திருவண்ணாமலை - 0576. புலையன் ஆன




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

புலையன் ஆன (திருவருணை)

திருவருணை முருகா!
உன்னையே எப்போதும் நினைக்குமாறு
எனது உள்ளத்தில் பொருந்தி இருந்து அருள்

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
     போறையி லாத கோபீகன் ...... முழுமூடன்

புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
     பொறிக ளோடி போய்வீழு ...... மதிசூதன்

நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
     நெறியி லாத வேமாளி ...... குலபாதன்

நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
     நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே

சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
     சிதையு மாறு போராடி ...... யொருசீதை

சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
     திறமி யான மாமாயன் ...... மருகோனே

அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
     அமர தாடி யேதோகை ...... மயிலேறி

அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
     அருணை மீதி லேமேவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


புலையன் ஆன மா ஈனன், வினையில் ஏகு மாபாதன்,
     பொறை இலாத கோபீகன், ...... முழுமூடன்,

புகழ் இலாத தாமீகன், அறிவு இலாத காபோதி,
     பொறிகள் ஓடி போய்வீழும் ...... அதிசூதன்,

நிலை இலாத கோமாளி, கொடை இலாத ஊதாரி,
     நெறி இலாத ஏமாளி, ...... குலபாதன்,

நினது தாளை நாள்தோறும் மனதில் ஆசை வீடாமல்
     நினையுமாறு நீ மேவி ...... அருள்வாயே.

சிலையில் வாளி தான்ஏவி எதிர் இராவணார் தோள்கள்
     சிதையுமாறு போராடி, ...... ஒருசீதை

சிறை இலாமலே கூடி, புவனி மீதிலே வீறு
     திறமி ஆன மாமாயன் ...... மருகோனே!

அலைய மேரு மாசூரர் பொடி அது ஆக வேல் ஏவி
     அமர் அது ஆடியே, தோகை ...... மயில் ஏறி,

அதிக தேவரே சூழ, உலக மீதிலே கூறும்,
     அருணை மீதிலே மேவு ...... பெருமாளே.


பதவுரை
        
      சிலையில் வாளி தான் ஏவி --- வில்லினின்றும் அம்பைச் செலுத்தி

     எதிர் இராவணார் தோள்கள் சிதையுமாறு போராடி --- பகைவனான இராவணனுடைய தோள்கள் அறுபடும்படி போர் புரிந்து,

     ஒரு சீதை சிறை இலாமலே கூடி ---  ஒப்பற்ற சீதா தேவியை சிறையில் இருந்து மீட்டு,

     புவனி மீதிலே வீறு திறமியான மாமாயன் மருகோனே --- இந்த உலகிலே சிறந்து விளங்கிய ஆற்றல் மிகுந்தவராகிய பெரிய மாயையில் வல்லவராகிய திருமாலின் திருமருகரே!

      அலைய மேரு --- மேருமலை அலையவும்,

     மாசூரர் பொடியதாக வேல் ஏவி --- பெரிய சூரர்கள் மடிந்து பொடியாகுமாறும் வேலாயுதத்தைச் செலுத்தி,

     அமர் அது ஆடியே தோகை மயில் ஏறி --- போர் செய்து, தோகையுடன் கூடிய மயலில் ஏறி

      அதிக தேவரே சூழ --- மிகுந்த தேவர்கள் சூழ,

     உலக மீதிலே கூறும் --- உலகத்தில் புகழ்ந்து சொல்லப்பட்ட

     அருணை மீதிலே மேவு பெருமாளே --- திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      புலையன் ஆன மா ஈனன் --- கீழ் மகனாய் மிகவும் இழிந்தவன்,

     வினையில் ஏகு மாபாதன் --- தீவினைச் செயல்களிலேயே செல்லும் பெரிய பாதகன்,

     பொறை இலாத கோபீகன் --- பொறுமை என்பதே இல்லாத கோப குணத்தினன்,

     முழு மூடன் --- முழுதும் அறிவில்லாதவன்,

       புகழ் இலாத தாமீகன் --- புகழ் என்பதே இல்லாத தாம்பிகன்,

     அறிவு இலாத காபோதி --- அறிவு என்பதே இல்லாத கண்ணில்லாதவன்,

      பொறிகள் ஓடு போய் வீழும் அதி சூதன் --- ஐம்பொறிகள் இழுக்கும் வழியிலேயே போய் விழுகின்ற பெரிய தந்திரக்காரன்,

        நிலை இலாத கோமாளி ---  ஒரு நிலையில் நிற்காத கோணங்கி,

     கொடை இலாத ஊதாரி --- ஈகை என்பதே இல்லாத வீண் செலவுக்காரன்,

     நெறி இலாத ஏமாளி --- நல்ல வழியே இல்லாத பேதை,

     குலபாதன் --- பிறந்த குலத்தைப் பாவத்துக்கு ஆளாக்குபவன், இத்தகைய அடியேன்

         நினது தாளை நாள்தோறும் மனதில் ஆசை வீடாமல் நினையுமாறு --- தேவரீருடைய திருவடியை, தினந்தோறும், மனதில் ஆசை அழியாமல், நினைந்து உய்யும் வண்ணம்,

     நீ மேவி அருள்வாயே --- தேவரீர் என் உள்ளத்தில் இருந்து அருள் புரிவீராக.

பொழிப்புரை


         வில்லினின்றும் அம்பைச் செலுத்தி பகைவனான இராவணனுடைய தோள்கள் அறுபடும்படி போர் புரிந்து, ஒப்பற்ற சீதா தேவியை சிறையில் இருந்து மீட்டு, இந்த உலகிலே சிறந்து விளங்கிய ஆற்றல் மிகுந்தவராகிய பெரிய மாயையில் வல்லவராகிய திருமாலின் திருமருகரே!

         மேருமலை அலையவும், பெரிய சூரர்கள் மடிந்து பொடியாகுமாறும் வேலாயுதத்தைச் செலுத்தி, போர் செய்து, தோகையுடன் கூடிய மயலில் ஏறி, மிகுந்த தேவர்கள் சூழ, உலகத்தில் புகழ்ந்து சொல்லப்பட்ட திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         கீழ் மகனாய் மிகவும் இழிந்தவன், தீவினைச் செயல்களிலேயே செல்லும் பெரிய பாதகன், பொறுமை என்பதே இல்லாத கோப குணத்தினன், முழுதும் அறிவில்லாதவன், புகழ் என்பதே இல்லாத தாம்பிகன், அறிவு என்பதே இல்லாத கண்ணில்லாதவன், ஐம்பொறிகள் இழுக்கும் வழியிலேயே போய் விழுகின்ற பெரிய தந்திரக்காரன், ஒரு நிலையில் நிற்காத கோணங்கி, ஈகை என்பதே இல்லாத வீண் செலவுக்காரன், நல்ல வழியே இல்லாத பேதை, பிறந்த குலத்தைப் பாவத்துக்கு ஆளாக்குபவன், இத்தகைய அடியேன் தேவரீருடைய திருவடியை, தினந்தோறும், மனதில் ஆசை அழியாமல், நினைந்து உய்யும் வண்ணம், தேவரீர் என் உள்ளத்தில் இருந்து அருள் புரிவீராக.


விரிவுரை


ஆன்மாவுக்கு ஆநாதியே ஆணவ மலம் உண்டு. இது சகஜ மலம், மூலமலம் எனப்படும். செம்பில் களிம்பு போல, அரிசியில் தவிடு போல, ஆன்மாவின் அறிவை மறைத்துளது. துன்பங்கள் எல்லாவற்றிற்கும் இதுவே காரணம். ஆணவ மல நீக்கம் இன்ப ஆக்கமாகும். எனவே, நமக்கு ஆணவ மலம் நீங்க வேண்டும். சிவஞானம் ஓங்க வேண்டும்.

நாம் நமது சிறுமையை நினைக்க நினைக்க ஆணவம் தேயும்.  இறைவனுடைய பெருமையை நினைக்க நினைக்க சிவஞானம் பெருகும். இது ஒரு சிறந்த கருத்து.

திருப்புகழில் முதலில் உள்ள நான்கு அடிகளில் ஆன்மாவின் சிறுமையும், பிற்பகுதியான நான்கு அடிகளில் இறைவனுடைய பெருமையும் பேசப்படுகின்றன. திருப்புகழின் உட்பொருள் இது என உணர்க.

புலையன் ஆன மா ஈனன் ---

கொலை புரிபவன் கொலைஞன். அதுபோல் புலை உணவு உண்பவன் புலையன். மனிதனுடைய குணங்கள் உணவினாலேயே அமைகின்றன.

பால், தயிர், பழம், கிழங்கு, கீரை முதலிய உணவுகளால் சத்துவகுணம் உண்டாகின்றது.

பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, மிளகாய், புளி முதலியவைகளால் ராஜஸ குணம் உண்டாகின்றது. 

புலால் உணவு தாமத குணத்தை உண்டாக்குகின்றது.

புல் உண்ணுகின்ற மாடுகளும், தழை உண்ணுகின்ற ஆடுகளும் யானைகளும் கூட்டம் கூட்டமாக ஒற்றுமையாக உலாவுகின்றன.  மாட்டு மந்தை, ஆட்டு மந்தை, யானை மந்தை என்று பார்க்கின்றோம்.

புலால் உண்ணுகின்ற நாய்கள் ஒற்றுமையாக இருப்பதில்லை.  ஒன்றைக் கண்டால் ஒன்று சீறுகின்றது. நாய் மந்தை என்று பார்க்கமுடிவதில்லை. 

இரு புலிகள், இரு சிங்கங்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக இருப்பதில்லை. 

ஆதலால், மனிதன் தாழ்ந்த புலால் உணவினால் சாந்த குணத்தை இழந்து, கோப வெறி உழந்து பழிபாவங்கட்கு அஞ்சாதவனாய் இருக்கின்றான்.

பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை, அருள்ஆட்சி
ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு.             --- திருக்குறள்.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை, ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.              ---  திருக்குறள்.

மனித வாழ்க்கை புலால் உண்ணாமலேயே நடைபெறும். உயிர் வாழ்வதற்கு ஊன் உணவு தேவையில்லை. மாடு, ஆடு, யானை, குரங்கு, கழுதை முதலிய விலங்குகளும், கிளி, புறா, குருவி முதலிய பறவை இனங்களும் கூட ஊன் உண்ணாமல் வாழ்கின்றன என்றால், மனித வாழ்வுக்கு ஊன் உணவு வேண்டுமா? வேண்டுவதில்லை. காலில் முள் குத்தினால் நாம் துன்பம் அடைகின்றோம். சவுளம் புரியும்போது கத்தி சிறிது பட்டுப் புண்ணானால் வேதனை அடைகின்றோம்.  அவ்வாறானால், ஆடு கோழிகளை கத்தியால் வெட்டுகின்ற போது அந்த உயிர்கள் எத்துணை வேதனை அடையும்? இதைச் சிறிது சிந்தித்தால் புலால் உண்ண உள்ளம் ஒப்புமா? ஆதலால், கடைத்தேற வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் புலாலை உண்ணக் கூடாது. புலால் உண்டவன் நரகிடை வீழ்வான்.  வீழ்ந்தவனைத் திரும்ப விடாமல், நரகம் நன்றாகத் தன் வாயை மூடிக் கொள்ளுமாம். "அண்ணாத்தல் செய்யாது அளறு" என்ற திருவள்ளுவப் பெருந்தகையின் வாக்கால் அறிக.

புலால் உண்பதால் மனிதன் கீழ்மகன் ஆகின்றான். ஆதலால், அருணகிரிப் பெருமான், இங்கே, புலையன் ஆன மா ஈனன் என்று உரைத்தருளினார்.

வினையில் ஏகு மாபாதன் ---

வினை என்பது தீவினை நல்வினை என்ற இரண்டையும் குறிக்கும். ஆனால், இங்கு முன் பின் உள்ள குறிப்புக்களால் தீவினையைக் குறிக்கும். பொய், புலால், களவு, காமம், சூது முதலிய தீவினைச் செயல்களிலேயே செல்லும் பெரிய பாதகன்.

பொறை இலாத கோபீகன் ---

பெருமை தருவது பொறுமை. தன்னை ஒருவன் அகாரணமாக நிந்திப்பான் ஆயின், அவனுடைய அறியாமையை நினைந்து வருந்தி, நிந்தனையைப் பொறுத்துக் கொள்வது உயர்ந்த பண்பாளருடைய குணமாகும்.

தன்னைக் காரணம் இன்றியே ஒருவன் நிந்திப்பானாயின், நிந்தித்தவன் தன்னுடைய புண்ணியத்தில் ஒரு பகுதி பொறுத்தவனை அடைகிறது. பொறுத்தவனுடைய பாவத்தில் ஒரு பகுதியை நிந்தித்தவன் அடைகின்றான். இந்த நுட்பத்தை அறிந்தவன் நிந்தனையைக் கண்டு சிந்தனை செய்யமாட்டான்.

பிறர் புரியும் கொடுமையைக் கண்டு பொறுத்துக் கொள்ளுவது சிறந்தது.

கோபம் மூளுகின்ற போது உதிரம், நாடி, நரம்பு யாவும் கொதிப்புறுகின்றன. அதனால் உடல் நலமும், உள நலமும் கேடுறுகின்றன. இரத்தக் கொதிப்பு முதலிய நோய்கள் மேலிடுகின்றன.  கோபம் பாபத்துக்கு அஞ்சாது.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.                  ---  திருக்குறள்.

துறந்தாரின் தூய்மை உடையர், இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.           ---  திருக்குறள்.

நகையும் உவகையும் கொல்லும், சினத்தின்
பகையும் உளவோ பிற.                       ---  திருக்குறள்.

முழுமூடன் ---

மூடன் - அறிவில்லாதவன். ஒரு சிறிது அறிவும் இன்மையால் முழுமூடன் என்றார்.

புகழிலாத தாமீகன் ---

மனித வாழ்வுக்கு இன்றியமையாதது புகழ். புகழ் ஒன்று தான் என்றும் பொன்ராது நிலைத்து நிற்பது.

ஒன்றா உலகத்து உயர்ந்தபுகழ் அல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல்.                ---  திருக்குறள்.

கொடையினால் புகழ் பெருகும். கொடையாளிகளை என்றும் உலகம் புகழும்.

உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்கு ஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.                     --- திருக்குறள்.

டாம்பீகமாக வாழ்பவர் பலர். "டாம்பீகன்" என்ற சொல் "தாமீகன்" என வந்தது.

அறிவிலாத காபோதி ---

மனிதனுக்கு அறிவுதான் சிறந்த கண். அறிவுக் கண் உடையவர் பின்னே வருவதை முன்னே அறிவர். ஆதலால், அறிவு இல்லாதவனை, காபோதி - குருடன் என்றார். எனவே, கண் இல்லாதவர் எல்லோரும் கண் இல்லாதவர் அல்லர். அவர்கட்கு அறிவே கண்ணாக விளங்குகின்றது. அறிவு அற்றவனே கண் அற்றவன் என உணர்க.

அறிவுடையார் ஆவதுஅறிவார், அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.                     ---  திருக்குறள்.

எதிர்அதாக் காக்கும் அறிவினோர்க்கு இல்லை,
அதிர வருவது ஓர் நோய்.                    ---  திருக்குறள்.

அறிவுஉடையார் எல்லாம் உடையார், அறிவுஇலார்
என்உடைய ரேனும் இலர்.                    ---  திருக்குறள்.

பொறிகளோடு போய் வீழு மதிசூதன் ---

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகள் போன வழியே சென்று பலர் உழல்கின்றார்கள்.  இவர்கள் குதிரை போனவழியே வண்டியை ஓட்டுபவனோடு ஒக்கும்.

அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகள் என்னும் யானைகளை அடக்குபவனே சிறந்த அறிஞன்.

உரன்என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்கு ஓர் வித்து.     ---  திருக்குறள்.

சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.                 ---  திருக்குறள்.

பொறிகள் போனவழி செல்லும் மூடர்கள் பாவமாகிய படுகுழியில் வீழ்ந்து பரதவிப்பார்கள்.

அதிசூதன் ---

அதிக சூதுகள் புரியும் தந்திரசாலி. மான் அனுப்பி இராம லட்சுமணரை அகற்றி தவவேடம் பூண்டு, அன்னமிட வந்த பெண் தெய்வத்தைக் கன்னமிட்ட இராவணனுடைய தன்மை அதிசூது.

மண்டபம் புதுக்கியுள்ளேன். வாருங்கள் என்று அழைத்து, சூது விளையாடி, ஐவரையும் ஆரணியத்துக்கு அனுப்பிய துரியோதனனுடைய தன்மை அதி சூது.

நிலையிலாத கோமாளி ---

கோமாளி - விகடக் கூத்தாடும் கோணங்கி.

ஒரு கொள்கையிலும் நிலைத்து நில்லாமல் இன்றொரு கொள்கை, நாளைக்கொரு கொள்கை என்று பச்சோந்தி போல தடுமாறுபவர் பலர்.

கொடையிலாத ஊதாரி ---

செல்வத்தின் பயன் இன்பத்தை நுகர்தல்.  இன்பங்கள் எல்லாவற்றிலும் தலையாய இன்பம் ஈத்துவப்பது.

ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல், தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்கண் அவர்.         ---  திருக்குறள்.

மனிதனுக்குப் பல நோய்கள் உளவாதல் போல, செல்வத்துக்கும் இருநோய்கள் உண்டு. ஒன்று தானும் உண்ணாமை, பிறரையும் உண்ண விடாமை.

உண்ணான், ஒளிநிறான், ஓங்கு புகழ்செய்யான்,
துன்அரும் கேளிர் துயர்களையான், - கொன்னே
வழங்கான், பொருள்காத்து இருப்பானேல், அ ஆ
இழந்தானஎன்று எண்ணப் படும்.               --- நாலடியார்.

தானும் உண்ணாமல், பிறர்க்கு உதவி செய்து பெருமைப் படாமல், புகழ் சேர்க்காமல், தன் சுற்றத்தார் துயர் துடைக்கப் பொருளைத் தந்து உதவாமல், தேடிய செல்வத்தை வீணே பூட்டி வைத்துக் காத்திருப்பவன் வாழ்க்கையானது, சீ சீ இதுவும் ஒரு வாழ்க்கையா? அப்படிப்படவன் இருந்து என்ன? போய் என்ன? அவன் இருந்தாலும் இறந்தவன் ஆகவே கருதப்படுவான்.

இப்படி அறம் செய்யாத அறிவிலி, வேண்டாத, பயனில்லாத வகையில் அள்ளி அள்ளிப் பொருளை வீசுவான்.  அதனால் ஊதாரி என்றார்.
 
குலபாதன் ---

ஒருவன் பிறந்தால் அக் குலத்துக்குப் பெருமை தேடித்தர வேண்டும்.  செய்யத் தகாத பாவங்களைச் செய்து அக் குலத்துக்கே தீராப்பழியை உண்டாக்குபவர் சிலர் உளர்.

நினது தாளை நாள்தோறும் மனதில் ஆசை வீடாமல் நினையுமாறு நீ மேவி அருள்வாயே ---

பலகோடி காகங்களை ஒரு கல் அகற்றுமாப் போல், பல தீமைகளை இறையுணர்வு அகற்றிவிடும்.

நாள்தோறும் பல் விளக்குவது போல, நாள்தோறும் ஏனங்களை விளக்குவது போல, நாள்தோறும் இறைவழிபாடு புரிதல் வேண்டும். சத்திய சிந்தனையுடன் நித்திய வழிபாடு புரிவோர் முத்தி நலம் பெறுவர். நினைந்து உருகும் அடியவர் உள்ளத்தில் இறைவன் எழுந்தருளுவான்.

"எத்தால் மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை வைத்தாய்" என்று சுந்தரரும், "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்று அப்பர் பெருமானும் அருளிய அருட்பாடல்களால் அறிக.

வெஞ்சுடர் ஆடுவர் துஞ்சிருள் மாலை
         வேண்டுவர்பூண்பது வெண்நூல்
நஞ்சுஅடை கண்டர் நெஞ்சு இடமாக
         நண்ணுவர் நம்மைநயந்து,
மஞ்சுஅடை மாளிகை சூழ்தரு பாச்சில்
         ஆச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
         சிதைசெய்வதோ இவர்சீரே.          --- திருஞானசம்பந்தர்.

என்புஇருத்தி, நரம்புதோல் புகப்பெய்திட்டு,
         என்னைஓர் உருவம் ஆக்கி,
இன்புஇருத்தி, முன்புஇருந்த வினைதீர்த்திட்டு,
         என்உள்ளம் கோயில் ஆக்கி,
அன்புஇருத்தி, அடியேனைக் கூழ்ஆட்கொண்டு
         அருள்செய்த ஆரூ ரர்தம்
முன்புஇருக்கும் விதிஇன்றி, முயல்விட்டுக்
         காக்கைப்பின் போன வாறே.     --- அப்பர்.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்கம் மிக்கஉவர் பூவுநீ ரும்கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.      --- அப்பர்.

அன்பு என்ற சொல் ஆசை என்று வந்தது. "ஆசைகூர் பத்தனேன்" என்று பிறிதோர் இடத்திலும் கூறுகின்றார்.

உலக மீதிலே கூறும் அருணை ---

நினைக்க முத்தியளிக்கும் தலம். ஆதலின், திருவருணையை உலகம் போற்றிப் புகழ்கின்றது.

அண்ணாமலை தொழுவார்வினை
வழுவா வண்ணம் அறுமே...         ---  திருஞானசம்பந்தர்.

தழைக்குமலை, ஞானத் தபோதனரை
வா என்று அழைக்குமலை, அண்ணாமலை.  --- குகைநமசிவாயர்.


கருத்துரை


அருணாசல மேவிய அரசே, உன்னை சதா நினையும் என் உள்ளத்தில் இருந்தருள்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...