அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கடகட கருவிகள்
(கதிர்காமம்)
முருகா!
எனது ஆசைகளும், தடைகளும் நீங்க அருள்.
தனதன
தனதன தனதன தனதன
தானத் தனந்தந் ...... தனதான
கடகட
கருவிகள் தபவகி ரதிர்கதிர்
காமத் தரங்கம் ...... மலைவீரா
கனகத
நககுலி புணரித குணகுக
காமத் தனஞ்சம் ...... புயனோட
வடசிக
ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந் ...... தவழாது
வழிவழி
தமரென வழிபடு கிலனென
வாவிக் கினம்பொன் ...... றிடுமோதான்
அடவியி
ருடியபி நவகும ரியடிமை
யாயப் புனஞ்சென் ...... றயர்வோனே
அயிலவ
சமுடன ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண் ...... டருள்வோனே
இடமொரு
மரகத மயில்மிசை வடிவுள
ஏழைக் கிடங்கண் ...... டவர்வாழ்வே
இதமொழி
பகரினு மதமொழி பகரினு
மேழைக் கிரங்கும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கடகட
கருவிகள் தப, வகிர் அதிர் கதிர்-
காமத் தரங்கம் ...... அலைவீரா!
கன
கத நக குலி புணர்இத குண குக!
காம அத்தன் அஞ்ச,அம் ...... புயன்ஓட,
வடசிகர
கிரி தவிடு பட நடம்இடு
மாவில் புகும் கந்த! ...... வழாது
வழிவழி
தமர் என வழிபடுகிலன், என்
அவா விக்கினம் பொன் ...... றிடுமோதான்?
அடவி
இருடி அபிநவ குமரி அடிமை
ஆய் அப் புனம் சென்று ...... அயர்வோனே!
அயில், அவசமுடன் அததி திரிதரு கவி
ஆளப் புயங்கொண்டு ...... அருள்வோனே!
இடம்ஒரு
மரகத மயில்மிசை வடிவு உள
ஏழைக்கு இடம் கண் ...... டவர் வாழ்வே!
இதமொழி
பகரினும் மதமொழி பகரினும்
ஏழைக்கு இரங்கும் ...... பெருமாளே.
பதவுரை
கட கட கருவிகள் தப --- கட கட என்று
ஒலிக்கும் பறை முதலிய கருவிகளின் ஒலியும் அடங்குமாறு,
வகிர் அதிர் --- கோடுகளையுடைய புலிகள்
ஒலிசெய்கின்ற,
கதிர்காம ----- கதிர் காமத்து ஈசனே!
தரங்கம் அலை வீரா - அலைகளுடன் கூடிய
கடலை அலைத்து வருந்திய வீரமூர்த்தியே!
கன கத --- பெருமையும் கோபமும் பொருந்திய,
நக குலி --- மலையை ஒத்த யானை வளர்த்த
தேவயானையை,
புணர் இதகுண --- மருவிய இனிய
குணங்களையுடையவரே!
குக –-- இதய குகையில் வாழ்பவரே!
காம அத்தன் அஞ்ச --- மன்மதனுடைய
பிதாவாகிய திருமால் பயப்படவும்,
அம்புயன் ஓட --- தாமரை மலரில் வாழும் பிரமன்
ஓடவும்,
வட சிகர கிரி தவிடுபட --- வடக்கேயுள்ள
மேருமலை தவிடுபொடி படவும்,
நடம் இடு --- நடனஞ் செய்கின்ற,
மாவில் --- மயிலாகிய குதிரை மீது,
புகும் கந்த --- ஆரோகணித்து வருகின்ற கந்தக்
கடவுளே!
அடவி இருடி --- கானத்தில்
தவஞ்செய்திருந்த சிவமுனிவரின்,
அபிநவ குமரி --- புதுமையான புதல்வியாகிய
வள்ளி நாயகிக்கு
அடிமையாய் --- அடிமை ஆகி,
அ புனம் சென்று அயர்வோனே --- அந்தத்
தினைபுனத்திற்குச் சென்று தளர்ந்தவரே!
அவசமுடன் --- வெயிலால் மயக்கமுடன்,
அததி திரி தரு --- அந்தச்சமயத்தில் போய்க்
கொண்டிருந்த,
கவி ஆள --- கவியாகிய பொய்யா மொழிப் புலவரை
ஆட்கொண்டருளும் பொருட்டு,
அயில் புயம் கொண்டு அருள்வோனே --- வேலைத்
தோளில் ஏந்திச் சென்று அருள் புரிந்தவரே!
இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள ---
தமது இடப்பாகத்தில் மரகத மயிலுக்கு மேலான அழகுள்ள,
ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே --- பார்வதி
தேவிக்கு இடந்தந்த சிவபெருமானுக்குச் செல்வக் குமாரரே!
இத மொழி பகரினும் --- அடியேன் இனிய மொழி
பகர்ந்தாலும்,
மதமொழி பகரினும் --- தருக்குற்று கடுஞ்
சொற்கள் பகர்ந்தாலும்,
ஏழைக்கு இரங்கும் --- இந்த ஏழையினிடத்தில்
இரக்கங் காட்டும்,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
வழாது --- தவறுதல் இல்லாமல்,
வழிவழி தமர் என --- வழிவழியாக உறவினன்
என்னும்படி,
வழிபடுகிலன் --- அடியேன் தேவரீரை
வழிபடுகின்றிலேன்;
என் அவா --- எனது மூவாசைகளும்,
விக்கினம் --- மற்றுள்ள தடைகளும்,
பொன்றிடுமோ தான் --- அழிந்து ஒழியுமோ?
பொழிப்புரை
கட கட என்று ஒலிக்கும் பறை முதலிய
கருவிகளின் ஒலி அடங்குமாறு ஒலிக்கின்ற புலிகள் வாழ்கின்ற கதிர்காமத்து ஆண்டவரே!
கடலை வருத்திய வீர மூர்த்தியே!
பெருமையும் கோபமும் உடைய மலைபோன்ற ஐராவத
யானை வளர்த்த தெய்வயானையைத் தழுவுகின்ற இனிய குணத்தையுடைய குகமூர்த்தியே!
மன்மதனுடைய பிதாவாகிய திருமால் அஞ்சவும், தாமரையில் வாழும் பிரமன் ஓடவும், வடமேருகிரி தவிடு பொடியாகவும்
நடிக்கின்ற மயிலின் மீது ஏறும் கந்தக் கடவுளே!
கானகத்தில் தவஞ்செய்த சிவமுனிவரின்
புதுமையான புதல்வியாகிய வள்ளி நாயகிக்கு அடிமையாகி அத் தினைப்புனம் போய் தளர்ச்சியுற்றவரே!
வெயிலின் கொடுமையால் மயக்கமுற்று
அத்தருணத்தில் சென்று கொண்டிருந்த பொய்யா மொழி புலவரை ஆட்கொண்டருளும் பொருட்டு
வேலைத் தோளில் ஏந்திச் சென்று அருள் புரிந்தவேர!
தமது இடப்பக்கத்தில் மரகத மயிலுக்கு
மேலான அழகுள்ள பார்வதிதேவிக்கு இடந்தந்த சிவபெருமானுடைய செல்வக்குமாரரே!
அடியேன் இனிய மொழி பகர்ந்தாலும், தருக்குற்று கடுஞ் சொற்கள் பகர்ந்தாலும், ஏழையேனுக்கு கருணை புரியும் பெருமிதம்
உடையவரே!
தவறுதல் இல்லாமல் வழி வழியாக உறவினன்
என்னும் படி அடியேன் உம்மை வழிபடும் ஆற்றல் இல்லாதவனாக இருக்கின்றேன். எனக்குள்ள
மூவாசைகளும் ஏனைய தடைகளும் அழிந்து ஒழியுமோ?
விரிவுரை
கட
கட கருவிகள் தப வகிர்அதிர் ---
வகிர்-கீற்று.
கீற்றுக்களையுடைய புலியைக் குறிக்கின்றது. கட கட என்று முழங்குகின்ற பறை முதலிய
வாத்தியங்களின் ஒலியை அடக்கி புலிகள் முழங்குகின்றன.
கதிர்காமத்தலம்
பெருங்காட்டில் திகழ்கின்றது. புலிகளும் யானைகளும் பிற விலங்குகளும் இரவு பகல் இரை
தேடியுலாவுகின்றன.
தரங்கம்
அலை வீரா ---
தரங்கம்
அலை வீரா. தரங்கம்-அலை,. தானியாகு பெயராகக்
கடலைக் குறிக்கின்றது. சமுத்திரத்தை அலை-அலைத்த வீரா. தரங்கம்-அருவிகளின்
அலைகளுடன் கூடிய மலையில் வாழும் வீரரே! என்றும் பொருள் கொள்ளலாம்.
கன
கத நக குலி ---
கனம்-பெரும்.
கதம்-கோபம். நகம்-மலை.
இது
உவம ஆகு பெயராக யானையைக் குறிக்கின்றது. பெருமையும் கோபமும் உடையமலைபோன்ற
யானையாகிய ஐராவதத்தின் மகள் தெய்வயானை.
காம
அத்தன் அஞ்ச அம்புயன் ஓட ---
காம
அத்தன் அஞ்ச அம்புயன் ஓட என்று பதபிரிவு செய்க; காம அத்தம் - மன்மதனுக்குத் தந்தை; திருமால். மயிலின் நடனத்தைக் கண்டு
திருமால் அஞ்சினார்; பிரமன் அஞ்சி
ஓடினார்.
வடசிகர
கிரி தவிடுபட நடமிடு மா ---
மா-குதிரை.
இது மயிலைக் குறிக்கின்றது.
மாயில்
நடனம் செய்யும் போது பொன்மேருகிரி இடிந்து தவிடு பொடிபட்டது.
“வாசி விசைகொண்ட
வாகனப் பீலியின் கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு; அடியிட எண்
திசைவரை தூள்பட்ட; அத்தூளின் வாரி திடர் பட்டதே. --- கந்தரலங்காரம்.
அடவி
இருடி அபிநவ குமரி ---
திருமால்
சிவமுனிவராய்ப் பிறந்தார். அவர் வள்ளிமலைக் காட்டில் தவஞ் செய்து கொண்டிருந்தார்.
மகாலட்சுமியே
மானாக வந்து அஞ்கு உலாவினாள். அம் மானை அவர் நயனத்தால் புணர்ந்தார். மான்
கருவுற்று வள்ளியைப் பெற்றது.
“தத்து கவனவரி ணத்து
உபநிடவி
த்து முனியுதவு மொழியாறுத்
தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்
தத்தை
தழுவியப னிருதோளா” --- (அத்துகிரி)
திருப்புகழ்.
அயி்ல்
அவசமுடன ததிதிரி தருகவி ஆளப்புயங் கொண்ட் அருள்வாயே:-
அயில்
புயங்கொண்டு அருள்வோனே என்று கூட்டுக. அவசமுடன் அ ததி திரிதரு கவி.
கவி
- பொய்யாமொழிப் புலவன்.
“வெயிலின்
கொடுமையால் மயங்கி அந்த நேரத்தில் காட்டில் திரிந்த புலவன். அ-அந்த. ததி-தருணம்.
பொய்யாமொழிப் புலவர்
வரலாறு
சோழ
நாட்டில் பொய்யாமொழிப் புலவர் வாழ்ந்தார். இவர் சிவபெருமான் ஒருவரையே பாடும்
நியமம் உடையவர். ஒரு முருகனடியார் முரகனைப் பாடுமாறு வேண்டினார். “கோழியைப் பாடிய
நாவால் குஞ்சைப் பாடமாட்டேன்” என்று கூறி மறுத்தார்.
முருகனைப்
பாட மறுத்த வினையால் வறுமையாம் சிறுமை வந்துற்றது. வாடினார், வருந்தினார், பாண்டிய நாடு சென்று, பாண்டியனையும், பாண்டிமா தேவியையும், மந்திரியையும் கானப் பேர் கணிகையரையும் பாடிப்
பொன்னும் பொருளும் நிரம்பப் பெற்றுத் திரும்பினார். ஒரு பாலைவனத்தின் வழியே
வரும்போது, முருகர் வேடனாக
வில்லும் அம்புந் தாங்கி வந்து அவரை வழிமறித்தார். புலவர் நடுங்கினார்.
“இந்தப் பாலையைப் சிறப்பித்து
“நற்றாயிரங்கல்” என்ற துறையாக, என் பேர் முட்டை, என் பேரையும் அமைத்துப் பாடுக” என்றார்
வேடனாக வந்த வேலவர்.
பொய்யாமொழிப்
புலவர்.
“பொன்போலுங் கள்ளிப்
பொறி பறக்குங் கனலிலே
என்பேதை செல்லற் கியைந்தனனே-மின்போலு
மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்
கானவேல் முட்டைக்குங் காடு.”
என்று
பாடினார்.
முருகர், “புலவரே! நின்பாடலில் பொருட் குற்றம்
உள்ளது. பால் நிறைந்த கள்ளிச்செடி எரிந்து கரிந்துபோம் காட்டில் ஈரமில்லாத வேலமுள்
சாம்பலாகப் போயிருக்குமே? அது எப்படித்
தைக்கும்? ஆதலால் இது பிழை”
எனக் கூறி நனைத்து, “நானும் பாடுவேன், உன் பேரைக் கூறு; உன் பேரை அமைத்து இதே துறையில் நான்
பாடுகின்றேன், பார். “ என்றார்.
‘என் பேர் பொய்யாமொழி‘
என்றார் புலவர்.
‘விழுந்ததுளி
அந்தரத்தே வேம் என்றும் வீழின்
எழுந்து
சுடர்சுடும் என்றும்-செழுங்கொண்டல்
பெய்யாத
கானகத்துப் பெய்வளையம் போயினளே
பொய்யா
மொழிப்பகைஞர் போல்.
என்று
முருகவேள் பாடியருளினார்.
பின்னர்
“புலவரே! நீ குஞ்சைப் பாடமாட்டேன் என்றாயே; இப்பொழுது முட்டையைப் பாடினாயே; எனக் கூறி, அவர் உள்ளத்தைத் திருத்தி தமது
காட்சியைத் தந்தனர். சிவனே முருகன்,
இருவருக்கும்
பேதம் இல்லை என்று உணர்த்தி அருள் புரிந்து மறைந்தருளினார்.
“முற்பட்ட முரட்டுப்
புலவனை
முட்டைப்
பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே” --- (பத்தித்தர)
திருப்புகழ்.
“நற்றாயிரங்கல்” என்ற
துறையில் பாடினார் என்றும் அருணகிரிநாதர் கூறுகின்றார்.
“கற்றாவிற் காட்டிக்
கரைதுறை
நற்றாயிற் காட்டிப் புகழ்கமலை
கற்றார்சொற் கேட்கத் தனிவழ் வருவோனே” --- (சிற்றாய) திருப்புகழ்.
பொய்யா
மொழிப்புலவர் மதுரையில் சங்கம்
புரக்கா எழுநாள், மறவனாய்ப்
புறவுற
அணைத்து,எனது பெயர் முட்டை பாடுஎனப்
பொன்போலும் என்றுபாட,
வெய்யான
பாலைக்கு இதுஏலாது, நம்பெயர்
விளம்புஎன விளம்ப, அவர்மேல்
விழுந்த
துளி என்று எடுத்துப்பாடி அவர் நாவில்
வேல்கொடுத்து பொறித்த சதுரா”
--- திருவிரிஞ்சை முருகன்பிள்ளைத்தமிழ்.
ஏழைக்கு
இடம் கண்டவர் ---
ஏழை-பெண்.
“எருதேறி ஏழையுடனே” --- திருஞானசம்பந்தர்
“ஏழைபங்காளனையே பாடேலோ
ரெம்பாவாய்” --- திருவாசகம்
இதமொழி
பகரினும் மதமொழி பகரினும் ஏழைக்கிரங்கும் பெருமாளே ---
முருகப்
பெருமான் கருணாமூாத்தி. அப்பெருமான், தன்னை
இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும், கருணை புரிவான். கல்லாலும் வில்லாலும்
அடித்தவர்க்கு அருளிய கண்ணுதற் கடவுளின் புதல்வர் அல்லவா?
கருத்துரை
கதிர்காமக்
குமரேசா! என் ஆசைகளும் தடைகளும் தொலைய அருள் செய்வீர்.
video explanation of the song - https://youtu.be/6RjCPFWM6xA
ReplyDelete