திருச்சிராப்பள்ளி - 0345. வாசித்துக் காண




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வாசித்துக் காண - திருசிராப்பள்ளி

முருகா!
ஊன உடலை விரும்பி வாழ்நாளை வீணாக்காமல் அருள்

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன
     தானத்தத் தான தானன ...... தந்ததான

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
     வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
     மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
     லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்

யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
     யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ

ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
     லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே

ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
     ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா

நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
     நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா

நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
     நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


வாசித்துக் காண ஒணாதது, பூசித்துக் கூட ஒணாதது,
     வாய்விட்டுப் பேச ஒணாதது, ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோண ஒணாதது, நேசர்க்குப் பேர ஒணாதது,
     மாயைக்குச் சூழ ஒணாதது, ...... விந்துநாத

ஓசைக்குத் தூரம் ஆனது, மாகத்துக்கு ஈறு அது ஆனது,
     லோகத்துக்கு ஆதி ஆனது ...... கண்டு, நாயேன்

யோகத்தைச் சேருமாறு, மெய்ஞ் ஞானத்தைப் போதியாய், னி
     ஊனத்தைப் போடிடாது  ......மயங்கல் ஆமோ?

ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல்
     ஆகிப் பொன் பாதமே பணி ...... கந்தவேளே!

ஆலித்துச் சேல்கள் பாய்வய லூர் அத்தில் காளமோடு அடர்
     ஆரத்தைப் பூண் மயூர! து ...... ரங்கவீரா!

நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்து, ட்டாத யோகிகள்
     நாடிற்றுக் காணெ ஒணாது என ...... நின்றநாதா!

நாகத்துச் சாகை போய்உயர் மேகத்தைச் சேர் சிராமலை
     நாதர்க்குச் சாமியே! சுரர் ...... தம்பிரானே.


பதவுரை

      ஏனல் காவல் செய் வேடிச்சிக்கு ஆக ஆசைப்பட்டு --- தினைப்புனத்தைக் காவல் செய்திருந்த வேட்டுவப் பெண்ணாகிய வள்ளியம்மையார் பொருட்டு அன்புகொண்டு,

     மாமயல் ஆகி ---  பெரிய மயக்கத்தையடைந்தவர் போல் சென்று,

     பொன் பாதமே பணி கந்தவேளே --- பொற்பிரகாசம் பொருந்திய அவருடைய திருவடிகளை வணங்கிய கந்தக் கடவுளே!

      ஆலித்து --- ஆரவாரித்து,

     சேல்கள் பாய் வயலூர் அத்தில் --- சேல்மீன்கள் பாய்ந்து விளையாடுகின்ற வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி,

     காளமோடு அடர் ஆரத்தை பூண் ---  விடத்தோடு கூடிய பாம்பை மாலையாகத் தரித்த,  

     மயூர துரங்க வீரா --- மயிலாகிய குதிரைமேல் பவனி வரும் வீரமூர்த்தியே!

      நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்து --- மூக்கின் வழியாக பிராணவாயுவினை வெளியே விடுத்து மீண்டும் பூரகஞ் செய்து

     எட்டாத யோகிகள் --- சஹஸ்ராரப் பெருவெளிவரை எட்டுதலை அடையாத யோகிகள்,

     நாடிற்று காண ஒணாது என ---  நாடிப் பார்த்துங் காண்டற்கு அரிது என்னும்படி

     நின்ற நாதா --- அப்பாலைக்கு அப்பாலாக நின்ற தனிப்பெருந் தலைவரே!

      நாகத்து சாகைபோய் --- மலையில் கிளைச் சிகரமானது நீண்டு சென்று,

     உயர் மேகத்தை சேர் --- உயர்ந்துள்ள மேகமண்டலம் வரை சேர்ந்துள்ள

     சிராமலை நாதர்க்குச் சாமியே --- திரிசிராமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு உரிய பொருளே!

      சுரர் தம்பிரானே --- தேவர்களுக்குத் தலைவரே!

      வாசித்துக் காண ஒணாதது --- நூல்களைக் கற்று அக்கலை யறிவினால் காணக் கூடாதது.

     பூசித்துக் கூட ஒணாதது --- பூசை செய்து அக்கிரியா மார்க்கத்தாலும் அடைதற்கரியது.

     வாய்விட்டுப் பேச ஒணாதது --- வாக்கினால் இத்தன்மைத்து என்று பேசுவதற்கு முடியாதது.

     நெஞ்சினாலே மாசற்கு தோண ஒணாதது --- குற்றமுடையோர்கள் உள்ளத்தில் தோன்றி விளங்காதது.

     நேசர்க்கு பேர ஒணாதது --- அன்பு செய்வார் உள்ளத்தினின்றும் நீங்காது நிலைத்திருப்பது.

      மாயைக்கு சூழ ஒணாதது --- மாயையினால் வளைக்க முடியாதது.

     விந்து நாத ஓசைக்கு தூரம் ஆனது --- விந்து சுழல அதனின்றும் எழும் நாத ஒலிக்கு மிக்க சேய்மையிலிருப்பது.

      மாகத்துக்கு ஈறு அது ஆனது = விண்ணின் முடிவில் விளங்குவது.

     லோகத்துக்கு ஆதியானது --- உலகத்திற்கு முதன்மையானது.

     இத் தன்மைத்து ஆகிய மெய்ப் பொருளை,

     நாயேன் கண்டு --- நாயினேன் உளக்கண்ணால் கண்டு

     யோகத்தைச் சேருமாறு மெய்ஞானத்தைப் போதியாய் --- சிவயோகத்தை அடையுமாறு உண்மை அறிவை உபதேசித்தருள்வீர்,

     இனி ஊனத்தைப் போடிடாது மயங்கலாமோ --- இனிமேலும் இவ்வூன் உடம்பை வெறுத்து ஒதுக்காது மயங்கி வறிதே அழியலாமோ?

பொழிப்புரை

         தினைப்புனத்தைக் காத்திருந்த வேடமங்கையாகிய வள்ளிநாயகியார் மீது அன்புற்று மயக்கமடைந்தவர்போல் சென்று பொன்மயமான அவருடைய திருவடியில் வணங்கிய கந்தவேளே!

         ஆரவாரத்துடன் சேல்மீன்கள் துள்ளிப் பாய்கின்ற வயலூர் என்னுந் திருத்தலத்தில் எழுந்தருளி, நஞ்சினையுடைய பாம்பை மாலையாகத் தரித்துக் கொள்ளும் மயிற்பரியின் மீது பவனிவரும் வீரமூர்த்தியே!

         நாசியில் பிராணவாயுவை ரேசகபூரக கும்பகமென்னும் சாதனங்களால் செலுத்தி மேலைப் பெருவெளிவரை எட்டாத யோகிகளால் நாடிக் காணமாட்டாதவரென அப்பாலைக்கப்பாலாய் நின்ற வான்பொருளே!

         மலையின் கிளைச் சிகரமானது உயர்ந்து மேக மண்டலம்வரை நீண்டு உயர்ந்துள்ள திரிசிராமலை என்னுந் திருமலையின் மீது கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு உரிய பொருளாக விளங்குபவரே!

         தேவர்கட்கெல்லாம் தலைவரே!

         கல்வியறிவினால் காணப்படாததும், கிரியா மார்க்கத்தால் கிட்டுதற்கரியதும், வாய்விட்டு வசனிப்பதற்கு இயலாததும், குற்றமுள்ளவர் மனதில் தோன்றாமல் ஒளிந்திருப்பதும், அன்பர்கள் உள்ளத்தில் நீங்காது நிலை பேறாக இருப்பதும், மாயையினால் சூழ முடியாததும், விந்து நாத ஓசைக்கு அதி தூரத்தில் இருப்பதும், பூத வெளி கடந்து பரவெளியின் முடிவில் இலகுவதும், உலகத்திற்குத் தலைமையானதும் ஆகிய மெய்ப் பொருளை நாயேன் கண்டு, சிவயோகத்தைச் சேர்ந்து உய்யுமாறு உண்மை உபதேசித்தருள்வீர். இனி அடியேன் இவ்வூன உடம்பை வெறுக்காது வறிதே வாணாளைக் கழித்து மயங்குவது முறைமையோ?

விரிவுரை

வாசித்துக் காண ஒணாதது ---

கல்வி அறிவினால் இறைவனைக் காண முடியாது. அநுபவ அறிவினாலேயே காண முடியும். அவ்வநுபவ அறிவு கலையறிவால் வரும் அநுபவ அறிவை வேண்டாது வெறுங் கலையறிவே அமையும் என்பார்க்கு அறிவுறுத்துவாராகி “வாசித்துக் காண ஒணாதது” என்றனர்.

கற்று எட்டத் தான் முடியாதது” என்றார் மக்கட்குக் கூற அரிதானது எனத் தொடங்கும் திருப்புகழிலும்.

மணக்கும் மலர்த் தேன்உண்ட வண்டே போல
     வளர் பரமானந்தம் உண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
இணக்கம் உறக் கலந்துகலந்து, தீதம் ஆதற்கு,
    இயற்கை நிலை யாது, துதான் எம்மால் கூறும்
கணக்குவழக்கு அனைத்தையும் கடந்து, அந்தோ,
     காண்பு அரிது,ங்கு எவர்க்கும் எனக் கலைகள் எல்லாம்
பிணக்கு அற நின்று ஓலமிடத் தனித்து நின்ற
     பெரும்பதமே மதாதீதப் பெரியதேவே.     --- திருவருட்பா


பூசித்துக் கூட ஒணாதது ---

பூஜை செய்வதாகிய வெறும் கிரியை நெறியால் மட்டும் இறைவனோடு கூட முடியாது.

ஞானநெறி ஒன்றாலேயே இறைவனைக் கூடமுடியும்.

அந்த ஞானத்திற்குக் கிரியாநெறி சாதனமாகும். சரியையாற் கிரியையும், கிரியையால் யோகமும், யோகத்தால் ஞானமும், ஞானத்தால் இறைவனையும் அடையலாம்.

       ஓது சரியைக் ரியையும் புணர்ந்தவர் எவராலும்
       ஓத அரிய துரியங் கடந்தது”                      --- (ஓலமறைக) திருப்புகழ்.

       கிரியை யாளர்க்கும்................................எட்டரிதாய”
                                                                       --- (சரியையாளர்) திருப்புகழ்.

விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு மலர் காய் கனி போல் அன்றோ பராபரமே.       --- தாயுமானார்.

வாய்விட்டுப் பேச ஒணாதது ---

இறைவனது தன்மை வாக்கினால் இத்தன்மைத்தென்று அறுதியிட்டுப் பேசுந் தரமுடையதன்று. உணர்ச்சியால் உணர்வினோர் உணர்தற்பாலதாம்.

      உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்”    --- சேக்கிழார்.

      மக்கட்குக் கூறரிதானது”                 --- திருப்புகழ்.

      மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே” ---மணிவாசகம்.

      இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க”    --- மணிவாசகம்.                        

மாசர்க்குத் தோண ஒணாதது ---

இறைவன் மாசுடையார் மனதில் தோன்றாமல் பாலிற்படு நெய்போல மறைந்திருப்பான்.

"விறகில் தீயினன், பாலில் படுநெய் போல்
மறைய நின்று உளான் மாமணிச் சோதியான்"      --- அப்பர்.

நேசர்க்குப் பேரொணாதது ---

அன்பர்கள் உள்ளத்தைவிட்டு நீங்காது இறைவன் நிலை பேறாக வீற்றிருப்பான்.

       இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க”  ---மணிவாசகம்.

கற்பகோடிக் காலம் கனலுக்கு நடுவே ஊசியின் மீது நின்று ஊணுறக்கந் தவிர்த்து, பொறி புலன்களை யொடுக்கி, எலும்பு தோன்ற தவஞ் செய்வோர்க்கும், தேவர்க்கும், முனிவர்க்கும், வேதங்கட்கும் தன்னுருக் காட்டாது ஒளிந்து நிற்கும் அம்முதல்வன் அன்புமிக்க ஞானசீலர்கள் உள்ளத்தில் கோயில் கொண்டிருப்பான்.

கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
     கனலின்நடு ஊசியின்மேல் காலைஊன்றிப்
பொற்புஅறமெய் உணர்வுஇன்றி உறக்கம்இன்றிப்
     புலர்ந்துஎலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
நிற்பவருக்கு ஒளித்து, மறைக்கு ஒளித்து, யோக
     நீண்முனிவர்க்கு ஒளித்து, அமரர்க்கு ஒளித்து, மேலாம்
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து, ஞானத்
     திருவாளர் உள்கலந்த தேவதேவே.   --- திருவருட்பா.

விந்துநாத ஓசைக்கு தூரமானது ---

சிவ தத்துவங்கள் ஐந்தனுள் அடங்குபவை விந்துவும் நாதமும். அன்மதத்துவங்கள் 24. வித்தியா தத்துவங்கள் 7. சிவதத்துவங்கள் 5. ஆக 36. தத்துவங்களையும் கடந்து நிற்கும் தத்துவாதீதனாகிய இறைவன் விந்துநாத ஓசைக்கு அப்பாற்பட்டு விளங்குபவன்.

       நாத விந்து கலாதீ நமோ நம             --- திருப்புகழ்.                                                          

      ஆறாறையுநீத்ததன்மே னிலையைப்
   பேறா அடியேன் பெறுமாறுளதோ”          --- கந்தர்அநுபூதி.                           


ஆசைப்பட்.........பணி ---

மூவருங்காணா முழுமுதலாகிய முருகவேள் வள்ளியம்மையாரை (களவியலை) உலகிற் கறிவுறுத்தும் பொருட்டு களவு மணம் புணர்ந்தருளினார். ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு இறைவன் தனது உயர்நிலையினின்றும் கீழிறங்கி வந்து எளிதில் ஆட்கொள்ளும் கருணைப் பெருக்கை இது உணர்த்துகின்றது.

வேளே ---

ஆன்ம கோடிகளால் விரும்பத் தக்கவன்.

நாசிக்குள்.......நாதா ---

இறைவன் சிவயோகிகளால் காணத்தக்கவன்.


கருத்துரை

வள்ளி மணவாளரே! மயில் வாகனரே! சிவ யோகிகளால் காணத்தக்கவரே! சிராமலைச் செம்மலே! மெய்ஞ் ஞானத்தைப் போதித்து உய்வித்தருள்வீர்


No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...