அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஓலம் இட்ட சுரும்பு
(திருக்கழுக்குன்றம்)
திருக்கழுக்குன்றத்து
முருகா!
மாதர் மயலால் துயரப்பட்டு,
பிறவிக் கடலிலே அழுந்தி
அழியும் எனக்கு
ஆறெழுத்தை நினைந்து உய்ய
அருள்.
தான
தத்த தனந்த தனா தனாதன
தான தத்த தனந்த தனா தனாதன
தான தத்த தனந்த தனா தனாதன ...... தனனதான
ஓல
மிட்ட சுரும்பு தனா தனாவென
வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென
வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென ......
விரகலீலை
ஓர்மி
டற்றி லெழும்புள் குகூ குகூவென
வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென
ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென ......
அமுதமாரன்
ஆல
யத்து ளிருந்து குபீர் குபீரென
வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென
ஆர முத்த மணிந்து அளா வளாவென ......
மருவுமாதர்
ஆசை
யிற்கை கலந்து சுமா சுமாபவ
சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம்
ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென ......வகைவராதோ
மாலை
யிட்ட சிரங்கள் செவேல் செவேலென
மேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென
வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென ......எதிர்கொள்சூரன்
மார்பு மொக்க நெரிந்து கரீல் கரீலென
பேய்கு திக்க நிணங்கள் குழூ குழூவென
வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென ....உதிரமாறாய்
வேலை
வற்றி வறண்டு சுறீல் சுறீலென
மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென ...... விசைகள்கூற
வேலெ
டுத்து நடந்த திவா கராசல
வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ்
வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ ...... குமரவேளே.
பதம் பிரித்தல்
ஓல
மிட்ட சுரும்பு தனா தனா என-
வே, சிரத்தில் விழுங்கை பளீர் பளீர் என,
ஓசை பெற்ற சிலம்பு கலீர் கலீர் என, ...... விரக லீலை
ஓர்
மிடற்றில் எழும் புள் குகூ குகூ என,
வேர்வை மெத்த எழுந்து சலா சலா என,
ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீர் என, ...... அமுத மாரன்
ஆலயத்துள்
இருந்து குபீர் குபீர் என-
வே, குதிக்க உடம்பு விரீர் விரீர் என,
ஆர முத்தம் அணிந்து அளா வளா என, ...... மருவு மாதர்
ஆசையில்
கை கலந்து சுமா சுமா, பவ
சாகரத்தில் அழுந்தி எழா எழாது, உளம்
ஆறெழுத்தை நினைந்து குகா குகா என
......வகை வராதோ?
மாலை
இட்ட சிரங்கள் செவேல் செவேல் என,
மேல் எழுச்சி தரும் பல் வெளேல் வெளேல் என,
வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேல் என, ......எதிர்கொள் சூரன்
மார்பும்
ஒக்க நெரிந்து கரீல் கரீல் என,
பேய் குதிக்க நிணங்கள் குழூ குழூ என,
வாய் புதைத்து விழுந்து ஐயோ ஐயோ என, ....உதிரம் ஆறாய்,
வேலை
வற்றி வறண்டு சுறீல் சுறீல் என,
மாலை வெற்பும் இடிந்து திடீல் திடீல் என,
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயா என ...... இசைகள் கூற,
வேல்
எடுத்து நடந்த திவாகரா! சல
வேடு வப்பெண் மணந்த புயாசலா! தமிழ்
வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா! சிவ ......
குமரவேளே.
பதவுரை
மாலையிட்ட சிரங்கள் --- பூமாலையை யணிந்து
கொண்டுள்ள (சூராதியருடைய) தலைகள்
செவேல் செவேல் என --- உதிரக் கொதிப்பால் சிலந்த
நிறத்தை யடையவும்,
வேல் எழுச்சி தரும் பல் --- வேலைப்போல் கூர்மையாகவுள்ள
பற்கள்,
வெளேல் வெளேல் என --- (உதிரத்துடன் கூடிய புலாலுணவால்
சிவந்த அப்பற்கள்) வெண்ணிறத்தை யடையவும்,
வாகை பெற்ற புயங்கள் --- வெள்ளி மாலையைச் சூடியுள்ள
தோள்கள்,
கறேல் கறேல் என --- மிகுந்த கறுப்பு நிறத்தையடையவும்,
எதிர் கொள் சூரன் --- போரில் எதிர்த்த சூரபன்மனுடைய,
மார்பும் ஒக்க நெரிந்து --- ஏனைய உறுப்புகளுடன்
மார்பும் மிகவும் நெரிந்து,
கரீல் கரீல் என --- தீய்ந்து போகவும்,
பேய் குதிக்க --- பேய்கள் குதி கொள்ளவும்,
நிணங்கள் குழூ குழூ என --- தசைகள் குவியவும்,
வாய் புதைத்து விழுந்து --- (அசுர சேனைகள்) வாயைப்
பொத்திக் கொண்டு விழுந்து,
ஐயோ ஐயோ என --- ஐயோ ஐயோ என்று அலறவும்,
உதிரம் ஆறாய் --- உதிர வெள்ளம் ஆறாய் ஓடவும்,
வேலை வற்றி வரண்டு சுறீல் சுறீல் என --- கடல்
அறவே சுவறி சுறீல் என்று சத்திக்கவும்,
மாலை வெற்பும் இடிந்து திடீல் திடீல் என --- அத்த
கிரியும் ஏனைய கிரிகளும் திடீல் திடீல் என்று இடிந்து விழவும்,
மேன்மை பெற்ற ஜனங்கள் --- பெருமைமிக்க முனிவர்களும்
தேவர்களும்,
ஐயா ஐயா என --- ஐயா ஐயா என்று,
இசைகள் கூற --- துதி செய்யவும்,
வேல் எடுத்து நடந்த திவாகரா --- வேலாயுதத்தை எடுத்துக்கொண்டு
போர்க்களத்தில் நடந்த சிவசூரியரே!
அசல --- மலையிடத்தே வாழும்,
வேடுவப் பெண் மணந்த புய அசல --- வள்ளி நாயகியாரை
மணந்துகொண்ட மலைபோன்ற தோளை உடையவரே!
தமிழ் வேத வெற்பில் அமர்ந்த --- தமிழ் வழங்கும்
வேதாசலம் என்னும் திருக்கழுக்குன்றத்தில் விரும்பி வாழ்கின்ற,
கிருபை ஆகர --- கருணைக்கு உறைவிடமானவரே!
சிவ குமரவேளே --- சிவகுமாரரே!
ஓலம் இட்ட சுரும்பு தனா தனா என --- ரீங்காரம்
செய்கின்ற வண்டுகள் கூந்தலில் தனா தனா என்று சத்திக்கவும் (ஏ-அசை)
சிரத்தில் விழுங்கை --- தலையில் தலை அலங்காரங்கள்,
பளீர் பளீர் என --- பளீர் பளீர் என்று மின்னவும்,
ஓசை பெற்ற சிலம்பு கலீர் கலீர் என --- ஒலியையுடைய
பாதச் சிலம்புக்ள கலீர் கலீர் என்று சத்திக்கவும்,
விரக லீலை --- காம லீலையின் எண்ணம்,
ஓர் மிடற்றில் எழும்புள் குகூ குகூ என --- தனிமையான
நெஞ்சத்தில் உண்டாகி பறவையின் குரல்போல் குகூ என்று படபடப்புறவும்,
வேர்வை எமத்த எழுந்து சலா சலா என --- மிகவும்
வேர்வையுண்டாகி சலசலப்புறவும்,
ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீர் என --- மயிர்க்
கூச்சலுற்று சிலிர்ப்புறவும்,
அமுதமாரன் ஆலயத்துள் இருந்து குபீர் குபீர் என
--- அமுதம் போன்ற மன்மதன் உள்ளத்தில்இருந்து குபீர் என்று வேகத்துடன், (ஏ-அசை)
குதிக்க --- குதிக்கவும்,
உடம்பு விரீர் விரீர் என --- உடம்பு விரிந்துபோவது
போல துன்புறவும்,
ஆரமுத்தம் அணிந்து அளா அளா என --- முத்தாரங்களை
யணிந்து அளவளாவியும்,
மருவு மாதர் --- தழுவுகின்ற விலைமகளிருடைய,
ஆசையில் கைகலந்து --- ஆசையினால் கைகலந்து உறவாடி,
சுமா சுமா --- பயன் சிறிது மின்றி,
பவ சாகரத்தில் அழுந்தி --- பிறவிக் கடலில் அழுந்தி,
எழா எழாது --- அதனின்றும் எழும் வகையின்றி வாடும்
அடியேனுடைய,
உளம் ஆறு எழுத்தை நினைந்து --- உள்ளத்தில சடாக்கர
மந்திரத்தைத் தியானித்து,
குகா குகா என வகை வராதோ --- குகா குகா என்று துதிக்கும்
தன்மை உண்டாக மாட்டாதோ?
பொழிப்புரை
(சூராதி அவுணர்களுடைய) பூமாலையை
யணிந்துள்ள தலைகள் உதிரக் கொதிப்புற்று சிவப்புறவும், (ஊனுண்டு சிவந்த) வேல்போன்ற கூர்மையான
பற்கள் வெளுப்புறவும், வெற்றி பெற்ற
புயங்கள் மிக்க கறுப்புறவும், போர்க்களத்தில்
எதிர்ந்த சூரபன்மன் மார்பும் மற்ற உறுப்புக்களும் நெரிந்து கரியவும், பேய்கள் கூட்டங் கூட்டமாகக் குதிக்கவும், நிணங்கள் குவியவும், அசுரசேனைகள் வாய்புதைத்து “ஐயோ” என்று
அலறி விழவும் உதிர வெள்ளம் ஓடவும்,
கடல்
வற்றவும், அத்த கிரி முதலியவை
இடிந்து விழவும், முனிவரும் தேவரும்
“ஐயோ” என்று துதி செய்யவும், வேலாயுதத்தை எடுத்து
நடந்த சிவசூரியரே!
மலைப் பக்கத்தில் வாழும் வள்ளிநாயகியாரைத்
திருமணங் கொண்ட புயமலையை உடையவரே!
தமிழ் வழங்கும் வேதாசலத்தில் வாழும்
கருணாகரரே!
சிவ குமாரரே!
(கூந்தலிலிருந்து) ஒலிடு்கின்ற வண்டுகள்
சத்திக்கவும், தலையலங்காரம்
மின்னவும், ஒலி பெற்ற
காற்சிலம்பு அரற்றவும், காமலீலையின்
எண்ணத்தால் நெஞ்சில் படபடப் புறவும், வேர்வை
மிகவும், மயிர் சிலிர்க்கவும், மன்மதன் உள்ளத்திலிருந்து குதிகொள்ளவும், உடம்பு விரிவதுபோல் துன்புறவும்
முத்தாரங்களை யணிந்து தழுவுகின்ற விலைமாதருடைய ஆசையால் அவர்களைக் கலந்து அவமே
திரிந்து பிறவிப் பெருங்கடலில் அழுந்திய அடியேன் அதனின்றும் கரை சேர்ந்து உய்ய
சடாக்கர மந்திரத்தை உள்ளத்தில தியானித்து, “குகா குகா” என்று வாயார வாழ்த்தி
உய்யும் தன்மையைப் பெறமாட்டேனோ?
விரிவுரை
இப்பாடலின் முற்பகுதி விரக தாபத்தால் உண்டாகும்
நிகழ்ச்சியைப் பற்றிக் கூறுகின்றது. விழுங்கை - விழுகின்ற கை என்றும் பொருள்
கொள்ளலாம். கை - ஒப்பனை எனப் பொருள் கொள்ளப்பட்டது. பிறவிப் பெருங் கடலில் விழுந்த
ஆன்ம கோடிகட்குப் பற்றுக்கோடாகத் திகழ்வது ஆறெழுத்தேயாம்.
பிற்பகுதி
முருகவேள் வேலெடுத்து நடந்தனால் உண்டாகும் அற்புத நிகழ்ச்சிகளைப் பற்றிக்
கூறுகின்றது.
கருத்துரை
வேலாயுதரே! வள்ளிமணவாளரே!
வேதாசலரே! சிவ மைந்தரே! மாதர்
மயக்குற்று பிறவிக் கடலில் வீழ்ந்தலையும் அடியேன் ஆறெழுத்தை நினைந்து உய்யும்
வண்ணம் அருள் புரிவீர்.
No comments:
Post a Comment