அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
உடுக்கத் துகில்
(கதிர்காமம்)
முருகா!
உலக மயக்கில் அழியாமல், உனது திருவருளையும்,
அதை அறியும் உண்மை அறிவையும்
அருள்.
தனத்தத்
தனதான தானன
தனத்தத் தனதான தானன
தனத்தத் தனதான தானன ...... தனதான
உடுக்கத்
துகில்வேணு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ......
யுறுநோயை
ஒழிக்கப்
பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ் ......
வகையாவுங்
கிடைத்துக்
க்ருகவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயி ......
ரவமேபோம்
க்ருபைச்சித்
தமுஞான போதமு
மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே
குடக்குச்
சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக ......
வெனமேவிக்
குறிப்பிற்
குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் ......
வரலாமோ
அடிக்குத்
திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறு ......
வனமேசென்
றருட்பொற்
றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
உடுக்கத்
துகில் வேணும், நீள்பசி
அவிக்கக் கனபானம் வேணும், நல்
ஒளிக்குப் புனல் ஆடை வேணும், மெய் ......உறுநோயை
ஒழிக்கப்
பரிகாரம் வேணும், உள்
இருக்கச் சிறுநாரி வேணும், ஒர்
படுக்கத் தனிவீடு வேணும், இவ் ...... வகை யாவும்
கிடைத்துக்
க்ருகவாசி ஆகிய
மயக்கக் கடல்ஆடி, நீடிய
கிளைக்குப் பரிபாலனாய் உயிர் ...... அவமே போம்.
க்ருபைச்
சித்தமும், ஞான போதமும்
அழைத்துத் தரவேணும், ஊழ்பவ
கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ...... ஒருநாளே.
குடக்குச்
சில தூதர் தேடுக,
வடக்குச் சில தூதர் நாடுக,
குணக்குச் சில தூதர் தேடுக, ...... என மேவிக்
குறிப்பில்
குறி காணும் மாருதி,
இனித் தெற்கு ஒரு தூது போவது
குறிப்பில் குறிபோன போதிலும் ...... வரலாமோ?
அடிக்
குத்திர காரர் ஆகிய
அரக்கர்க்கு இளையாத தீரனும்,
அலைக்கு அப்புறம் மேவி, மாதுஉறு ...... வனமே சென்று,
அருள்பொன்
திரு ஆழி மோதிரம்
அளித்து உற்றவர் மேல் மனோகரம்
அளித்துக் கதிர்காமம் மேவிய ......
பெருமாளே.
பதவுரை
குடக்கு சில தூதர் தேடுக --- மேற்கே சில
தூதர்கள் தேட வேண்டும் என்றும்,
வடக்கு சிலதூதர் தேடுக --- வடக்கே சில
தூதர்கள் தேடவேண்டும் என்றும்,
குணக்கு சில தூதர் தேடுக என --- கிழக்கே சில
தூதர் தேட வேண்டும் என்றும்,
மேவி --- அனுப்பி வைத்து,
குறிப்பில் குறி காணு மாருதி ---
குறிப்பினால் குறிப்பை உணரவல்ல அநுமன்,
இனி தெற்கு ஒரு தூது போவது --- இனி தென்
திசைக்கு ஒப்பற்ற தூதனாகப் போக வேண்டியது,
குறிப்பில் குறி போன போதிலும் வரலாமோ --- சொல்லியனுப்பும், குறிப்பின் விவரப் படி குறித்த பொருள்
காணமுடியாத போதிலும் வீணே திருப்பி வரலாமோ? வருதல் நன்றன்று என்று சொல்லியனுப்ப,
அடி குத்திரகாரர் ஆகிய --- அடியுடன்
வஞ்சகர்களாகிய,
அரக்கர்க்கு இளையாத தீரனும் ---
அரக்கர்களிடம் இளைக்காத தீரனாய்,
அலைக்கு அப்புறம் மேவி --- கடலைக் கடந்து
அப்புறம் இலங்கைக்குச் சென்று,
மாது உறு வனமே சென்று --- சீதாதேவியிருந்த
அசோக வனத்தை அடைந்து,
அருள் பொன் திரு ஆழி மோதிரம் --- இராமபிரான்
தந்தருளிய பொன்னாலாகிய அழகிய மோதிரத்தைச் சீதையிடம்,
அளித்து உற்றார் மேல் --- கொடுத்துவிட்டுத்
திரும்பிவந்த அந்த அநுமாருக்கு,
மனோகரம் அளித்து ---- அன்புடன் அருள்புரிந்து,
கதிர்காமம் மேவி --- கதிர்காமத்தில்
வீற்றிருக்கும்,
பெருமாளே --- பெருமையிற்
சிறந்தவரே!
உடுக்க துகில் வேணும் --- உடுப்பதற்கு
உடைகள் வேண்டும்;
நீள் பசி அவிக்க கன பானம் வேணும் --- பெரிய
பசியைத் தணிக்க உயர்ந்த சுவை நீர் வேண்டும்;
நல் ஒளிக்கு புனல் ஆடையும் வேண்டும் ---
தேகம் நல்ல ஒளி தரும் பொருட்டு,
நீரும், ஆடையும் வேணும்,
மெய் உறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும் ---
உடம்பில் வந்த நோய்களை அகற்றும் பொருட்டு மருந்துகள் வேண்டும்,
உள் இருக்க சிறு நாரி வேணும் ---
வீட்டுக்குள் இருக்க இளமையான மனைவி வேண்டும்;
படுக்க தனி வீடு வேணும் --- படுப்பதற்கு ஒரு
தனி வீடும் வேண்டும்!
இவ்வகை யாவும் கிடைத்து --- இந்த வகையான
நலன்கள் யாவும் அடியேனுக்குக் கிடைக்கப் பெற்று,
க்ருக வாசியாகி --- குடும்பத்தனாகிய,
மயக்க கடல் ஆடி --- அந்த வாழ்வு என்ற மயக்கக்
கடலில் முழுகி,
நீடிய கிளைக்கு பரிபாலன் ஆய் --- பெருத்த சுற்றத்தார்களைக்
காப்பாற்றுவனாய் இருந்து,
உயிர் அவமே போம் --- முடிவில் உயிர் வீணாகக்
கழிந்து போகும்;
ஆதலால் தேவரீர்,
க்ருபை சித்தமும் -- உமது கருணை உள்ளத்தையும்,
ஞான போதமும் --- சிவஞான போதத்தையும்,
அழைத்து தரவணேும் --- அடியேனை அழைத்துத்
தந்தருளவேண்டும்;
ஊழ்பவ கிரிக்கு உள் --- ஊழ்வினையால் வரும்
பிறப்பு என்ற மலைச் சூழலில்,
சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே --- சுழல்கின்ற
அடியேனை ஆட்கொள்ளும் நாள் ஒன்று உளதாகுமோ?
பொழிப்புரை
மேற்கே சில தூதர்கள் தேட வேண்டும்
என்றும், வடக்கே சில தூதர்கள்
தேட வேண்டும் என்றும், கிழக்கே சிலதூதர்கள்
தேட வேண்டும் என்றும் அனுப்பி வைத்து, குறிப்பில்
குறிப்பறிக்னிற் ஆஞ்சனேயரை இனி தெற்கே ஒரு தூதனாகப் போக வேண்டியது; சொல்லியனுப்பும் குறிப்பு விவரத்தின்படி
குறித்த பொருள் கிடைத்தல் தவறிப் போன போதிலும் திரும்பி வீணே வரலாமோ? வருதல் நன்றல்ல (என்று சுக்ரீவன்
சொல்லியனுப்ப) அடியோடு வஞ்சகர்களாகிய அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனாய்க்
கடலைக் கடந்து அப்புறம் இலங்கைக்குப் போய், சீதை இருந்த அசோகவனம் புகுந்து, ஸ்ரீராமர் தந்த அழகிய பொன் மோதிரத்தைக்
கொடுத்துத் திரும்பிய அநுமனுக்கு அன்புடன் அருள் புரிந்து கதிர்காமத்தில்
எழுந்தருளியிருக்கும் பெருமிதம் உடையவரே!
உடுப்பதற்கு உடை வேண்டும்; பெரிய பசியைத் தணிப்பதற்குக் கெட்டியான
பானகம் முதலிய சுவை நீர் வேண்டும்;
உடலின்
நல் ஒளிக்கு நீரும், ஆடையும் வேண்டும்; உடலுக்கு உற்ற நோய்களை ஒழிப்பதற்கு
மருந்துகள் வேண்டும்; வீட்டுக்குள்
இருப்பதற்கு இளம் மனைவி வேண்டும்;
படுப்பதற்கு
ஒரு தனி வீடு வேண்டும்; இவ்வாறான நலன்கள்
யாவும் கிடைத்துக் குடும்பத்தனாகி, அந்த வாழ்வு என்ற
மயக்கக் கடலில் முழுகி, பெரிய சுற்றத்தாரைக்
காப்பவனாயிருந்து, முடிவில் உயிர் வீணே
அழிந்து போம்; ஆதலால் உமது கருணை
உள்ளத்தையும், சிவஞான போதத்தையும்
அடியேனை அழைத்துத் தந்தருளவேண்டும்;
ஊழ்வினையாகிய
மலைச்சூழலில் சுழலுகின்ற என்னை ஆண்டு அருளும் நாள் ஒன்று கிடைக்குமோ?
விரிவுரை
இந்த
திருப்புகழ் இல்லறத்தில் வாழ்பவனுக்கு என்ன என்ன தேவையோ அவையாவும்
குறிக்கப்படுகின்றன.
உடுக்கத்
துகில் வேணும் ---
மனித
வாழ்க்கைக்கு முதல் தேவை உடை. உணவு இன்றி இருக்கலாம். உடையின்றி ஒரு கணமும் இருக்க
முடியாது. “சிறப்புடையப் பொருளை முந்துறக் கிளத்தல்” என்று சூத்திரப் படி உடையை
முதலில் மொழிகின்றார்.
நீள்பசி
அவிக்கக் கனபானம் வேணும் ---
பானம்-பருகும்
நீர். கனபானம்-பானகம், பால், மோர் முதலிய குடிநீர் வகை. இது சிறிது
கெட்டியாக வேணும் என்று கேட்கின்றார்.
நீள்
பசியை - பெரும் பசியை அவிப்பதற்குச் சிறந்த சுவைநீர் வகைகள் வேண்டும்.
நல்
ஒளிக்குப் புனல் ஆடை வேணும் ---
உடம்பு
நல்ல துகில் ஒளியாக விளங்கும் பொருட்டு குளிக்க நீரும் நல்ல ஆடையும் வேண்டும்.
ஏற்கனவே
துகில் என்று வந்துவிட்டபடியால்,
“புனலாட
வேண்டும்” என்றிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.
மெய்யுறு
நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும் ---
உடம்புக்குற்ற
நோய்களை விலக்க மருந்துகள் வேண்டும். மருத்துவம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இது
நான்கு உபவேதங்களுள் ஒன்று. ஆயுள் வேதம் எனப்படும்.
உள்இருக்க
சிறுநாரி வேணும் ---
வீட்டுக்குள்
இருக்கும் பொருட்டு இளமையான மனைவி வேண்டும் என்கின்றார். சிறிது வயது முதிர்ந்த
மனைவியினால் இன்பம் விளையாது என்ற குறிப்பையும் காண்க.
படுக்கத்
தனிவீடு வேணும் ---
இளம்
மனைவி இருந்தால் மட்டும் போதாது;
அவளும்
தானும் வாழச் சிறு வீடுவேண்டும் என்கின்றார்.
துணி, உணவு, நீர், மருந்து, மனைவி, வீடு என்ற ஆறு பொருள்கள் வேண்டும்
என்கின்றார்.
இவ்வகையாவும்
கிடைத்து க்ருக வாசியாகிய மயக்கக் கடலாடி ---
மேலே
கூறிய அனைத்துங் கிடைத்து இல்லற வாசியான பின், அவ்வாழ்வில், மயங்கி, மயக்கமாகிய கடலில் முழுகித்
துன்புறுகின்றேன்.
நீடிய
கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம் ---
மாமன், மைத்துனன், சகலன், மருகன் என்று பலவாறாகப் பெருகிக்கிளைத்த
சுற்றத்தார்களுக்குத் தான் காப்பவனாக இருந்து, வாழ்ந்து, பிறகு அவமே செத்து மடிகின்றார்கள் பலர்.
க்ருபைச்
சித்தமும் ஞான போதமும் ---
முருகனுடைய
கருணையுள்ளமும் சிவஞான போதமும் வேண்டும் என்கிறார்.
அழைத்துத்
தர வேணும் ---
முருகா!
நீ என்னை அழைத்துக் கருணையுடன் மேலே கூறிய இரண்டையும் தந்தருள வேண்டும்.
குடக்குச்
சில தூதர் தேடுக ---
இராமாயணத்தில்
நாடவிட்ட படலத்தை இந்த அடி குறிக்கின்றது.
சுக்ரீவன், சீதையைத் தேடும் பொருட்டு, மேற்கே சுஷேணனையும், வடக்கே சதவரியையும், கிழக்கே வினதனையும், தெற்கே, அநுமான், ஜாம்பவான், நீலன், அங்கதன் முதலியோரையும் ஒரு
மாதத்துக்குள் திரும்பவேணும் என்று அவணை வைத்து அனுப்பினான்.
குறிப்பிற்
குறிகாணு மாருதி ---
“குறிப்பில் குறிப்பு
உணர்வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்”
என்ற
திருவள்ளுவர் வாக்குக்கு இலக்கானவர் அநுமான். இவரிடம் சீதாதேவியின் அடையாளங்களைக் கூறி, கணையாழியையும் ஸ்ரீராமர் கொடுத்து
அனுப்பினார்.
அனுமார்
தென்கடல் வரை தேடி, சம்பாதி கூறிய
வார்த்தைகளால், கடல் கடந்து, இலங்கை சென்று, அசோகவனத்தில் தேவியைக் கண்டு, ஸ்ரீராமர் கூறிய அடையாளங்களைக் கூறி
கணையாழியைத் தந்தார்.
பின்னர்
அசோகவனத்தை அழித்து, இராவணனைக் கண்டு
அறிவுரைக் கூறி, இலங்கையை எரியூட்டித்
திரும்பும்போது இலங்கையின் தென்திசையிலுள்ள கதிர்காமம் போய், மாணிக்க கங்கையில் முழுகி கதிர்காம வேலவரை
வழிபட்டு அவருடைய அருள் பெற்றார்.
இதனை
அருணகிரிநாதர் இங்கே குறிப்பிடுகின்றார்.
கருத்துரை
கதிர்காமக்
கடவுளே! உனது கருணையுள்ளத்தையும் சிவஞான போதத்தையும் எனக்குத் தந்தருள்வீர்.
No comments:
Post a Comment