சுவாமி மலை - 0221. தெருவினில் நடவா





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தெருவினில் நடவா (சுவாமிமலை)

அகத் துறைப் பாடல்.
சுவாமிநாதா! என்னை மணந்து இன்பம் அருள்

தனதன தனனா தனனா
     தனந்த தத்தம் ...... தனதான


தெருவினில் நடவா மடவார்
     திரண்டொ றுக்கும் ...... வசையாலே

தினகர னெனவே லையிலே
     சிவந்து திக்கும் ...... மதியாலே

பொருசிலை வளையா இளையா
     மதன்தொ டுக்குங் ...... கணையாலே

புளகித முலையா ளலையா
     மனஞ்ச லித்தும் ...... விடலாமோ

ஒருமலை யிருகூ றெழவே
     யுரம்பு குத்தும் ...... வடிவேலா

ஒளிவளர் திருவே ரகமே
     யுகந்து நிற்கும் ...... முருகோனே

அருமறை தமிழ்நூ லடைவே
     தெரிந்து ரைக்கும் ...... புலவோனே

அரியரி பிரமா தியர்கால்
     விலங்க விழ்க்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்
 

தெருவினில் நடவா மடவார்
     திரண்டு ஒறுக்கும் ...... வசையாலே,

தினகரன் என வேலையிலே
     சிவந்து உதிக்கும் ...... மதியாலே,

பொருசிலை வளையா இளையா
     மதன் தொடுக்கும் ...... கணையாலே,

புளகித முலையாள் அலையா
     மனம் சலித்தும் ...... விடலாமோ?

ஒருமலை இரு கூறு எழவே
     உரம் புகுத்தும் ...... வடிவேலா!

ஒளிவளர் திரு ஏரகமே
     உகந்து நிற்கும் ...... முருகோனே!

அருமறை தமிழ்நூல் அடைவே
     தெரிந்து உரைக்கும் ...... புலவோனே!

அரிஅரி பிரம ஆதியர் கால்
     விலங்கு அவிழ்க்கும் ...... பெருமாளே.

பதவுரை


         ஒருமலை இரு கூறு எழவே உரம்பு குத்தும் வடிவேலா --- மாயையில் ஒப்பற்ற கிரவுஞ்ச மலையானது இரண்டு கூறுகளாகப் பிளவு பட்டழியுமாறும் தாரகன் மார்பு பிளக்குமாறு செலுத்திய கூர்மை பொருந்திய வேற்படையை யுடையவரே!

         ஒளிவளர் திருஏர் அகமே உகந்து நிற்கும் முருகோனே --- மிகுந்த ஒளி பெற்று விளங்கும் சுவாமிலை என்னும் திருத்தலத்திலே மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளே!

         அருமறை தமிழ்நூல் அடைவே தெரிந்து உரைக்கும் புலவோனே ---- அருமையாகிய வேதங்களையும், தமிழ் நூல்களையும் முறையாக மக்களின் தகுதிக்குத் தக்கவாறு தெரிந்து உரைத்தருளிய சிவஞானச் செல்வரே!

         அரி அரி பிரம ஆதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே ---- இந்திரன், திருமால், பிரமன் முதலியோருடைய சூரபன்மன் காலிற் பூட்டிய விலங்கினை அவிழ்த்து அருள் புரிந்த பெருமையின் மிக்கவரே!

         தெருவினில் நடவா மடவார் திரண்டு ஒறுக்கும் வசையாலே --- தெருவினில் உல்லாசமாக நடக்கும் பெண்கள் கூடி குறைத்துக்கூறும் வசைச் சொற்களாலும்,

     தினகரன் என வேலையிலே சிவந்து உதிக்கும் மதியாலே --- சூரியன் என்று சொல்லும்படி ஒளியுடனும் வெப்பத்துடனும் கடலினிடத்தே சிவந்த நிறத்துடன் உதிக்கின்ற சந்திரனாலும்,

     பொருசிலை வளையா இளையா மதன் தொடுக்கும் கணையாலே --- போருக்குரிய கரும்பு வில்லை வளைத்து இளைக்காதவனாகிய மன்மதன் தொடுக்கும் மலர்க்கணையினாலும்,

     புளகித முலையாள் அலையா மனஞ்சலித்தும் விடலாமோ
--- விரகதாபத்தால் விம்முகின்ற முலையுடையவளாகிய என்னை, கணவனாகிய தேவரீரை இன்றி அலையுமாறு உள்ளம் உடைந்து கலங்குமாறு விட்டுவிடுதல் முறையாகுமோ?


பொழிப்புரை

         மாயையில் நிகரற்ற கிரவுஞ்ச மலையும், தாரகனுடைய மார்பும் பிளக்குமாறு விடுத்தருளிய வேலாயுதத்தை உடையவரே!

         ஒளியினால் விளங்கும் திரு ஏரகமென்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே!

         வேதங்களையும் தமிழ் நூல்களையும் ஆன்மாக்களின் பக்குவ நிலைக்குத் தக்கவாறு உரைக்கும் பரிபூரண ஞான சிகாமணியே!

         இந்திரன் மாலயனாதி வானவர்களுடைய காலில், சூரபன்மன் பூட்டிய விலங்கைத் தறித்து, சிறையினின்றும் நீக்கி ஆட்கொண்ட பெருமையின் மிக்கவரே!

         தெருவினில் உலாவும் பெண்கள் கூடி கொடிய வசைமொழிகளைச் சொல்லித் துன்புறுத்துவதனாலும்; சூரியனைப் போல் வெம்மையுடன் கடலில் உதிக்கின்ற சந்திரனாலும், போருக்கு வில்லை வளைத்து இளைக்காதவ னாகிய மன்மதன் விடுகின்ற மலர்க்கணையாலும், விரக வேதனையுற்று விம்முகின்ற தனங்களை யுடையவளாகிய யான் உம்மைத் தழுவி மகிழும் பேறு இன்றி அலைந்து மனஞ்சலிக்க விட்டுவிடுவது முறையாகாது.


விரிவுரை

தெருவினில் நடவா மடவார் ---

தெருவினில் நாணமின்றி நடக்கும் பெண்களாவார் பொது மகளிர்; அவர்கள் இளைஞரைத் தங்கள் கூந்தலாகிய காட்டில் கண் என்ற வலையை வீசிப் பிடிக்கும் பொருட்டு தெருவினில் எந்நேரமும் உலாவிக் கொண்டிருப்பர். அவர்கள் கற்புடைய மகளிரை எள்ளி நகையாடுவர்.

இத்திருப்புகழின் முதல் நான்கு அடிகளும் நாயகி நாயக பாவமாக அமைந்துள்ளன. மாதர்கள் திரண்டு வந்து “நீ முருகன் மீது காதல் கொண்டு பெற்ற பயன் யாது? இது வரையிலும் ஒரு பயனும் பெற்றாயில்லையே” என்று வசை கூறுவர்.

தினகரன் என- -மதியாலே ---

காதல் நோய் உற்றோருக்குப் பூரண சந்திரன் வெப்பமாகத் துன்புறுத்துவன். இராமனைக் கன்னிமாடத்தில் நின்று கண்டு விரகமுற்ற சீதாதேவி, சந்திரனைக் கண்டு வருந்துவதாகக் கூறும் கம்பர் வாக்கையும் உன்னுக.

கொடியை அல்லைநீ, யாரையும் கொல்கிலாய்,
மடுவில் இன் அமுதத்தொடும் வந்தனை,
பிடியின் மெல்நடைப் பெண்ணாடு, ன்றால் எனைச்
சுடுதியோ கடல் தோன்றிய திங்களே.           --- கம்பராமாயணம்.

பட்டுப்படாத மதனாலும்
     பக்கத்து மாதர் வசையாலும்
சுட்டுச் சுடாத நிலவாலும்
    துக்கத்தில்ஆழ்வது இயல்போதான்  --- திருப்புகழ்

சூரியனைப் போலவும், வடவாமுகாக்கினியைப் போலவும், பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தைப் போலவும் சந்திரன் சுடுகின்றான் என்று பிறிதோரிடத்திலும் சுவாமிகள் கூறுமாறு காண்க.

இரவியென வடவையென ஆலால விடமதென
 உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும் வர”    --- திருப்புகழ்

பொருசிலை- -கணையாலே ---

மன்மதன் கரும்பு வில்லை வளைத்து கரும்பு நாணேற்றி மலர்க்கணை யைத் தொடுத்து எத்தகைய திடமுள்ள தவத்தினரையும் மயக்க வல்லவன்.

ஒளிவளர் திருவேரகம் ---

திருவேரகத்தில் அகத்திருளை நீக்கவல்ல ஞான ஒளி வீசுகின்றது.

அறுமறை தமிழ் நூல் அடைவே ---

முருகவேள், திருஞானசம்பந்தர் திருவாக்கிலிருந்து அரிய வேதங்களின் சாரங்களைத் தமிழ் நூலில் அடையுமாறு தெரிந்துரைத்தனர் எனினுமமையும்.

அரியரி- -விலங்கு அவிழ்க்கும் ---

மாலயனாதி வானவர்க்குச் சூரபன்மன் தளையிட்டு வருத்த, அதனை முருகவேள் நீக்கி யாட்கொண்ட அரிய வலாற்றைக் கந்தபுராணத்தாலறிக.

கருத்துரை

குன்றெறிந்த குமர! திருவேரகத் தெய்வமே! செந்தமிழ்ப்புலவ! தேவர் சிறை தீர்த்த தேவ தேவ! பெண்கள் கூறும் வசையாலும், திங்களாலும், மதனன்கணையாலும் துன்புற்று நான் வருந்தா வண்ணம் தேவரீர் என்னை மணந்து கொண்டு இன்பத்தைத் தருவீர்.


No comments:

Post a Comment

59. பலரில் அரியவர் ஒருவர்

  59. பலரில் அரியவர் ஒருவர் "பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!      பாடுவோர் நூற்றில் ஒருவர்!   பார்மீதில் ஆயிரத்து ஒருவர்விதி...