திருச்சிராப்பள்ளி - 0342. புவனத்தொரு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

புவனத்தொரு -  திருசிராப்பள்ளி

முருகா! மரண பயம் நீக்கி, உன் சரணம் அருள்

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் தனனத் தனனத்
          தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான


புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்
     கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்
          புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் ...... திடிலாவி

புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
     கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்
          புரள்வித் துவருத் திமணற் சொரிவித் ...... தனலூடே

தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
     தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்
          தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் ...... திடவாய்கண்

சலனப் படஎற் றியிறைச் சியறுத்
     தயில்வித் துமுரித் துநெரித் துளையத்
          தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் ...... துயர்தீராய்

பவனத் தையொடுக் குமனக் கவலைப்
     ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்
          படரிச் சையொழித் ததவச் சரியைக் ......க்ரியையோகர்

பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்
     பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்
          பரவப் படுசெய்ப் பதியிற் பரமக் ...... குருநாதா

சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்
     கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்
          த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் ...... குணனாதி

செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்
     புதனொப் பிலியுற் பவபத் மதடத்
          த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


புவனத்து ஒரு பொன் தொடி சிற்று உதரக்
     கருவில் பவம் உற்று, விதிப் படியில்
          புணர் துக்க சுகப் பயில்வுற்று, மரித் ...... திடில்,வி

புரிஅட்டகம் இட்டு, து கட்டி, றுக்கு,
     அடி,குத்து என அச்சம் விளைத்து, லறப்
          புரள்வித்து, வருத்தி, மணல் சொரிவித்து, ....அனல் ஊடே

தவனப் பட விட்டு, யிர் செக்கில் அரைத்து,
     அணி பற்கள் உதிர்த்து, ரி செப்பு உருவைத்
          தழுவ, பணி முட்களில் கட்டி, இசித் ...... திட,வாய்கண்

சலனப் பட எற்றி, றைச்சி அறுத்து
     அயில்வித்து, முரித்து, நெரித்து, ளையத்
          தளை இட்டு வருத்தும் யம ப்ரகரத் ...... துயர்தீராய்.

பவனத்தை ஒடுக்கும், மனக் கவலைப்
     ப்ரமைஅற்று, வகைப் புலனில் கடிதில்
          படர்,  ச்சை ஒழித், தவச் சரியைக் ....க்ரியை,யோகர்

பரி பக்குவர், நிட்டை நிவிர்த்தியினில்
     பரிசுத்தர், விரத்தர், கருத்து அதனில்
          பரவப் படுசெய்ப் பதியில் பரமக் ...... குருநாதா!

சிவன்உத் தமன், நித்த, உருத்திரன்,முக்
     கணன்,க்கன், மழுக்கரன் உக்ர ரணத்
          த்ரிபுரத்தை எரித்து அருள் சிற் குணன் நிற்.....குணன் ஆதி

செக வித்தன் நிசப் பொருள், சிற்பரன், ற்
     புதன், ப்பிலி, உற்பவ பத்ம தட,
          த்ரிசிரப் புர வெற்பு உறை சற்குமரப் ...... பெருமாளே.


பதவுரை


     பவனத்தை ஒடுக்கும் --- மூச்சைப் பிடித்து ஒடுக்கும்,

     மனக் கவலை ப்ரமை அற்று --- மனத்துயராகிய மயக்கத்தை விலக்கி,

     ஐவகை புலனில் --- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐவகைப் புலன்களில்,

     கடிதில் படர் இச்சை ஒழித்த --- வேகமாகச் செல்லும் ஆசையை ஒழித்த,

     தவ --- தவநெறியில் நின்ற,

     சரியை --- சரியையாளர்கள்,

     க்ரியை --- க்ரியை யாளர்கள்,

     யோகர் --- யோகநெறியில் நின்றவர்கள்,

     பரிபக்குவர் --- இரு வினை யொப்பு எய்தி மலபரிபாகம் பெற்றவர்கள்,

     நிட்டை நிவர்த்தியினில் பர் சுத்தர் --- தியான நிலையில் நின்று துறவு பூண்ட தூயவர்கள்,

     விரத்தர் --- உலகப்பற்றை விட்டவர் ஆகிய பெரியோர்களின்,

     கருத்து அதனில் பரவப்படு --- தமது கருத்தில் வைத்துப் போற்றப்படும்,

     செய் பதியில் --- வயலூரில் வாழும்,

     பரம குருநாதா --- பெரிய குருநாதரே!

     சிவன் --- சிவபிரான்,

     உத்தமன் --- உத்தமர்,

     நித்த --- அழிவில்லாதவர்,

     உருத்திரன் --- உருத்திர மூர்த்தி,

     முக்கணன் --- மூன்று கண்களை யுடையவர்,

     நக்கன் --- சிரிக்கின்றவர்,

     மழுகரன் --- மழுவை யேந்திய கரத்தினர்,

     உக்ர ரண --- கொடுமையான போர்க்களத்தில்,

     த்ரிபுரத்தை எரித்து அருள் --- முப்புரத்தை எரித்தருளியவர்,

     சிற்குணன் --- ஞான குணத்தினர்,

     நிர்க்குணன் --- உலக குணம் இல்லாதவர்,

     ஆதி --- ஆதிமூர்த்தி,

     செகவித்தன் --- உலகத்துக்கு மூலப் பொருளாயிருப்பவர்,

     நிசப்பொருள் --- உண்மைப் பொருளாயிருப்பவர்,

     சிற்பரன் --- அறிவுக்கு எட்டாதவர்,

     அற்புதன் --- ஆச்சரியமானவர்,

     ஒப்பிலி --- ஒப்பு இல்லாதவராகிய சிவபிரானிடத்தே,

     உற்பவ --- தோன்றியவரே!

     பத்ம தட --- தாமரைத் தடாகங்கள் நிறைந்த,

     த்ரிசிரபுர வெற்பு உறை  --- திருச்சிராப்பள்ளி மலைமீது வீற்றிருக்கின்ற,

     சற்குமர --- உண்மையான குமாரமூர்த்தியே!

     பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!

     புவனத்து --- இப்பூமியில்,

     ஒரு பொன் தொடி --- ஒரு அழகிய பெண்ணின்,

     சிறு உதர கருவில் பவம் உற்று --- சிறிய வயிற்றில் கருவில் தோற்றம் அடைந்து,

     விதிப்படியில் புணர் --- விதியின்படி கூடுகின்ற,

     துக்க சுகம் பயில்வுற்று --- துக்கத்தையும் சுகத்தையும் நுகர்ந்து,

     மரித்திடில் --- இறந்த பின்,

     ஆவிபுரி அட்டகம் இட்ட --- உயிரை சூட்சும உடலில் புகுத்தி,

     அது கட்டி --- அத்தேகத்தைக் கட்டி,

     இறுக்கு --- அழுந்தக் கட்டு,

     அடி --- அடி,

     குத்து --- குத்து,

     என அச்சம் விளைத்து --- என்று பயத்தை உண்டு பண்ணி,

     அலற புரள்வித்து --- அலறி அழும்படிப் புரட்டி,

     வருத்தி --- வருத்தப்படுத்தி,

     மணல் சொரி வித்து --- வாயிலே மணலைச் சொரிவித்து,

     அனல் ஊடே தவன பட விட்டு --- நெருப்பினுள்ளே சூடேறும்படியாக விட்டு,

     உயிர் செக்கில் அரைத்து --- அந்த உயிரைச் செக்கில் இட்டு அரைத்து,

     அணி பற்கள் உதிர்த்து --- வரிசையாயுள்ள பற்கள் உதிரும்படி அடித்து,

     எரி செப்பு உருவை தழுவ எண்ணி --- எரிகின்ற செம்பாலாகிய பதுமையைத் தழுவும் படிச் செய்து,

     முள்களில் கட்டி இசித்திட --- முள்ளுகளில் கட்டி இழுத்து,

     வாய் கண் சலன பட எற்றி --- வாயும் கண்ணும் அசையும் படியாக அடித்து,

     இறைச்சி அறுத்து அயில்வித்து --- என் உடம்பில் இருக்கின்ற இறைச்சியை அறுத்து என் வாயில் வைத்துத் தின்னும்படிச் செய்து,

     முரித்து --- எலும்பை முரித்து,

     நெரித்து --- நொறுக்கி நசுக்கி,

     உளைய --- வருந்தும்படி,

     தளை விட்டு வருத்தும் --- காலில் விலங்கு பூட்டி துன்பப்படுத்தும்,

     யம ப்ரகர துயர் தீராய் --- யம தண்டனை யென்னும் துன்பத்தைத் தீர்த்தருள்வீராக.
பொழிப்புரை

         பிராணவாயுவை ஒடுக்கும் மனக்கவலையாம் மயக்கத்தை விலக்கி, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களில் வேகமாகச் செல்லுகின்ற ஆசையை ஒழித்த தவநெறியில் நின்ற சரியையாளர்கள் கிரியையாளர்கள், யோகியர்கள், மலபரிபாகம் பெற்றவர்கள், தியானத்தில் நின்று துறவு பூண்ட தூயவர்கள், உலகப்பற்றை விட்டவர்கள் ஆகிய பெரியோர்கள் தமது கருத்தில் வைத்துப் போற்றும் குருநாதரே! 

     வயலூரில் வீற்றிருக்கும் மேலான குருநாதரே! 

     சிவபெருமான், உத்தமர், அழிவற்றவர் உருத்திரர், முக்கண்ணர், சிரிக்கின்றவர், மழுவையேந்திய கரத்தினர், கொடிய போர்க்களத்தில் முப்புரத்தை எரித்தருளியவர், ஞானகுணத்தினர், உலக குணமில்லாதவர், ஆதிமூர்த்தி, உலகத்துக்கு மூலப் பொருளாயிருப்பவர், உண்மைப் பொருளாக விளங்குபவர், அறிவுக்கு எட்டாதவர், அற்புதமானவர், சமான மில்லாதவர் ஆகிய சிவபிரானிடம் தோன்றியவரே! 

     தாமரைக் குளங்கள் நிறைந்த திரிசிராப்பள்ளி மலையில் உறைகின்ற, உண்மைக் குமாரரே! 

     பெருமிதமுடையவரே!

         இப்பூமியில் ஓர் அழகிய பெண்ணின் சிறிய வயிற்றின் கருவில் தோன்றி, விதியின் வண்ணம் இன்ப துன்பங்களை அநுபவித்து, இறந்தபின் இயம தூதர்கள் உயிரை நுண்ணுடம்பில் புகுத்தி, அந்தத் தேகத்தைக் கட்டி, “அழுந்தக் கட்டு, அடி குத்து” என்றெல்லாம் கூறி அச்சத்தை யுண்டு பண்ணி, அலறி அழப்புரட்டி, வருத்தப்படுத்தி, வாயில் மணலைச் சொரிவித்து, நெருப்பினுள் சூடேற்றும்படியாக விட்டு, அந்தவுயிரைச் செக்கில் இட்டு அரைத்து, வரிசையாயுள்ள பற்களை உதிரும்படி அடித்து, எரிகின்ற செம்பாலாகிய பதுமையைத் தழுவச் செய்து, முட்களில் கட்டி இழுத்து வாயுங் கண்ணும் கலங்கி அசையும்படி அடித்து ‘என் உடம்பிலுள்ள இறைச்சியை யறுத்து என் வாயில் இட்டு உண்பித்து எலும்பை முரித்து, நொறுக்கி நசுக்கி வருந்தும்படி விலங்கு பூட்டித் துன்புறுத்தும் இயம தண்டனையின் துயரத்தை தீர்த்தருளுவீராக.


விரிவுரை

புவனத்தொரு பொற்றொடி சிற்றுதரக் கருவிற் பவமுற்று ---

பொற்றொடி-பொன்னாலாகிய வளையலை யணிந்தவள், அன்மொழித்தொகை.

ஒரு பெண்ணின் சிறிய கருப்பையில் பத்து மாதங்கள் புழுக்கமும் நெருக்கமும் இருளும் நிறைந்த இடத்தில் துன்புற்று இருந்து இந்த ஆன்மா பிறக்கின்றது, பிறவித் துயர் மிகக் கொடியது.


விதிப்படியில் புணர்துக்க சுகப் பயில்வுற்று ---

முன் செய்த நல்வினை தீவினைக்கு ஏற்ப இன்ப துன்பங்களை ஆன்மா நுகர்கின்றது. இறைவன் கூறிய நியாயத் தீர்ப்பு விதியாக வந்து ஆட்சி புரிகின்றது.

விதிகாணும் உடம்பை விடாவினையேன்”     --- கந்தரநுபூதி.


மரித்திடில் ---

உடம்பு முகந்து கொண்ட வினை முடிந்தவுடன் உயிர் உடம்பை விட்டுப் பிரிந்துவிடும்.

உடம்பு-அகல், வினைப்போகம்-நெய், வாழ்நாள்-திரி, எரிகின்ற சுடர்-உயிர்.

நெய்யற்றவுடன் வாழ்நாளாகிய திரி எரிந்து உயிராகிய விளக்கு அணைந்துவிடுகின்றது.

புண்ணிய நறுநெயிற் பொருவில் காலமாம்
திண்ணிய திரியினில் விதியென் தீயினில்
எண்ணிய விளக்கவை இரண்டு எஞ்சினால்
அண்ணலே அவிவதற் கைய மாவதோ.       --- கம்பராமயணம்.


ஆவி புரியட்டகமிட்டு ---

தூல உடம்பில் உறைந்த உயிரைச் சூக்கும உடம்பில் இட்டு இயம தூதர் கொண்டு போவார்கள். அது புரியட்டக சரீரம் எனப்படும்.

ஐம்பெரும் பூதங்கட்குக் காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற தன் மாத்திரைகள் 5. மனம், புத்தி, அகங்காரம் 3 ஆக 8 தத்துவங்களுடன் கூடியது புரியட்டகம். இதை சூக்குமதேகம் என்றுங் கூறுவர்.

ஆசைசேர் மனாதி தன் மாத்திரை புரியட்டகந்தான்”   ---சிவஞானசித்தியார்.

அது கட்டி:-

சூக்குமதேகத்தைப் பாசக் கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு போவார்கள் இயம தூதுவர்.


இறுக்கு அடி குத்தென அச்சம் விளைத்து ---

இயமதூதர்கள் “நன்றாக இறுக்கு, அடி, குத்து,” என்று கூறி மிக்க அச்சத்தை உண்டாக்குவர்கள்.

அலறப் புரள்வித்து ---

ஓ ஓ என்று அலறி அழும்படி தரையில் புரளவிட்டு வருத்துவர்.

மணற் சொரிவித்து ---

ஊரவர் உடைமைகளையும், கோயில் உடைமைகளையும் உண்ட வாயில் கொதிக்கின்ற மணலை அள்ளிக்கொட்டித் துன்புறுத்துவர்.

அனலூடே தவனப்பட விட்டு ---

சூலத்தில் குத்தி தீயில் காய்ச்சி, தாகம் எடுக்க இடர்ப்படுத்துவர்.

உயிர் செக்கில் அரைத்து ---

ஆடு கோழிகளை அறுத்து அந்த இறைச்சியை உரலில் இட்டு ஆட்டிப் பக்குவஞ் செய்து உண்டவர்களை, செக்கில் இட்டு ஆட்டி அல்லற்படுத்துவர்.

மடித்துஆடும் அடிமைக்கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும்
தடுத்துஆட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்துஆட் கொள்வான்
கடுத்துஆடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலும் கரிய பாம்பும்
பிடித்துஆடிப் புலியூர்ச்சிற் றம்பலத்துஎம் பெருமானைப் பெற்றாம்அன்றே.                    
                                                                              ---  சுந்தரர்.

அணிபற்கள் உதிர்த்து ---

புலால் உண்டு எலும்பைக் கடித்து நொறுக்கிய பற்களைப் பளீர் பளீர் என்று கன்னத்தில அறைந்து உதிர்ப்பார்கள்.

ஆ! ஆ! நினைத்தாலும்நெஞ்சு பதறுகின்றது.

எரி செப்பு உருவைத் தழுவப் பணி ---

அயல் மாதரை-அயல் ஆடவரைத் தழுவிய ஆண்-பெண் இவர்களை, நரகில் ஒரு செம்பினால் ஆய பதுமையைத் தீயில் பழுக்கக் காய்ச்சி, ‘நீ தழுவிய பெண் இதோ, நீ தழுவிய கள்ளக் காதலன் இதோ!  தழுவு’ என்று சாட்டையால் அடித்துத் தழுவும் படிச் செய்வார்கள்.

வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
     பிறர் பொருள் தாரம் என்று, இவற்றை
நம்பினார் இறந்தால், நமன் தம ர்பற்றி
    எற்றி வைத்து, எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவி
    தழுவு, என மொழிவதற்கு அஞ்சி,
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன்,
    நைமி சாரணியத்துள் எந்தாய்.             --- திருமங்கையாழ்வார்.

வாய் கண் சலனப்பட எற்றி ---

பொய்சாட்சி சொன்னவாய், அயல்மாதரைக் கண்ட கண் இவைகள் கலங்கி அசையுமாறு அடிப்பார்கள்.

இறைச்சி அறுத்து அயில்வித்து ---

சிற்றுயிர்களைக் கொன்று தின்ற பாவிகளை நமன்தமர் நிரயத்தில் நிறுத்தி கூரிய வாளால் அவர்களின் உடல் தசையை அறுத்து அறுத்து அவர்கள் வாயில் திணித்துச் சாப்பிடு என்று தண்டிப்பார்கள்.

கொன்றால் பாவம் தின்றால் போயிற்று” என்ற பழமொழி இதனால் ஏற்பட்டது. கொன்ற பாவம், தங்கள் உடம்பைத் தின்றால் தீரும்.

வருத்தும் யமப்ரகரத் துயர்தீராய் ---

பாவிகளை யமதூதர்கள் துன்புறுத்துவார்கள். “முருகா!  அந்த யமதண்டைனை யினின்றும் அடியேனை விலக்கிக் காத்தருள்வாய்”

பவனத்தை ஒடுக்க மனக்கவலை ப்ரமையுற்று ---

பிராணவாயுவை ஓடாமல் இழுத்து உள்ளுக்குள் நிறுத்தி விழி பிதுங்குமாறு கடினமாகப் பயில்கின்ற அடயோகம் முதலிய சாதனங்கள் பயனற்றவை. அவை ஆன்மலாபத்தை நல்கா. ஆதலால் மூச்சைப் பிடித்து உடம்பை வருத்தும் அந்த மயக்கம் விலக வேண்டும் என்றார்.

துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்து
அருத்தி உடம்பை ஒறுக்கில் என் ஆம்?”          --- கந்தரலங்காரம்.

ஐவகைப்புலனில் கடிதில் படர் இச்சை ஒழித்து ---

சுவை, ஒளி, ஓசை, நாற்றம் என்ற ஐவகைப் புலன் வழியே விரைந்து செல்லும் அவாவை அறவே அகற்ற வேண்டும்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்ற ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு            --- திருக்குறள்.


சரியை ---

இறைவனை புற வழிபாடு புரிதல் ---  தாசமார்க்கம்.

தாத மார்க்கம் சாற்றில், சங்கரன் தன் கோயில்
         தலம் அலகு இட்டு, இலகு திரு மெழுக்கும் சாத்தி,
போதுகளும் கொய்து, பூந்தார் மாலை கண்ணி
         புனிதற்குப் பலசமைத்து, புகழ்ந்து பாடி,
தீதுஇல் திரு விளக்கு இட்டு, திருநந்த வனமும்
         செய்து, திருவேடம் கண்டால் "அடியேன் செய்வது
யாது? பணியீர்!" என்று பணிந்து, அவர்தம் பணியும்
         இயற்றுவது; இச்சரியை செய்வோர் ஈசன் உலகு இருப்பர். --- சிவஞானசித்தியார்.

         சிவபெருமானுடைய திருக்கோயிலைத் திருஅலகிட்டும், திருமெழுக்கிட்டும், மொட்டறா மலர் பறித்து இறைவனுக்கெனத் தாரும் மாலையும் கண்ணியும் தொடுத்தும், இறைவன் பெருமைகளைப் புகழ்ந்து பாடியும், இருளகற்றும் திருவிளக்கு ஏற்றியும், திருநந்தவனங்களை அமைத்துக் காத்தும், திருவேடம் கொண்ட அடியார்களைக் கண்டால் தங்களுக்கு நான் செய்யும் பணயாது என்று கேட்டு அவர்கள் இடும் பணியை உவந்து இயற்றியும் வருவது தாதமார்க்கம் ஆகும், இதுவே சரியை நெறி, இந்நெறியில் ஒழுகுவோர் ஈசன் உலகத்தில் இருப்பர்.


கிரியை ---

இறைவனை அகத்தும் புறத்தும் வழிபடுதல் -- சற்புத்திர மார்க்கம்.

புத்திர மார்க்கம் புகலின், புதிய விரைப் போது
         புகை ஒளி மஞ்சனம் அமுது முதல் கொண்டு, ஐந்து
சுத்தி செய்து, ஆசனம், மூர்த்தி மூர்த்தி மானாம்
         சோதியையும் பாவித்து, ஆவாகித்து, சுத்த
பத்தியினால் அருச்சித்து, பரவிப் போற்றி,
         பரிவினொடும் எரியில் வரு காரியமும் பண்ணி,
நித்தலும் இக் கிரியையினை இயற்றுவோர்கள்
         நின்மலன் தன் அருகு இருப்பர், நினையும் காலே.  --- சிவஞானசித்தியார்.

         புதிய மனம் உள்ள மலர்கள், நறும்புகை, திருவிளக்கு, திருமஞ்சனப் பொருள்கள், திருஅமுது ஆகிய வழிபாட்டுக்கு உரிய பொருள்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு ஐந்து வகைத் தூய்மைகளையும் செய்து இருக்கை இட்டு, திருமேனியை எழுந்தருளச் செய்து திருமேனியை உடையானாகிய பேரொளி வடிவாகிய இறைவனைப் பாவித்து அதில் எழுந்தருளச் செய்து தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று, அழல் ஓம்பி நாள்தோறும் வழிபடுவது மகன்மை நெறி எனப்படும். இதனை வழுவாது இயற்றி வருபவர்கள் சிவபெருமானின் அருகில் இருக்கும் பேற்றினைப் பெறுவார்கள். இந்நெறி கிரியை நெறி எனப்படும்.


யோகம் ---

அகவழிபாடு முதிர முதிர, புறவழிபாடு தானே நிற்க அக வழிபாட்டுடன் நிற்றல். --- 
சகமார்க்கம்.

சகமார்க்கம், புலன் ஒடுக்கித் தடுத்து, வளி இரண்டும்
         சலிப்பு அற்று, முச்சதுர முதல் ஆதாரங்கள்
அகமார்க்கம் அறிந்து, அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து, அங்கு
         அணைந்துபோய், மேல்ஏறி, அலர்மதி மண்டலத்தின்
முகமார்க்க அமுது உடலம் முட்டத் தேக்கி,
         முழுச் சோதி நினைந்திருத்தல், முதலாக வினைகள்
உக மார்க்க அட்டாங்க யோகம் முற்றும்
         உழத்தல், உழந்தவர் சிவன் தன் உருவத்தைப் பெறுவர். --- சிவஞானசித்தியார்.

         ஐம்புலன்களையும் ஒடுக்கி உள் மூச்சு, வெளிமூச்சு இரண்டனையும் அடக்கி உயிர்க் காற்றைக் கட்டுப் படுத்தி, முக்கோணம் சதுரம் முதலிய வடிவினைக் கொண்ட ஆறு ஆதாரங்களையும் உணர்ந்து அந்தந்த ஆதாரத்தில் அதனதற்குரிய அதி தெய்வங்களை வழிபட்டு மேலேறிச் சென்று பிரமரந்திர தானத்தில் சென்றெய்தி அதில் உள்ள தாமரை மொட்டை மலர்வித்து அங்குள்ள திங்கள் மண்டலத்தினை இளகச் செய்து அதன் அமுதத்தை உடல் முழுவதும் தேக்கிப் பேரொளி வடிவாகிய இறைவனை இடையீடின்றி நினைந்திருப்பது தோழமை நெறியாகும். இதில் நிற்போர் எட்டு உறுப்புக்கள் கொண்ட யோக நெறியை மேற்கொண்டு ஒழுகுவோராவர். இவர்கள் சிவபெருமானின் உருவத்தைப் பெறுவர். இது யோக நெறி எனப்படும்.


ஞானம் ---

எங்கும் அதுவாய் தரிசித்து நிற்றல். --- சன்மார்க்கம்.

சன்மார்க்கம், சகலகலை புராணம் வேதம்
         சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து,
பன்மார்க்கப் பொருள் பலவும் கீழாக, மேலாம்
         பதி பசு பாசம் தெரித்து, பரசிவனைக் காட்டும்
நன்மார்க்க ஞானத்தை நாடி, ஞான
         ஞேயமொடு ஞாதிருவும் நாடா வண்ணம்,
பின்மார்க்கச் சிவன் உடன் ஆம் பெற்றி, ஞானப்
         பெருமை உடையோர் சிவனைப் பெறுவர் காணே.     --- சிவஞானசித்தியார்.

         எல்லாம் கலை ஞானங்களையும், புராணங்களையும், சாத்திரங்களையும் புறச்சமய நூல்களையும் நுணுகி ஆராய்ந்து பொய்யைப் பொய் என்று தள்ளி இறை உயிர்தளை என்ற முப்பொருள்களின் உண்மையை உணர்ந்து சிவபெருமானை அடைவதற்குரிய மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, அறிவு அறிபவன் அறியப்படும் பொருள் என்ற வேறுபாடு இல்லாமல் சிவபெருமானோடு இரண்டறக் கலந்து நிற்பதுவே நன்னெறி எனப்படும். இந்த நெறியில் நிற்கும் பெருமை உடையவர்கள் சிவனை அடைவார்கள். இது ஞானநெறி எனப்படும்.

விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு, மலர், காய், கனி போல் அன்றோ பராபரமே.     --- தாயுமானார்.

பரிபக்குவர் ---

ஆன்மா இருவினை யொப்பு எய்தி, மும்மல பரிபாகம் உற்று, சத்தினிபாதம் பெற்று நின்றவர் பரிபக்குவர்.

நிட்டை நிவர்த்தியினில் பரிசுத்தர் ---

நிட்டை - தியான சமாதியில் ஓவியம் போல் நிலைத்து நின்று, உலகநெறி கழன்று இருக்குந் தூய ஞானிகள்.

விரத்தர் ---

விரத்தி-பந்த பாசங்களை வெறுத்து ஒதுக்கி நின்றவர்கள்.

கருத்ததனிற் பரவப்படு..............குருநாதர் ---

இத்தகைய பரமஞானிகள் தம் கருத்தில வைத்துத் துதிக்கும் பொருள் முருகவேள்.

சிவன் உத்தமன் ---

சிவபெருமான் ஒருவரே உத்தம தெய்வம். சிவன் உத்தமன், பார்வதி உத்தமி.

 மத்தள வயிறனை உத்தமி புதல்வனை”         --- (கைத்தல) திருப்புகழ்.

நித்தன் ---

சிவபிரான் ஒருவரே அழிவில்லாதவர். ஏனைய திரிமூர்த்திகளும், தத்தம் தொழிலில் திரிமூர்த்திகளேயாவார்கள்.

நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறுகோடி நாராயணர் அங்ஙனே
ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறிலாதவன் ஈசன் ஒருவனே.               --- அப்பர்

உருத்திரன் ---

ஆன்மாக்களின் துன்பத்தைக் கண்டு இரங்குபவர்.

முக்கணன் ---

சந்திரனையும் சூரியனையம் அக்னியையுங் கண்களாக வுடையவர்.

நக்கன் ---

எப்போதும் புன்சிரிப்புடன் விளங்குபவர்.

மழுக்கரன் ---

ஆன்மாக்களின் மலமாகிய அழுக்கைத் தகிக்கும் ஞானாக்கினியை ஏந்தியவர்.

சிற்குணன் ---

இறைவனுடைய அருட்குணங்கள் எட்டு. அவையாவன, தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினைனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்ப முடைமை.

நிர்க்குணன் ---

குணம்-கட்டுவது. பிராகிருத குணமாகிய சத்துவம் ராஜஸம் தாமசம் என்ற முக்குணங்கள் இல்லாதவர், சிவபெருமான்.

தி ---

அப்பரமனே ஆதிப் பொருள்.

அந்தம்ஆதி என்மனார் புலவர்”        -சிவஞானபோதம்.

செக வித்தன் ---

வித்து-விதை.

இந்த வுலகம் முளைப்பதற்கு விதைப்பொருளாக இருக்கின்றவர் சிவபிரான்.


நிசப்பொருள் ---

அவர் ஒருவரே மெய்ப்பொருள். ஏனைய அனைத்தும் தோன்றி மறையும் பொய்ப் பொருள்களேயாகும்.

ஒப்பிலி ---

தனக்கு உவமை இல்லாதான்”          --- திருக்குறள்.

தாயவன் உலகுக்கு, தன்ஒப்பு இல்லாத்
தூயவன், தூமதி சூடி, எல்லாம்
ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும்
சேயவன், உறைவிடம் திருவல்லமே.     --- திருஞானசம்பந்தர்.

பொன்தாது மலர்க்கொன்றை சூடி னான்காண்,
         புரிநூலன் காண், பொடியார் மேனி யான்காண்,
மற்றுஆரும் தன் ஒப்பார் இல்லா தான்காண்,
         மறைஓதி காண், எறிநீர் நஞ்சுஉண் டான்காண்,
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லா தான்காண்,
         இறையவன்காண், மறையவன்காண், ஈசன் தான்காண்,
செற்றார்கள் புரமூன்றும் செற்றான் தான்காண்,
         திருவாரூ ரான்காண், என் சிந்தை யானே.

மற்றுஆரும் தன்ஒப்பார் இல்லான் கண்டாய்,
         மயிலாடு துறை இடமா மகிழ்ந்தான் கண்டாய்,
புற்றுஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய்,
         பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்,
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்,
         ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்,
குற்றாலத்து அமர்ந்துஉறையும் கூத்தன் கண்டாய்,
         கோடிகா அமர்ந்துஉறையுங் குழகன் தானே.   --- அப்பர்.

இறைவன் ஒப்பிலாத ஒருவன்.

கருத்துரை

         திரிசிரபுரம் உறையுந் தேவ தேவா! இயம தண்டனையினின்றும் நீக்கி என்னைக் காத்தருள்வீர்.


No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...