திருத்
தென்குரங்காடுதுறை
(ஆடுதுறை)
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் ஆடுதுறை என்று
வழங்கப்படும் இடத்தில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள இரயில் நிலையம் ஆடுதுறை.
இது கும்பகோணம் - மயிலாடுதுறை இரயில் மார்க்கத்தில் இருக்கிறது.
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில்
உள்ள ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கும்பகோணம் சாலையில் சிறிது தொலைவு
சென்றால் சாலையோரத்தில் உள்ள குளத்தையொட்டி இடப்புறமாகத் திரும்பிச் செல்லும்
சாலையில் சென்று வலப்பக்க வீதியில் திரும்பினால் ஆலயம் உள்ளது. ஆடுதுறை பேருந்து
நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மி. தொலைவு.
இறைவர் : ஆபத்சகாயேசுவரர்
இறைவியார்
: பவளக்கொடியம்மை, வண்டார்கருமென்
குழலம்மை
தல
மரம் : வெள்வாழை
தீர்த்தம் : சகாய தீர்த்தம், சூரிய தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - பரவக்கெடும் வல்வினை.
2. அப்பர் -இரங்கா வன்மனத்தார்கள்.
காவிரி நதியின் தென்கரையில்
அமைந்துள்ளதாலும், இராமாயணத்தில் வரும்
சுக்ரீவன் இங்கு இறைவனை வழிபட்டதாலும் இத்தலம் தென்குரங்காடுதுறை என்று பெயர்
பெற்றது. சோழ மன்னன் கண்டராதித்திய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியால்
கற்றளியாக கட்டுவிக்கப்பட்ட இந்த ஆலயம் கிழக்கு நோக்கியுள்ள 3 நிலை இராஜகோபுரத்துடனும் 2 பிரகாரங்களுடனும் விளங்குகிறது. கோபுர
வாயிலைக் கடந்து சென்றால் கொடிமரத்து விநாயகரையும் பலிபீடத்தையும்
சிறுமண்டபத்துள்ளே அமைந்துள்ள நந்தியையும் காணலாம். அகன்ற வெளிப் பக்கத்துப் பெரிய
பிரகாரத்தை வலம் வந்து உள்ளே சென்றால் மணிமண்டபத்தைக் காணலாம். அம்மண்டபத்தின்
தென்புறச் சுவரில் இத்தலத்தின் தேவாரப் பதிகங்களையும் திருப்புகழ்ப் பாடல்களையும்
கல்லெழுத்துக்களில் வடித்துள்ளதைக் காணலாம்.
வெளிப் பிரகாரத்தில் விசுவநாதர், அம்பாள் விசாலாட்சி, விநாயகர், சூரியன், சந்திரன், நவக்கிரகம் மற்றும் முருகன் ஆகியோரின்
சந்நிதிகள் அமைந்துள்ளன. அம்பாள் பவளக்கொடி அம்மையின் சந்நிதியும் வெளிப்
பிரகாரத்தில் இரண்டாவது வாயிலுக்கு முன்னே தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அதன்
எதிரில் எழுந்தருளியுள்ள பிள்ளையாரையும் தரிசிக்கலாம். உள்ளே சென்றால் எதிரில்
தோன்றும் மண்டபத்தின் மேல் மாடப்பத்தியில் சுக்ரீவன் ஆபத்சகாயேசுரரை வணங்கும்
காட்சியும், சுக்ரீவனை இறைவன்
அன்னப்பறவையாவும் அவன் தேவியை பாரிசாத (பவளமல்லிகை) மரமாகவும் உருமாற்றியருளிய தல
வரலாற்றுக் காட்சி சுதை வேலைப்பாட்டில் அமைந்துள்ளதைக் காணலாம்.
அடுத்துள்ள மூன்றாம் வாயிலைக் கடந்து
சென்றால் நேரே பலிபீடமும் நந்தியும் உள்ளன. கருவறை வாயிலில் கம்பீரமாகக் காத்து
நிற்கும் புடைச் சிற்பமாக விளங்கும் இரண்டு துவாரபாலகர்களையும் காணலாம். இறைவன்
ஆபத்சகாயேசுவரரின் சந்நிதி இரண்டாவது உள் பிரகாரத்தில் உள்ளது. இங்கு சிவன்
சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் குடிகொண்டுள்ள கருவறைச் சுற்றிலும்
அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இக்கோயிலைக்
கற்கோயிலாக அமைத்த கண்டராதித்தியர் தேவியாரான செம்பியன் மாதேவியார் சிவபிரானை
வழிபடுவதாக அமைந்துள்ள புடைச்சிற்பத்தையும் கருவறைச் சுற்றில் காணலாம்.
கருவறை சுற்றுப் பிரகாரத்தில் வள்ளி
தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி ஆகியவைவ உள்ளன.
வடக்கு நோக்கிய சந்நிதியில் எட்டுத் திருக்கரங்களோடு விளங்கிக் காட்சி நல்கும்
துர்கா தேவியும், அருகில் கங்கா
விசர்சன மூர்த்தியும் பைரவ மூர்த்தியும் இருக்கின்றன. அவற்றின் அருகில் விஷ்ணு
துர்க்கை சந்நிதி உள்ளது.
அம்பாள் பவளக்கொடியம்மை சந்நிதியை வலம்
வரும்போது பின்புறச் சுவரில் சுக்ரீவன் சிவபூஜை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும், செம்பியன் மாதேவி சிவபூசை செய்யும்
புடைப்புச் சிற்பத்தையும் காணலாம்.
இத்தலத்தின் தலவிருட்சமாக பவளமல்லிகை
மரமும், தீர்த்தங்களாக சகாய
தீர்த்தம் மற்றும் கோவிலுக்கு எதிரிலுள்ள சூரிய தீர்த்தம் ஆகியவையாகும். ஒவ்வோர்
ஆண்டும் சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது
ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக்
கடந்து சுவாமி மீது படுகின்றன. சூரியன், சனி
பகவானுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்துவழிபட்டால் தந்தை
மகன் உறவில் உள்ள பிரச்னைகள் தீரும் என்றும், தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்பட
இங்கு பிரார்த்தனை செய்தால் நல்லதே நடக்கும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர்.
பவுர்ணமியில் அகத்தியருக்கு சந்தனாதி தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம்
நிறைவேறும்.
தென்குரங்காடுதுறைக்கு (ஆடுதுறைக்கு)
அருகாமையிலுள்ள மருத்துவக்குடி என்னும் ஊரின் பெயரும் இத்தல கல்வெட்டில்
காணப்படுகிறது. இம்மருத்துவக்குடியே திருஇடைக்குளம் என்னும் தேவார
வைப்புத்தலமாகும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "நீக்கம் இலா நன்கு
உரம் காணும் நடையோர் அடைகின்ற தென் குரங்காடுதுறைச் செம்மலே" என்று போற்றி உள்ளார்.
காலை 7-30 முதல் 12 மணி வரையிலும் மாலை 5-30 முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 416
மருங்குஉளநல்
பதிகள்பல பணிந்து,மா நதிக்கரைபோய்க்
குரங்காடு
துறைஅணைந்து, குழகனார் குரைகழல்கள்
பெருங்காத
லால்பணிந்து, பேணியஇன் னிசைபெருக
அருங்கலைநூல்
திருப்பதிகம் அருள்செய்து பரவினார்.
பொழிப்புரை : திருவிடைமருதூரை
வணங்கியிருக்கும் நாள்களில் அருகில் உள்ள பலபதிகளையும் வணங்கிக் காவிரிப்
பெருங்கரை வழியே சென்று, திருத்தென்குரங்காடுதுறையினைச்
சேர்ந்து, இறைவரின் ஒலிக்கும்
கழல் பூண்ட திருவடிகளைப் பெருங்காதலால் வணங்கி, விரும்பிய இனிய இசை பெருகவுள்ள அரிய
கலைநூல்களின் பொருள்களை விரிக்கும் திருப்பதிகத்தைப் பாடி வணங்கினார்.
தென்குரங்காடுதுறையில்
அருளிய பதிகம் `பரவக் கெடும்' (தி.2 ப.35) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த
பதிகமாகும். `மருங்குள நற்பதிகள்' என்பன இன்னவென அறிதற்கியன்றிலது.
2.035 திருத்தென்குரங்காடுதுறை பண்
- இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பரவக்
கெடும்வல் வினை,பா ரிடஞ்சூழ
இரவில்
புறங்காட்டு இடைநின்று எரிஆடி,
அரவச்
சடைஅந் தணன்மேய அழகார்
குரவப்
பொழில்சூழ் குரங்கா டுதுறையே.
பொழிப்புரை :பூதகணங்கள் சூழ
இரவில் சுடுகாட்டில் நின்று எரி ஆடுபவனும் , அரவணிந்த சடையினை உடைய அந்தணனும் ஆகிய
சிவபிரானது குராமரப் பொழில் சூழ்ந்த குரங்காடுதுறையைப் பரவ வலிய வினைகள்
கெட்டொழியும் .
பாடல்
எண் : 2
விண்டார்
புரமூன்றும் எரித்த விமலன்,
இண்டுஆர்
புறங்காட்டு இடைநின்றுஎரி ஆடி,
வண்டுஆர்
கருமென் குழல்மங் கையொர்பாகம்
கொண்டான்
நகர்போல் குரங்கா டுதுறையே.
பொழிப்புரை :தன்னோடு பகை
பூண்டவராகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த விமலனும், இண்டங்கொடிகள் படர்ந்த சுடுகாட்டில்
நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கும்
மெல்லிய கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர்
குரங்காடுதுறை.
பாடல்
எண் : 3
நிறைவுஇல்
புறங்காட்டு இடைநே ரிழையோடும்
இறைவில்
எரியான், மழுஏந் திநின்றுஆடி,
மறையின்
ஒலிவா னவர்தா னவர்ஏத்தும்
குறைவுஇல்
லவன்ஊர் குரங்கா டுதுறையே.
பொழிப்புரை :நிறைதல் இல்லாத
சுடுகாட்டுள் நின்று அழிவற்ற எரியைக் கையில் உடையவனாய் மழு ஏந்தி உமையம்மையோடு
ஆடுபவனும், வேத ஒலியால் தேவர், அசுரர் ஆகியோரால் தொழப்படும்
குறைவற்றவனும் ஆகிய சிவபிரானது ஊர்,
குரங்காடுதுறை.
பாடல்
எண் : 4
விழிக்கும்
நுதல்மேல் ஒருவெண் பிறைசூடித்
தெழிக்கும்
புறங்காட்டு இடைச்சேர்ந்து எரிஆடிப்
பழிக்கும்
பரிசே பலிதேர்ந் தவன்ஊர்பொன்
கொழிக்கும்
புனல்சூழ் குரங்கா டுதுறையே.
பொழிப்புரை :விழியை உடைய
நெற்றியின்மேல் தலையின் முன் பாகத்தில் பிறைசூடி, ஒலிக்கும் சுடுகாட்டை அடைந்து எரியாடி, எல்லோரும் பழித்துரைக்கப்
பலியேற்றுத்திரியும் சிவபிரானது ஊர் பொன் கொழிக்கும் காவிரி நீரால் சூழப்பட்ட
குரங்காடுதுறையாகும்.
பாடல்
எண் : 5
நீறுஆர்
தருமே னியன்நெற் றியொர்கண்ணன்
ஏறுஆர்
கொடிஎம் இறைஈண்டு எரிஆடி
ஆறுஆர்
சடைஅந் தணன் ஆயிழையாள்ஓர்
கூறான்
நகர்போல் குரங்கா டுதுறையே.
பொழிப்புரை :நீறு பூசிய மேனியன்.
நெற்றிக்கண்ணன். விடைக் கொடியை உடைய எம் தலைவன் மிகுதியான தீயில் நின்று ஆடுபவன்.
கங்கை சூடிய சடையினை உடைய கருணையாளன். உமையொருபாகன். அவனது நகர் குரங்காடுதுறை.
பாடல்
எண் : 6
நளிரும்
மலர்க்கொன் றையுநா றுகரந்தைத்
துளிரும்
சுலவிச் சுடுகாட்டு எரிஆடி
மிளிரும்
ஆரவுஆர்த் தவன்மே வியகோயில்
குளிரும்
புனல்சூழ் குரங்கா டுதுறையே.
பொழிப்புரை :குளிர்ந்த கொன்றைமலர், மணம் வீசும் சிவகரந்தைத்தளிர்
ஆகியவற்றைக் கலந்தணிந்து சுடுகாட்டில் எரியில் நின்றாடும் அழகனாய், விளங்கும் பாம்பை இடையில் கட்டியவன்
ஆகிய சிவபிரான் மேவிய கோயிலைக் கொண்டது குளிர்ந்த நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறை.
பாடல்
எண் : 7
பழகும்
வினைதீர்ப் பவன்,பார்ப் பதியோடும்
முழவம்
குழல்மொந் தைமுழங்க எரிஆடும்
அழகன்
அயில்மூ விலைவேல் வலன்ஏந்தும்
குழகன்
நகர்போல் குரங்காடு துறையே.
பொழிப்புரை :பிறவிதோறும் பழகிய
வினைகளைத் தீர்ப்பவன். பார்வதிதேவியோடு முழவு, குழல், மொந்தை ஒலிக்க இடுகாட்டுள் முழங்கும்
தீயில் நின்று எரியாடும் அழகன். கூரிய மூவிலைவேலை வெற்றிக்கு அடையாளமாக ஏந்தும்
இளையோன் ஆகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.
பாடல்
எண் : 8
வரைஆர்த்து
எடுத்த அரக்கன் வலிஒல்க
நிரைஆர்
விரலால் நெரித்திட் டவன்ஊராம்
கரைஆர்ந்து
இழிகா விரிக்கோ லக்கரைமேல்
குரைஆர்
பொழில்சூழ் குரங்காடு துறையே.
பொழிப்புரை :கயிலைமலையை
ஆரவாரித்துப் பெயர்த்த இராவணனின் வலிமை கெடுமாறு காலிலமைந்த விரலால் நெரித்தவனாகிய
சிவபிரானது ஊர், கரையைப் பொருந்தி
ஓடிவரும் காவிரியாற்றின் அழகிய கரைமேல் ஒலி பொருந்திய பொழில் சூழ்ந்திலங்கும்
குரங்காடு துறையாகும்.
பாடல்
எண் : 9
நெடியா
னொடுநான் முகனும் நினைவுஒண்ணாப்
படி
ஆகியபண் டங்கன், நின்று எரிஆடி
செடிஆர்
தலைஏந் தியசெங்கண் வெள்ளேற்றின்
கொடியான்
நகர்போல் குரங்கா டுதுறையே.
பொழிப்புரை :திருமால், பிரமர்கள் நினையவும் ஒண்ணாத இயல்பினன்.
பாண்டரங்கக் கூத்தை ஆடியவன். எரியில் நின்று ஆடுபவன். முடை நாற்றம் வீசும்
தலையோட்டை ஏந்தியவன். சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெள்விடையைக் கொடியாக
உடையவன். அவனது நகர் குரங்காடுதுறை.
பாடல்
எண் : 10
துவர்
ஆடையர்வே டம்அலாச் சமண்கையர்
கவர்வாய்
மொழிகா தல்செய்யா தவன்ஊராம்,
நவைஆர்
மணிபொன் அகில்சந் தனம்உந்திக்
குவைஆர்
கரைசேர் குரங்கா டுதுறையே.
பொழிப்புரை :துவராடை அணிந்த
புத்தர்களும், வேடமல்லாத வேடம்
பூண்ட சமணர்களாகிய கீழோரும் பேசும் ஐயஉரைகளை விரும்பாத சிவபிரானது ஊர், மலைகளிலிருந்து சிதைந்து வந்த மணிகள், பொன், அகில், சந்தனம் ஆகியவற்றை உந்திவந்து குவியலாகக்கரையில்
சேர்க்கும் காவிரியின் கரையில் உள்ள குரங்காடுதுறையாம்.
பாடல்
எண் : 11
நல்லார்
பயில்காழி யுள்ஞான சம்பந்தன்
கொல்ஏறு
உடையான் குரங்கா டுதுறைமேல்
சொல்ஆர்
தமிழ்மாலை பத்துந் தொழுதுஏத்த
வல்லார்
அவர்வா னவரோடு உறைவாரே.
பொழிப்புரை :நல்லவர்கள் வாழும்
காழியுள் தோன்றிய ஞானசம்பந்தன் கொல்லேற்றை ஊர்தியாக உடைய சிவபிரான் எழுந்தருளிய
குரங்காடுதுறைமேல் பாடிய தமிழ்மாலை பத்தையும் பாடித்தொழ வல்லவர், வானவரோடு உறைவர்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 301
பொங்கு
புனல்ஆர் பொன்னியினில்
இரண்டு கரையும்
பொருவிடையார்
தங்கும்
இடங்கள் புக்குஇறைஞ்சி,
தமிழ்மா லைகளும்
சாத்திப்போய்,
எங்கும்
நிறைந்த புகழாளர்,
ஈறுஇல் தொண்டர்
எதிர்கொள்ள,
செங்கண்
விடையார் திருஆனைக்
காவின் மருங்கு
சென்று அணைந்தார்.
பொழிப்புரை : திருப்பழையாற
வடதளியினின்றும் வரும் வழியில் பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக்
கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும்
நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற
தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண்
விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.
இத்திருப்பதியிலிருந்து
திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள
திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப்
பதிகளாவன:
1. திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72) - திருநேரிசை.
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - திரு விருத்தம்.
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21) - திருக்குறுந்தொகை.
(ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89) – திருத்தாண்டகம்.
2. திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13) - திருத்தாண்டகம்.
3. திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71) - திருக்குறுந்தொகை.
4. திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) - திருநேரிசை.
5. திருப்பந்தணை
நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10) - திருத் தாண்டகம்.
6. திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90) – திருத்தாண்டகம்.
7. திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73) – திருக்குறுந்தொகை.
8. தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63) - திருக்குறுந்தொகை.
9. திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) - திருக்குறுந்தொகை.
10.திருக்கருவிலிக்
கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69) - திருக்குறுந்தொகை.
11.திரு
அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61) - திருக்குறுந்தொகை.
12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87) - திருத்தாண்டகம்.
13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76) - திருக்குறுந் தொகை.
14.திருஅன்பில்ஆலந்துறை:
`வானம் சேர்` (தி.5 ப.80) -திருக்குறுந்தொகை
15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86) - திருத்தாண்டகம்.
16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி:
`மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84) - திருக்குறுந்தொகை.
5. 063 திருத்தென்குரங்காடுதுறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
இரங்கா
வன்மனத் தார்கள் இயங்குமுப்
புரம்
காவல்அழி யப்பொடி ஆக்கினான்,
தரங்க
ஆடும்தட நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்காடு
துறைக் கோலக்க பாலியே.
பொழிப்புரை : அலைகள் ஆடுகின்ற
பெரிய நீரினை உடைய காவிரியின் தென்கரையில் உள்ள குரங்காடுதுறையில் வீற்றிருக்கும்
அழகிய கபாலம் கைக்கொண்ட பெருமான்,
இரங்காத
வலிய மனத்தவர்களாகிய அரக்கர்கள் இயங்குகின்ற முப்புரங்காவல் அழியுமாறு
பொடியாக்கியவன் ஆவன்.
பாடல்
எண் : 2
முத்தி
னை,மணி யை,பவ ளத்துஒளிர்
தொத்தி
னை,சுடர்ச் சோதியை, சோலைசூழ்
கொத்து
அலர்குரங் காடு துறைஉறை
அத்தன்
என்னஅண் ணித்திட்டு இருந்ததே.
பொழிப்புரை : முத்தும், மணியும், பவளத்தொடு ஒளிர்கின்ற கொத்தும், சுடர்விடும் சோதியும், சோலைகள் சூழ்ந்த பூங்கொத்துக்கள்
மலர்கின்ற குரங்காடுதுறை உறையும் அத்தனும் என்று கூற உள்ளத்தில்
தித்தித்திருந்தனன் அப்பெருமான்.
பாடல்
எண் : 3
குளிர்பு
னல்குரங் காடுது றையனை,
தளிர்நி
றத்தையல் பங்கனை, தண்மதி
ஒளிய
னை, நினைந் தேனுக்குஎன்
உள்ளமும்
தெளிவி
னைத்தெளி யத்தெளிந் திட்டதே.
பொழிப்புரை : குளிர்கின்ற நீர்
சூழ்ந்த குரங்காடுதுறையில் இருப்பவனும், மாந்தளிரைப்
போன்ற நிறம் உடைய மேனியினளாகிய உமாதேவியைப் பங்கிற்கொண்டவனும் தண்ணியமதி ஒளியனும்
ஆகிய பெருமானை நினைந்த அடியேனுக்கு என் உள்ளமும் தெளிவுறும்படித் தெளிவினைத்
தெளிந்தது.
பாடல்
எண் : 4
மணவன்
காண்,மலை யாள்நெடு மங்கலக்
கணவன்
காண்,கலை ஞானிகள் காதல்எண்
குணவன்
காண்,குரங் காடுதுறைதனில்
அணவன்
காண்,அன்பு செய்யம்
அடியர்க்கே.
பொழிப்புரை : அன்பு செய்யும்
அடியார்க்கு மணவாளக் கோலம் உடையவனும், மலைமகளாகிய
உமாதேவிக்கு மங்கலக்கணவனும், கலைஞானிகளாற்
காதலிக்கப்பெறுவானும், எண் குணத்தானும், குரங்காடுதுறையில் அண்ணியவனும், ஆவன்.
பாடல்
எண் : 5
ஞாலத்
தார்தொழுது ஏத்திய நன்மையன்,
காலத்
தான்உயிர் போக்கிய காலினன்,
நீலத்து
ஆர்மிடற் றான்,வெள்ளை நீறுஅணி
கோலத்
தான்குரங் காடு துறையனே.
பொழிப்புரை : குரங்காடுதுறையில்
வீற்றிருக்கும் இறைவன் உலகத்தாராற் றொழுதேத்தப்பட்ட நன்மை உடையவனும், காலன் உயிர்போகச் செய்த திருக்காலை
உடையவனும், நீலநிறம் நிறைந்த
திருமிடற்றை உடையவனும், வெண்ணீறணிந்த கோலத்தை
உடையவனும் ஆவன்.
பாடல்
எண் : 6
ஆட்டி
னான்முன் அமணரோடு என்தனை,
பாட்டி
னால்தன பொன்அடிக்கு இன்னிசை,
வீட்டி
னான்வினை, மெய்அடி யாரொடும்
கூட்டி
னான்,குரங் காடு துறையனே.
பொழிப்புரை : குரங்காடுதுறையில்
வீற்றிருக்கும் இறைவன், முன்னர் என்னை
அமணர்களோடு ஆட்டுவித்தவனும், பின்னர்த் தன் பொன்னார்
திருவடிகளுக்கு இனிய பண்ணிசையை என்னைப் பாட்டுவித்தவனும், வினையை வீட்டியவனும், மெய்யடியார்களோடு என்னைக்
கூட்டுவித்தவனும் ஆவன்.
பாடல்
எண் : 7
மாத்தன்
தான்,மறை யார்முறை யான்மறை
ஓத்தன், தாரகன் தன்உயிர்
உண்டபெண்
போத்தன், தானவன் பொங்கு
சினந்தணி
கூத்தன்
தான்,குரங் காடு துறையனே.
பொழிப்புரை : வேதங்களில் கூறிய
முறையால் மாற்றுயர்ந்த பொன்போன்றவனும், வேதசாகைகளை
அருளிச்செய்தவனும், தாரகனை அடக்கிய
காளியைவென்ற வீரனும், முயலகனது சினத்தைத்
தணித்த கூத்தனுமாய் விளங்குபவன் குரங்காடுதுறை இறைவன்.
பாடல்
எண் : 8
நாடி
நம்தமர் ஆயின தொண்டர்காள்,
ஆடு
மின்,அழு மின்,தொழு மின்,அடி
பாடு
மின்,பர மன்பயி லும்மிடம்
கூடு
மின்,குரங் காடு துறையையே.
பொழிப்புரை : நம் தமராகிய
தொண்டர்களே! பரமன் பயிலும் இடமாகிய குரங்காடுதுறையையே மனத்தால் நாடி ஆடுவீர்களாக; அழுவீர்களாக; தொழுவீர்களாக; அவன் அடியே பாடுவீர்களாக; அத்தலத்தையே கூடுவீர்களாக.
பாடல்
எண் : 9
தென்றல்
நல்நெடும் தேர்உடை யான்உடல்
பொன்ற
வெங்கனல் பொங்க விழித்தவன்,
அன்ற
அந்தக னைஅயில் சூலத்தால்
கொன்ற
வன்,குரங் காடு துறையனே.
பொழிப்புரை : குரங்காடுதுறையில்
வீற்றிருக்கும் இறைவன், தென்றலாகிய நல்ல
நீண்டுயர்ந்த தேரை உடையானாகிய காமன் உடல் அழியுமாறு வெவ்விய அனல் பொங்க
விழித்தவனும், அன்று காலனைக் கூரிய
சூலத்தாற் கொன்றவனும் ஆவன்.
பாடல்
எண் : 10
நல்த
வம்செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற
நன்மொழி யால்அருள் செய்தநல்
கொற்ற
வன்குரங் காடு துறைதொழப்
பற்றும்
தீவினை ஆயின பாறுமே.
பொழிப்புரை : நல்ல தவம்
புரிந்தவர்களாகிய சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் நல் அறம் மிகுந்த
நன்மொழியால் அருள் செய்தவனாகிய நல்ல கொற்றவனுறைகின்ற குரங்காடுதுறையைத் தொழுதால்
பற்றுகின்ற தீவினையாகியவை கெடும்.
பாடல்
எண் : 11
கடுத்தது
ஓர்அரக் கன்கயி லைம்மலை
எடுத்த
தோள்தலை இற்றுஅல றவ்விரல்
அடுத்த
லும்அவன் இன்னிசை கேட்டுஅருள்
கொடுத்த
வன்,குரங் காடு துறையனே.
பொழிப்புரை : குரங்காடுதுறையில்
வீற்றிருக்கும் இறைவன், சினந்த தேரை உடைய
இராவணனது, திருக்கயிலையை
எடுக்கலுற்ற தோள்களும் தலையும் இற்று, அவன்
அலறும்படியாகத் திருவிரலை அடுத்தவன்; பின்
அவன் இன்னிசை கேட்டு அருள்கொடுத்தவன் ஆவன்.
திருச்சிற்றம்பலம்