சுந்தரர்
திருப்பதிக வரலாறு:
சுவாமிகள், திருப்புகலூரில் பொன் பெற்றுத்
திரும்பித் திருவாரூரை அடைந்து அமர்ந்திருந்த பின்னர், பல தலங்களை வணங்கப் புறப்பட்டு வணங்கி
வருங்கால், திருவாவடுதுறையை
வணங்கியபின் காவிரியின் தென்கரையில் உள்ள பல தலங்களைப் பணிந்து திருவிடைமருதூரை அடைந்து
இறைவரை வழிபட்டுப் பாடியருளியத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 65)
பெரிய
புராணப் பாடல் எண் : 63
விளங்கும்
திருஆ வடுதுறையில் மேயார் கோயில்
புடைவலங்கொண்டு,
உளங்கொண்டு
உருகும் அன்பினுடன் உள்புக்கு இறைஞ்சி
ஏத்துவார்,
வளங்கொள்
பதிகம் "மறையவன்"என்று எடுத்து, வளவன் செங்கணான்
தளங்கொள்
பிறப்பும் சிறப்பித்துத் தமிழ்ச்சொல் மாலை
சாத்தினார்.
பொழிப்புரை : அருள்விளங்கும்
திருவாவடுதுறையில் வீற்றிருந்தருளும் பெருமானின் திருக்கோயிலினை வலங்கொண்டு, இறைவனை உளங்கொண்டு, உருகும் அன்பினுடன் திருக்கோயில் உள்ளே
சென்று வணங்கும் சுந்தரர், `மறையவன்\' எனத் தொடங்கும் வளங்கொண்ட
திருப்பதிகத்தைப் பாடி, அதன்கண் கோச்செங்கட்சோழ
அரசரின் பிறப்பையும் சிறப்பித்து அத்தமிழ்ச்சொல் மாலையைச் சாத்தினார்.
பெ.
பு. பாடல் எண் : 64
சாத்தி
அங்கு வைகும் நாள் தயங்கும் அன்பர்
உடன்கூடப்
பேர்த்தும்
இறைஞ்சி அருள்பெற்று, பெண்ஓர் பாகத்து
அண்ணலார்
தீர்த்தப்
பொன்னித் தென்கரைமேல் திகழும் பதிகள்
பலபணிந்து,
மூர்த்தி
யார்தம் இடைமருதை அடைந்தார், முனைப்பா டித்தலைவர்.
பொழிப்புரை : திருப்பதிக மாலையைச்
சாத்தி அங்கிருந்தருளும் நாள்களில்,
அருள்
விளங்கும் அன்பர்களுடன் கூடி மீண்டும் பெருமானை வணங்கி, அருள்பெற்று, உமையொரு கூறராய அண்ணலாரின் புண்ணிய நன்னீர்
மிகுந்த காவிரியாற்றின் தென்கரையின் மேல் திகழும் திருப்பதிகள் பலவற்றையும்
பணிந்து, திருவிடைமருதூரைச்
சென்று அடைந்தார், திருமுனைப்பாடியின்
தலைவரான சுந்தரர் பெருமான்.
பெ.
பு. பாடல் எண் : 65
மன்னும்
மருதின் அமர்ந்தவரை வணங்கி, மதுரச் சொல்மலர்கள்
பன்னிப்
புனைந்து, பணிந்து ஏத்திப் பரவிப் போந்து, தொண்டருடன்
அந்நல்
பதியில் இருந்து அகல்வார், அரனார் திருநா
கேச்சுரத்தை
முன்னிப்
புக்கு வலங்கொண்டு, முதல்வர் திருத்தாள்
வணங்கினார்.
பொழிப்புரை : நிலைபெற்ற மருதமர
நிழலில் அமர்ந்தருளும் பெருமானாரை வணங்கி, இனிமை மிக்க சொல்மலர்களைக் கொண்டு
புனைந்த திருப்பதிகம் பாடிப் போற்றி வணங்கி, அப்பால் அடியார்கள் உடன்
அந்நற்பதியினின்றும் நீங்கிச் செல்வார், பெருமானாருடைய
திருநாகேச்சுரம் என்னும் திருப்பதியை நினைந்து, அங்குச் சென்று, கோயிலை வலங்கொண்டு பெருமானாரின்
திருவடிகளை வணங்கினார்.
திருவிடைமருதூரில்
அருளிய பதிகம், `கழுதை குங்குமம்' (தி.7 ப.60) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில்
அமைந்ததாகும்.
சுந்தரர்
திருப்பதிகம்
7. 060 திருவிடைமருதூர் பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கழுதை
குங்குமந் தான்சுமந்து எய்த்தால்
கைப்பர் பாழ்புக, மற்றுஅது போலப்
பழுது
நான்உழன்று உள்தடு மாறிப்
படுசு ழித்தலைப்
பட்டனன், எந்தாய்,
அழுது
நீஇருந்து என்செய்தி மனனே,
அங்க ணா,அர னே,என மாட்டா
இழுதை
யேனுக்குஒர் உய்வகை அருளாய்
இடைம ருதுஉறை எந்தைபி
ரானே
பொழிப்புரை : என் அப்பனே , திருவிடைமருதூரில் எழுந்தருளி
யிருக்கின்ற எம் குலதேவனே , கழுதையானது குங்குமப்
பொதியைச் சுமந்து மெய்வருந்தினால் ,
அதனால்
சிறப்பொன்றும் இல்லாமை கருதி , அனைவரும் நகைப்பர் ; அது போல , அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன்
மெய்ப்பயனைப் பெறாமல் மனந் தடுமாறி , வெள்ளத்தில்
உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல , இவ்வுலக
வாழ்க்கையில் அலமருவேனாயினேன் ;
` மனமே
, நீ நம் இறைவனுக்கு
மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய் ` என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும் , ` அங்கணனே , அரனே ` என்று உன்னை அன்பினால் துதிக்கவும்
மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு ,
நீ
, மனம் இரங்கி , உய்யும் நெறி யொன்றை வழங்கியருளாய் .
பாடல்
எண் : 2
நரைப்பு
மூப்பொடு பிணிவரும் இன்னே,
நன்றி யில்வினை
யேதுணிந்து எய்த்தேன்,
அரைத்த
மஞ்சள் அதுஆவதை அறிந்தேன்,
அஞ்சி னேன்,நம னார்அவர் தம்மை,
உரைப்பன்
நான்உன சேவடி சேர
உணரும் வாழ்க்கையை
ஒன்றுஅறி யாத
இரைப்ப
னேனுக்குஒர் உய்வகை அருளாய்
இடைம ருதுஉறை எந்தைபி
ரானே
பொழிப்புரை : திருவிடைமருதூரில்
எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , நரையும்
மூப்பும் பிணியும் இப்பொழுதே வரும் ; அவற்றால்
இவ்வுடம்பு , அரைக்கப்பட்ட மஞ்சள்
போல அழகிழந் தொழிவதாம் ; இவற்றை
அறிந்தேனாயினும் , நன்மை இல்லாத
செயல்களையே பற்றாகத் துணிந்துசெய்து இளைத்தேன் . அதனால் , கூற்றுவனுக்கு அஞ்சுதல் உடையனாயினேன் ; ஆகவே , இதுபோழ்து நான் உன் திருவடிகளை அடைய
உன்னை வேண்டுவேனாயினேன் ; அறிவது அறிந்து வாழும்
வாழ்க்கையைச் சிறிதும் அறியாத ,
ஆரவாரச்
சொற்களையுடையேனாகிய எனக்கு . நீ ,
உய்யும்
நெறியொன்றை வழங்கியருளாய்.
பாடல்
எண் : 3
புல்நு
னைப்பனி வெங்கதிர் கண்டால்
போலும் வாழ்க்கை, பொருள்இலை, நாளும்
என்எ
னக்குஇனி இற்றைக்கு நாளை
என்று இருந்துஇடர்
உற்றனன் எந்தாய்,
முன்ன
மேஉன சேவடி சேரா
மூர்க்கன் ஆகிக்
கழிந்தன காலம்,
இன்னம்
என்தனக்கு உய்வகை அருளாய்,
இடைம ருதுஉறை எந்தைபி
ரானே
பொழிப்புரை : என் தந்தையே , திருவிடைமருதூரில் எழுந்தருளி
யிருக்கின்ற எம் குலதேவனே , புல்லின் நுனியில்
உள்ள பனித்துளி , வெவ்வியவாகிய கிரணங்களையுடைய
பகலவனை எதிர்ப்பட்டாற் போல்வதாகிய இம்மானுட வாழ்க்கை ஒரு பொருளாதல் இல்லை ; ஏனெனில் , ` இன்றைக்கு இன்பம் உளதாகும் ; நாளைக்கு இன்பம் உளதாகும் ` என்று நாள்தோறும் நினைந்து ஏமாறினேன் ; இனி மேற்றான் , எனக்கு என்ன உண்டாக இருக்கின்றது !
ஆதலால் , முன்பே உன்னுடைய
செவ்விய திருவடியைச் சேர விரும்பாது , கொண்டது
விடாத மூர்க்கனான நிலையிலே காலமெல்லாம் போய்விட்டன ; இப்பொழுதே எனக்கு நீ , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் .
பாடல்
எண் : 4
முந்திச்
செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்கன் ஆகிக்
கழிந்தன காலம்,
சிந்தித்
தேமனம் வைக்கவும் மாட்டேன்,
சிறுச்சிறி தேஇரப்
பார்கட்குஒன்று ஈயேன்,
அந்தி
வெண்பிறை சூடும்எம் மானே,
ஆரூர் மேவிய அமரர்கள்
தலைவா,
எந்தை, நீஎனக் குய்வகை
அருளாய்,
இடைம ருதுஉறை எந்தைபி
ரானே
பொழிப்புரை : மாலைக்காலத்தில்
தோன்றுகின்ற பிறையைச் சூடிய வனே ,
திருவாரூரில்
இருக்கும் தேவர் தலைவனே , என் தந்தையே
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , முற்பிறப்பிற் செய்த வினைகள்
இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலி னால் , அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி
நிற்றலிலே காலமெல்லாம் போயின ; நன்மை தீமைகளைச்
சிந்தித்து , உலகப்பற்றை அகற்றி
உன்னை மனத்தில் இருத்தவும் மாட்டாதேனாயினேன் ; உலகியலிலும் , இரப்பவர்கட்கு அவர் விரும்பியதொன்றை ஒரு
சிறிது ஈதலும் செய்தி லேன் ; எனக்கு , நீ , உய்யும் நெறியை வழங்கியருளாய் .
பாடல்
எண் : 5
அழிப்பர்
ஐவர் புரவுஉடை யார்கள்,
ஐவ ரும்புரவு ஆசுஅற
ஆண்டு
கழித்து, கால்பெய்து போயின
பின்னை,
கடைமு றைஉனக் கேபொறை
ஆனேன்,
விழித்துக்
கண்டனன் மெய்ப்பொருள் தன்னை,
வேண்டேன் மானுட
வாழ்க்கைஈது ஆகில்,
இழித்தென்
என்தனக்கு உய்வகை அருளாய்,
இடைம ருதுஉறை எந்தைபி
ரானே
பொழிப்புரை : திருவிடைமருதூரில்
எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , நன்மைகளையெல்லாம்
அழிப்பவராகிய ஓர் ஐவர் என்னை ஆளுதலுடையர் ; அவ் வைவரும் என்னை ஆளுதலை நன்றாகச்
செய்து , ` இனி இவனாற் பயனில்லை ` என்று கழித்து , என்னைத் தங்கள் காற்கீழ்ப் போகட்டுப்
போய்விட்ட பின்பு . முடிவில் உனக்கே நான் சுமையாயினேன் ; அதன்பின்பே நான் விழிப்படைந்து , உண்மையை உணர்ந்தேன் ; மானுடவாழ்க்கைதான் இத்தன்மையதே யென்றால்
, இனி இதனை யான்
விரும்பேன் ; இதனை மிக்க இழிவுடை
யதாக உணர்ந்துவிட்டேன் ; எனக்கு , நீ , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் .
பாடல்
எண் : 6
குற்றம்
தன்னொடு குணம்பல பெருக்கி,
கோல நுண்இடை யாரொடு
மயங்கி,
கற்றி
லேன்கலை கள்பல ஞானம்,
கடிய ஆயின கொடுமைகள்
செய்தேன்,
பற்றல்
ஆவதுஓர் பற்றுமற்று இல்லேன்,
பாவி யேன்பல பாவங்கள்
செய்தேன்,
எற்று
உளேன்,எனக்கு உய்வகை
அருளாய்,
இடைம ருதுஉறை எந்தைபி
ரானே
பொழிப்புரை : திருவிடைமருதூரில்
எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , யான்
, அழகிய , நுண்ணிய இடையினையுடைய மகளிரோடு கூடி
மயங்கி நின்று , தீவினையும்
நல்வினையுமாகிய இரு வினைகளை மிகுதியாகச் செய்தும் , மெய்ந்நூல்கள் பலவற்றிற் புகுந்து
ஞானத்தை யுணராதும் மிகவுங் கொடுமையான செயல்களைச் செய்தேன் ; அதனால் , பற்றத் தக்கதொரு பற்றுக்கோடு இலனாயி
னேன் ; இவ்வாறு பலவாகிய
பாவங்களைச் செய்து பாவியாகிய யான் ,
எதன்
பொருட்டு உயிர்வாழ்கின்றேன் ! எனக்கு , நீ
, உய்யும் நெறி யொன்றை
வழங்கியருளாய் .
பாடல்
எண் : 7
கொடுக்க
கிற்றிலேன் ஒண்பொருள் தன்னை,
குற்றஞ் செற்றம்
இவைமுத லாக
விடுக்க
கிற்றிலேன் வேட்கையும் சினமும்,
வேண்டில் ஐம்புலன்
என்வசம் அல்ல,
நடுக்கம்
உற்றதுோர் மூப்புவந்து எய்த
நமன்த மர்நர
கத்துஇடல் அஞ்சி,
இடுக்கண்
உற்றனன் உய்வகை அருளாய்,
இடைம ருதுஉறை எந்தைபி
ரானே
பொழிப்புரை : திருவிடைமருதூரில்
எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , ஈகை
வழியாகப் புகழைத் தரத்தக்க பொருளை ,
உலோபமும்
, பகைமையும் காரணமாகப்
பிறருக்குயான் கொடுக்க மாட்டேன் ;
ஆசையும்
, கோபமும் ஆகிய இவைகளை
ஒழிக்க மாட்டேன் ; ஐம்புலன்கள்மேற்
செல்கின்ற ஆசைகளை விடநினைத் தால் ,
யான்
அவற்றின் வயத்தேனல்லது , அவை என் வயத்தன அல்ல ; அதனால் , உடல் நடுங்குதல் பொருந்தியதாகிய , ` மூப்பு ` என்பதொன்று வந்து அடைய , அப்போது இயமனது ஏவலர் என்னைக் கொண்டு
சென்று நரகத்தில் இடுதலை நினைத்து அஞ்சித் துன்புறுவேனா யினேன் ; எனக்கு , நீ , உய்யும் நெறியொன்றை வழங்கி யருளாய்.
பாடல்
எண் : 8
ஐவ
கைஅரை யர்அவர் ஆகி
ஆட்சி கொண்டுஒரு
கால்அவர் நீங்கார்,
அவ்வ
கைஅவர் வேண்டுவது ஆனால்
அவர வர்வழி ஒழுகிநான்
வந்து,
செய்வ
கைஅறி யேன்,சிவ லோகா,
தீவ ணா,சிவ னே,எரி ஆடீ,
எவ்வ
கைஎனக் குஉய்வகை அருளாய்,
இடைம ருதுஉறை எந்தைபி
ரானே
பொழிப்புரை : சிவலோகத்திற்குத்
தலைவனே , நெருப்புப் போலும்
நிறம் உடையவனே , சிவபெருமானே , தீயோடு நின்று ஆடுபவனே , திருவிடைமருதூரில்
எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , ஐவர்
வேறுபட்ட தன்மையையுடைய அரசராய் என்னை ஆட்சி கொண்டு ஒருகாலும் விட்டு
நீங்காதிருக்கின்றனர் . அவ்வாறு அவர் , தாம்
தாம் வேறு வேறுவகையில் என்னை ஆள விரும்பினால் , யான் அவர் வழியே அவர்
வேண்டுமாற்றிலெல்லாம் சென்று நடந்து , செய்வது
இன்னது என்று அறிகின்றிலேன் ; எனக்கு உய்யும்
நெறியாவது எந் நெறி ? அதனை வழங்கியருளாய் .
பாடல்
எண் : 9
ஏழை
மானுட இன்பினை நோக்கி
இளைய வர்வலைப்
பட்டுஇருந்து, இன்னம்
வாழை
தான்பழுக் கும்நமக்கு என்று,
வஞ்ச வல்வினை
யுள்வலைப் பட்டு,
கூழை
மாந்தர்தம் செல்கதிப் பக்கம்
போத மும்பொருள்
ஒன்றுஅறி யாத
ஏழை
யேனுக்குஓர் உய்வகை அருளாய்
இடைம ருதுஉறை எந்தைபி
ரானே
பொழிப்புரை : திருவிடைமருதூரில்
எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , அறிவில்லாத
, மானுட இன்பத்தைக்
கருதி , முன்னர்ப் பழத்தைத்
தந்த வாழை , இனியும் நமக்கு
அவ்வாறே தரும் என்று கருது வாரைப்போல , இளமையுடையராய்
இன்பம் தந்த மகளிர் என்றும் இவ்வாறே இருந்து இன்பம் தருவர் என்று கருதும்
மயக்கமாகிய வலையுள் அகப்பட்டு ,
அதனானே
, வஞ்சனையையுடைய வலிய
வினையென்னும் வலையிலும் அகப்பட்டு ,
அறிவு
முதிராத பொது மக்கள் செல்லும் வழியிடத்து நின்று , அறிவின் இயல்பையும் , அதற்குப் புலனாய் நிற்கும் பொருளின்
இயல்பையும் சிறிதும் அறியாத எளி யேனுக்கு , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் .
பாடல்
எண் : 10
அரைக்குஞ்
சந்தனத் தோடுஅகில் உந்தி
ஐவ னஞ்சுமந்து
ஆர்ந்துஇரு பாலும்
இரைக்கும்
காவிரித் தென்கரை தன்மேல்
இடைம ருதுஉறை எந்தைபி
ரானை,
உரைக்கும்
ஊரன் ஒளிதிகழ் மாலை
உள்ளத் தால்உகந்து
ஏத்தவல் லார்கள்
நரைப்பு
மூப்பொடு நடலையும் இன்றி,
நாதன் சேவடி நண்ணுவர்
தாமே
பொழிப்புரை : அரைக்கப்படுகின்ற
சந்தனக் கட்டையையும் , அகிற் கட்டையையும்
இருமருங்கும் தள்ளிக்கொண்டு , மலை நெல்லைத் தாளோடு
மேல்இட்டுக்கொண்டு , நிறைந்து ஒலிக்கின்ற
காவிரியாற்றின் தென்கரைமேல் உள்ள திருவிடைமருதூரில் எழுந் தருளியிருக்கின்ற எம்
குலதேவனாகிய பெருமானைப் பாடிய ,
நம்பி
யாரூரனாகிய எனது உணர்வு மிக்க இப்பாடல்களை , மனத்தால் விரும்பிப் பாட வல்லவர்கள் , நரைத்தலும் , மூத்தலும் , இறத்தலும் இன்றி அவ்விறைவனது செவ்விய
திருவடிகளை அடைவர் ; இது திண்ணம் .
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
கருவூர்த் தேவர்
அருளிச் செய்த
திருவிசைப்பா
9. 17 திருவிடைமருதூர்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வெய்யசெஞ்
சோதி மண்டலம் பொலிய
வீங்குஇருள் நடுநல்யா
மத்துஓர்
பையசெம்
பாந்தள் பருமணி உமிழ்ந்து
பாவியேன் காதல்செய்
காதில்
ஐயசெம்
பொன்தோட் அவிர்சடை மொழுப்பின்
அழிவுஅழ கியதிரு
நீற்று
மையசெங்
கண்டத்து அண்டவா னவர்கோன்
மருவுஇடம் திருஇடை
மருதே.
பொழிப்புரை : படமெடுக்கும் சிவந்த
பாம்பு ஒன்று செம்மணியை உமிழ்தலால் அடியேன் பெரிதும் விரும்பும் எம்பெருமானுருடைய
காதில் அழகிய செம்பொன்மயமான தோடுபோல அவர் அணிந்த பாம்பாகிய குழை விளங்க, விளங்கும் சடைமுடியிலிருந்து கசியும்
கங்கைநீரினால் அழிந்த அழகிய திருநீற்றினை உடையவராய், ஞாயிற்று மண்டலம் விளங்க அதனிடையே மிக்க
இருளை உடைய நள்ளிரவும் உள்ளதுபோலத் தோன்றுகின்ற கரிய நிறத்தைக்கொண்ட சிவந்த
கழுத்தினை உடையவராய் உள்ள, அண்டங்களில் உள்ள
தேவர்களுக்கு எல்லாம் தலைவராகிய சிவபெருமான் தங்கியிருக்கும் இடம் திருஇடைமருதூர்
என்ற திருத்தலமாகும்.
பாடல்
எண் : 2
இந்திர
லோகம் முழுவதும் பணிகேட்டு,
இணைஅடி தொழுதுஎழ, தாம்போய்
ஐந்தலை
நாக மேகலை அரையா
அகந்தொறும் பலிதிரி
அடிகள்,
தந்திரி
வீணை கீதமுன் பாடச்
சாதிகின் னரங்கலந்து
ஒலிப்ப
மந்திர
கீதம் தீங்குழல் எங்கும்
மருவுஇடம் திருஇடை
மருதே.
பொழிப்புரை : தேவர் உலகம்
முழுவதும் தாம் இட்ட ஏவலைச் செவிமடுத்துத் தம் திருவடிகள் இரண்டனையும் தொழுது
செயற்படப் புறப்படவும் தாம் ஐந்தலை நாகத்தைத் தம் புலித்தோல் ஆடைமீது மேகலையாக
அணிந்து வீடுதோறும் பிச்சை ஏற்கத் திரியும் பெருமானார், நரம்புகளை உடைய வீணைகள் முதற்கண் பாடல்
ஒலியை எழுப்ப, அவற்றோடு கலந்து
உயர்ந்த யாழ் ஒலி வெளிப்பட, இனிய வேய்ங்குழலில்
வாசிக்கப்படும் மந்திரப்பாடல்கள் எங்கும் பொருந்திய இடமாகிய திருஇடைமருது என்ற
திருத்தலத்தில் உறைகிறார்.
பாடல்
எண் : 3
பனிபடு
மதியம் பயில்கொழுந்து அன்ன
பல்லவம் வல்லிஎன்று
இங்ஙன்
வினைபடு
கனகம் போல,யா வையுமாய்,
வீங்குஉலகு ஒழிவுஅற
நிறைந்து
துனிபடு
கலவி மலைமகள் உடன்ஆய்த்
தூங்குஇருள் நடுநல்யா
மத்து,என்
மனன்இடை
அணுகி நுணுகி,உள் கலந்தோன்
மருவுஇடம் திருஇடை
மருதே.
பொழிப்புரை : குளிர்ச்சி பொருந்திய
சந்திரனின் பிறை போன்ற குருத்து,
அதனைப்போன்ற
தளிர், கொடி ஆகிய இவைபோன்ற
பொருள்கள் வடிவாகச் செய்யப்படுகின்ற பொன்போல எல்லாப் பொருள்களுமாய், பரந்த உலகம் முழுதும் நீக்கமற நிறைந்து, புலவி யோடு கூடிய கலவியை நிகழ்த்தும்
பார்வதியுடன் கூடியவராய், எல்லோரும்
உறங்குகின்ற இருள் செறிந்த நடுஇரவில் வந்து என் மனத்தை அணுகி, யாவரும் அடியேனும் அறியாதவாறு என்
உள்ளத்தினுள் கலந்த நுண்மையை உடைய எம்பெருமானார் உறையுமிடம் திருஇடைமருதூராகும்.
பாடல்
எண் : 4
அணிஉமிழ்
சோதி மணியின்உள் கலந்தாங்கு
அடியனேன் உள்கலந்து, அடியேன்
பணிமகிழ்ந்து
அருளும் அரிவைபா கத்தன்,
படர்சடை விடமிடற்று
அடிகள்,
துணிஉமிழ்
ஆடை, அரையில்ஓர் ஆடை,
சுடர்உமிழ் தரஅதன்
அருகே,
மணிஉமிழ்
நாகம் மணிஉமிழ்ந்து இமைப்ப
மருவுஇடம் திருஇடை
மருதே.
பொழிப்புரை : அழகை
வெளிப்படுத்துகின்ற ஒளி இரத்தினத்தின் உள்ளே கலந்து நீக்கமற நிறைந்தாற்போல
அடியேனுடைய உள்ளத்தில் கலந்து அடியேனுடைய தொண்டினை விரும்பி நிற்கும் பார்வதி
பாகராகிய, பரந்த சடையையும், விடக்கறை பொருந்திய கழுத்தையும் உடைய
பெருமானார், குறைதலை
வெளிப்படுத்தி நிற்கின்ற மேல் ஆடை,
இடுப்பில்
ஓர் ஆடை, அதன்மேல்
நாகரத்தினத்தை வெளிப்படுத்தும் பாம்பு அழகை வெளிப்படுத்திக் கச்சாக விளங்க, இவற்றை உடுத்து விரும்பித்
தங்கியிருக்கும் இடம் திருஇடைமருதூர் ஆகும்.
பாடல்
எண் : 5
பந்தமும்
பிரிவும் தெரிபொருள் பனுவல்
படிவழி சென்றுசென்று
ஏறி,
சிந்தையும்
தானும் கலந்ததுஓர் கலவி
தெரியினும், தெரிவுறா வண்ணம்,
எந்தையும்
தாயும் யானும்என்று, இங்ஙன்
எண்ணில்பல் ஊழிகள்
உடனாய்,
வந்துஅணு
காது நுணுகி, உள் கலந்தோன்
மருவுஇடம், திருஇடை மருதே.
பொழிப்புரை : உலகியல்
கட்டுக்களையும், அவற்றிலிருந்து
விடுதலை பெறுதலையும் ஆராய்கின்ற பொருள் பற்றிக் கூறுகின்ற தத்துவ சாத்திரங்களாகிய
படிவழியில் பலகாலும் ஈடுபட்டுச் சென்றபின் சிவநெறி எய்தி என் சிந்தையும் தானும்
கலந்த கலவி யானது ஆராய்ந்தாலும் விளங்காதபடி என் தந்தையேயாகியும், என் தாயேயாகியும், யானே ஆகியும், இவ்வாறு பல ஊழிக்காலங்கள் உடனாகி, வேறாய் நின்று பின்னர் வந்து ஒன்றாய்க்
கலவாது பண்டே சித்துப் பொருளாகிய உயிரினும் நுண்ணியனாய் ஒன்றாய் இருந்து பின்னர்
விளங்கித்தோன்றும் இடம் திருஇடைமருதூராகும்.
பாடல்
எண் : 6
எரிதரு
கரிகாட்டு இடுபிண நிணம்உண்டு
ஏப்பம்இட்டு
இலங்குஎயிற்று அழல்வாய்த்
துருகழல்
நெடும்பேய்க் கணம்எழுந்து ஆடும்,
தூங்குஇருள் நடுநல்யா
மத்தே,
அருள்புரி
முறுவல் முகிழ்நிலா எறிப்ப
அந்திபோன்று
ஒளிர்திரு மேனி
வரிஅரவு
ஆட ஆடும்எம் பெருமான்,
மருவுஇடம் திருஇடை
மருதே.
பொழிப்புரை : பிணங்கள் எரியும்
சுடுகாட்டில், புதைப்பதற்காக
இடப்பட்ட பிணங்களின் கொழுப்பினை உண்டு ஏப்பம் விட்டு விளங்குகின்ற பற்களையும், நெருப்பினைக் கக்கும் வாயினையும், பிணத்தைத் தேடி ஓடுகின்ற கால்களையும்
உடைய நெடிய பேய்க் கூட்டங்கள் குதித்து ஆடும் இருள் செறிந்த பெரிய நடுஇரவில், அருளை வெளிப்படுத்தும் புன்முறுவல்
நிலவினை வெளிப்படுத்த, அந்திவானம் போலச்
செவ்வொளி விளங்கும் திருமேனியில் கோடு களை உடைய பாம்புகள் அசையக் கூத்து
நிகழ்த்தும் எம்பெருமான் விரும்பி உறைகின்ற இடம் திருஇடைமருதூர் ஆகும்.
பாடல்
எண் : 7
எழிலையாழ்
செய்கைப் பசுங்கலன் விசும்பின்
இன்துளி படநனைந்து
உருகி,
அழலைஆழ்பு
உருவம் புனலொடும் கிடந்தாங்கு,
ஆதனேன் மாதரார்
கலவித்
தொழிலை
ஆழ்நெஞ்சம் இடர்படா வண்ணம்,
தூங்குஇருள் நடுநல்யா
மத்துஓர்
மழலையாழ்
சிலம்ப வந்து,அகம் புகுந்தோன்
மருவுஇடம் திருஇடை
மருதே.
பொழிப்புரை : அழகின்கண்
ஆழ்த்துகின்ற செயற்பாட்டை உடைய பசியமட்கலம் வானத்தின் மழைத்துளி தன்மீதுபட்ட
அளவில் நனைந்து கரையவும், நெருப்பிலிட்டுச்
சுட்டபின்பு அம்மட்கலம் தண்ணீரிலேயே கிடந்தாலும் கேடின்றி இருப்பதுபோல அறிவில்லா தேனாகிய
அடியேனுடைய உள்ளம் மகளிருடைய கலவியாகிய செயலில் ஆழ்ந்து இடர்ப்படாதவண்ணம் இருள்
செறிந்த பெரிய நடு இரவில் ஒப்பற்ற இனிய யாழ் ஒலி ஒலிக்க வந்து என் உள்ளத்துப்
புகுந்த பெருமான் உறைவிடம் இடைமருதே.
பாடல்
எண் : 8
வையவாம்
பெற்றம் பெற்றம்ஏறு உடையார்,
மாதவர் காதல்வைத்து
என்னை
வெய்யஆம்
செந்தீப் பட்டஇட் டிகைபோல்
விழுமியோன்
முன்புபின்பு என்கோ,
நொய்யவாறு
என்ன வந்துஉள்வீற் றிருந்த
நூறுநூ றாயிர கோடி
மைஅவாம்
கண்டத்து அண்டவா னவர்கோன்
மருவுஇடம் திருஇடை
மருதே.
பொழிப்புரை : வைக்கோலை
விரும்புகின்ற காளையை வாகன மாகப் பெற்று அதன்மீது இவர்கின்ற அழகினை உடைய
பெருமானார் அடியேனை அழகு மிக்கோராகிய அடியாருடைய அன்பிலே நிற்கச்செய்து, செந்தீயிடை இடப்பட்ட செங்கல் வெந்தபின்
உரம் பெற்று நிற்றல்போல, பாசத்தால் கட்டுண்டு
எளியனாய் நின்ற யானும், ஞானத்தால்
திண்ணியனாகும்படி செய்து, அடியேனுடைய
உள்ளத்தில் எளிமையாக வந்து வீற்றிருக்கின்றார். கருநிறம் பொருந்திய கழுத்தினராய், பலகோடிக்கணக்கான அண்டங்களில் வாழும்
தேவர்களுக்குத் தலைவரான அப்பெருமானார் தங்கி யிருக்கும் இடம் திருஇடைமருதே.
அப்பெருமானார் வந்து என் உள்ளத்து வீற்றிருந்தமை முன்பு என்பேனோ, பின்பு என்பேனோ? அவர் வந்து உள் வீற்றிருந்தது ஒரு
காலத்தன்று என்றுமேயாம்.
பாடல்
எண் : 9
கலங்கல்அம்
பொய்கைப் புனல்தெளிவு இடத்துக்
கலந்தமண் இடைக்கிடந்
தாங்கு
நலம்கலந்து
அடியேன் சிந்தையுள் புகுந்த
நம்பனே, வம்பனேன் உடைய
புலம்கலந்
தவனே, என்று, நின்று உருகிப்
புலம்புவார்
அவம்புகார், அருவி
மலங்கல்அம்
கண்ணில் கண்மணி அனையான்
மருவுஇடம் திருஇடை
மருதே.
பொழிப்புரை : கலங்குதலை உடைய
பொய்கையின் நீர் தேற்றாங் கொட்டையால் தெளிவிக்கப்பட்ட இடத்து நீரோடு கலந்த மண்
அடியில்பட நீர் தெளிவாக இருப்பதுபோல, அடியேன்
சிந்தையுள் புகுந்து கலக்கத்தை நீக்கி நன்மையை அருளும், என்னால் விரும்பப் படும் பெருமானே!
புதியவனாகிய அடியேனுடைய அறிவில் கலந்தவனே! என்று நிலையாக உருகிப் புலம்புவாரும், வீண் செயல் களில் செல்லாதவர்களும் ஆகிய
அடியார்களுடைய, அருவிபோல் கண்ணீர்
பெருகுதலை உடைய கண்களின் கண்மணியை ஒத்த அப் பெருமான் உறையும் இடம் திருஇடைமருதூரே.
பாடல்
எண் : 10
ஒருங்குஇரு
கண்இல் எண்ணில்புன் மாக்கள்
உறங்கு இருள் நடுநல்யா
மத்துஓர்
கருங்கண் நின்று
இமைக்கும் செழுஞ்சுடர் விளக்கம்
கலந்து, எனக் கலந்து உணர்
கருவூர்
தருங்கரும்பு
அனைய தீந்தமிழ் மாலை
தடம்பொழில் மருதயாழ்
உதிப்ப
வருங்கரும்
கண்டத்து அண்டவா னவர்கோன்
மருவுஇடம் திருஇடை
மருதே.
பொழிப்புரை : எண்ணற்ற மெய்யுணர்வு
இல்லாத மக்கள் இருகண்களும் ஒருசேர மூடி உறங்கும் இருள் செறிந்த பெரிய நடுஇரவிலே, விழித்துக்கொண்டிருக்கும் ஒருவனுடைய
கண்களில் மாத்திரம் சிவந்த சுடரின் வெளிச்சம் கலந்தாற்போல, இறைவனுடைய திருவருளில் கலந்து
மெய்ம்மையை உணர்ந்த கருவூர்த்தேவர் வழங்கும் கரும்பு போன்ற இனிய தமிழ்மாலையைப்
பெரிய சோலைகளில் மருத யாழ் ஒலியோடு பாட, அதனைக்
கேட்கவரும் நீலகண்டனாகிய, பல அண்டங்களிலும்
உள்ள தேவர்கள் எல்லோருக்கும் தலைவனான சிவபெருமான், உகந்தருளியுள்ள இடம் திருஇடை மருதூரே
ஆகும்.
திருச்சிற்றம்பலம்