திருவண்ணாமலை - 0578. போக கற்பக





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

போக கற்பக (திருவருணை)

திருவருணை முருகா!
உலகவரைப் பாடிப் பொருள் தேடிப்
பூவையருக்கு அளித்து வீணாகாமல் அருள்


தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத்
     தானனத் தத்ததனத் ...... தத்த தனதான


கோககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்
     பாரியைப் பொற்குவையுச் ...... சிப்பொ ழுதிலீயும்

போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத்
     தோரைமெச் சிப்பிரியப் ...... பட்டு மிடிபோகத்

த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித்
     தாரமுட் பட்டதிருட் ...... டுக்க விகள்பாடித்

தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட்
     சேல்வலைப் பட்டடிமைப் ...... பட்டு விடலாமோ

ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற்
     றாதரிக் கைக்கருணைத் ...... துப்பு மதில்சூழும்

ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக்
     காகவெற் றிக்கலபக் ...... கற்கி யமர்வோனே

தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித்
     தூணிமுட் டச்சுவறத் ...... திக்கி லெழுபாரச்

சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச்
     சூரனைப் பட்டுருவத் ...... தொட்ட பெருமாளே.

பதம் பிரித்தல்


போக கற்பக் கடவுள் பூருகத்தை, புயலை,
     பாரியை, பொன் குவை உச் ...... சிப்பொழுதில் ஈயும்

போது உடைப் புத்திரரைப் போல ஒப்பிட்டு, உலகத்
     தோரை மெச்சிப் பிரியப் ...... பட்டு, மிடி போக,

த்யாகம் மெத்தத் தருதற்கு, ஆசு நல் சித்திர வித்
     தாரம் உட்பட்ட திருட் ...... டுக் கவிகள் பாடி,

தேடி, இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு, அவர்கண்
     சேல்வலைப் பட்டு அடிமைப் ...... பட்டு விடல்ஆமோ?

ஆகமப் பத்தரும் மற்று ஆரணச் சுத்தரும், உற்று
     ஆதரிக்கைக்கு அருணைத் ...... துப்பு மதில்சூழும்

ஆடகச் சித்ர மணிக் கோபுரத்து உத்தர திக்கு
     ஆக வெற்றிக் கலபக் ...... கல்கி அமர்வோனே!

தோகையைப் பெற்ற இடப்பாகர், ஒற்றைப் பகழித்
     தூணி முட்டச் சுவறத் ...... திக்கில் எழுபாரச்

சோதிவெற்பு எட்டும் உதிர்த் தூளிதப் பட்டு அமிழச்
     சூரனைப் பட்டு உருவத் ...... தொட்ட பெருமாளே.

பதவுரை

      ஆகமப் பத்தரும் --- ஆகமங்களை ஓதி உணர்ந்த பக்தர்களும்,

     மற்று ஆரணச் சுத்தரும் உற்று --- வேதங்களைப் பயின்ற பரிசுத்தர்களும், ஒருங்கு கூடி

     ஆதரிக்கைக்கு --- விரும்பிப் பணி செய்ய

     அருணைத் துப்பு மதில்சூழும் --- திருவண்ணாமலையில் பொலிவுள்ள மதில் சூழும்

     ஆடகச் சித்ரமணிக் கோபுரத்து உத்தர திக்காக --- பொன்மயமான விசித்திரமான அழகிய கோபுரத்தில் வடக்குப் பாகத்தில்

     வெற்றிக் கலபக் கல்கி அமர்வோனே --- வெற்றியுடைய தோகைப் புரவியாம் மயில் மீது அமர்ந்துள்ளவரே!

      தோகையைப் பெற்ற இடப்பாகர் --- மயில்போன்ற உமாதேவியை இடப் பாகத்தில் பெற்றவராகிய சிவபெருமானுக்கு

     ஒற்றைப் பகழித் தூணி முட்டச் சுவற, --- ஒரு அம்பாக இருந்த திருமாலின் உறைவிடமான அம்புக் கூடாகிய கடல் முழுதும் வற்றுமாறும்,

     திக்கில் எழுபாரச் சோதி வெற்பு எட்டும் உதிர்த் தூளிதப் பட்டு அமிழ, --- திசைகளில் எழுந்துள்ள பாரமான, ஒளி வீசும் எட்டு மலைகளும் உதிர்ந்து தூளாகி அமிழும்படியும்,

     சூரனைப் பட்டு உருவத் தொட்ட பெருமாளே --- சூரன் மீது பட்டு உருவும்படியும், வேலாயுதத்தை ஏவிய பெருமையில் சிறந்தவரே!

      போக கற்பகம் கடவுள் பூருகத்தை --- விரும்பிய போகத்தைத் தரவல்ல கற்பகமாகிய தெய்வத் தருவையும்,

     புயலை --- மேகத்தையும்,

     பாரியை --- பாரி வள்ளலையும்,

     பொற்குவை உச்சிப் பொழுதில் ஈயும் --- பொன் குவியலை உச்சிப் பொழுதில் கொடுத்து வந்த

      போது உடைப் புத்திரரைப் போல ஒப்பிட்டு --- தெய்வ மலரை வைத்திருந்த புத்திரர்களையும் நீ ஒப்பு ஆவாய் என்று கூறி,

     உலகத்தோரை மெச்சிப் பிரியப் பட்டு மிடி போக --- உலக மக்களைப் புகழ்ந்து, அவர்கள் மீது அன்பு வைத்து, வறுமை விலகும் பொருட்டு,

       த்யாகம் மெத்தத் தருதற்கு --- அவர்கள் பெரிதாகக் கொடையைத் தரும் பொருட்டு,

     ஆசு, நல் சித்திர, வித்தாரம் உட் பட்ட திருட்டுக் கவிகள் பாடி ---  ஆசுகவி, நல்ல சித்திரக் கவி, வித்தார கவி ஆகிய திருட்டுக் கவிகளைப் பாடி,

     தேடி --- பொருள் தேடி,

     இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு --- காதல் கொண்டுள்ள, அழகிய பொதுமாதர்களுக்குத் தந்து,

      அவர் கண் சேல்வலைப் பட்டு அடிமைப்  பட்டு விடலாமோ --- அவர்களுடைய சேல்மீன் போன்ற கண்வலையில் சிக்கி, அம் மாதர்கட்கு அடியேன் அடிமைப் பட்டு விடுதல் நல்லதா? (நல்லதன்று).


பொழிப்புரை

         ஆகமங்களை ஓதி உணர்ந்த பக்தர்களும், வேதங்களைப் பயின்ற பரிசுத்தர்களும், ஒருங்கு கூடி விரும்பிப் பணி செய்ய திருவண்ணாமலையில் பொலிவுள்ள மதில் சூழும் பொன்மயமான விசித்திரமான அழகிய கோபுரத்தில் வடக்குப் பாகத்தில் வெற்றியுடைய தோகைப் புரவியாம் மயில் மீது அமர்ந்துள்ளவரே!

         மயில்போன்ற உமாதேவியை இடப் பாகத்தில் பெற்றவராகிய சிவபெருமானுக்கு ஒரு அமாபாக இருந்த திருமாலின் உறைவிடமான அம்புக் கூடாகிய கடல் முழுதும் வற்றுமாறும், திசைகளில் எழுந்துள்ள பாரமான, ஒளி வீசும் எட்டு மலைகளும் உதிர்ந்து தூளாகி அமிழும்படியும், சூரன் மீது பட்டு உருவும்படியும், வேலாயுதத்தை ஏவிய பெருமையில் சிறந்தவரே!

         விரும்பிய போகத்தைத் தரவல்ல கற்பகமாகிய தெய்வத் தருவையும், மேகத்தையும், பாரி வள்ளலையும், பொன் குவியலை உச்சிப் பொழுதில் கொடுத்து வந்த தெய்வ மலரை வைத்திருந்த புத்திரர்களையும் நீ ஒப்பு ஆவாய் என்று கூறி, உலக மக்களைப் புகழ்ந்து, அவர்கள் மீது அன்பு வைத்து, வறுமை விலகும்பொருட்டு, அவர்கள் பெரிதாகக் கொடையைத் தரும் பொருட்டு, ஆசுகவி, நல்ல சித்திரக் கவி, வித்தார கவி ஆகிய திருட்டுக் கவிகளைப் பாடி, பொருள் தேடி, காதல் கொண்டுள்ள, அழகிய பொதுமாதர்களுக்குத் தந்து, அவர்களுடைய சேல்மீன் போன்ற கண்வலையில் சிக்கி, அம் மாதர்கட்கு அடியேன் அடிமைப் பட்டு விடுதல் நல்லதா? (நல்லதன்று).


விரிவுரை

இத் திருப்புகழில் தமிழ் கற்ற புலவர்கள், தமிழ்த் தெய்வமாகிய முருகவேளைப் பாடாமல், கேவலம் அழிகின்ற பொன்னை வேண்டி, புல்லிய பொருள் உடையாரைப் புகழ்ந்து பாடும் இழி செயலைக் கண்டிக்கின்றார்.

போக கற்பகக் கடவுல் பூருகத்தை ---

பூருகம் - விருட்சம், மரம்.

விண்ணுலகில் விரும்பியவற்றைத் தரும் தருக்கள் ஐந்து உள. கற்பகம், சந்தனம், பாரிசாதம், அரிசந்தனம், மந்தாரம் என்பவை.  கற்பகத் தரு - நினைந்ததைத் தரவல்லது.  இஷ்ட போகங்கள் அனைத்தும் தரவல்ல தெய்வத் தரு கற்பகமரம்.

புயலை ---

கைம்மாறு கருதாது பொழிவது மேகம். ஒரு சிறு உதவி செய்தாலும் உலகத்தார் உதவி செய்தவனுக்கு நன்றியுரை நவில்கின்றார்கள். ஒரு விரிவுரை நிகழ்ச்சியில் சும்மா இருந்து விரிவுரை கேட்ட பொது மக்களுக்கும் நன்றி என்கின்றார்கள்.  உயிர் தழைக்க பயிர் வளர்கின்றது. பயிர் தழைக்க மேகம் மழை பொழிகின்றது. எங்காவது, எக்காலத்திலாவது, யாராவது ஒரு கூட்டம் கூட்டி, மழை பொழிகின்ற "விண்முகிலே உனக்கு நன்றி" என்று நன்றியுரை நவின்றிருக்கின்றார்களா? இல்லை. நமக்கு ஒரு போதும் நன்றி கூறாத – இந்த நன்றி கெட்ட மக்களுக்கு நாம் ஏன் மழை பொழியவேண்டும் என்று விண்மேகம் சலிப்புற்று மழை பொழியாமல் இருக்கின்றதா? அது அதன் கடமையைத் தவறாது செய்து கொண்டு இருக்கின்றது.  இத்தகைய மேகத்துக்கும் நீ நிகர் என்று புலவன் பொருளுடையாரைப் பாடுகின்றான்.

"நினைத்த மாத்திரத்திலேயே தரும் தெய்வத் தருக்கு நீ நிகர்" என்று கேட்டும் தராத உலோபியைப் புகழ்ந்து பாடுகின்றான் புலவன்.

பாரியை ---

பாரி என்ற வள்ளல் கடை எழு வள்ளல்களின் ஒருவன்.  இவ் வள்ளல் தாவிப் படரக் கொழு கொம்பு இலாது தவித்துக் கொண்டு இருந்த, ஓரறிவு படைத்த ஒரு முல்லைக் கொடிக்குத் தன் மணித் தேரைத் தந்து விட்டு, நடந்து ஊர் போய்ச் சேர்ந்தவன். என்னே அவன் கொடைத்திறம்!

கபிலர் என்ற புலவர் பாட, பறம்பு மலை மீது இருந்த பாரி, தன் கண்ணுக்குக் காட்சியளித்த தனக்கு உரிய முந்நூறு ஊரையும் வழங்கிவிட்டான்.

பாரி மன்னனை வெல்லும் பொருட்டு சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தரும் படையுடன் வந்து வெல்லும் திறன் அறியாது விழித்தார்கள். அப்போது கபிலர் என்ற புலவர், "மூவேந்தர்களே பாரிக்குச் சொந்தமான ஊர்கள் முந்நூறு. அந்த முந்நூறு ஊர்களை பாடிய புலவர் பெற்றுவிட்டார். இப்போது அவனுக்குச் சொந்தமாக இருப்பது பறம்பு மலை ஒன்று தான்.  அதனை நீவிர் வென்று பெற இயலாது. புகழ்ந்து பாடினால் பரிசிலாக எளிதில் பெறலாம்" என்று கூறினார்.

சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி!
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி
கொள் உழு வியன் புலத்துழை கால் ஆக,
மால்புடை நெடு வரைக் கோடுதோறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.       --- புறநானூறு.
                 
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே.           --- புறநானூறு.
                 
'பாரி பாரி' என்று பல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.    --- புறநானூறு.
        
குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும்
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு,
பாரியும், பரிசிலர் இரப்பின்,
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே.       --- புறநானூறு.
        
அளிதோ தானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே:
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே;
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே;
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து,
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே.
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து,
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே:
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர,
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே........     --- புறநானூறு.

கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே.     --- புறநானூறு.

அன்றியும் சுந்தரமூர்த்தி நாயனார்,

கொடுக்கிலாதானைப் பாரியே என்று
கூறினும் கொடுப்பார் இலை,                          ---  சுந்தரர் தேவாரம்.

என்றும்,

பாரியான கொடைக் கொண்டலே              ---  திருப்புகழ்.

வண்புகழ் பாரி காரி            ---  (வஞ்சகலோப) திருப்புகழ்.

என்று அருணகிரிநாதரும் பற்பல இடங்களில் இந்த பாரியை வாயாரப் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

"இத்தகு வித்தகப் பாரி வள்ளலுக்கு நீ நிகர் ஆவாய்" என்று புலவர் புல்லர்களைப் போற்றிப் புகழ்ந்து கவி பாடுவார்கள்.

பொற்குவை உச்சிப் பொழுதில் ஈயும் போதுடைப் புத்திரரை ---

உச்சிப் பொழுதில் பொற்குவியலைத் தருகின்ற தெய்வமலர் ஒன்று உண்டு. அதனை வைத்திருந்த புத்திரர் என்ற வள்ளல்கள் இருந்தனர். இவர்களது வரலாறுகள் விளங்கவில்லை.  இப்படி எத்தனையோ பெரியவர்கள் வரலாறுகள் விளங்காமல் மறைந்து போயின.

இனி உச்சிப் பொழுதுவரை யாசகர்க்கு பொற்குவியலை வழங்கும் கர்ணனையும் குறிக்கும்.

போது உடைப் புத்திரன் --- மலர்மாலை தரித்த சூரிய குமாரன்.

அடுத்த தானமும் பரிசிலும் இரவலர்க்கு அருளுடன்
முற்பகல் அளவும் கொடுத்து நாயகன் புகுந்தனன்....       ---  வில்லிபாரதம்.

இவ்வாறு புலவர்கள் தனவந்தரைத் தேடிச் சென்று, அவர்களை விரும்பி, அவர்கள்பால் பெரும் பொருட்கொடை பெறும் பொருட்டுப் புகழ்ந்து பாடுவார்கள்.


ஆசுநல் சித்திரவித்தார முட்பட்ட ---

கவிகள் நான்கு. 
நினைத்த மாத்திரத்தில் விரைந்து பாடுவது ஆசுகவி. கோமூத்திரி, நாகபந்தம், ரதபந்தம் முதலியன சித்திரகவி. இனிமையாகப் பாடுவது மதுரகவி. 
விரிவாகப் பாடுவது - வித்தார கவி.

திருட்டுக் கவி பாடி ---

முன்னே உள்ள அருட்புலவர்கள் பாடிய பாடல்களில் இருந்து சொற்களைத் திருடிப் பாடுவார்கள்.

திருடி யொருபடி நெருடி யறிவிலர்
         செவியில் நுழைவன கவிபாடித்
         திரியு மவர் சிலர் புலவர் மொழிவது
சிறிது முணர்வகை        யறியேனே    --- (கருட)திருப்புகழ்.

தெரியும் அருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடி கவிபாடி           ---  சொரியுமுகிலை திருப்புகழ்.


தேடி இட்டப்படு பொற்பாவையர்க்கு இட்டு ---

இவ்வாறு முயன்று தேடிய பொருளை, அறநெறியில் செலவிடாது, பொதுமகளிர்பால் ஈவர்.

அறிவிலாப் பித்தர், உன்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்,
     அசடர், பேய்க் கத்தர், நன்றி ...... அறியாத
அவலர் மேற் சொற்கள் கொண்டு, கவிகள் ஆக்கிப் புகழ்ந்து,
     அவரை வாழ்த்தித் திரிந்து, ...... பொருள்தேடி,
சிறிது கூட்டிக் கொணர்ந்து, தெரு உலாத்தித் திரிந்து,
     தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமே யான்
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி, பரிந்து,
     தெளிய, மோட்சத்தை என்று ...... அருள்வாயே .        --- திருப்புகழ்.

கட்சேல் வலைப்பட்டு அடிமைப் பட்டுவிடலாமோ ---

சேல்மீன் போன்ற கண் வலையில் சிக்கி அம் மாதர்கட்கு அடிமைப்பட்டு அழிவது தகுமோ ஆதலால் சிறியேனை ஆட்கொள்ள வேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார்.

வசமொழுகி அவரடிமை எனமாதர் இட்டதொழில்
தனில்உழலும் அசடனைஉன் அடியேவழுத்த
அருள் தருவாயே...                  --- (குமரகுருபர) திருப்புகழ்.

ஆகமப் பத்தரும் ---

ஆகமம் - வந்தது.

சிவபெருமானுடைய திருமுகத்தில் இருந்து வந்தது.  ஆகமம் - ஆப்த வாக்கியம்.  பரம ஆப்தனாகிய மகாதேவனுடைய வாக்கியம் ஆகமம்.

ஆ – பாசம்.
க – பசு.
ம – பதி.

திரிபதார்த்தங்களை உணர்த்துவது ஆகமம்.

ஆ – சிவஞானம்.
க – மோட்சம்.
ம – மலநாசம்.

மலத்தைக் கெடுத்து சிவஞானத்தைக் கொடுத்து, மோட்சத்தைத் தரவல்லது ஆகமம் என்றும் பொருள்படும்.

சிவாகமங்கள் 28 ---

காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்ரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்னேயம், வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம்.  இத்தகைய சிவாகமங்களை ஓதுகின்றவர்கள், உணர்ந்தவர்கள் ஆதிசைவர்கள்.  இவர்கள் சிவமூர்த்தியினிடம் தோன்றியவர்கள்.  இவர்கள் தாம் ஆலயங்களில் சிவமூரத்தத்தை முப்போதும் தீண்டி அர்ச்சிக்கும் தகுதி பெற்றவர்கள்.

முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன் என்று நம்பியாரூர் திருத்தொண்டத் தொகையில் கூறுவது இந்த ஆதிசைவப் பெருமக்களைக் குறிக்கும்.

ஆரணச் சுத்தரும் ---

வேதங்களை ஓதிய பரிசுத்தமான அந்தணர்கள்.  இவர்கள் மகாசைவர்கள்.  ஆலயங்களில் ஆதிசைவர்கட்கு அநுகூலமாக வேதங்களை ஓதுபவர்கள்.

வேதம் - பொது.  ஆகமம் - சிறப்பு.

வேதம் என்ற சொல்லுக்கு அறிவுநூல் என்பது பொருள்.  ஆதி சைவர்களும், அந்தணர்களும் ஒன்று கூடி திருவண்ணாமலையில் பணி செய்கின்றார்களாம்.

துப்பு மதில் சூழும் ---

சிறந்து விளங்கும் மதில்கள் சூழ்ந்துள்ள ஆலயம்.

ஆடகச் சித்ரமணி கோபுரத்து ---

பொன்மயமாகவும், அழகிய சித்திரச் சிற்பங்களுடனும் விளங்குகின்ற கோபுரம்.  இது இரண்டாவது கோபுரம்.  வல்லாள ராஜன் புதுக்கியது.

உத்தர திக்காக ---

இக் கோபுரத்தில் வடபுறத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி இருக்கின்றார்.  கோபுரத்தமர்ந்த பெருமாள் என்பர்.  இந்த மூர்த்தி தான் அருணகிரிநாதருக்கு அருள் செய்தது.

அடல்அருணைத் திருக்கோபுரத்தே அந்தவாயிலுக்கு
வடஅருகில் சென்று கண்டுகொண்டேன்  ---  கந்தர் அலங்காரம்.

தோகையைப் பெற்ற இடப்பாகர் ---

மயில் போன்றவர் பார்வதி தேவியார்.  மயில் வடிவம் கொண்டு சிவபெருமானை வழிபட்டவர்.  அந்த அம்பிகையை இடப்பாகத்தில் கொண்ட இறைவர்.

ஒற்றைப் பகழி தூணி முட்டச் சுவற ---

இந்த சொற்றொடரில் உள்ள நயம் மிக உயர்ந்தது.

முருகப் பெருமான் கடலை வற்ற வைத்தார் என்று கூற வந்த அருணகிரியார், சிறந்த அருட்புலவர் ஆதலால், சிவபெருமானுடைய அம்புறாத்தூணி வற்ற என்றார்.

திரிபுரத்தைச் சிவபெருமான் எரிக்கத் தொடங்கியபோது, சிவமூர்த்திக்கு அம்பாக இருந்தவர் நாராயணர்.  நாராயணர் பள்ளிகொண்ட இடம் கடல். "நீரிடைத் துயின்றவன்" என்கின்றார் திருஞானசம்பந்தர். எனவே, சிவன் கணைக்கு திருமாலுக்கு தூணி - கடல். சிவபிரானுடைய அம்புக்கூடு கடல் எனச் சாமர்த்தியமாகக் கூறுகின்ற திறம் உன்னும்தொறும் உள்ளத்தை உருக்குகின்றது.

இந்தப் பிரயோகம் அருணகிரிப் பெருமானுடைய அருட்புலமைக்குச் சான்று பகர்கின்றது.

கருத்துரை
  
திருவருணைத் திருக்கோபுரத்து அமர்ந்த குமரா, மாதர் வலைப்படா வண்ணம் காத்து அருள்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...