14. மேன்மேல் உயர்ச்சி
தன்மட்டில்
இரவாது சீவனம் செய்பவன்
சாமர்த்தியம் உள புருடன் ஆம்,
சந்ததம் பதின்மரைக் காப்பாற்று வோன்மிக்க
தரணிபுகழ் தருதேவன் ஆம்,
பொன்மட்டு
இலாமல்ஈந்து ஒருநூறு பேரைப்
புரப்பவன் பொருஇல் இந்த்ரன்,
புவிமீதில் ஆயிரம் பேர்தமைக் காப்பாற்று
புண்யவா னேபிரமன் ஆம்
நன்மைதரு
பதினா யிரம்பேர் தமைக்காத்து
ரட்சிப்ப வன்செங் கண்மால்,
நாளும்இவன் மேலதிகம் ஆகவெகு பேர்க்குதவு
நரனே மகாதே வன் ஆம்,
அன்மட்டு
வார்குழலி பாகனே! ஏகனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
அல் மட்டுவார் குழலி பாகனே --- இருள்
போலக் கரிய நிறம் கொண்ட, மணம் மிக்க, நீண்ட கூந்தலை உடைய உமாதேவியை
இடப்பாகத்தில் உடையவனே!,
ஏகனே --- ஒப்பற்ற முதல்வனே!,
அண்ணல் எமது அருமை மதவேள் --- தலைமையில் சிறந்து
விளங்கும் எமது அருமை மதவேள் என்பான்,
அனுதினமும் மனதில் நினைதரு ---- நாள்தோறும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுரகிரியில்
எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
இரவாது --- பிறரிடம் இல்லை என்று சொல்லி இரவாமல்,
தன் மட்டில் சீவனம் செய்பவன் சாமர்த்தியம் உள
புருடன் ஆம் --- தன்னைப் பொறுத்த வரையில் வாழ்க்கையை நடத்துவோன் சாமர்த்தியம் உள்ள
ஆண்மகன் ஆவான்,
சந்ததம் பதின்மரைக் காப்பாற்றுவோன் மிக்க
தரணி புகழ்தரு தேவன் ஆம் --- எப்போதும் பத்துப்பேர்களையாவது ஆதரிப்பவன் இவ்வுலகிலே
புகழப்படும் சிறந்த தேவன் ஆவான்,
மட்டிலாமல் பொன் ஈந்து ஒரு நூறுபேரைப்
புரப்பவன் பொரு இல் இந்திரன் --- அளவின்றிப் பொருள் கொடுத்து நூறுபேரைக்
காப்பாற்றுவோன் ஒப்பற்ற இந்திரன் ஆவான்,
புவி மீதில் ஆயிரம்பேர் தமைக் காப்பாற்று
புண்ணியவானே பிரமன் ஆம் --- இந்த உலகில் ஆயிரம் பேர்களைக் காப்பாற்றும் புண்ணியவானே நான்முகன்
ஆவான்,
நன்மை தரு பதினாயிரம் பேர்தமைக் காத்து
ரட்சிப்பவன் செங்கண்மால் --- நன்னெறியிலே செல்லுகின்ற பத்தாயிரம் பேர்களைக் காப்பாற்றுபவன்
செந்தாமரைக் கண்ணனான திருமால் ஆவான்,
நாளும் இவன் மேல் அதிகமாக வெகுபேர்க்கு
உதவும் நரனே மகாதேவன் ஆம் --- எந்நாளும் இவனை விட மிகுதியாக அளவற்ற பேர்க்குக்
கொடுக்கும் மனிதனே மகாதேவன் ஆவான்.
No comments:
Post a Comment