அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
எழுகுநிறை நாபி
(திருக்கழுக்குன்றம்)
திருக்கழுக்குன்றத்து
முருகா! திருவருள் புரிவாய்.
தனதனன
தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
எழுகுநிறை
நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர் ...... முதலானோர்
இறைவியெனு
மாதி பரைமுலையி னூறி
யெழுமமிர்த நாறு ...... கனிவாயா
புழுகொழுகு
காழி கவுணியரில் ஞான
புநிதனென ஏடு ...... தமிழாலே
புனலிலெதி
ரேற சமணர்கழு வேற
பொருதகவி வீர ...... குருநாதா
மழுவுழைக
பால டமரகத்ரி சூல
மணிகரவி நோத ...... ரருள்பாலா
மலரயனை
நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய் ...... முருகோனே
கழுகுதொழு
வேத கிரிசிகரி வீறு
கதிருலவு வாசல் ...... நிறைவானோர்
கடலோலிய
தான மறைதமிழ்க ளோது
கதலிவன மேவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
எழுகு
நிறை நாபி அரி பிரமர் சோதி
இலகும் அரன் மூவர் ...... முதலானோர்,
இறைவி
எனும் ஆதி பரைமுலையின் ஊறி
எழும் அமிர்தம் நாறு ...... கனிவாயா!
புழுகு
ஒழுகு காழி கவுணியரில் ஞான
புனிதன் என, ஏடு ...... தமிழாலே
புனலில்
எதிரு ஏற, சமணர் கழு ஏற,
பொருத கவி வீர! ...... குருநாதா!
மழு
உழை கபால டமருக த்ரிசூல
மணி கர விநோதர் ...... அருள்பாலா!
மலர்
அயனை நீடு சிறை செய்து அவன் வேலை
வளமை பெறவே செய் ...... முருகோனே!
கழுகு தொழு வேத கிரி சிகரி வீறு
கதிர் உலவு வாசல் ...... நிறை வானோர்,
கடல்
ஒலியது ஆன மறை தமிழ்கள் ஓது
கதலிவனம் மேவு ...... பெருமாளே.
பதவுரை
எழுகு நிறை --- ஏழு உலகங்களையும் தமது நாபியில்
கொண்ட,
அரி --- நாராயணர்,
பிரமர் --- பிரம தேவர்,
சோதி இலகும் அரன் --- சோதி வடிவாக விளங்கும் உருத்திரன்,
மூவர் முதலானோர் --- இந்த மூவர் முதல் பிற தேவர்கட்கும்,
இறைவி எனும் ஆதி --- தலைவி யென்று சொல்லப் பட்ட
ஆதி பராசக்தியாகிய,
பரை முலையில் ஊறி எழும் --- மேலாய உமதேவியாரது
திருமுலையில் ஊறியெழுந்த,
அமிர்தம் நாறு --- ஞானப்பால் மணக்கும்,
கனிவாயா --- கனிபோன்ற வாயை உடையவரே!
புழுகு ஒழுகு காழி --- புழுகு வாசனை ஒழுகி நறுமணம் வீசுகின்ற சீகாழிப்
பதியில்,
கவுணியரில் --- கவுணியர் குடியில்,
ஞான புனிதன் என --- ஞானசம்பந்தராக அவதரித்து,
தமிழாலே --- தமிழ் பாசுரத்தின் மகிமையாலே,
ஏடு புனலில் எதிர் ஏற --- ஏடானது வையை யாற்றின்
நீரில் எதிர் ஏறிச் செல்லவும்,
சமணர்கழு ஏற --- சமணர்கள் கழுவில் ஏறவும்,
பொருத --- தமிழினால் வாதப் போர் புரிந்த,
கவி வீர --- கவி வீரரே!
குருநாதா --- குருநாதரே!
மழு --- மழுவையும்,
உழை --- மானையும்,
கபாலம் --- பிரமகபாலத்தையும்,
டமருக --- உடுக்கையும்,
த்ரிசூலம் --- திரி சூலத்தையும்,
மணி --- மணியையும்,
கர விநோதர் அருள் பாலா --- கரத்தில் ஏந்திய அற்புத
மூர்த்தியாம் சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!
மலர் அயனை --- தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனை,
நீடு சிறை செய்து --- பெரியசிறைச் சாலையில் அடைத்து,
அவன் வேலை --- அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை,
வளமை பெறவே செய் --- செப்பமாகச் செய்தருளிய,
முருகோனே --- முருகக் கடவுளே!
கழுகு தொழு --- கழுகுகள் தொழுகின்ற,
வேதகிரி சிகிரி வீறு --- வேதமலையின் உச்சியில்
விளங்குகின்ற,
கதிர் உலவு --- ஒளிபொருந்திய,
வாசல் நிறை வானோர் --- வாசலில் நிறைந்த தேவர்கள்,
கடல் ஒலியது ஆன --- கடலின் ஒலி போல பெரு முழக்கமாக,
மறை தமிழர்கள் ஓது --- வேதங்களையும், தமிழ்ப் பாடல்களையும் ஓதுகின்ற,
கதலி வன மேவு --- கதலிவனமாகிய திருக்கழுக்குன்றத்தில்
வாழுகின்ற,
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
பொழிப்புரை
ஏழு உலகங்களையும் தமது நாபியில் அடக்கிய
திருமால், பிரமர், ஒளி உருவாய உருத்திரர் என்ற இந்த
மூவர்கட்கும், பிறதேவர்கட்கும்
தலைவியாகிய ஆதிபராசக்தியின் திருமுலையில் ஊறி வெளிப்பட்ட ஞானப்பால் மணக்கும், கனிபோன்ற வாயை உடையவரே!
புழுகு வாசனை வீசுகின்ற சீகாழியம்பதியில்
கவுணியர் குடியில் திருஞானசம்பந்தராக அவதரித்து, வையையாற்று வெள்ளத்தில் தமிழ்ப்பாசுரம்
எழுதிய ஏடு எதிர்த்துச் செல்லவும்,
சமணர்கள்
கழுவில் ஏறவும், வாதப்போர் புரிந்த
கவி வீரரே!
குருநாதரே!
மழு, மான், பிரம கபாலம், உடுக்கை, திரிசூலம், மணி இவைகளைக் கரத்தில் தரித்த அற்புத
மூர்த்தியாம் சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!
தாமரை மலரில் வாழுகின்ற பிரமதேவனைச் சிறையில்
அடைத்து, அவனுடைய சிருட்டித்
தொழிலை வளமையாகச் செய்த முருகப் பெருமானே!
கழுகுகள் தொழுகின்ற, வேதாசலத்தின் உச்சியில் விளங்கும் ஒளி
நிறைந்த தேவர்கள் கடல் ஒலிபோல் வேதங்களையும் தமிழ்ப் பாடல்களையும் ஓதுகின்ற
கதலிவனம் என்ற திருக்கழுக்குன்றத்தில் வாழும் பெருமிதமுடையவரே!
விரிவுரை
இத்திருப்புகழ்
வேண்டுகோள் எதுவும் இன்றி துதியாக அமைந்தது.
எழுகு
நிறை நாபி அரி ---
அரி-பாவங்களைப்
போக்குபவர். கு-பூமி; ஏழு என்பது சந்தத்தை
ஒட்டி எழு என்று வந்தது. ஏழு உலகங்களையும் தமது வயிற்றில் அடக்கியவர் திருமால்.
“ஒருபகல் உலகெலாம்
உதரத்துள் பொதிந்து
அருமறைக்கு
உணர்வரும் அவனை” --- கம்பராமாயணம்.
சோதி
இலகும் அரன் ---
ஒளி
மயமான உருத்திரர். மூவரில் ஒருவராக வருகின்ற உருத்திரர் வேறு; சிவபெருமான் வேறு.
சிவபிரான்
மூவருக்குந் தலைவர். அவரை வேதத்தில் சதுர்த்தம் என்று கூறும்.
முந்திய
முதல் நடு இறுதியும் ஆனாய்!
மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?
பந்தணை
விரலியும் நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல்
புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி
அந்தணன்
ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்!
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! --- திருவாசகம்.
தேவ
தேவன்மெய்ச் சேவகன்,
தென்பெ ருந்துறை நாயகன்,
மூவ
ராலும் அறியொ ணாமுதல்
ஆய ஆனந்த மூர்த்தியான்,
யாவர்
ஆயினும் அன்பர் அன்றி
அறியொ ணாமலர்ச் சோதியான்,
தூய
மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னிச் சுடருமே. --- திருவாசகம்.
உருத்திரரையும்
சிவத்தையும் ஒன்றெனக் கருதி இடர்ப் படுவோர் பலர்.
சாவ, முன் நாள், தக்கன் வேள்வித் தகர் தின்று, நஞ்சம் அஞ்சி,
`ஆவ! எந்தாய்!' என்று, அவிதா இடும் நம்மவர் அவரே,
மூவர்
என்றே எம்பிரானொடும் எண்ணி, விண் ஆண்டு, மண்மேல்
தேவர்
என்றே இறுமாந்து, என்ன பாவம் திரிதவரே! --- திருவாசகம்.
மூவர்
முதலானோர் இறைவி ---
மூவர்க்குந்
தேவர்க்கும் தலைவி உமாதேவியார்.
“..........................அரனரி
அயனண்டர்க் கரியாளுமை” --- (சகசம்பக்) திருப்புகழ்.
பதத்தே
உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உந்தன்
இதத்தே
ஒழுக அடிமை கொண்டாய், இனி யான் ஒருவர்
மதத்தே
மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்,
முதல்
தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே. --- அபிராமியந்தாதி.
ஆதி
பரை முலையின் ஊறி எழும் அமிர்த நாறு கனிவாயா:-
உமாதேவியாரின்
திருமுலைப்பால் சிவஞான மயமானது.
ஆதி
நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம
போத
நீரதாய் இருந்தனன், கொங்கையிற் பொழிபால்
ஏதிலாதோர்
குருமணி வள்ளமீது ஏற்றுக்
காதன்
மாமகற்கு அன்பினால் அருத்தினாள் கௌரி. --- கந்தபுராணம்.
புழுகொழுகு
காழி ---
சீகாழியில்
புழுகு வாசனை எங்கும் நிறைந்துள்ளது. இன்றும் அங்கு சட்டைநாதருக்குப் புனுகு
சட்டம் சாத்துகின்றார்கள்.
கவுணியரில்
ஞான புனிதன் என ---
முருக
சாரூபம் பெற்ற அபர சுப்ரமண்ய மூர்த்திகளுள் ஒருவர் சீகாழியிலே கவுணியர் குடியில்
திருஞானசம்பந்தராக அவதரித்தருளினார்.
ஏடு
தமிழாலே புனலில் எதிர் ஏற ---
திருஞானசம்பந்தரின்
திரு அவதாரத்தின் நோக்கம் பரசமய நீக்கமும் சிவசமயம் ஆக்கமுமாம்.
மதுரையம்பதிக்குப்
பிள்ளையார் எழுந்தருளி எண்ணாயிரம் சமணர்களுடன் அனல்வாதஞ் செய்து, பின் புனல் வாதஞ் செய்தபோது, “வாழ்க அந்தணர்” என்று தொடங்கும்
திருப்பாசுரத்தைப் பாடி, அந்தத் தமிழ் ஏட்டினை
வையையாற்றில் இட்டார். அந்த ஏடு எதிரேறிச் சென்றது.
திருவுடைப்
பிள்ளையார்தம் திருக்கையால் இட்டஏடு,
மருவுறும்
பிறவியாற்றில் மாதவர் மனம் சென்றாற் போல்,
பொருபுனல்
வைகை ஆற்றில் எதிர்த்து, நீர் கிழித்துப் போகும்,
இருநிலத்
தோர்கட்கு எல்லாம் இதுபொருள் என்றுகாட்டி --- பெரியபுராணம்.
இவ்வாறு
ஏடு ஆற்றில் எதிரேறியபோது புத்தேளிர் பூமழை பொழிந்தார்கள். பாண்டியன் அற்புதம்
அடைந்தான். அமணர்கள் அஞ்சி அஞ்சலி செய்தார்கள். செந்தமிழ் ஆற்றலை உலகவர்
உணர்ந்தார்கள்.
ஏடுநீர்
எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம்
நீடிய
வாழ்த்தில் போற்றி, நிமிர்ந்த பூ மாரி தூர்த்தார்,
ஆடியல்
யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான்,
பாடுசேர்
அமணர் அஞ்சிப் பதைப்புடன் பணிந்துநின்றார். --- பெரியபுராணம்.
சமணர்
கழுவேற பொருத கவி வீர:-
நாங்கள்
தோல்வியுற்றால் கழுவில் ஏறுவோம் என்று சமணர்கள் கூறிய உரைப்படி ஆற்றங்கரையில்
கழுக்கல் கட்டி கழுவில் எறினார்கள்.
பண்புடை
அமைச்சனாரும் பாருளோர் அறியும் ஆற்றால்
கண்புடை
பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்புடை
ஞானம் உண்டார் மடத்துத்தீ நாடியிட்ட
எண்பெருங்
குன்றத்து எண்ணா யிரவரும் எறினார்கள். --- பெரியபுராணம்.
பொருதல்-போர்
புரிதல். திருநீற்றினால் ஞானசம்பந்தர் எண்ணாயிரம் சமணர்களுடன் போர்
புரிந்தருளினார்.
பவமாய்த்து
ஆண் அது ஆகும் பனை காய்த்தே, மண நாறும்
பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படி, வேதம்
படியாப்
பாதகர், பாய் அன்றி உடாப் பேதைகள், கேசம்
பறி கோப்பாளிகள் யாரும் ...... கழு ஏறச்
சிவமாய்த்
தேன்அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர்வெண்
திருநீற்றால் அமராடும் ...... சிறியோனே. --- (தவர்வாள்)
திருப்புகழ்.
மழுவுழை
கபால டமருகத்ரிசூல மணிகர விநோதர் ---
சிவபெருமான்
இடக்கரத்தில் மானும் வலக்கரத்தில் மழுவும் ஏந்தியுள்ளார்.
துள்ளி
ஓடுகின்ற மனமாகிய மானையும், அடியார்களது பாவத்தை
எரிக்கும் மழுவையும் உடையவர்.
“மழு மான் கரத்தனை
மால்விடையானை --- பட்டினத்தார்.
உடுக்கை
நாத ஒலியால் உலகங்களை இறைவன் படைக்கிறான்.
“தோற்றந்
துடியதனில்.” --- உண்மை விளக்கம்.
திரிசூலம்-இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மூன்று சக்திகளைக்
குறிக்கின்றது.
மலரயனை
நீடு செய்து அவன் வேலை வளமை பெறவே செய் ---
பிரணவத்தின்
பொருள் அறியாத பிரமனை செவ்வேள் சிறையில் வைத்து, அவனுடைய சிருட்டித் தொழிலை ஒருமுகமும், நான்கு திருக்கரங்களும், ஜெபமாலையும், கமண்டலமுந் தாங்கித் தாமே
செய்தருளினார்.
ஒருகரந்தனில்
கண்டிகை வடம்பரித்து, ஒருதன்
கரதலம் தனில்
குண்டிகை தரித்து, இரு கரங்கள்
வரதமோடு அபயம் தரப் பரம்பொருள் மகன் ஓர்
திருமுகங்கொடு
சதுர்முகன் போல்விதி செய்தான். --- கந்தபுராணம்.
அகில
வுலகங்கட்கும் தலைவராய் ஐந்தொழில்கட்கும் முதல்வராய முருகவேள் படைப்புத் தொழில்
புரிவதில் அதிசயம் ஒன்றுமில்லை.
உயிரினுக்கு
உயிராகியே பரஞ்சுடர் ஒளியாய்
வியன்மறைத்
தொகைக்கு ஈறதாய் விதிமுதல் உரைக்கும்
செயலினுக்கு எலாம் ஆதியாய் வைகிய செவ்வேள்
அயன்
எனப் படைக்கின்றதும் அற்புதம் ஆகுமோ. ----கந்தபுராணம்.
முருகப்
பெருமான் படைப்புத் தொழில் புரியும்போது உயிர்கள் யாவும் நல்லொழுக்க முடையனவாய், இன்ப நலம் பெற்று மகிழ்ந்திருந்தன.
முற்றும் அத் தொழிலிற்பட்ட மூதுயிர் பெற்ற
பேற்றை
இற்று எனக்
கிளக்கலாமே எஃகு அறிவுடையார்க்கேனும்... --- தணிகைப்புராணம்.
கழுகு
தொழு வேதகிரி ---
கிருதயுகத்தில்-சண்டன்
பிரசண்டன் என்ற கழுகுகளும்,
திரேதாயுகத்தில்-
சம்பாதி சடாயு என்ற கழுகுகளும்,
துவார
யுகத்தில்-சம்புகுத்தன் மாகுத்தன் என்ற கழுகுகளும் பூசித்தன.
கலியுகத்தில்-சம்பு
ஆதி என்ற கழுகுகளும் பூசிக்கின்றன.
வானோர்
கடல் ஒலியதான மறைதமிழ்கள் ஓது ---
திருக்கழுக்குன்றத்திலே
தேவர்கள் மளைகளாலும், தமிழ்ப்
பாடல்களினாலும், இறைவனைக் கடல்போன்ற
ஒலிசெய்து துதிக்கின்றார்கள்.
முழாவொலி
யாழொலி முக்கணாயகன்
விழாவொலி
மணத்தொலி வேள்வியாவையும்
வழாயவொலி
மறைவொலி வானையுங்கடந்
தெழாவொலி
கடல்கிளந்தென வொலிக்குமால்” --- திருக்கழுக்குன்ற
தலபுராணம்.
கதலிவனம்
---
இத்தலத்தில்
தலவிருட்சம் வாழை. ஐந்தாம் திருவிழாவில் வாழை விருட்ச வாகனத்தில் இறைவன்
எழுந்தருளுகின்றார்
No comments:
Post a Comment