சுவாமி மலை - 0220. தருவர் இவர்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தருவர் இவர் (சுவாமிமலை)

சுவாமிநாதா!
பொருள் வேண்டி, மூடரைப் பாடாது,
அருள்வேண்டி உன்னைப் பாட அருள்.


தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான


தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு
     தனைவிடுசொல் தூது தண்ட ...... முதலான

சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப
     தருமுதல தான செஞ்சொல் ...... வகைபாடி

மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து
     வரினுமிவர் வீத மெங்க ...... ளிடமாக

வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல்
     மடையரிட மேந டந்து ...... மனம்வேறாய்

உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து
     உழல்வதுவு மேத விர்ந்து ...... விடவேநல்

உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப
     முதவியெனை யாள அன்பு ...... தருவாயே

குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்
     குதிகொளிள வாளை கண்டு ...... பயமாகக்

குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு
     குருமலையின் மேல மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தருவர் இவர் ஆகும் என்று, பொருள் நசையில் நாடி, வண்டு
     தனை விடுசொல் தூது, தண்டம் ...... முதலான

சரச கவி மாலை, சிந்து, கலிதுறைகள் ஏசல், இன்ப
     தருமுதல் அதான செஞ்சொல் ...... வகைபாடி,

மருவு கையு மோதி நொந்து, அடிகள் முடியே தெரிந்து
     வரினும், இவர் வீதம் எங்கள் ...... இடமாக

வரும்அதுவொ போதும் என்று, ஒருபணம் உதாசினம் சொல்
     மடையர் இடமே நடந்து, ...... மனம்வேறாய்,

உருகி மிகவாக வெந்து, கவிதை சொலியே திரிந்து,
     உழல்வதுவுமே தவிர்ந்து ...... விடவே, நல்

உபயபத மால் விளங்கி, இகபரமும் மேவ இன்பம்
     உதவி எனை ஆள அன்பு ...... தருவாயே.

குருகினொடு நாரை அன்றில் இரைகளது நாடு இடங்கள்
     குதிகொள் இள வாளை கண்டு ...... பயமாகக்

குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு
     குருமலையின் மேல் அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை

       குருகினொடு நாரை அன்றில் --- குருகு, நாரை, அன்றில் என்ற நீர்ப்பறவைகள்,

     இரைகள் அது நாடு இடங்கள் --- இரைகளைத் தேடி நாடுகின்ற நீர்நிலை இடங்களை,

       குதிகொள் இள வாளை கண்டு பயம் ஆக --- குதிக்கின்ற இளம் வாளை மீன்கள் கண்டு பயங்கொள்ள,

     குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு --- ஒலிக்கின்ற கடல்களே அதிர்ந்து வருவதுபோல் காவிரியாறு சூழ்ந்து விளங்குகின்ற,

         குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே --- சுவாமிமலை மீது எழுந்தருளியுள்ள பெருமை மிகுந்தவரே!

         தருவர் இவர் ஆகும் என்று பொருள் நசையில் நாடி  --- இவர் பொருள் கொடுப்பார் என்று கருதி பொருளாசையால் ஒருவரைத் தேடி,

         வண்டு தனை விடு சொல் தூது தண்ட முதலான சரச கவி மாலை --- வண்டு விடு தூது தண்டகம் முதலிய இனிமையான கவி மாலைகள்,

         சிந்து கலிதுறைகள் ஏசல் இன்ப தரு முதல் அது ஆன செம் சொல்வகை பாடி --- சிந்து, கலித்துறைகள், ஏசல், இன்பமான தரு முதலிய, செந்தமிழ்ப் பாடல் வகைகளைப்பாடி,

         மருவுகையும் ஓதி நொந்து - அடிக்கடி வந்து போவதையும் தெரிவித்து மனம் நொந்து,

         அடிகள் முடியே தெரிந்து வரினும் - தங்கள் பாதம் ஆதிசேடன் முடி தெரியுமாறு பூமி தேய நடந்து வந்தாலும்,

         இவர் வீதம் எங்கள் இடமாக வரும் அதுவொ போதும் என்று –-- அவர் அமைதியாக எங்களிடத்தில் வருகின்றது போதும் என்று கூறி,

         ஒரு பணம் உதாசினம் சொல் --- ஒரு பணம் தருதற்குக் கூட அலட்சிய வார்த்தை கூறுவார்கள்.

         மடையர் இடமே நடந்து மனம் வேறாய் உருகி மிகவாக வெந்து --- இத்தகைய உலோபிகளாகிய புத்தியில்லாதவரிடம் நடந்து மனம் வேறுபட்டு உள்ளம் நெகிழ்ந்து, மிகவும் வெப்பமுற்று,

     கவிதை சொலியே திரிந்து உழல்வதுவுமே தவிர்ந்து விடவே --- பாடல்களைச் சொல்லியே திரிந்து, அலைவதானது தவிர்த்து ஒழியவே,

     நல் உபய பத மால் விளங்கி இகபரமு மேவ --- நல்ல இரு திருவடிகளிலும் அன்பு மேலிட்டு, இம்மையிலும் மறுமையிலும் பொருந்தும்,

     இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே --- இன்பத்தைத் தந்து அடியேனை ஆள அன்பு தந்தருள்வீராக.

பொழிப்புரை

         குருகு, நாரை, அன்றில் முதலிய பறவைகள், இரைகள் தேடி வாழ்கின்ற நீர் நிலைகளான இடங்களை, குதிக்கின்ற இளம் வாளை மீன்கள் கண்டு அஞ்சும்படி, ஒலிக்கின்ற கடல்களே அதிர்ந்து வருவதுபோல் பொங்கி வரும் காவிரியின் கரையில் விளங்கும் சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே!

         இவர் பொருள் தருவார் என்று எண்ணி, பணத்தாசையால், வண்டு விடு தூது, தண்டகம் முதலிய இன்ப கவிமாலைகள், சிந்து கலித்துறைகள், ஏசல், மகிழ்ச்சியை விளைவிக்கும் தரு முதலிய செந்தமிழ்க் கவிகளை வகை வகையாகப் பாடிச் சென்று, அடிக்கடி ஒழியாது வருகின்றேன் என்று புலவர்கள் கூறியும், பூமி தேய்ந்து, ஆதிசேடன் முடி தெரிய நடந்து வந்தும், மனம் இரங்கி, `வருவது போதும் இந்தா‘ என்று ஒரு பணங்கூடத் தராமல் உதாசினம் செய்யும் மடையரிடம் நடந்து மனம் மாறுபட்டு, உள்ளம் உருகி, மிகவும் வெந்து, பாடல்கள் பாடித் திரிந்து அலைவதை விடுத்து, நல்ல இரு திருவடிகளில் அன்பு வைத்து இம்மை மறுமை நலங்களைப் பெற்று உய்யுமாறு அடியேனை ஆட்கொள்ள அன்பு தருவீராக.


விரிவுரை

தருவர் இவர் ஆகும் என்று ---

`இவர் நமக்கு நிரம்ப பணந் தருவார் என்று கருதி‘ இப்பாடலில் புலவர்கள் பொருளாசையால் கொடாத பரமலோபிகளிடம் கவி பாடி அலைவதைக் குறித்துக் கண்டிக்கின்றார்.

பொருள் நசையில் நாடி ---

பொருள் நசையில் நாடி:  நசை-ஆசை. ஆசைகள் பல. அவற்றுள் முதல் வரிசையில் நிற்பது பணத்தாசை. “தனேஷணை” என்று வடநூலார் கூறுவர்.

வண்டு தனை விடுசொல் தூது ---

ஒருவன் தன் கருத்தை அறிவிக்கத் தூது விடுவான். தமிழில் 96 பிரபந்த வகைகள் உண்டு. அவற்றுள் தூது என்பதும் ஒன்று.

அன்ன விடுதூது, வண்டு விடுதூது, கிள்ளைவிடு தூது, மயில் விடு தூது, மேக விடு தூது, பூவை விடு தூது, பாங்கி விடு தூது, பணவிடு தூது, அன்பு விடு தூது, விறலி விடு தூது, தமிழ் விடு தூது, என்பனவாகிப் பல தூது நூல்கள் உள.

தண்டம் ---

தண்டம் என்பது தண்டகம் என்ற ஒருவகை ஆரியச் செய்யுள் நூல். சியாமளா தண்டகம் என்று ஒரு நூலுண்டு.

சரச கவிமாலை ---

இன்பரசம் பொருந்திய கவிமாலை. மாலை என்பது நூறு பாடல்கள் கொண்டது.

சிந்து ---

சிந்து என்பது இசைப் பா வகை. காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து முதலிய நூல்கள் உண்டு.

கலித்துறைகள் ---

கலித்துறைகளால் ஆன நூல்.

 
ஏசல் ---

ஏசுதல் போல் பாடும் ஒருவகைப் பாட்டு. அரங்கேசர் ஏசல் என்ற நூல் ஒன்றுண்டு.

இன்ப தரு ---

தரு என்பது ஒரு வகையான இசைப்பாடல். இன்பமயமான கீர்த்தனை.

செஞ்சொல் வகை பாடி ---

செவ்விய சொற்களால் வித விதமாகப் பாடி தனவந்தர்களைப் புகழ்ந்து பாடுவார்கள்.

மருவுகையும் ஓதி நொந்து ---

இவ்வாறு இனிய தமிழ்ப் பாடல்கள் பாடி “பொருள் படைத்த சீமானே! நான் பல முறை வந்து போகின்றேன். தங்கள் கருணையை நாடி வந்தேன்” என்று கூறியும், அவன் ஒன்றும் கொடாமையால் மனம் நொந்து அவலமுறுவர்.

அடிகள் முடியே தெரிந்து ---

நடந்து நடந்து பூமி தேய்ந்து ஆதிசேடன் முடி தெரிகின்றதாம். இது உயர்வு நவிற்சியணி.

அன்றி, அத் தனவந்தனுடைய வரலாற்றின் “முதலும் முடிவுந் தெரிந்து” என்றும் அமையும்.

  
வரினும் இவர் வீதம் எங்கள் இடமாக வருவதுவொ போதும் என்று ஒரு பணம் உதாசினம் சொல் மடையர் ---

கால்கள் தேய நடந்து வந்தும், “ஐயா! நீங்கள் நடந்தது போதும்: அமைதியாக இரும்: இந்தாரும் ஒரு பணம். பெற்றுக்கொள்ளும்” என்று கூறாமல் உதாசினம் புரியும் உலோபியராகிய மடையர்கள். உதாசினம் - அலட்சியம்.

உருகி மிகவாக வெந்து கவிதை சொலியே திரிந்து உழல்வதுவுமே 
தவிர்ந்து விடவே ---

லோபிகள் பணந்தராமையால் மனம் உருகி, மிக்க வேதனை யடைந்து, வேறு வேறு தனவந்தரைநாடிச் சென்று, தெய்வத் தமிழால் இறைவனைப் பாடாமல், காமதேனுவின் பாலைக் கமரில் சிந்துவது போல் நரத்துதி செய்து, புலவர்கள் உழலுவார்கள். அங்ஙனம் உழல்வது கூடாது. அந்த அவலச் செயல் நீங்க, முருகனைப் பாடி உய்தல்வேண்டும்.

நல் உபய பதமால் விளங்கி ---

நல்-பிறவிப் பிணியைத் தீர்க்கும் நன்மையுடையது திருவடி. கிரியா சக்தி, ஞானசக்தி என்ற இரு சக்திகளுமே இறைவனுடைய திருவடிகள் என அறிக.

மால்-அன்பு. திருவடிமீது அன்பு மேலிட்டு.

இகபரமு மேவ ---

இம்மை மறுமை நலம் அடியேனுக்குக் கிடைக்குமாறு.

இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே ---

பேரின்பத்தைத் தந்து சிறியேனை ஆட்கொள்ள கருணை புரிவீர்.

குருகினொடு நாரை அன்றில் ---

குருகு, நாரை, அன்றில் இவைகள் நீரில் வாழும் பறவைகள்.

குரை கடல்களே அதிர்ந்து வருவதென ---

காவிரி நதி கடல் பொங்கி வருவதுபோல் பெரு வெள்ளமாக வருகின்றது.

கருத்துரை

குருமலை மேவு குமாரக் கடவுளே! மூடரைப் பாடாது உய்யும்படி அருள்புரிவாய்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...