சிறப்புப் பெறாதவை




21. சிறப்புப் பெறாதவை

குருஇலா வித்தை, கூர் அறிவு இலா வாணிபம்
     குணம் இலா மனைவிஆசை,
குடிநலம் இலாநாடு, நீதிஇல்லா அரசு,
     குஞ்சரம்இ லாதவெம் போர்,

திருஇலா மெய்த்திறமை, பொறைஇலா மாதவம்,
     தியானம்இல் லாதநிட்டை,
தீபம்இல் லாதமனை, சோதரம் இலாத உடல்,
     சேகரம்இ லாதசென்னி,

உருஇலா மெய்வளமை, பசியிலா உண்டி,புகல்
     உண்மைஇல் லாதவசனம்,
யோசனை இலாமந்த்ரி, தைரியம் இலாவீரம்,
     உதவியஇல் லாதநட்பு,

மருஇலா வண்ணமலர், பெரியோர் இலாதசபை,
     வையத்து இருந்து என்பயன்?
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     குரு இலா வித்தை --- ஆசிரியல் வழி கற்பிக்கப்படாத கல்வி,

     கூர் அறிவு இலா வாணிபம் --- நுண் ஆறிவு இல்லாத வணிகத் தொழில்,

     குணம் இலா மனைவி ஆசை --- நற்பண்பு இல்லாத மனைவி கொள்ளும் காதல்,

     குடி நலம் இலா நாடு --- குடிகளுக்கு நன்மை இல்லாத நாடு,

     நீதி இல்லா அரசு --- நீதி நெறிமுறை இல்லாத அரசன் செய்யும் ஆட்சி,

     குஞ்சரம் இலாத வெம்போர் --- யானைப் படை இல்லாமல் புரியும் போர்,

     திரு இலா மெய்த்திறமை --- செல்வம் இல்லாத உடல் வலிமை,

     பொறை இலா மாதவம் --- பொறுமை சிறிதும் இல்லாத பெரும் தவம்,

     தியானம் இல்லாத நிட்டை --- இறை உணர்வோடு நில்லாத நிட்டை,

     தீபம் இலாத மனை --- விளக்கு இல்லாமல் இருண்டு கிடக்கும் வீடு,

     சோதரம் இலாத உடல் --- உடன்பிறப்பு இல்லாத உடம்பு, (பாறு இல் உடன் பிறப்பு இல்லா உடம்பு பாழ் என்பது ஔவையாரின் நல்வழி)

     சேகரம் இலாத சென்னி --- தலைப் பாகை இல்லாத  தலை,

     உரு இலா மெய் வளமை --- அழகில்லாமல் பருத்த உடம்பு,

     பசி இலா உண்டி --- பசித்த பின் உண்ணாத உணவு,

     புகல் உண்மை இல்லாத வசனம் --- புகழ்ந்து கூறப்படும் உண்மை இல்லாத சொற்கள்,

     யோசனை இலா மந்த்ரி --- ஆராய்ச்சி அறிவுடன் வரும் பொருள் உரைக்காத அமைச்சன்,

     தைரியம் இலா வீரம் --- துணிவு இல்லாத வீரம்,

     உதவி இல்லாத நட்பு --- தக்க நேரத்தில் துணையாக நில்லாத நட்பு,

     மரு இலா வண்ணம் மலர் --- மணம் இல்லாத அழகிய மலர்,

     பெரியோர் இலாத சபை --- அறிவில் சிறந்த பெரியோர்கள் இல்லாத சபை,

     (ஆகிய இவைகள்),

     வையத்து இருந்து என் பயன் --- உலகில் இருந்து என்ன நன்மை? நன்மை இல்லை என்பது கருத்து.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...