அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முல்லைக்கும் மாரன்
(வள்ளிமலை)
வள்ளிமலை நாதா!
தீயவர் தொடர்பு நீங்க
அருள்
தய்யத்த
தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த தான தந்த ...... தனதான
முல்லைக்கு
மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
பல்லுக்கும் வாடி யின்ப ...... முயலாநீள்
முள்ளுற்ற
கால்ம டிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து
பள்ளத்தில் வீழ்வ தன்றி ...... யொருஞான
எல்லைக்கு
மார ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்கு
மெல்லைக்கும் வாவி நின்ற ...... னருள்நாமம்
எள்ளற்கு
மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று
முள்ளப்பெ றாரி ணங்கை ...... யொழிவேனோ
அல்லைக்க
வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க
அல்லிக்கொள் மார்ப லங்கல் ...... புனைவோனே
அள்ளற்ப
டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
மெள்ளச்ச ரோரு கங்கள் ...... பயில்நாதா
வல்லைக்கு
மார கந்த தில்லைப்பு ராரி மைந்த
மல்லுப்பொ ராறி ரண்டு ...... புயவீரா
வள்ளிக்கு
ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
முல்லைக்கும், மாரன் அம் கை வில்லுக்கும், மாதர் தங்கள்
பல்லுக்கும் வாடி, இன்பம் ...... முயலா, நீள்
முள்
உற்ற கால் மடிந்து, கொள்ளிக்குள்
மூழ்கி வெந்து,
பள்ளத்தில் வீழ்வது அன்றி, ...... ஒருஞான
எல்லைக்கும், ஆரணங்கள் சொல்லித் தொழா வணங்கும்
எல்லைக்கும் வாவி நின்தன் ...... அருள்நாமம்,
எள்ளற்கும், மால் அயர்ந்து, உள்ளத்தில் ஆவ என்றும்,
உள்ளப் பெறார் இணங்கை ...... ஒழிவேனோ?
அல்லைக்கு
அ ஆனை தந்த வல்லிக்கு மார்பு இலங்க
அல்லிக் கொள் மார்பு அலங்கல் ......
புனைவோனே!
அள்ளல்
படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி,
மெள்ளச் சரோருகங்கள் ...... பயில்நாதா!
வல்லைக்
குமார! கந்த! தில்லைப் புராரி மைந்த!
மல்லுப் பொரு ஆறு இரண்டு ...... புயவீரா!
வள்ளிக்
குழாம் அடர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.
பதவுரை
அல்லைக்கு --- இரவில்,
அ ஆனை தந்த --- அந்த ஆனையாகிய கணபதி தந்து
உதவிய,
வல்லிக்கு --- வள்ளி பிராட்டிக்கு,
மார்பு இலங்க --- மார்பில் விளங்குமாறு,
அல்லிக் கொள் மார்பு அலங்கல் புனைவோனே --- தாமரை
மலர் மாலையை உமது மார்பிலிருந்து எடுத்துத் தரித்தவரே!
அள்ளல் படாத --- சேறு இல்லாத,
கங்கை வெள்ளத்து வாவி தங்கி --- கங்கையாற்றின்
சரவணப் பொய்கையில் தங்கி,
மெள்ள சரோகங்கள் பயில் நாதா --- மெள்ள
அங்குள்ள தாமரை மலர்களில் வீற்றிருந்த தலைவரே!
வல்லைக் குமார --- வல்லக்கோட்டையில்
வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!
கந்த --- கந்தப் பெருமானே!
தில்லை புராரி மைந்த --- தில்லை யம்பதியில்
உறைகின்றவரும், திரிபுரத்தை
எரித்தவருமான சிவ குமாரரே!
மல் பொரு ஆறு இரண்டுபுய வீரா --- மல் யுத்தஞ்
செய்யவல்ல பன்னிரு தோள்களையுடைய வீரமூர்த்தியே!
வள்ளி குழாம் அடர்ந்த --- வள்ளிக் கொடிகள்
மிகுந்துள்ள,
வள்ளிக் கல் மீது சென்று --- வள்ளிமலை மீது
சென்று,
வள்ளிக்கு வேடை கொண்ட --- வள்ளிபிராட்டி மீது
விருப்பங் கொண்ட,
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
முல்லைக்கும் --- முல்லை மலர்க் கணைக்கும்,
மாரன் அம் கை வில்லுக்கும் --- மன்மதனுடைய
அழகிய கரத்தில் இருக்குங் கரும்பு வில்லுக்கும்,
மாதர் தங்கள் பல்லுக்கும் வாடி --- மாதர்களின்
புன்சிரிப்புக்கும் வாட்டத்தையடைந்து,
இன்பம் முயலா --- இன்பத்தைப் பெற முயன்று,
நீள் முள் உற்ற கால் மடிந்து --- நீண்டமுள்
தைத்த கால் போல் மடங்கிக் கிடந்து,
கொள்ளிக்கு மூழ்கி வெந்த --- மோகத் தீயில்
உள்ளம் வெந்து,
பள்ளத்தில் வீழ்வது அன்றி --- பாவப்
படுகுழியில் வீழ்வதல்லாமல்,
ஒரு ஞான எல்லைக்கும் --- ஒப்பற்ற ஞான
எல்லையையும்,
ஆரணங்கள் சொல்லி தொழா வணங்கும் எல்லைக்கும்
--- வேத மந்திரங்களைக் கூறித் தொழுது வணங்கும் எல்லையையும்,
வாவி --- அணுகாது விலகித் தாண்டி,
நின் தன் அருள் நாமம் --- உமது அருள் தரும் திருநாமத்தை,
எள்ளற்கு மால் அயர்ந்து --- இகழ்ந்து
பேசுவதற்கு ஆசைகொண்டு,
உள்ளத்தில் ஆவ என்றும் உள்ள பெறார் --- தங்கள்
உள்ளத்தில் கடவுளே அபயம் என்னும் இரக்க வுணர்ச்சியை என்றும் எண்ணப் பெறாதவர்களான
தீயவர்களின்,
இணங்கை ஒழிவேனோ --- இணக்கத்தை அடியேன் விடமாட்டேனோ?
பொழிப்புரை
விநாயகப் பெருமான் யானையாக வந்து அச்சுறுத்த
இரவில் வள்ளியைக் கவர்ந்து, உமது மார்பில் தரித்த
தாமரை மலர் மாலையைப் புனைந்தவரே!
சேறு இல்லாத கங்கா நதியின் நீரினாலாய சரவணப்
பொய்கையில் தங்கி, தாமரை மலரில் மெல்ல
வீற்றிருந்தருளிய தலைவரே!
வல்லக்கோட்டை என்ற தலத்தில் வாழும் குமார
மூர்த்தியே!
கந்தக் கடவுளே!
தில்லையம்பதியில் இருக்கும் திரிபுரம் எரித்த
சிவமூர்த்தியின் புதல்வரே!
மற்போருக்கு உரிய பன்னிரு புயங்களையுடைய வீர
மூர்த்தியே!
வள்ளிக்கொடிகள் மிகுந்துள்ள வள்ளிமலையின் மீது
சென்று வள்ளிபிராட்டியார் மீது விருப்பங்கொண்ட பெருமிதமுடையவரே!
மன்மதனுடைய முல்லைக் கணைக்கும் கரும்பு
வில்லுக்கும் மாதர்கள் புன்னகைக்கும் வாடி இன்பத்தைப் பெற முயன்று நீண்ட முள்தைத்த
கால் போல் மடங்கிக் கிடந்து, காமத் தீயால் வெந்து, பாவப் படுபள்ளத்தில் வீழ்வதல்லாமல், ஒப்பற்ற ஞான எல்லையையும், வேத மந்திரத்தால் உம்மைத் தொழுது
வணங்கும் எல்லையையும் விலகித் தாண்டி, உமது
அருள் பாலிக்குந் திருப்பேரை இகழ்ந்து உள்ளத்தில் இரக்க உணர்ச்சியற்ற
கீழ்மக்களுடைய இணக்கத்தை அடியேன் விடமாட்டேனோ?
விரிவுரை
இத்திருப்புகழில்
தீயோர் இணக்கத்தை விடவேண்டும் என்று அடிகளார் முருகனிடம் முறையிடுகின்றார்.
முல்லைக்கு
---
முல்லை
மலர் மன்மதனுடைய கணை.
மாரன்அங்கை
வில்லுக்கும் ---
மாரன்-மன்மதங்
கரும்பு வில்லால் மக்களின் மனதில் விருப்பத்தை விளைவிப்பவன்.
மாதர்
தங்கள் பல்லுக்கும் ---
பொதுமகளிர்
பல்லைக்காட்டி நகைத்து மயக்குவர்.
வாடி
இன்பம் முயலா ---
காம
வேட்கையால் மனிதர் வாட்டத்தை யடைந்து மீட்டும்மீட்டும் சிறிய இன்பத்தையே
பெறுவதற்கு முயன்று துன்புறுவர்.
நீள்
முள் உற்ற கால் மடிந்து ---
நீண்ட
முள் தைத்த கால்போல் மடிந்து ஒடிந்து வேதனைப் படுவார்.
கொள்ளிக்குள்
மூழ்கி வெந்து ---
காமாக்கினியால்
உள்ளமும் உண்ர்வும் வெந்து துன்புறுவர்.
நெருப்பு
நெருங்கியவரை மட்டுமே சுடவல்லது. காமத் தீ நீருள் குளிப்பினும் சுடும். குன்றேறி
ஒளிப்பினும் சுடும். நெருப்பு உடம்பை மட்டுமே சுடவல்லது. காமத்தீ உள்ளம் உணர்வு
உயிர் முதலிய அனைத்தையும் சுடுங் கொடுமையது.
பள்ளத்தில்
வீழ்வது அன்றி ---
ஆசை
வயப்பட்டோர் பாவப் படுகுழியில் வீழ்ந்து பதை பதைப்பார்கள். அதினின்றும் ஏறுவது
அரிது.
ஒரு
ஞான எல்லைக்கும் ---
ஒப்பற்ற
சிவஞானம் ஒன்றே முடிவாக நின்று ஆன்மாக்களுக்கு இன்ப எல்லையாக இருந்து அருள் செய்ய
வல்லது.
ஆரணங்கள்
சொல்லித் தொழாவணங்கும் எல்லைக்கும் வாவி ---
வாவுதல்-தாண்டுதல்.
பெரியோர்கள்
வேத மந்திரங்களைக் கூறி இறிஅவனைத் தொழுது வணங்குவார்கள்.
தொழுவது-கரங்களால்.
வணங்குவது-தலையால்.
“கைகாள் கூப்பித் தொழீர்”
“தலையே நீ வணங்காய்” --- அப்பர்.
“வணங்கத் தலை வைத்து” --- மாணிக்கவாசகர்.
இந்த
அருள் நெறியைத் தாண்டிச் செல்வர் கீழ்மக்கள்.
“தவநெறி தனை விடு தாண்டு காலியை” --- (தரையினில்)
திருப்புகழ்.
அருள்
நாமம் எள்ளற்கு மால் அயர்ந்து ---
கீழோர்
இறைவனுடைய அருள் நாமத்தை இகழ்ந்து இடர்ப்படுவர்.
இணங்கை
ஒழிவேனோ ---
இத்தகைய
மூடர்களது சேர்க்கையை அறவே ஒழிக்க வேண்டும்.
“கண்ஆவா ரேனும்உனைக் கைத்தொழார் ஆயின்,
அந்த
மண்ணாவார் நட்பை மதியேன் பராபரமே” --- தாயுமானார்.
அல்லைக்கு
அ ஆனை தந்த வல்லிக்கு ---
அல்லைக்கு
அ ஆனை தந்த வள்ளி.
இரவில்
சென்று, விநாயகர் யானை வடிவாக
வந்து அச்சுறுத்த அபயம் புகுந்த வள்ளியை முருகவேள் மாலையிட்டு மனம்
புரிந்தருளினார்.
மெள்ளச்
சரோருகங்கள் பயில் நாதா ---
சரவணப்
பொய்கை கங்கையாற்றின் ஒரு புடை விளங்குவது.
பொய்கை-இயற்கையாய் அமைந்த
நீர்நிலை.
தடாகம்-செயற்கையாகத்
தடுத்து உண்டாக்கியது.
கங்கையாறு
சேறில்லாதது. ஆதலால் “அள்ளற்படாத கங்கை” என்றார்.
தெய்வீகமாய
சரவணப் பொய்கையில் எம்பிரான் தெய்வத் தாமரை மலர்மீது எழுந்தருளினார்.
“வெறிகமழ் கமலப் போதில்
வீற்றிருந்தருளினானே” --- கந்தபுராணம்.
“உதயரவி வர்க்க நிகர் வனகிரண விர்த்தவிதம்
உடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனும்” --- வேடிச்சி காவலன் வகுப்பு.
வல்லைக்
குமார ---
வல்லக்கோட்டை
என்ற திருத்தலம். கோடை நகர் என விளங்குகின்றது.
இது
சிங்கப்பெருமாள் கொயிலுக்கு வடமேற்கில் 10
கல் தொலைவில் உள்ள அருமையான திருத்தலம்.
மல்லுப்
பொரு ஆறிரண்டு புயவீரா ---
இறைவனுடைய
புயம் வீரம் நிறைந்தது. அதனால் “ஆரிருதடந்தோள் வாழ்க” என்றார் கச்சியப்பர்.
“எதிர்படு நெடிய
தருவடு பெரிய கடாம்உமிழ்
நாகமேகம் இடிபட மல்பொரு
திண்சிலம்பு அடங்க மோதிப் பிடுங்கின “
“அநுபவன் அநகன் அனனியன்
அமலன் அமோகனன்
அநேகன் ஏகன் அபிநவன் நித்தியன்
அஞ்சல்என் ப்ரசண்ட வாகைப்புயங்களே” --- புயவகுப்பு.
கருத்துரை
வள்ளிமலை அப்பனே!
தீயவர் நட்பு தீர அருள் செய்வீர்.
No comments:
Post a Comment