சுவாமி மலை - 0216. சரண கமலாலயத்தை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சரண கமலாலயத்தை (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
இம்மையில் சகலசெல்வம் மிக்க பெருவாழ்வையும்,  
மறுமையில் பரகதியையும் அருள்.


தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான


சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
     தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத

சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
     தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ

கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
     கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே

கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
     கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
     சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு

தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
     தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
     அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா

அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
     அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.


பதம் பிரித்தல்


சரண கமல ஆலயத்தை அரைநிமிஷ நேரம் மட்டில்
     தவமுறை தியானம் வைக்க ...... அறியாத

சட கசட மூட மட்டி, பவ வினையிலே சனித்த
     தமியன், மிடியால் மயக்கம் ...... உறுவேனோ?

கருணை புரியாது இருப்பது என குறை? இவ்வேளை செப்பு,
     கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே!

கடக புய மீது இரத்ன மணி அணிபொன் மாலை செச்சை
     கமழும் மணம் ஆர் கடப்பம் ...... அணிவோனே!

தருணம் இது ஐயா! மிகுத்த கனம்அதுஉறு நீள்ச வுக்ய,
     சகல செல்வ யோகம் மிக்க ...... பெருவாழ்வு,

தகைமை சிவஞான முத்தி, பரகதியும் நீ கொடுத்து
     உதவி புரிய வேணு நெய்த்த ...... வடிவேலா!

அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க
     அரிய தமிழ் தான் அளித்த ...... மயில்வீரா!

அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை மீது உதித்த
     அழக! திரு ஏரகத்தின் ...... முருகோனே!

பதவுரை

      கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே --- வெள்ளிமலை மேவும் சிவபெருமான் பெற்றருளிய குமாரக் கடவுளே!

      கடக புயம் மீது --- கடகங்களை அணிந்துள்ள புயங்களில்,

     ரத்னமணி அணி --- இரத்தினங்களைப் பதிய வைத்துள்ள அணிகலன்களையும்,

     பொன்மாலை --- பொன் மாலைகளையும்,

     செச்சை --- வெட்சிப் பூவையும்,

     மணம் கமழும் ஆர் கடப்பம் அணிவோனே --- வாசனை வீசும் அருமையான கடப்ப மலர் மாலையையும் தரித்துக் கொண்டிருப்பவரே!

      நெய்த்த வடி வேலா --- நெய் பூசப் பெற்றதும்,  கூர்மையுடையதும் ஆகிய வேற்படையை உடையவரே!

      அருண தள பத்ம பாதம் அது --- சிவந்த இதழ்களையுடைய தாமரைக்கு நிகரான தேவரீருடைய திருவடிகளை

     நிதமும் (ஏ- அசை) துதிக்க --- நாள்தோறும் நாவாரத் தோத்திரம் புரிய,

     அரிய தமிழ்தான் அளித்த மயில் வீரா --- அருமையான செந்தமிழ் புலமையைக் கொடுத்தருளிய மயில் வாகனத்தை உடையவரே!

         அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை மீது உதித்த அழக --- பல அதிசயங்கள் நிறைந்த, பழநி என்னும் திருமலைமேல் தோன்றிக் காட்சி வழங்கும் பேரழகு உடையவரே!

         திரு ஏரகத்தின் முருகோனே --- திரு ஏரகம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானே!

         சரண கமல ஆலயத்தை அரை நிமிஷ நேரமட்டில் --- தாமரைக்கு நிகரானதும் ஆன்மாக்கள் ஒடுங்கு மிடமாகிய தேவரீருடைய திருவடியை அரை நிமட நேரமேனும்,

     தவமுறை தியானம் வைக்க அறியாத --- தவமுறைப்படி, ஒருமுகப்பட்டு ஐம்புலன்களையும் அடக்கி சிவயோகத்தில் கருத்தை வைத்து நினைக்குந் தன்மையை உணராத,

     சட, கசட, மூட, மட்டி ---- அறிவில்லாதவனும், - மாசுடையவனும், - மயக்கத்தை உடையவனும், தெளிவில்லாதவனும்,

     பவ வினையிலே சனித்த தமியன் --- பிறப்பு இறப்புக்குரிய தீவினை வசத்தால் பிறந்தவனும், திக்கற்றவனுமாகிய அடியேன்

     மிடியால் மயக்கம் உறுவேனோ --- அருட்செல்வமற்று வறுமையால் மயக்கத்தை அடையலாமோ?

      கருணை புரியாது இருப்பது என குறை --- கருணை வள்ளலாகிய தேவரீர் அல்லல்படும் அடியேன் மீது கருணை செய்யாமல் இருப்பதற்குக் காரணம், அடியேன் செய்த குற்றம் யாது?

     இ வேளை செப்பு --- இந்த வேளையில் திருவாய் மலர்ந்தருள்வீர்.

      ஐயா --- என் ஐயனே!

     இது தருணம் --- திருவருள் பெறுவதற்கு இது நல்ல தருணமாகும்.

     மிகுத்த கனம் அது உறு --- மிகுந்த பெருமையை உடைய,

     நீள் சவுக்ய --- என்றும் இடையறாத பரசுகத்தையும்,

     சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு --- கல்விச் செல்வம், செவிச் செல்வம், சொற்செல்வம், அருட்செல்வம் முதலிய எல்லாச் செல்வங்களுடனும் கூடிய பெரிய வாழ்வையும்,

     தகைமை, சிவஞானம், முக்தி பரகதியும் நீ கொடுத்து உதவிபுரிய வேணும் --- தகுதியையும், - பதியறிவையும், பிறவாப் பெற்றியாகிய மோட்சத்தையும், தேவரீர் தந்தருளி, துணை செய்து காத்தருள்வீர்.

பொழிப்புரை

         திருக்கயிலாய மலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் பெற்றருளிய குமாரக் கடவுளே!

         வஜ்ர கடகங்களை அணிந்துள்ள புயங்களின் மீது, இரத்தினங்கள் இழைத்த திருவாபரணங்களையும், பொன் மாலைகளையும், வெட்சி மலர் மாலையையும் தரித்துக் கொண்டிருப்பவரே!

         நெய் பூசப் பெற்றதும் கூர்மையுடையதுமாகிய வேற்படையை உடையவரே!

         சிவந்த இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற தேவரீருடைய திருவடிகளை நாள்தோறும் நாவாரத் துதிக்க அருமையான செந்தமிழ்ப் புலமையை தந்தருளிய மயில் வாகனத்தை உடையவரே!

         பற்பல அதிசயங்களையுடைய பழநிமலைமேல் அருட்கோலங்கொண்டு விளங்கும் கட்டழகுடையவரே!

         திருவேரகம் என்னும் சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே!

         தாமரைக்கு நிகரானதும் ஆன்மாக்கள் ஒடுங்குமிடமு மாகிய தேவரீருடைய திருவடியை, அரை நிமிஷ நேரமாகிலும் ஒரு முகப்பட்டு புலன்களையடக்கி தவ முறைப்படி தியானஞ் செய்யுந் தன்மை யுணராதவனும், அறிவில்லாதவனும், குற்றமுடையவனும், மூடனும், மட்டியும், பிறவிக்குக் காரணமாகிய தீவினையால் பிறந்துழலுபவனுமாகிய அடியேன் அருட்செல்வமற்ற வறுமையால் மயக்கத்தையடைந்து துன்புறுவது முறையோ? கருணைக் கடலாகிய தேவரீர் அடியேன் மீது கருணை செய்யாம லிருப்பதற்குக் காரணம்-என்மீதுள்ள குற்றம்-யாது? இந்த வேளையில் திருவாய் மலர்ந்தருள்வீர் ஐயா. திருவருள் புரிவதற்கு இது நல்ல தருணம்; மிகுந்த பெருமையுடைய, இறுதியற்ற பேரின்பத்தையும், எல்லா வகையான செல்வங்களுடன் கூடிய பெருவாழ்வையும், தகுதியையும், பதியறிவையும், பிறவாப் பெற்றியாகிய மோட்ச நலத்தையும் தேவரீர் தந்தருளி உதவி புரிந்தருள்வீர்.


விரிவுரை

சரண கமல ஆலயம் ---

ஆலயம்-தங்குமிடம்; உயிர்கள் பிறவித் துன்பத்தால் உண்டாகிய இளைப்பு நீங்க அடையும் இடம் முருகவேளுடைய திருவடியே ஆம். “காவிக் கமலக் கழலுடன் சேர்த்து எனைக் காத்து அருள்வாய்” “எனக்கிடம் உனது பதச் சரண்” “திருவடியில் அணுக வரம் அருள்வாயே” என்ற சுவாமிகள் திருவாக்குகளை உய்த்து உணர்க. “இறைவன் திருவடி நீழல் எய்தினர்” என்று உலகங்கூறும் உபசார வழக்கும் இது பற்றியேயாம்.

அத்தகைய திருவடியை அரைக்கணமேனும் நினைத்து தவமுறைப்படி தியானஞ் செய்யவேண்டும்.

ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார், பரம ஆனந்தத்தே
தேங்கார், நினைப்பும் மறப்பும் அறார், தினைப் போது அளவும்
ஓங்காரத்து உள் ஒளிக்கு உள்ளே முருகன் உருவம் கண்டு
தூங்கார் தொழும்பு செய்யார், என் செய்வார் யம தூதருக்கே. --- கந்தர்அலங்காரம்

தவமுறை தியானம் ---

தவமுறையாவது உற்ற நோய் நோன்று உயிர்க்கு உறுகண் செய்யாது, பொறி புலனடக்கி, மனத்தை ஒரு முகப்படுத்தி, சித்திரத் தீபம் போல் அசைவற்று நின்று,உயிராவணமிருந்து, உள்ளக் கிழியில் அவன் உருவெழுதி, உற்று நோக்கி இருக்கும் நிலையாம்.

நீறு ஆர்த்த மேனி உரோமம் சிலிர்த்து, உளம் நெக்குநெக்குச்
சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி, நின் சீரடிக்கே
மாறாத் தியானம் உற்று ஆனந்தம் மேற்கொண்டு, மார்பில்  கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடப்பது என்றோ? கயிலாயத்தனே!       --- பட்டினத்தடிகள்

மிடியால் மயக்கம் உறுவேனோ ---

மிடி-வறுமை, இங்கே அருட்செல்வம் இன்மையைக் குறிக்கின்றது. அருட் செல்வம் உடையாரே செல்வராம். ஏனைய பொருட்செல்வ முதலியன இருக்கினும் வறுமையாளரேயாம்.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம், பொருட்செல்வம்
 பூரியார் கண்ணும் உள”                      --- திருக்குறள்

திருவருள் இன்மையால் உண்மை நெறி ஈது என்றுஉணராது மயக்கம் உறுகின்றேன்” என்றார்.


கருணை புரியாது இருப்பது என குறை ---

முருகவேள் கருணை வடிவினர். கருணாகரர். கருணைக் கடல். கருணை மேரு. கருணை மேகம். அவருடைய ஆறுதிருமுகங்களிலும் குற்றால நீர்வீழ்ச்சியினும் பல்லாயிர மடங்கு மிகுதியாகக் கருணை பொழிந்து கொண்டிருக்கின்றது.

கருணைபொழி கமலமுகம் ஆறும்”       --- (ஒருவரையும்) திருப்புகழ்

உனதுமுக கருணை மலர் ஓர் ஆறும்”    --- (உறவின் முறை) திருப்புகழ்

மறுஅறு கடல்என மருவு பனிருவிழி
   வழிந்த அருளே பொழிந்தது ஒருபால்”      --- கொலுவகுப்பு

கருணை மேகமே! தூய கருணை வாரியே! ஈறில்
   கருணை மேருவே! தேவர்              பெருமாளே“  --- (அமலவாயு) திருப்புகழ்

முகம் பொழி கருணை போற்றி” என்ற அருமைத் திருவாக்குகளை உன்னுக. “இத்தகைய கருணைக் கடவுளாக இருந்தும் கருணை புரியாமல் இருப்பதற்கு யான் செய்த குற்றம் யாது? தன் குற்றம் தனக்குத் தெரியாதாதலினால் தேவரீரே, இந்த வேளையில் ‘நீ இன்ன குற்றத்தை யுடையவன்‘ என்று சொல்லி அருளினால், ஆண்டவனே! அக்குற்றத்தினின்றும் விடுபட்டு அடியேன் உய்வேன்” என்று சுவாமிகள் வேண்டுகின்ற திறம் எத்துணை அருமைப் பாட்டினை உடையதாக இருக்கின்றது என்பதை நினைக்க நெஞ்சம் நெகிழ்கின்றது. உள்ளுந்தோறும் உள்ளம் உருகுகின்றது.

கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே ---

கயிலாயபதியாகிய கண்ணுதற் கடவுள். குற்றமே செயினும் குணங்களாகக் கொள்ளுமியல்பினர். குருத்துரோகியாகிய சந்திரனையும், கயிலாய மலையைத் தூக்கிய இராவணனையும், வில்வக் கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையையும் ஆட்கொண்ட அருட்கடல்: பன்றிக் குட்டிகட்கும் பால் கொடுத்த பரம கருணை வள்ளல்.

மற்றுநான் பெற்றதுஆர் பெறவல்லார்,
         வள்ளலே, கள்ளமே பேசிக்
குற்றமே செயினும் குணமனக் கொள்ளும்
         கொள்கையால் மிகைபல செய்தேன்,
செற்று மீதுஓடும் திரிபுரம்எரித்த
         திருமுல்லை வாயிலாய், அடியேன்
பற்றுஇலேன், உற்ற படுதுயர் களையாய்,  
     பாசுபதா பரஞ்சுடரே                      --- சுந்தரர்,

வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால்
பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கைசடைச்
செறுப்பவனே! நின் திருவருளால் என் பிறவியை வேர்
அறுப்பவனே! உடையாய்! அடியேன்உன் அடைக்கலமே.   --- மணிவாசகர்

இத்தகைய குற்றத்தைக் குணமாகக் கொள்ளும் குன்றவில்லியார் ஈன்ற புதல்வராதலால், தேவரீரும் என் குற்றத்தைப் பொறுத்தருளல் வேண்டும் என்பது குறிப்பு.
  
கடக புய மீதில்.....................அணிவோனே ---

பொன்மலையைக் கையிலேந்தி வெள்ளிமலையில் வாழும் விடையவன் புதல்வராதலால் உம்முடைய பெருமிதத்திற்குத் தக்கவாறு நவரத்னாபரணங்களும் பொற்கலன்களும் மலர்மாலைகளும் அணிந்து கொண்டிருக்கின்றீர். அடியேன் மிடியால் துன்புறுகின்றேன். ஆதலால் அடியேனை யாள்வது உமக்கே கடன்” என்று விளக்குகின்றனர்.

தருணம் இது ஐயா ---

“திருவருள் பெறுவதற்கு இது நல்ல தருணம்” என்கிறார். மனிதப் பிறப்பாதலினாலும் இறைவனை நினைக்கும் பேறு உடைமையினாலும் நல்ல தருணமாகின்றது.
   
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு ---

மக்கட்செல்வம், மனைச்செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம், சொற்செல்வம், செவிச்செல்வம், கல்விச்செல்வம், முதலியன. இவைகள் இம்மைப் பயன்கள்.

தகைமை சிவஞான முக்தி பரகதி ---

இவைகள் மறுமைப் பயன்கள்.

அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை:-

பழநிமலையில் பற்பல அதிசயங்கள் காணப்படுகின்றன. அங்கே ஆண்டவருக்கு வள்ளிதேவசேனை இல்லை; ஆயினும் பள்ளியறை உண்டு. கண்ணிலார்க்குக் கண் தருவதும், பிணியுற்றார் பிணி தீர்வதும் அங்கே கண் கூடு. பழ நிமலை எனப்பிரித்து, பழையவளாகிய அம்பிகையினிடம் தோன்றி விளங்கும் அழகன் எனவும் பொருள் கொள்ளலாம்.

அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா ---

உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியேயாம். இறைவனருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழேயாம். இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்த மையாலும், பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ்; கற்புணையை நற்புணையாக்கியது தமிழ்; எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ்; இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ்; குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ்; கற்றூணில் காட்சிதரச் செய்தது தமிழ்; பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ்; இயற்கையான மொழி தமிழ்; பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ். ஆதலால் நம் அருணகிரியார் “அரிய தமிழ்” என்று வியக்கின்றார். மயில் வீரா என்றதனால் தமிழுக்கும் மயிலுக்கும் சம்பந்தம் உண்டு. தமிழ் ஓங்கார வடிவத்தைக் காட்டியாடுவது மயில், ஏனைய மொழிகளின் ஓங்காரத்தை அது காட்டுவதில்லை; ஆதலால், மயில் வீரா என்று விளித்தனர்.

கருத்துரை

சிவ குமாரரே! இரத்தினாபரணரே! வேலவரே! தமிழளித்த மயில் வீரரே! பழநியிலும் ஏரகத்திலும், மற்றும் பலப்பல திருத்தலங்களிலும் எழுந்தருளி இருப்பவரே! உமது கருணையால், இப்பிறவியில் சகல செல்வங்களையும், மறுமையில் பரகதியையும் தந்து அருளவேண்டும்.






No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...