அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
காமியத் தழுந்தி
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
பிரணவ மந்திரத்தைத்
தியானித்து,
ஓவியம் போல் அசைவற்று
இருந்து, அருள் பெற அருள்.
தானனத்
தனந்த ...... தனதான
தானனத் தனந்த ...... தனதான
காமியத்
தழுந்தி ...... யிளையாதே
காலர்கைப் படிந்து ...... மடியாதே
ஓமெழுத்தி
லன்பு ...... மிகவூறி
ஓவியத்தி லந்த ...... மருள்வாயே
தூமமெய்க்
கணிந்த ...... சுகலீலா
சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா
ஏமவெற்
புயர்ந்த ...... மயில்வீரா
ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
காமியத்து
அழுந்தி ...... இளையாதே
காலர்கைப் படிந்து ...... மடியாதே
ஓம்
எழுத்தில் அன்பு ...... மிகஊறி
ஓவியத்தில் அந்தம் ...... அருள்வாயே
தூமம்
மெய்க்கு அணிந்த ...... சுகலீலா!
சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா!
ஏம
வெற்பு உயர்ந்த ...... மயில்வீரா!
ஏரகத்து அமர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
தூமம் மெய்க்கு அணிந்த சுகலீலா ---
நறும்புகை திருமேனியிற் படியும்படி செய்து உயிர்கள் இன்புறும்பொருட்டு
திருவிளையாடல் புரிபவரே!
சூரனைக் கடிந்த கதிர்வேலா ---
சூரபன்மனைத் தண்டித்த ஒளிவீசும் வேற்படையையுடையவரே!
ஏம வெற்பு உயர்ந்த மயில் வீரா --- பொன்
மலையாகிய மேருகிரியைப் போல உயர்ந்துள்ள மயில்வாகனத்தில் எழுந்தருளிவரும் வீரரே!
ஏரகத்து அமர்ந்த பெருமாளே --- சுவாமி
மலையில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் பெருமையின் மிக்கவரே!
காமியத்து அழுந்தி இளையாதே --- பயன்
கருதிச் செய்யும் கிரியை பக்தி இவைகளில் மனம் அழுந்தி இளைக்காமலும்,
காலர் கை படிந்து மடியாதே --- இமயதூதர்கள்
கையிற் சிக்குண்டு அவமே இறந்து படாமலும்
ஓம் எழுத்தில் அன்புமிக ஊறி --- ஓம் என்ற
பிரணவ மந்திரத்தில் மிகுந்த அன்பைப் பெருக்கி,
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே ---
சித்திரம்போல் அசைவற்றிருக்கும் முடிவை(அடியேனுக்கு) அருள் புரிவீர்.
பொழிப்புரை
திருமேனியில் நறும்புகை படியும்படிச் செய்து
உயிர்கள் இன்புறும் பொருட்டு திருவிளையாடல் புரிபவரே!
சூரபன்மனைத் தண்டித்து அடக்கிய ஒளிவீசும் வேற்படையையுடைவரே!
மேருகிரி போல் உயர்ந்து பொற்பிரகாசமாகிய
மயில் மீது ஊர்ந்து வருகின்ற வீரரே!
திருவேரகமென்கின்ற சுவாமி மலையில்
எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!
பயன் கருதிச் செய்யும் கிரியை முதலியவற்றில்
மனம் அழுந்தி இளைக்காமலும்,
காலன் கையிற் சிக்குண்டு வீணே மடிந்து
போகாமலும்,
பிரணவ மந்திரத்தில் மிகுந்த அன்பு பூண்டு, அம்மந்திரத்தை மானசிகமாக நினைந்து, ஓவியம் போல் அசைவற்று இருக்கும் முடிந்த
முடிவை (அடியேனுக்கு) அருள் புரிவீர்.
விரிவுரை
காமியத்து
அழுந்தி இளையாதே ---
காமியம்-பயன்
கருதிச் செய்வது; இறைவழிபாடு இறையன்பு
முதலியவற்றைப் பயன் கருதிச் செய்வது உயர்ந்த லட்சியமாகாது. செல்வம் வேண்டுமென்றும்
பதவி வேண்டுமென்றும், உத்யோகம்
வேண்டுமென்றும், இப்படிப் பலவகையான
பயன் பருதி கோவிலுக்குப் போய் கும்பிடுகின்றார்கள். எந்ந எந்தப் பயனைக்
கருதுகின்றார்களோ அந்த அந்தப் பயனை இறைவன் தருகின்றனன். ஆனால், அந்தப் பயனுடன் அது நின்று விடுகின்றது.
இறைவன் திருவருளை நாடி வழிபட்டால் அத்திருவருளால் எல்லா நலன்களும் எய்தும்; இம்மையிலும், மறுமையில் இன்புற்று இனிப் பிறவா நலமும்
உண்டாகும்.
ஒரு
சிறந்த மாமரத்தைப் பயிர் செய்வது உயர்ந்த மாங்கனியைப் பெறும் பொருட்டேயன்றோ? பழத்தை விரும்பி அல்லவா அதனைப் பயிர்
செய்தல் வேண்டும். பல் குச்சு வேண்டுமென்றும், இலை வேண்டுமென்றும் மாமரத்தை வளர்ப்பது
அறிவுடைமையாகுமோ? பழம் வேண்டுமென்ற
பெருநோக்கத்தோடு பயிர் செய்யின் ஏனைய சிறு பயன்கள் தானே கிடைக்குமன்றோ? ஆதலால் யாதொரு பயனையும் வேண்டாமல்
பெருமானை நிஷ்காம்யமாக வழிபாடு செய்ய வேண்டும்.
காலர்
கைப் படிந்து மடியாதே ---
நிஷ்காம்ய
பக்திசெய்வார் காலர் வசப்படமாட்டார்.
ஓம்
எழுத்தில் அன்பு மிகஊறி...............அருள்வாயே ---
“ஓம்” என்ற எழுத்தே
சூக்கும சடக்கரமாம். ஆறெழுத்தும் அதில் அடங்கியுள்ளது. “ஓரெழுத்தில் ஆறெழுத்தை
ஓதுவித்த பெருமாளே” என்ற திருவாக்கால் தெளிக.
இப்பிரணவ
மந்திரத்தை மிகுந்த அன்பு பூண்டு,
தியானித்து, ஓவியம்போல் அசைவற்று விளங்கும் தன்மையே
முடிவு. அதனை அடியேனுக்கு அருள வேண்டுமென்பது இத்திருப்புகழால் போதருகின்றது.
கருத்துரை
இன்பத்தை
விளைவிப்பவரே! வேலாயுதரே! மயில் வீரரே! திருவேரகரே! காலர் கைப்படாமல், நிஷ்காம்ய பக்தியுடன் பிரணவ
மந்திரத்தைத் தியானித்து அசைவற்றிருக்க அருள்புரிவீர்.
No comments:
Post a Comment