கதிர்காமம் - 0425. சமரமுகவேல்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சமரமுக வேல் (கதிர்காமம்)

முருகா!
பொதுமாதர் உறவு நீங்க அருள்.


தனதனன தானத்த தனதனன தானத்த
     தனதனன தானத்த ...... தனதான தானனா

சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
     தனமசைய வீதிக்குள் ...... மயில்போலு லாவியே

சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்ரு பாசுத்தர்
     தமையுணர ராகத்தின் ...... வசமாக மேவியே

உமதடியு னாருக்கு மனுமரண மாயைக்கு
     முரியவர்ம காதத்தை ...... யெனுமாய மாதரார்

ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு
     முனதருள்க்ரு பாசித்த ...... மருள்கூர வேணுமே

இமகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தி
     யெழுதரிய காயத்ரி ...... யுமையாள்கு மாரனே

எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து
     இதணருகு சேவிக்கு ...... முருகாவி சாகனே

அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு
     மதிகவித சாமர்த்ய ...... கவிராஜ ராஜனே

அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த
     அரியகதிர் காமத்தி ...... லுரியாபி ராமனே.

பதம் பிரித்தல்

சமரமுக வேல்ஒத்த விழி புரள, வார்இட்ட
     தனம்அசைய, வீதிக்குள் ...... மயில்போல் உலாவியே,

சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர்
     தமை உணர் அராகத்தின் ...... வசம் ஆக மேவியே,

உமது அடியை உனாருக்கும் அனு மரண மாயைக்கும்
     உரியவர், மகா தத்தை ...... எனும் மாய மாதரார்

ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும்,
     உனது அருள் க்ருபா சித்தம் ...... அருள்கூர வேணுமே.

இம கிரி குமாரத்தி, அநுபவை,  பராசத்தி,
     எழுத அரிய காயத்ரி, ...... உமையாள் குமாரனே!

எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து,
     இதண் அருகு சேவிக்கும் ...... முருகா! விசாகனே!

அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து, ப்ரதாபிக்கும்
     அதிக வித சாமர்த்ய ...... கவிராஜ ராஜனே!

அழுது உலகை வாழ்வித்த கவுணியகுல ஆதித்த!
     அரிய கதிர்காமத்தில் ...... உரிய அபிராமனே.


பதவுரை

      இமகிரி குமாரத்தி --- இமயமலையின் புதல்வியும்,

     அநுபவை --- இன்ப நுகர்ச்சிகளை உயிர்கட்கு ஊட்டுபவளும்,

     பராசக்தி --- பேராற்றலுடையவளும்,

     எழுத அரிய காயத்ரி --- எழுதுதற்கு அரிய காயத்ரி மந்திர சொரூபியும்,

     உமையாள் --- உமாதேவியுமாகிய பார்வதியம்மையின்,

     குமாரனே --- திருகு குமாரரே!

      எயினர் மட மானுக்கு --- வேடர் குலப் பாவையாகிய வள்ளியின் பொருட்டு,

     மடல் எழுதி மோகித்து --- மடற்பனையில் அவள் உருவை எழுதி விரும்பி,

     இதண் அருகு சேவிக்கும் --- பரண் அருகில் சேவித்து நின்ற,

     முருகா --- முருகக் கடவுளே!

      விசாகனே --- விசாக மூர்த்தியே!

      அமரர் சிறை மீள்விக்க --- தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு,

     அமர் செய்து --- போர் புரிந்து,


     ப்ரதாபிக்கும் --- கீர்த்தியடைந்த,

     அதிக வித சாமர்த்ய --- மிகுந்த மேலான திறமை வாய்ந்த,

     கவிராஜ ராஜனே ---கவிச் சக்கரவர்த்தியே!

      அழுது உலகை வாழ்வித்த --- அழுது உலகங்களை எல்லாம் வாழ வைத்த,

     கவுணிய குல ஆதித்த --- கவுணிய குலத்தில் உதித்த சூரியனே!

      அரிய கதிர்காமத்தில் உரிய அபிராமனே --- அருமையான கதிர்காமத்திற்கு உரிய அழகரே!
        

     சமரமுக வேல் ஒத்த விழி புரள --- போர் முகத்துக் உரிய வேலாயுதம் போன்ற கண்கள் புரளவும்,

     வார் இட்ட தனம் அசைய --- இரவிக்கை அணிந்த தனங்கள் அசையவும்,

     வீதிக்குள் மயில் போல் உலாவியே --- தெருவில் மயில் போல் நடமாடி,

     சரியை க்ரியை யோகத்தின் வழிவரும் --- சரியை கிரியை யோகம் என்ற வழிகளில் நிற்கும், க்

     ருபா சுத்தர் --- அருளும் தூய்மையும் உடைய பெரியோர்களும்,

     தமை உணர் --- தம்மைக் கண்டு மோகிக்கும் படியாக,

     அராகத்தின் வசம் ஆக மேவியே --- ஆசைக்காட்டும் வழிகளில் பொருந்தி,

     உமது அடி உனாருக்கும் --- உமது திருவடியை நினையாதவருக்கும்,

     அனு மரண மாயைக்கும் --- மரணத்துடன் கூடிய மாயையில் பட்டவர்க்கும்,

     உரியவர் மகா தத்தை எனும் --- உரியவராய் சிறந்த கிளிகள் எனப்படும்,

     மாய மாதரார் --- மாயத்தில் வல்ல பொது மாதர்களுடைய,

     ஒளிர் அமளி பீடத்தில் --- விளங்குகின்ற படுக்கையிடத்தில்,

     அமடு படுவேனுக்கு --- சிக்கிக்கொண்ட அடியேனுக்கும்,

     உனது அருள் க்ருபா சித்தம் --- உமது திருவருள் கருணையுள்ளத்தை,

     அருள் கூர வேணுமே --- தந்தருள வேண்டும்.


பொழிப்புரை

         இமயமலையின் புதல்வியும், இன்பங்களை நுகரச் செய்கின்றவளும், பேராற்றலுடையவளும், எழுதவொண்ணாத காயத்ரி மந்திர சொரூபிணியும் ஆகிய உமாதேவியின் திருக்குமாரரே!

         வேடர் குலப்பாவைக்கு மடல் எழுதி விரும்பி, பரண் அருகில் சென்று சேவித்து நின்ற முருகக் கடவுளே!

         விசாக மூர்த்தியே!

         தேவர்களின் சிறையை விடுவிக்கும் பொருட்டு, போர் புரிந்து கீர்த்திபெற்ற மிகுந்த மேன்மையும் ஆற்றலும் படைத்த கவிராஜராஜனே!

         அழுது உலகங்களை யெல்லாம் வாழ வைத்த கவுணிய குல சூரியனே!

         அரிய கதிர்காமத்திற்கு உரிய அழகரே!

         போர் முகத்துக்குரிய வேல் போன்ற கண்களைப் புரட்டியும், இரவிக்கை யணிந்த தனங்களை அசையவும், தெருவில் மயில் போல் உலாவி, சரியை, கிரியை, யோகம் என்னும் வழிகளில் நின்று, அருளும், தூய்மையயும், வாய்ந்த பெரியோர்களும் தமைக்கண்டு மோகிக்கும்படிச் செய்து, உமது திருவடியை நினையாதவர்க்கும், மரணத்தோடு கூடிய மாயைக்கும் உரியவராய், சிறந்த கிளியைப் போன்றவரும், மாயைகளில் வல்லவரும் ஆகிய பொது மாதர்களுடைய, ஒளி செய்கின்ற, பஞ்சணையில் சிக்கிக் கொண்ட அடியேனுக்கும் உமது அருட் கருணை திருவுள்ளத்தை அருள் கூர்ந்து அளிக்கவேண்டும்.

விரிவுரை

சரியை க்ரியை யோகத்தின் வழிவரு க்ருபா சுத்தர் தமை உணர் அராகத்தின் வசமாக மேவியே ---

சரியா மார்க்கம், கிரியா மார்க்கம், யோக மார்க்கம் என்ற வழிகளில் நின்று கருணையும் தூய்மையும் உடைய பெரியோர்களும் தம்மைக் கண்ட மாத்திரத்தில் தம் வசமாகி மோகித்து உழலுமாறு ஈர்க்கும் ஆற்றல் படைத்தவர்கள் பொதுமாதர்கள்.

உமது அடி உனாருக்கும் அனுமரண மாயைக்கும் உரியவர்:-

முருகனுடைய திருவடியை நினைக்காத பாவிகளுக்கும் தொடர்ந்து வருகின்ற மரணத்துடன் கூடிய மாயைக்கும் அவர்கள் உரியவர்கள்.

மடலெழுதி:-

தான் விரும்பிய தலைவியை அடையும் பொருட்டு, பனை மடல்களால் குதிரையாகச் செய்து, அதன் மீது தலைவன் ஏறி, தலைவியின் உருவத்தை எழுதிய கொடியைப் பிடித்து ஊரவர் அறிய உலாவி வருவன்.

அழுது உலகை வாழ்வித்த கவுணிய குல ஆதித்த:-

முருக சொரூபம் பெற்ற ஒருவர் சீகாழியில் கவுணியர் குலத்தில் திருஞானசம்பந்தராகத் திருவவதாரம் புரிந்தார். அவர் "அம்மே அப்பா" என்று பிரம தீர்த்தக் குளக்கரையில் அழுதார். கரையில்லாத ஞானத்தைக் குழைத்த பாலை, சிவபெருமான் பணிக்க, அம்பிகை அளித்த சிவஞானப்பாலை உண்டு, சிவஞானசம்பந்தர் ஆனார். அவர் உலகந் தழைக்க அழுது, பதினாறாயிரம் திருப்பதிகங்களைப் பாடியருளினார்.

அவர் அன்று அழுததால், இந்த உலகம் வாழ்ந்தது, வாழுகின்றது, இனியும் வாழும்.

வேதநெறி தழைத்து ஓங்க, மிகு சைவத்துறை விளங்க,
பூத பரம்பரை பொலிய, புனிதவாய் மலர்ந்து அழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு, திருத்தொண்டு பரவுவாம்.     --- பெரியபுராணம்

கருத்துரை

கதிர்காமக் கடவுளே! உனது அருள் திருவுள்ளத்தை அளித்தருள்வீர்.


No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...