அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அலகின் மாறு
(கதிர்காமம்)
முருகா!
பொருள் ஆசையால் புல்லர்களைப்
பாடி அலையாமல்,
அடியேன் மீது திருக்கண்
சார்த்தித் திருவருள் புரிவாய்
தனன
தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அலகின்
மாறு மாறாத கலதி பூத வேதாளி
அடைவில் ஞாளி கோமாளி ...... அறமீயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
அருளி லாத தோடோய ...... மருளாகிப்
பலக
லாக ராமேரு மலைக ராச லாவீசு
பருவ மேக மேதாரு ...... வெனயாதும்
பரிவு
றாத மாபாதர் வரிசை பாடி யோயாத
பரிசில் தேடி மாயாத ...... படிபாராய்
இலகு
வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாசூரி
லெறியும் வேலை மாறாத ...... திறல்வீரா
இமய
மாது பாகீர திநதி பால காசார
லிறைவி கான மால்வேடர் ...... சுதைபாகா
கலக
வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத
கதிர காம மூதூரி ...... லிளையோனே
கனக
நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அலகின்
மாறு மாறாத கலதி, பூத, வேதாளி,
அடைவுஇல் ஞாளி, கோமாளி, ...... அறம் ஈயா
அழிவு கோளி, நாணாது புழுகு பூசி
வாழ்மாதர்
அருள் இலாத தோள் தோய ...... மருள் ஆகிப்
பலகலா
ஆகரா, மேரு மலை, கர அசலா, வீசு
பருவ மேகமே, தாரு ...... என,யாதும்
பரிவு
உறாத மாபாதர் வரிசை பாடி, ஓயாத
பரிசில் தேடி, மாயாத ...... படி பாராய்.
இலகு
வேலை நீள்வாடை எரிகொள் வேலை மாசூரில்
எறியும் வேலை மாறாத ...... திறல்வீரா!
இமய
மாது பாகீரதி நதி பாலகா! சாரல்
இறைவி கான மால்வேடர் ...... சுதை பாகா!
கலக
வாரி போல்மோதி, வடவை ஆறு சூழ்,சீத
கதிர காம மூதூரில் ...... இளையோனே!
கனக
நாடு வீடுஆய கடவுள் யானை வாழ்வான,
கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே!
பதவுரை
நீள் வாடை எரி கொள் வேலை --- நீண்ட
வடவைத் தீயையுடைய கடல் மீதும்,
மா சூரில் --- பெரிய சூரபன்மன் மீதும்,
இலகு வேலை எறியும் வேலை மாறாத ---
விளங்குகின்ற வேலாயுதத்தைச் செலுத்திய தொழிலை விடாத,
திறல் வீரா --- ஆற்றல் வாய்ந்த வீரரே!
இமய மாது --- இமயமலை ஈன்ற பார்வதி
தேவிக்கும்,
பாகீரதி நதி --- கங்காநதிக்கும்,
பாலகா ---- திருக்குமாரரே!
சாரல் இறைவி --- மலைச்சாரலில் இருந்த
தலைவியும்,
கான மால் வேடர் சுதை பாகா --- காட்டில்
வாழும் பெருமை பொருந்திய வேடர்குலப் பாவையுமாகிய வள்ளியம்மையின் கணவரே!
கலக வாரி போல மோதி --- பேரொலி கொண்ட
கடல் போல் அலை மோதி வரும்,
வடவை ஆறு சூழ் சீத --- மாணிக்க கங்கை
சூழ்ந்து குளிர்ச்சியுடைய,
கதிர காம மூது ஊரில் --- கதிர்காமம் என்ற
பழைய திருத்தலத்தில்,
இளையோனே --- இளம்பூரணரே!
கனக நாடு வீடு ஆய --- பொன்னுலகத்தைத்
தனக்கு வீடாகக் கொண்ட,
கடவுள் யானை வாழ்வு ஆன --- தேவயானை அம்மைக்கு
வாழ்வாக விளங்கும்,
கருணை மேருவே --- கருணையில் மேரு போன்றவரே!
தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும்
பெருமையில் மிக்கவரே!
அலகின்மாறு --- விளக்குமாறு,
மாறாத கலதி --- மாறுதல் இல்லாத மூதேவி,
பூத --- பூதம்,
வேதாளி --- பேய்,
அடைவு இல் ஞாளி --- முறையில்லாத நாய்,
கோமாளி --- கோணங்கி,
அறம் ஈயா அழிவு கோளி --- தருமஞ் செய்யாமல்
அழிவைக் கொள்ளுபவன்,
நாணாது --- வெட்கம் இல்லாமல்,
புழுகு பூசி வாழ் --- புனுகு வாசனையைப் பூசி
வாழ்கின்ற,
மாதர் --- பொது மாதரின்,
அருள் இலாத தோள்தோய --- அருள் இல்லாத
தோள்களைச் சேரவேண்டி,
மருள்ஆகி --- காம மயக்கங்கொண்டு,
பல கலா ஆகார --- பலகலைகளுக்கும்
உறைவிடமானவரே!
மேருமலை --- கருணையில் மேருமலை போன்றவரே!
கரா அசலா --- மலைபோன்ற புயத்தை உடையவரே!
வீசு பருவ மேகமே --- மழைவீசும் பருவ
காலத்து மேகமே!
தாரு என யாதும் --- கற்பக மரம் போன்றவரே
என்று கூறினாலும் ஒரு சிறிதும்,
பரிவு உறாத --- அன்பு கொள்ளாத,
மாபாதர் வரிசை பாடி --- மகா பாதகர்களைப்
புகழ்ந்து பாடி,
ஓயாத பரிசில் தேடி --- ஓய்வில்லாமல் பரிசுப்
பொருள்களைத் தேடி,
மாயாதபடி பாராய் --- அடியேன் இறந்து போகா
வண்ணம் திருக்கண்ணோக்கம் வைத்து அருளுவீராக.
பொழிப்புரை
பெரிய வடவைத் தீயை உடைய கடல் மீதும், மாமரமாய் நின்ற சூரபன்மன் மீதும், விளங்குகின்ற, வேலாயுதத்தை விடுத்த தொழிலை விடாத வலிய
வீரமூர்த்தியே!
பருவதராஜ குமாரிக்கும், கங்கா நதிக்கும் குமாரரே!
சாரல் மிகுந்த மலையில் இருந்த தலைவியும், கானக வேடர்களின் குமாரியுமான வள்ளி
நாயகியைப் பக்கத்தில் கொண்டவரே!
பேரொலியுடைய கடல் போல் அலை மோதி
வருகின்ற, மாணிக்ககங்கை
சூழ்ந்துள்ள, கதிர்காம மாகிய பழைய
திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இளம் பூரணரே!
பொன்னுலகத்தில் வாழும் தேவயானையம்மைக்கு
வாழ்வான கருணை மேருவே!
தேவர்கள் போற்றும் பெருமிதமுடையவரே!
விளக்குமாறு, மாறுதல் இல்லாத மூதேவி, பூதம், பேய், முறையில்லாத நாய், கோணங்கி, தருமம் செய்யாமல் அழிவைக் கொள்ளுபவன், வெட்கமில்லாமல் புனுகு வாசனைப் பூசி
வாழ்கின்ற பொது மாதர்களின் அன்பில்லாத தோள்களைச் சேரவேண்டி காம மயக்கங்கொண்டு, அதற்காகப் பொருள் தேட வேண்டி, பல கலைகளுக்கும் இருப்பிடமானவனே!
கருணையில் மேருமலை போன்றவனே! புய மலையை உடையவரே! பருவமழை பொழியும் மேகம் போன்றவனே!
என்று கூறினாலும் ஒரு சிறிதும் இரக்கம் கொள்ளாத மகா பாதகர்களைப் புகழ்ந்து பாடி
ஓய்வில்லாமல் பரிசுப் பொருள்களைத் தேடி அலைபவன் ஆகிய அடியேன் இறந்துபோகா வண்ணம்
திருக்கண்ணோக்கம் வைத்து அருளுவீராக.
விரிவுரை
அலகின்மாறு
---
விளக்குமாறு
போல் கீழானவன். விளக்குமாறு ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடக்கின்ற பொருள். அதுபோல்
ஆன்றோர்களால் ஒதுக்கப் பெற்றவன்.
மாறாத
கலதி ---
கலதி-மூதேவி.
எப்போதும் ஒன்றுபோல் மாறுதல் இல்லாமல் இருக்கின்ற மூதேவி. (தூங்குமூஞ்சி)
பூத
வேதாளி ---
பூதம்
போன்றவன். பேய் போன்றவன். உடம்பினால் பருத்தது பூதம். நிலைபேறு இன்றி அலைவது பேய்.
அடைவில்
ஞாளி ---
ஞாளி-நாய்.
நல்லோர் பொல்லோர் தெரியாமல் குரைக்கும் நாய் போன்றவன்.
“சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்” --- (அறுகுநுனி) திருப்புகழ்
அறம்
ஈயா அழிவு கோளி ---
கோளி-கொள்ளுபவன்.
தருமஞ் செய்யாது அழிவுத் தன்மையைக் கொள்ளுபவன்.
மருளாகி
---
மருள்-மயக்கம்.
பொது மாதர்களைத் தழுவ வேண்டும் என்ற மயக்கம் பூண்டு. அவருக்குத் தருவதற்குப்
பொருள் தேடி, தனவந்தரிடம் போய்
அவர்களைப் புகழ்ந்துபாடிப் பலர் அழிகின்றார்கள்.
பல
கலா ஆகாரா ---
ஒரு
கலையும் தெரியாத முழுமூடனைப் பார்த்துப் பல கலைகட்கும் உறைவிடமானவேன என்று
பாடுவார்கள்.
மேரு
---
கருணையே
இல்லாத உலோபியை “நீ கருணையில் மேரு போன்றவன்” என்று புகழ்ந்து பாடுவார்கள்.
கர
அசலா ---
மெலிந்த
தோள்களை உடையவனைப் பார்த்து “மலை போன்ற புயத்தை உடையவரே! என்று பாடுவார்கள்.
கல்லாத
ஒருவனை யான் கற்றாய் என்றேன்,
காடுஎறியும் அவனைநாடு ஆள்வாய் என்றேன்,
பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்,
போர்முகத்தை அறியானைப் புலியே என்றேன்
மல்ஆரும்
புயம்என்றேன் சூம்பல்தோளை,
வழங்காத கையனை யான் வள்ளல் என்றேன்,
இல்லாது
சொன்னேனுக்கு இல்லை என்றான்,
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே. --- இராமச்சந்திர கவிராயர்.
கைசொல்லும்
பனைகாட்டும் களிற்று உரியார்
தண்டலையைக் காணார் போலப்
பொய்சொல்லும்
வாயினர்க்குப் போசனமும்
கிடையாது! பொருள் நில்லாது!
மைசொல்லும்
கார் அளிசூழ் தாழைமலர்
பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ?
மெய்சொல்லி
வாழாதான் பொய்சொல்லி
வாழ்வது இல்லை! மெய்ம்மை தானே! --- தண்டலையார் சதகம்.
யாதும்
பரிவுறாத மாபாதர் ---
தமிழ்ப்
புலவர்கள் எத்தனை எத்தனை விதமாக விசித்திரம் விசித்திரமாகக் கவிபாடினாலும், ஒரு சிறிதும் இரக்கம் காட்டாமல், போ என்று சீறி விழுந்து, கடிக்கின்ற மாதிரிபேசி அடிக்க
வருவார்கள். அதனால் உலோபியரை மாபாதர் என்றார்.
பரிசில்
தேடி மாயாதபடி பாராய் ---
“முருகா! வாழ்நாள்
முழுவதும், பொருளாளரைத் தேடிச்
சென்று, அவர்களிடம் பரிசுப்
பொருள்களை நாடி உழன்று மாண்டு போகாத வண்ணம் தேவரீர் அருட் கண்பார்வையால்
பார்த்தருள வேண்டும்” என்று முறையிடுகின்றார்.
வாடை
எரி ---
எரி
- கனல், நெருப்பு, தீ.
கடல்
நீரை மிகுதியாகாத வண்ணம் ஒழுங்குபடுத்துவது வடவைக் கனல்.
வேலை
மாறாத திறல் வீரா ---
முருகவேள்
அருகில் எப்போதும் வேல் விலகாமல் விளங்கும்.
“வேலை மறவாத கரதலா
விசாகா” --- (இரதமானவாயூறல்) திருப்புகழ்
கலகவாரி
போல் மோதி வடவையாறு சூழ் சீத கதிர்காமம் ---
வடவையாறு - மாணிக்க
கங்கை.
ஓர்
அலை மற்றோர் அலையுடன் கலகம் புரிவது போல் மாறுவட்டு ஆரவாரத்துடன் மோதி வருகின்ற, நதி மாணிக்க கங்கை. இதன் கரையில் வானளாவிய
குளிர் தருக்களுடன் கூடி விளங்குவது கதிர்காமம்.
கருத்துரை
கதிர்காமக்
கடவுளே! மனிதரைப் பாடி அலையாவண்ணம் கண்பார்த்து அருள்வீர்.
No comments:
Post a Comment