திருப்பரங்குன்றம் - 0008. உனைத்தினம்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

உனைத் தினம் (திருப்பரங்குன்றம்)

முருகா!
காலன் வரும்போது திருக் காட்சி பெற அருள்வாய்

தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான


உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
     உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
     உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா

உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
     விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
     உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ......மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
     கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
     கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே

கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
     கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
     கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே

வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
     விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
     விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
     கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
     விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
     புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
     சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே

தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
     திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


உனைத் தினம் தொழுது இலன், உனது இயல்பினை
     உரைத்து இலன், பல மலர்கொடுஉன் அடிஇணை
     உறப் பணிந்து இலன், ஒரு தவம் இலன், உனது ...... அருள்மாறா

உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்,
     விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்,
     உவப்பொடு உன் புகழ் துதிசெய விழைகிலன், ......மலைபோலே

கனைத்து எழும் பகடு, அது பிடர் மிசைவரு
     கறுத்த வெஞ்சின மறலி தன் உழையினர்,
     கதித்து, அடர்ந்து, எறி கயிறு, அடு கதை கொடு ......  பொருபோதே,

கலக்கு உறும் செயல் ஒழிவற, அழிவுறு
     கருத்து நைந்து, அலம் உறு பொழுது, அளவைகொள்
     கணத்தில், என் பயம் அற, மயில் முதுகினில் ...... வருவாயே.

வினைத் தலம் தனில் அலகைகள் குதிகொள,
     விழுக்கு உடைந்து மெய் உகுதசை கழுகு உண,
     விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் ...... புரிவேலா!
  
மிகுத்த பண்பயில் குயில்மொழி, அழகிய
     கொடிச்சி, குங்கும முலை முகடு உழு, நறை
     விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே!

தினத்தினம் சதுர் மறைமுநி முறைகொடு
     புனல் சொரிந்து, அலர் பொதிய, விணவரொடு
     சினத்தை நிந்தனை செயும், முநிவரர் தொழ ...... மகிழ்வோனே!

தெனத்தெ னந்தன என, வரி அளி, நறை
     தெவிட்ட, அன்பொடு பருகு, உயர் பொழில்திகழ்,
     திருப்பரங்கிரி தனில் உறை சரவண ...... பெருமாளே.


பதவுரை


      வினைத் தலம் தனில் --- போர்க்களத்தில்,

     அலகைகள் குதி கொள --- பேய்கள் சந்தோஷத்தினால் கூத்தாடவும்,

     விழுக்கு உடைந்து --- நிணங்கள் உடைந்து,

     மெய் உகு தசை --- சரீரத்திலிருந்து சிந்துகின்ற தசைகளை,

     கழுகு உண --- கழுகுகள் அருந்தவும்,

     விரித்த குஞ்சியர் எனும் --- விரித்த தலையை உடையவரென்றும் சொல்லப்படுகின்ற,

     அவுணரை --- இராக்கதக் கூட்டங்களை,

     அமர்புரி வேலா --- போர்புரிகின்ற வேலாயுதக் கடவுளே!

      மிகுந்த பண்பயில் --- இசைப்பாடலை மிகவும் பழகுகின்ற,

     குயில்மொழி --- குயிலையொத்த இனிய மொழியை உடையவரும்,

     அழகிய கொடிச்சி --- அழகு வாய்ந்த கொடி போன்ற இடையினை உடையவரும், குறிஞ்சி நிலப்பெண்ணும் ஆகிய வள்ளிநாயகியாரது,

     குங்கும --- குங்குமங்களை யணிந்த,

     முலை முகடு உழு --- மலைபோன்ற தனபாரங்களின் உச்சியில் எழுதிய,

     நறை விரைத்த --- வாசனை கமழும்,

     சந்தன --- சந்தனமும்,

     ம்ருகமத --- கஸ்தூரியும் படிந்த,

     புய வரை உடையோனே --- புயாசலங்களை உடையவரே!

      தினம் தினம் --- சதா காலமும்,

     சதுர்மறை முனி --- நான்கு வேதங்களையும் உணர்ந்த பிரமதேவன்,

     முறைகொடு --- வேதாகம முறைப்படி,

     புனல் சொரிந்து --- தண்ணீரைச் சொரிந்து அபிஷேகம் புரிந்து,

     அலர் பொதிய --- மலர்களால் அர்ச்சித்து மூடவும்,

     விண்ணவரொடு --- விண்ணவரோடு (தேவரோடு),

     சினத்தை நிந்தனை செய்யும் --- கோபத்தை வெறுத்து நிந்திக்கும் சாந்தமூர்த்திகளாகிய,

     முனிவரர் தொழ --- (உயர்ந்த) முனிவர் குழாங்கள் பணிந்து வழிபாடு செய்ய,

     மகிழ்வோனே --- (அவர்களது பக்தியின் உறுதியைக் கண்டு) மகிழ்பவரே!

       வரிஅளி --- வரிகளையுடைய வண்டுகளானது,

     தெனத்தெனந்தன என --- தெனத்தெனந்தன என்று ஒலி செய்து,

     நறை தெவிட்ட --- தெவிட்டுதலை அடையும்படித் தேனை,

     அன்பொடு பருகு --- அன்போடு உண்ணுகின்ற,

     உயர்பொழில் திகழ் --- உயர்ந்த பூஞ்சோலைகள் விளங்குகின்ற,

     திருப்பரங்கிரிதனில் உறை --- திருப்பரங்குன்றம் என்கிற திருத்தலத்தில் வசிக்கின்ற,

     சரவண --- சரவணபவரே!

      பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      உனை தினம் தொழுதிலன் --- சதாகாலமும் தேவரீரை அடியேன் தொழுகின்றேனில்லை,

     உனது இயல்பினை உரைத்திலன் ---- தேவரீரது அருட்குணங்களை வாயார உரைக்கின்றேனில்லை,

     பல மலர்கொடு --- பலவிதமான மலர்களைக் கொண்டு அர்ச்சித்து,

     உன் அடியிணை ---- தேவரீரது இரண்டு பாதங்களிலும்,

     உற பணிந்திலன் --- அடியேனது சென்னியானது பொருந்துமாறு (அஷ்டாங்க) நமஸ்காரம் புரிகிறேனில்லை,

     ஒரு தவம் இலன் --- ஒப்பற்ற தவமும் செய்கின்றேனில்லை,

     உனது அருள் மாறா --- தேவரீரது திருவருள் மாறாத,

     உளத்துள் அன்பினர் --- அந்தரங்கமாகப் பக்தி புரிகின்ற அடியார்கள்,

     உறைவிடம் அறிகிலன் --- வாசஞ்செய்கின்ற இடமும் தெரிந்து கொள்கின்றேனில்லை,

     விருப்பொடு --- ஆர்வத்துடன்,

     உன் சிகரமும் வலம் வருகிலன் --- தேவரீர் எழுந்தருளியுள்ள மலைகளையும் வலம் வருகின்றேனில்லை,

     உவப்பொடு --- மகிழ்ச்சியுடன்,

     உன் புகழ் --- தேவரீரது திருப்புகழை,

     துதி செய விழைகிலன் --- தோத்திரஞ் செய்ய அன்புறுகிறேனில்லை,

(இந்த நற்கருமங்களைச் செய்யாமையால்)

     மலைபோலே --- பருவதம் போன்ற பெரிய உருவத்துடன்,

     கனைத்து எழும் --- (கோபத்தினால்) கனைத்து எழுகின்ற,

     பகடு அதுமிசை வரு --- எருமைக் கிடாவின்மீது வருகின்ற,

     கறுத்த வெம் சின --- அதிக வெப்பமான கோபத்தையுடைய,

     மறலிதன் உழையினர் --- இயமனுடையத் தூதுவர்கள்,

     கதித்து அடர்ந்து --- எழுந்து நெருங்கி வந்து,

     எறி கயிறு --- (ஆவியைப் பற்ற) எறிகின்ற பாசக்கயிறுடன்,

     அடு கதை கொடு --- கொல்லுகின்ற கதாயுதத்தைக் கொண்டு,

     பொரு போது --- என்னுடன் போர்புரியுங் காலத்து,

     அழிவுறு கருத்து நைந்து --- பயத்தினாலும் சோகத்தாலும் தன்வசமழிந்து உள்ளம் மெலிந்து,

     அலம் உறு பொழுது --- சஞ்சலப்படுகின்ற சமயத்தில்,

     கலக்குறும் செயல் ஒழிவற --- அடியேன் கலக்கப்படுகின்ற செய்கை அழிந்து போகவும்,

     என் பயம் அற --- எனக்கு ஏற்படும் இயமபயம் நீங்கவும்,

     அளவை கொள் கணத்தில் --- அளவுபடுகின்ற ஒரு கணப்பொழுதுக்குள்ளாக,

     மயில் முதுகினில் வருவாய் --- மயில் வாகனத்தின் மீது வந்து அருள்புரிவாய்!

பொழிப்புரை


         போர்க்களத்தின் கண் (சந்தோஷ மிகுதியினால்) பேய்க் கூட்டங்கள் கூத்தாடவும், நிணங்கள் உடைந்து சரீரத்தினின்றுஞ் சிந்துகின்ற தசைகளை கழுகுகள் அருந்தவும் தலைவிரிக் கோலமாகவுள்ள அவுணர் குழாங்களை போர் புரிந்து அழித்த வேலாயுதத்தை உடையவரே!

         மிகுந்த இசைப் பாடல்களைப் பயின்ற குயில் போன்ற குரலை உடையவரும், அழகிய கொடியனைய இடையினை உடையவரும், குறிஞ்சிநிலப் பெண்மணியுமாகிய வள்ளிநாயகியாரது குங்குமச் சாந்துகளை அணிந்த, மலைபோன்ற தனபாரங்களின் உச்சியில் எழுதிய வாசனை கமழும் சந்தனமும் கஸ்தூரியும் படிந்த புயாசலங்களை உடையவரே!

         நான்கு வேதங்களையும் உணர்ந்த நான்முகக் கடவுள் வேதாகம முறைப்படி அனுதினமும் நீர் சொரிந்து அபிஷேகம் புரிந்து நறுமலர்களால் அர்ச்சனை செய்ய, தேவர்களும் சினத்தை யொழித்த சாந்த சீலர்களாகிய முனிவர்களும் தொழுது வழிபாடு செய்ய, அவர்களது பக்தியின் உறுதியைக் கண்டு மகிழ்பவரே!

         வரிகளையுடைய வண்டுகள் தெனத் தெனந்தென என்று ரீங்காரம் செய்து தெவிட்டும்படி தேனையுண்ணுகின்ற உயர்ந்த சோலைகள் சூழ்ந்துள்ள திருப்பரங்குன்றமென்ற க்ஷேத்திரத்தில் வாசஞ்செய்கின்ற சரவணபவரே!

         பெருமையிற் சிறந்தவரே!

         (அடியேனுடைய ஆவியீடேறுமாறு) தேவரீரை சதாகாலமும் தொழுகின்றேனில்லை;

     பல வகையான மலர்களைக் கொண்டு அர்ச்சனை புரிந்து தேவரீரது திருவடியானது அடியேனுடைய சென்னியிற் பொருந்துமாறு பணிகின்றேனில்லை;

     ஒப்பற்ற தவம் புரிகின்றேனில்லை;

     தேவரீரது திருவருள் மாறாத அந்தரங்க பக்தி புரியும் உள்ளன்பர்கள் வாழும் இருப்பிடமும் அறிந்து கொள்கிறேனில்லை,

     தேவரீர் எழுந்தருளியுள்ள மலைகளை அன்போடு வலம் வருகின்றேனில்லை;

     தேவரீரது திருப்புகழை மனமகிழ்ச்சியோடு தோத்திரம் புரிய விழைகின்றேனில்லை:

     (இவ்விதமான நற்கருமங்களில் ஈடுபடாததினாலே)

     மலைபோன்ற பெரிய சரீரத்தையுடையதும், கோபத்தினால் கனைத்து எழுகின்றதுமான எருமைக் கிடாவின் மீது வருகின்றவனும் மிகுந்த வெஞ்சினம் உடையவனுமாகிய இயமனுடையத் தூதுவர்கள் எழுந்து நெருங்கிவந்து உயிரைப் பற்றுமாறு எறிகின்ற பாசக் கயிற்றையும் கொல்லுகின்ற கதாயுதத்தையும் கொண்டு அடியேனிடத்தில் போர் புரியும் காலத்து, கருவிகரணங்களெல்லாம் அழிவுற்று உள்ளம் மெலிந்து துன்பப்படுகின்ற அக்கணத்தில் அடியேன் கலங்கி நின்று வருந்துஞ் செயல் ஒழிந்து போகவும் இயம பயங்கரம் நீங்கவும் தேவரீர் மயில் வாகனத்தின்மீது வந்து அருள்புரிய வேண்டும்.


விரிவுரை


உனைத் தினந் தொழுதிலன் ---

     இறைவனை அன்போடு இருகரங்களையும் கூப்பி சதாகாலமும் தொழுவதே முத்தி வீட்டிற்கு முதற்படியாகும். கரங்களைப் படைத்ததன் பயன் ஆண்டவனைத் தொழுவதே யாகும்.

கைகாள் கூப்பித் தொழீர் கடிமாமலர் தூவிநின்று
 பைவாய்ப் பரம்பரையார்த்த பரமனைக்
 கைகாள் கூப்பித் தொழீர்”               ---  அப்பர் தேவாரம்.

     அவ்வாறு இறைவனைத் தொழுகின்றபோது அன்பின்றி, அங்கம் வளையாது, மார்புக்கு நேராக கரங்களைக் குவித்து வணங்குதல் கூடாது. ஈசுவர சன்னிதானத்தில் செல்வத்தாலும், அதிகாரத்தாலும் உடல் வலியாலும் நாம் சிறந்தோம் என்கிற தற்போதத்தையும் நாணத்தையும் அறவே ஒழித்து, தன் வசமழிந்து, இரு கரங்களையும் சிரங்களுக்குமேல் கூப்பி வணங்குதல் வேண்டும். சிவ சன்னிதியில் அந்தக் காட்சியைக் கண்டு ஆன்றோர்கள் கூறிய அமுத வாக்குகளை நோக்குக.

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
 திருப்பெருந் துறையுறை சிவபெருமானே”   ---  திருவாசகம்.

உச்சிக் கூப்பிய கையினர்”          ---  திருமுருகாற்றுப்படை.

     அவ்வாறு சிரத்தின் மிசைக்கரங்களைக் கூப்பி பக்தியுடன் பணிவோர்களுக்கு, மூவர்க்கும் எட்டாத முழுமுதற் கடவுளாம் முருகப் பெருமான் நேயக்காரனாகவும், காவற்காரனாகவும் இருந்து இன்னருள் புரிகின்றான்.

முடிமேலே அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார” ---  (முந்துதமிழ்) திருப்புகழ்.

தொழுது வழிபடும் அடியர் காவற்காரப் பெருமாளே” ---  (ஒருபொழுது) திருப்புகழ்.

உனது இயல்பினை உரைத்திலன் ---

     இறைவனது அருட்குணங்களையும் அவனது பெருமைகளையும் நாவார எடுத்து உரைத்தல் வேண்டும். நாவு படைத்ததன் பயன் அதுவே. சர்வேசுரனை வாழ்த்துவதற்காகவே வாக்கைக் கொடுத்திருக்கிறார்.

வார்கழல் வாய் வாழ்த்தவைத்து”          -திருவாசகம்

வாயே வாழ்த்து கண்டாய் மதயானை யுரிபோர்த்துப்
 பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
 வாயே வாழ்த்துகண்டாய்”               --- அப்பர் தேவாரம்.

பலமலர் கொடு ---

     மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத பரம்பொருளாகிய ஆண்டவனை மலர்களைக் கொண்டு அன்புடன் அர்ச்சிப்பதனால் அவர் எளிதில் நம் வசமாக ஆகின்றார். நீர் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் புரிந்து நறுமலர்களைத் தூவி வழிபடுபவர்களுக்கு அவ்வாண்டவன் இரங்கி இன்னருள் பாலிக்கிறான்; அங்ஙனம் மலர் பறித்திட்டு பூசிக்காமல் உணவு கொள்பவர்கள் பிறப்பு இறப்பு ஆகிய சுழியிற்பட்டுக் கலங்கித் துன்புறுவார்கள்.

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில்
     தீவண்ணர் திறம்ஒருகால் பேசார் ஆகில்
ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில்
     உண்பதன்முன் மலர்பறித்துஇட்டு உண்ணார் ஆகில்
அருநோய்கள் கெடவெண்ணீறு அணியார் ஆகில்
     அளிஅற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும்
     பிறப்பதற்கே தொழில்ஆகி இறக்கின் றாரே.  --- அப்பர்.

     கண்ணபிரான் பூபாரம் தவிர்த்தபின் வைகுந்தஞ் செல்ல எழுந்த காலை அடியார்கள் வணங்கி, “வாசுதேவரே! வருகிறது கலியுகமாயிற்றே! பாவமிகுந்த அக்கலியுகத்தில் யாம் எவ்வாறு உய்வோம்?” என்று வினவ, கண்ணபிரான்,

திங்களங் கண்ணிப்புத்தேள் சேவடிக் கமலமுண்டு
கொங்கவிழ் மலரும் உண்டு, குளிர்தரு புனலும் உண்டு.”
                                                                                ---கூர்மபுராணம்.

(சந்திரசேகரராகிய சிவபெருமானது திருவடித் தாமரையிருக்கிறது; அதனை அர்ச்சிக்க வாசனைத் தங்கிய மலரிருக்கிறது. அபிஷேகிப்பதற்குக் குளிர்ந்த நீரிருக்கிறது) கலியுகத்திற்கு நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்றனர்.

         பக்தியோடு மொட்டறா மலர்கொண்டு பணிந்து பரவுதல் புரிவார்க்குப் பரமேசுவரன் பரகதி கொடுத்து அருள் செய்கிறான்.

முத்தனே முதல்வா முக்கணா முனிவா
 மொட்டுஅறா மலர்பறித்து இறைஞ்சிப்
 பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
 பரகதி கொடுத்தது அருள் செய்யும் சித்தனே”  --- திருவாசகம்.

     அதிகாலையில் எழுந்து நீராடித் தூய ஆடையைத் தரித்து, திருநீறு தரித்துக்கொண்டு, மலர்க்கூடையை நாபிக்குக் கீழ்ப் படாமல், எடுத்துக்கொண்டு நந்தவனம் புகுந்து மௌனமாக சிவசிந்தனையுடன் பத்திர புட்பங்களை எடுத்து வந்து விதிப்படி மாலைகளாகச் செய்தும் தனி மலராகவும் பூசிக்க வேண்டும்.

பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
 நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
 ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
 காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே”

தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று”

பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி”   --- அப்பர்.

புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு, நீர் உண்டு,
 அண்ணலு அதுகண்டு அருள் புரியா நிற்கும்
 எண் இலி பாவிகள் எம் இறை ஈசனை
 நண்ண அறியாமல் நழுவுகின்றாரே”        --- திருமந்திரம்.

உன் அடியிணை உறப் பணிந்திலன்---

     அவ்வாறு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வணங்குகின்றபோது நமது சென்னியானது இறைவன் திருவடியில் பொருந்துமாறு, நிலத்தில் இருகால், இருதோள், இருகை, நெற்றி, மார்பு என்ற எட்டு அங்கங்களும் தோய வீழ்ந்து நமஸ்கரித்தல் வேண்டும்.

கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன
 கால்மேல் வீழேன்”             ---(கவடுகோத்தெழு) திருப்புகழ்.

     பட்டு முதலிய உயர்ந்த ஆடையைத் தரித்து உள்ளோம் என்ற எண்ணத்துடன் ஒட்டகத்தின் முதுகுபோல் வளைவாக வீழ்ந்து வணங்குதல் கூடாது. பிரமனது விதி விலக்கை அழிக்கும் கருவி நமது குமரநாயகனது திருவடியே ஆகும். ஆதலால் அக் குமார பரமேசுவரனது திருவடி நமது சென்னியில் படும்படி வணக்கம் புரிவதால் அவனது திருவடி நம் சென்னிமேல் பட்டவுடனே பிரமன் எழுதிய விதி அழிந்து போகும்.

சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில், தேங் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம், மா மயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும், சூரனும், வெற்பும், அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு, என் தலைமேல், அயன்கையெழுத்தே!
                                                                 --- கந்தரலங்காரம்

ஒருதவம் இலன் ---

     ஒப்பற்ற தவமானது, பிறவியின் துன்பத்தையும், மனிதப் பிறவியின் உயர்வையும் உன்னி உன்னி தனக்கு வருந் துன்பத்தைப் பொறுத்து பிறவுயிர்கட்கு உறுகண் புரியாது ஆண்டவனது திருவடியை நினைந்து நினைந்து அழலிடைப்பட்ட மெழுகுபோல் என்பெல்லாம் நெக்குவிட்டு உருகி மனம் கசிந்து கண்ணீர் மல்கி அன்பு மயமாக அசைவற்றிருப்பதேயாம்.

உற்றநோய் நோன்றல்,உயிர்க்கு உறுகண் செய்யாமை,
அற்றே தவத்திற்கு உரு                      ---திருக்குறள்.

அழலுக்குள் வெண்ணெனய் எனவே உருகிப்பொன் அம்பலத்தார்
நிழலுக்குள் நின்று தவம் உஞற்றாமல், நிட்டுர மின்னார்
குழலுக்கு இசைந்த வகைமாலை கொண்டு, குற்றேவல் செய்து,
விழலுக்கு முத்துலை இட்டு இறைத்தேன் என் விதிவசமே.       ---பட்டினத்தார்.

சரண கமலாலயத்தை அரைநிமிட நேரமட்டில்
 தவமுறை தியானம் வைக்க அறியாத”          --- திருப்புகழ்.


உனது அருள்மாறா உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் ---

     பகிரங்க பக்தியைக் காட்டிலும் அந்தரங்க பக்தியே சாலச் சிறந்ததாகும்.

     நாம் ஜெபம் அர்ச்சனை முதலியன செய்வதைக் கூடுமானவரை பிறர் அறியாமற்படிக்குச் செய்யவேண்டும். அவ்வாறு புரியும் அந்தரங்க பக்தியைக் கண்டு ஆண்டவன் மிகவும் மகிழ்கின்றான்.

     பூசலார் நாயனார் உள்ளத்திலேயே திருவாலயம் புதுக்கினார். இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் வைத்தார்கள். சிவபெருமான் காடவர் கோமான் கனவிற் சென்று “நாளை பூசலார் மனதினாற் புதுக்கிய பொன்னாலயத்தில் நாம் புகுவோம். நீ நாளை ஒழிந்து பின்னர் ஒரு நாள் வைத்துக் கொள்வாய்” என்றனர். உளத்துள் அன்பின் பெருமைதான் என்னே! என்னே! உய்த்துணர்மின்கள்.

     இத்தகைய உள்ளன்பு உடைய அடியார் வழிபாடே இறைவழிபாட்டைக் காட்டிலும் மிக உயர்ந்ததாகும். அடியார்களது உறைவிடம் அறிந்து ஆங்குச் சென்று அவ்வடியார்களை வணங்கி அவர்கள் திருவடிக்கு அன்பு செய்தால், ஆண்டவன் திருவருள் தானே வரும். இளங்கன்றை ஒருவன் அழைத்துக்கொண்டுச் சென்றால் தாய்ப்பசு தானே அவன் பின்னால் தொடர்ந்து வருமல்லவா? அதுபோல் என்றறிக.

பதமலர் உளத்தில் நாளும் நினைவுறு கருத்தர் தாள்கள்
 பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே”    ---(அருவரை) திருப்புகழ்.

அடியார்கள் பதமே துணையது என்றுநாளும்” ---(ஆறுமுகம்) திருப்புகழ்.

வண்டுகிண்டக் கஞ்சம்விண்டு தண்தேன் சிந்த, வால்வளைகள்  
கண்டுஅயின்று இன்புறும் போரூர் முருகன் கழலிணைக்கே
தொண்டுஉவந்து, இன்புறுவோர் பாத தாமரைத் தூள் என்சென்னி
கொண்டு வந்தேன், மலம் விண்டேன், பரகதி கூடினேனே.   --- சிதம்பர சுவாமிகள்.


விருப்பொடு உன் சிகரமும் வலமும் வருகிலன் ---

     குமார நாயகன் எழுந்தருளியுள்ள கிரிகளை அன்போடு வலம் வரவேண்டும். இறைவன் ஆலயத்தை வலம் வருவதுவே கால்களால் உண்டாகிற பெரும் பயனாகும்.

கால்களால் பயன்என்? கறைக் கண்டன் உறை கோயில்
 கோலக் கோபுர கோகரணஞ் சூழாக் கால்களால் பயன்என்?   ---அப்பர்.

உவப்பொடு உன் புகழ் துதிசெய விழைகிலன் ---

     முருகப் பெருமானது திருப்புகழை மகிழ்ச்சியுடன் ஓதுவதே முடிவான மார்க்கமுமாகும். அவனது புகழை விருப்பொடு படிப்பவர்க்கு இடுக்கண்கள் நீங்கும். முடிவிலா ஆனந்தம் உண்டாகும்.

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
 இடுக்கினை அறுத்திடும் எனவோதும்”       ---திருப்புகழ்.

     ஆதலால் இத்தகையத் தமிழ் மறையாகியத் திருப் புகழையே இடைவிடாமல் பாடி வழிபடவேண்டும். அதுவே இறைவனை நம் வயப்படுத்தும். அங்ஙனம் பாடி வழிபடுவார்கட்கு மன வாக்குக்கெட்டாத எம்பெருமான் தோழனாக விளங்குகிறார்.

உன்புகழே பாடிநான் இனி அன்புடன் ஆசார பூசைசெய்து
 உய்ந்திட வீணாள் படாதுஅருள்         புரிவாயே”    ---(கொம்பனையார்) திருப்புகழ்.

பாதமலர் மீதில் போதமலர் தூவிப்
 பாடும் அவர் தோழத் தம்பிரானே”     ---(ஆலவிழி) திருப்புகழ்.

     திருப்புகழை ஓதுவதே இறுதியான மார்க்கமானபடியாலும் அதனை அன்புடன் ஓதுவதைக் காட்டிலும் சிறந்த மார்க்கமில்லை. ஆதலாலும் திருப்புகழைத் துதிசெய்ய ஆசைப்பட்டாலும் போதும் என்றனர்.

அவுணரை அமர்புரி வேலா ---

     அலகிலா அசுர குலங்களை அழித்த வேற்படையை உடையவர்.

மிகுந்த பண்பயில்........உடையோனே ---

     இன்பரச சக்தியானபடியால் உயிர்களுக்கு இன்பம் உண்டாகுமாறு வள்ளி பிராட்டியாரிடத்தில் முருகன் அன்புடன் இருக்கிறான்.


சதுர்மறை முனி.....அலர் பொதிய விண்ணவரொடு.....முனிவரர் தொழ மகிழ்வோனே ---

     பிரமாதி தேவர்கள் சதாகாலமும் முருகப் பெருமானை மொட்டறா மலர் தூவி வணங்குகின்றார்கள்.

தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்” --- (சீரான) திருப்புகழ்.

வேதாமுதல் விண்ணவர் சூடு மலர்ப்பாதா”   --- கந்தர்அநுபூதி

     கோபமே கொடியப் பகையானபடியால், அதனை ஒழித்த சாந்தசீலர்கள் தொழுவதால் இறைவன் மகிழ்கிறான். சினத்தை அடக்காதவனுக்கு மன அமைதியுண்டாகாது, சினம் அதனைக் கொண்டவனை அழித்துவிடும்.

தன்னைத்தான் காக்கில் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.                --- திருக்குறள்.

     கோபம் என்னவெல்லாம் செய்யும் என்பதனை, பின் வரும் அறப்பளீசுர சதகப் பாடலால் அறியலாம்.

கோபமே பாவங்களுக்கு எல்லாம் தாய்தந்தை;
     கோபமே குடி கெடுக்கும்;
  கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது;
     கோபமே துயர் கொடுக்கும்;

கோபமே பொல்லாது; கோபமே சீர்கேடு;
     கோபமே உறவு அறுக்கும்;
  கோபமே பழி செயும்; கோபமே பகையாளி;
     கோபமே கருணை போக்கும்;

கோபமே ஈனமாம்; கோபமே எவரையும்
     கூடாமல் ஒருவன் ஆக்கும்;
  கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீய நர-
     கக் குழியினில் தள்ளுமால்;

ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட் கொண்டருளும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


திருப் பரங்கிரி ---

     இத்திருத்தலம் மூலாதார க்ஷேத்திரம்; முதற்படைவீடு; தெய்வயானை அம்மையாருடையத் திருமணம் நிகழ்ந்த தெய்வீகம் உடையது; பராசர புத்திரர்கள் அறுவருக்கும் அனுக்கிரகம் புரிந்த திருத்தலம். இத்தலம் மதுரைக்கு மேற்கே நான்கு மைல் தூரத்திலுள்ளது.

கருத்துரை

         அசுரர் குலகால! வள்ளி மணவாளா! வேதா முதலான விண்ணவரால் பூசிக்கத் தக்கவரே! திருப்பரங்கிரியில் வசிக்கும் சரவணபவரே! அடியேன் தேவரீரைத் தொழவும், உமது இயல்புகளை உரைக்கவும், மலர் கொண்டு வந்திக்கவும், தவமியற்றவும், அடியார்களது உறைவிடம் உணரவும், ஆலய வழிபாடு புரியவும், திருப்புகழைப் பாடவும் அருளி, யமபயம் அகற்றி ஆட்கொள்வீர்.


2 comments:

  1. Excellent .... Detailed explanation... May lor muruga bless you always.. my heartiest thanks to your great effort

    ReplyDelete
  2. நன்றி, அற்புதமான பதிவு

    ReplyDelete

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...