சுவாமி மலை - 0214. குமரகுரு பரமுருக




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குமர குருபர முருக சரவண (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
அடியார்களின் அபயக் குரல் கேட்டு அருள்


தனன தனதன தனன தனதன
     தனன தனதன ...... தனதான

குமர குருபர முருக சரவண
     குகசண் முககரி ...... பிறகான

குழக சிவசுத சிவய நமவென
     குரவ னருள்குரு ...... மணியேயென்

றமுத இமையவர் திமிர்த மிடுகட
     லதென அநுதின ...... முனையோதும்

அமலை அடியவர் கொடிய வினைகொடு
     மபய மிடுகுர ...... லறியாயோ

திமிர எழுகட லுலக முறிபட
     திசைகள் பொடிபட ...... வருசூரர்

சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
     திறைகொ டமர்பொரு ...... மயில்வீரா

நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
     நதிகொள் சடையினர் ...... குருநாதா

நளின குருமலை மருவி யமர்தரு
     நவிலு மறைபுகழ் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


குமர! குருபர! முருக! சரவண!
     குக! சண்முக! கரி ...... பிறகான

குழக! சிவசுத! சிவயநம என
     குரவன் அருள் குரு- ...... மணியே! என்று

அமுத இமையவர் திமிர்தம் இடுகடல்
     அதுஎன அநுதினம் ...... உனைஓதும்

அமலை அடியவர் கொடிய வினைகொடும்
     அபயம் இடுகுரல் ...... அறியாயோ?

திமிர எழுகடல் உலகம் முறிபட,
     திசைகள் பொடிபட ...... வருசூரர்

சிகர முடி உடல் புவியில் விழ,உயிர்
     திறைகொடு அமர்பொரு ...... மயில்வீரா!

நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல்
     நதிகொள் சடையினர் ...... குருநாதா!

நளின குருமலை மருவி அமர்தரு
     நவிலும் மறைபுகழ் ...... பெருமாளே.

பதவுரை

      திமிர எழு கடல் உலகம் முறி பட --- இருள் நிறைந்த ஏழு கடல்களும், பூவுலகமும் அழிந்து போகுமாறும்,

     திசைகள் பொடி பட --- எட்டுத் திசைகளும் பொடிபட்டழியவும்,

     வருசூரர் சிகர முடி உடல் புவியில் விழ --- போர்க்களத்திற்கு வந்த சூராதி அவுணர்களின் மகுடங்களைத் தரித்த தலைகளும் உடல்களும் அற்று பூமியில் விழும் வண்ணம்,

     உயிர் திறை கொடு அமர் பொரும் அயில் வீரா --- அவர்களுடைய உயிரை அரசர்க்குரியத் திறைப்பொருளாக வாங்கிக் கொண்டு போர் செய்த வேற்படையை உடைய வீரரே!

      நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல் --- கூற்றுவனை உதைத்து, அவனுடைய உயிரைக் கவர்ந்த நெருப்பனைய மலர்ப்பாதரும்,

     நதிகொள் சடையினர் குருநாதா --- கங்கையை முடித்த சடை முடியுடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு குருமூர்த்தியே!

         நளின குருமலை மருவி அமர்தரு நவிலும் மறை புகழ் பெருமாளே --- நீர் வளம் மிகுந்த சுவாமிமலையில் பொருந்தி எழுந்தருளியுள்ள நன்னெறிகளைச் சொல்லுகின்ற வேதங்களால் புகழப்பெறுகின்ற பெருமையில் மிக்கவரே!

         குமர --- குமாரக் கடவுளே!

         குருபர --- குருவாக நின்று அருள்புரியும் பெரிய பொருளே!
        
         முருக --- முருகப் பெருமானே!

         சரவண --- சரவணத்தில் தோன்றியவரே!

         குக --- குகையில் வீற்றிருப்பவரே!

         சண்முக --- ஆறுமுகக் கடவுளே!

         கரி பிறகு ஆன குழக --- விநாயகக் கடவுளுக்குத் தம்பியாக வந்த அழகரே!

         சிவ சுத --- சிவகுமாரரே!

         சிவயநம என குரவன் அருள் குருமணியே என்று --- “சிவயநம” என்னும் ஐந்தெழுத்தை அன்புடனே ஓதுமவர்கட்கு குருபரனாக வந்து அருள் புரியும் குரு நாயகரே! என்று துதித்து,

     அமுத இமையவர் திமிர்தம் இடு கடல் அது என --- அமுதத்தைப் பெற விரும்பிய தேவர்கள், திமிர்தம் என்று பேரொலியுண்டாகுமாறு கடைந்த கடலேபோல,

     அநுதினம் உனை ஓதும் அமலை அடியவர் --- நாள்தோறும் தேவரீரை அழைத்துச் சொல்லும், மிகுந்த அடியார்கள்,

     கொடியவினை கொடும் அபயம் இடுகுரல் அறியாயோ --- முன்செய்த வினைகளின் கொடுமையால் வருந்தியும்  அபயம் இடுகின்ற குரலைத் தேவரீர் இன்னார் குரல் என்று தெரிந்து கொள்ளவில்லையோ?

பொழிப்புரை

         பொருள் நிறைந்த ஏழு சமுத்திரங்களும், எட்டுத் திசைகளும் பொடிபட்டழியவும் வந்த சூரபன்மன் முதலிய அவுணர்களுடைய முடியை யணிந்த தலைகளும் உடல்களும் அற்று மண்ணில் விழுந்துருளும் வண்ணம் உயிரைத் திறைப் பொருளாகக் கொண்டு போர் புரிந்த வேல் வீரரே!

         இயமனுடைய உயிரைக் கவர்ந்தும், நெருப்பனையதும் ஆகிய திருவடியை யுடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு உபதேசித்த குருநாதரே!

         நீர் வளம் மிக்க சுவாமி மலையில் எழுந்தருளியுள்ளவரும், நன்னெறிகளைக் கூறும் வேதங்களால் புகழப் படுகின்றவருமாகியப் பெருமிதம் உடையவரே!

         குமாரக் கடவுளே! குருபரரே! முருகப் பெருமானே! சரவணபவரே! குகமூர்த்தியே! ஆறுமுகத்தரசே! விநாயகருக்கு இளையவராக வந்த பேரழகுடையவரே! சிவ புதல்வரே! “சிவயநம” என்னும் பஞ்சாட்சரத்தைக் கூறும் மெய்யன்பருக்கு குருமூர்த்தமாக வந்து அருள் புரியும் குருநாயகரே! என்று துதித்து, அமிர்தத்தை விரும்பிய தேவர்கள் “திமிர்த” என்ற ஒலியுண்டாகுமாறு கடைந்த பாற்கடலின் பேரொலியைப் போல் நாள்தோறும், தேவரீரை அழைத்து எண்ணில்லாத அடியார்கள் முன்னை வினையால் வருந்தியும் “அபயம்” என்று கதறும் குரல் இன்னாருடையதென்று அறியீரோ?

   
விரிவுரை

குமர ---

என்றும் அகலாத இளமையுடையவர்.

குருபர --

குருவாக உள்ளவர். யாவருக்கும் முதன்மைப் பெற்றவர் முருகவேளே யாகும். அவரைக் குருவாகக் கொண்டவரே மெய்ப் பொருளை உணர்வார். சனகாதி நால்வர்கட்கும் குறியினால் உண்மை நிலைமையை உணர்த்திய தென்முகப் பரமாசிரியருக்கும் ஒரு மொழிப் பொருளை முருகவேள் உணர்த்தியதனால் அவரே ஆதி குருபரராம்.

முருக --

சுப்ரமண்யக் கடவுளுக்குரிய திருநாமங்களுள் முருக நாமமே முதன்மையானது. அநேக நாமங்களைக் கூறுவதனால் வரும் பயன்கள் அத்தனையும் முருக நாமம் ஒன்றால் வரும். பல நாமங்களால் கிடைக்கும் பொருள்கள் யாவும் இம் முருகநாமம் ஒன்றால் கிடைக்கின்றன. அதனாலேயே,

“... ... ... ... ... ... ... மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்”

என்று கந்தரலங்காரத்தில் பன்மையாகக் கூறுவாராயினர்.

நக்கீரதேவரும், “முருகா என்று ஓதுவார்முன் அஞ்சு முகந் தோன்றில் ஆறுமுகந் தோன்றும், வெஞ்சமரம் தோன்றில் வேல் தோன்றும், நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்” என்று உபதேசித்தார்.

முருகா எனஓர் தரம் ஓது அடியார் முடிமேல் இணைதாள்
   அருள்வோனே”                                                --- (எருவாய்) திருப்புகழ்

சரவண ---

சரவண தடாகத்தில் எம்பெருமான் மூவர் தேவாதிகள் பொருட்டுத் தோன்றியதனால் இப்பெயர் உண்டாயிற்று.

குக ---

முருகக் கடவுள் குறிஞ்சிநிலக் கடவுள் ஆதலின், மலைக் குகையில் உறைபவர் என்றும், ஆன்மாக்களின் இதயக் குகையில் உறைபவர் என்றும், பொருள்படும்.

ஷண்முக ---

ஸர்வஞ்ஞத்வம், திருப்தி, அநாதிபோதம், ஸ்வதந்தரம், அலுப்த சக்தி, அநந்த சக்தி என்ற ஆறு குணங்களே எம்பெருமானுக்கு ஆறுமுகங்களாகும்.

ஏவர்தம் பாலும் இன்றி எல்லைதீர் அமலற்கு உள்ள
மூஇரு குணனும் சேய்க்கு முகங்களாய் வந்தது என்ன,
பூவியல் சரவணத்தன் பொய்கையில் வைகும் ஐயன்
ஆவிகட்கு அருளும் ஆற்றால் அறுமுகம் கொண்டான்அன்றே.  --- கந்தபுராணம்

சிவய நம ---

இது சூக்கும பஞ்சாக்கரம். இதனை அன்போடு ஜெபித்துத் திருநீற்றை அணிந்தால் சிவபெருமான் உடனே சிவகதியைத் தருவார்.

திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்
 தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே”        --- அப்பர்

இதனை நாள்தோறும் சிந்திப்பார்க்கு எல்லாத் துன்பங்களும் நீங்கி இன்பம் எய்தும்.

சிவாயநம என்று சிந்தித்து இருப்பார்க்கு
   அபாயம் ஒருநாளும் இல்லை”               --- ஒளவையார்

இத்தகைய மகாமந்திரத்தை ஜெபிக்கின்றவர்க்கு முருகன் குருவாக வந்து அருள் புரிவர்.

அமலை அடியவர்...................அறியாயோ ---

எண்ணிறந்த அடியார்கள், ‘குமரா! முருகா! குகா! சரவண! குருபரா! அறுமுகா!' என்று தேவர்கள் அமிர்தம் கடைந்த காலத்தில் பாற்கடலில் உண்டாகிய பேரொலியைப் போல், ஓலமிட்டுத் துதித்து முறையிடும் முறையை எங்கும் நிறைந்த தேவரீர் அறிவீர். ஆதலின் உடனே அடியார்க்கு அருள்புரிவீர் என்பது குறிப்பு.

திமிர எழுகடல் --

கடல் ஆழ மிகுதியால் கருநிறம் உற்று இருப்பதால் இருள் ஓங்கிய கடல் என்றனர். ஏழுகடற்களால் சூழப் பெற்ற உலகம் என்று கூறினும் பொருந்தும்.

குருநாதா ---

கு-அஞ்ஞான இருள்; ரு-நீக்குபவர்; அஞ்ஞானமாகிய இருளை நீக்குபவர் குரு எனப்படுவர். குரு என்பவர் அனைவருக்கும் முருகனே முதல்வர். ஆதலின் குருநாதா என்றனர்.

கருத்துரை

வேல் வீர! சிவ குருநாத! சுவாமிமலைத் தலைவ! குமர! குருபர! முருக! சரவண! குக!' என்று துதித்து, கடலில் எழுந்த ஒலிபோல் முறையிடும் அடியார்களுடைய குரலைக் கேட்டு அருள் புரிவீர்.


                                   

No comments:

Post a Comment

61. புத்தாடை உடுக்கும் நாள்

  61.  புத்தாடை உடுக்கும் நாள் ----- "கறைபடாது ஒளிசேரும் ஆதிவா ரந்தனில்      கட்டலாம் புதிய சீலை;   கலைமதிக்கு ஆகாது, பலகாலும் மழையினில...