சுவாமி மலை - 0215. கோமள வெற்பினை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கோமள வெற்பினை (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
மாதர் மயல் அற அருள்


தானன தத்தன தத்தன தத்தன
     தானன தத்தன தத்தன தத்தன
          தானன தத்தன தத்தன தத்தன ...... தனதான


கோமள வெற்பினை யொத்தத னத்தியர்
     காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள்
          கோவையி தழ்க்கனி நித்தமும் விற்பவர்...மயில்காடை

கோகில நற்புற வத்தொடு குக்குட
     ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல்
          கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள் ...... விரகாலே

தூமம லர்ப்பளி மெத்தைப டுப்பவர்
     யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர்
          சோலைவ னக்கிளி யொத்தமொ ழிச்சியர் ....நெறிகூடா

தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர்
     காசுப றிக்கம றித்துமு யக்கிகள்
          தோதக வித்தைப டித்துந டிப்பவ ...... ருறவாமோ

மாமர மொத்துவ ரிக்குணெ ருக்கிய
     சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி
          வாரண மெச்சஅ ளித்தஅ யிற்குக ...... கதிர்காம

மாமலை யிற்பழ நிப்பதி யிற்றனி
     மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர
          மாகிரி யிற்றிரை சுற்றிவ ளைத்திடும் .....அலைவாயில்

ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி
     னாலுல கத்தினி லுற்றுறு பத்தர்கள்
          ஏதுநி னைத்தது மெத்தஅ ளித்தரு ...... ளிளையோனே

ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு
     வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ
          ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

கோமள வெற்பினை ஒத்த தனத்தியர்,
     காமனை ஒப்பவர், சித்தம் உருக்கிகள்,
     கோவை இதழ்க்கனி நித்தமும் விற்பவர், ......மயில்காடை

கோகில நல்புற வத்தொடு குக்குட
     ஆரணியப் புள் வகைக்குரல் கற்று,கல்
     கோல விழிக்கடை இட்டு மருட்டிகள், ...... விரகாலே

தூம மலர்ப் பளி மெத்தை படுப்பவர்,
     யாரையும் எத்தி மனைக்குள் அழைப்பவர்,
     சோலை வனக்கிளி ஒத்த மொழிச்சியர், ...... நெறிகூடா

தூசு நெகிழ்த்து ரை சுற்றி உடுப்பவர்,
     காசு பறிக்க மறித்து முயக்கிகள்,
     தோதக வித்தை படித்து நடிப்பவர் ...... உறவு ஆமோ?

மாமரம் ஒத்து உவரிக்குள் நெருக்கிய
     சூரனை வெட்டி, நிணக் குடலைக் கொடி
     வாரண மெச்ச அளித்த அயில் குக! ...... கதிர்காம

மாமலையில் பழநிப்பதியில் தனி
     மாகிரியில் தணிகைக் கிரியில், பர
     மாகிரியில், திரை சுற்றிவ ளைத்திடும் ...... அலைவாயில்,

ஏம வெயில் பல வெற்பினில், நல் பதி-
     னாலு உலகத்தினில் உற்று உறு பத்தர்கள்
     ஏது நினைத்தது மெத்த அளித்துஅருள்...... இளையோனே!

ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க, சு-
     வாமி மலைப்பதி மெச்சிய சித்த!இ-
     ராஜத லட்சண லட்சுமி பெற்றருள் ...... பெருமாளே.

பதவுரை

      மாமரம் ஒத்து --- மாமரம் போன்ற உருவத்துடன்

     உவரிக்குள் நெருங்கிய சூரனை வெட்டி --- கடலில் நெருங்கி நின்ற, சூரனைப் பிளந்து,

     நிண குடலை --- அவனுடைய மாமிசக் குடலை,

     கொடி வாரணம் மெச்ச அளித்த --- கொடியாக நின்ற சேவல் மகிழுமாறு தந்த

     அயில் குக ---- வேலையுடைய குகப் பெருமானே!

     கதிர்காம மாமலையில் --- கதிர் காமம் என்னும் பெருமை மிக்க மலையிலும்,

     பழநி பதியில் --- பழநி அம்பதியிலும்,

      தனி மாகிரியில் --- தனிச்சயம் என்னும் தலத்திலும்,

     தணிகை கிரியில் --- திருத்தணிகை மலையிலும்,

     பரமா கிரியில் --- திருப்பரங்குன்றத்திலும்,

     திரைசுற்றி வளைத்திடும் அலைவாயில் ---  கடல் சூழ்ந்து வளைந்துள்ள அலைவாய் என்ற திருச்செந்தூரிலும்,

     ஏமவெயில் பல வெற்பினில் --- இன்பந்தரும் ஒளிவீசும் பல மலைகளிலும்,

     நல் பதினால் உலகத்தினில் உற்று உறு பக்தர்கள் --- நல்ல பதினாலுலகங்களிலும் பொருந்தி யிருக்கின்ற பக்தர்கள்,

     ஏது நினைத்ததும் மெத்த அளித்து அருள் இளையோனே --- எது நினைத்தாலும் அதனை நினைத்தபடி நிரம்ப வழங்கியருளும் இளம்பூரணரே!

      ஏரக வெற்பு எனும் --- ஏரக மலையென்று கூறுகின்ற,

     அற்புதம் மிக்க --- அதிசயம் மிகுந்த

     சுவாமிமலை பதி மெச்சிய சித்த --- சுவாமிமலையாகிய தலத்தில் மகிழ்ந்து வாழ்கின்ற சித்தரே!

      இராஜத லட்சண லட்சுமி பெற்று அருள் பெருமாளே --- இராஜத லட்சணம் நிறைந்த உமையம்மையார் பெற்றருளிய பெருமை மிகுந்தவரே!

      கோமள வெற்பினை ஒத்த தனத்தியர் --- அழகிய மலைப் போன்ற கொங்கைகளையுடையவர்கள்,

     காமனை ஒப்பவர் --- இச்சையை எழுப்புவதில் மன்மதனைப் போன்றவர்கள்,

     சித்தம் உருக்கிகள் --- ஆடவருடைய மனத்தை உருக்குபவர்கள்,

     கோவை இதழ்கனி நித்தமும் விற்பவர் --- கொவ்வைக்கனி போன்ற இதழைத் தினந்தோறும் விற்பவர்கள்,

     மயில் --- மயிலைப் போலவும்,

     காடை --- காடைப் பறவையைப் போலவும்,

     கோகிலம் --- குயிலைப் போலவும்,

     நல் புறவத்தொடு --- அழகிய புறாவைப் போலவும்,

     குக்குடம் --- சேவலைப் போலவும்,

     ஆரணிய புள்வகை குரல் கற்று --- காட்டுப் பறவைகளைப் போலவும் கூவுகின்ற குரல்களைப் பயின்று,

     இகல் கோலவிழி கடை இட்டு மருட்டிகள் --- புரண்டு மாறுபடுகின்ற அழகிய கண் முனையைச் செலுத்தி மயக்குபவர்கள்,

     விரகாலே தூம மலர் பள்ளி மெத்தை படுப்பவர் --- தந்திரத்துடன், நறும்புகை மணங்கமழும் மலர்ப் படுக்கையாகிய மெத்தையில் படுப்பவர்கள்,

     யாரையும் எத்தி மனைக்குள் அழைப்பவர் --- யாரையும் ஏமாற்றி தம் வீட்டுக்குள் அழைப்பவர்கள்,

     சோலைவன கிளி ஒத்த மொழிச்சியர் --- சோலையில் உள்ள அழகிய கிளி போன்ற மொழிகளை உடையவர்கள்,

     நெறிகூடா தூசு நெகிழ்த்தி அரை சுற்றி உடுப்பவர் --- நன்நெறிப் பொருந்தாத வகையில், ஆடையைத் தளர்த்தியும், அரையில் சுற்றியும் உடுப்பவர்கள்,

     காசு பறிக்க மறித்து முயக்கிகள் --- பணம்பறிக்க வேண்டி,  தம் வீட்டிற்குள் வந்தவரை வெளியே செல்லவிடாமல்) தடுத்துச் சேர்பவர்கள்,

     தோதக வித்தை படித்து நடிப்பவர் உறவு ஆமோ --- வஞ்சக வித்தைகளைக் கற்று நடிப்பவர்களாகிய பொதுமாதருடைய, நட்பு ஆகுமோ? (ஆகாது.)


பொழிப்புரை

         மாமரம் போன்ற உருவத்துடன் கடலுள் நெருக்கி நின்ற சூரனைப் பிளந்து அவனுடைய மாமிசக் குடலைத் தன் கொடியாகிய சேவலுக்குத் தந்த வேலை ஏந்திய குகமூர்த்தியே!

         பெருமை மிக்க கதிர்காம மலையிலும் பழநியம்பதியிலும், தனிச்சயம் என்ற தலத்திலும், தணிகை மலையிலும், திருப்பரங் குன்றத்திலும், கடல் சூழ்ந்த திருச்செந்தூரிலும், இன்பவொளி வீசும் பல மலைகளிலும், நல்ல பதினாலு உலகங்களிலும் வாழுகின்ற அடியவர்கள் நினைத்தவற்றை எல்லாம் வழங்கியருளும் இளம்பூரணரே!

         திருவேரகம் என்கின்ற அதிசய மிக்க சுவாமிமலையில் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற சித்தமூர்த்தியே!

         இராஜத லட்சணமுள்ள பார்வதி தேவியார் பெற்றருளிய பெருமிதம் உடையவரே!

         அழகிய மலைபோன்ற தனங்களையுடையவர்கள்; ஆண்களின் மனத்தை உருக்குபவர்கள்; கொவ்வைக் கனிப் போன்ற தம் இதழை நாடோறும் விற்பவர்கள்; மயில், காடை, குயில், நல்ல புறா, கோழி மற்றும் கானகத்திலுள்ள பறவை வகைகள் குரல்களைப் பயின்று அதுபோல் கூவி, புரளுகின்ற கடைக்கண் பார்வையால் மயக்குபவர்கள்; வஞ்சனையால் நறும் புகை மணங் கமழ்கின்ற மலர் பரப்பிய பஞ்சணையில் படுப்பவர்கள்;  யாரையும் ஏமாற்றித் தம் வீட்டுக்குள் அழைப்பவர்கள்; சோலையிலுள்ள அழகிய கிளி போன்ற மொழிகளை யுடையவர்கள்; நென்னெறி பொருந்தாதவர்கள், உடையைத் தளர்த்தியும் அரையில் சுற்றியும் உடுப்பவர்கள்; (ஆடவரிடம்) பணம் பறிக்க வேண்டித் (தம் வீட்டிற்குள் வந்தவரை வெளியே செல்லவிடாமல்) தடுத்து அணைப்பவர்கள்; வஞ்சக வித்தைகளைப் படித்து நடிப்பவர்கள் ஆகிய விலை மகளிரின் உறவு ஆகுமோ? (ஆகாது.)


விரிவுரை

இத்திருப்புகழில் முதலில் நான்கு அடிகளுள் பொது மகளிரின் தோதகங்களைப் பற்றிக் கூறி, அவர்களது நட்பு கூடாது என்று அடிகளார் கூறுகின்றனர்.
  
மாமரம் ஒத்து உவரிக்குள் நெருக்கிய ---

சூரபன்மன் முடிவில் கடலில் மரமாக நின்று இரும்புமயமான கிளைகளை அசைத்து உலகங்களை இடர்ப்படுத்தினான்.

கொடிவாரண மெச்ச அளித்த ---

வாரணம்-கோழி. முருகவேள் தன் கொடியாகத் தேர் மேல் இருந்த சேவலுக்கு சூரபன்மனுடைய குடலை உணவாகத் தந்தார். சூரபன்மனைப் பிளந்த பின் ஒரு பாதி சேவலாகவும், மற்றொரு பாதி மயிலாகவும் வந்தான். எனவே முன் சேவல் கொடி ஏது? என்ற ஐயம் எழக்கூடும்.

சூரனை வதைக்கும் முன்னரேயே அக்கினிதேவன் சேவல் கொடியாக நின்று கூவி வெற்றியை விளம்பினான். ஆகவே சூரனுடைய குடலை அவனுக்குத் தந்தவுடன் கொடியாக நின்ற அக்கினிதேவன் அதனையுண்டு மகிழ்ச்சியுற்றான்.

ஏவலோடும் எரிதழல் பண்ணவன்
வாவு குக்குட மாண்கொடி ஆகியே
தேவ தேவன் திருநெடுந் தேர்மிசை
மேவி ஆர்த்தனன் அண்டம் வெடிபட          --- கந்தபுராணம்


பக்தர்கள் ஏது நினைத்தது மெத்த அளித்தருள் --

முருகவேள் அடியவர்கள் நினைத்த பொருள் அத்தனையும் நினைத்த வண்ணம் வழங்கியருள் புரிகின்றார்.

அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன
   அவை தருவித்துஅருள்         பெருமாளே”        ---  (கலகலெனச்) திருப்புகழ்

இராஜத லட்சண லட்சுமி ---

இராஜதம் என்ற குணத்துக்கு எட்டு அங்கங்கள் உண்டு. ஊக்கம், ஞானம், வீரம், தவம், தருமம், தானம், கல்வி, கேள்வி, என்பன. இந்த எட்டும் அமைந்த தேவி உமாமகேசுவரி.

கருத்துரை

திருவேரகத்து உறையும் திருவேல் இறைவா! பொது மகளிரின் நட்பு அற அருள்புரிவாய்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...