திருச்சிராப்பள்ளி - 0344. பொருள் கவர் சிந்தை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பொருள்கவர் சிந்தை - திருசிராப்பள்ளி

முருகா! மதர் மயல் கொண்டு திரிவதை விட்டு,
உனது திருவடியைப் புகழ்ந்து திரிவேனோ?

தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான


பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள்
     புழுககில் சந்து ...... பனிநீர்தோய்

புளகித கொங்கை யிளகவ டங்கள்
     புரளம ருங்கி ...... லுடைசோர

இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து
     இணைதரு பங்க ...... அநுராகத்

திரிதலொ ழிந்து மனதுக சிந்து
     னிணையடி யென்று ...... புகழ்வேனோ

மருள்கொடு சென்று பரிவுட னன்று
     மலையில்வி ளைந்த ...... தினைகாவல்

மயிலை மணந்த அயிலவ எங்கள்
     வயலியில் வந்த ...... முருகோனே

தெருளுறு மன்பர் பரவ விளங்கு
     திரிசிர குன்றில் ...... முதனாளில்

தெரிய இருந்த பெரியவர் தந்த
     சிறியவ அண்டர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள்
     புழுகு அகில் சந்து ...... பனிநீர் தோய்

புளகித கொங்கை இளக, வடங்கள்
     புரள, மருங்கில் ...... உடை சோர,

இருள்வளர் கொண்டை சரிய, இசைந்து
     இணைதரு பங்க ...... அநுராகத்

திரிதல் ஒழிந்து, மனது கசிந்து,உன்
     இணையடி என்று ...... புகழ்வேனோ?

மருள் கொடு சென்று, பரிவுடன் அன்று
     மலையில் விளைந்த ...... தினைகாவல்

மயிலை மணந்த அயிலவ! எங்கள்
     வயலியில் வந்த ...... முருகோனே!

தெருள் உறும் அன்பர் பரவ விளங்கு
     திரிசிர குன்றில் ...... முதல்நாளில்

தெரிய இருந்த பெரியவர் தந்த
     சிறியவ! அண்டர் ...... பெருமாளே.

பதவுரை

      மருள்கொடு சென்று --- (வள்ளிபிராட்டிமீது) மோக மயக்கம் கொண்டு சென்று,

     பரிவுடன் அன்று --- அன்புடன் அந்நாளில்,

     மலையில் விளைந்த தினை காவல் --- வள்ளி மலையில் விளைந்த தினைப்பயிரைக் காவல் புரிந்த,

     மயிலை மணந்த அயிலவ! ---  மயில் போன்ற வள்ளிபிராட்டியை மணந்து கொண்ட வேலவரே!

       எங்கள் வயலியில் வந்த முருகோனே --- எங்கள் வயலூரில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே!

       தெருள் உறும் அன்பர் பரவ விளங்கு --- தெளிந்த அறிவுடைய அடியார்கள்  துதி செய்ய விளங்குகின்ற,

     திரிசிர குன்றில் --- திரிசிரா மலையில்

     முதல் நாளில் --- ஆதி நாள் முதல்

     தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ --- எல்லோர்க்குந் தெரியுமாறு இருந்த பெரியவராகிய சிவபெருமான் பெற்ற சிறிய பெருந்தகையே!

       அண்டர் பெருமானே --- தேவர்கள் போற்றும் பெருமையில் சிறந்தவரே!

       பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் --- பொருளைக் கவர்வதையே சிந்தையில் கொண்ட பொது மாதர்களுடைய

     புழுகு அகில் சந்து பனிநீர் தோய் --- புழுகு, அகில், சந்தனம், பன்னீர் ஆகிய இந்த வாசனைகள் தோய்ந்த,

     புளகித கொங்கை இளக --- புளகிதங்கொண்ட தனங்கள் நெகிழ்ந்து அசையவும்,

     வடங்கள் புரள --- மணிமாலைகள் புரளவும்,

     மருங்கில் உடை சோர --- இடையில் ஆடை சோரவும்,

     இருள் வளர் கொண்டை சரிய ---  இருள் நிறைந்த கரிய கூந்தல் சரியவும்,

     இசைந்த இணைதரு பங்க --- மனம் ஒத்துச் சேருகின்ற குற்றத்துக்கு இடமான

    அநுராக திரிதல் ஒழிந்து --- காம வாழ்க்கையில் திரிகின்ற தன்மை ஒழிந்த,

    மனது கசிந்து --- உள்ளம் உருகி

     உன் இணை அடி என்று புகழ்வேனோ --- உமது இரு திருவடிகளை அடியேன் என்று புகழ்வேனோ?


பொழிப்புரை

       வள்ளி மீது மயக்கம் கொண்டு சென்று அன்புடன் அன்று, வள்ளிமலையில் விளைந்த தினைப்பயிரைக் காவல் புரிந்த வள்ளியாகிய மயிலை மணந்துகொண்ட வேலவரே!

     எங்கள் வயலூரில் எழுந்தருளிய முருகக் கடவுளே!

     தெளிந்த அறிவுடைய அன்பர்கள் துதி செய்ய விளங்குகின்ற திரிசிரா மலையில் ஆதிநாள் முதல் எல்லோருக்கும் தெரிய எழுந்தருளியிருக்கும் பெரியவராகிய சிவபெருமான் பெற்ற சிறிய பெருந்தகையே!

     தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே

         பணத்தைக் கவர்கின்ற மனத்தையுடைய பொது மாதர்களின் புனுகு அகில் சந்தனம் பன்னீர் ஆகிய நறுமணந் தோய்ந்த புளகிதங் கொண்ட தனங்கள் நெகிழ்ந்து அசையவும், மணிமாலைகள் புரளவும், இடையில் உள்ள உடை சோரவும், இருண்ட கரிய கழல் சரியவும், மனம் ஒத்து சேர்கின்ற குற்றம் பொருந்திய காம வாழ்க்கையில் திரிகின்ற தன்மையொழிந்து, மனம் கசிந்து உருகி உமது இரு திருவடிகளை என்று அடியேன் புகழ்வேனோ?


விரிவுரை

பொருள் கவர் சிந்தை ---

பொது மாதரது மனம், தம்மை நாடி வருபவரிடம் பணத்தைக் கவர்வதிலேயே தீவிரமாக வேலை செய்யும்.
  
மனது கசிந்து உன் இணையடி என்று புகழ்வேனோ ---

இறைவன் அடிமலரை நினைக்கும்போது மனங்கரைந்து உருக வேண்டும்.

இன்றிருந்து நாளை அழிகின்ற மனிதர்களைப் புகழாமல் எம்பெருமானைப் புகழவேண்டும்.
  
வயலியில் வந்த ---

திரிசிராப்பள்ளித் திருப்புகழ் பலவற்றில் அண்மையில் உள்ள வயலூரையும் இணைத்தே சுவாமிகள் பாடுகின்றார்.

தெரிய இருந்த பெரியவர் ---

சிவபெருமான் ஒருவரே எல்லோருக்கும் பெரியவர்.

     பெரியவன் சிராப்பள்ளிப் பேணுவார்
    அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே”      --- அப்பர்.

சிறியவர் ---

சிவகுமாரர் நால்வர், விநாயகர், வீரபத்திரர், வைரவர், வேலவர் இந்த நால்வரில் சிறியவர் முருகர்.


கருத்துரை

சிராமலை நாதா! உமது பாதத்தைப் புகழ்ந்து பாட அருள் செய்வீர்.

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...