அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வரைவில் பொய்
(வள்ளிமலை)
வள்ளிமலை நாதா!
மாதர் உறவை மறந்து, உன்னை
மறவாதிருக்க அருள்
தனதன
தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான
வரைவில்பொய்
மங்கையர் தங்க ளஞ்சன
விழியையு கந்துமு கந்து கொண்டடி
வருடிநி தம்பம ளைந்து தெந்தென ......
அளிகாடை
மயில்குயி
லன்றிலெ னும்பு ளின்பல
குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற
மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல்
...... மெழுகாகி
உருகியு
கந்திதழ் தின்று மென்றுகை
யடியின கங்கள்வ ரைந்து குங்கும
உபயத னங்கள்த தும்ப அன்புட ......
னணையாமஞ்
சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ
அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட
உணர்வழி யின்பம றந்து நின்றனை ......நினைவேனோ
விரவி
நெருங்குகு ரங்கி னங்கொடு
மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு
விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர்
...... களிகூர
வெயில்நில
வும்பரு மிம்ப ரும்படி
ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை
விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு
...... மருகோனே
அருகர்க
ணங்கள்பி ணங்கி டும்படி
மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட
அரகர சங்கர வென்று வென்றருள் ......
புகழ்வேலா
அறம்வளர்
சுந்தரி மைந்த தண்டலை
வயல்கள்பொ ருந்திய சந்த வண்கரை
யரிவைவி லங்கலில் வந்து கந்தருள்
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வரைவுஇல் பொய்
மங்கையர் தங்கள், அஞ்சன
விழியை உகந்து, முகந்து கொண்டு, அடி
வருடி, நிதம்பம் அளைந்து, தெந்தென ...... அளிகாடை
மயில்
குயில் அன்றில் எனும் புளின் பல
குரல்செய்து இருந்து, பின் உந்தி என்கிற
மடுவில் விழுந்து கிடந்து, செந்தழல் ...... மெழுகாகி,
உருகி
உகந்து, இதழ் தின்று மென்று, கை
அடியின் நகங்கள் வரைந்து, குங்கும
உபய தனங்கள் ததும்ப அன்புடன் ...... அணையா,மஞ்சு
உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ,
அமளியில் மின்சொல் மருங்கு இலங்கிட,
உணர்வு அழி இன்பம் மறந்து, நின்தனை
......நினைவேனோ?
விரவி
நெருங்கு குரங்கு இனம் கொடு
மொகுமொகு எனும் கடலும் கடந்து, உறு
விசைகொடு இலங்கை புகுந்து, அரும்தவர்...... களிகூர,
வெயில்
நிலவு உம்பரும் இம்பரும், படி
ஜெயஜெய என்று விடும் கொடுங்கணை
விறல் நிருதன் தலை சிந்தினன் திரு
...... மருகோனே!
அருகர்
கணங்கள் பிணங்கிடும்படி
மதுரையில் வெண்பொடியும் பரந்திட,
அரகர சங்கர என்று வென்று அருள் ......
புகழ்வேலா!
அறம்
வளர் சுந்தரி மைந்த! தண்டலை
வயல்கள் பொருந்திய சந்த வண்கரை
அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள்
......பெருமாளே.
பதவுரை
விரவி நெருங்கு --- தன்னுடன் கலந்து கூடி
நெருங்கி வந்த,
குரங்கு இனங்கொடு --- குரங்கின் கூட்டத்துடன்
சென்று,
மொகு மொகு எனும் கடலும் கடந்து --- மொகு மொகு
என்று ஒலிக்கின்ற கடலைக் கடந்து சென்று,
உறு விசை கொடு --- பொருந்திய வேகத்தோடு,
இலங்கை புகுந்து --- இலங்கைக்குள் நுழைந்து,
அரும் தவர் களிகூர --- அருமையான தவமுனிவர்கள்
மகிழ்ச்சி மிகுதியாக அடையும்படி,
வெயில் நிலவு உம்பரும் --- ஒளி பொருந்திய
தேவர்களும்,
இம்பரும் --- இந்த மண்ணுலகத்தோரும்,
படி --- பூமியில்,
ஜெய ஜெய என்று --- வெற்றி பெறுக வெற்றி பெறுக
என்று ஒலிக்க,
விடும் கொடும் கணை --- விடுத்த கொடிய
அம்பினால்,
விறல் நிருதன் தலை சிந்தினன் --- வீரமுள்ள
இராவணனுடைய தலைகளை அறுத்துத் தள்ளிய இராமருடைய,
திருமருகோனே --- திருமருகரே!
அருகர் கணங்கள் --- சமணருடைய கூட்டமானது,
பிணங்கிடும்படி --- மாறுபட்டு நிற்குமாறும்,
மதுரையில் --- மதுரைமா நகரில்,
வெண் பொடியும் பரந்திட --- திருநீறு பரவவும்,
அர அர சங்கர என்று --- அரஅர சங்கரா என்று
யாவரும் கூறவும்,
வென்று அருள் --- வெற்றி பெற்றருளிய,
புகழ் வேலா --- புகழ் பெற்ற வேலவரே!
அறம் வளர் சுந்தரி --- அறத்தை வளர்த்த
அழகியாகிய பார்வதி தேவியின்,
மைந்த --- குமாரரே!
தண்டலை --- குளிர்ந்த சோலைகளும்,
வயல்கள் பொருந்திய --- வயல்களும் பொருந்திய,
சந்த வண்கரை --- அழகிய வளப்பமான
நீர்க்கரைகளுள்ள,
அரிவை விலங்கலில் --- வள்ளிமலையில்,
வந்து உகந்து அருள் --- வந்து மகிழ்ச்சியுடன்
வீற்றிருக்கும்,
பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!
வரைவில் பொய் மங்கையர் தங்கள் --- பொய்மை
மிகுந்த பொது மாதர்கள்,
அஞ்சன விழியை உகந்தும் --- மையிட்ட கண்களில்
மகிழ்ந்தும்,
முகந்து கொண்டு --- அந்த இன்பத்தைப்
பருகியும்,
அடி வருடி --- அவர்களுடைய காலைத் தடவியும்,
நிதம்பம் அளைந்து --- அல்குலை அனுபவித்தும்,
தெந்தென அளி --- தெந்தென என்று ஒலிக்கும்
வண்டு,
காடை --- காடை என்ற பறவை,
மயில் --- மயில்,
குயில் --- குயில்,
அன்றில் எனும் புளின் --- அன்றில் என்ற
பறவைகளின்,
பல குரல் செய்து இருந்து --- பல ஒலிகளை
எழுப்பியிருந்து,
பின் உந்தி என்கிற மடுவில் விழுந்து கிடந்து
--- பின்னர் கொப்பூழ் என்ற மடுவில் விழுந்து கிடந்தும்,
செம் தழல் மெழுகு ஆகி --- சிவந்த நெருப்பில்
பட்ட மெழுகு போல் ஆகி,
உருகி --- உள்ளம் உருகியும்,
உகந்து --- மகிழ்ச்சியடைந்தும்,
இதழ் தின்று மென்று --- வாயிதழைத் தின்றும்
மென்றும்,
கை அடியின் நகங்கள் வரைந்து --- கையின்
அடியில் உள்ள நகங்களால் குறியிட்டும்,
குங்கும உபய தனங்கள் ததும்ப --- குங்குமம்
பூசப் பெற்ற இரு தனங்கள் பூரித்து அசைய,
அன்புடன் அணையா --- அன்போடு தழுவியும்,
மஞ்சு உலாவிய கொண்டை குலைந்து எழ --- அழகு
உலவிய கொண்டை அவிழ்ந்து அலைச்சல் அடைய,
அமளியில் --- படுக்கையில்,
மின் சொல் மருங்கு இலங்கிட --- மின்னல் என்று
சொல்லத் தக்க மெல்லிய இடை விளக்கந்தர,
உணர்வு அழி இன்பம் மறந்து --- நல்லுணர்வை அழிக்கின்ற
அந்த இன்பத்தை மறந்து,
நின்றனை நினைவேனோ --- தேவரீரை நினைக்க
மாட்டேனோ?
பொழிப்புரை
தன்னுடன் கலந்து கூடி நெருங்கி வந்த
குரங்குகளின் கூட்டத்துடன் சென்று,
மொகுமொகு
என்று முழங்குகின்ற கடலைக் கடந்து வேகமாக இலங்கையுள் நுழைந்து, அருமையான தவஞ் செய்யும் முனிவர் மிகுந்த
மகிழ்ச்சி அடையுமாறு, ஒளிமிகுந்த தேவரும் பூவுலக வாசிகளும், இம்மண்ணுலகில் ஜெய ஜெய என்று ஒலி செய்ய, கொடிய கணையை விடுத்து, வீரமுடைய இராவணனுடைய தலைகளை அறுத்த
இராமருடைய திருமகரே!
சமணருடைய கூட்டம் மாறுபட்டுக் கலங்கி
நிற்கவும், மதுரையம்பதியில்
திருநீறு பரவுமாறும், அர அர சங்கரா என்று
எங்கும் ஒலிக்கவும் வென்றருளிய புகழ்மிக்க வேலவரே!
அறம் வளர்த்த அழகியாம் பார்வதியின் பாலகரே!
சோலையும் வயல்களும் பொருந்திய, அழகிய வளமையான கரைகளுடன் கூடிய வள்ளிமலையின்
கண் வந்து மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே!
பொய் மிகுந்த பொது மாதர்களின் மை தீட்டிய
கண்களில் மகிழ்ந்தும், அந்த இன்பத்தைப்
பருகியும், அவர்கள் பாதத்தைப்
பிடித்துத் தடவியும் அல்குலை அநுபவித்தும், தெந்தென என்று ஒலிக்கும் வண்டு, காடை, மயில், குயில், அன்றில் என்ற பறவைகளின் பலவிதமான
குரல்களை எழுப்பியிருந்தும் கொப்பூழ் என்ற மடுவில் விழுந்து கிடந்தும், சிவந்த அழலில் பட்ட மெழுகு போல் உள்ளம்
உருகியும், களிப்புற்றும், வாய் இதழைத் தின்றும் மென்றும், கையில் உள்ள நகங்களால் குறி வைத்தும், குங்குமம் பூசிய இரு தனங்கள் பூரித்துக்
குலுங்க அன்புடன் தழுவி, அழகு உலவிய கூந்தல்
அவிழ்ந்து கலைந்திட படுக்கையில் மின்னலைப் போன்ற இடை விளங்க நல்லுணர்வை யழிக்கின்ற
அக்கலவி இன்பத்தை மறந்து தேவரீரை நினைக்க மாட்டேனோ?
விரிவுரை
இத்
திருப்புகழில் நான்கு அடிகளில் பொது மகளிரின் தன்மைகளைச் சுவாமிகள்
கூறுகின்றார்கள்.
வரைவு
இல் பொய் மங்கையர் ---
விலை
கொடுப்பார் யாவர்க்கும் தம் நலத்தை விற்பதல்லது, அதற்கு ஆவார் ஆகாதார் என்னும் வரைவு
இலாத மகளிர் வரைவின் மகளிர்.
வலைவில்
மகளிர் பற்றி இருக்குறளில் ஒரு அதிகாரத்தையே தந்து இருக்கின்றாரு திருவள்ளுவ நாயனார்.
இன்ப
மறந்து நின்றனை நினைவேனோ ---
இறைவனை
நினைப்பற நினைக்க வேண்டும். இறைவனை நினைந்தால் ஏனைய நினைவுகள் தாமே விலகும்.
உம்பரும்
இம்பரும் ---
உம்பர்-தேவர்கள்; இம்பர்-மனிதர்கள்.
“உம்பரும் இம்பரும் உய்யஅன்று
போனக மாகநஞ்சு உண்டல் பாடிப்
பொன்திருச் சுண்ணம் இடித்து நாமே” --- திருவாசகம்.
அருகர்
கணங்கள் பிணங்கிடும்படி, மதுரையில் வெண்பொடியும் பரந்திட, அரகர சங்கர என்று
வென்று அருள் புகழ்வேலா ---
இறைவனுக்கு
எம்மதமும் சம்மதமே. "விரிவிலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால்
சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்" என்பார் அப்பமூர்த்திகள்.
நதிகள்
வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல், சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று
பிணங்கி, முடிவில் ஒரே
இறைவனைப் போய் அடைகின்றன. ஒரு பாடசாலையில்
பல வகுப்புக்கள் இருப்பன போல், பல சமயங்கள், அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவங்கட்கேற்ப
வகுக்கப்பட்டன. ஒன்றை ஒன்று அழிக்கவோ
நிந்திக்கவோ கூடாது.
ஏழாம்
நூற்றாண்டில் இருந்த சமணர் இந்நெறியை விடுவித்து, நன்மையின்றி வன்மையுடன் சைவசமயத்தை
எதிர்த்தனர். திருநீறும் கண்டிகையும்
புனைந்த திருமாதவரைக் கண்டவுடன் "கண்டுமுட்டு" என்று நீராடுவர். "கண்டேன்" என்று ஒருவன் கூறக்
கேட்டவுடன் "கேட்டுமுட்டு" என்று மற்றொருவன் நீராடுவான். எத்துணை கொடுமை?. தங்கள் குழந்தைகளையும்
"பூச்சாண்டி" (விபூதி பூசும் ஆண்டி) வருகின்றான், "பூச்சுக்காரன்"
வருகின்றான் என்று அச்சுறுத்துவர். இப்படி பலப்பல அநீதிகளைச் செய்து வந்தனர். அவைகட்கெல்லாம்
சிகரமாக திருஞானசம்பந்தருடன் வந்த பதினாறாயிரம் அடியார்கள் கண்துயிலும்
திருமடத்தில் நள்ளிரவில் கொள்ளி வைத்தனர்.
இவ்வாறு
அறத்தினை விடுத்து, மறத்தினை அடுத்த
சமணர்கள், அனல்வாது, புனல்வாது புரிந்து, தோல்வி பெற்று, அரச நீதிப்படி வழுவேறிய அவர்கள் கழுவேறி
மாய்ந்தொழிந்தனர்.
அபர
சுப்ரமண்யம் திருஞானசம்பந்தராக வந்து, திருநீற்றால்
அமராடி, பரசமய நச்சு வேரை அகழ்ந்து, அருள் நெறியை நிலைநிறுத்தியது.
அறம்
வளர் சுந்தரி ---
காஞ்சீபுரத்தில்
காமாட்சியம்மை முப்பத்திரண்டு அறங்களைச் செய்தருளினார். அதனால் அம்பிகை அறம்
வளர்த்த நாயகி.
அரிவை
விலங்கல் ---
அரிவை
விலங்கல்-வள்ளிமலை.
கருத்துரை
வள்ளிமலை
மேவும் இறைவனே! உன்னை நினைக்க அருள் புரிவாய்
No comments:
Post a Comment