அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பெருக்க உபாயம்
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
ஆசை, பிறவி, கல்வி என்னும் கடல்களைக்
கடக்க,
உனது திருவடி என்னும் புணையைத்
தந்து அருள்.
தனத்தன
தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
பெருக்கவு
பாயங் கருத்துடை யோர்தம்
ப்ரபுத்தன பாரங் ...... களிலேசம்
ப்ரமத்துட
னாளும் ப்ரமித்திருள் கூரும்
ப்ரியக்கட லூடுந் ...... தணியாத
கருக்கட
லூடுங் கதற்றும நேகங்
கலைக்கட லூடுஞ் ...... சுழலாதே
கடப்பலர்
சேர்கிண் கிணிப்ரபை வீசும்
கழற்புணை நீதந் ...... தருள்வாயே
தருக்கிய
வேதன் சிறைப்பட நாளுஞ்
சதுர்த்தச லோகங் ...... களும்வாழச்
சமுத்திர
மேழுங் குலக்கிரி யேழுஞ்
சளப்பட மாவுந் ...... தனிவீழத்
திருக்கையில்
வேலொன் றெடுத்தம ராடுஞ்
செருக்கு மயூரந் ...... தனில்வாழ்வே
சிறப்பொடு
ஞானந் தமிழ்த்ரய நீடுந்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பெருக்க
உபாயம் கருத்து உடையோர் தம்
ப்ரபுத் தனபாரங் ...... களிலே, சம்-
ப்ரமத்துடன்
நாளும் ப்ரமித்து, இருள் கூரும்
ப்ரியக்கடல் ஊடும், ...... தணியாத
கருக்கடல்
ஊடும், கதற்றும் அநேகம்
கலைக்கடல் ஊடும் ...... சுழலாதே,
கடப்பு
அலர் சேர் கிண் கிணி ப்ரபை வீசும்
கழல் புணை நீ தந்து ...... அருள்வாயே.
தருக்கிய
வேதன் சிறைப்பட, நாளும்
சதுர்த் தச லோகங் ...... களும் வாழச்
சமுத்திரம்
ஏழும், குலக்கிரி ஏழும்,
சளப்பட, மாவும் ...... தனிவீழத்
திருக்கையில்
வேல் ஒன்று எடுத்து, அமர் ஆடும்,
செருக்கு மயூரம் ...... தனில் வாழ்வே!
சிறப்பொடு
ஞானம், தமிழ் த்ரயம் நீடும்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
பதவுரை
தருக்கிய வேதன் சிறைப்பட --- நான் என்று
செருக்குடன் வந்த பிரமதேவன் சிறைப்பட்டுத் துன்புறவும்,
சதுர் தச லோகங்களும் நாளும் வாழ ---
பதினான்கு உலகங்களும் என்றும் வாழ்வுறவும்,
சமுத்திரம் ஏழும் குலகிரி ஏழும் சளபட --- ஏழு
கடல்களும், சிறந்த ஏழுமலைகளும்
துன்பப்படவும்,
மாவும் தனி வீழ --- மாமரமானது தனித்து
அழிந்து விழவும்,
வேல் ஒன்று --- ஒப்பற்ற வேலாயுதத்தை,
திருக்கையில் எடுத்து அமர் ஆடும் ---
திருக்கரத்தில் எடுத்துப் போர்புரிந்த,
செருக்கு மயூரந் தனில் வாழ்வே ---
மகிழ்ச்சியுள்ள மயிலின்மீது ஏறியருளும் செல்வமே!
சிறப்பொடு ஞானம் --- சிறப்பும் ஞானமும்,
தமிழ் த்ரயம் நீடும் --- முத்தமிழும் பெருகி
விளங்கும்,
திருத்தணி மேவும் பெருமாளே --- திருத்தணிகை
மலைமீது வீற்றிருக்கும் பெருமை மிகுந்தவரே!
பெருக்க உபாயம் --- விரிவான
தந்திரங்களில்,
கருத்து உடையோர் தம் --- மனம் உடைய
பொதுமாதர்களின்,
ப்ரபு தன பாரங்களில் --- பெரிய தனபாரங்களில்,
சம்ப்ரமத்துடன் --- சிறப்புடன்,
நாளும் ப்ரமித்து --- நாள்தோறும் மயக்கமுற்று,
இருள் கூரும் -- அறியாமையாகிய இருள் மிகுந்த,
ப்ரிய கடலூடும் --- ஆசைக் கடலுக்குள்ளும்,
தணியாத கரு கடலூடும் --- ஓய்வு இல்லாத
பிறவிக் கடலுக்குள்ளும்,
கதற்றும் அநேக கலை கடலூடும் --- கதறிப்
பேசுகின்ற நானாவகையான கல்விக் கடலுக்குள்ளும்,
சுழலாதே --- அடியேன் சுழற்சியடையாமல்,
கடப்ப அலர் சேர் --- கடப்பமலர் சேர்ந்துள்ள,
கிண்கிணி ப்ரபை வீசும் --- கிண்கிணியின்
ஒளிவீசுகின்ற,
கழல் புணை நீ தந்து அருள்வாயே --- தேவரீருடைய
திருவடியாகிய தெப்பத்தை தந்து அருள் புரிவீராக.
பொழிப்புரை
“நான் பெரியவன்’ என்று செருக்குற்ற
பிரமதேவன் சிறைக்குள் சேரவும், பதினான்கு உலகங்களும்
என்றும் வாழவும், ஏழு கடல்களும் ஏழு
மலைகளும் துன்பப்படவும், மாமரம் முறிந்து
விழவும் திருக்கரத்தில்; வேலாயுதத்தை
எடுத்துப் போராடியவரே!
மகிழ்ச்சி மிகுந்த மயிலின்மீது ஏறி
அருள்கின்ற செல்வரே!
சிறப்பும் ஞானமும், முத்தமிழும் வளர்ந்து ஓங்குகின்ற
திருத்தணிகை மலைமீது எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
பெரிய தந்திரங்களில் கருத்துடைய பொது
மகளிரின் சிறந்த தனங்களில் சிறப்புடன் நாள்தோறும் நான் மயங்கித் திகைத்து
அறியாமையாகிய இருள் மிகுந்த ஆசைக் கடலுக்குள்ளும், இடையறாது வருகின்ற பிறவிக்
கடலுக்குள்ளும், அடியேன் சுழற்சி அடையாமல், கடப்பமலர் அணிந்துள்ள கிண்கிணியின் ஒளி
வீசும் திருவடியாகிய தெப்பத்தைத் தந்து தேவரீர் திருவருள் புரிவீராக.
விரிவுரை
பெருக்க
உபாயம் கருத்து உடையோர் ---
தம்பால்
வருகின்ற ஆடவர்களிடம் உள்ள பொருளை எப்படி எப்படிப் பறிக்க வேண்டும் என்று, சதா அதற்குரிய தந்திரங்களான வழிவகைகளை
எண்ணுவார்கள்.
பொருள்
முழுவதும் பறித்த பின் “அவர்களை எப்படி விரட்டுவது?” என்றும் தந்திரம் புரிவார்கள்.
“நாஆர
வேண்டும் இதம் சொல்லுவார், உனை நான் பிரிந்தால்
சாவேன் என்றே, இருந்து ஒக்க
உண்பார்கள், கைதான் வறண்டால்
போய்
வாரும் என்று நடுத்தலைக்கே குட்டும் பூவையருக்கு
ஈவார்
தலை விதியோ? இறைவா கச்சி ஏகம்பனே”
என்பார்
பட்டினத்தடிகள்.
இருள்
கூரும் ப்ரியக் கடல் ---
மாதர்கள்
பால் மயங்கி அறியாமையால் அவர்கள் மீது கடல் போன்ற ஆசை வைப்பர். அதனைக் காமக் கடல்
என்பர். அது மிகவும் வெப்பமானது. அதனைக் கடப்பது மிகவும் கடினம். இறைவன் திருவருள்
கைவரப் பெற்ற ஞானிகளே கடப்பர்.
கடத்தில்
குறத்திப் பிரான் அருளால், கலங்காத சித்தத்
திடத்தில்
புணைஎன யான் கடந்தேன், சித்ரமாதர் அலகுல்
படத்தில்
கழுத்தில் பழுத்த செவ்வாயில் பணையில் உந்தித்
தடத்தில்
தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே. --- கந்தரலங்காரம்.
தணியாத
கருக்கடல்
---
கரு-கருவில்
உயிர்கள் வாழ்வதைக் குறிக்கின்றது.
பிறவிப்
பெருங்கடல். பிறவி இடையறாது உயிர்க்கட்கு வந்து கொண்டேயிருகின்றது. பிறவித்
துன்பமே எண்ணில்லாத காலமாக எண்ணில்லாத பிறவிகளை எடுத்து உயிர்கள் ஏங்குகின்றன.
இத்துயர் இறையருளாலேயே நீங்கற்பாலது.
கதற்றுமநேகங்
கலைக்கடல்
---
பல
நூல்களைப் படித்து, கல்வியின் பயனைப்
பெறாது, கற்ற கல்வியைக்
கொண்டு ஓ என்று கதறி வாதிட்டுக் கொண்டு உழலுவார்கள் பலர்.
கழற்புனை ----
கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ. --- கந்தரநுபூதி
“கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்” --- திருவாசகம்.
ஆசைக்கடல், பிறவிக்கடல், கல்விக்கடல் இந்த மூன்று கடல்களையுங்
கடப்பதற்கு இறைவன் திருவடி தெப்பமாக நின்று உதவுகின்றது.
“உறவு முறை மனைவி மகவு
எனும் அலையில் எனது இதய
உரு
உடைய மலின பவ ஜலராசி ஏறவிடும் உறுபுணையும்”
--- சீர்பாதவகுப்பு
தருக்கிய
வேதன் சிறைப்பட ---
பிரமதேவன்
ஒருசமயம் கயிலை சென்றபொது, “நான் படைப்புத்
தலைவன்” என்று இறுமாந்து சென்றான். முருகவேள் அவனுடைய இறுமாப்பு நீங்குமாறு
பிரணவப் பொருளை வினவ, அதனை சொல்லமாட்டாது
அவன் திகைக்க; அவனைச் சிறையில்
அடைத்து தருக்ககற்றி அருள் புரிந்தனர்.
அயனைச் சிறை புரிந்த
வரலாறு
குமாரக்கடவுள் திருவிளையாடல் பல
புரிந்து வெள்ளி மலையின் கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி
தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடும்
சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கயிலாய மலையை நண்ணினர். பிரமனை ஒழிந்த
எல்லாக் கணர்களும், யான் எனது என்னும்
செருக்கின்றி, சிவபெருமானை வணங்கி
வழிபட்டுத் திரும்பினார்கள். ஆங்கு கோபுர வாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான்
வீரர்களும் புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள்
திரண்டாலென்ன எழுந்தருளி வந்து அருந்தார். அவர் அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.
பிரமதேவர்
குமரக் கடவுளைக் கண்டு வணங்காது,
“இவன்
ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப்
பெருமான் சிவன் வேறு தான் வேறன்று,
மணியும்
ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே
என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து
சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு
உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை
நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார்.
தருக்குடன்
செல்லும் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது
கைகுவித்து, வணங்கிடாத பாவனையாக
வணங்கினன்.
கந்தப்பெருமான்
“நீ யாவன்” என்றனர்.
பிரமதேவர்
அச்சங்கொண்டு “படைத்தல் தொழிலுடைய பிரமன்” என்றனன்.
முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர்.
பிரமன்
“உணர்ந்திருக்கிறேன்” என்றனன்.
“நன்று!
வேத உணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய இருக்கு வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர்.
சதுர்முகன்
இருக்கு வேதத்தை "ஓம்" என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன்.
உடனே
இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி! நிற்றி! முதலாவதாகக்
கூறிய `ஓம்’ என்ற பிரணவ
மந்திரத்தின் பொருளை விளக்குதி" என்றனர்.
தாமரைத்
தலை இருந்தவன் குடிலை முன் சாற்றி
மா
மறைத்தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர்
பெற்று உடைக் குமரவேள், "நிற்றி, முன் கழறும்
ஓம்
எனப்படு மொழிப்பொருள் இயம்புக",என்று உரைத்தான். ---கந்தபுராணம்.
ஆறு
திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன்
வினவுதலும், பிரமன் அக்குடிலை
மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன; சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய
ஆணவம் அகன்றது; வெட்கத்தால் தலை குனிந்தனன்.
நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை உணராமற் போனோமே? என்று ஏங்கினன்; சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான்
கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை உணராது மருண்டு நின்றனன்.
குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர்.
பிரமன்
“ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன்.
அது
கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம்முதலெழுத்திற்குப்
பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும்
புரிகின்றனையோ? பேதாய்!” என்று
நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.
“சிட்டி செய்வது இத்
தன்மையதோ?எனச் செவ்வேள்
குட்டினான் அயன் நான்குமா முடிகளும்
குலுங்க” ---கந்தபுராணம்.
பிரமதேவனது
அகங்காரம் முழுதும் தொலைந்து
புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன்
பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக்
கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.
“வேதநான்முக மறையோ
னொடும் விளை
யாடியே குடுமியிலே கரமொடு
வீரமோதின மறவா” ---
(காணொணா) திருப்புகழ்.
“அயனைக் குட்டிய
பெருமாளே” -- (பரவை) திருப்புகழ்.
“ஆரணன் தனை வாதாடி ஓர்உரை
ஓதுகின்று என, வாராது எனா, அவன்
ஆணவம் கெடவே காவலாம் அதில் இடும்வேலா --- (வாரணந்) திருப்புகழ்.
“.......................................படைப்போன்
அகந்தை
உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
உகந்த பிரணவத்தின்உண்மை -- புகன்றிலையால்
சிட்டித்
தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறைஇருத்தும் கோமானே” --- கந்தர் கலிவெண்பா.
குலகிரி
யேழும்
---
சூரபன்மன்
தனது வீரமகேந்திர நகருக்கு அரணாக எண் திசைகளில் எட்டு மலைகளை நிறுவினான். அதில்
வடதிசையில் உள்ள இலங்கையில் ஏமகூட மலையில் சுவாமி தங்கியருளினார். அதனால் அந்த
இலங்கை மலை நீங்க மற்ற ஏழு மலைகளையும் முருகவேள் கடலில் அழுந்துமாறு
அழுத்திவிட்டார்,
மாவும்
தனி வீழ
---
இறுதியில்
சூரபன்மன் உறுதி குலைந்து கடலில் இரும்பு மயமான மாமரமாகக் கடலின் நடுவே தோன்றி
உலகை இடர்ப் படுத்தினான்.
சிறப்பொடு
ஞானத் தமிழ்த்ரய நீடும் ---
திருத்தணிகையில்
சிறப்பும் ஞானமும் முத்தமிழும் ஓங்கி வளர்ந்து விளங்குகின்றன. உயர்ந்த அரிய
திருத்தலம் தணிகை.
“தரையிடங் கொளும் பதிகளில் காஞ்சியந்தலம்
போல்
வரையிடங்களில் சிறந்ததித் தணிகை மால்வரையே”
என்று
முருகப் பெருமானே கூறியருளினார்.
ஆதலால்
மலைகளுக்கெல்லாம் ஒரு மணிமுடியாக விளங்குவது திருத்தணிகை மலை.
கருத்துரை
திருத்தணிகையில்
வாழும் முருகக் கடவுளே! ஆசை, பிறவி, கல்வி என்ற கடல்களைக் கடக்க உனது
பாதமாகிய தெப்பத்தைத் தந்தருள்.