சுவாமி மலை - 0233. வாரம் உற்ற





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வாரம் உற்ற (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
மாதர் மயக்கம் அற அருள்

தான தத்த தந்த தான தத்த தந்த
     தான தத்த தந்த ...... தனதான


வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி
     னீடு மெய்த்து யர்ந்து ...... வயதாகி

வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை
     மார்க ளுக்கி சைந்து ...... பொருள்தேடி

ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த
     மாப ணிக்கள் விந்தை ...... யதுவான

ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ
     டாவி மெத்த நொந்து ...... திரிவேனோ

சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்து
     சூழ்சு ரர்க்க ணன்பு ...... செயும்வீரா

சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த
     சூத னுக்கி சைந்த ...... மருகோனே

ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று
     தானி றைக்க வந்த ...... தொருசாலி

யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு
     மேர கத்த மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வாரம் உற்ற பண்பின், மாதம் உற்ற நண்பில்,
     நீடு மெய், துயர்ந்து, ...... வயது ஆகி,

வாலையில் திரிந்து, கோல மைக்கண் மங்கை-
     மார்களுக்கு  இசைந்து ...... பொருள்தேடி,

ஆரம், மிக்க பொன்களால் அமைத்து அமர்ந்த
     மா பணிக்கள், விந்தை ...... அது ஆன

ஆட கொப்பு அமைந்த ஓலை, முத்தமும் கொடு
     ஆவி மெத்த நொந்து ...... திரிவேனோ?

சூரனைத் துரந்து, வேர் அறப் பிளந்து
     சூழ் சுரர்க்கண் அன்பு ...... செயும்வீரா!

சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த
     சூதனுக்கு இசைந்த ...... மருகோனே!

ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று
     தான் இறைக்க வந்த்துத ...... ஒருசாலி-

யே மிகுத்து உயர்ந்த மா வயல்கள் மிஞ்சும்
     ஏரகத்து அமர்ந்த ...... பெருமாளே.
   
பதவுரை

      சூரனைத் துரந்து --- சூரபன்மனை அஞ்ச வைத்து ஒட்டி,

     வேர் அறப் பிளந்து --- அவனை அடியுடன் பிளந்து,

     சூழ் சுரர் கண் அன்பு செயும் வீரா --- சூழ்ந்துள்ள தேவர்களிடத்திலே அன்பு வைத்த வீரரே!

      சூகரத்தோடு --- பன்றி வடிவங்கொண்டு,

     அம்பு தான் எடுத்து வந்த --- அழகிய பூமியை எடுத்து வந்தவரும்,

     சூதனுக்கு இசைந்த மருகோனே --- தேர்ப்பாகனாக நின்றவரும் ஆகிய திருமாலுக்கு இசைவான மருகரே!

      ஏர் எதிர்த்து வந்து --- ஏர்கள் எதிர்த்து வர,

     நீர்கள் கட்டி --- தண்ணீரைக் கட்டி,

     அன்று தான் இறைக்க வந்து --- அப்போதைக்கு அப்போது இறைக்க வந்த பயனாய் விளைந்த

     ஒரு சாலியே மிகுந்து உயர்ந்த --- ஒப்பற்ற செற்நெற் பயிரே பெருகி உயர்ந்த

     மா வயல்கள் மிஞ்சும் ---    சிறந்த வயல்கள் மிகுந்துள்ள

     ஏரகத்து அமர்ந்த பெருமாளே --- திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள பெருமையிற் சிறந்தவரே!

         வாரம் உற்ற பண்பின் --- அன்பு பூண்ட தன்மையில்,

     மாதம் உற்ற நண்பில் ---  மாதங்கள் செல்ல வளர்ந்து அந்த அன்பினால்

     நீடு மெய் --- வளர்கின்ற உடலானது,

     துயர்ந்து வயது ஆகி --- தொடர்ந்து வயது நிரம்பி,

     வாலையில் திரிந்து --- வாலப்பருவத்தில் திரிதலுற்று,

     கோல மை கண் மங்கைமார்களுக்கு இசைந்து --- அழகிய மை பூசிய கண்களையுடைய, மாதர்களிடத்தே நேசம் வைத்து,

     பொருள் தேடி --- அவர்கள் பொருட்டுப் பொருளைத் தேடி,

     ஆரம் --- மாலைகள்,

     மிக்க பொன்களால் அமைத்து  மா பணிக்கள், --- நல்ல பொன்னால் செய்யப்பட்டு விளங்கும் சிறந்த ஆபரணங்கள்,

     விந்தை அது ஆன ஆட கொப்பு அமைந்த ஓலை முத்தமும் கொடு --- விசித்திரமாயுள்ள, காதில் அசையுமாறு வேலைப்பாடுடைய காதணி இவைகளை அணிந்த பெண்களுடன் முத்தமிட்டு,

     ஆவி மெத்த நொந்து திரிவேனோ --- உயிர் மிகவும் நொந்து திரியலாமோ?

பொழிப்புரை

         சூரபன்மனை வெருட்டி ஒட்டி அவனை அடியுடன் பிளந்து, தேவர்கட்கு அன்பு காட்டிய வீரமூர்த்தியே!

         பன்றி யுருவங் கொண்டு நீரில் மூழ்கிய பூமியை எடுத்துவந்த தேர்ப்பாகனாகிய திருமாலின் அன்புடைய திருமருகரே!

         ஏர்கள் எதிர்த்து வரவும், நீர்கள் தேங்குமாறு கட்டியும், மிகுதியான நீரை இறைத்தும் தொழில் புரிய, வளர்ந்த ஒப்பற்ற நெற்பயிர் நன்கு உயர்ந்துள்ள சிறந்த கழனிகள் சூழ்ந்துள்ள திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         அன்பு பூண்ட தன்மையில் மாதங்கள் செல்ல அன்பினால் வளரும் உடலானது தொடர்ந்து வளர்ந்து வயது நிரம்பி, வாலப்பருவம் அடைந்து அங்கும் இங்கும் திரிந்து, அழகிய மை பூசிய கண்களையுடைய பெண்களிடம் நேசம் வைத்து, அவர்கள் பொருட்டுப் பொருள் தேடி, மாலைகள் மிகுந்த பொன்னால் செய்து விளங்கும் நல்ல ஆபரணங்கள, விசித்திரமான காதில் அசையும் ஓலை முதலியனஅணிந்த அப்பெண்களுடன் முத்தமிட்டு உயிர் மிகவும் நொந்து திரியலாமோ?


விரிவுரை

வாரமுற்ற பண்பின் மாதமுற்ற நண்பினீடு மெய் ---

வாரம்-அன்பு. அன்பு பூண்ட தன்மையில் மாதாமாதம் உடல் வளர்கின்றது என்று பொருள்படும். அன்றி வாரம் என்பதைக் கிழமை எனக் கொண்டு வாரம் சேர்ந்த தன்மையினால் மாதமாகின்றது என்றும் கொள்ளலாம். ஏழுநாள் கொண்டது வாரம்; நான்கு வாரம் கொண்டது மாதம்.

மெய் ---

இந்த உடம்பை மெய் என்று கூறுவர். தோன்றி மறைகின்ற இந்தப் பொய்யுடலை மெய்யென்று கூறுகின்றார்கள். ஊருக்குப் புறப்படும்போது ‘போகின்றேன்‘ என்று அமலங்கமாகக் கூறாமல் “வருகின்றேன்” என்று மங்கலமாகக் கூறுவது போலவும், “தாலி பெருகிற்று” என்று கூறுவது போலவும், பொய்யை ‘மெய்‘ என்று கூறுவது மங்கல வழக்கு என்று கூறுவார்கள். இப்படிக் கூறுவதும் நியாயந்தான்.

ஆனால் வேறு  ஒரு சிறந்த நியாயம் இதில் உளது. விளக்கு என்ற சொல் எரிகின்ற சுடரையே குறிக்கும். “சந்தனம் இது” “சாணம் இது” “கட்டை இது” “கள்வன் இவன்” என்று விளக்குவது அந்தச் சுடர் தானே. ஆனால் நாம் பித்தளையால் செய்த ஒரு தண்டினை விளக்கு என்று கூறுகின்றோம். சுடர் தங்குகின்ற இடம் அப் பித்தளைத் தண்டு ஆதலின் தானியாகு பெயராக அத் தண்டு விளக்கு எனப் பெயர் பெற்றது.

அது போல் மெய்ப்பொருளாகிய இறை தங்குகின்ற இடம் உடம்பு. ஆதலின் (மெய் தங்கும் இடம்) மெய் எனப்பெற்றது. எனவே மெய் என்பது தானியாகு பெயர் எனக் கொள்க.

துயர்ந்து வயதாகி ---

துயர்ந்து-தொடர்ந்து. உடம்பு தொடர்ந்து வளர்ந்து, வயது நிரம்பி.

வாலையில் திரிந்து ---

வாலப்பருவம் வந்ததும் ஆடை அணிகளால் அலங்கரிக்கப்பட்டு வீடு தங்காமல் திரிந்து உழலுவர்.

சூரனைத் துரந்து ---

உறுதியுடன் நான்கு நாள் போரிட்ட சூரன் இறுதியில் வேலாயுதத்தின் வெம்மைக்கு ஆற்றாது அஞ்சி ஓடிக் கடலில் ஒளிந்தான்.

வேரறப் பிளந்து ---

கடலில் மாமரமாக நின்றான். அப்படி நின்ற அவனை வேரோடு இரண்டாகப் பிளந்தது வேல்.

சூகரத்தொடு அம்பு தான்எடுத்து வந்த ---

திதியின் மக்கள் இருவர். இரணியன்; இரணியாட்சன். இளைஞனாகிய இரணியாட்சன் பூமியை எடுத்துக் கடலில் அழுத்தினான். நிலமக்கள் துன்புற்றதனால் திருமால் வராக அவதாரம் எடுத்துக் கடலில் அழுந்திய பூதலத்தை இரு கொம்புகளால் ஏந்தி மேலே கொணர்ந்து நிலை நிறுத்தினார்.

சூதனுக்கு இசைந்த மருகோனே ---

சூதன்-தேர்ப்பாகன். தனஞ்செயனுக்குக் கண்ணபிரான் தேர்ப்பாகனாக அமர்ந்து அருள்புரிந்தார்.

கருத்துரை

திருவேரகத்து உறையும் தெய்வசிகாமணியே! மாதர் மயக்கம் அற அருள்புரிவாய்.





No comments:

44. இன்னின்னார்க்கு இதுவிது இல்லை

 “உற்றதொழில் செய்வோர்க்கு உறுபஞ்சம் இல்லையாம், பற்று செபத்தோர்க்கு இல்லை பாவங்கள், - முற்றும் மவுனத்தோர்க்கு இல்லை வருகலகம், துஞ்சாப் பவனத்த...