திருப் பால்துறை





திருப் பால்துறை
(திருப்பாலத்துறை)


     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

         திருச்சி - திருவானைக்கா - கல்லணை வழித்தடத்தில் பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ. நடந்து சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். பாதை சற்று கடினமானது. மிகச் சிறிய ஊர். பனையபுரத்தில் ஆட்டோ வசதிகள் இல்லை. ஆகையால் திருச்சியில் இருந்து ஆட்டோ அல்லது காரில் செல்வது நல்லது.

     திருஞானசம்பந்தப் பெருமானைத் தவி, பிற பெருமக்கள் எல்லாம் வழிநடையாகச் சென்றுதான் திருக்கோயில் வழிபாட்டினை மேற்கொண்டார்கள். ஆகையால், அன்பர்கள் பெரிதும் வசதிகள் இல்லையென்பதற்காக திருத்தல வழிபாட்டை மேற்கொள்ளாமல் இருந்து விடவேண்டாம்.

இறைவர்           : ஆதிமூலேசுவரர், ஆதிமூலநாதர்.

இறைவியார்      : மேகலாம்பிகை, மேகநாயகி, நித்யகல்யாணி.

தல மரம்          : வில்வம்.

தீர்த்தம்           : கொள்ளிடம்.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - காரார் கொன்றை கலந்த.

         இவ்வாலயத்தின் கோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நந்தியும், பலிபீடமும் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புரட்டாசி மற்றும் பங்குனியின் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமியின் மீது சூரிய ஒளி விழுகிறது.

     கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் காட்சி தருகிறார். அருகே சனகாதி முனிவர்கள் இல்லை. தட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அருகிலேயே பிட்சாடனர் இருக்கிறார். கருவறைக்கு பின்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவர் காட்சி அளிக்கும் இடத்தில் சங்கரநாராயணர் இருக்கிறார். பிரகாரத்தில் சத்யபாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதியும் இருக்கிறது.

         அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுடன் கூடிய நான்கு தூண்களுடன் உள்ள இடம் "தேவசபை" என்று aழைக்கப்படுகிறது. இந்த சபையில் இருந்து சிவன், மன்னர் போல ஆட்சி செய்வதாக சொல்லப்படுகிறது.

     அம்பாள் தெற்கு நோக்கிய சந்நிதியில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கின்றாள். குழந்தைகளை இழந்து மீண்டும் குழந்தை பாக்கியத்துக்காக வேண்டுபவர்கள் இத்தலத்தில் அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபட்டால் தீர்க்காயுள் உள்ள குழந்தை பிறக்கும் என நம்புகிறார்கள். பவுர்ணமிதோறும் இதற்குரிய விசேஷ பூஜை இவளது சந்நிதியில் நடக்கிறது. புதுமணத்தம்பதிகளும் நல்ல குழந்தைகள் வேண்டி இதே நாளில் பூஜை செய்கின்றனர்.

         இப்பகுதியை ஆண்ட சோழன், இத்தலத்தின் வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் இங்கு ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள ஒரு புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால் பறவை தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக்கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை. சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான். பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி "பாற்றுறை நாதர்" என்றும், தலம் "பாற்றுறை" (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.

         இத்தலத்திற்கு வந்த மார்க்கண்டேயமுனிவர் சிவபூசைக்குப் பால் இல்லாமையால் வருந்திய போது, சிவபெருமான் அருளினால் பால் பெருகியது. ஆதலாலும் பாற்றுறை என்று இத்தலம் பெயர் பெற்றது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஏந்து அறிவாம் நூல் துறையில் நின்றவர்கள் நோக்கி மகிழ்வு எய்து, திருப்பால் துறையில் நின்ற பரஞ்சுடரே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 348
ஏறுஉயர்த் தார்திருப் பால்துறையும்,
         எறும்பியூர் மாமலை யேமுதலா,
வேறுபதிகள் பலவும் போற்றி,
         விரவுந் திருத்தொண்டர் வந்துசூழ,
ஈறுஇல்புகழ்ச் சண்பை ஆளியார்தாம்
         எண்திசை யோரும் தொழுதுஇறைஞ்ச,
நீறுஅணிசெம் பவளப் பொருப்பில்
         நெடுங்கள மாநகர் சென்றுசேர்ந்தார்.

         பொழிப்புரை : விடைக்கொடியை உடைய இறைவரின் திருப்பால்துறையும், திருவெறும்பியூர் மாமலையும் முதலான பிறபதிகளை வணங்கி, மனமியைந்து பரவி வரும் தொண்டர்கள் பலரும் சூழவரும் எல்லையற்ற புகழையுடைய சீகாழித் தலைவர், எண்திசையில் உள்ளவர்களும் தொழுது வணங்கத் திருநீற்றை அணிந்த செம்பவள மலைபோன்ற சிவபெருமானின் திருநெடுங்கள மாநகரைச் சென்று அடைந்தார்.

         திருப்பால்துறையில் அருளியது, `காரார் கொன்றை' (தி.1 ப.56) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

     திருஎறும்பியூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.

     வேறு பதிகள் பலவும் போற்றி என்பதில் குறிக்கத்தக்க பதிகள் இவை என அறியக் கூடவில்லை.


1.056   திருப்பால்துறை          பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கார்ஆர் கொன்றை கலந்த முடியினர்,
சீர்ஆர் சிந்தை செலச்செய்தார்,
பாரார் நாளும் பரவிய பால்துறை,
ஆரார் ஆதி முதல்வரே.

         பொழிப்புரை :உலக மக்கள் நாள்தோறும் வந்து வழிபட்டுப் போற்றும், ஆத்தி மலர் அணிந்த திருப்பாற்றுறையில் விளங்கும் ஆதிமுதல்வராகிய பெருமானார் கார்காலத்தே மலரும் கொன்றை மலர்மாலை சூடிய திருமுடியினராய் அன்பு கனிந்த நம் சிந்தையைத் தம்மிடமே செல்லச் செய்தார்.


பாடல் எண் : 2
நல்லாரும் அவர், தீயர் எனப்படும்
சொல்லார், நன்மலர் சூடினார்,
பல்லார் வெண்தலைச் செல்வர்,எம் பால்துறை
எல்லா ரும்தொழும் ஈசரே.

         பொழிப்புரை :பற்கள் பொருந்திய வெண்மையான தலையோட்டை அணிந்தவரும், எல்லாராலும் தொழப்படுபவருமாகிய எம் திருப்பாற்றுறைச் செல்வராகிய ஈசர், நல்லவருக்கு நல்லவராவர். தீயை ஏந்தியதால் தீயர் எனவும் படுவார். அவர் நல்ல மலரைச் சூடியவர்.


பாடல் எண் : 3
விண்ஆர் திங்கள் விளங்கு நுதலினர்,
எண்ணார் வந்துஎன் எழில்கொண்டார்,
பண்ஆர் வண்டுஇனம் பாடல்செய் பால்துறை
உள்நாள் நாளும் உறைவரே.

         பொழிப்புரை :இயற்கையில் பண்ணிசை போல முரலும் வண்டினங்கள் பாடும் திருப்பாற்றுறையுள் எக்காலத்தும் உறைபவரும், விண்ணகத்தே தவழும் திங்கள் விளங்கும் திருமுடியினரும் ஆகிய இறைவர் என் இதயத்தில் இருப்பவராய் வந்து என் எழில்நலம் அனைத்தையும் கவர்ந்தார்.


பாடல் எண் : 4
பூவும் திங்கள் புனைந்த முடியினர்,
ஏவின் அல்லார் எயில் எய்தார்,
பாவம் தீர்புனல் மல்கிய பால்துறை,
, என் சிந்தை ஒருவரே.

         பொழிப்புரை :மூழ்கியவருடைய பாவங்களைப் போக்கும் தீர்த்த நலம் உடைய திருப்பாற்றுறையுள் மலர்களையும் பிறைமதியையும் புனைந்த திருமுடியினராய்க் கணையொன்றால் பகைவராய் வந்தடைந்த அசுரர்களின் முப்புரங்களை அழித்த இறைவரே என்மனம் பிறவற்றில் செல்லாது ஓவுதல் செய்த ஒருவராவர்.


பாடல் எண் : 5
மாகம் தோய்மதி சூடி மகிழ்ந்து, எனது
ஆகம் பொன்நிறம் ஆக்கினார்,
பாகம் பெண்ணும் உடையவர், பால்துறை
நாகம் பூண்ட நயவரே.

         பொழிப்புரை :தம் திருமேனியின் ஒருபாதியாய்ப் பெண்ணைக் கொண்டுள்ளவரும், நாகத்தை அணிகலனாகப் பூண்டவரும் ஆகிய, திருப்பாற்றுறை இறைவர், வானகத்தே தோயும் பிறைமதியை முடியிற்சூடி மகிழ்ந்து வந்து எனது உடலைப் பொன்னிறமான பசலை பூக்கச் செய்தவராவார்.


பாடல் எண் : 6
போது பொன்திகழ் கொன்றை புனைமுடி
நாதர், வந்து என் நலம்கொண்டார்,
பாதம் தொண்டர் பரவிய பால்துறை
வேதம் ஓதும் விகிர்தரே.

         பொழிப்புரை :தொண்டர்கள் தம் திருவடிகளைப் பரவத்திருப்பாற்றுறையுள் விளங்கும் வேதங்களை அருளிய விகிர்தரும், பொன்போல் திகழும் கொன்றை மலர்களைப் புனைந்த திருமுடியினை உடைய தலைவருமாகிய சிவபிரானாரே என்பால் வந்து என் அழகினைக் கவர்ந்தவராவார்.


பாடல் எண் : 7
வாடல் வெண்தலை சூடினர், மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்,
பாடல் வண்டுஇனம் பண்செயும் பால்துறை
ஆடல் நாகம் அசைத்தாரே.

         பொழிப்புரை :பாடல்கள் பலவற்றைப்பாடும் வண்டினங்கள் சிறந்த பண்களை மிழற்றும் திருப்பாற்றுறையுள், ஆடுதலில் வல்ல நாகப்பாம்பைத் திருமேனியில் பல இடங்களிலும் கட்டியுள்ள இறைவர், உலர்ந்த வெள்ளிய தலையோடுகளை மாலையாகச் சூடியவராவர். பெரிய இடபத்தின் மேல் ஏறிவந்து என் அழகைக் கவர்ந்து செல்லும் குறிப்பினர்

பாடல் எண் : 8
வெவ்வ மேனிய ராய்,வெள்ளை நீற்றினர்,
எவ்வம் செய்துஎன் எழில்கொண்டார்,
பவ்வ நஞ்சுஅடை கண்டர்,எம் பால்துறை
மவ்வல் சூடிய மைந்தரே.

         பொழிப்புரை :கடலிடைத் தோன்றிய நஞ்சடைந்த கண்டரும், முல்லை மலர் சூடிய மைந்தரும் ஆகிய எம் திருப்பாற்றுறை இறைவர் விரும்பத்தக்க திருமேனியராய், வெண்மையான திருவெண்ணீறு அணிந்தவராய் வந்து, என் எழிலைக் கொண்டு பின் பிரிவுத்துன்பம் தந்தவராவர்.


பாடல் எண் : 9
ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி
ஆன வண்ணத்து எம் அண்ணலார்,
பால்நல் அம்மலர் விம்மிய பால்துறை
வான வெண்பிறை மைந்தரே.

         பொழிப்புரை :நீலோற்பல மலர்கள் நிறைந்த நீர் நிலைகளோடு கூடிய திருப்பாற்றுறையுள் வானகத்தே விளங்கும் வெண்மையான பிறை மதியைச் சூடி எழுந்தருளியுள்ள மைந்தராகிய இறைவர், பன்றியும், அன்னமுமாய் அடிமுடி தேடிய திருமால், பிரமன் ஆகியோருக்கு அழலுருவமாய் ஓங்கி நின்ற அண்ணலார் ஆவார்.


பாடல் எண் : 10
வெந்த நீற்றினர், வேலினர், நூலினர்,
வந்துஎன் நல்நலம் வௌவினார்,
பைந்தண் மாதவி சூழ்தரு பால்துறை
மைந்தர் தாம்ஓர் மணாளரே.

         பொழிப்புரை :பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்துள்ள திருப்பாற்றுறையுள் எழுந்தருளியுள்ள மைந்தராகிய இறைவர், மேனி மீது வெந்த நீறு பூசியவராய், கையில் வேலேந்தியவராய், மார்பில் பூணூல் அணிந்தவராய் வந்து என் அழகினை வவ்விச் சென்றார். அவர் முன்னரே மலைமகளை மணந்த மணாளர் ஆவார்.


பாடல் எண் : 11
பத்தர் மன்னிய பால்துறை மேவிய
பத்து நூறு பெயரனை,
பத்தன் ஞானசம் பந்தனது இன்தமிழ்
பத்தும் பாடிப் பரவுமே.

         பொழிப்புரை :அடியவர்கள் நிறைந்துள்ள திருப்பால்துறையுள் எழுந்தருளிய ஆயிரம் திருநாமங்களையுடைய இறைவனை, பக்தனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இனிய தமிழ்ப் பாடல்களாகிய இப்பத்தையும் பாடிப்பரவுமின்.
                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

நல்லவரால் நன்மை

  “பாலினொடு தேன்வந்து சேரில்ருசி அதிகமாம்,     பருகுநீர் சேரின் என்னாம்’ பவளத்தி னிடைமுத்தை வைத்திடிற் சோபிதம்,     படிகமணி கோக்கின்என்னாம்;...