கதிர்காமம் -0423. எதிரிலாத பத்தி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

எதிரிலாத பத்தி (கதிர்காமம்)

முருகா!
ஒப்பற்ற உள்ளன்புடன் உனது திருவடியைத் தியானிக்க அருள்


தனன தான தத்த ...... தனதான
     தனன தான தத்த ...... தனதான

எதிரி லாத பத்தி ...... தனைமேவி
     இனிய தாள்நி னைப்பை ...... யிருபோதும்

இதய வாரி திக்கு ...... ளுறவாகி
     எனது ளேசி றக்க ...... அருள்வாயே

கதிர காம வெற்பி ...... லுறைவோனே
     கனக மேரு வொத்த ...... புயவீரா

மதுர வாணி யுற்ற ...... கழலோனே
     வழுதி கூனி மிர்த்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


எதிர் இலாத பத்தி ...... தனைமேவி,
     இனிய தாள் நினைப்பை ...... இருபோதும்

இதய வாரி திக்குள் ...... உறவாகி
     எனது உளே சிறக்க ...... அருள்வாயே!

கதிர காம வெற்பில் ...... உறைவோனே!
     கனக மேரு ஒத்த ...... புயவீரா!

மதுர வாணி உற்ற ...... கழலோனே!
     வழுதி கூன் நிமிர்த்த ...... பெருமாளே.

பதவுரை

       கதிர காம வெற்பில் உறைவோனே --- கதிர்காமம் என்ற திருமலையில் எழுந்தருளி வாழ்பவரே!

       கனமேரு ஒத்த புய வீரா --- பொன்மேரு கிரியை ஒத்த தோள்களையுடைய வீரமூர்த்தியே!

       மதுரவாணி உற்ற கழலோனே --- இனிய மொழியையுடைய கலைமகள் வந்து போற்றும் திருவடியை உடையவரே!

       வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே --- பாண்டியனுடைய கூனை திருஞானசம்பந்தரை அதிஷ்டித்து நிமிர்த்தி அருளிய பெருமையின் மிக்கவரே!

       எதிர் இலாத பத்தி தனைமேவி --- சமானமில்லாத அன்பையுடையவனாகி,

     இனிய தாள் நினைப்பை --- இனிமையைத் தரும், தேவரீருடைய திருடித் தியானத்தை,

     இருபோதும் --- இரவும் பகலும்,

     இதய வாரிதிக்குள் உறவு ஆகி --- இருதயமாகி கடலின் கண்ணே பதிய வைத்து,

     எனது உளே சிறக்க --- அடியேனுடைய உள்ளத்திலே சிறப்பு அடைய,

     அருள்வாயே --- திருவருள் புரிவீர்.

பொழிப்புரை

         கதிர்காம மலையில் வாழ்பவரே!

         பொன் மேருகிரி போன்ற தோள்களையுடைய வீர மூர்த்தியே!

         இன் சொற்களையுடைய கலை மகள் வணங்கும் திருவடியினரே!

         திருஞான சம்பந்தரை அதிஷ்டித்து பாண்டியனுடைய கூனை நிமிர்த்த பெருமிதமுடையவரே!

         சமானமில்லாத அன்பை அடியேன் உடையவனாகி, தேவரீருடைய திருவடித்தியானத்தை இரவும் பகலும் ஒழியாது உள்ளமாகிய கடலில் கொண்டு உறவு செய்து எனக்குள் அது சிறக்குமாறு திருவருள் செய்வீர்.

விரிவுரை

எதிரிலாத பத்தி ---

இறைவனை பக்தி நெறியாலேயே காணமுடியும். பக்தி என்பதும் அன்பு என்பதும் ஒன்றே. பக்தி நெறியை அன்றி வேறு நெறிகள் கடினம். தவம் யோகம் விரதம் இவை பக்தியைப் போல் சுலபமான நெறிகள் அல்ல.

கருமமா தவஞ்செபஞ்சொல் காசறு சமாதி ஞானம்
புரிபவர் வசமதாகிப் பொருந்திடோம், புரிவொன்றின்றி
திரிவறும் அன்புசெய்வார் வசமதாய்ச் சேர்ந்து நிற்போம்
உரைசெய்வோம் அவர்முன் எய்தி அவருளத் துறைவோம் என்றும்”

என்று வாயு சங்கிதையில் சிவபெருமானே கூறுகின்றார்.

பக்தி வலையில் படுவேன் காண்க”

பக்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்
 சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன்”    --- மணிவாசகர்

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே”     --- திருவருட்பா

கடவுள் அன்பின் விளைகின்ற அமுதம் என்று அறிக. மலரில் உள்ள மனத்தைக் கரத்தினால் தொட்டும், கண்ணினால் கண்டும், காதால் கேட்டும், நாவினால் சுவைத்தும் அறிய முடியாதல்லவா? நாசியினால் மோந்து அறிய முடியும். அதுபோல் இறைவனை அன்பு என்ற ஒன்றாலேயே அறிய முடியும்.

கடவுளை நான் காண முடியுமா?” என்று ஒருவர் ஒரு பெரியவரிடம் கேட்டார். அப் பெரியவர் “காண முடியும்” என்றார். அவர் “எவ்வாறு காண முடியும்” என்றார்.

தாய்க்கு தன் அருமைக் குழந்தைமேல் உள்ள அன்பு‘
‘லோபிக்குப் பணத்தின் மீதுள்ள ஆசை‘
கற்புடைய மங்கை கணவன் மீது வைத்த காதல்‘

இந்த மூன்றும் ஒன்றுபட்டு நின்ற அன்பு உனக்குக் கடவுள் மீது இருக்குமானால் ஒரு கணத்தில் அவரைக் காணலாம்” என்று பெரியவர் பதிலளித்தார். அதுதான் “எதிரிலாத பக்தி” யாகும்.

கண்ணப்பர் காளத்தியப்பர் மீது வைத்த அன்புக்குச் சமானமில்லை. “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்” என்கிறார் மாணிக்கவாசகர்.

பத்தியே முத்தியைத் தரும் என்கிறார் அருணகிரிநாதர் திருவேளைக்காரன் வகுப்பில்.

ஆனபயபத்தி வழிபாடு பெறு முத்தி”


இனியதாள் நினைப்பை ---

இறைவனுடைய இணையடிமலர் கரும்பினும் கற்கண்டினும், கனியினும், இனிமையானது.

கனியினும் கட்டிபட்ட கரும்பினும்
பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்
தனிமுடி கவித்து ஆளும் அரசினும்
இனியன் தன்அடைந்தார்க்கு இடைமருதனே.       --- அப்பர்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்
மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இயைணடி நீழலே.                   --- அப்பர்

தண்அமுத மதிகுளிர்ந்த கிரணம் வீச,
     தடம்பொழில் பூமணம் வீச, தென்றல் வீச,
எண் அமுதப் பளிங்கு நிலா முற்றத்தே இன்
     இசைவீச, தண் பனிநீர் எடுத்து வீச,
பெண்அமுதம் அனையவர் விண் அமுதம் ஊட்ட,
     பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓடக்
கண்அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம்
     கலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே.  ---  திருவருட்பா.

         பிறவி வெப்பத்தை மாற்றும் குளிர்ந்த நிழல் பெருமானுடைய திருவடி நிழல். அது சித்தத்தில் தித்திக்கும் தீஞ்சுவையுடையது.

இருபோதும் ---

இருபோது என்பதற்கு காலையும், மாலையும் என்று பொருள் செய்யக்கூடாது. காலை மாலையன்றி மற்ற நேரங்களிலும் இறைவனை மறத்தல் கூடாது. ஆகவே இரவும் பகலும் என்று கூறுதலே சிறப்பு.

இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்”  --- அப்பர்

இதய வாரிதிக்குள் உறவாகி ---

வாரிதி - கடல். உள்ளத்தைக் கடல் என்று உருவகித்தனர். கடல் ஆழமுடையது. அதுபோல் உள்ளமும் ஆழமுடையது. இதயமாகிய கடலுள் இறைவன் திருவடியாகிய மந்திரகிரி சேர்வதாய் திருவருளமுதம் தோன்றும்.

எனது உளே சிறக்க அருள்வாயே ---

திருவடித் தியானம் உள்ளத்தில் சிறப்பாக இருத்தல் வேண்டும். “நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்” ஆதலின் நன்று நினைத்து இறைவனை உள்ளக் கோயிலில் எழுந்தருளப் புரிவார் உய்வு பெறுவார்.

கதிரகாம வெற்பில் உறைவோனே ---

கதிர்காமம் என்பது மிகவும் புனிதமான திருத்தலம். இது ஈழ நாட்டில் இருப்பது. மாணிக்க கங்கை அருகில் ஓடுகின்றது. அந்நதியில் இனிய தண்ணீர் வெள்ளம் தூயமையாக எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும். முருகவேள் சூரசங்காரத்தின் பொருட்டு போர்க் கோலத்துடன் ஏமகூடம் என்ற மலையில் படைகளுடன் தங்கினார். அந்ததலமே கதிர்காமம் என்க. பாசறை; போர்க்கோலமூர்த்தி; என்று இங்கு திரைக்கே வணக்கம் செலுத்துவது வழக்கம். இத்தலத்தில் பக்த கோடிகள் கற்பூர தீவட்டியுடன் அன்பு வெள்ளம் பொங்கிக் கரைபுரண்டு ஓட வழிபடுவார்கள்.

 
கனகமேரு ஒத்த புய வீரா ---

முருகவேளுடைய புயங்கள் பொன்மேருகிரி போன்ற திட்பமுடையது. உலகங்களைக் காக்கின்ற கடவுளுக்குத் தோள்வலி சிறப்புடையது. அதனாலேதான் “ஆறிருடந்தோள் வாழ்க” என்று முதலில் தோள்களை வாழ்த்துகின்றனர் கச்சியப்பர்.

இராமர் மிதிலை சென்றபோது அங்குள்ள அறிவுள்ள பெண்கள் அவருடைய தோளை முதலில் நோக்கினார்களாம்.

தோள்கண்டார் தோளே கண்டார்”               --- கம்பர்.

அலகிலவுணரைக் கொன்ற தோள் என”         --- திருப்புகழ்

மதுரவாணி உற்ற கழலோனே ---

இனிய மொழியை யுடையவள் கலைகமள், “மதுரவாணி தானாட” என்று பிறிதொரு திருப்புகழிலும் கூறினார்.

இனிய மொழியே உலகத்தைக் கவர்ந்து உய்விக்கும். எத்துணைப் பெரிய முரடர்கட்கும் இனிமையாகக் கூறினால் எடுபடும்.

கலைமகள் மதுர மொழியால் உலகிற்கு கலை நலத்தை உணர்த்துகின்றனள். முருகக் கடவுள் மதுர மொழியால் அகில உலகங்கட்கும் அருட்கலை நலத்தை உணர்த்துகின்றனர். அதனால் வாணி வந்து பணிகின்றாள்.

மதுர மொழியால் உலகு அனைத்தையும் உணர்த்தும் அவன்
 வட அனலை நேர் கொடிய குக்குடம் உயர்த்த குகன்”     --- பூதவேதாள வகுப்பு

வழுதி கூனிமிர்த்த பெருமாளே ---

முருகவேள் சிவமூர்த்தமே யாகும்

ஈசனே அவன்ஆடலால் மதலை ஆயினன் காண்”

“..........................அநாதியாய் நங்கட்கு எல்லாம்
   மூலகாரணமாம் வள்ளல் மூ இருமுகம் கொண்டு உற்றான்”

மால் அயன் தனக்கும், ஏனை வானவர் தமக்கும் எட்டா,
 மூலகாரணமாய் நின்ற மூர்த்தி, ம் மூர்த்தி அன்றோ”      --- கந்தபுராணம்

ஆகவே சிவமூர்த்தியே பிறப்பு இறப்பில்லாதவர். சிவமே முருகவேள் என்றமையால் முருகனுக்கும் பிற பிறப்பில்லை என்பது பெறப்பட்டது.

பெம்மான முருகன் பிறவான் இறவான்”     --- கந்தர் அநுபூதி.

ஆதலினால் முருகன் திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்பது பதியிலக்கணத்துக்கு முரணாகும். அங்ஙனம் தெய்வச் சேக்கிழாரும் செப்பினாரில்லை.

எனவே முருகவேள் திருவருள் திருஞானசம்பந்தரை அதிஷ்டித்து மதுரையில் சைவ சமயத் தாபனம் நிகழ்ந்தது. அதனால் முருகவேள் மீது அதனை வைத்து அருணகிரிநாதர் பல இடங்களில் இங்ஙனம் கூறுகின்றார் என உணர்க.

கருத்துரை

கதிர்காம வேலவரே! வீரப் புயாசலரே! வாணி தொழும் வள்ளலே! சைவசமயத் தாபகரே! ஒப்பற்ற அன்புடன் இடையறாது உமது திருவடியை நினைக்க அருள்புரிவீர்.








No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...