திருச்சிராப்பள்ளி - 0343. பொருளின்மேல் ப்ரிய






அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பொருளின் மேல்ப்ரிய - திருசிராப்பள்ளி

முருகா! மாதர் மயல் தவிர அருள்


தனன தாத்தன தானா தானன
     தனன தாத்தன தானா தானன
          தனன தாத்தன தானா தானன ...... தந்ததான


பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள்
     பரிவு  போற்புணர் க்ரீடா பீடிகள்
          புருஷர் கோட்டியில் நாணா மோடிகள்......கொங்கைமேலே

புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
     மிடிய ராக்குபொ லாமூ தேவிகள்
          புலையர் மாட்டும றாதே கூடிகள் ...... நெஞ்சமாயம்

கருதொ ணாப்பல கோடா கோடிகள்
     விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள்
          கலவி சாத்திர நூலே யோதிகள் ...... தங்களாசைக்

கவிகள் கூப்பிடு மோயா மாரிகள்
     அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள்
          கருணை நோக்கமி லாமா பாவிக ...... ளின்பமாமோ

குருக டாட்சக லாவே தாகம
     பரம வாக்கிய ஞானா சாரிய
          குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக ...... வன்பரான

கொடிய வேட்டுவர் கோகோ கோவென
     மடிய நீட்டிய கூர்வே லாயுத
          குருகு க்ஷேத்ரபு ரேசா வாசுகி ...... அஞ்சமாறும்

செருப ராக்ரம கேகே வாகன
     சரவ ணோற்பவ மாலா லாளித
          திரள்பு யாத்திரி யீரா றாகிய ...... கந்தவேளே

சிகர தீர்க்கம காசீ கோபுர
     முகச டாக்கர சேணா டாக்ருத
          திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


பொருளின் மேல் ப்ரிய காம ஆகாரிகள்,
     பரிவு போல் புணர் க்ரீடா பீடிகள்,
          புருஷர் கோட்டியில் நாணா மோடிகள், ......கொங்கை மேலே

புடைவை போட்டிடு மாயா ரூபிகள்,
     மிடியர் ஆக்கு பொலா மூதேவிகள்,
          புலையர் மாட்டும் மறாதே கூடிகள், ...... நெஞ்சமாயம்

கருத ஒணாப் பல கோடா கோடிகள்,
     விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள்,
          கலவி சாத்திர நூலே ஓதிகள், ...... தங்கள் ஆசைக்

கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள்,
     அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள்,
          கருணை நோக்கம் இலாமா பாவிகள்.....இன்பம்ஆமோ?

குரு கடாட்ச! கலா வேதாகம
     பரம வாக்கிய ஞான ஆசாரிய!
          குறைவு தீர்த்துஅருள் சுவாமி! கார்முக...... வன்பர்ஆன

கொடிய வேட்டுவர் கோகோ கோ என
     மடிய, நீட்டிய கூர் வேலாயுத!
          குருகு க்ஷேத்ர புரஈசா! வாசுகி ...... அஞ்சமாறும்

செரு பராக்ரம கேகே வாகன!
     சரவண உற்பவ! மாலால் லாளித
          திரள் புய அத்திரி ஈர் ஆறு ஆகிய ...... கந்தவேளே!

சிகர தீர்க்க மகா சீ கோபுர
     முக! சட அக்கர சேண் நாடு ஆக்ருத
          திரி சிராப்பளி வாழ்வே! தேவர்கள் ...... தம்பிரானே.


பதவுரை

      குரு கடாக்ஷ --- குருமூர்த்தியாய் கடைக்கணிக்க வல்லவரே! 

      கலா வேத ஆகம -- கலை வேதம் ஆகமம் இவைகளின்

     பரம வாக்கிய --- சிறந்த மொழிகளை

     ஞான ஆசாரிய --- உபதேசிக்க வல்ல ஞான குருவே! 

       குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி --- குறைகள் யாவற்றையும் தீர்த்தருளுகின்ற சுவாமியே,

      கார்முக வன்பர் ஆன --- வில்லை ஏந்திய வலிமையாளரான

     கொடிய வேட்டுவர் --- பொல்லாத வேடர்கள்

     கோ கோ கோ என மடிய நீட்டிய --- “கோ கோ கோ” என்று கூக்குரலிட்டு உம்மைச் சுற்றிய போது, அவர்கள் இறக்கும்படி நீட்டி விடுத்த

     கூர் வேல் ஆயுத --- கூரிய வேலாயுதரே! 

       குருகு க்ஷேத்ரபுர ஈசா --- கோழியூர் என்ற உறையூரில் வாழும் தலைவரே! 

      வாசுகி அஞ்சுமாறும் செரு பராக்ரம கேகே வாகன  --- வாசுகி என்ற நாகவேந்தன் அஞ்சும்படி போர் செய்யும் வீரத்தையுடைய மயில் வாகனரே! 

      சரவண உற்பவ --- சரவணப் பொய்கையில் தோன்றியவரே!

      மாலால் லாளித --- பெருமையால் அழகு பெற்ற

     திரள் புய அத்திரி --- திரண்ட புயமலைகள்

     ஈராறு ஆகிய கந்தவேளே --- பன்னிரண்டு கொண்ட கந்தக் கடவுளே! 

      சிகர தீர்க்க மகா சீ கோபுர முக --- சிகரங்கள் நீண்ட பெருஞ் சிறப்புள்ள கோபுர முகப்பில் வீற்றிருப்பவரே!

      சடாக்கர --- ஆறெழுத்துக்களை உடையவரே! 

      சேண் நாடு ஆக்ருத திரிசிராப்பள்ளி வாழ்வே --- விண்ணுலகம் போல் உயர்ந்த திருச்சிராப்பள்ளியில் வாழ்கின்றவரே! 

      தேவர்கள் தம் பிரானே --- தேவர்கள் போற்றும் தலைவரே! 

      பொருளின் மேல் ப்ரிய காம ஆகாரிகள் --- பணத்தின் மேல் ஆசை வைத்த காமத்தின் உறைவிடமானவர்கள்.

      பரிவு போல் புணர் க்ரீடா பீடிகள் --- அன்புடையவர்கள் போல் சேரும் காம வீலையின் இருப்பிடமானவர்கள்.

      புருஷர்கள் கோட்டியில் நாணா மோடிகள் --- ஆண்களின் கூட்டத்தில் வெட்கமில்லாத செருக்குடையவர்கள்.

      கொங்கை மேலே புடைவை போட்டிடு மாய ரூபிகள் --- தனங்களின் மீது புடவை போட்டுள்ள மாய வடிவத்தினர்.

     மிடியர் ஆக்கு பொலா மூதேவிகள் --- தம்மிடம் வந்தவரைத் தரித்திராகச் செய்யும் பொல்லாத மூதேவிகள்.

      புலையர் மாட்டும் மறாதே கூடிகள் --- கீழ்மக்களிடத்தும் மறுக்காமல் சேர்பவர்கள்.

      நெஞ்ச மாயம் கருத ஒணா பல கோடா கோடிகள் --- நெஞ்சத்தில் வஞ்சனை நினைவுகள் எண்ண முடியாத பல கோடிக் கணக்காக உடையவர்கள்.

      விரகினால் பலர்மேல் வீழ் வீணிகள் --- தந்திரத்தால் பலர்மேல் விழுகின்ற பயனில்லாதவர்கள்.

      கலவி சாத்திர நூலே ஓதிகள் --- காம நூல்களையே படிப்பவர்கள்.

      தங்கள் ஆசை கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள் --- தங்கட்கு விருப்பமான பாடல்களைப் பாடி அழைப்பதில், ஓயாத மழை போன்றவர்கள்.

     அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள் --- மயக்கத்தைத் தருகின்ற பேய் போல ஆடவைக்கும் கள்ளைக் குடிப்பவர்கள்.

     கருணை நோக்கம் இலா மா பாவிகள் --- இரக்கமுள்ள பார்வையே இல்லாத பெரிய பாவிகளாம் பரத்தையருடைய,

     இன்பம் ஆமோ --- இன்பம் ஆகுமோ? (ஆகாது).


பொழிப்புரை

        குருமூர்த்தியாய் கடைக்கண் பார்வையால் அருள்புரிய வல்லவரே!

     கலை வேதம் ஆகமம் ஆகிய சிறப்பான மொழிகளை உபதேசிக்க வல்ல ஞானாசாரியரே!

     அடியவர்களின் குறைகளைத் தீர்த்தருளும் சுவாமியே!

     வில்லையேந்திய வலிய, பொல்லாத வேடர்கள் “கோ கோ” என்று இரைச்சலிட்டு உம்மைச் சூழ்ந்தபோது, அவர்கள் மீது வேலை ஏவியவரே!

     கோழியூர் என்ற உறையூரில் வாழும் தலைவரே!

     வாசுகி என்ற நாகராஜன் அஞ்சுமாறு போர் செய்யும் வீரத்தையுடைய மயில் வாகனரே!

     சரவணப் பொய்கையில் தோன்றியவரே!

     பெருமையும அழகும் திரட்சியும் படைத்த மலைபோன்ற பன்னிரு தோள்கைளை உடையவரே!

     கந்தக் கடவுளே!

     சிகரங்கள் நீண்ட பெருஞ் சிறப்புள்ள கோபுர முகப்பில் வீற்றிருப்பவரே!

     ஆறு அட்சரங்கட்கு உரியவரே விண்ணுலகம்போல் உயர்ந்த திரிசிராப்பள்ளியில் வாழ்பவரே!

     தேவர்கள் போற்றும் தலைவரே!

         பணத்தாசை கொண்ட காமத்தின் உறைவிடமானவர்கள், அன்புடையவர்போல் நடித்துச் சேரும் காமலீலைக்கு இருப்பிடமானவர்கள், ஆண்களில் கூட்டத்தில் நாணமில்லாத செருக்குடையவர்கள், தனத்தின் மீது ஆடையிட்டுள்ள மாயா வடிவத்தினர்கள், தம்மிடம் வந்தவரைத் தரித்திரராகச் செய்யும் பொல்லாத மூதேவிகள், கீழ்மக்களையும் மறுக்காமல் சேர்பவர்கள், நெஞ்சத்துள்ள மாய நினைவுகள் எண்ண முடியாத கோடி கோடியாக வுடையவர்கள், தந்திரத்தினால் பலர்மீது விழும் வீணிகள், காமநூலையே சதா படிப்பவர்கள், தங்கட்கு விருப்பமான பாடல்களைப் பாடி இளைஞரை அழைக்கும் மழை போன்றவர்கள், நினைவை மாற்றிப் பேய் போலாட வைக்கும் கள்ளைக் குடிப்பவர்கள், கருணை நோக்கமேயில்லாத பெரிய பாவிகளான வேசையரது இன்பம் ஆகுமோ? (ஆகாது.)

விரிவுரை

இத்திருப்புகழிலும் முதல் நான்கு அடிகளில் பொருட் பெண்டிரின் செயல்களைக் கூறுகின்றார்.

நெஞ்சமாயம் கருதொணாப்பல கோடாகோடிகள் ---

விலைமாதர்களின் நெஞ்சத்தில் எழும் வஞ்ச நினைவுகள் எண்ணில்லாதன.

விரகுடன் நூறாயிர மனமுடைய மாபாவிகள்”

வஞ்சகமே கோடிகோடிகள் நெஞ்சமே சேர மேவிய
     வன்கணார், கோடா கோடிய மனது ஆனார்”    --- திருப்புகழ்.

அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள் ---

ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள்”   --- (ஆசார ஈன) திருப்புகழ்.

கள்ளுண்டார் அறிவு மயங்கி, செய்வன தவிர்வன அறியாதும், சொல்வன இன்னதென்று உணராதும் ஆடுவர்.

கள்விலை பகர்வோர், கள் அருந்துவோர், கள் அருந்துதற்கு உடன்படுவோர், கள் அருந்துனரை மகிழுனர், இவர்கள் அனைவரும் நரகில் கிடந்து துயருறுவார்கள்.


குரு கடாக்ஷ ---

கடாக்ஷம்-கடைக்கண் பார்வை, இறைவனுடைய கடைக்கண் பார்வை ஆன்மாக்களை உய்விக்கும். குருவின் கடைக் கணிப்பு மாணவனை உய்விக்கும்.


வேட்டுவர் கோகோ கோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத ---

கந்தவேள் வள்ளி நாயகியை களவாடிக் கொண்டு போன போது, வேடர்கள் வில்லம்புடன் தொடர்ந்து சென்று, கோ கோ என்று கதறச் சூழ்ந்து வளைந்தார்கள். வள்ளிபிராட்டியார் “ஐயனே!  நும் மீது அம்புகளை ஏவும் இவர்கள் மீது வேல் ஏவும்” என வேண்டினார். அப்போது கொடியில் இருந்த சேவல் கொக்கரித்தது. வேடர்கள் வீழ்ந்து மாய்ந்தனர். பின்னர் நாரதரின் வேண்டுகோளின்படி, முருகவேள் அனுமதி செய்ய, வள்ளிநாயகி, “யாவரும் எழுக” என்னலும் வேடர்கள் உயிர்பெற்றெழுந்தார்கள். கந்தபுராணம் சேவலின் ஒலியால் வேடர்கள் மாய்ந்தார்கள் என்று கூறுகின்றது. அருணகிரியார், வேலை விட்டு மாய்த்தார் என்று கூறுகின்றார். இவ்வாறே பிறிதொரு பாடலிலும் கூறுகின்றார்.

வேற்கொடு கடுகிய முடுகிய
செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட     மயிலேறும்”    --- (வெருட்டி) திருப்புகழ்.

குருகு க்ஷேத்ர புரீசா:-

குருகு-பறவை. கோழியூர்-என்பது உறையூர்.

திருமுக்கீச்சுரம், யானையைக் கோழி வென்றதால் கோழியூர் எனப் பேர் பெற்றது.

இத்தி ருத்தலம் திரிசிராமலைக்கு மேற்கே 1 கல் தொலைவில் உள்ளது.

வாசுகி அஞ்சமாறு செரு பராக்ரம கேகேவாகன:-

கேகயம்-மயில்.   வாசுகியென்ற அரசனை மயில் வென்றது.

வாள் எயிறு அது உற்ற பகுவாய் தொறும் நெருப்பு உமிழும்
வாசுகி எடுத்து உதறும் வாசிக்காரனும்”                    --- திருவகுப்பு.

திரள் புயாத்திரி:-  புய அத்திரி, அத்திரி-வலை, புயமாகிய மலை.

கருத்துரை

திரிசிராமலை மேவு முருகா! மகளிர் இன்பம் ஆகாது.


                 

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...