அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பேதக விரோத
(திருவருணை)
திருவருணை முருகா!
எனது பிறவித் துயர் தீர,
உனது வேலையும், சேவலையும், வள்ளித் தாயையும்
மனதில் சிந்திக்க அருள்.
தானதன
தானத் தானதன தானத்
தானதன தானத் ...... தந்ததான
பேதகவி ரோதத் தோதகவி நோதப்
பேதையர்கு லாவைக் ...... கண்டுமாலின்
பேதைமையு
றாமற் றேதமக லாமற்
பேதவுடல் பேணித் ...... தென்படாதே
சாதகவி
காரச் சாதலவை போகத்
தாழ்விலுயி ராகச் ...... சிந்தையாலுன்
தாரைவடி
வேலைச் சேவல்தனை யேனற்
சாரல்மற மானைச் ...... சிந்தியேனோ
போதகம
யூரப் போதகக டாமற்
போதருணை வீதிக் ...... கந்தவேளே
போதகக
லாபக் கோதைமுது வானிற்
போனசிறை மீளச் ...... சென்றவேலா
பாதகப
தாதிச் சூரன்முதல் வீழப்
பாருலகு வாழக் ...... கண்டகோவே
பாதமலர்
மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
பேதக, விரோத, தோதக, விநோதப்
பேதையர் குலாவைக் ...... கண்டு, மாலின்
பேதைமை
உறா மற்று, ஏதம் அகலாமல்
பேத உடல் பேணித் ...... தென்படாதே,
சாதக
விகாரச் சாதல் அவை போகத்
தாழ்வில் உயிராகச் ...... சிந்தையால் உன்
தாரை
வடிவேலை, சேவல்தனை, ஏனல்
சாரல் மறமானைச் ...... சிந்தியேனோ?
போதக
மயூர, போது அக அகடு ஆ மன்
போது, அருணை வீதிக் ...... கந்தவேளே!
போதக,
கலாபக் கோதை முதுவானில்
போன சிறை மீளச் ...... சென்றவேலா!
பாதக
பதாதிச் சூரன் முதல் வீழ,
பார் உலகு வாழக் ...... கண்டகோவே!
பாதமலர்
மீதில் போதமலர் தூவிப்
பாடும் அவர் தோழத் ...... தம்பிரானே.
பதவுரை
போதக மயூர --– யானை மீதும்
மயிலின் மீதும்,
போது அக அகடு ஆ மன் போது --- மலர் ஆசனம்
இட்ட நடு இடத்தில் எழுந்தருளி வருகின்ற,
அருணை வீதிக் கந்தவேளே ---
திருவண்ணாமலை வீதியில் உள்ள கந்தக் கடவுளே!
போதகம் --- ஐராவதம் என்னும்
வெள்ளை யானையால் வளர்க்கப் பெற்ற,
கலாபக் கோதை --- மயில் போன்ற தேவசேனை
வாழ்ந்த,
முது வானில் போன --- பழமையான
விண்ணுலகத்தார்கள் சென்றிருந்த,
சிறை மீளச் சென்ற வேலா --- சிறையில்
இருந்து அவர்கள் மீளும் பொருட்டுப் போருக்குச் சென்ற வேலாயுதரே!
பாதக பதாதிச் சூரன் முதல்
வீழ
–-- பாவச் செயல்களைச் செய்த காலாட் படைகளை உடைய சூரபன்மன் முதலியோர் வீழ்ந்து
மடியவும்,
பார் உலகு வாழக் கண்ட கோவே ---
மண்ணுலகும் விண்ணுலகும் வாழுமாறும் கருணை புரிந்த தலைவரே!
பாதமலர் மீதில் --- தேவரீருடைய
திருவடித் தாமரையில்,
போதமலர்
தூவி --- ஞான மலர்களை அருச்சித்து,
பாடும் அவர் தோழ --– உமது
திருப்புகழைப் பாடுகின்ற அடியவர்களின் தோழராகிய,
தம்பிரானே --- தனிப்பெரும் தலைவரே!
பேதகம் - மனம் வேறுபாடு,
விரோதம் - பகைமை,
தோதகம் - வஞாசகம் என்ற இவைகளை,
விநோதம் - பொழுதுபோக்காகக் கொண்ட,
பேதையர் குலாவைக் கண்டு --- பேதையராம்
மாதர்கள் மகிழ்ச்சியுடன் உறவாடுதலைக் கண்டு,
மாலின் --- மயக்கத்தால்,
பேதைமை உறா --- அறியாமையை அடைந்து,
மற்று ஏதம் அகலாமல் --- அதனால்
குற்றம் குறைகள் என்னை விட்டு நீங்காது,
பேத உடல் பேணி --- மாறுபாட்டை அடையும் இந்த உடம்பை விரும்பிப்
பாதுகாத்து,
தென்படாதே --- வெளியே உலவாமல்,
சாதகம் --- பிறப்பும்,
விகாரம் --- பாலன் குமாரன் கிழவன்
என்னும் வேறுபாடும்,
சாதல் இவை போக –-- இறப்பும் ஆகிய இவை
தொலைய,
தாழ்வில் உயிர் ஆக --– குறைவு இல்லாத
உயிராக விளங்குமாறு,
சிந்தையால் --- உள்ளத்தால்,
உன் தாரை வடிவேலை --- உனது கூர்மையும்
அழகும் உடைய வேலையும்,
சேவல்தனை --- கோழியையும்,
ஏனல் சாரல் மற மானை --- தினைப்
புனத்துடன் கூடிய மலைச் சாரலில் வாழ்ந்த வேடர் மகளாம் மான் போன்ற வள்ளி
நாயகியையும்,
சிந்தியேனோ --- அடியேன் தியானிக்க
மாட்டேனோ.
பொழிப்புரை
யானை மீதும் மயிலின் மீதும் மலராசனம்
இட்ட நடு இடத்தில் எழுந்தருளி வருகின்ற திருவண்ணாமலை வீதியில் உள்ள கந்தக் கடவுளே!
ஐராவதம் என்னும் வெள்ளை யானையால்
வளர்க்கப் பெற்ற, மயில் போன்ற தேவசேனை
வாழ்ந்த, பழமையான
விண்ணுலகத்தார்கள் சென்றிருந்த, சிறையில் இருந்து அவர்கள் மீளும்
பொருட்டுப் போருக்குச் சென்ற வேலாயுதரே!
பாவச் செயல்களைச் செய்த காலாட் படைகளை
உடைய சூரபன்மன் முதலியோர் வீழ்ந்து மடியவும், மண்ணுலகும் விண்ணுலகும் வாழுமாறும்
கருணை புரிந்த தலைவரே!
தேவரீருடைய திருவடித் தாமரையில் ஞான
மலர்களை அருச்சித்து, உமது திருப்புகழைப்
பாடுகின்ற அடியவர்களின் தோழராகிய தனிப்பெரும் தலைவரே!
மனம் வேறுபாடு, பகைமை, வஞ்சகம் என்ற இவைகளை, பொழுதுபோக்காகக்
கொண்ட பேதையராம் மாதர்கள் மகிழ்ச்சியுடன் உறவாடுதலைக் கண்டு, மயக்கத்தால் அறியாமையை அடைந்து, அதனால் குற்றம் குறைகள் என்னை விட்டு
நீங்காது, மாறுபாட்டை அடையும்
இந்த உடம்பை விரும்பிப் பாதுகாத்து வெளியே உலவாமல், பிறப்பும், பாலன் குமாரன் கிழவன் என்னும்
வேறுபாடும், இறப்பும் ஆகிய இவை தொலைய, குறைவு இல்லாத உயிராக விளங்குமாறு, உள்ளத்தால், உனது கூர்மையும் அழகும் உடைய வேலையும், கோழியையும், தினைப் புனத்துடன் கூடிய மலைச் சாரலில்
வாழ்ந்த வேடர் மகளாம் மான் போன்ற வள்ளி நாயகியையும், அடியேன்
தியானிக்க மாட்டேனோ.
விரிவுரை
பேதகம்
---
பேதகம்
- வேறுபாடு. நேற்று ஒரு கொள்கை இன்றொரு கொள்கையாகவும், பொருள் தந்தால் விருப்பும், இல்லையேல் வெறுப்பும் இப்படிப்பட்ட
மனவேற்றுமை அடைகின்ற மாதர்கள்.
விரோதம்
---
பணம்
கேட்கும் போது எல்லாம் தரவில்லையானால் பகைமை கொள்வார்கள்.
ஒருத்தர்
உடன் உறவாகி, ஒருத்தரொடு பகையாகி,
ஒருத்தர்
தமை மிகநாடி, –
(வரிக்கலையின்)
திருப்புகழ்.
தோதக
விநோதம் ---
தோதகம்
- வஞ்சகம். தமது விருப்பத்துக்குப் பொருள் தராதவர்களை வஞ்சகம் செய்து விரட்டுவர்.
மனவேறுபாடு, பகைமை, வஞ்சனை முதலிய தீக்குணங்களையே தமக்குப்
பொழுது போக்காக உடைய மாதர்கள்.
பேதையர்
---
அறிவில்லாத
மாதர்கள். இது பொது மாதர்களைக் குறிக்கும்.
குலாவைக்
கண்டு மாலின் பேதைமை உறா ---
அம்
மாதர்கள் மகிழ்ந்து உறவாடுதலைக் கண்டு மோக மயக்கம் உற்று அறியாமையை அடைந்து
கெடுகின்றேன்.
மற்று
ஏதம் அகலாமல் ---
ஏதம்
- குற்றம். அதனால் குற்றம் குறைகள்
நீங்காமல் தடுமாறுதல்.
பேத
உடல் பேணி ---
பேதம்
- மாறுபாடு. இந்த உடம்பு தினம் தினம் மாறுபட்டுக் கொண்டு இருக்கும். இந்த அற்ப உடம்பை நிலைபேறாகக் கருதி அல்லும்
பகலும் இந்த உடம்பையே விரும்பி இதற்காகவே பாடுபடுவர்.
சாதக
விகாரச் சாதல் அவை போக ---
சாதகம்
- பிறப்பு. விகாரம் - வேறுபாடும்.
பாலனாகவும், குமாரனாகவும், கிழவனாகவும் வேறுபாட்டை அடைவது, முடிவில் இறந்துபடுதல் ஆகிய இவைகள்
தொலையுமாறு.
தாழ்வில்
உயிராக ---
உயிர்
குறைவுபடாததாக விளங்க வேண்டும். அதற்கும்
என்ன வழி என்று அருணகிரிநாதர் பின்வரும் அடியில் இனிது உபதேசிக்கின்றார்..
சிந்தையால்
உன் தாரை வடிவேலைச் சேவல்தனை ஏனல் சாரம் மறமானைச் சிந்தியேனோ....
தாரை
- கூர்மை. வடி - அழகு.
கூர்மையும்
அழகும் உடைய வேலை நினைக்கவேண்டும். நாத
தத்துவமான சேவலை நினைக்கவேண்டும். இச்சா
சத்தியாகிய வள்ளிநாயகியைத் தியானிக்கவேண்டும்.
வேலையும்
சேவலையும் வள்ளியம்மையையும் உள்ளத்தால் இடையறாது சிந்தித்தால் இறப்பு பிறப்பு
முதலிய துன்பங்கள் விலகும். பிறவாத
பெற்றியைப் பெற்று உயிர் பேரின்பம் அடையும்.
போதக
மயூரம் ---
முருகப்
பெருமான் திருவண்ணாமலையில் யானை வாகனத்தின் மீதும், மயில் வாகனத்தின் மீதும் எழுந்தருளி
வருகின்றார்.
போதகம்
- யானை. மயூரம் - மயில்.
போதக
கடாமன் போது ---
போது
ஆக அகடு ஆமன் போது எனப் பதப்பிரிவு செய்து கொள்க.
போது
- மலர். அகம் - உள். அகடு - நடு இடம்.
மலராசனம்
இட்ட நடு இடத்தில் எழுந்தருளி வருகின்ற முருகன்.
போதக
கலாப முதுவான் ---
போதகம்
- ஐராவத யானை.
ஐராவத
யானையால் வளர்க்கப் பெற்ற மயுலிபோன்ற தேவசேனை வாழ்ந்த பழமையான வானுலகம்.
சிறைமீளச்
சென்ற வேலா ---
தேவர்களின்
சிறைமீட்ட முருகன், ஆன்மாவின்
பந்தமாசமாகிய சிறையையும் மீட்டு அருளுவார் என்பது குறிப்பு.
பாதக
பதாதி ---
பதாதி
- காலாட்படை. பெரிய பாவங்களையே
செய்பவர்களாகிய காலாட்படைகள்.
சூரன்
முதல் வீழ ---
சூரபன்மன், சிங்கமுகன், தாரகன் முதலிய அசுரர்கள் வீழ்ந்து
மடியுமாறு முருகவேள் போர்புரிந்து அருளினார்.
இது மும்மலங்களை அழித்தருளினார் என்பதைக் குறிக்கும்.
பாத
மலர் மீதில் போத மலர் தேவிப் பாடும் அவர் தோழ ---
போத
மலர் - போதம் - அறிவு, ஞானம். ஞானமலர் தூவுதல்.
முருகப்
பெருமானை உள்ளத்திலே ஞான மலர்களைக் கொண்டு
வழிபடுபவர்க்கு
அவர் தோழனாக விளங்குவார் என்கின்றார் அடிகளார்.
புறப்பூசையை
விடவும் அகப்பூசையே சிறந்தது. புறப்பூசை அகப்பூசையில்
முடியவேண்டும். அரும்பு மலர் ஆகவேண்டும். மலர் காயாக வேண்டும், காய் கனி ஆகவேண்டும்.
விரும்பும்
சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு, மலர், காய், கனி போல் அன்றோ பராபரமே.
நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே. ---
தாயுமானார்.
பின்
வரும் அருட்பாடல்கள் இதனைத் தெளிவு பட விளக்கும்.
ஞானத்தால்
தொழுவார் சில ஞானிகள்,
ஞானத்தால்
தொழுவேன் உனை நான் அலேன்,
ஞானத்தால்
தொழுவார்கள் தொழக் கண்டு,
ஞானத்தாய்
உனை நானும் தொழுவனே. --- அப்பர்.
பூங்கொத்து
ஆயின மூன்றொடு ஓர்ஐந்துஇட்டு
வாங்கி
நின்றவர் வல்வினை ஓட்டுவார்
வீங்கு
தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத்
தோல்உடை ஆடைவீ ரட்டரே. --- அப்பர்.
தேனப்
போதுகள் மூன்றொடு ஓர்ஐந்துடன்
தான்அப்
போதுஇடு வார்வினை தீர்ப்பவர்
மீனத்
தண்புனல் பாய்கெடி லக்கரை
வேனல்
ஆனை உரித்தவீ ரட்டரே. --- அப்பர்.
அகப்பூசைக்கு
உரிய அட்ட புட்பங்கள் - கொல்லாமை,
ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் நலம் சிறந்தார் மனத்தகத்து
மலர்கள் எட்டும்.
புகைஎட்டும்
போக்குஎட்டும் புலன்கள் எட்டும்
பூதலங்கள் அவைஎட்டும் பொழில்கள் எட்டும்
கலைஎட்டுங்
காப்புஎட்டும் காட்சி எட்டும்
கழற்சே வடிஅடைந்தார் களைகண் எட்டும்
நகைஎட்டும்
நாள்எட்டும் நன்மை எட்டும்
நலம் சிறந்தார்
மனத்தகத்து மலர்கள் எட்டும்
திகைஎட்டும்
தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. --- அப்பர்.
நலம் என்றது, ஞானத்தை. அது மிக்கார் உடைய உள்ளத்தில்
இருந்து ஞானபூசைக்கு உரியன ஆகும் மலர்கள் எட்டாவன, `கொல்லாமை, பொறியடக்கம், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு` என்பன.
அகன்அமர்ந்த
அன்பினராய் அறுபகைசெற்று
ஐம்புலனும்
அடக்கிஞானம்
புகல்உடையோர்
தம்உள்ளப் புண்டரிகத்து
உள்இருக்கும்
புராணர்கோயில்
தகவுஉடைநீர்
மணித்தலத்துச் சங்குளவர்க்
கம் திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய
புன்குமலர்ப் பொரிஅட்ட
மணம்செய்யும் மிழலையாமே. --- திருஞானசம்பந்தர்.
உள்ளத்தில் பொருந்திய
அன்பு உடையவராய், காமம் முதலிய
அறுபகைகளையும் கடிந்து, சுவை ஒளி முதலிய ஐம்புலங்களை
அடக்கிச் சிவஞானத்தில் திளைத்து இருப்பவர்களாகிய துறவிகளின் இதயத் தாமரையில்
எழுந்தருளி விளங்கும் பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மணிகளும் சங்கினங்களும் விளங்கும்
தூயதான நீர் நிலைகளில் முளைத்த தாமரை மலராகிய தீயில் மிகுதியாக வளர்ந்த
புன்கமரங்கள் பொரி போல மலர்களைத் தூவி, திருமண
நிகழ்ச்சியை நினைவுறுத்திக் கொண்டிருப்பதாகிய திருவீழிமிழலையாகும்.
மெய்ம்மையாம்
உழவைச் செய்து
விருப்புஎனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம்
களையை வாங்கிப்
பொறைஎனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவுஎனும் வேலி இட்டுச்
செம்மையுள்
நிற்பர் ஆகில்
சிவகதி விளையும் அன்றே. --- அப்பர்.
காயமே
கோயில் ஆகக் கடிமனம் அடிமை யாக
வாய்மையே
தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக
நேயமே
நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப்
பூசனை
ஈச னார்க்குப் போற்று அவிக் காட்டி னோமே. ---
அப்பர்.
உயிரா
வணம் இருந்து, உற்று நோக்கி
உள்ளக் கிழியின் உருவு எழுதி
உயிர்
ஆவணம் செய்திட்டு உன்கைத் தந்தால்,
உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி,
அயிரா
வணம் ஏறாது ஆன்ஏறு ஏறி,
அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட
அயிரா
வணமே என் அம்மா னே,நின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே. ---
அப்பர்.
துள்ளும்
அறியா மனது பலிகொடுத்தேன், கர்ம
துட்ட தேவதைகள் இல்லை,
துரியம் நிறை சாந்த தேவதையாம் உனக்கே
தொழும்பன், அன்பு அபிடேக நீர்,
உள்உறையில்
என் ஆவி நைவேத்தியம், ப்ராணன்
ஓங்கும் மதி தூபதீபம்,
ஒருகாலம் அன்று, இது சதாகால பூசையா
ஒப்புவித்தேன் கருணைகூர்,
தெள்ளிமறை
வடியிட்ட அமுதப் பிழம்பே!
தெளிந்த தேனே! சீனியே!
திவ்யரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே!
தெவிட்டாத ஆனந்தமே!
கள்ளன்அறிவு
ஊடுமே மெள்ளமௌ வெளியாய்க்
கலக்க வரு நல்ல உறவே!
கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தம் இடு
கருணா கரக்கடவுளே. --- தாயுமானார்.
மறவாமை
யான் அமைத்த மனக்கோயில் உள் இருத்தி,
உற
ஆதி தனை உணரும் ஒளிவிளக்குச் சுடர் ஏற்றி,
இறவாத
ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி,
அறவாணர்க்கு
அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்.
--- பெரிய
புராணம்.
கருத்துரை
அருணைமேவும்
அண்ணலே, பிறவித் துன்பம்
தொலைய, வேலையும், சேவலையும், வள்ளியம்மையையும் தியானிக்க அருள்செய்.
No comments:
Post a Comment