அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குமரகுருபர முருக
குகனே (சுவாமிமலை)
சுவாமிநாதா!
பொதுமகளிர் வசமாகி
அழியாமல்,
உமது திருவடியைத் துதித்து உய்ய அருள்.
தனதனன
தனதனன தனனா தனத்ததன
தனதனன தனதனன தனனா தனத்ததன
தனதனன தனதனன தனனா தனத்ததன ...... தனதான
குமரகுரு
பரமுருக குகனே குறச்சிறுமி
கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்
குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு ......முருகாதே
குயில்மமொழிநன்
மடவியர்கள் விழியா லுருக்குபவர்
தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை
கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க
....ளனைவோரும்
தமதுவச
முறவசிய முகமே மினுக்கியர்கள்
முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள்
தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண்
...... வலையாலே
சதிசெய்தவ
ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்
வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில்
தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் ......தருவாயே
சமரமொடு
மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு
தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி
தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு
......செருமீதே
தவனமொடு
மலகைநட மிடவீ ரபத்திரர்க
ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய்
தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள்
...... பலகோடி
திமிதமிட
நரிகொடிகள் கழுகா டரத்தவெறி
வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு
திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு
...... முருகோனே
திருமருவு
புயனயனொ டயிரா வதக்குரிசி
லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர்
சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
குமர!
குருபர! முருக! குகனே! குறச்சிறுமி
கணவ! சரவண! நிருதர் கலகா! பிறைச்சடையர்
குரு என நல் உரை உதவு மயிலா! எனத் தினமும்.... உருகாதே,
குயில்மொழி
நன் மடவியர்கள், விழியால் உருக்குபவர்,
தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர், நகை
கொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள்
.....அனைவோரும்
தமது
வசம் உற வசிய முகமே மினுக்கியர்கள்,
முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள்,
தனம் இலியர் மனம் முறிய நழுவா உழப்பியர், கண் ...... வலையாலே
சதிசெய்து, அவர் அவர் மகிழ அணை மீது உருக்கியர்கள்,
வசம் ஒழுகி, அவர் அடிமை என, மாதர் இட்ட தொழில்
தனில் உழலும் அசடனை, உன் அடியே வழுத்த அருள் ......தருவாயே.
சமரமொடும்
அசுரர் படை களமீது எதிர்த்த பொழுது,
ஒரு நொடியில் அவர்கள் படை கெட, வேல் எடுத்து, அவனி
தனில் நிருதர் சிரம் உருள ரணதூள்
படுத்திவிடு ...... செருமீதே
தவனமொடும்
அலகை நடம் இட, வீரபத்திரர்கள்
அதிர, நிணமொடு குருதி குடி காளி கொக்கரி செய்
தசை உணவு தனின் மகிழ விடுபேய் நிரைத் திரள்கள்
...... பலகோடி
திமிதம்
இட, நரிகொடிகள் கழுகு ஆட, ரத்தவெறி
வயிரவர்கள் சுழல, ஒரு தனி ஆயுதத்தை விடு
திமிர தினகர! அமரர் பதிவாழ்வு பெற்று உலவு ......முருகோனே!
திருமருவு
புயன் அயனொடு அயிராவதக் குரிசில்
அடிபரவு பழநிமலை கதிர்காமம் உற்றுவளர்
சிவசமய அறுமுகவ! திரு ஏரகத்தில் உறை ......
பெருமாளே.
பதவுரை
சமரமொடும் அசுரர் படை களமீது எதிர்த்த
பொழுது --- போர் புரியும் ஊக்கமுடன் இராக்கதருடைய சேனைகள் போர்க்களத்தில் தேவரீரை
எதிர்த்த காலத்தில்,
ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து ---
ஒரு நொடிப் பொழுதுக்குள் அந்த அசுர சேனைகள் அழிந்து போகுமாறு வேலாயுதத்தைத்
திருக்கரத்தில் எடுத்து,
நிருதர் சிரம் அவனிதனில் உருள ரணம்
தூள்படுத்தி விடு --- அசுரர்களுடைய தலைகள் அற்று பூமியின்கண் விழுந்து உருளுமாறு அப்பகைவரைப்
பொடி செய்த,
செருமீதே அலகை தவனம் ஒடு நடம் இட வீரபத்திரர்கள்
அதிர --- போர்க்களத்தில் பேய்கள் (புலால் உணவில்) ஆசையுடன் கூத்தாடவும், வீரபத்திரர்கள்
ஆரவாரஞ் செய்யவும்,
நிணம் ஒடு குருதி குடி காளி தசை உணவு தனில்
மகிழவிடு --- நிணங்களையுண்டு உதிரத்தைக் குடிக்கின்ற காளிதேவியானவள் இறந்து பட்ட
அசுரருடம்பின் தசைகளாகிய உணவை உண்டு மகிழுமாறு ஏவப்பட்ட,
கொக்கரி செய் பேய் நிரைத் திரள்கள் பல கோடி திமிதம்
இட --- கெர்ச்சிகின்ற பேய்களின்
வரிசையாகவுள்ள கூட்டங்கள்,
அநேக
கோடிகள் பேரொலி யுண்டாகும்படி மகிழ்ச்சியினால் கூத்தாடவும்,
நரி கொடிகள் கழுகு ஆட --- நரிகளும், காக்கைகளும், - கழுகுகளும் நிர்த்தனம் செய்யவும்,
ரத்த வெறி வயிரவர்கள் சுழல --- உதிரத்தைக்
குடித்ததினால் வெறி கொண்டவயிரவர்கள் சுழன்று ஆடவும்,
ஒரு தனி ஆயுதத்தை விடும் திமிர தினகர ---
இணையற்ற சிறந்த படைக்கலத்தை விடுத்தருளிய அஞ்ஞான இருளை நீக்கும் மெய்ஞ்ஞான பானுவே!
அமரர் பதிவாழ்வு பெற்று உலவு முருகோனே ---
மாலயனாதி தேவர்களுக்கெல்லாம் தலைமையாகிய தகைமையை மேற்கொண்டு உயிர்கள் தோறும்
நின்று உலவுகின்ற முருகக்கடவுளே!
திருமருவு புயன் அயனோடு அயிராவதக்
குரிசில் அடி பரவு --- இலக்குமி தேவியைத் தழுவுகின்ற தோள்களையுடைய திருமாலும் பிரமதேவனும், ஐராவதம் என்ற வெள்ளையானை மேல் ஊர்கின்ற
தேவர் கோமானும் தேவரீருடைய திருவடியைத் துதித்து நிற்கின்ற,
பழநிமலை, கதிர்காமம் உற்று வளர் சிவ சமய ---
பழநியம்பதியிலும், கதிர் காமம் என்னும்
திருத்தலத்திலும் பொருந்தியிருந்து வளர்கின்ற சைவ சமய நாயகரே!
அறுமுகவ --- ஆறு திருமுகங்களை உடையவரே!
திருஏரகத்தில் உறை பெருமாளே ---
திருவேரகம் என்ற திருப்பதியில் அடியார் பொருட்டு வாழ்கின்ற பெருமையின் மிக்கவரே!
குமர --- குமாரக் கடவுளே!
குருபர --- சிறந்த குருநாதரே!
முருக --- முருகவேளே!
குகனே --- குக மூர்த்தியே!
குறச் சிறுமி கணவ --- குறவர் குடியிற்
பிறந்த இளமைப் பருவமுடைய வள்ளியம்மையாரது மணாளரே!
சரவண --- சரவண தடாகத்தில் தோன்றியவரே!
நிருதர் கலகா --- இராக்கதர்களுக்குக்
குழப்பத்தைச் செய்தவரே!
பிறை சடையர் குரு என நல் உரை உதவும் அயிலா
--- இளந்திங்களை முடித்த சிவபெருமானுக்கு குருமூர்த்தியென்று உலகம் புகழுமாறு “ஓம்”
என்ற ஒரு மொழிக்குப் பொருள் கூறிய ஞானமாகிய வேலையுடையவரே!
என தினமும் உருகாது - என்று நாள் தோறும்
துதித்து, மனம் உருகாமல்,
நல் குயில்மொழி மடவியர்கள் --- நல்ல
குயிலைப்போல் இனிமையாகப் பேசும் பெண்களும்,
விழியால் உருக்குபவர் --- கண்களினால் ஆடவரை
உருகச் செய்பவரும்,
அனவரதம் தெருவில் அனம் எனவே நடப்பர் ---
நாள்தோறும் தெருவில் (நாணமின்றி) அன்னத்தைப் போல் நடப்பவர்களும்,
நகைகொளும் அவர்கள் உடைமை மனம் உடனே
பறிப்பவர்கள் --- தங்களைக் கண்டு மகிழ்ந்து நகைக்கும் ஆடவர்களுடைய செல்வம், மனம் என்ற இரண்டையும் அக்கணத்திலேயே
கொள்ளை கொள்பவர்களும்,
அனைவோரும் தமது வசம் உற வசிய முகமே மினுக்கியர்கள்
--- எல்லாரும் தங்கள் வசப்படுமாறு மனதைக் கவரச் செய்கின்ற முகத்தை மட்டும்
அடிக்கடி கழுவி அழகு செய்பவரும்,
முலையில் உறு துகில் சரிய நடுவீதி
நிற்பவர்கள் --- தனங்களின் மேலுள்ள ஆடைச் சரிந்து (அங்கம் சிறிது தெரியுமாறு) நடுத்தெருவில்
நாணமின்றி நிற்பவர்களும்,
தனம் இலியர் மனம் முறிய நழுவா உழப்பியர் ---
செல்வமில்லாத வறியவர்கள், “இவர்கட்குப்
பணந்தருவதற்கு இல்லையே" என்று மனம் ஒடிய நழுவி அவர்கள் உள்ளத்தைக்
கலக்குகின்றவரும்,
கண் வலையாலே சதி செய்து அவரவர் மகிழ அணை மீது
உருக்கியர்கள் --- கண்ணாகிய வலையை வீசி வஞ்சனையைச் செய்து, தங்களிடம் வரும் ஆடவர் அனைவரும் தம்மையே
இவள் நேசிப்பதாக எண்ணி உள்ளம் மகிழுமாறு, பஞ்சணைச்
சயனத்தின்மீது அவ் ஆடவரை அழல் இடை மெழுகு போல் காமத் தீயால் உருகப்
பண்ணுபவர்களுமாகிய விலைமகளிரிடத்தில்,
வசம் ஒழுகி அவர் அடிமையென மாதர் இட்ட தொழில்தனில்
உழலும் அசடனை --- கீழ்படிந்து ஒழுகி, அப்பொது மாதர்கட்கு அடிமையாகி, அப்பெண்கள் ஏவிய ஏவல்
தொழில்களைச் செய்து அங்கும் இங்கும் சுற்றித் திரிகின்ற, அறிவில்லாத உன் அடியேனை,
அடியே வழுத்த அருள்வாயே --- தேவரீரது
திருவடித் தாமரைகளையே துதித்து உய்யுமாறு, ஆண்டருள் புரிவீர்.
பொழிப்புரை
போரில் ஊக்கமுடன் அசுர சேனைகள்
போர்க்களத்தில் எதிர்த்தபோது, ஒரு நொடிப்
பொழுதுக்குள் அவ் அசுரசேனை அழியுமாறு வேற்படையைத் திருக்கரத்தில் எடுத்து, அசுரர் தலைகள் யாவும் அற்றுப் பூமியில்
உருளுமாறு பகைவரைப் பொடிப்படுத்திய செருக்களத்தில் பேய்கள் புலையுணவின்
விருப்பத்தால் கூத்தாடவும், வீரபத்திரர்கள்
ஆரவாரிக்கவும், நிணங்களை யுண்டு
உதிரத்தைக் குடிக்கும் காளியானவள்,
இறந்துபட்ட
அசுரர்களது தசைகளை உண்டு மகிழ்ச்சியுறுமாறு ஏவப்பட்ட, கெர்ச்சிக்கின்ற பலகோடிப் பேய்களின்
வரிசையாக வுள்ள கூட்டங்கள் பேரிரைச்சலும் ஆடலும், நரிகளும், காக்கைகளும், கழுகுகளும், கூத்தாடவும், உதிர வெறிக்கொண்ட வயிரவர்கள் சுழன்று
ஆடவும், ஒப்பற்ற சர்வசங்காரப்
படையை விடுத்தருளிய அஞ்ஞான இருளை யகற்றும் மெய்ஞ்ஞான மார்த்தாண்டரே! மாலயனாதி
வானவர்கள் சேனைகளாக அவர்கட்குத் தலைமை பூண்டு உயிர்கள் தோறும் நின்று உலவிவருகின்ற
முருகக் கடவுளே!
திருமகளைத் தழுவும் திருமாலும், பிரமதேவரும், ஐராவத ஊர்தி உடைய இந்திரனும் தேவரீருடைய
திருவடியைப் புகழ்ந்து துதித்து நிற்கின்ற பழநியம்பதியிலும், கதிர்காமத்திலும் மேவி வளர்கின்ற
சிவசமயச் செல்வமே!
ஆறுமுகத்தரசே!
திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள
பெருமிதமுடையவரே!
குமாரக் கடவுளே! குருபரரே!
முருகப்பெருமானே! குகமூர்த்தியே! வள்ளிமணவாளரே! சரவணபவரே! நிருதர் குலகால!
பிறைமுடிப் பெருமானாகிய சிவமூர்த்திக்குக் குருவென்று உலகம் புகழ் “ஓம்” என்னும்
முதலகரத்திற்குப் பொருள் விரித்துரைத்த ஞானசக்திதரரே! என்று வாயாரத் துதித்து
நெஞ்சார நினைத்து உள்ளம் உருகாமற்படிக்கு, குயிலைப்போல் இனிமையாகப் பேசுகின்ற
பெண்களும், கண்களால் ஆடவருடைய
மனத்தை உருக்குபவரும், நாள்தோறும் தெருவில்
நாணமின்றி அன்னத்தைப்போல் (பலர் கண்டு காமுறும் பொருட்டு) நடப்பவரும், தங்களைக் கண்டு மகிழ்ந்து நகைக்கும்
ஆடவர்களுடைய செல்வத்தையும் மனத்தையும், உடனே
பறிமுதல் செய்பவரும், எல்லோரும் தங்கள்
வசப்படுமாறு மனத்தைக் கவர்கின்ற தங்கள் முகத்தை அடிக்கடி கழுவி மினுக்குபவரும், தனங்கள் சிறிது தெரியுமாறு அவைகளின்
மேலுள்ள சீலை விலக நடுத்தெருவில் நிற்பவர்களும், பொருள் தருவதற்கு இயலாத ஏழைகள் தங்களைக்
கண்டு மயலுற்று “பொருளின்மையால் இவர்களைப் பொருந்துதற்கில்லையே” என்று மனம்
ஒடியுமாறு நழுவி அவர்கள் மனத்தைக் கலக்குபவரும், கண்வலையை வீசி வஞ்சனையைச் செய்து, தங்களை நாடிவரும் அவ்வளவு பேரும்
தன்னையே இவள் நேசிக்கின்றாள் என்று மகிழுமாறு பஞ்சணைப் படுக்கையின் மேல் அவர்களை
அழலிடை மெழுகைப் போல் உருகச் செய்பவருமாகிய விலைமாதர்களின் வசமாகி, தீய ஒழுக்கத்தில் ஒழுகி, அம்மாதர்கட்கு அடிமையாகி, அவர்கள் ஏவுகின்ற ஏவலைச் செய்துகொண்டு
இங்குமங்குமாகச் சுழன்று திரிகின்ற அறிவிலியாகிய அடியேனை, தேவரீருடையத் திருவடியையே துதித்து
உய்யுமாறு ஆண்டருள்புரிவீர்.
விரிவுரை
குமர ---
“குமார” என்பது அருமை
மந்திரம். நாதா குமரா நம என்று அரனார் ஓதிய
மந்திரம்.
சரவணம் ---
சரம்-நாணல்.
வனம்-காடு. நாணற்காடு.
வடமொழி
விதிப்படி வன என்பது வண என்றாயிற்று. நாணற்காடுடன் கூடிய பொய்கையில் தோன்றியதால்
முருகவேளுக்கு ‘சரவணபவன்‘ என்ற திருநாமம் ஏற்பட்டது.
அயிலா ---
அயில்-கூர்மை.
ஆகுபெயராக வேலை உணர்த்துகின்றது. “உரையுதவும் மயிலா” எனவுங் கொள்ளலாம். அது
சிறப்புறாது. குமரன்; குருபரன்; முருகன்; குகன்; குறச்சிறுமி கணவன்; சரவணன்; நிருதர் கலகன்; பிறைச் சடையர் குருவென நல்லுரையுதவும்
அயிலன்; என்ற எட்டுத்
திருநாமங்களும், இறைவனுடைய எண்
குணங்களை உணர்த்துகின்றன.
(1) குமரன்: என்றும் இளமையாக இருப்பவர். இது
‘தன்வயத்தனாதல்‘.
(2) குருபரன்: அவருக்கொரு
குருமூர்த்தியின்றித் தானே யாவர்க்கும் குருபரனாக விளங்குபவர். இது
‘இயற்கையுணர்வினனாதல்‘.
(3) முருகன்: பிறவா இறவாப் பெற்றியுடையவன்.
இது ‘தூயவுடம்பினனாதல்‘.
(4) குகன்: ஆன்மாக்களுடைய இதயக் கமலத்தில்
பரம கருணையினால் வீற்றிருப்பவன். இது ‘பேரருளுடைமை‘.
(5) குறச்சிறுமி கணவன்: உயிர்கட்கு இன்பத்தை
விளைவிக்கும் பொருட்டு இறைவன் இன்ப சக்தியுடன் ஒன்றியுளன். இது
‘வரம்பிலின்பமுடைமை‘.
(6) சரவணன்: தானேயொரு தனி முதலாகத்
திகழ்பவன். இது ‘இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல்‘.
(7) நிருதர் கலகன்: அலகிலா அவுணரை
யழித்தவன். இது ‘முடிவிலாற்றலுடைமை‘.
(8) பிறைச் சடையர் குருவென நல்லுரை யுதவும்
அயிலன்; சிவகுருவாகிய
ஞானசக்திதரன். இது `முற்றுமுணர்தல்‘.
“பொருபுங் கவரும்
புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே”
குமரன்
என்றதனால் இளம்பூரணனாகவும்,
குருபரன்
என்றதனால் குருமூர்த்தியாகவும்,
முருகன்
என்றதனால் தெய்வத் தன்மையனாகவும்,
குகன்
என்றதனால் சர்வாந்தரியாமியாகவும்,
குறச்சிறுமி
கணவன் என்றதனால் யோக மூர்த்தியாகவும்,
நிருதர்
கலகன் என்றதனால் வீரமூர்த்தியாகவும்,
குருவென
நல்லுரை உதவும் அயிலன் என்றதனால் ஞான மூர்த்தியாகவும்,
எந்தைக்
கந்தவேள் விளங்குகின்றார் என்று உணர்க.
தினமும்
உருகாதோ:-
மேற்
கூறிய திருநாமங்களை நாவாரச் சொல்லித் துதித்து நாள்தோறும் உருகவேண்டும்.
“முருகன் குமரன்
குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்” ---
கந்தர்அநுபூதி
இறைவனுடைய
திருநாமங்களைச் சொல்லி உருகுவாருடைய இருவினை இருளை எம்பெருமான் அகற்றுகின்றான்.
“உருகும் அடியவர்
இருவினை இருள்பொரும்
உதய தினகர இமகரன் வலம்வரும்
உலக முழுதொரு நொடியினில் வலம்வரு பெருமாளே” --- (பகிர) திருப்புகழ்
இறைவனை
நினைந்து உருகுவதே உய்யு நெறியாம். இவ்வாறு உருகாமல், “மாதரிட்ட தொழில்தனில் உருகும்
அசடனாயினேன்” என்று உளங் கவல்கின்றனர் நம் அருணையடிகள்.
4-வது வரி முதல் 10-வது வரிவரை பொது மகளிர் இளைஞரை மயக்குதற்குப்
புரியும் சாகசங்களை உணர்த்துகின்றது.
13-வது வரி முதல் 21-வது வரிவரை முருகவேள் அசுரவதம் செய்த
அற்புதத்தை உணர்த்துகின்றது.
கருத்துரை
அசுரகுலாந்தக!
முருகவேளே! திருவேரகத் தெய்வமே! பொது மகளிர் வலைப்பட்டு அழியாமல் தேவரீரது
திருநாமங்களைச் சொல்லித் துதித்து உருகும் வண்ணம் அருள் புரிவீர்.
No comments:
Post a Comment