வள்ளிமலை - 0326. வெல்லிக்கு வீக்கும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வெல்லிக்கு வீக்கும் (வள்ளிமலை)

வள்ளிமலை நாதா!
சமயவாதிகளிடம் சேராமல் காத்து அருள்


தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
     தய்யத்த தாத்த ...... தனதான


வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு
     வில்லிக்க தாக்க ...... ருதும்வேளால்

வில்லற்ற வாக்கொள் சொல்லற்று காப்பொய்
     யில்லத்து றாக்க ...... வலைமேவு

பல்லத்தி வாய்க்க அல்லற்ப டாக்கை
     நல்லிற்பொ றாச்ச ...... மயமாறின்

பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்
     கல்விக்க லாத்த ...... லையலாமோ

அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து
     சொல்குக்கு டார்த்த ...... இளையோனே

அல்லுக்கு மாற்றி னெல்லுக்கு மேற்புல்
     கெல்லைப்ப டாக்க ...... ருணைவேளே

வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர்
     வல்லிக்கு மேற்ற ...... ரருள்வோனே

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வெல்லி குவீக்கும் முல்லைக் கை, வீக்கு
     வில், இக்கு அதாக் ...... கருதும்வேளால்,

வில் அற்று, அவாக் கொள் சொல் அற்று காப், பொய்
     இல்லத்து உறாக் ...... கவலை மேவு,

பல் அத்தி வாய்க்க அல்லல் படு ஆக்கை
     நல்லில் பொறா,  ...... சமயம் ஆறின்

பல் அத்த மார்க்க, வல் அர்க்கர், மூர்க்கர்,
     கல்விக் கலாத்து ...... அலையல் ஆமோ?

அல்லைக் கொல் வார்த்தை சொல்லிக்கு, இதம் ஒத்து
     சொல் குக்குட அர்த்த ...... இளையோனே!

அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கு மேல் புல்கு
     எல்லைப் படாக் ...... கருணைவேளே!

வல் ஐக்கும் ஏற்றர், தில்லைக்கும் ஏற்றர்,
     வல்லிக்கும் ஏற்றர் ...... அருள்வோனே!

வள்ளிக் குழாத்து வள்ளிக் கல் காத்த
     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.


பதவுரை


     அல்லை கொல் வார்த்தை சொல்லிக்கு --- இராக் காலம் ஒழியாதோ என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற தலைவிக்கு,

     இதம் ஒத்து சொல் --- இதமாக ஒத்து இரவை யொழிக்கின்ற குரலாகக் கூவுகின்ற,

     குக்குடம் ஆர்த்த --- சேவலைக் கொடியாகக் கட்டிய,

     இளையோனே --- இளம்பூரணரே!

     அல்லுக்கும் --- இரவையும்,

     ஆற்றில் எல்லுக்கும் மேல் புல்கு --- வழி தெரிவிக்கின்ற பகலையும் கடந்த மேல் நிலையில் மருவி,

     எல்லை படா கருணைவேளே --- அளவு படுத்த முடியாத கருணைக் கடலாகிய வேளே!

     வல்ஐக்கும் ஏற்றார் --- சிதம்பரத் தலத்துக்கு ஏற்றவரும்,

     வல்லிக்கும் ஏற்றார் --- சிவகாம வல்லிக்கும் ஏற்றவருமாகிய சிவபெருமான்,

     அருள்வோனே --- அருளிய குமாரரே!

     வள்ளி குழாத்து --- வள்ளிக் கொடிகள் கூட்டமாகவுள்ள,

     வள்ளிக் கல் காத்த --- வள்ளி மலையில் தினைப்புனங்காவல் செய்திருந்த,

     வள்ளிக்கு வாய்த்த --- வள்ளிபிராட்டியாருக்கு வாய்த்த,

     பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!

     வெல்லி குவீக்கும் --- உலகத்தை வென்று குவிக்கின்ற,
     முல்லை கை --- முல்லை மலர்க்கணையை ஏந்திய கையையுடைய,

     வீக்கு வில் --- நாண் பூட்டிய வில்,

     இக்கு அதா கருது வேளால் --- கரும்பாக விரும்பிய மன்மதனால்,

     வில் அற்று --- ஒளி மழுங்கி,

     அவா கொள் சொல் அற்று --- ஆசை கொண்டு உரைக்கும் சொல்லும் போய்,

     உகா --- மனம் நெகிழ்ந்து,

     பொய் இல்லத்து உறா --- பொய் வாழ்வுடைய வீட்டிற்குச் சென்று,

     கவலை மேவு --- கவலை யடைகின்ற,

     பல் அத்தி வாய்க்க --- பல கவலைக்கடல் நேர,

     அல்லல் படு ஆக்கை --- துன்பப்படு உடம்பை உடையவனாகிய சிறியேன்,

     நல்லில் பொற --- நன்மார்க்கத்தைத் தரியாத,

     சமயம் ஆறின் --- ஆறு சமயங்களின்,

     பல் அத்த மார்க்க --- பல பொருள்களைக் கூறும் வழியையுடைய,

     வல் அர்க்கர் --- வலிய அரக்கராகிய,

     மூர்க்கர் --- மூர்க்கர்களுடைய,

     கல்வி கலாத்து --- கல்விக் கலகத்துள்,

     அலையலாமோ --- அடியேன் அலைவது முறையோ?


பொழிப்புரை

     இரவுகாலம் ஒழியாதோ என்று கூறி வருந்துகின்ற தலைவிக்கு இதமாக அவளுடன் ஒத்து, இரவையகற்றும் குரலாகக் கூவுகின்ற சேவல் கொடியையுடைய இளம் பூரணரே,

     இரவையும் சிறிது வழியைப் புலப்படுத்துகின்ற பகலையும், (கேவல சகலம்) கடந்த தூய நிலையில் விளங்குகின்ற, அளவற்ற கருணாமூர்த்தியாகிய செவ்வேட் பரமரே!

     வலிமையும் அழகும் உடைய இடபத்தை வாகனமாகவுடையவரும், தில்லையம்பதிக்கும் சிவகாம சுந்தரிக்கும் ஏற்றவரும் ஆகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

     வள்ளிக்கொடிகள் நிரம்பவும் படர்ந்த வள்ளி மலையில் தினைப்புனத்தைக் காவல் செய்த வள்ளி நாயகிக்கு வாய்த்த பெருமிதம் உடையவரே!

     உலகத்தை வென்று குவிக்கின்ற முல்லை மலர்க்கணையை ஏந்திய கையையுடையவனும் நாண் பூட்டிய வில் கரும்பாக விரும்பிக் கொண்டவனுமாகிய மன்மதனால், ஒளி மழுங்கியும், ஆசைகொண்டு உரைக்கும் சொல்லும்போய், மனம் நெகிழ்ந்தும் பொய் வாழ்வுடைய வீட்டில் இருந்து கவலையடைந்து, பல துன்பக் கடல் நேர, துயரப்படுகின்ற உடம்பை உடையவனாகிய அடியேன், நல்வழியைத் தரிக்காத ஆறு சமயங்களின், ஒற்றுமைப்படாத பல பொருள்களையுடைய வழியில் செல்பவர்களான, வல்லரக்கர் போன்ற மூர்க்கர்களின் கல்விக் கலகத்துள் அழியலாமோ?


விரிவுரை

வெல்லிக் குவீக்கு ---

குவிக்கும் என்ற சொல் சந்தத்தையொட்டி குவீக்கும் என வந்தது.

மன்மதன் முல்லைக் கணைகளை ஏவி உலகில் உள்ள மாந்தர்களை மயக்கிக் குவிக்கின்றான்.

முல்லைக் கை ---

அப்படி வென்று குவிக்கின்ற கணையாகிய முல்லை மலரை ஏந்திய கையையுடையவன் மன்மதன்.

வீக்கு வில் இக்கதாக் கருது வேள் ---

வீக்கு-நாண்பூட்டிய.

சுரும்பு நாண் பூட்டிய வில்லாகக் கரும்பு விலை விரும்பிக் கொண்ட மன்மதன்.

வில் அற்று அவாக் கொள் சொல் அற்று உகா ---

வில் அற்று அவா கொள் சொல் அற்று உகா.

வில்-ஒளி.

மன்மதனால் அறிவு ஒளி அற்றுப்போகும். ஆசை கொண்டு உரைக்கும் சொல்லும் அற்றுப் போகும்.

உகுதல்-சிந்துதல். மனம் நெகிழ்ந்து சிந்தும்.

பொய் இல்லத்து உறா கவலைமேவு ---

பொய் வாழ்வு-நிலையற்ற வாழ்வு.

நிலையில்லாத வாழ்வுடைய வீட்டில் இருந்து சதா கவலையை யடைந்து மனிதர் மாய்கின்றார்கள்.

பல் அத்தி வாய்க்க ---

அத்தி-கடல். பலவகையான துன்பக் கடல்.

    பல துன்பம் உழன்று கலங்கிய
   சிறியன் புலையன் கொலையன்புரி
   பவம் இன்று கழிந்திட வந்துஅருள் புரிவாயே”     --- (கனகந்திரள்) திருப்புகழ்

உணவுக் கவலை; பொருட் கவலை; மனைவி மகளால் கவலை, அரசினராற் கவலை; நோய் முதலியவற்றால் கவலை. இவ்வாறு பல கவலைகள்.

அல்லல் படு ஆக்கை ---

அல்லல்படு ஆக்கை.

பல துயரத்தால் சோர்வு படுகின்ற உடம்பு.


நல்லில் பொறாச் சமயம் ஆறின் ---

நல்வழியில் சேராத ஆரு சமயங்கள் இவை புறச் சமயங்கள்.

பல் அத்த மார்க்கர் வல்லர்க்கர் மூர்க்கர் ---

அத்தம்-பொருள்.

ஒன்றோடொன்று ஒவ்வாது முரண்படுகின்ற பொருள்களைக் கூறும் சமய மார்க்கம். அதனைப் பின்பற்றுகின்ற, இரக்கமற்ற அரக்கரைப் போன்ற மூர்க்கர்கள்.

கல்விக் கலாத்து அலையலாமோ ---

கலாம்-கலகம்.

கல்வியின் பயன் மனம் அடங்குவதேயாகும். அப்படியின்றி கற்ற கல்வியைக் கொண்டு தர்க்கமிட்டு, ஒருவருடன் ஒருவர் வாதிட்டுக் கெடுகின்ற தன்மையை ஒழிக்க வேண்டும்.

  கலகலகல எனக் கண்ட பேரொடு
  கிலுகிடு சமயப் பங்கவாதிகள்
  கதறிய வெகு சொற் பங்கமாகிய   பொங்களாவும்
  கலைகளும் ஒழிய                     --- (அலகிலவு) திருப்புகழ்.

சமய வாதிகளைப் பற்றி சுவாமிகள் பல இடங்களில் கண்டிக்கின்றார்.

அல்லைகொல் வார்த்தை சொல்இக்கு இத ஓத்து சொல் குக்குடம் ---

தலைவனைப் பிரிந்திருக்கின்ற தலைவிக்கு இராப்பொழுது பெருந் துயரத்தைக் கொடுக்கும். ஒரு இரவு ஒரு யுகம் போலிருக்கும். இந்தப் பாழும் இரவு விடியாதோ? சூரியனைக் கடல் விழுங்கிவிட்டதோ? என்று கூறிப் புலம்புவாள்.  

ஆதலால் அல்லை கொல் வார்த்தை சொல்” என்றார். இரவு ஒழியாதோ என்று சொல்லுகின்றவள். ஒரு தலைவி கூறுகின்றாள்.

       ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ? நான் வளர்த்த
       கோழிவாய் மண்கூறு கொண்டதோ? - ஊழி
       திரண்டதோ? கங்குல் தினகரனுந் தேரும்
       உருண்டதோ பாதாளத் துள்.

இவ்வாறு இரவு நீடித்துத் தவிக்கின்ற தலைவிக்குக் கோழி உபகாரமாகச் சூரிய உதயத்தைப் புலப்படுத்தக் கூவும். சேவலின் குரலைக் கேட்டு அவள் சிறிது ஆறுதல் அடைவாள்.

ஆதலால் துன்பப்படுகின்ற ஒரு பெண்ணுக்கு உதவி செய்கின்ற சேவலை முருகர் ஆவலுடன் கொடியாகக் கொண்டார்.

இனி, ஆணவ இருளில் கிடந்து தத்தளிக்கின்ற ஆன்மாவுக்கு ஞானக் கதிரோனாகிய சிவசோதியின் வடிவையுணர்த்தும் நாததத்துவம் சேவல்.

இத ஒத்து-இதமாக ஒத்து. ஒத்து என்ற சொல் சந்தத்துக்காக நீட்டல் விகாரம் பெற்றது.

அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கு மேற்புல்கு எல்லைப்படாக் கருணைவேளே:-

அல்-இரவு. எல்-பகல். இங்கு இரவு பகல் என்றது மறப்பும் நினைப்புமாகும். இது கேவலசகலம். இந்த இரண்டும் அற்ற இடமே சதானந்தம்.

   கருதா மறவா நெறிகாண எனக்கு
   இருதாள் வனசந் தரஎன்று இசைவாய்”        --- கந்தரநுபூதி.

இரவும் பகலும் அற்ற தூய இடத்தில் பொருந்தி முருகவேள் விளங்குகின்றார். அவர் அளவுபடுத்த முடியாத தயாசாகரம்.

   இரவுபகல் அற்றஇடத்து ஏகாந்த யோகம்
   வரவும் திருக்கருணை வையாய் பராபரமே. --- தாயுமானார்.

இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே..   --- கந்தரலங்காரம்.

      அந்தி பகலற்ற நினைவருள்வாய்” --- (ஐங்கரனை) திருப்புகழ்.
        

வல் ஐக்கும் ஏற்றர்:-

வல்-வலிமை. ஐ அழகு ஏறு-இடபம்.

வலிமையும் அழகும் உடைய இடபத்தை வாகனமாக உடையவர் சிவபெருமான்.

உலகமெலாம் ஒடுங்கியபோது தருமம் இடப வடிவாகச் சென்று சிவமூர்த்தியை யடைந்தது. இறைவன் அதனை ஊர்தியாகக் கொண்டார். உலகத்தை எல்லாம் தாங்குகின்ற இறைவனையுந் தாங்குகின்ற வலிமையுடையது தருமமாகிய இடபம்.

கோயிலில் இறைவனுக்கு அண்மையில் உள்ள இடபம் தரும விடை வெளிப் பிரகாரத்தில் பெரிதாகவுள்ளது மால் விடை.

திரிபுர சம்மார காலத்தில் திருமால் விடையாகச் சென்று இறைவனைச் சுமந்தார்.

கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்கு அறிய இயம்பேடீ,
தடமதில்கள் அவைமூன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.     --- திருவாசகம்.

தில்லைக்கும் ஏற்றர் வல்லிக்கும் ஏற்றர் ---

ஏற்றர்-ஏற்றவர்.

தில்லையாகிய சிதம்பரத்துக்கும், சிவகாமவல்லிக்கும் ஏற்றவர் சிவபெருமான்.

தில்லையென்ற செடிகள் மிகுந்திருந்த காரணத்தால் அத்தலம் தில்லையெனப் பெற்றது.

கருத்துரை

வள்ளி மணவாளரே! சமயக் கலகத்து சென்று தடுமாறாவண்ணம் அடியேனை ஆண்டருள்வீர்.



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 21

"சொல்லால் வரும்குற்றம், சிந்தனையால் வரும் தோடம், செய்த பொல்லாத தீவினை, பார்வையில் பாவங்கள், புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீ...