திருவண்ணாமலை - 0579. மகரம் எறிகடல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மகரம் எறிகடல் (திருவருணை)

திருவருணை முருகா!
மாதர் இன்பத்தில் முழுகி இருந்தாலும்,
உனது ஒப்பற்ற உபதேச மொழியையும்,
உனது திருவடிகளையும் ஒருபோதும் மறவேன்.


தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான


மகர மெறிகடல் விழியினு மொழியினு
     மதுப முரல்குழல் வகையினு நகையினும்
          வளமை யினுமுக நிலவினு மிலவினு ...... நிறமூசும்

மதுர இதழினு மிடையினு நடையினு
     மகளிர் முகுளித முலையினு நிலையினும்
          வனச பரிபுர மலரினு முலரினும் ......    அவர்நாமம்

பகரு கினுமவர் பணிவிடை திரிகினு
     முருகி நெறிமுறை தவறினு மவரொடு
          பகடி யிடுகினு மமளியி லவர்தரும் ...... அநுராகப்

பரவை படியினும் வசமழி யினுமுத
     லருணை நகர்மிசை கருணையொ டருளிய
          பரம வொருவச னமுமிரு சரணமும் ...... மறவேனே

ககன சுரபதி வழிபட எழுகிரி
     கடக கிரியொடு மிதிபட வடகுல
          கனக கனகுவ டடியொடு முறிபட ......    முதுசூதங்

கதறு சுழிகட லிடைகிழி படமிகு
     கலக நிசிசரர் பொடிபட நடவிய
          கலப மரகத துரகத ந்ருபகிரி ......    மயில்வாழ்வே

தகன கரதல சிவசுத கணபதி
     சகச சரவண பரிமள சததள
          சயன வனசரர் கதிபெற முனிபெறு ......   புனமானின்

தரள முகபட நெறிபட நிமிர்வன
     தருண புளகித ம்ருகமத தனகிரி
          தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மகரம் எறிகடல் விழியினும், மொழியினும்,
     மதுப முரல் குழல் வகையினும், நகையினும்,
          வளமையினும், முக நிலவினும், இலவினும் ..... நிறம் மூசும்

மதுர இதழினும், இடையினும், நடையினும்,
     மகளிர் முகுளித முலையினும், நிலையினும்,
          வனச பரிபுர மலரினும், உலரினும், ...... அவர்நாமம்

பகருகினும், அவர் பணிவிடை திரிகினும்,
     உருகி நெறிமுறை தவறினும், அவரொடு
          பகடி இடுகினும், அமளியில் அவர்தரும் ...... அநுராகப்

பரவை படியினும், வசம் அழியினும், முதல்
     அருணை நகர்மிசை கருணையொடு அருளிய
          பரம ஒரு வசனமும், இரு சரணமும் ...... மறவேனே.

ககன சுரபதி வழிபட, எழுகிரி
     கடக கிரியொடு மிதிபட, வடகுல
          கனக கன குவடு அடியொடு முறிபட, ......முதுசூதம்

கதறு சுழிகடல் இடை கிழிபட, மிகு
     கலக நிசிசரர் பொடிபட, நடவிய
          கலப மரகத துரகத ந்ருபகிரி ......    மயில்வாழ்வே!

தகன கரதல சிவசுத! கணபதி
     சகச! சரவண! பரிமள சததள
          சயன! வனசரர் கதிபெற முனிபெறு ...... புனமானின்

தரள முகபட நெறிபட நிமிர்வன,
     தருண புளகித ம்ருகமத தனகிரி
          தழுவ, மயல்கொடு தனிமடல் எழுதிய...... பெருமாளே.


பதவுரை

      ககன சுரபதி வழிபட --- விண்ணுலகத்தில் வாழும் தேவர்களின் தலைவனான இந்திரன் வழிபாடு புரிய,

     எழுகிரி கடக கிரியொடு மிதிபட --- ஏழு மலைகளானவை, வட்டமான சக்கரவாள கிரியுடன் மிதிபடவும்,

     வடகுல கனக கன குவடு அடியொடு முறிபட --- வடக்கே உள்ள சிறந்த பொன்மயமான பருத்த மேரு மலையானது வேருடன் முறிந்து வீழவும்,

      முதுசூதம் கதறு சுழிகடல் இடை கிழிபட --- பழமையான மாமரமானது சுழித்து ஒலிக்கின்ற அலைகள் வீசும் கடலின் நடுவில் அழிபடவும்,

     மிகு கலக நிசிசரர் பொடிபட -- மிகுந்த கலகத்தைச் செய்து வந்த அசுரர்கள் பொடியாகவும்

     நடவிய கலப மரகத துரகத ந்ருப --– நடாத்தி வந்த பச்சை நிறம் உடைய தோகையுடன் கூடிய குதிரையாகிய மயிலில் ஏறிவரும் அரசரே!

      கிரிமயில் வாழ்வே --- இமயமலை மகளாம் மயில் போன்ற உமாதேவியின் செல்வக் குமாரரே!

      தகன கரதல சிவசுத --– நெருப்பை ஏந்திய திருக்கரத்தினை உடைய சிவபிரானுடைய புதல்வரே!

      கணபதி சகச --– கணபதியின் சகோதரரே!

      சரவண --– சரவணப் பொய்கையில் உதித்தவரே!

      பரிமள சததள சயன --– நறுமணம் வீசும் நூற்றிதழ்த் தாமரையில் பள்ளி கொண்டவரே!

      வனசரர் கதிபெற முனிபெறு புனமானின் --- காட்டில் வாழும் வேடர்கள் நல்ல கதியைப் பெற, சிவமுனிவர் பெற்ற தினைப்புன மானாகிய வள்ளி பிராட்டியின்

     தரள முகபட நெறிபட நிமிர்வன --- முத்தால் ஆகிய மேலாடை வளைவு பட நிமிர்ந்து எழுவனவும்,

     தருண புளகித ம்ருகமத தனகிரி தழுவ --- இளமை வாய்ந்தனவும், பூரித்து இருப்பவையும், கத்தூரி அணிந்து உள்ளனவும் ஆகிய தனங்களாகிய மலைகளைத் தழுவும் பொருட்டு,

     மயல் கொடு தனிமடல் எழுதிய பெருமாளே --- காதல் மயக்கத்துடன், ஒப்பற்ற மடல் எழுதிய பெருமையில் சிறந்தவரே!

      மகரம் எறிகடல் விழியினும் மொழியினும் --- மகர மீன்களை வீசி எறியும் கடல் போன்ற கண்களிலும், பேச்சிலும்,
    
      மதுப முரல் குழல் வகையினும் நகையினும் --- வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தல் வகைகளிலும், சிரிப்பிலும்,

     வளமையினும் --- வளப்பத்திலும்,

     முக நிலவினும் --- சந்திரனைப் போன்ற முகத்திலும்,

     இலவினும் நிறமூசும் மதுர இதழினும் --- இலவ மலரினும் மிகுந்த சிவந்த நிறத்தை உடைய இனிய வாயிதழிலும்,

     இடையினும், நடையினும் --- இடையிலும், நடையிலும்,

      மகளிர் முகுளித முலையினும், நிலையினும் --- மாதர்களின் அரும்பிய முலைகளிலும், அவர்கள் நிற்கின்ற நிலையிலும்,
         
      வனச பரிபுர மலரினும் --- சிலம்புகள் அணிந்த தாமரை மலர் போன்ற பாதங்களிலும்

     உலரினும் --- அடியேன் வாட்டம் அடைந்தாலும்,

      அவர் நாமம் பகருகினும் --- அம் மாதர்களின் பேர்களைச் சொல்லிச் செபித்தாலும்,

     அவர் பணிவிடை திரிகினும் --- அவர் இடுகின்ற பணிவிடைகளைச் செய்து திரிந்தாலும்,

      உருகி நெறிமுறை தவறினும் --- அவர்களிடம் உள்ளம் உருகி நீதிமுறை தவறி நடந்தாலும்,

     அவரொடு பகடி இடுகினும் ---- அம் மாதருடன் பரிகாச வார்த்தைகள் பேசிக் கொண்டு இருந்தாலும்,

      அமளியில் அவர் தரும் அநுராகப் பரவை படியினும் --- படுக்கையில் அவர்கள் தரும் காமக் கடலில் முழுகினாலும்,

     வசம் அழியினும் --- அதனால் என் வசம் அழிந்தாலும்,

      முதல் அருணை நகர்மிசை --- முதல் நாள் திருவண்ணாமலையில்

     கருணையொடு அருளிய --- கருணையுடன் தேவரீர் வழங்கியருளிய

     பரம ஒரு வசனமும் ---  மேலான ஒப்பற்ற உபதேச மொழியையும்,

     இரு சரணமும் மறவேனே --- உமது இரு திருவடிகளையும் மறக்கமாட்டேன்.


பொழிப்புரை


         விண்ணுலகத்தில் வாழும் தேவர்களின் தலைவனான இந்திரன் வழிபாடு புரிய, ஏழு மலைகளானவை, வட்டமான சக்கரவாள கிரியுடன் மிதிபடவும், வடக்கே உள்ள சிறந்த பொன்மயமான பருத்த மேரு மலையானது வேருடன் முறிந்து வீழவும், பழமையான மாமரமாநது சுழித்து ஒலிக்கின்ற அலைகள் வீசும் கடலின் நடுவில் அறுபடவும், மிகுந்த கலகத்தைச் செய்து வந்த அசுரர்கள் பொடியாகவும் நடாத்தி வந்த பச்சை நிறம் உடைய தோகையுடன் கூடிய குதிரையாகிய மயிலில் ஏறிவரும் அரசரே!

         இமயமலை மகளாம் மயில் போன்ற உமாதேவியின் செல்வக் குமாரரே!

         நெருப்பை ஏந்திய திருக்கரத்தினை உடைய சிவபிரானுடைய புதல்வரே!

         கணபதியின் சகோதரரே!

         சரவணப் பொய்கையில் உதித்தவரே!

         நறுமணம் வீசும் நூற்றிதழ்த் தாமரையில் பள்ளி கொண்டவரே!

         காட்டில் வாழும் வேடர்கள் நல்ல கதியைப் பெற, சிவமுனிவர் பெற்ற தினைப்புன மானாகிய வள்ளி பிராட்டியின் முத்தால் ஆகிய மேலாடை வளைவு பட நிமிர்ந்து எழுவனவும், இளமை வாய்ந்தனவும், பூரித்து இருப்பவையும், கத்தூரி அணிந்து உள்ளனவும் ஆகிய தனங்களாகிய மலைகளைத் தழுவும் பொருட்டு, காதல் மயக்கத்துடன், ஒப்பற்ற மடல் எழுதிய பெருமையில் சிறந்தவரே!

         மகர மீன்களை வீசி எறியும் கடல் போன்ற கண்களிலும், பேச்சிலும், வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தல் வகைகளிலும், சிரிப்பிலும், வளப்பத்திலும், சந்திரனைப் போன்ற முகத்திலும், இலவ மலரினும் மிகுந்த சிவந்த நிறத்தை உடைய இனிய வாயிதழிலும், இடையிலும், நடையிலும், மாதர்களின் அரும்பிய கொங்கைகளிலும், அவர்கள் நிற்கின்ற நிலையிலும், சிலம்புகள் அணிந்த தாமரை மலர் போன்ற பாதங்களிலும், அடியேன் வாட்டம் அடைந்தாலும், அம் மாதர்களின் பேர்களைச் சொல்லிச் செபித்தாலும், அவர் இடுகின்ற பணிவிடைகளைச் செய்து திரிந்தாலும், அவர்களிடம் உள்ளம் உருகி நீதிமுறை தவறி நடந்தாலும், அம் மாதருடன் பரிகாச வார்த்தைகள் பேசிக் கொண்டு இருந்தாலும், படுக்கையில் அவர்கள் தரும் காமக் கடலில் முழுகினாலும், அதனால் என் வசம் அழிந்தாலும், முதல் நாள் திருவண்ணாமலையில்  கருணையுடன் தேவரீர் வழங்கியருளிய மேலான ஒப்பற்ற உபதேச மொழியையும், உமது இரு திருவடிகளையும் மறக்கமாட்டேன்.


விரிவுரை

மகரம் எறி கடல் --- 

மகரம் என்ற மீன் மிகவும் பெரியது. அது ஆனையை விழுங்கும் ஆற்றல் படைத்தது. இந்த மகரமீன் வாழ்வதனால் கடலுக்கு, மகராலயம் என்ற பேர் ஏற்பட்டது. பெண்களின் கண்கள் கடல் போல் பரந்து இருக்கும்.

கண்கள் ஆடவர்களாகிய மீன்களைப் பிடிக்கும் வலை போன்றது.  கண் வீச்சினால் காமுகர் மதி கலங்கிக் கதி கலங்குவர்.
  
மதுப முரல் குழல் வகையினும் ---

மதுபம் - தேன் வண்டு. கூந்தலில் மலர் முடித்திருப்பதனால் வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன.

கூந்தலைப் பின்னியும், முடிந்து தொங்கவிட்டும் பல வகையில் அலங்கரித்துக் கொள்ளுவர்.  அதனால் குழல்வகை என்றார்.

உலரினும் ---

இப்படி மாதரது பல அங்கங்களில் மயங்கி வாடுவர்.  உலர்தல் - வாடுதல்.

உலர்ந்து போனேன் உடையானே              ---  திருவாசகம்.


முதலருணை நகர்மிசை கருணையொடருளிய பரம ஒருவசனமும் இருசரணமும் மறவேனே ---

இந்தப் பகுதி அருணகிரியாரது வரலாற்றைக் குறிப்பது.

அருணகிரிப் பெருமானுக்கு முருகன் குருவாகத் தோன்றி சிறந்த உபதேசம் புரிந்தருளினார்.  உபதேசித்த உபதேச மொழியை ஒரு போதும் மறவேன் என்கின்றார். மறக்கச் செய்வது மாதர் மயல்.

அடியேன் மாதர் மயலால் வாடினாலும், அம்மாதருடைய பேரையே உருப்போட்டாலும், அவர் இட்ட பணிகளைப் புரிந்து திரிந்தாலும், அவருடன் விளையாட்டு வசனங்களை உரையாடினாலும், படுக்கையில் அம்மாதர்கள் தரும் காம இன்பக் கடலில் முழுகினாலும், அப்பனே, உன் உபதேச மொழிகளையும், திருவடிகளையும் மறவேன் என்கின்றார்.

ஆனால் உபதேசம் கேட்டபின் மாதர் மயலில் மயங்கினார் என்று கருதக் கூடாது. எல்லோரும் மயங்குவர். அப்படி அடியேன் மயங்கினாலும் உன் உபதேசத்தையும், திருவடியையும் மறவேன் என்று தனக்கு உள்ள உறுதிப்பாட்டை உரைக்கின்றார்.

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன்.       --- கந்தர் அலங்காரம்.

ககன சுரபதி வழிபட ---

தேவேந்திரன் சூர சங்காரத்தை வேண்டிப் பல காலம் தவம் செய்தான். அவன் தவம் காரணமாகத் தான் முருகவேள் திருவுருவம் தாங்கி வந்து சூரனை வதைத்தருளினார்.

தருவின் நாட்டு அரசுஆள்வான் வேணுவின்
உருவமாய்ப் பல நாளே தான்உறு
தவசினால் சிவன் நீபோய் வானவர் சிறைதீர....    ---  (நிருதரார்) திருப்புகழ்.

முதுசூதம் கதறு சுழி கடலிடை கிழிபட ---

சூரபன்மன் முடவில் கடலிடை பெரிய எஃகு மாமரமாய் நின்று கிளைகளை அசைத்து உலகங்களைத் துன்புறுத்தினான்.  வேலாயுதம் அந்தப் பழைய மாமரத்தைப் பிளந்தது.

சூர்மா மடியத் தொடு வேலவனே         ---  கந்தர் அநுபூதி.

பரிமள சததள சயன ---

சரவணப் பொய்கையில் தோன்றிய முருகப் பெருமானை, கார்த்திகை மாதர்கள் தாமரை மலரில் வளர்த்திக் கண்துயிலச் செய்து களித்தார்கள்.

மடலெழுதிய ---

ஒரு பெண்மணியை விரும்பிய காதலன் அவள் தனக்குக் கிடைக்காதொழியின், அவள் உருவத்தை ஒரு துணியில் எழுதி, கையில் பிடித்துக்கொண்டு, பனைமடலால் ஆய குதிரை மீது ஏறி வருவன்.

இந்த்ர கோபமும் மரகத வடிவமும்
இந்த்ர சாபமும் இருகுழையொடு பொரு
இந்த்ர நீலமும் மடலிடை எழுதிய பெருமாளே.    ---  (கொந்துவார்) திருப்புகழ்.


கருத்துரை


முருகா, காம இன்பக் கடலில் முழுகினாலும் உனது ஒரு மொழியையும், இரு சரணங்களையும் மரவேன்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...