சுவாமி மலை - 0219. சேலும் அயிலும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சேலும் அயிலும் (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
மாதர் ஆசை அற அருள்


தானதன தந்த தத்த தானதன தந்த தத்த
     தானதன தந்த தத்த ...... தனதான


சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண்
     மாதரைவ சம்ப டைத்த ...... வசமாகிச்

சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை
     காலமுமு டன்கி டக்கு ...... மவர்போலே

காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்கு
     நாளுமிக நின்ற லைத்த ...... விதமாய

காமகல கம்பி ணித்த தோதகமெ னுந்து வக்கி
     லேயடிமை யுங்க லக்க ...... முறலாமோ

ஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பை
     பூகமரு தந்த ழைத்த ...... கரவீரம்

யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும்
     ஏரகம மர்ந்த பச்சை ...... மயில்வீரா

சோலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ர
     பாணியர்தொ ழுந்தி ருக்கை ...... வடிவேலா
  
சூர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்த
     சூரனுட லுந்து ணித்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சேலும் அயிலும் தரித்த வாளை அடரும் கடைக்கண்
     மாதரை, வசம் படைத்த ...... வசம் ஆகிச்

சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்ற அவத்தை
     காலமும் உடன் கிடக்கும் ...... அவர்போலே,

காலும் மயிரும் பிடித்து மேவு சிலுகும் பிணக்கு
     நாளும் மிக நின்று அலைத்த ...... விதமாய,

காம கலகம் பிணித்த தோதகம் எனும் துவக்கிலே
     அடிமையும் கலக்கம் ...... உறலாமோ?

ஏலம் இலவங்க வர்க்கம், நாகம் வகுளம் படப்பை
     பூகம் மருதம் தழைத்த ...... கரவீரம்

யாவும் அலை கொண்டு உகைத்த காவிரி புறம்பு சுற்றும்
     ஏரகம் அமர்ந்த பச்சை ...... மயில்வீரா!

சோலை மடல் கொண்டு, சக்ர மால்வரை அரிந்த வஜ்ர
     பாணியர் தொழும் திருக்கை ...... வடிவேலா!

சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த
     சூரன்உடலும் துணித்த ...... பெருமாளே.


பதவுரை

         ஏலம், இலவங்க வர்க்கம், நாகம், வகுளம், படப்பை, பூகம், மருதம், தழைத்த கரவீரம் --- ஏலக்காய் காய்க்கும் செடி, கிராம்பு வகை, சுரபுன்னை, மகிழ மரம், தோட்டங்கள், கமுக மரம், மருதமரம், செழிப்புள்ள அலரி இலைகள்,

     யாவும் அலை கொண்டு உகைத்த --- யாவையும் அலையில் அடித்துத் தள்ளி வருகின்ற

     காவிரி புறம்பு சுற்றும் --- காவிரி நதி அயலிலே சூழ்ந்து செல்லுமாறு விளங்கும்,

     ஏரகம் அமர்ந்த பச்சை மயில் வீரா --- திருவேரகம் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பச்சை மயிலில் வருகின்ற வீரரே!

         சக்ர மால் வரை அரிந்த வஜ்ர பாணியர் --- சக்ரவாள கிரி முதலிய பெரிய மலைகளின் சிறகுகளை அரிந்த,வஜ்ராயுதத்தைக் கையில் பிடித்த இந்திரன்,

     சோலை மடல் கொண்டு தொழும் திருக்கை வடிவேலா --- சோலையில் உள்ள பூ இதழ்களைக் கொண்டு வணங்குகின்ற கூரிய வேலாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்தியவரே!

      சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் --- அச்சத்தை நிரம்பத் தரும் க்ரவுஞ்ச மலையையும்,

     வேலை நிலமும் --- கடலிடத்தையும்,

     பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே --- பகைகொண்ட சூரபன்மனது உடம்பையும் அழித்த பெருமையிற் சிறந்தவரே!

      சேலும் அயிலும் தரித்த வாளையும் அடரும் --- சேல் மீனையும், வேலையும், தரித்துக் கொள்ளும் வாளாயுதத்தையும் தனக்கு நிகரில்லையென்று தாக்கவல்ல,

     கடை கண் மாதரை வசம் படைத்த வசம் ஆகி --- கடைக்கண் பார்வையுடன் பொது மாதருடைய வசத்தில் பட்டு அவர்க்கே ஆளாகி,

     சீலம் மறையும் பணத்தில் ஆசையில்லை என்று --- “நல்லொழுக்கத்தை மறைக்கும் பணத்தில் ஆசையில்லை” என்று கூறி,

     அவத்தை காலமும் உடன் கிடக்கும் அவர் போலே --- நித்திரை புரியும் போதும் அருகிலேயே படுத்திருக்கும் அன்புடையவர் போலே நடித்து,

     காலு மயிரும் பிடித்து --- முதலில் கொஞ்சிக் காலையும் பின்னர் மிஞ்சித் தலைமயிரையும் பிடித்து,

     மேவு சிலுகும் பிணக்கு நாளும் மிக --- சண்டையும் ஊடலும், நாள்தோறும் அதிகப்படுமாறு,

     நின்று அலைத்த விதம் ஆய --- நின்று வருத்துகின்ற வகையுடன் வருகின்ற,

     காம கலகம் பிணித்த தோதகம் எனும் துவக்கில் அடிமையும் கலக்கம் உறலாமோ --- மாதருடைய காமக் கலகத்தில் சிக்குதலால் ஏற்படுகின்ற வருத்தமாகிய தொடர்பிலே, உமது அடிமையான நாயினேன் கலக்கத்தை அடையலாமோ?


பொழிப்புரை

         இலவங்கம், சுரபுன்னை, மகிழமரம், தோட்டங்கள், பாக்குமரம், மருதமரம், செழிப்புள்ள அலரி ஆகிய அனைத்தையும் தனது அலையில் அடித்துத் தள்ளி வருகின்ற காவிரிநதி வெளிப்புறத்தே சூழ்ந்து செல்கின்ற திருவேரகத்தில் வீற்றிருக்கின்ற மயில் வீரரே!

         சக்ரவாள கிரி முதலிய பெரிய கிரிகளின் சிறகுகளை வெட்டிய வஜ்ராயுதபாணியாகிய, இந்திரன் சோலை மலர்களைக் கொண்டு பணிய அருள்புரிந்த வேலைக் கரத்தில் ஏந்தியவரே!

         அச்சத்தைத் தரும் கிரவுஞ்ச மலையையும், கடலிடத்தையும், பகைத்து வந்த சூரன் உடலையும் அழித்த பெருமிதம் உடையவரே!

         சேல்மீன், வேல், வாள் இவைகளைத் தனக்கு நிகரில்லை யென்று தாக்கி வருத்தவல்ல கடைக்கண் ணையுடைய மாதருடைய வசத்திற்பட்ட ஆளாகி, “நல்லொழுக்கத்தை மறைக்கின்ற பணத்திலே ஆசையில்லை” என்று சொல்லி, நித்திரை செய்யும்போதும் உடன் படுத்துக் கிடக்கும் அன்புடையவர் போல் நடித்து, முதலில் காலையும் பின்னர் சிகையையும் பிடித்துச் சண்டையும் ஊடலும் நாளுக்கு நாள் அதிகப்படுத்துமாறு நடந்து வருகின்ற மாதருடைய காமக் கலகத்தில் சிக்குதலால் ஏற்படுகின்ற  வருத்தமாகிய தொடர்பிலே, தேவரீரு டைய அடிமையாகிய சிறியேன் கலக்கம் அடையலாமோ?

விரிவுரை

சேலும் அயிலும் தரித்த வாளை அடரும் கடைக்கண் ---

மாதருடைய கண்கள் பிறழுந் தன்மையால் மீனையும், கூர்மையால் வேலையும், விரும்பியவருடைய உள்ளத்தைப் பிளப்பதனால் வாளையும் போன்றன.

இன்னும் அவைகளை விடச் சிறந்தன. அதனால் மீன், வேல், வாள் இவைகளைத் தாக்கி வருத்தவல்லன என்று இங்கே வியந்து கூறுகின்றார். “கூர்வேல் விழி மங்கையர்” என்று அநுபூதியிலும், “பாவையர் கண்சேல்” என்று அலங்காரத்திலுங் கூறுமாறு காண்க.

சீல மறையும் பணம் ---

சீலம் என்பது உயர்ந்த பண்பு. மேகத்தினால் கதிரவன் மறைவதுபோல், பணத்தின் திரையில் சீலம் மறையும். அத்துணை வன்மையுள்ளது பணம்.

பணத்தின் ஆசை இலை ---

பொதுமகளிர், தம்பால் வருகின்ற ஆடவரிடம் “எங்கட்கு பணத்திலே சிறிதுகூட ஆசையே கிடையாது” என்று கூறுவார்கள்.

அவத்தை காலமும் உடன்கிடக்கும் அவர் போலே ---

நித்திரை அவத்தையில் மயங்கி இருக்கும்போது விலகாதவராகி உடனாக இருப்பவர் போலே அம்மகளிர் நடிப்பர்.
  
காலும் மயிரும் பிடித்து ---

தம்பால் மயங்கி வந்த இளைஞர்களைக் கெஞ்சி ஆரம்பத்தில் காலைப் பிடித்தும், பணம் பறித்தபின் மிஞ்சி தலைமயிரைப் பிடித்தும் போர் புரிவார்கள்.

காம கலகம் பிணித்த தோதகம் எனும் துவக்கிலே அடிமையும் கலக்கம் உறலாமோ ---

அம்மகளிருடைய ஆசையால் கலகம் என்னும் கட்டுப்பாட்டில் அகப் பட்டு வஞ்சனைத் தொடர்பிலே அடியேன் வருந்தலாமோ? வருந்துதல் கூடாது.

ஏலமிலவங்கவர்க்க நாகம் வகுளம் படப்பை பூகமருதந் தழைத்த கரவீரம் யாவுமலை கொண்டுகைத்த காவிரி ---

காவிரி சிறந்த நதி, வடக்கே கங்கையும், தெற்கே காவிரியும் புகழ் பெற்றவை. “கங்கை யாடிலென் காவிரி யாடிலென்” என்று அப்பர் பெருமகனும் வியந்துரைக்கின்றார்.

காவிரிநதி பெரு வெள்ளமாக வரும்போது, மலைகளிலும் வனங்களிலு முள்ள ஏலம், இலவங்கம், சுரபுன்னை, மகிழமரம், தோட்டங்கள், மருதமரம், அலரி இவைகளை அலைகளால் தள்ளி அடித்துக்கொண்டு வரும்.

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இளமரு திலவங்கம்
     கலவி நீர்வரு காவிரி”
ஏலமோ டிலையில வங்கமே இஞ்சியே மங்களுந்தி
     ஆலியா வருபுனல்”                  ---திருஞானசம்பந்தர்.

நாகம்-சுரபுன்னை, வகுளம்-மருதமரம், படப்பை-தோட்டம், பூகம்-பாக்கு, கரவீரம்-அலரி.

காவிரி புறம்பு சுற்றும் ஏரகம் ---

திருவேரகம் என்ற சுவாமிமலை காவிரி நதியினால் சூழப் பெற்றது.

சோலைமடல் கொண்டு சக்ர மால்வரை யரிந்த வஜ்ரபாணியர் தொழும் ---

ஒரு காலத்தில் மலைகள் யாவும் பறவைகள் போல் இறகுகளைக் கொண்டிருந்தன. பறந்து சென்று தங்கி உயிர்களுக்கு இடர் புரிந்தன. இந்திரன் சினந்து வஜ்ராயுதத்தால் மலைகளின் சிறகுகளை அறுத்துத் தள்ளினான்.

இந்திரனுக்கு “மலை சிறகரிந்தோன்” என்று ஒரு பேருண்டு. “திசைக் கிரியை முதற் குலிசன் அறுத்த சிறை” என்று வேல் வகுப்பில் கூறுகின்றார்.

இந்திரன் சோலை மலர்களைக் கொண்டு முருகவேளை வழிபட்டு நலம் பெற்றான்.

மடல்-பூவிதழ். இது ஆகு பெயராக மலரைக் குறிக்கின்றது.

சூர்முதிர் க்ரவுஞ்ச வெற்பும் ---

சூர்-அச்சம். அச்சத்தை விளைக்கின்ற பழமையான கிரவுஞ்சமலை. இது தாரகாசுரனுக்குத் துணைபுரிந்து வேலினால் அழிந்தது.

 
கருத்துரை

திருவேரகத்து உறையும் தேவனே! மாதர் ஆசை அற அருள் புரிவாய்.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...