சுவாமி மலை - 0217. சுத்திய நரப்புடன்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சுத்திய நரப்புடன் (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
பிறப்பும் இறப்பும் அற அருள்


தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தந்ததான


சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ
     டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை
     சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் ...... சங்குமூளை

துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு
     குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி
     துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக ......  வங்கமூடே

எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற
     லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை
     எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் ...... பஞ்சபூதம்

எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை
     யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்
     எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் ...... மங்குவேனோ

தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை
     யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்
     சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள ......மண்டியோடச்

சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்
     கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென
     சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட ......வென்றவேலா

சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன
     ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்
     சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட ......னங்கொள்வேளே

செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு
     றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை
     சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் ......தம்பிரானே.


பதம் பிரித்தல்


சுத்திய நரப்புடன், எலுப்பு, உறு தசைக் குடலொடு,
     அப்புடன், நிணச் சளி, வலிப்புடன் இரத்த குகை,
     சுக்கிலம், விளைப் புழுவொடு அக்கையும், அழுக்கு, மயிர், ......  சங்குமூளை,

துக்கம் விளைவித்த பிணையல், கறை முனைப் பெருகு
     குட்டமொடு, விப்புருதி, புற்று எழுதல், முட்டுவலி,
     துச்சி பிளவைப் பொருமல் பித்தமொடு உறக்கமிக ...... அங்கம் ஊடே

எத்தனை நினைப்பையும், விளைப்பையும், மயக்கம் உறல்
     எத்தனை சலிப்பொடு கலிப்பையும், மிடல்பெருமை
     எத்தனை கசத்தையும், மலத்தையும் அடைத்த குடில், ...... பஞ்சபூதம்

எத்தனை குலுக்கையும், மினுக்கையும், மனக்கவலை,
     எத்தனை கவட்டையும், நடக்கையும், உயிர்க் குழுமல்
     எத்தனை பிறப்பையும், இறப்பையும் எடுத்து உலகில் ...... மங்குவேனோ?

தத்தனத னத்தனத னத்தன எனத் திமிலை,
     ஒத்த முரசத் துடி, இடக்கை, முழவுப் பறைகள்,
     சத்த மறையத் தொகுதி ஒத்த செனி ரத்தவெளம்  ......மண்டி ஓடச்

சக்கிரி நெளிப்ப, அவுணப் பிணம் மிதப்ப ,மரர்
     கைத்தலம் விரித்து, "அரஹரச் சிவ பிழைத்தொம்" என
     சக்கிர கிரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட .....வென்றவேலா!

சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதித்து, உடன்
     அழித்து, கமலத்தனை மணிக்குடுமி பற்றி, மலர்
     சித்திர கரத்தலம் வலிப்பபல குட்டி நட ......னம் கொள் வேளே!

செட்டி வடிவைக் கொடு தினைப்புனம் அதில் சிறு கு-
     றப்பெண் அமளிக்குள் மகிழ் செட்டி! குரு வெற்பில்உறை
     சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர்புகழ் ......தம்பிரானே.


பதவுரை

         தத்தனத னத்தனத னத்தன என திமிலை ஒத்த ---- தத்தனத னத்தனத னத்தன என்று பறைகள் ஒலிக்கவும்,

         முரசு துடி --- முரசு என்ற வாத்தியமும், உடுக்கையும்

         இடக்கை --- இடக்கரத்தால் வாசிக்கும் தோல் கருவியும்,

         முழவு பறைகள் சத்தம் அறை ---- முழவு முதலிய பறைகளும் பெரிய ஒலி செய்யவும்,

         தொகுதி ஒத்த செனி --- கூட்டத்தினை ஒத்துத் தோன்றிய,

         ரத்தவௌ மண்டி ஓட --- உதிர வெள்ளம் நிரம்பி ஓடவும்,

         சச்கிரி நெளிப்ப --- ஆதிசேடன் நெளியவும்,

         அவுண பிணம் மிதப்ப --- அசுரப் பிணங்கள் அந்த உதிர வெள்ளத்தில் மிதக்கவும்,

         அமரர் கைத்தலம் விரித்து --- தேவர்கள் தமது கரங்களை விரித்து,

         அரஹர சிவ பிழைத்தோம் என --- ஹரஹர சிவ என்று துதித்துப் பிழைத்தோம் என்று கூறவும்,

         சக்கிரகிரி சுவர்கள் அக்கணமே பக்குவிட --- சக்ரவாள மலையின் சுவர்கள் அந்தக் கணத்திலே பிளவுபடவும்,

         வென்ற வேலா --- வென்ற வேலாயுதரே!

         சித்தம் அதில் --- தேவரீருடைய திருவுள்ளத்தில் நினைத்த மாத்திரத்தில்,

         எத்தனை சகதலம் விதித்து --- எத்தனையோ உலகங்களைப் படைத்தும்,

         உடன் அழித்து --- உடனே அவைகளை ஒடுக்கியும்,
        
     கமலத்தனை --- பிரமதேவனை,

         மணி குடுமி பற்றி --- அழகிய குடுமியைப் பிடித்து,

         மலர் சித்திர கரதலம் வலிப்ப --- மலர் போன்ற உமது அழகிய திருக்கரம் வருந்த,

         பல குட்டி --- பலமுறை குட்டியும்,

         நடம் கொள் வேளே --- திரு நடனம் புரிகின்ற செவ்வேள் பரமரே!

         செட்டி வடிவைக் கொடு --- செட்டி வேடம் பூண்டு,

         தினைபுனம் அதில் --- தினைப் புனத்திலே,

         சிறு குற பெண் அமளிக்கு உள் மகிழ் செட்டி --- சிறிய குறமகளாகிய வள்ளியம்மையின் படுக்கையில் மகிழ்ந்த செட்டியாரே!

         குரு வெற்பில் உறை --- சுவாமி மலையில் வாழ்கின்ற,

         சிற்பரமருக்கு --- ஞானப் பெரியராம் சிவமூர்த்திக்கு,

         ஒரு குருக்கள் என --- ஒப்பற்ற குருநாதர் என்று,

         முத்தர் புகழ் தம்பிரானே --- முத்தி நிலைப்பெற்ற ஞானிகள் புகழ்கின்ற தனிப்பெருந்தலைவரே!

         சுத்திய நரப்புகள் --- சுற்றப்பட்ட நரம்புகள்,

         எலுப்பு உறு தசை --- எலும்புகளைப் பொருந்தும் தசைகள்,

         குடல் ஒடு --- குடல்,

     அப்பு --- நீர்,

      நிணம் --- கொழுப்பு,

     சளி --- சளி,

     வலிப்பு உடன் --- இழுப்பு நோய்,

     இரத்த குகை --- உதிரம் சேரும் இரத்தாசயம்,

     சுக்கிலம் --- இந்திரியம்,

     விளை பழுவொடு ----- விளைகின்ற புழுக்கள்,

     அக்கையும் --- எலும்புகள்,

     அழுக்கு --- அழுக்குகள்,
    
     மயிர் --- மயிர்,

     சங்கு மூளை --- சங்கு போன்ற வெண்மையான மூளை,

     துக்கம் விளைவித்த பிணையல் --- துன்பத்தை விளைவிக்கின்ற நோய்கள்,

     கறைமுனை பெருகு குட்டம் ஒடு --- மாசுபடுமாறு விரல் நுனிகளில் வளர்ந்து வரும் தொழுநோய்,

     விப்புருதி --- கிரந்திப்புண்,

     புற்று எழுதல் --- புற்றுநோய்,

     முட்டுவலி --- கீல்வலி, 

     துச்சி பிளவை --- சதையைத் தின்கின்ற ராஜப்பிளவை,

     பொருமல் --- வயிற்று உப்பசம்,

     பித்தம் --- பித்தம்,

     உறக்கம் --- தூக்கம்,

     மிக அங்கம் ஊடே --- இவைகள் மிகுந்து வர இந்த உடம்பினுள்,

     எத்தனை நினைப்பையும் --- எத்தனை எண்ணங்கள்,

     விளைப்பையும் மயக்கம் உறல் --- எத்தனைச் செய்கைகள் எத்தனை மயக்கங்கள்,

     எத்தனை சலிப்பொடு --- எத்தனை வெறுப்புகள்,

     கலிப்பையும் --- எத்தனைப் பொலிவு,

     மிடல் பெருமை --- எத்தனை வலிமையால் வரும் பெருமை,

     எத்தனை கசத்தையும் மலத்தையும் அடைத்த குடில் --- எத்தனை க்ஷயநோய் மலம் இவைகளை நிரப்பிய குடில்,

     பஞ்ச பூதம் --- ஐம்பூதத்தால் ஆன குடில்,

     எத்தனை குலுக்கையும் --- எத்தனைக் குலுக்கு,

     மினுக்கையும் --- எத்தனை மினுக்கு,

     மனக்கவலை --- எத்தனை மனோ துக்கம்,

     எத்தனை கவட்டையும் --- எத்தனை வஞ்சனை,

     நடத்தையும் --- வஞ்சனை ஒழுக்கம்,

     உயிர்க் குழுமல் --- உயிரின் சேர்க்கை,

     எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில் மங்குவேனோ --- எத்தனைப் பிறப்பும் இறப்பும் எடுத்து அடியேன் உலகில் வாட்டமுற்று அழிவேனோ?


பொழிப்புரை

         தத்தன தனத்தன தனத்தன என்ற ஒலியுடன் பறைமுரசு உடுக்கை முழவு முதலிய வாத்தியங்கள் மிகவும் ஒலிக்கவும், கூட்டத்துக்கு ஏற்ற அளவில் தோன்றிய உதிர வெள்ளம் ஓடவும், ஆதிசேடன் நெளியவும், அசுரப் பிணங்கள் மிதக்கவும், தேவர்கள் கரதலங்களை விரித்து ‘ஹர ஹர சிவ பிழைத்தோம்‘ என்று கூறவும், சக்ரவாள மலையின் சுவர்கள் அக்கணத்திலேயே பிளவு படவும் வென்ற வேலாயுதரே!

         திருவுளத்தில் நினைத்து எண்ணில்லாத உலகங்கள் தோன்றி நின்று ஒடுங்குமாறு விதிக்கும் பெருமானே!

         பிரமனுடைய அழகிய குடுமியைப் பிடித்து, மலர்போன்ற அழகிய திருக்கரம் வலிக்குமாறு குட்டியருளிய நடம் புரிகின்ற செவ்வேளே!

         செட்டி வடிவில் சென்று தினைப்புனத்தில் இளங் குறமகளாகிய வள்ளியம்மையின் படுக்கையில் மகிழ்கின்ற செட்டி குமரனே!

         சுவாமி மலையில் வாழ்பவரே! ஞானப் பரம்பொருளாம் சிவமூர்த்திக்கு உபதேசித்த குருநாதன் என்று ஞானிகள் புகழ்கின்ற தனிப்பெரும் தலைவரே!

         சுற்றப்பட்டுள்ள நரம்புகள், எலும்புகளைப் பொருத்தும் மாமிசங்கள், குடல், நீர் கொழுப்பு, சளி, இழுப்பு நோய், இரத்தாசயம், சுக்கிலம், புழுக்கள், எலும்புகள், அழுக்குகள், மயிர் சங்குபோல் வெளுத்த மூளை, துன்பத்தை விளைவிக்கின்ற நோய், கறையைத் தந்து விரல் நுனிகளில் பெருகி வரும் குட்டம், சிலந்தி, புற்றுநோய், கீல்வாதம், சதையைத் தின்கின்ற பிளவை நோய், வயிற்று உப்பசம், பித்தம், தூக்கம் இவைகள் மிகுந்துவர இவ்வுடம்பினுள் எத்தனை எத்தனை எண்ணங்கள், செய்கைகள், மயக்கங்கள், எத்தனை வெறுப்பு, எத்தனைப் பொலிவு, வலிமையின் பெருமை, எத்தனை க்ஷய நோய் மலம் அடைந்துள்ள பஞ்ச பூதத்தால் ஆன குடிசை, எத்தனைக் குலுக்கு, மினுக்கு, மனக்கவலை, எத்தனை வஞ்சனை, நடத்தை, உயிரின் சேர்க்கை, எத்தனைப் பிறப்பையும் இறப்பையும் எடுத்து அடியேன் உலகில் வாட்டமுற்று அழியலாமோ?

   
விரிவுரை

சுத்திய நரப்பு ---

சுற்றிய என்ற சொல் சுத்திய என மருவி வந்தது.

இத்திருப்புகழில் சுவாமிகள் இந்த உடம்பின் தன்மையை எடுத்து விரிவாகக் கூறுகின்றார்.

பித்தம் இரத்தம் மலம் சலம் புழு நோய் முதலிய பலப்பல குடியிருக்கும் அசுத்த வீடு இந்த உடம்பு. இத்தகைய நிலையற்ற உடம்புடன் கூடிய உயிர்கட்கு எண்ணங்கள் பல; ஆரவாரங்கள் பல; ஆடம்பரங்கள் பல; சூதுவாதுகள் பல; நடை உடைகள் பல.

இதனால் இறப்பு பிறப்பு ஒழியாமல் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. எண்ணில் கோடி உடம்பு எடுத்து உயிர் இளைத்துவிட்டது. “எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்! ”என்கிறார் மணிவாசகர்.

உடம்பு எடுத்ததன் பயன் இனி உடம்பு எடுக்காது இருத்தலே ஆகும். பயனின்றிப் பல்லுயிர்களும் பரிதவிக்கின்றன.

சக்கிரி நெளிப்ப ---

அச்சத்தினால் ஆதிசேடனுடைய உடம்பு நெளிகின்றது. சக்கிரி-பாம்பு.


அமரர் கைத்தலம் விரிப்ப ---

தேவர்கள் அச்சத்தினால் கரங்களை விரித்துத் துதி செய்தார்கள்.

சித்தமதில் எத்தனை செகத்தலம் விதித்து ---

இறைவன் திருவுள்ளத்தில் நினைத்த மாத்திரத்தில் எண்ணில்லாத உலகங்கள் தோன்றுகின்றன; நிலை பெறுகின்றன; ஒடுங்குகின்றன.


கமலத்தனை மணிக் குடுமி பற்றி, மலர் சித்திர கரத்தலம்
வலிப்ப பல குட்டி நடனங் கொள் வேளே ---

         குமாரக்கடவுள் திருவிளையாடல் பல புரிந்து வெள்ளி மலையின் கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடுஞ் சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கைலாயமலையை நண்ணினர். பிரமனை யொழிந்த எல்லாக் கணர்களும் யான் எனது என்னும் செருக்கின்றி சிவபெருமானை வணங்கி வழிபட்டுத் திரும்பினார்கள். ஆங்கு கோபுரவாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும் புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன எழுந்தருளி வந்து அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.

பிரமதேவர் குமரக் கடவுளைக் கண்டு வணங்காது, “இவன் ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப் பெருமான் சிவன் வேறு தான் வேறன்று, மணியும் ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார்.

தருக்குடன் செல்லுஞ் சதுர்முகனை யழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது கைகுவித்து வணங்கிடாத பாவனையாக வணங்கினன். கந்தப்பெருமான் “நீ யாவன்” என்றனர். பிரமதேவர் அச்சங்கொண்டு “படைத்தல் தொழிலுடைய பிரமன்” என்றனன். முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர். பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன். “நன்று! வேதவுணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய இருக் வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர். சதுர்முகன் இருக்கு வேதத்தை ஓம் என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன். உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி! நிற்றி! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்குதி என்றனர்.

தாமரைத்தலை இருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாமறைத் தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர் பெற்று உடைக் குமரவேள், "நிற்றி, முன் கழறும்
ஓம் எனப்படு மொழிப்பொருள் இயம்புக" ன்று உரைத்தான்.    ---கந்தபுராணம்.

ஆறு திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன் வினவுதலும், பிரமன் அக்குடிலை மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன; சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய ஆணவம் அகன்றது; வெட்கத்தால் தலைகுனிந்தனன். நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை உணராமற் போனோமே? என்று ஏங்கினன்; சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை உணராது மருண்டு நின்றனன்.

குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர். பிரமன் “ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன். அது கேட்ட குருமூர்த்தி சினந்து, இம்முதலெழுத்திற்குப் பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும் புரிகின்றனையோ? பேதாய்!” என்று நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.

சிட்டி செய்வது இத் தன்மையதோ? னச் செவ்வேள்
 குட்டினான், அயன் நான்குமா முடிகளும் குலுங்க”        ---கந்தபுராணம்.

பிரமதேவனது அகங்காரம்  முழுதும் தொலைந்து புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.

வேதநான்முக மறையோ னொடும் விளை
  யாடியே குடுமியிலே கரமொடு
  வீரமோதின மறவா”                      --- (காணொணா) திருப்புகழ்.

அயனைக் குட்டிய பெருமாளே”       ---- (பரவை) திருப்புகழ்.

ஆர ணன்றனை வாதாடி ஓருரை
 ஓது கின்றென வாராது எனாஅவன்
 ஆண வங்கெட வேகாவலாம்அதில்      இடும்வேலா  --- (வாரணந்) திருப்புகழ்.

      “.......................................படைப்போன்
அகந்தை உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
     உகந்த பிரணவத்தின்உண்மை -- புகன்றிலையால்
சிட்டித் தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
     குட்டிச் சிறைஇருத்தும் கோமானே”       --- கந்தர் கலிவெண்பா.


செட்டி வடிவைக் கொடு ---

முருகவேள் வள்ளிபிராட்டியைக் காத்தருளும் பொருட்டு வளையல் செட்டியாராக வனம் போனார். “செட்டியப்பனை” என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் கூறுகின்றார்.

  செட்டியென்று வனமேவி இன்பரச
      சக்தியின் செயலினாளை யன்புருக
      தெட்டி வந்து புலியூரின் மன்றுள்வளர் பெருமாளே”   ---  (கட்டிமுண்ட) திருப்புகழ்

      ... ... ... ... ... ... ... “வள்ளி
      கைவளையல் ஏற்றி, ரு காலில் வளைந்து ஏற்றி
      மைவளைய நெஞ்ச மயல் ஏற்றி - வெய்ய
      இருட்டு விடியாமுன் இனத்தவர் காணாமல்
      திருட்டு வியாபாரம் செய்செட்டி, - வெருட்டியொரு
      வேடுவனாய் ஓர் புலவன் வெண்பாவைக் கைக்கொண்டு
      கோடு திரியும் குறச்செட்டி, - பாடாநல்
      கீரனைப் பூதத்தால் கிரிக்குகையுள் கல்சிறைசெய்து
      ஓர் அரிய பாவை உகந்து அணைந்து - கீரனுக்கு
      வீட்டுவழி காட்டியிடும் வேளாண்மையாம் செட்டி,
      ஆட்டில் உவந்து ஏறும் அன்ன தானசெட்டி, - ஈட்டுபுகழ்
      தேவேந்திரன் மகள்பால் சிந்தைகுடி கொண்ட செட்டி,
      நாவேந்தர்க்கே இன்பம் நல்கு செட்டி, - பூ ஏந்திக்
      கண்டு பணிபவர் தம் காசு பறிக்கும் செட்டி,
      பண்டு அறுவர் ஊட்டு தனபால் செட்டி, - தொண்டர்
      மதுரையில் சொக்கப்ப செட்டி மைந்தன் இளம் செட்டி,
      குதிரை மயில் ஆமு குமர செட்டி, சதிர் உடனே
      சீவ பர ஐக்கியம் செய்திடு கந்தப்ப செட்டி,
      மூவர் வணங்கும் முருகப்ப செட்டி - பாவனைக்கும்
      அப்பாலுக்கு அப்பாலாம் ஆறுமுக செட்டி, இவன்
      தப்பாமல் கண்டால் உன் தன்னை விடான், - இப்போதுஎம்
      வீட்டில் அவல் வெல்லம் வேணது உண்டு வா எனச் சீர்
      ஆட்டி அனைமார் அகம் புகுந்தார்”              --- தணிகையுலா


முத்தர் புகழ் ---

முத்தர்-விடுபட்டவர். பந்தத்தினின்றும் விடுபடுவது வீடு. வீடு என்ற சொல் தமிழ். முத்தி என்பது வடசொல். பந்த பாசத்தால் கட்டுப்பட்டுள்ள ஆன்மாக்கள், அக் கட்டினின்றும் விடுபடுவதே முத்தி என உணர்க.

அங்ஙனம் விடுபட்டவர்கள் சீவன் முத்தர்கள். இத்தகைய முத்தர்கள் புகழ்கின்ற தெய்வம் முருகன்.

கருத்துரை

சுவாமிமலையில் வாழும் முருகக் கடவுளே! பிறப்பும் இறப்பும் அற அருள்புரிவாய்.


No comments:

Post a Comment

சிறுநெருப்பு என்று மடியில் முடிந்துகொள்ளக் கூடாது.

  சிறுநெருப்பு என்று மடியில் முடிந்துகொள்ளலாமா ?  கூடாதே. -----                அரும்பெரும் பொருள் எதுவானாலும் ,  அதனை இகழ்தல் கூடாது. காரணம்...