உண்மை வடிவினரே!
போற்றி போற்றி,
மணி விளக்குபோல் ஒளிர்பவரே போற்றி
போற்றி,
தனக்கே உரிய புகழ் மிக்கவரே போற்றி போற்றி,
என்று என்புருகிப் பாடித் துதிக்கும் பக்திநெறியை
மேற்கொள்ளாமல்,
உலகத்திலே பெண்களுடைய சவ்வாது அகிற்சாந்து
பச்சைக் கற்பூரம் சந்தனக் குழம்பு முதலிய நறுமணங்களால் அலங்கரித்த தனங்களின் மீது
காமுற்று வீழ்ந்து, அறிவு மங்கிய திருட்டு மாட்டைப் போன்ற அடியேன், தேவரீரை
விட்டுப் பிரியாமல் இருக்க, உலகத்திற்கு
இன்பத்தைச் செய்வதும் தாமரை போன்றதும் சிறப்புமிக்கதுமாகிய திருவடிகளை இனியாவது
தேவரீர் எழுந்தருளிவந்து தந்தருள்வீர். வந்தனம் வந்தனம்.
விரிவுரை
சக்திபாணீ
---
சக்தி-வேல்
“வேலைத் தாங்கிய விமலரே” என்று துதிப்பார்க்கு வினையில்லை. மனத்தில் நினைத்தவை
யாவும் முற்றுப்பெறும்.
“சொலற்கரிய
திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை
அறுத்து
எறிய உறுக்கி எழும், அறத்தை நிலைகாணும்” --- வேல்வகுப்பு.
“ஏலம் வைத்த புயத்தில் அணைத்து, அருள்
வேல் எடுத்த சமர்த்தை உரைப்பவர்
ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே” --- (ஆலம்வைத்தவிழி) திருப்புகழ்.
முக்தி
ஞானீ ---
முத்திப்
பேற்றைத் தரவல்ல முழுமுதற் கடவுளான முருகவேளே! முத்தியும் அவரே! முத்திக்கு
முதல்வரும் அவரே!
“தெரிசன பரகதி யானாய் நமோ நம” -(அவகுண) திருப்புகழ்.
“கதிக்கு நாதன் நீ, உனைத்தேடியே புகழ்
உரைக்கும் நாய் எனை அருட் பார்வையாகவெ
கழற்குள் ஆகவெ சிறப்பானதாய் அருள் தரவேணும். --- (விலைக்குமேனி) திருப்புகழ்.
தற்ப்ரதாபா
---
தன்
பிரதாப; ப்ரதாபம்-புகழ்.
முருகப் பெருமானுடைய புகழ் ஒன்றே திருப்புகழ். அப்புகழ் அவர்க்கே யுரியது.
பாடி
பத்தி பூணாமல் ---
இறைவனை
அடைவதற்குரிய நெறிகளில் சிறந்த நெறி பக்தியுடன் பாடுவதேயாம். சுந்தரமூர்த்தி
நாயனாருடைய பாடலுக்கு இரங்கி, வேதாகமங்கட்கும் எட்டாத சிவபெருமான் இரவெல்லாம்
பரவையார் வீட்டிற்கு இருமுறை தூது சென்றாரெனில் அப்பாடும் பெருமை எம்மால் பகர்தல்
பாற்றோ?
யாவரே
இருந்தும் யாவரே வாழ்ந்தும்
யாவரே எமக்குறவாயும்
தேவரீர்
அல்லால் திசைமுகம் எனக்குத்
திருவுளம் அறிய வேறு உளதோ?
பாவலான்
ஒருவன் செந்தமிழ்க்கு இரங்கிப்
பரவையார் ஊடலை மாற்ற
ஏவல்
ஆள் ஆகி இரவு எலாம் உழன்ற
இறைவனே ஏகநாயகனே. --- பட்டினத்தடிகள்.
விளக்கினார்
பெற்ற இன்பம், மெழுக்கினால் பதிற்றி
ஆகும்,
துளக்குஇல்
நன்மலர் தொடுத்தால் தூயவிண் ஏறல் ஆகும்,
விளக்குஇட்டார்
பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்,
அளப்பு
இல கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம்அருளு மாறே. --- அப்பர்.
“பாடுகின்ற
பநுவலோர்கள் தேடுகின்ற செல்வமே!
நாடுகின்ற
ஞானமன்றில் ஆடுகின்ற அழகனே” ---
தாயுமானார்.
பல
பிறப்புகளில் செய்த நல் தவப்பயன் உடையார்க்கே இறைவனைப் பாடிப் பரவும் பெரும்பேறு
கிடைக்கும்.
அங்ஙனம்
பாடுங்கால் மனத்தை வேறு இடங்களில் செலுத்தாமல் பாட்டுடைத் தலைவராம் பரமபதியின் பாத
கமலங்களில் செலுத்தி, பாட்டில் பொதிந்துள்ள
கருத்துக்களை உணர்ந்து என்புருகிப் பாடவேண்டும்.
அவ்வாறு
பாடும் அவர்க்கு மூவர்க்கும் எட்டாத முழுமுதற் பெருமான் தோழராகிவிடுவார்.
"தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்" என்று நம்பியாரூரருக்கு, திருவாரூர்ப் பெருமான் வானொலியாக அறிவித்ததை எண்ணுக.
“பாதமலர் மீதிற்
போதமலர் தூவி
பாடும் அவர் தோழத் தம்பிரானே" --- (ஆலவிழி) திருப்புகழ்.
பாடல்
காதல் புரிவோனே .... --- (நாடித்தேடி) திருப்புகழ்.
பக்தி
பூணாமலே ---
மாற்றம்
மனங்கழிய நின்ற மறையோனும், காத்தும் படைத்தும்
கரந்தும் விளையாடும் கடவுளும், உலககெலா முணர்ந்து
ஓதற்கரிய ஒருவனுமாகிய இறைவனை பக்தி நெறி ஒன்றினாலாயே எளிதில் அடையலாம். அன்பு
எனினும் பக்தி எனினும் ஒன்றே. “அன்பே சிவம்’ அன்பு வடிவாக விளங்கும் அத் தலைவனை
அன்பு நெறியாலன்றி வேறு எந்நெறியாலடைய முடியும்?
“பத்திவலையில் பாடுவோன் காண்க”
“பத்தி நெறி அறிவித்துப் பழவினைகள்
பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவம் ஆக்கி எனை ஆண்ட அத்தன்” --- மணிவாசகம்.
கிருதயுகத்தில் -- தியானத்தால் முத்தி
திரேதா யுகத்தில் -- யாகத்தால் முத்தி
துவாபரயுகத்தில் -- பூஜையினால்
முத்தி
கலியுகத்தில் -- பக்தியுடன்
கூடிய நாம சங்கீர்த்தனத்தால் முத்தி.
“ஆனபய பக்தி வழிபாடு பெறு முத்தி அது
ஆகநிகழ் பத்த சன வாரக்காரனும்” --- திருவேளைக்காரன்
வகுப்பு.
“பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட
பத்தருக்கு வாய்த்த பெருமாளே” --- (மச்சமெச்சு) திருப்புகழ்.
பட்டிமாடு
---
பட்டி
மாடு--திருட்டு மாடு. திருட்டு மாடு அடுத்தவன் வயலில் மேய்ந்து அவனுடைய நலத்தை அழிக்கின்றது
போல், பிறன்மனை நயந்து
பெருங்கேட்டை அடைவர்.
அத்ர
தேவாயுதா ---
அத்ர
தேவ ஆயுதா; அஸ்திர என்பதில்
ஸ்திரம் நிலைபெறுதல். நிலைபெறுதலின்றி செல்வது அஸ்திரமெனப்படும். அப் படைக்கலங்கள்
யாவைக்கும் அரசாக விளங்குவது வேலாயுதம்.
ஆயதற் பின்னர் ஏவின் மூதண்டத்து
ஐம்பெரும் பூதமும் அடுவது,
ஏயபல் உயிரும் ஒருதலை முடிப்பது,
ஏவர்மேல் விடுக்கினும் அவர்தம்
மாயிருந்
திறலும் வரங்களும் சிந்தி,
மன்னுயிர் உண்பது, எப்படைக்கும்
நாயகம்
ஆவது, ஒரு தனிச் சுடர்வேல்
நல்கியே மதலை கைக் கொடுத்தான். --- கந்தபுராணம்.
அர்ச்சனை
---
வழிபாட்டில்
இறைவன் திருவடியில் அன்புடன் இறைவன் திருநாமங்களைச் சொல்லி நறுமலர்களைச்
சிந்துதலுக்கு அருச்சனை என்று பெயர்.
அங்ஙனம்
அருச்சிப்போர் சொற் பிழையின்றி அகில அண்ட நாயகன் அருகில் நிற்கின்றோம் என்ற
பயபக்தியுடன் இனிமையாக அருச்சிக்க வேண்டும்.பராக்குப் பார்த்துக் கொண்டும், ஊக்கமின்றியும், தருக்குடனும், மனதை வேறு இடத்தில் செலுத்திக் கொண்டும்
அருச்சிப்பது பெருங்குற்றம்.
வடமொழி
மந்திரங்கள் பொருள் விளங்காதவர்க்கும் உச்சரிப்பு சரியாகத் தெரியாதவர்கட்கும்
செந்தமிழ்த் திருமொழியாலேயே பல திருநாமங்கள் அமைந்துள்ளன.
சிவார்ச்சனையாயின்
போற்றித் திருவகவலும், போற்றித் திருத்
தாண்டகங்களும் சிறந்தன.
முருகவேளை
வழிபடுவோர் அருணகிரியார் திருவாக்கிலிருந்து நம்மால் தொகுக்கப்பெற்ற திருப்புகழ்த்
திருமந்திரங்களைக் கூறி அருச்சிக்கலாம்.
அங்ஙனம் அருச்சிக்கில் தனக்கும்
கேட்பார்க்கும் கருங்கல் மனங்கரைந்து உருகி இம்மை மறுமை நலங்கள் எய்துதல் ஒருதலை.
ஆவாகனம்
---
திருவுருவத்தில்
இறைவனை வெளிப்பட்டருளச் செய்யுங் கிரியை.
அக்ஷ
மாலாதரா ---
அக்ஷம்-கண்; சிவபெருமானுடைய திருக்கண்ணினின்றும்
தோன்றியதால் உருத்திராக்கம் என்றாயிற்று. முருகப் பெருமான் உருத்திராக்கமணியினை அணிந்துள்ளார்
எனின், ஏனையோர் அணிவதில்
என்ன தடை? சைவரெனப் பிறக்கும்
பேறு பெற்றோர் ஒவ்வொருவரும் கட்டாயமாக உருத்திராக்கமணிந்து கொள்ள வேண்டும்.
அனைவருக்கும்
அநுக்கிரகம் செய்வதற்காக உருத்திராக்கங்கள் உண்டாயின. அவற்றின் பெயரைச் சொன்ன
மாத்திரத்திலேயே பத்து கோ தான பலனாம்; அவற்றைக்
கண்டால், தீண்டல்களுக்கு
மேலும் மேலும் இரட்டிப்புப் பலனுண்டாம்.
உருத்திராக்கத்தைப்பற்றி
சிவமூர்த்தி, திருமால் முதலியோர்
கூறும் திருமொழிகளை ஈண்டு காட்டுதும். அன்பர்கள் அவைகளைச் சற்று ஊன்றிப் படித்து
உய்க.
சிவபிரான்
---
அரிய
மாதவர்க்கு அருள்தரும் உருத்திர அக்கம்
உரிய
நீறு இவை புனைந்துளர், ஓங்குஅரும் பாவம்
புரியும்
வன் தொழில் புலையரே ஆயினும், அவர்எம்
தெரிசனத்து
உளர் எமது அருட்கு உரியராய்ச் சிறப்பார்.
திருமால்
---
ஊனாறு
சூலி உருத்திர அக்கப் பெருமை
யானோ
புகல்வன்? எனக்கும் எளிதாயிற்றோ?
ஆனார்
அது பொறுத்தார்க் கண்டார் அணிகயிலைக்
கோணாகித்
தேவர் குழாம் போற்ற நிற்பாரால்.
சென்மித்த
நாள்முதலாய் தீநெறிக்கண் சென்று சென்று
வன்மித்த
நெஞ்சராய்க் கொன்று உண்ட வன்கணரும்
நின்மித்து
அரனருள் நீள்பணியின் ஒன்று அணிந்தால்
என்
மற்றவர் பெரும்பேறு எம்மனோர்க் கீட்டுவதே.
யாது
தவம் இழைத்தோர் ஆனாலும் இம்மணி,
ஓர்
போது
தரித்திலரேல் அத்தவமும் பொய்மையே,
ஊதி
உலோகம் உருக்கியவர் சிந்தூரத்
தாது
கொடுத்திலரேல் என்னாம்அத் தன்மையதே.
ஆய
மாமணி உருத்திர அக்கம்உற்று அணிந்தார்
மா
இரும்புவிச் செல்வராய் மன்னனில் சிறப்பர்
ஏயவெள்ளியம்
கயிலை வீற்றிருப்பர், ஈது இகழ்ந்தோர்
பாய
வெண்திரை நிலத்து உழல் பஞ்ச பாதகரே
உருத்திராக்கத்தின்
பெருமை என்னால் சொல்லும் தரத்ததோ?
அதனை
அணிந்தவரைக் கண்டார் தேவர் கோமகனாகி கயிலை வீற்றிருப்பர். பிறந்தநாள் தொட்டு பல தீவினைகள்
செய்தோறும் உருத்திராக்க மணியை அன்புடன் அணிவாராயின் அவர்கள் புனிதராகிப்
பெரும்பேறு பெறுவர். என்ன தவம் செய்தோராயினும் இதனை அணியாராயின் சித்தியடையார்.
உருத்திராக்கம் அணிந்தோர் இம்மையில் சிறந்த செல்வத்துடன் இன்புற்று மறுமையில்
வீடுபேறடைவர். உருத்திராக்கத்தைப் பூணாமல் சிவபூஜை செய்வோர் அப்பூஜையின் பலனை அடையமாட்டார்.
உருத்திராக்கத்தைத் தரித்துக் கொள்வதற்கு எவர் கூசுகின்றாரோ அவரைச் சிவபெருமான்
காண்பதற்கு கூசுவார்.
பூணாமற்
கண்டி சிவபூசை புரிவார் பலத்தைக்
காணார்
பூணாய்க் கண்டிகை.
பூண்பதற்குக்
கண்டியினைக் கூசியிடும் புல்லியரைக்
காண்பதற்குக்
கூசும்அரன் கைத்து. --- சைவசமயநெறி
தவஞ்
செய்தார்க்கே உருத்திராக்கத்தைத் தரித்துக் கொள்ள வேண்டுமென்ற அன்பும் ஊக்கமும்
வரும். பாவஞ் செய்தவர்க்கு அதில் வெட்கமும் அசட்டையும் வரும். ஆண்டவன் கண் நம்
மீது படுவதனால் அதற்கென்று ஒரு தவஞ்செய்ய வேண்டுமல்லவா? இன்னும் உருத்திராக்க மணியில் ஒன்றாவது
அணிகிற்பரேல் விலங்கு, பேய், பூதம், ஏவல், சூனியம் முதலியவைகளால்
பீடிக்கப்படமாட்டார்.
அலங்கு
மாமணி உருத்திர அக்கம் ஒன்று அணியின்
விலங்கு
எயிற்று வெம் பூதமே முதலிய மேவா,
புலங்கொள்
மாமணி புனைதரின் போதாக்குறாது, அதனால்
இலங்கு
மாமணி நீற்றொடும் புனைவதற்குஇசையும்” --- உபதேசகாண்டம்.
ஒருவனுடைய
மனைவிக்கு திருமாங்கல்யம் எத்துணை உயர்வையும் நலத்தையும் பொலிவையும் தருமோ, அது
போல் உருத்திராக்கம் ஒருவனுக்கு எல்லா நலன்களையுந் தரும். திருமாங்கல்யமுடைய பெண்
எப்படி சுபகாரியங்களுக்குத் தகுதியுடையவளோ அது போல் உருத்திராக்க தாரணம் உடையவன் சகல
நற்கருமங்கட்கும் தகுதி உடையவனாம். தாலியைக் கண்டவுடன் எப்படி ஒருத்தியைச்
சுமங்கலி என்று எண்ணுகின்றானோ அதுபோல் உருத்திராக்கங் கண்டவுடன் அவனைச் சிவனடியான்
என்று எண்ணுதல் வேண்டும். ஒரு பெண் தாலியை அணிவதற்கு வெட்கப்பட்டால் எப்படி அவள்
வெறுக்கத்தக்கவளோ அப்படியே உருத்திராக்கம் தரிக்க வெட்கப்பட்டவனும்.
சிலர்
உருத்திராக்க மணியைத் தரித்து நடுவில் அவிழ்த்து விடுகின்றனர். அவர்
திருமாங்கல்யத்தை இடையில் அவிழ்த்து வைத்துவிடும் வாழாப் பெண்டிர்க்கு நிகரானவர்.
ஆயிரம் உருத்திராக்க மணிகளை அன்புடனும் ஒழுக்கத்துடனும் ஒருவர் அணிகுவரேல் அவரைத்
திருமால் திசைமுகன் தேவர்கோமான் முதலியோர் சிவமூர்த்தியாகவே நினைந்து வணங்குவார்.
அவர் பெருமையை எம்மால் அளவிடற்பாற்றோ? அவரை
மனிதர் என்றா எண்ணுவது?
ஆய
மாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாயன் நான்முகன்
புரந்தரன் வானவர் முதலோர்
பாய
மால்விடைப் பரன் எனப் பணிகுவர், என்றால்
தூய
மாமணி மிலைத்தவர் மனிதரோ சொல்வீர். --- பிரமோத்தரகாண்டம்.
இனி
சமயக் கண்கொண்டு பாராமல், மருத்துவக் கண்கொண்டு
பார்க்கினும் உருத்திராக்கம் தரித்தல் சாலவும் நன்றாகும். உருத்திராக்கத்தில்
தங்கச் சத்திருப்பதால் அது உடம்பில் தேய்தலாலும் அதன் மீது பட்ட தண்ணீர் உடம்பில்
படுவதாலும் நோய்களை நீக்கி, மீண்டும் வரவொட்டாமல்
தடுத்து நல்ல ஆரோக்கியத்தைத் தரும். தீராத ஜுர நோய்க்கு மாற்றுயர்ந்த
உருத்திராக்கத்தைத் தேனில் இழைத்து மூன்று வேளை தர ஜுரம் நீங்கும் என வைத்திய நூல்
பகர்கின்றது.
மேலும்
உருத்திராக்கத்தின் குணத்தைப்பற்றி நுணுகி ஆராய்ந்த அறிஞர்கள் இவ்வாறு
கூறுகின்றனர். உருத்திராக்கம் கொடிய தாகத்தை நீக்கும்; நீங்காத தோஷங்கள் மூன்றையும் போக்கும்; பித்தத்தையும் விக்கலையும் மாற்றும்.
கபத்தை விரட்டும்.
நீளும் அதி
தாகத்தை நீங்கா முத் தோடத்தை
ஆளும் விக்கல்
பித்தத்தை ஆற்றுங்கால்-நாளும்
இருந்திராமல்
கபத்தை வீட்டுமே நல்ல
உருத்திராக்
கத்தின்வலி உன். ---தேரையர்.
இனி
உருத்திராக்கத்தை யணியும் விதி.
உச்சி
ஒன்று, இரு காதினில்
பன்னிரண்டு, வந்த
வச்சிரத்தினில்
நாற்பத்து, எண் நான்கு அணி களத்து,
செச்சை
மார்பின் நூற்றெட்டு, எனச் சிறந்து அணிபவரே
பச்சிளம்பிடி
இடத்தது என்று ஏத்தப் படுவார்.
தலையில்
(அதாவது கழுத்தில்) 1
இரு
காதுகளிலும் 12
தோளில் 40
கழுத்தில் 32
மார்பில் 108
மேலும்
உருத்திராக்க மணியை பொன், பவளம், முத்து இவைகளுடன் சேர்த்து அணிதல்
வேண்டும். உருத்திராக்க மணியை அணிபவர்க்குச் சிவபெருமானுடைய திருவருள் எளிதில்
கிடைக்கும்.
சைவ
சமயத்திற்குச் சிறந்த அடையாளம் திருநீறும் உருத்திராக்கமுமே. திருநீற்றை மட்டும்
தரித்து உருத்திராக்க மணியாதார் அரைச் சைவரே.
ஆதலால்
அன்பர்கள் அளவிடற்கரிய பெருமையுடைய உருத்திராக்கமணியை யன்புடன் தரித்து
உய்வார்களாக.
மகாவ்ருத
தெர்ப்பை யாசார வேதியர் ---
சிறந்த
விரதங்களுடனும், தருப்பையுடனும்
ஆசாரத்துடனும் இருந்து இறைவனை முப்போதுந் திருவுருத்தீண்டி பூசிப்பவர்; அவர் ஆதிசைவரெனப்படுவர்; சிவனடிபேணுஞ் செம்மனச் செல்வர்; செந்தமிழ் நாட்டினர்.
கருத்துரை
வேலாயுதா! சேனாபதீ! வயலூர் வள்ளல்!
சிராமலையப்பர் ஸ்வாமீ! தேவரீரை அடியேன் என்புருகப் பாடியுய்ய அருள் புரிவீர்.
No comments:
Post a Comment