சுவாமி மலை - 0218. செகமாயை உற்று





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

செகமாயை உற்று (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
அடியேனுக்கு மகவாக வந்து, முத்தம் தந்து அருள்

தனதான தத்த தனதான தத்த
     தனதான தத்த ...... தனதான


செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
     திருமாது கெர்ப்ப ...... முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
     திரமாய ளித்த ...... பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
     மலைநேர்பு யத்தி ...... லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
     மணிவாயின் முத்தி ...... தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
     முலைமேல ணைக்க ...... வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
     மொழியேயு ரைத்த ...... குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
     தனியேர கத்தின் ...... முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
     சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


செகமாயை உற்று என்அக வாழ்வில் வைத்த
     திருமாது கெர்ப்பம் ...... உடல்ஊறித்

தெசமாதம் முற்றி, வடிவாய், நிலத்தில்
     திரமாய் அளித்த ...... பொருள் ஆகி,

மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில்
     மலைநேர் புயத்தில் ...... உறவாடி,

மடிமீது  அடுத்து விளையாடி, நித்தம்
     மணிவாயின் முத்தி ...... தரவேணும்.

முகமாயம் இட்ட குற மாதினுக்கு
     முலைமேல் அணைக்க ...... வரு நீதா!

முது மாமறைக்கு உள் ஒரு மா பொருட்குள்
     மொழியே உரைத்த ...... குருநாதா!

தகையாது எனக்கு உன் அடி காண வைத்த
     தனி ஏரகத்தின் ...... முருகோனே!

தரு காவிரிக்கு வட பாரிசத்தில்
     சமர் வேல் எடுத்த ...... பெருமாளே.

 
பதவுரை

         முக மாயம் இட்ட குறமாதினுக்கு --- முக வசீகரங் கொண்ட வள்ளி பிராட்டியினிடம்,  

     முலைமேல் அணைக்க வரும் நீதா --- தனங்களை அணைய வந்த நீதிபதியே!

முதுமா மறைக்கு உள் --- பழைமையும் சிறப்பும் உடைய வேதத்தின்,

ஒரு மா பொருட்கு உள் --- ஒப்பற்ற பெரும் பொருள்களுக்குள்ளே யுள்ள

மொழியே உரைத்த குருநாதா --- பிரணவப் பொருளை உபதேசித்த குருநாதரே!

தகையாது --- தடை ஒன்றுமின்றி

எனக்கு உன் அடி காண வைத்த --- அடியேனுக்கு உமது திருவடித் தரிசனத்தைத் தந்த

தனி ஏரகத்தின் முருகோனே --- ஒப்பற்ற திருவேரகத்து உறையும் முருகப்பெருமானே!

தரு காவிரிக்கு வடபாரிசத்தில் சமர் வேல் எடுத்த பெருமாளே --- தருக்கள் நிறைந்த காவிரி நதியின் வடப்புறத்தில், போருக்குரிய வேலைத் தாங்கிய பெருமையின் மிகுந்தவரே!

         செக மாயை உற்று --- உலக மாயையில் சிக்குண்டு,

     என் அக வாழ்வில் வைத்த --- என் இல்லற வாழ்வில் ஏற்பட்ட,

     திருமாது கெர்ப்பம் உடல் ஊறி --- அழகிய மனைவியின் கருவில் உடலில் ஊறி,

     தெச மாதம் முற்றி --- பத்து மாதம் நிறைந்து,

     வடிவாய் நிலத்தில் திரம் ஆய் அளித்த --- அழகுடன் பூமியில் நன்கு தோன்றிய,

     பொருள் ஆகி --- குழந்தை போல் தேவரீர் அமைய,

     மக அவாவின் --- அடியேன் உம்மைக் குழந்தைப் பாசத்துடன்,

     உச்சி --- உச்சி மோந்தும்,

     விழி --- கண்ணில் ஒத்தியும்,

     ஆநநத்தில் --- முகத்தோடு முகம் சேர்த்தும்,

     மலை நேர் புயத்தில் உறவு ஆடி --- எனது மலைப்போன்ற புயத்தில் நீர் உறவாடியும்,

     மடிமீது அடுத்து விளையாடி --- என் மடிமீதில் அமர்ந்து விளையாடியும்,

     நித்தம் --- நாள்தோறும்,

     மணிவாயின் முத்தி தரவேணும் --- உமது மணி வாயினால் முத்தந் தந்தருளவேண்டும்.

 
பொழிப்புரை

         கவர்ச்சியுள்ள முகமுடைய வள்ளிபிராட்டியின் தனங்களில் பொருந்த வந்தருளிய நீதிபதியே!

         பழைய சிறந்த வேதத்தின் ஒப்பற்ற பெரும் பொருள்களுக்கு உட்பொருளாகிய ஓமெனும் ஒரு மொழிப் பொருளை சிவமூர்த்திக்கு உபதேசித்தருளிய குருநாதரே!

         தடையொன்றும் இன்றி அடியேனுக்கு, உமது திருவடியைக் காணுமாறு அருள் செய்த ஒப்பற்ற திருவேரகத்தில் உறையும் முருகக் கடவுளே!

         தருக்களுடன் கூடிய காவிரி நதிக்கு வடபுறத்தில் போருக்குரிய வேலைத் தாங்கி நிற்கும் பெருமிதம் உடையவரே!

         உலக மாயையில் சேர்ந்து, என் இல்லற வாழ்வில் அமைந்த அழகிய மனைவியின் கருவில் தங்கி உடம்பில் பத்து மாதம் ஊறி முதிர்ச்சியுற்று, அழகுடன் நிலத்தின் நன்கு தோன்றியக் குழந்தைபோல் தேவரீர் எனக்கு அமைந்து, அடியேன் பிள்ளைப் பாசத்துடன் உம்மை உச்சி மோந்தும், கண்ணில் ஒத்தியும், முகத்துடன் முகம் சேர்த்தும் மகிழுமாறு, நீர் என் மலையன்ன புயத்தில் உறவு செய்து, என் மடியில் அமர்ந்து விளையாடி நாள்தோறும் உமது மணிவாயால் முத்தந் தந்தருள வேண்டும்.


விரிவுரை

பொருளாகி ---

இத் திருப்புகழில் அருணகிரிநாத சுவாமிகள் முருகப் பெருமானைக் குழந்தையாக வந்து இன்பம் தருமாறு வேண்டுகின்றார்.

முருகா! என் இல்லக் கிழத்தியின் உதிரத்து உதித்த குழந்தைபோல் நீ வந்து என்னுடன் மகிழ வேண்டும்” என்கிறார். பொருள்-புதல்வன்.

மகவாவினுச்சி விழிய ஆநநத்தில் மலை நேர் புயத்தில் விளையாடி ---

மக வாவின்-மக அவாவின் என்று பதப்பிரிவு செய்க.

முருகா! குழந்தைப் பாசத்துடன் உன்னை உச்சி மோந்தும், கண்ணில் ஒத்தியும், முகத்துடன் முகம் வைத்தும் அடியேன் மகிழுமாறு நீர் என் புயத்தில் தழுவி உறவாட வேண்டும்.”

மடிமீது அடுத்து விளையாடி நித்தம் மணிவாயின் முத்தி தரவேணும் ---

முருகா; நீ என் மடித்தலத்தில் அமர்ந்து என்னுடன் குழந்தைபோல் விளையாடி உன் கனிவாய் முத்தந்தந்து அருள்புரிவாய்.”

முருகவேள் தரும் முத்தத்துக்கு விலையில்லை. ஏனைய முத்தங்களுக்கு விலையுண்டு என்று கூறுகின்றார் பகழிக் கூத்தர்.

கத்தும் தரங்கம் எடுத்தஉஎறியக்
       கடுஞ்சூல் உளைந்து, வலம்புரிகள்
  கரையில் தவழ்ந்து, வாலுகத்தில்
       கான்ற மணிக்கு விலையுண்டு;
தத்தும் கரட விகடதட
       தந்திப் பிறைக்கூன மருப்பில் விளை
  தரளம் தனக்கு விலையுண்டு;
       தழைத்துக் கழுத்து வளைந்துமணிக்
கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்
       குளிர்முத் தினுக்கு விலையுண்டு; 
  கொண்டல் தருநித் திலந்தனக்குக்
       கூறும் தரம்உண்டு; உன்கனிவாய்
முத்தந் தனக்கு விலையில்லை;
       முருகா முத்தந் தருகவே!
  முத்தஞ் சொரியும் கடல்அலைவாய்
       முதல்வா! முத்தந் தருகவே!

பாம்பனடிகள் தம் முதுமைப் பருவத்தில் கால் முறிந்து சென்னைப் பெரிய மருத்துவ விடுதியில் கட்டிலில் படுத்திருந்தார். அதிகாலை ஆங்கில துரைமகனாராகிய மருத்துவத் தலைவர் வந்தபோது, அடிகளார் படுத்திருந்த கட்டிலில் அவர் அருகில் ஒரு குழந்தை படுத்திருக்கக் கண்டார். துணுக்குற்றார். ‘சந்நியாசியாகிய அடிகளார் அருகில் குழந்தை இருக்கக் காரணம் யாது?‘ என வியப்புற்று அருகில் சென்றார். குழந்தை மறைந்து விட்டது. ஆகவே பாம்பனடிகளுடன் முருகன் குழந்தையாக விளையாடி அருளினார்.

வரு நீதா ---

வள்ளி பிராட்டியின் தவமுதிர்ச்சி கண்டு பரிபக்குவம் வந்த போது முருகன் வந்து ஆட்கொண்டருளினார். அதனால் ‘நீதிபதியே‘  என்றார்.

யான் என்னும் செருக்கு அற்றார்பால் இறைவன் குருவடிவாக வந்து அருள் புரிதல் அவருடைய அருள்நீதியாகும்.

மொழியே உரைத்த குருநாதா ---

சுவாமிமலையில் பிதாவுக்கு முருகன் குருவாய் அமர்ந்து பிரணவப் பொருளை உபதேசித்தார் என்பது அத்தல வரலாறு. அதனால் குருமலை எனப்பட்டது. சுவாமிநாதன் ஆயினார். சுவாமிக்கு நாதன்.

தகையாது எனக்கு உன்அடிகாண வைத்த தனி ஏரகத்தின் முருகோனே ---

மாணிக்கவாசகருக்குத் திருக்கழுக்குன்றத்தில் பாத தரிசனங் கிடைத்தது.

உனக்கிலாததோர் வித்துமேல் விளையாமல்
         என்வினை யொத்தபின்
 கணக்கிலாத் திருக் கோலநீ வந்து
     காட்டினாய் கழுக்குன்றிலே”     --- திருவாசகம்

காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங் கால்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணி முக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியு நாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே.

20 காணி கால், சிவபெருமான் கால் காட்டியத் திருத்தலம் கழுக்குன்றம்.

அதுபோல் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் திருவடிக் காட்டியத் திருத்தலம் சுவாமிமலை.

 தடைபடாமல் உனது அடிகாண வைத்த தனியேரகம்” என்று இத் திருப்புகழில் பாத தரிசனச் சிறப்பைக் கூறுகின்றார்.

தரு காவிரிக்கு வட பாரிசத்தில் ---

திருவேரகம் என்ற சுவாமிலை, காவிரி நதிக்கு வடபுறத்தில் என்று அருணகிரிநாதர் விளக்கமாகக் கூறியுள்ளார்.

திருவேரகம், சுவாமிமலை என்பதை முன் கூறிய இரு திருப்புகழ்ப் பாடல்களில் விளக்கினார். இதில், அது காவிரிக்கு வடபால் என்றும் கூறினார்.

கருத்துரை

சிவகுருவே! திருவேரகத் தேவே! நீ மகவாய் வந்து முத்தந் தருவாய்.
                 


                 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...