அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பகலவன் ஒக்கும் -
திருசிராப்பள்ளி
முருகா!
ஆசைக் குழியிலே விழுந்து
அலையாமல் ஆண்டு அருள்
தனதன
தத்தம் தனதன தத்தம்
தனதன தத்தம் ...... தனதான
பகலவ னொக்குங் கனவிய ரத்னம்
பவளவெண் முத்தந் ...... திரமாகப்
பயிலமு
லைக்குன் றுடையவர் சுற்றம்
பரிவென வைக்கும் ...... பணவாசை
அகமகிழ்
துட்டன் பகிடிம ருட்கொண்
டழியும வத்தன் ...... குணவீனன்
அறிவிலி
சற்றும் பொறையிலி பெற்றுண்
டலைதலொ ழித்தென் ...... றருள்வாயே
சகலரு
மெச்சும் பரிமள பத்மந்
தருணப தத்திண் ...... சுரலோகத்
தலைவர்ம
கட்குங் குறவர்ம கட்குந்
தழுவஅ ணைக்குந் ...... திருமார்பா
செகதல
மெச்சும் புகழ்வய லிக்குந்
திகுதிகெ னெப்பொங் ...... கியவோசை
திமிலைத
விற்றுந் துமிகள்மு ழக்குஞ்
சிரகிரி யிற்கும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பகலவன்
ஒக்கும் கனவிய ரத்னம்
பவள வெண் முத்தம் ...... திரமாகப்
பயில
முலைக் குன்று உடையவர் சுற்றம்
பரிவு என வைக்கும் ...... பண ஆசை
அக
மகிழ் துட்டன், பகிடி, மருள் கொண்டு
அழியும் அவத்தன், ...... குண ஈனன்,
அறிவுஇலி, சற்றும் பொறை இலி, பெற்று உண்டு
அலைதல் ஒழித்து என்று ...... அருள்வாயே.
சகலரும்
மெச்சும் பரிமள பத்மம்
தருண பதத் திண் ...... சுர லோகத்
தலைவர்
மகட்கும் குறவர் மகட்கும்,
தழுவ அணைக்கும் ...... திருமார்பா!
செகதலம்
மெச்சும் புகழ் வயலிக்கும்
திகுதிகு எனெப் பொங் ...... கிய ஓசை
திமிலை
தவில், துந்துமிகள் முழக்கும்
சிரகிரி இற்கும் ...... பெருமாளே.
பதவுரை
சகலரும் மெச்சும் --- எல்லோரும் புகழும்,
பரிமள பத்மம் தருணபத --- நறுமணமுள்ள தாமரை போன்ற இளமை வாய்ந்த திருவடிகளை
உடையவரே!
திண் சுரலோக தலைவர் மகட்கும் --- வலிமையுடைய
தேவலோகத் தலைவரான இந்திர குமாரியான தேவசேனைக்கும்,
குறவர்மகட்கும் --- குறவர் குமாரியான
வள்ளியம்மைக்கும்,
தழுவ அணைக்கும் திருமார்பா --- அவர்கள்
தழுவத் தழுவுகின்ற திருமார்பினரே!
செகதலம் மெச்சும் புகழ் வயலிக்கும் --- பூவுலகம்
பாராட்டிப் புகழ்கின்ற வயலூரிலும்,
திகுதிகு எனப் பொங்கிய ஓசை --- திருதிகு என
பொங்கியெழும் ஒலியையுடைய
திமிலை தவில் துந்துபிகள் முழக்கும் --- திமிலையும் தவிலும் துந்துபி என்ற வாத்தியமும்
முழக்கஞ் செய்கின்ற
சிரகிரியிற்கும் பெருமாளே --- திரிசிராமலைக்கும்
தலைவரான பெருமையில் சிறந்தவரே!
பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் --- சூரியனைப்
போல் ஒளி வீசும் பெருமை வாய்ந்த இரத்னம்,
பவளம் வெண்முத்தம் --- பவளம், வெண்மையான முத்து மாலைகள்,
திறம் ஆக பயில --- நன்றாக விளங்க,
முலை குன்று உடையவர் சுற்றம் --- கொங்கை
மலையை உடைய பொது மகளிரது உறவினரையே,
பரிவு என வைக்கும் --- பரிவு என
வைக்கின்றவனும்,
பண ஆசை அகமகிழ் துட்டன் --- பொருளாசையில்
உள்ளங்களிக்கின்ற துஷ்டனும்,
பகிடி --- வெளிவேஷக்காரனும்,
மருள்கொண்டு அழியும் அவத்தன் --- மோக மயக்கங்
கொண்ட அழிகின்ற வீணனும்,
குண ஈனன் --- இழிந்த குணத்தனும்,
அறிவு இலி --- அறிவு இல்லாதவனும்,
சற்றும் பொறை இலி --- சிறிதும் பொறுமை
இல்லாதவனும் ஆகிய அடியேன்,
பெற்று உண்டு அலைதல் ஒழித்து --- பொருளைத்
தேடிப் பெற்று உண்டு அலைகின்ற இந்த அலைச்சலை ஒழித்து,
என்று அருள்வாயே --- என்று எனக்கு அருள்
புரிவீர்?
பொழிப்புரை
எல்லோரும் புகழ்கின்ற நறுமணம் வீசும் இளமையான
தாமரை போன்ற திருவடியை உடையவரே!
வலிமையுடைய தேவலோகத் தலைவன் இந்திரனுடைய
புதல்வியாகிய தெய்வ யானையம்மையும்,
வள்ளியம்மையுந்
தழுவ அவர்களை அணைத்துக் கொள்ளும் திருமார்பினரே!
பூவுலகம் பாராட்டிப் புகழ்கின்ற வயலூரிலும், திகுதிகு என்ற ஒலியுடன் முழங்கும்
திமிலை, தவில், பேரிகை முதலியவைகளை முழக்கஞ் செய்யுந்
திரிசிரகிரியிலும் வாழும் பெருமிதமுடையவரே!
சூரிய ஒளி போன்ற பெருமையுடைய ரத்னமாலை
பவளமாலை வெண்முத்து மாலைகள் நன்றாக விளங்கும் தனக்குன்றுடைய பொது மகளிரின் உறவினரையே
விரும்புகின்றவனும்,
பணத்தாசையால் உள்ளம் மகிழும் துஷ்டனும்,
வெளிவேஷக்காரனும்,
மோக மயக்கங்கொண்டு அழியும் வீணனும்,
குணங் கெட்டவனும்,
அறிவற்றவனும்,
சிறிதும் பொறுமையில்லாதவனுமாகிய
அடியேன் பொருளைப் பெற்று உண்டு, அலையும் அலைச்சல் ஒழித்து என்று அருள்
புரிவீர்?
விரிவுரை
பகலவன்
ஒக்கும் கனவிய ரத்னம் ---
சூரியனைப்
போல் ஒளி செய்யும் உயர்ந்த இரத்தினங்களைப் பதித்த அணிகலன்கள்.
முலைக்குன்று
உடையவர் சுற்றும் பரிவு என வைக்கும் ---
பொது
மாதருடைய சுற்றத்தாரையே பெரிதும் மதித்து, அவர்களிடம் அன்பு வைத்து மூடர்கள்
அலைகின்றார்கள்.
இறைவனுடைய
அடியாரை அண்டினால் கடைத்தேறலாம். சார்பு அறிந்து வாழ்தல் வேண்டும்.
சார்பு
உணர்ந்து சார்பு கெடஒழுகின், மற்று அழித்துச்
சார்தரா
சார்தரு நோய். --- திருக்குறள்.
பண
ஆசை அகம் மகிழ் துட்டன் ---
தன்
பொருளில் வைப்பது பற்று.
பிறர்
பொருளில் வைப்பது ஆசை.
ஆசைக்கு
ஓர் அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி
ஆளினும், கடல் மீதிலே
ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக
அம்பொன்மிக
வைத்தபேரும்,
நேசித்து
ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;
நெடுநாள் இருந்தபேரும்
நிலையாகவே இனும் காய கற்பம் தேடி
நெஞ்சுபுண் ஆவர்; எல்லாம்
யோசிக்கும்
வேளையில், பசிதீர உண்பதும்
உறங்குவதும் ஆகமுடியும்;
உள்ளதே போதும், நான் நான்எனக் குளறியே
ஒன்றைவிட்டு ஒன்றுபற்றி,
பாசக்
கடற்கு உளே வீழாமல், மனதுஅற்ற
பரிசுத்த நிலையை
அருள்வாய்,
பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற
நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே. --- தாயுமானார்.
ஆரா இயற்கை
அவா, நீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். ---
திருக்குறள்.
மேலும்
திருமுறை ஓதுவதுங் காண்க:
ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்,
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்,
ஆசை படப்பட ஆய்வரும்
துன்பங்கள்,
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே. --- திருமந்திரம்.
ஆசைச்
சுழற்கடலில் ஆழாமல் ஐயா! நின்
நேசப்
புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ. --- தாயுமானார்.
பகிடி
---
வெளி
வேஷம் போடுவது. உள்ளொன்று
வைத்து, வெளியே பூசை செய்வது
போலும், தருமஞ் செய்வது
போலும் நடித்தல்.
காதிலே
திருவேடம்! கையிலே
செபமாலை! கழுத்தின் மார்பின்
மீதிலே
தாழ்வடங்கள்! மனத்திலே
கரவடம் ஆம் வேடம் ஆமோ?
வாதிலே
அயன்தேடும் தண்டலைநீள்
நெறியாரே! மனிதர் காணும்
போதிலே
மௌனம்! இராப் போதிலே
ருத்திராக்கப் பூனை தானே! --- தண்டலையார் சதகம்.
செழுங்கள்ளி
நிறைசோலைத் தண்டலைநீள்
நெறியாரே! திருடிக் கொண்டே
எழும்
கள்ளர் நல்ல கள்ளர்! பொல்லாத
கள்ளர் இனி யாரோ என்றால்,
கொழும்
கள்ளர் தம்முடன் கும்பிடும் கள்ளர்,
திருநீறு குழைக்கும் கள்ளர்,
அழும்
கள்ளர், தொழும் கள்ளர், ஆசாரக்
கள்ளர், இவர் ஐவர் தாமே. --- தண்டலையார் சதகம்.
கை
ஒன்று செய்ய, விழி ஒன்று நாட, கருத்து ஒன்று எண்ண,
பொய்
ஒன்று வஞ்சக நா ஒன்று பேச, புலால் கமழும்
மெய்
ஒன்று சார, செவி ஒன்று கேட்க, விரும்பும் யான்
செய்கின்ற
பூசை எவ்வாறு கொள்வாய்? வினை தீர்த்தவனே! --- பட்டினத்தார்.
மெய்த்தொண்டர்
செல்லும் நெறி அறியேன், மிக நற்பணிசெய்
கைத்தொண்டர்
தம்மிலும் நல்தொண்டு உவந்திலன், உண்பதற்கே
பொய்த்தொண்டு
பேசி, புறம்புறமே உன்னைப் போற்றுகின்ற
இத்
தொண்டனேன் பணி கொள்ளுதியோ? கச்சி ஏகம்பனே!
--- திரு ஏகம்பம் உடையார் திருஅந்தாதி
பெற்று
உண்டு அலைதல் ---
அரிது
தேடிப் பொருளைப் பெற்று, உண்டு அலைவது
மனிதருடைய தொழிலாக அமைந்துள்ளது. “இந்த அலைச்சல் தீர, முருகா! எளியோனை ஆட்கொண்டருள்” என்றும்
சுவாமிகள் வேண்டுகின்றார்கள்.
சகலரும்
மெச்சும் பரிமளபத்மம் தருணபதம்:-
தருணம்-இளமை.
முருகவேள் என்று இளையவர்.
தாரகனுடன்
போர் புரிகின்ற காலத்தும் அவர் குழவியாகவே காட்சி தருகின்றார். குழந்தைகள் காலில்
தண்டையிருக்கும்.
சூரபன்மன் காண்கின்ற காட்சி:-
“தண்டையுஞ் சிலம்பும்
ஆர்க்கும் சரணமும் தெரியக் கண்டான்”
முருகப்
பெருமானுடைய திருவடியை அகில உலகத்தாரும் புகழ்கின்றார்கள். அதனால் “சகலரு மெச்சும்”
என்றார்.
செகதலம்
மெச்சும் புகழ் வயலிக்கும்:-
வயலூர்
என்பது அரிய முருகன் திருத்தலம். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 5 கல் தொலைவில் நல்ல சூழ்நிலையில்
சோலையும் வயலும் சூழ விளங்குகின்றது. அதனால் வயலூரையும் திருச்சிராப்பள்ளியையும்
சேர்த்து இத்திருப்புகழில் சுவாமிகள் பாடுகின்றார்.
வயலிக்கும்
சிரகிரியிற்கும்:-
இடப்
பொருளில் கண்ணுருபு பெற்று வரவேண்டியது நான்காம் வேற்றுமையாக குவ்வுருபு பெற்று
வந்தது. உருவு மயக்கம்.
கருத்துரை
சிரகிரிப் பெருமானே! அலைதலை ஒழித்து
ஆண்டருள்வீர்.
No comments:
Post a Comment