அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அகத்தினைக் கொண்டு
(திருக்கழுக்குன்றம்)
முருகா!
தொண்டருடன் கூடி வாழ அருள்
தனத்த
தத்தம் தத்தன தானன
தனத்த தத்தம் தத்தன தானன
தனத்த தத்தம் தத்தன தானன ...... தனதான
அகத்தி
னைக்கொண் டிப்புவி மேல்சில
தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின்
அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு ......
கணையாலே
அசுத்த
மைக்கண் கொட்புறு பாவையர்
நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ ......
சிலநாள்போய்
இகத்தை
மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன்
மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட
லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை ......
முதிர்வாயே
எமக்க
யிற்றின் சிக்கினி லாமுனுன்
மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன
திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு ......
னருள்தாராய்
புகழ்ச்சி
லைக்கந் தர்ப்பனு மேபொடி
படச்சி ரித்தண் முப்புர நீறுசெய்
புகைக்க னற்கண் பெற்றவர் காதலி ......
யருள்பாலா
புவிக்குள்
யுத்தம் புத்திரர் சேயர
சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை
புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் ......
மருகோனே
திகழ்க்க
டப்பம் புட்பம தார்புய
மறைத்து ருக்கொண் டற்புத மாகிய
தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை ......
யணைசீலா
செகத்தி
லுச்சம் பெற்றம ராவதி
யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி
திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
அகத்தினைக் கொண்டு இப்புவி மேல்,சில
தினத்து மற்றொன்று உற்று அறியாது, பின்
அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு ......
கணையாலே,
அசுத்த
மைக்கண் கொட்புறு பாவையர்
நகைத்து உரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ,
அலக்கணில் சென்று, தடுமாறியெ, ...... சிலநாள்போய்,
இகத்தை
மெய்க் கொண்டு, இப்புவி, பாலர், பொன்
மயக்கில் உற்று, அம் பற்றை விடாது, உடல்
இளைப்பு இரைப்பும் பித்தமுமாய், நரை ......
முதிர்வாயே,
எமக்
கயிற்றின் சிக்கினில் ஆம் முன்,
உன்
மலர்ப் பதத்தின் பத்தி விடா மனது
இருக்கும் நல்தொண்டர்க்கு இணையாக உன் .....அருள்தாராய்
புகழ்ச்
சிலைக் கந்தர்ப்பனுமே பொடி
பட, சிரித்து அண் முப்புர நீறுசெய்
புகைக் கனல்கண் பெற்றவர் காதலி ...... அருள்பாலா!
புவிக்குள்
யுத்தம் புத்திரர் சேய் அரசு
அனைத்து முற்றும் செற்றிடவே, பகை
புகட்டி வைக்கும் சக்கிரபாணி தன் ......
மருகோனே!
திகழ்க்
கடப்பம் புட்பம் அது ஆர் புய!
மறைத்து உருக்கொண்டு, அற்புதம் ஆகிய
தினைப் புனத்து இன்புற்று உறை பாவையை .....அணைசீலா!
செகத்தில்
உச்சம் பெற்ற அமராவதி
அதற்கும் ஒப்பு என்று உற்று, அழகே செறி
திருக்கழுக்குன்றத்தினில் மேவிய ......
பெருமாளே.
பதவுரை
புகழ் சிலை கந்தர்ப்பனும் பொடிபட
சிரித்து --- புகழ் பெற்ற கரும்பு வில்லையேந்திய மன்மதனும், பொடிபட்டு எரிந்து போகவும் சிரித்து,
அண் முப்புரம் நீறுசெய் புகை கனல் கண்
பெற்றவர் --- அணுகி வந்த முப்புரங்கள் சாம்பலாகவும், புகை நெருப்பைத் தந்த
கண்ணனைக் கொண்ட சிவபெருமானுடைய
காதலி அருள் பாலா --- காதலியாகிய பார்வதிதேவியின்
பாலகரே!
புவிக்கு உள் யுத்தம் --- பூமியில் போர்
வரவும்,
புத்திரர் --- புதல்வர்கள்,
சேய்--- பிள்ளைகள்,
அரசு அனைத்தும் --- அரசர்கள் அனைவரும்,
முற்றும் செற்றிடவே --- ஒருவரையொருவர்
கொல்லும்படி
பகை புகட்டி வைக்கும் --- பகையை மூட்டி வைத்த,
சக்கிர பாணிதன் மருகோனே --- சக்கராயுதத்தை
ஏந்திய கையராகிய திருமாலின் திருமருகரே!
திகழ் கடப்பம் புட்படம் அது ஆர் புய
மறைத்து --- விளங்குகின்ற கடபமலர் மாலை நிறைந்த புயங்களை மறைத்து,
உருக் கொண்டு --- வேறு வடிவத்தைக் கொண்டு,
அற்புதம் ஆகிய தினைப்புனத்தில் --- அற்புதமான
தினைப்புனத்தில்,
இன்பு உற்று உறை பாவையை அணை சீலா ---
இன்பத்துடன் வாழ்ந்த வள்ளிபிராட்டியை மருவிய சீலரே!
செகத்தில் உச்சம் பெற்று --- பூதலத்தில்
மேலான சிறப்பைப் பெற்று,
அமராவதி அதற்கு ஒப்பு என்று உற்று --- இந்திரனுடைய
நகராகிய அமராவதிக்கு நிகர் இவ்வூர் என்று விளங்கி,
அழகே செறி --- அழகு நிறைந்துள்ள,
திருக்கழுக்குன்றத்தினில் மேவிய பெருமாளே --- திருக்கழுக்குன்றத்தினில் வீற்றிருக்கும், பெருமையின்
மிகுந்தவரே!
அகத்தினை கொண்டு --- அகங்காரத்தைக்
கொண்டு,
இப்புவி மேல் --- இந்தப் பூதலத்தில்,
சில தினத்து --- சில நாள்கள்,
மற்று
ஒன்று அறியாது --- வேறு ஒரு நன்மார்க்கத்திலும் பொருந்த அறியாமல்,
பின் அவத்து உள் வைக்கும் --- பின் பயனிலாத
தன்மையில் வைக்கின்ற,
சித்தசனார் அடு கணையாலே --- மன்மதன் செலுத்தி
வருத்தும் கணையினால்,
அசுத்த --- தூய்மையில்லாததும்,
மைக் கண் கொட்புஉறு பாவையர் --- மைபூசியதுமாகிய, கண்கொண்டு சுழற்றும் பொது மாதர்கள்,
நகைத்து உரைக்கும் --- சிரித்துப் பேசும்,
பொய் கடல் மூழ்கியே --- பொய்யெனும் கடலில்
அடியேன் மூழுகி,
அலக்கணில் சென்று --- துன்பத்தில் பட்டு,
தடுமாறியெ --- தடுமாற்றத்தை அடைந்து,
சில நாள் போய் --- சில நாள் போக,
இகத்தை மெய் கொண்டு --- இம்மை வாழ்வே மெய்யென
எண்ணி,
இப்புவி --- இந்தப் பூமியில்,
பாலர் பொன் மயக்கில் உற்று --- மக்கள் பொன் என்னும் மயக்கத்தில் அகப்பட்டு,
அப்பற்றை விடாது --- அந்தப் பற்றினை விடாமல்,
உடல் இளைப்பு, இரைப்பும், பித்தமும் ஆய், நரை
முதிர்வு ஆய் --- உடலில் இளைப்பு,
மூச்சு
வாங்குதல், பித்தம் இவைகள் மேலிட,
நரை வந்து கிழத்தனத்தையடைந்து,
எமக் கயிற்றின் சிக்கினில் ஆ முன் --- இயமனுடைய
பாசக் கயிற்றின் சிக்கில் நிற்பதற்குமுன்,
மலர் பதத்தின் பத்திவிடா மனது இருக்கும் --- தேவரீருடைய
மலரடியில், அன்பு விடாத
மனத்தையுடைய,
நல்தொண்டர்க்கு இணை ஆகவும் உன் அருள் தாராய் ---
நல் தொண்டர்கட்கு அடியேன் சமமாகும்படி, உமது
திருவருளைத் தந்தருள்வீர்.
பொழிப்புரை
புகழ்பெற்ற கரும்பு வில்லையுடைய மன்மதன்
பொடிபட்டு எரியவும், அணுகி வந்த
திரிபுரங்கள் சாம்பராகவும் சிரித்துப் புகை நெருப்பை ஏவிய நெற்றிக் கண்ணையுடைய
சிவபெருமானுடைய காதலியாகிய உமையம்மை பெற்ற புதல்வரே!
பூமியில் போர் வந்து, புத்திரர், குழந்தைகள் மன்னர் அனைவரும் மாண்டொழிய
பகையை மூட்டிய சக்ராயுதத்தை ஏந்திய கரத்தையுடைய திருமலின் மருகரே!
விளங்குகின்ற கடப்ப மாலையுடைய புயத்தை
மறைத்து மாறு வேடம் புனைந்து, அற்புதமாகிய
தினைப்புனத்தில் இன்பமாக வாழ்ந்த வள்ளிநாயகியைத் தழுவிய சீலமுடையவரே!
பூதலத்தில் சிறப்புடைய, அமராவதி நகருக்கு நிகராகி அழகு நிறைந்த
திருக்கழுக்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமிதமுடையவரே!
அகங்காரங் கொண்டு, இப்பூதலத்தில் சில நாள் வேறு ஒரு
நல்வழியை மேற்கொள்ள அறியாது, வீணாக்கும்
மன்மதனுடைய கணையினால், அசுத்தமும் மையும்
உடைய கண்களைச் சுழற்றும் பொது மாதர்கள் சிரித்துப் பேசும் பொய்க் கடலில் முழுகி, துன்பப்பட்டு, தடுமாறி சிலநாள் போக, இம்மை வாழ்வே மெய்யென்று எண்ணி, மைந்தர்
பொன் என்ற மயக்கத்தை அடைந்து, அந்த ஆசையை விடாது, இளைப்பு, மேல்மூச்சு, பித்தம், நரை முதலியவற்றை அடைந்து கிழவனாகி,
இயமனுடைய பாசக் கயிற்றில் அகப்பட்டு சாவதற்கு முன், உமது திருவடித் தாமரையின் அன்பு விடாத
மனமுடைய நல்ல அடியார்க்கு அடியேனும் சமமாகி உய்யும்படி உமது திருவருளைத்
தந்தருளுவீர்.
விரிவுரை
அகத்தினைக்
கொண்டு ---
அகம்-நான்.
நான் என்ற அகப்பற்று.
மற்றொன்று
உற்று அறியாது ---
அவ
நெறியன்றி, மற்றச் சிவ நெறியை
யடைந்து உய்ய அறியாது.
அவத்துள்
வைக்கும் ---
அவம்-பயனற்றது.
பயனில்லாத செயலில் வைப்பவன் மன்மதன்.
இகத்தை
மெய்க் கொண்டு ---
மறுமையும்
வீடுபேற்றையும் கருதாமல், இம்மை வாழ்வே
நிலைத்தது என்று கருதுவது மாந்தர் தொழில். இம்மை, மறுமை, வீடு என்ற மும்மையில் இம்மையே மெய்யென்
றெண்ணி இடர்ப்படுகிறார்கள்.
பாலர்
பொன் மயக்கில் உற்று ---
மனைவி, மைந்தர், பொன், பொருள் என்ற இவைகளைச் சதமென நினைத்து
மயக்கமுறுவர் அறிவிலிகள். இவைகள் யாவும் ஒரு கணத்தில் அழிபவை.
“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வண்மை கடை” --- திருக்குறள்.
அம்
பற்றை விடாது ---
சந்தத்தைக்
குறித்து பகர மெய் மகர மெய்யாக வந்தது. பற்று விட்டாலன்றி பிறவி தொலையாது.
“அற்றது பற்றெனில் உற்றது வீடு” --- நம்மாழ்வார்.
இளைப்பு
இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வாயே ---
இளைப்பு
என்பது ஒரு நோய். இது காசத்தைச் சேர்ந்தது.
இரைப்பு-அதிகமாக
மூச்சு விடுகின்ற நோய்.
பித்தம்-பாண்டு.
மயக்க முதலிய துயரங்களைச் செய்கின்ற நோய்.
இந்த
நோய்களால் துன்புற்று, நரைத்து திரைத்து
முதுமையாகி ஆன்மாக்கள் துன்புறும்.
எமக்
கயிற்றின் சிக்கினில் ஆம் முன் ---
ஆயுள்
முடிந்தவுடன் கூற்றுவன் பாசக் கயிற்றால் உயிரைப் பிணித்துக் கொண்டு போவான். அந்த
இடர்ப்பாடு வருமுன் இறை பணி செய்து உய்யவேண்டும்.
பத்திவிடாமன
திருக்கு நற்றொண்டர்க் கிணையாகவுனருள் தாராய்:-
அடியார்கள்
இறைவன் திருவடியில் நீங்காத அன்புடன் இருப்பார்கள்.
“பெருநதி அணியும் வேணிப் பிரான்கழல்
பேணிநாளும்
உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார்
ஒழுக்கமிக்கார்”
என்று
குங்கலியக் கலய நாயனாரது அன்பின் திறத்தைச் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.
இத்தகைய
திருத் தொண்டருடன் கூடி, அவர்களின் கருணையால்
அவர்களுக்கு நிகரான அன்புடையராய் உயர்தல் வேண்டும்.
புகழ்ச்சிலைக்
கந்தர்ப்பன் ---
கந்தர்ப்பன்-மன்மதன்.
ஆசையை விளைவிக்கின்ற மன்மதனை நெற்றிக் கண்ணால் பார்த்து சிவபெருமான்
எரித்தருளினார்.
மும்மலக்காரியமாகிய
முப்புரத்தைச் சிரித்து விளையாட்டாக எரித்தருளினார்.
புவிக்குள்
யுத்தம்...........பகை புகட்டி வைக்கும் சக்கிரபாணி ---
“நீ பாரத அமரில்
யாவரையும் நீறாக்கிப் பூபாரந் தீர்க்கப் புகுந்தாய் புயல்வண்ணா” என்று கண்ணன்
தூதில் சகதேவன் கூறியபடி, கண்ணனுடைய அவதார
நோக்கம் பூபாரந் தீர்ப்பது.
அதற்குக்
கருவி பாண்டவர்கள். பகவான் கிருஷ்ணர் பாண்டவர்க்கும் கௌரவர்கட்கும் பகை மூளச்
செய்து, தானே விஜயனுக்குத்
தேரோட்டி அரச குலம் யாவும் அழியச் செய்து நிலத்துக்கு நலஞ் செய்தார்.
கிருஷ்-தோண்டுவது.
இச்சொல் நிலத்தைக் குறிக்கின்றது. ந-நலம்.
நிலத்துக்கு
நலஞ் செய்கின்றவர் கிருஷ்ணர். இது கிருஷ்ண என்ற சொல்லுக்குப் பொருள்.
செகத்தில்
உச்சம் பெற்று அமராவதி அதற்கும் ஒப்பு என்று உற்று அழகே செறி திருக்கழுக்குன்றம்:-
சம்புகுத்தன்
மாகுத்தன் என்ற இருவர் சகோதரர்கள். சம்புகுத்தன் சிவமே பரம்பொருள் என்பான்.
மாகுத்தன் சக்தியே பெரிய பொருள் என்பான். இந்த வழக்கு எங்குந் தீராது வேத மலையில்
வந்து சிவமூர்த்தியிடம் வினவினார்கள்.
சிவபெருமான், “பொன்னும் அணிகலமும் போன்று சக்தியும்
சிவமும் தாதான்மியம். வேறு வேறு பொருளன்று” என்று அருளிச் செய்தார். சிவமூர்த்தி
கூறியும் அவர்கள் மனந்தெளியாது,
மீண்டும்
சிவமே பரம் என்றும், சக்தியே பரம் என்றும்
வாதிட்டார்கள். அவர்களைக் கழுகுகளாகுமாறு சிவபெருமான் சபித்தருளினார். அக் கழுகுகள்
பூசித்ததனால் கழுக்குன்றம் எனப் பெற்றது.
கருத்துரை
திருக்கழுக்குன்றமேவிய திருமுருகா!
தொண்டருடன் கூடி வாழ அருள் செய்வீர்.
No comments:
Post a Comment