மயிலம் - 0331. கொலை கொண்ட




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொலை கொண்ட (மயிலம்)

மயில முருகா!
மாதர் மயலில் உழன்று உயிர் போகும் முன்
உனது திருவடியை அருள்வாய்

தனதந்த தானன தானா தானா
     தனதந்த தானன தானா தானா
     தனதந்த தானன தானா தானா ...... தனதான


கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
     விடமிஞ்சு பாதக வேலோ சேலோ
     குழைகொண்டு லாவிய மீனோ மானோ ...... எனுமானார்

குயில்தங்கு மாமொழி யாலே நேரே
     யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்
     குளிர்கொங்கை மேருவி னாலே நானா ...... விதமாகி

உலைகொண்ட மாமெழு காயே மோகா
     யலையம்பு ராசியி னூடே மூழ்கா
     வுடல்பஞ்ச பாதக மாயா நோயா ...... லழிவேனோ

உறுதண்ட பாசமொ டாரா வாரா
     எனையண்டி யேநம னார்தூ தானோர்
     உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ...... ளருள்வாயே

அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
     எனநின்று வாய்விட வேநீள் மாசூ
     ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா ...... யிடவேதான்
  
அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ
     ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
     அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி

மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய்
     குறமங்கை யாளுட னேமா லாயே
     மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் ...... குமரேசா

மதிமிஞ்சு போதக வேலா ஆளா
     மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
     மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கொலைகொண்ட போர்விழி கோலோ? வாளோ?
     விடம் மிஞ்சு பாதக வேலோ? சேலோ?
     குழை கொண்டு உலாவிய மீனோ? மானோ? ...... எனும் மானார்

குயில்தங்கு மா மொழியாலே, நேரே
     இழைதங்கு நூல் இடையாலே, மீதுஊர்
     குளிர் கொங்கை மேருவினாலே, நானா ...... விதம்ஆகி,

உலைகொண்ட மாமெழுகு ஆயே, மோகா
     அலை அம்பு ராசியின் ஊடே மூழ்கா,
     உடல் பஞ்ச பாதகர் மாயா நோயால் ...... அழிவேனோ?

உறுதண்ட பாசமொடு ஆரா வாரா,
     எனை அண்டியே நமனார் தூது ஆனோர்,
     உயிர்கொண்டு போய்விடு நாள், நீ மீதாள் ......அருள்வாயே.

அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
     என நின்று வாய் விடவே, நீள் மாசூர்
     அணி அம் சராசனம் வேறாய் நீறு ...... ஆயிடவே தான்

அவிர்கின்ற சோதிய, வார் ஆர் நீள் சீர்
     அனல் அம் கை வேல்விடும் வீரா! தீரா!
     அருமந்த ரூபக! ஏகா! வேறோர் ...... வடிவாகி,

மலைகொண்ட வேடுவர் கான் ஊடே போய்,
     குறமங்கையாளுடனே மால் ஆயே,
     மயல்கொண்டு உலாய் அவள் தாள் மீதே வீழ் .....குமரஈசா!

மதிமிஞ்சு போதக வேலா! ஆளா
     மகிழ் சம்புவே தொழு பாதா! நாதா!
     மயிலம் தண் மாமலை வாழ்வே! வானோர் ...... பெருமாளே.


பதவுரை

அலைகொண்ட வாரிதி -- -அலைவீசும் கடல்,

கோ கோ கோ கோ என --- கோ கோ என்று ஒலித்து,

நின்று வாய் விடவே --- வாய்விட்டு நின்று ஓலமிட,

நீள் மாசூர் --- அதனுள் மாமரமாய் நின்ற சூரபன்மன்,

அணி அம் சராசனம் வேறாய் --- வைத்திருந்த வில் வேறுபட்டு விழ,

நீறாய் இடவே தான் --- பொடியாகுமாறு,

அவிர்கின்ற சோதிய --- ஒளி விடுகின்ற ஒளியைக் கொண்டதும்,

வார் ஆர் --- நேர்மை நிறைந்ததும்,

நீள் சீர் --- பெருமை நீண்டதும்,

அனல் --- நெருப்பைக் கொப்பளிப்பதுமான,

அம் கை வேல் விடும் வீரா --- அழகிய கரத்தில் இருப்பதுமான வேலைவிட்ட வீரரே! 

தீரா --- தீரரே! 

அருமந்த ரூபக --- அருமையான வடிவையுடையவரே! 

ஏகா --- ஒப்பற்றவரே!

வேறு ஓர் வடிவு ஆகி --- வேற்று வடிவைக் கொண்டு,

மலைகொண்ட வேடுவர் கான் ஊடே போய் --- மலையை இருப்பிடமாகக் கொண்ட வேடர்களின் காட்டில் சென்று,

குறமங்கையாள் உடனே --- வள்ளி பிராட்டியார் மீது,

மால் ஆயே --- அன்பு வைத்து,

மயல் கொண்டு உலா --- மோகங் கொண்டு உலாவி,

அவள் தாள் மீதே வீழ் --- வேளுடைய பாதத்தின் மீது வீழ்ந்து பணிந்த,

குமர ஈசா --- குமாரக் கடவுளே! 

மதி மிஞ்சு போதக --- ஞானமிகுந்த ஞானா சாரியரே! 

ஆளா மகிழ் சம்பு தொழு பாதா --- தொண்டனாக உபதேசத்தைப் பெற்று நின்று மகிழ்ந்த சிவபெருமான் தொழுகின்ற திருவடியையுடையவரே!

நாதா --- தலைவரே! 

மயிலம் தண் மாமலை வாழ்வே --- மயிலம் என்ற குளிர்ந்த பெருமையான மலையில் வாழ்கின்றவரே! 

வானோர் --- தேவர்கள் போற்றுகின்ற,

பெருமாளே --- பெருமையின் சிறந்தவரே!  

கொலைகொண்ட போர் விழி --- கொலைத் தொழிலைக் கொண்ட போருக்குரிய கண்கள்,

கோலோ --- அம்போ?

வாளோ --- வாளாயுதமோ?

 விடம் மிஞ்சு பாதக --- நஞ்சு பாவத் தொழில் செய்யவல்ல,

வேலோ --- வேலோ?

சேலோ --- சேல் மீனோ?

குழை கொண்டு உலாவிய --- காதில் உள்ள தோட்டினைத்
தொடும் அளவுக்கு உலாவியவரும்,

     மீனோ --- மீனோ? 

     மானோ எனும் --- மானோ? என்று சொல்லத்தக்க,

     மானார் --- பெண்களின்,

     குயில் தங்கு மா மொழியாலே --- குயிலின் குரல் போல் அமைந்த சிறந்த இனிய சொற்களாலே,

     நேரே இழை தங்கு நூல் இடையாலே --- கண்ணெதிரே தோன்றும் நூலிழை போல் மெல்லிய இடையினாலே,

     மீது ஊர் குளிர் கொங்கை மேருவினாலே --- மேலே பொருந்தியுள்ள தனம் என்ற மேரு மலையாலே,

      நானாவிதம் ஆகி --- பலவகையாக நெஞ்சங் கலங்கி,

     உலை கொண்ட மா மெழுகு ஆயே --- நெருப்பின் உலையிற் பட்ட நல்ல மெழுகு போல் உருகி,

     மோக ஆய் அலை அம்பு ராசியின் ஊடே மூழ்கா --- காமம் என்னும் அலைவீசும் கடலினுள் முழுகி,

     உடல் பஞ்ச பாதக மாயா --- உடல் ஐந்து பாதத்துக்கும் ஈடாகி,

     நோயால் அழிவேனோ --- நோயினால் அழிவேனோ?

     உறுதண்ட பாசமொடு --- கையில் உள்ள தண்டாயுதம் பாசக் கயிறு இவைகளுடன்,

     ஆரா வாரா --- ஆரவாரஞ் செய்து,

     எனை அண்டியே --- அடியேனை நெருங்கி வந்து,

     நமனார் தூது ஆனோர் --- யமனுடைய தூதர்கள்,

     உயிர் கொண்டு போய்விடும் நாள் --- என்னுடைய உயிரைக் கொண்டுபோய் விடும் அந்த நாளில்,

     நீ மீதாள் --- உமது மேன்மை பொருந்திய பாதமலரை,

     அருள்வாயே --- தந்தருளுவீராக.


பொழிப்புரை


அலைகளையுடைய கடல் கோ கோ என்று வாய்விட்டு ஒலிக்க, அக்கடலில் நீண்ட மாமரமாய் நின்ற சூரபன்மனுடைய அழகிய வில் வேறுபட்டுத் தூளாகுமாறு ஒளியும் நேர்மையும் பெருமையும் உடைய நெருப்புப் போன்ற வேலைக் கையில் எடுத்து விடுத்த வீர மூர்த்தியே!

தீரரே!

அருமை வாய்ந்த வடிவினரே!

ஒப்பற்றவரே!

வடிவம் மாறி மலையிடத்து வாழ்கின்ற வேடர்களின் காட்டிற் சென்று, குறமாது மீது அன்பு கொண்டு, மையலால் அவள் காலின் மீது வீழ்ந்த குமாரக் கடவுளே!

தொண்டரைப் போல் மகிழ்ந்து சிவபெருமான் தொழுத பாதங்களையுடையவரே!

தலைவரே!

குளிர்ந்த மயிலம் என்ற பெருமை மிகுந்த மலையில் வாழுகின்றவரே! தேவர்கள் போற்றும் பெருமிதமுடையவரே!

கொலைத் தொழிலைச் செய்து போர் புரியும் கண்கள் அம்போ? வாளாயுதமோ? நஞ்சு நிறைந்து பாவத் தொழில் புரியும் வேலோ? சேல் மீனோ? காதில் உள்ள தோடு வரை சென்று உலவி வரும் மீனோ? மானோ? என்று சொல்லத்தக்க மாதர்களின், குயில் போன்ற இனிய மொழிகளாலே, எதிரில் தோன்றும் நூல்போன்ற இடையினாலே, மேலே பொருந்தியுள்ள குளிர்ந்த தனமாகிய மேரு மலையாலே பலவிடமாக நெஞ்சங் கலங்கி, உலையிட்ட மெழுகுபோல் உருகி, மோகக் கடலில் முழுகி, உடல் ஐம்பெரும் பாவங்கட்கும் ஈடாகி ஒழியாத நோயால் அழிவேனோ? தண்டாயுதமும் பாசக் கயிறும் எடுத்துக் கொண்டு ஆரவாரஞ் செய்த யமதூதர்கள் என்னை நெருங்கி வந்து உயிரைக் கொண்டு போகும் அந்த நாளில் தேவரீர் உமது மேலான திருவடியைத் தந்தருளும்.


விரிவுரை


இத்திருப்புகழில் மாதர்களின் கண் முதலிய உறுப்புக்களின் வர்ணனை நன்கு கூறப்பட்டது.

கொலை கொண்ட போர்விழி கோலோ வாளோ ---

பொது மகளிரது கண்கள் கலகஞ் செய்து கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போர் செய்ய வல்லது. கண்களுக்கு உவமையாக அம்பு, வாள், வேல், சேல், மான் முதலியவற்றைக் கூறுவர்.

பஞ்ச பாதகம் ---

கொலை, பொய், களவு, கள், குருநிந்தை.

உயிர் கொண்டுபோய் விடுநாள் நீ மீ தாள் அருள்வாயே ---

இயம தூதர்கள் வந்து உயிரைக் கொண்டு போகும் அந்நாளில் முருகா! உமது பதமலரைத் தந்தருள்” என்று அப்போதைக்கு இப்போது விண்ணப்பம் புரிகின்றார்.

அவிர்கின்ற சொதிய........வேல் ---

எம்பிரான் திருக்கரத்தில் விளங்கும் வேலாயுதம் நூறுகோடி சூரிய ஒளியை யுடையது.

உலாவுதயபாநு சதகோடி யுருவானவொ ளிவாகு மயில்வேல்’
                                                                                   --- (அவாமருவி) திருப்புகழ்.

அருமந்த ரூபக ---

முருகன் என்றாலே அழகு என்று பொருள். முருகன் திருவுருவின் அழகு எழுதரிய வடிவு. நேரே பார்த்த சூரபன்மன் கூறுகின்றான்.

ஆயிரங் கோடிகாமர் அழகு எலாம் திரண்டு ஒன்றாகி
மேயின எனினும், செவ்வேள் விமலாமாஞ் சரணந் தன்னில்
தூயநல் எழிலுக்கு ஆற்றாது என்றிடில், இனைய தொல்லோன்
மா இரு வடிவிற்கு எல்லாம் உவமை யார் வகுக்க வல்லார்.   --- கந்தபுராணம்.

முருகனுடைய திருவடியின் ஒரு மூலையில் உள்ள அழகுக்கு ஆயிரங்கோடி மன்மதர்களின் அழகு இணையாகாது.

வேறோர் வடிவாகி ---

முருகன் தன் சுய வடிவை மாற்றி, வேட வடிவாகச் சென்றார் வள்ளியிடம்.  பக்குவப்படாத ஆன்மாக்கட்கு இறைவன் தன் சொரூபத்கை் காட்டாது மானுடச் சட்டை தாங்கியே அருள் புரிவான் என்ற உண்மையை இது உணர்த்துகின்றது.

அவள் தாள்மீதே வீழ் குமரேசா ---

வள்ளியின் பாதத்தில் பணிந்தார் என்பது அவருடைய அளப்பற்ற பெருங் கருணையைக் குறிக்கிறது.

மதி மிஞ்சு போதக ---

ஞானமே வடிவாய ஆசிரியர் முருகர். அவரைக் குருவாகக் கொண்டாலன்றி மெய்ஞ்ஞானத்தைப் பெற முடியாது.

     முருகன் தனிவேல் முனி நம் குரு என்று
    அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ?”    --- கந்தரநுபூதி.


கருத்துரை


மயிலம் மேவிய வரதனே! மாதர் மயக்கில் சிக்கி மடியு முன் உன் மலர்ப்பாதந் தந்தருள்வீர்.

                 

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 21

"சொல்லால் வரும்குற்றம், சிந்தனையால் வரும் தோடம், செய்த பொல்லாத தீவினை, பார்வையில் பாவங்கள், புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீ...