திருக் கடைமுடி




திருக் கடைமுடி
(கீழையூர், கீழூர்)

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

         மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மேலப்பாதியைக் கடந்து பூம்புகாருக்கு முன்னால் உள்ள கீழையூரில் இத்தலம் அமைந்துள்ளது.

     கீழையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

     மயிலாடுதுறை - பொறையார் சாலையிலுள்ள மற்றொரு பாடல் பெற்ற திருத்தலமான திருசெம்பொனார்கோவிலில் (காவிரி தென்கரைத் தலம்) இருந்து திருநனிபள்ளி (புஞ்சை) வழியாகவும் இத்தலத்திற்கு செல்லலாம்.


இறைவர்                  : கடைமுடிநாதர்,  அந்திசம்ரட்சணேசுவரர்.

இறைவியார்               : அபிராமி.

தல மரம்                   : கிளுவை

தீர்த்தம்                    : கருணாதீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - அருத்தனை அறவனை

         பிரம்மா இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து இங்கு இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு பிரம்ம தீர்த்தம் எனப் பெயரிட்டு அப்புனித நீரால் இறைவனை வழி பட்டுள்ளார். இந்த பிரம்ம தீர்த்தம் ஆலயத்தின் நேர் எதிரில் அழகுற விசாலமாக அமைந்துள்ளது. மகிழ்ந்த சிவன், அவருக்கு இங்கிருந்த கிளுவை மரத்தடியில் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார்.

     கண்வ மகரிஷியும் (சகுந்தலையின் வளர்ப்புத்தந்தை) இத்தல இறைவனை வழிபட்டு தன் புண்ணிய பலன்களைப் பெருக்கிக் கொண்டார் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இவர் காவிரியில் நீராடி வழிபட்ட இடம் இன்று கண்வமகான் துறை என்ற காரணப் பெயர் கொண்டு வளங்குகிறது. இத்தல இறைவன் கடைமுடிநாதர் என்றும், வடமொழியில் அந்திசம்ரட்சணேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். கடைமுடிநாதர் என்ற பெயரினால் நாம் நமது ஆயுளின் கடைசி காலத்தில் அவரைப் பற்ற வேண்டும் என்றும்,  அந்திசம்ரட்சணேசுவரர் என்ற பெயரினால் நமது அந்திமக் காலத்தில் அதாவது இறுதிக் காலத்தில் நம்மைக் காப்பவர் அவரே என்று நமக்குத் தெளிவாக புலப்படுத்துகிறார்.

         இவ்வாலயம் ஒரு முகப்பு வாயிலுடன் காட்சி தருகிறது.இராஜகோபுரமில்லை. இறைவனின் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. மேற்கு பார்த்த சிவத்தலங்கள் தமிழகத்தில் சில இடங்களிலேயே உள்ளன. அதில் இதுவும் ஒன்று. லிங்க மூர்த்தம் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாக அமைந்துள்ளது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் உள்ள நவக்கிரக மண்டபம் எண்கோண வடிவ ஆவுடையார் மீது அமைக்கப்பட்டுள்ளது. சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியும், பைரவரும் இடதுகாதில் வளையம் அணிந்துள்ளனர். கடைமுடிவிநாயகர் மற்றும் சுப்பிரமணியருக்கும் சன்னதிகள் உள்ளன. அம்பாள் அபிராமி என்ற பெயருடன் தெற்கு நோக்கி அருள் காட்சி தருகிறாள்.

         அபிராமி அன்னையை அருகிலுள்ள கண்வமகான் துறையில் நீராடி வெள்ளிக்ககிழமை தரிசனம் செய்து சௌபாக்கிய திரவியங்கள் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். கன்னிப்பெண்கள் திருமணத்தடை நீங்க திருமாங்கல்ய வழிபாடு செய்கின்றனர்.

         இத்தலத்தில் காவிரி வடக்கு முகமாக வந்து பின் மேற்காக ஓடுவதும் ஒரு சிறப்பம்சமாகும்.

     வள்ளல் பெருமான் தாம்பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மாவின் இடைமுடியின் தீங்கனி என்று எல்லின் முசுத் தாவும் கடைமுடியின் மேவும் கருத்தா" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 285
திருமறைச் சண்பையர் ஆளி
         சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெருவிருப்பால் அணைந்து ஏத்தி,
         பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி,
         உயர்தமிழ் மாலை கொண்டு ஏத்தி,
வருபுனல் பொன்னி வடபால்
         குடதிசை நோக்கி வருவார்.

         பொழிப்புரை : அந்தணர்தம் பதியான சீகாழிப் பதியின் தலைவரான ஆளுடைய பிள்ளையார், இறைவர் எழுந்தருளியுள்ள திருக்கண்ணார் கோயில் என்னும் பதியைப் பெருகும் விருப்பத்துடன் அணைந்து, திருப்பதியைப் பாடிப் போற்றி, இறைவர் எழுந்தருளி இருக்கும் திருக்கோயில்கள் பலவற்றையும் உருகும் அன்புடன் சென்று வணங்கி, உயரும் தமிழ் மாலைகளாகிய தேவாரத் திருப்பதிகங்களைப் பாடித் துதித்துப் பெருகிவரும் நீரையுடைய காவிரியின் வழியாய் மேல்திசை நோக்கி வருவாராய்,

         குறிப்புரை : திருக்கண்ணார் கோயிலில் பாடிய பதிகம் `தண்ணார் திங்கள்' (தி.1 ப.101) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். குறுமாணக்குடி என இக்காலத்தில் இவ்வூரை அழைப்பர்.  கோயில் பலவும் என்றது திருக்கடைமுடி, திருநாங்கூர் முதலியனவாகலாம். இவற்றில் திருக்கடைமுடிக்கு அமைந்த திருப்பதிகம் `அருத்தனை' (தி.1 ப.111) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


1.111  திருக்கடைமுடி            பண் - வியாழக்குறிஞ்சி
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அருத்தனை அறவனை அமுதனை,நீர்
விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,
ஒருத்தனை, அல்லதுஇங்கு உலகம்ஏத்தும்
கருத்தவன், வளநகர் கடைமுடியே.

         பொழிப்புரை :வேதப் பொருளாய் விளங்குபவனும், அறவடிவின னும், அமுதம்போல இனியவனும், மூத்தவனும், இளையோனும், உலக மக்கள் பலராலும் இவ்வொருவனை யன்றித் துணையில்லை என்று கருதி வழிபடும் முடிந்த பொருளாயுள்ளவனும், ஆகிய பெருமான் எவ்விடத்தான் என நீர் வினவுவீராயின் அவன் எழுந்தருளிய வளநகர் கடைமுடி என்னும் தலமாகும். சென்று வழிபடுவீராக.


பாடல் எண் : 2
திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்
அரைபொரு புலிஅதள் அடிகள்இடம்,
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே.

         பொழிப்புரை :ஒளியால் விம்மித் தோன்றும் பிறைமதி, அலைகள் ஒன்றோடு ஒன்று மோதும் கங்கை ஆகியவற்றை உடைய திருமுடியை உடையவரும், இடையில் புலித்தோலைப் பொருந்த அணிந்தவருமாகிய அடிகள் எழுந்தருளிய இடம், அலைகளோடு நுரைகள் பொருந் திய தெளிந்த சுனைநீர் கரைகளில் வந்து மோதும் வளநகராகிய கடை முடியாகும்.


பாடல் எண் : 3
ஆல்இள மதியினொடு அரவுகங்கை
கோலவெண் நீற்றனைத் தொழுது இறைஞ்சி,
ஏலநன் மலரொடு விரைகமழும்
காலன வளநகர் கடைமுடியே.

         பொழிப்புரை :கல்லால மர நீழலில் இளமதி அரவு கங்கை ஆகியன சூடிய சடைமுடியுடனும், அழகிய திருவெண்ணீற்றுடனும், நறுமலர் ஆகியனவற்றால் மணம் பொருத்தமாகக் கமழும் திருவடிகளை உடையவனாக விளங்கும் இறைவனைத் தொழுது இறைஞ்சுதற்குரிய வளநகராக விளங்குவது கடைமுடியாகும்.


பாடல் எண் : 4
கொய்அணி நறுமலர்க் கொன்றை அம்தார்,
மைஅணி மிடறுஉடை மறையவன்ஊர்,
பைஅணி அரவொடு மான்மழுவாள்
கைஅணி பவன்இடம் கடைமுடியே.

         பொழிப்புரை :கொய்யப் பெற்ற அழகிய மணம் கமழும் கொன்றை மலர்மாலை அணிந்தவனாய் விடம்பொருந்திய கண்டத்தை உடையவனாய், படம் பொருந்திய பாம்பையும், மான் மழு வாள் ஆகியவற்றையும் கையின்கண் அணிந்தவனாய் விளங்கும் மறை முதல்வனது ஊர் கடைமுடியாகும்.


பாடல் எண் : 5
மறையவன், உலகுஅவன், மாயம்அவன்,
பிறையவன், புனல்அவன், அனலும் அவன்,
இறையவன் என உலகு ஏத்தும், கண்டம்
கறையவன், வளநகர் கடைமுடியே.

         பொழிப்புரை :வேதங்களை அருளியவனும், அனைத்துலகங்களும் ஆகியவனும், மாயை வடிவினனும், சடைமுடியில் பிறை கங்கை ஆகியவற்றை அணிந்தவனும், கையில் அனல் ஏந்தியவனும் உலக மக்கள் இறைவன் எனப் போற்றும் நீல கண்டனுமான சிவபிரானது வளநகர் கடைமுடியாகும்.


பாடல் எண் : 6
படஅரவு ஏர்அல்குல் பல்வளைக்கை
மடவர லாளையொர் பாகம்வைத்துக்
குடதிசை மதிஅது சூடுசென்னிக்
கடவுள்தன் வளநகர் கடைமுடியே.

         பொழிப்புரை :அரவின் படம் போன்ற அழகிய அல்குலையும் பலவகையினவான வளையல்களை அணிந்த கைகளையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாக வைத்து, மேற்குத் திசையில் தோன்றும் பிறைமதியைச் சூடிய சடைமுடியினனாய் விளங்கும் கடவுளின் வளநகர் கடைமுடியாகும்.


பாடல் எண் : 7
பொடிபுல்கு மார்பினில் புரிபுல்குநூல்
அடிபுல்கு பைங்கழல் அடிகள் இடம்,
கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே.

         பொழிப்புரை :திருநீறு அணிந்த மார்பின்கண் முறுக்கேறிய பூணூலை அணிந்தவராய், திருவடிகளில் பொருந்திய அழகிய கழல்களை உடையவராய் விளங்கும் அடிகள் இடம் கொடிகளில் பூத்த மலர்களோடு குளிர்ந்த சுனை நீரின் மணம் கமழும் வளநகராகிய கடை முடியாகும்

பாடல் எண் : 8
நோதல்செய்த அரக்கனை நோக்குஅழியச்
சாதல்செய்து, அவன்அடி சரண்எனலும்
ஆதரவு அருள்செய்த அடிகள், அவர்
காதல்செய் வளநகர் கடைமுடியே.

         பொழிப்புரை :இராவணனைத் துன்புறுமாறு செய்து, அவன் மீது முதலில் கருணை நோக்கம் செய்யாமல் வலிமை காட்டிப்பின் அவன் திருவடியே சரண் எனக் கூறிய அளவில் அவனுக்கு ஆதரவு காட்டி அருள் செய்த அடிகளாகிய சிவபிரானார் விரும்பும் வளநகர் கடைமுடியாகும்.


பாடல் எண் : 9
அடிமுடி காண்கிலர் ஓர்இருவர்,
புடைபுல்கி அருள்என்று போற்றிசைப்பச்
சடையிடைப் புனல்வைத்த சதுரன்இடம்,
கடைமுடி அதன் அயல் காவிரியே.

         பொழிப்புரை :அடிமுடி காணாதவராகிய திருமால் பிரமர் அருகிற்சென்று அருள்புரிக எனப்போற்றி செய்து வழிபடுமாறு, சடைமிசையே கங்கையை அணிந்த சதுரப்பாடுடைய சிவபிரானது இடமாக விளங்குவது காவிரியின் அயலிலே உள்ள கடைமுடியாகும்.


பாடல் எண் : 10
மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை,
எண்ணிய கால்அவை இன்பம் அல்ல,
ஒண்ணுதல் உமையையொர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே.

         பொழிப்புரை :நீரிற் பலகால் மூழ்கலும் மயிர் பறித்தலும் ஆகிய புத்த சமண விரத ஒழுக்கங்கள் பொய்யானவை; ஆராயுமிடத்து இவை இன்பம் தாரா. ஒளி பொருந்திய நுதலினளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ள கண்ணுதலோனின் வளநகர் கடைமுடி யாகும்.


பாடல் எண் : 11
பொன்திகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றுஅடை கடைமுடிச் சிவன்அடியை
நன்றுஉணர் ஞானசம் பந்தன்சொன்ன
இன்தமிழ் இவைசொல இன்பமாமே.

         பொழிப்புரை :பொன்துகள் திகழும் காவிரியாற்றின் அலைகளின் நீர் முறையாகச் சென்று அடையும் கடைமுடியில் விளங்கும் சிவபிரான் திருவடிப் பெருமைகளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இனிய தமிழாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபட இன்பம் ஆகும்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

45. அற்பரைப் புகழாதே

  “வடியிட்ட புல்லர்தமை அடுத்தாலும்      விடுவதுண்டோ? மலிநீர்க் கங்கை முடியிட்ட தண்டலைநா தரைப்புகழிற்      பெருவாழ்வு முழுதும் உண்டாம்! மிடிய...