திருப் பைஞ்ஞீலி





திருப் பைஞ்ஞீலி

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

     இத்திருத்தலம் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் சுமார் 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

     திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்ஞீலி செல்ல நகரப் பேருந்து வசதிகள் உண்டு. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவெள்ளரை என்ற திவ்யதேசம் இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

இறைவர்               : நீலகண்டேசுவரர், ஞீலிவனநாதர்,                                                                       கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர்.

இறைவியார்           : விசாலாட்சி

தல மரம்                : ஞீலி வாழை.

தீர்த்தம்                : அப்பர் தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்:    1. சம்பந்தர் -  ஆரிடம் பாடிலர்.
                                             2. அப்பர்   -   உடையர் கோவண.
                                             3. சுந்தரர்  -   காருலாவிய நஞ்சை

          ஞீலி - இது ஒருவகை வாழை; தனி இனம். வேறிடத்தில் பயிராவதில்லை. இதன் இலை, காய், கனி அனைத்தும் இறைவனுக்கே பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மனிதர்கள் உண்டால் பிணி வருதல் இன்றும் கண்கூடு. இக்கனியைச் சுவாமிக்கு நிவேதித்து தண்ணீரில் விட்டுவிடுவார்கள்.

         ஞீலிவனேசுவரர் ஆலயம் முதலில் ஒரு முற்றுப்பெறாத மொட்டை கோபுரத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு 4 கால் மண்டபமும் அதன் பின்புறம் 3 நிலைகளை உடைய இராவணன் வாயில் என்று கூறப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது.

     திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்ஞிலி தலம் வரை கூட்டிவந்து சிவபெருமான் மறைந்து போன இடம் இதுவென்றும், பின்பு திருநாவுக்கரசருக்கு இலிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. அந்த இலிங்க உருவே சோற்றுடை ஈசுவரர் என்ற பெயரில் இச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார். சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இச்சந்நிதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது.

         இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லாமல் வெளி சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்தால் எமன் சந்நிதியைக் காணலாம். இச்சந்நிதி ஒரு குடைவரைக் கோயிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோயிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர். திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள்.மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்துத் தருமாறு முறையிட்டனர். சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.

         சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளதாலும் திருப்பைஞ்ஞிலி ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை. இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக சுவாமி சந்நிதி செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இறங்கி செல்ல வேண்டும் இந்த படிகள் இராவணின் சபையில் ஒன்பது நவக்கிரங்களும் அடிமைகளாக இருந்ததை குறிப்பிடுவதாக சொல்கிறர்கள். சுவாமி சந்நிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்கள் ஆக எண்ணி வணங்குகின்றனர்.

         இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஞீலிவனேசுவரர் சந்நிதியை அடையலாம். இங்குள்ள இலிங்கமூர்த்தி ஒரு சுயம்பு லிங்கமாகும். எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலைச் செய்துவர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லபர் என்றும் அழைக்கப்படுகிறார். மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு பகவான், அக்கினி பகவான், இராமர், அர்ச்சுணன், வஷிஷ்ட முனிவர் ஆகிய பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். மூலவர் சந்நிதியில் இரத்தின சபை இருக்கிறது. வசிஷ்ட முனிவருக்கு அவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சிவபெருமான் நடன தரிசனம் தந்து அருளிய இரத்தின சபை தலம் இதுவாகும். இத்தலத்திற்கு மேலைச் சிதம்பரம் என்ற பெயருமுண்டு.

         இக்கோயிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை சிவயோகத்திலிருக்க விரும்பி இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்கு பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப் பரிகார பூஜை நேரம் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலையில் 4-30 மணிமுதல் 5-30 மணி வரையிலும் நடத்தப்படும்.


அப்பர் பெருமானுக்கு இறைவன் பொதிசோறு கொடுத்தது

         அப்பர் பெருமான் திருப்பழையாறையில் சிலநாள் தங்கித் திருத்தொண்டு செய்து வந்தார். பின்பு அத் திருப்பதியை விடுத்துத் திருவானைக்கா, திருவெறும்பியூர், திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி முதலிய திருப்பதிகளைத் தொழுது தமிழ் பாடினார்.  திருப்பராய்த்துறை தொழ விரும்பிச் சென்று, அத் திருப்பதியையும் கண்டு தொழுதார். அங்கிருந்து திருப்பைஞ்ஞீலியை நோக்கினார்.

         வழியில் நீர் வேட்கையும் பசியும் அவரைப் பற்றின. அப்பர் பெருமான் சித்தம் அலையாது சிவசிந்தனையுடன் நடந்தார்.  அடியார்கள் பசியினால் வருத்தம் அடையமாட்டார்கள். ஆனால், அவர்களின் பசியை இறைவன் பொறுத்துக் கொள்ள மாட்டான்.  பாடுவார் பசி தீர்ப்பவன் ஆயிற்றே பெருமான். அருட்கடலாகிய சிவபெருமான் ஒரு திருநீற்று அந்தணராய் வழியில் ஓரிடத்தில் சோலையையும் குளத்தையும் சமைத்துக் காட்டி, வழி நடப்பார் போலப் பொதிசோறு வைத்துக் கொண்டு இருந்தார். 

     அப்பர் பெருமான் அவ்விடம் சேர்ந்த போது, அந்தணர் அவரைப் பார்த்து, "இளைப்பாய் இருக்கிறீர். என்னிடம் பொதிசோறு இருக்கிறது. அதை உண்டு குளத்தில் நீர் அருந்தி இளைப்பாறும்" என்றார். அப்பர் பெருமான் அதற்கு உடன்பட்டு, அந்தணர் கொடுத்த சோற்றை உண்டு, குளத்தில் நீர் அருந்தி இளைப்பாறினார். அதற்கு மேல் அந்தணர் அப்பர் பெருமானைப் பார்த்து, "நீர் எவ்விடம் போகிறீர்" என்று கேட்டார். அப்பர் பெருமான் "திருப்பைஞ்ஞீலிக்குப் போகிறேன்" என்றார்.  அந்தணர், "நானும் அவ்விடமே போகிறேன்" என்றார். இருவரும் திருப்பைஞ்ஞீலி  நோக்கி நடந்து அத்திருப்பதியை அணுகினர்.  உடன் வந்த அந்தணர் மறைந்து அருளினார். அப்பர் பெருமான் ஆண்டவனின் அருட்பெரும் தன்மையை வியந்து திருப்பதிகம் பாடினார். பின்னே, அவர் திருக்கோயிலுள் தென்று தமிழ்மாலை சாத்தித் திருத்தொண்டு செய்து கொண்டிருந்தார்.   

     ஞீலிவனம், கதலிவனம், அரம்பைவனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்ரபுரி, மேலைச்சிதம்பரம் முதலியன இத்தலத்திற்குரிய வேறுபெயர்கள்.

          மதிலின் மேல் தளம் புலிவரிக் கற்களால் ஆனவை. (இவ்வகைக் கற்கல் இங்கு மட்டுமே கிடைக்கின்றன. இதன் காரணமாகவே இத்தலம் வியாக்ரபுரி என்னும் பெயரைப் பெற்றது போலும்.)

          இத்தலத்திற்கு மதுரை மெய்ப்பாத புராணிகர் தலபுராணம் பாடியுள்ளார்.

     வள்ளல் பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மானைப் போல் மைஞ்ஞீல வாள்கண் மலராள் மருவு திருப் பைஞ்ஞீலி மேவும் பரம்பரமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 321
நீடு திருஆச் சிராமம் மன்னும்
         நேர்இழை பாகத்தர் தாள்வணங்கி,
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து
         கும்பிடும் கொள்கைமேல் கொண்டுபோந்தே,
ஆடல் பயின்றார் பதிபிறவும்
         அணைந்து, பணிந்து, அடி போற்றிஏகி,
சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச்
         சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.

         பொழிப்புரை : என்றும் அருள் நீடுகின்ற திருப்பாச்சிலாச்சிராமத்தில் நிலையாய் எழுந்தருளியிருக்கும் உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருகிவரும் சிவபெருமானின் அருளுடனே அங்கிருந்த பிள்ளையார், மேலும் பல பதிகளை வணங்கும் திருக்குறிப்பால் சென்று, ஆடலில் மகிழ்வுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் அடைந்து வணங்கித் திருவடிகளைப் போற்றி, மேலும் சென்று அறிவால் சிறந்தவர் உறைகின்ற `திருப்பைஞ்ஞீலிச்\' சிவபெருமானை வணங்குவதற்காகச் சென்றருளினார்.

         இங்குப் பதிபிறவும் என்றது திருப்புலிவலம், திருத்துறையூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.


பெ. பு. பாடல் எண் : 322
பண்பயில் வண்டினம் பாடும்சோலைப்
         பைஞ்ஞீலி வாணர் கழல்பணிந்து,
மண்பர வும்தமிழ் மாலைபாடி,
         வைகி வணங்கி மகிழ்ந்து போந்து,
திண்பெருந் தெய்வக் கயிலையில்வாழ்
         சிவனார் பதிபல சென்று இறைஞ்சி,
சண்பை வளம்தரு நாடர்வந்து
         தடந்திரு ஈங்கோய் மலையைச்சார்ந்தார்.

         பொழிப்புரை : பண்களைப் பயிலும் வண்டினங்கள் பாடுதற்கு இடனான சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலி இறைவர் திருவடிகளை வணங்கி, உலகத்தவர் போற்றும் தமிழ் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, அத்திருப்பதியில் தங்கி வணங்கி மகிழ்ந்து, மேற்சென்று, திண்ணிய பெரிய தெய்வத் தன்மை வாய்ந்த திருக்கயிலை மலையில் வாழ்கின்ற சிவபெருமானின் பதிகள் பலவற்றையும் சென்று வணங்கி, வளம் தருகின்ற சீகாழிப் பதிக்குத் தலைவரான பிள்ளையார், `திரு ஈங்கோய்' மலையைச் சார்ந்தார்.

         திருப்பைஞ்ஞீலியில் அருளியது, `ஆரிடம் பாடிலர்' (தி.3 ப.14) எனத் தொடங்கும் காந்தாரபஞ்சமப் பண்ணிலமைந்த திருப்பதிகமாகும்.

         பதிபல என்றது திருத்தலையூர், திருநெற்குன்றம், முசிறி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.


3.014    திருப்பைஞ்ஞீலி             பண் - காந்தார பஞ்சமம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
ஆரிடம் பாடிலர், அடிகள் காடுஅலால்
ஓர்இடம் குறைவுஇலர், உடையர் கோவணம்,
நீர்இடம் சடை,விடை ஊர்தி, நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.

         பொழிப்புரை :சிவபெருமான் இருடிகளுக்காக வேதத்தை அருளிச் செய்தவர். வசிப்பது சுடுகாடானாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர். அணிவது கோவண ஆடை. சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர். இடபவாகனத்தில் ஏறியவர். தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யத் திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 2
மருவுஇலார் திரிபுரம் எரிய மால்வரை
பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான்,
உருவிலான் பெருமையை உளம்கொ ளாதஅத்
திருஇலார் அவர்களைத் தெருட்டல் ஆகுமே.

         பொழிப்புரை :பகையசுரர்களின் முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு மேரு என்னும் பெருமையுடைய மலையினை வில்லாக வளைத்த சிவபெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . இத்தகைய வடிவமுடையவன் அவன் என்று வரையறை செய்து உணர்த்த இயலாத அப் பெருமானுடைய பெருமையை உணராதவர் அவனருளைப் பெறாதவர் . அவர்களின் அறிவைத் தெளிவித்தல் இயலுமா ?


பாடல் எண் : 3
அஞ்சுரும்பு அணிமலர் அமுதம் மாந்தித்தேன்
பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்,
வெஞ்சுரந் தனில்உமை வெருவ வந்ததுஓர்
குஞ்சரம் படஉரி போர்த்த கொள்கையே.

         பொழிப்புரை :அழகிய வண்டு மலரை அடைந்து தேனைக் குடித்துப் பஞ்சுரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் , வெப்பம் மிகுந்த காட்டில் உமாதேவி அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன் .


பாடல் எண் : 4
கோடல்கள் புறவுஅணி கொல்லை முல்லைமேல்
பாடல்வண்டு இசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்,
பேடுஅலர், ஆண்அலர், பெண்ணும் அல்லது,ஓர்
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே.

         பொழிப்புரை :காந்தள் மலர்களிலும் , முல்லை நிலத்திலுள்ள காடுகளிலுமுள்ள முல்லை மலர்களின் மீதும் அமர்ந்திருக்கும் வண்டுகள் செய்யும் ரீங்காரம் பண்ணிசைபோல் ஒலிக்க , திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் அலியல்லர் . ஆணுமல்லர் . பெண்ணுமல்லர் . திருநடனம் புரிவதில் விருப்பமுடைய அப்பெருமானார் எங்கள் தலைவர் ஆவார் .


பாடல் எண் : 5
விழிஇலா நகுதலை, விளங்குஇ ளம்பிறை,
சுழியில்ஆர் வருபுனல் சூழல் தாங்கினான்,
பழிஇலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்,
கிழிஇலார் கேண்மையைக் கெடுக்கல் ஆகுமே.

         பொழிப்புரை :விழியிலாத பற்களோடு கூடிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி , இளம்பிறையையும் , கங்கையையும் சடையில் தாங்கியுள்ளவன் சிவபெருமான் . பழியிலாத அடியவர்கள் போற்றிப் பாடத் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் தன்னை வணங்குபவர்களின் செல்வமில்லாத வறுமை நிலையைப் போக்குவான் .


பாடல் எண் : 6
விடைஉடைக் கொடிவலன் ஏந்தி, வெண்மழுப்
படைஉடைக் கடவுள்,பைஞ் ஞீலி மேவலான்,
துடிஇடைக் கலைஅல்கு லாள்ஓர் பாகமாச்
சடைஇடைப் புனல்வைத்த சதுரன் அல்லனே.

         பொழிப்புரை :இடபம் பொறித்த கொடியை வலக்கையில் ஏந்தி, வெண்மழுப்படையையுடைய கடவுள் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளான் . உடுக்கை போன்ற குறுகிய இடையில் மேகலை என்னும் ஆபரணம் அணிந்து , சீலையால் மறைத்த அல்குலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு , சடையிலே கங்கையைத் தரித்த சதுரன் ஆவான் .


பாடல் எண் : 7
தூயவன், தூயவெண் நீறு மேனிமேல்
பாயவன், பாயபைஞ் ஞீலி கோயிலா
மேயவன், வேய்புரை தோளி பாகமா
ஏயவன், எனைச்செயும் தன்மை என்கொலோ.

         பொழிப்புரை :இறைவன் தூயஉடம்பினன் . தூய்மையான திருநீற்றைத் தன் திருமேனி முழுவதும் பரவப் பூசியவன் . திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுபவன் . மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . அப்பெருமான் சீவனான என்னைச் சிவனாகச் செய்யும் பண்புதான் என்னே !


பாடல் எண் : 8
தொத்தின தோள்முடி உடைய வன்தலை
பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்,
முத்தினை முறுவல்செய் தாளொர் பாகமாப்
பொத்தினன், திருந்துஅடி பொருந்தி வாழ்மினே.

         பொழிப்புரை :கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான் . அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றான் . முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியை ஒருபாகமாக அணைத்துக் கொண்டவன் . அப் பெருமானின் திருவடிகளைப் பொருந்தி வாழ்வீர்களாக .


பாடல் எண் : 9
நீர்உடைப் போதுஉறை வானும் மாலுமாய்ச்
சீர்உடைக் கழல்அடி சென்னி காண்கிலர்,
பார்உடைக் கடவுள், பைஞ் ஞீலி மேவிய
தார்உடைக் கொன்றைஅம் தலைவர் தன்மையே.

         பொழிப்புரை :நீர்நிலைகளில் விளங்குகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், திருமாலும் திருமுடியையும், சிறப்புடைய கழலணிந்த திருவடிகளையும் தேடியும் காணாது நிற்க, இவ்வுலகை உடைமைப் பொருளாகக் கொண்ட இறைவன் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் கொன்றைமாலை அணிந்த தலைவனாய் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 10
பீலியார் பெருமையும், பிடகர் நூன்மையும்,
சாலியா தவர்களைச் சாதி யாதது,ஓர்
கோலியா அருவரை கூட்டி எய்தபைஞ்
ஞீலியான், கழல்அடி நினைந்து வாழ்மினே.

         பொழிப்புரை :மயிற்பீலி யேந்திப் பெருமை கொள்ளும் சமணர்களும் , திரிபிடகம் என்னும் சமயநூலுடைய புத்தர்களும் , தங்கள் நூற்பொருளோடு பொருந்தாதவர்களை வாதிட்டு வெல்லும் வல்லமையில்லாதவர்கள் . எனவே , அவர்களின் உரைகளைக் கேளாது , வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்து அம்பினைத் தொடுத்து எய்து முப்புரங்களை எரித்தவனும் , திருப் பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவனுமான சிவபெருமானின் கழலணிந்த திருவடிகளை நினைந்து வணங்கி வாழ்வீர்களாக !


பாடல் எண் : 11
கண்புனல் விளைவயல் காழிக் கற்பகம்,
நண்புஉணர் அருமறை ஞான சம்பந்தன்,
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்,
உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே.

         பொழிப்புரை :தண்ணீர் பாய்கின்ற வயல்வளமுடைய சீகாழியில் , கற்பகமரம் போன்று அன்பினால் அனைத்துயிர்கட்கும் நலம் சேர்க்கும் அருமறைவல்ல ஞானசம்பந்தன் , நற்பண்புடையவர் வணங்கும் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனைப் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் , வினைப்பயன்களை நுகர்வதற்காகப் பிறந்துள்ள இப்பூவுலகில் ஓங்கி வாழ்வர்.                                
திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

   
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 302
சிலந்திக்கு அருளும் கழல்வணங்கி,
         செஞ்சொல் மாலை பலபாடி,
இலங்கு சடையார் எறும்பியூர்
         மலையும் இறைஞ்சிப் பாடியபின்,
மலர்ந்த சோதி திருச்சிராப்
         பள்ளி மலையும், கற்குடியும்,
நலங்கொள் செல்வத் திருப்பராய்த்
         துறையும் தொழுவான் நண்ணினார்.

         பொழிப்புரை : நாவரசர் திருவானைக்காவில் சிலந்திக்கு அருளிய இறைவரின் திருவடிகளை வணங்கி, பலசெஞ்சொல் மாலைகளைப் பாடி, விளங்கும் சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருவெறும்பியூர் மலையையும் வணங்கித் திருப்பதிகம் பாடினார். பின்பு விரிந்த பேரொளியையுடைய திருச்சிராப்பள்ளி மலையையும், திருக்கற்குடி மலையையும், நன்மையுடைய திருப்பராய்த்துறையையும் வணங்கும் பொருட்டுச் செல்லலானார்.

         குறிப்புரை :
1.    திருவானைக்காவில் அருளிய பதிகங்கள்: (அ) `கோனைக்காவி` (தி.5 ப.31) - திருக்குறுந்தொகை. (ஆ) `எத்தாயர்` (தி.6 ப.62) - திருத்தாண்டகம். (இ) `முன்னானை` (தி.6 ப.63) – திருத்தாண்டகம்.

2.    திருவெறும்பியூர்: (அ) `விரும்பியூறு` (தி.5 ப.74) - திருக்குறுந்தொகை. (ஆ) `பன்னிய செந்தமிழ்` (தி.6 ப.91) - திருத் தாண்டகம்.

3.    திருச்சிராப்பள்ளி: `மட்டுவார்` (தி.5 ப.85) - திருக்குறுந்தொகை.

4.    திருக்கற்குடி: `மூத்தவனை` (தி.6 ப.60) - திருத்தாண்டகம்.

5.    திருப்பராய்த்துறை: `கரப்பர்` (தி.5 ப.30) - திருக்குறுந்தொகை.


பெ. பு. பாடல் எண் : 303
மற்றுஅப் பதிகள் முதலான
         மருங்கு உள்ளனவும் கைதொழுது,
பொற்புஉற்று அமைந்த திருப்பணிகள்
         செய்து, பதிகம் கொடுபோற்றி,
உற்ற அருளால் காவிரியை
         ஏறி, ஒன்னார் புரம்எரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீ
         லியினைச் சென்று சேர்கின்றார்.

         பொழிப்புரை : திருப்பராய்த்துறையை வணங்கியவராய், மேலும் அத்திருப்பதியின் அருகிலுள்ள பிறபதிகளையும் வணங்கி, அழகமைந்த கைத்தொண்டுகளையும் ஆற்றி, திருப்பதிகம் பாடிப் போற்றித், திருவருளால் காவிரியாற்றைக் கடந்து, முப்புரங்களும் அழியுமாறு எரித்த இறைவர் வீற்றிருக்கும் திருப்பைஞ்ஞீலியைச் சென்று சேர்கின்ற நாவரசர்.

         குறிப்புரை : அருகிலுள்ள பிறபதிகள்:
1.    திருக்கடம்பந்துறை: `முற்றிலா` (தி.5 ப.18) –  திருக்குறுந்தொகை.

2.    திருவாட்போக்கி: `காலபாசம்` (தி.5 ப.86) - திருக்குறுந்தொகை.


பெ. பு. பாடல் எண் : 304
வழிபோம் பொழுது மிக இளைத்து,
         வருத்தம் உற, நீர் வேட்கையொடும்
அழிவுஆம் பசி வந்து அணைந்திடவும்,
         அதற்குச் சித்தம் அலையாதே,
மொழி வேந்தரும் முன் எழுந்து அருள,
         முருகுஆர் சோலைப் பைஞ்ஞீலி
விழி ஏந்திய நெற்றியினார், தம்
         தொண்டர் வருத்தம் மீட்பாராய்.

         பொழிப்புரை : வழியில் செல்லும் பொழுது மிகவும் இளைப் படைந்து வருத்தம் உற, நீர் வேட்கையுடன் அழிவு செய்யும் பசியும் வந்துறவும் அதற்கு மனந்தளராது நாவரசர் முன்னோக்கிச் செல்ல, நறுமணம் பொருந்திய சோலைகளையுடைய திருப்பைஞ்ஞீலி என்ற பதியுள் வீற்றிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான், தம் தொண்டரின் வருத்தத்தை நீக்குபவராய்,


பெ. பு. பாடல் எண் : 305
காவும் குளமும் முன்சமைத்துக்
         காட்டி, வழிபோம் கருத்தினால்
மேவும் திருநீற்று அந்தணராய்,
         விரும்பும் பொதிசோறும் கொண்டு,
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே
         நண்ணி இருந்தார், விண்ணின்மேல்
தாவும் புள்ளும் மண்கிழிக்கும்
         தனிஏனமும் காண்பு அரியவர்தாம்.

         பொழிப்புரை : விண்ணில் பறக்கும் அன்னப்பறவையும், மண்ணைத் தோண்டும் பன்றியுமான அயனும் மாலும் காண்பதற்கு அரியவரான அப்பெருமான், ஒரு சோலையையும் ஒரு குளத்தையும் படைத்து, வழிகாட்டிச் செல்லும் எண்ணம் உடையவராய், திருநீற்றை அணிந்த அந்தணராகி, விரும்பும் கட்டுச் சோற்றினையும் எடுத்துக் கொண்டு, நாவரசர் வரும் வழியில் தங்கியிருந்தார்.


பெ. பு. பாடல் எண் : 306
அங்கண் இருந்த மறையவர்பால்
         ஆண்ட அரசும் எழுந்துஅருள,
வெங்கண் விடை வேதியர் நோக்கி,
         "மிகவும் வழிவந்து இளைத்து இருந்தீர்,
இங்குஎன் பாலே பொதி சோறு உண்டு,
         இதனை உண்டு, தண்ணீர் இப்
பொங்கு குளத்தில் குடித்து, இளைப்புப்
         போக்கிப் போவீர்" எனப் புகன்றார்.

         பொழிப்புரை : அவ்வாறு அங்கிருந்த அந்தணரிடம் நாவரசரும் வந்து சேர, கொடிய கண்களையுடைய ஆனேற்றினை ஊர்தியாகவுடைய இறைவர், அவரைப் பார்த்து, `வழி வந்த வருத்தத்தால் மிகவும் இளைப்பை அடைந்தீர்; இங்கு என்னிடத்தில் உள்ள கட்டுச்சோற்றினை உண்டும், இக் குளத்தின் நீரைப் பருகியும் உம் இளைப்பைப் போக்கிக் கொள்வீர்!` எனக் கூறியருளினாராக.


பெ. பு. பாடல் எண் : 307
நண்ணும் திருநா வுக்கரசர்
         நம்பர் அருள்என்று அறிந்தார்போல்,
"உண்ணும்" என்று திருமறையோர்
         உரைத்து, பொதிசோறு அளித்தலுமே,
எண்ணம் நினையாது எதிர் வாங்கி
         இனிதா அமுது செய்து, இனிய
தண்ணீர் அமுது செய்து அருளித்
         தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார்.

         பொழிப்புரை : வந்தடைந்த நாவரசரும், `இது இறைவரின் திருவருள்!` எனக் கொண்டு, முன்னம் அறிமுகமானவர் போல் காட்டி `உண்பீராக` எனக் கூறி வேதியரான இறைவர், கட்டுச் சோற்றை அளித்தவுடனே, மேற்கொண்டு எதனையும் எண்ணாதவராய் ஏற்றுக் கொண்டு, இனிய உணவையுண்டு, நீரையும் பருகித் தூய்மையும் செய்து, தம் தளர்வை நீக்கிக் கொண்டார்.


பெ. பு. பாடல் எண் : 308
எய்ப்பு நீங்கி நின்ற அவரை
         நோக்கி, இருந்த மறையவனார்,
"அப்பால் எங்கு நீர்போவது"
         என்றார், அரசும் அவர்க்கு எதிரே
செப்புவார், "யான் திருப்பைஞ்ஞீ
         லிக்குப் போவது" என்று உரைப்ப,
ஒப்பு இலாரும், "யான் அங்குப்
         போகின்றேன்" என்று உடன் போந்தார்.

         பொழிப்புரை : இளைப்பு நீங்கிய நாவரசரை அங்கு வந்திருந்த அந்தணரான இறைவர் பார்த்து, `இனி நீவிர் எங்குச் செல்கின்றீர்?` என வினவினார். நாவரசரும் அதற்கு மறுமொழி கூறுவாராய், `யான் திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லவுள்ளேன்` எனக் கூற, ஒப்பில்லாத இறைவரான அந்தணரும், `யானும் அவ்விடத்திற்கே செல்கின்றேன்` என்று கூறி உடன் சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 309
கூட வந்து மறையவனார்
         திருப் பைஞ்ஞீலி குறுகியிட,
வேடம் அவர்முன் மறைத்தலுமே,
         மெய்ம்மைத் தவத்து மேலவர்தாம்
"ஆடல் உகந்தார் அடியேனைப்
         பொருளா அளித்த கருணை" எனப்
பாடல் புரிந்து, விழுந்து, எழுந்து,
         கண்ணீர் மாரி பயில்வித்தார்.

         பொழிப்புரை : உடன் வந்த மறையவர், திருப்பைஞ்ஞீலியை அணுக, அதுவரையில் காட்டி வந்த உருவத்தை அவர் முன்பு மறைத்துக் கொள்ளவும், மெய்த்தவமுடைய நாவரசர், `கூத்தை விரும்பிச் செய்யும் பெருமான் அடியேனையும் ஒரு பொருளாக வைத்து இவ்வாறு எனக்கு அளித்த பெருங்கருணை இருந்தவாறு தான் என்னே!` எனப் பதிகம் பாடிக் கீழே விழுந்து வணங்கி எழுந்து, கண்ணீர் மழை பொழிய இன்ப வெள்ளத்துள் திளைத்தனர்.

         இதுபொழுது அருளிய திருப்பதிகம் கிடைத்திலது.


பெ. பு. பாடல் எண் : 310
பைஞ்ஞீ லியினில் அமர்ந்து அருளும்
         பரமர் கோயில் சென்று எய்தி,
மைஞ்ஞீ லத்து மணிகண்டர்
         தம்மை வணங்கி, மகிழ் சிறந்து,
மெய்ஞ் ஞீர்மையினில் அன்பு உருக,
         விரும்பும் தமிழ்மா லைகள்பாடி,
கைஞ் ஞீடிய தம் திருத்தொண்டு
         செய்து, காதலுடன் இருந்தார்.

         பொழிப்புரை : திருப்பைஞ்ஞீலியில் விரும்பி எழுந்தருளியிருக்கும் இறைவரின் கோயிலை அடைந்து, கரிய அழகிய நீல நிறம் பொருந்திய கழுத்தினையுடைய இறைவரை வணங்கி, மிகக் களிப்படைந்து, உண்மைப் பண்பின் நீடிய அன்பானது உள்ளுருக விரும்பும் தமிழ் மாலைகளைப் பாடிச் சிறப்புடைய கைத்திருத்தொண்டைச் செய்து அன்பு மீதூர அப்பதியில் தங்கியிருந்தார்.

         தமிழ் மாலைகள் பாடி என்றாரேனும் இது பொழுது கிடைத்திருக்கும் திருப்பதிகம் ஒன்றேயாம். அஃது, `உடையர் கோவணம்` (தி.5 ப.41) எனும் திருக்குறுந்தொகையாகும்.



5. 041    திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
உடையர் கோவணம், ஒன்றும் குறைவுஇலர்,
படைகொள் பாரிடம் சூழ்ந்தபைஞ் ஞீலியார்,
சடையில் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்கு, இல்லை அவலமே.

         பொழிப்புரை : கோவண உடையினரும் , ஒன்றும் குறைவில்லாதவரும் , படைக்கலங்களைக்கொண்ட பூதகணங்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலித் திருத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சடையிற் கங்கையை வைத்த சதுரப்பாடு உடைய பெருமானை அடையும் வல்லமை உடைய அன்பர்களுக்குத் துன்பங்கள் இல்லை .


பாடல் எண் : 2
மத்த மாமலர் சூடிய மைந்தனார்,
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்,
பத்தர் தாம்தொழுது ஏத்துபைஞ் ஞீலிஎம்
அத்த னைத்தொழ வல்லவர், நல்லரே.

         பொழிப்புரை : ஊமத்தம் மலர்களைச் சூடிய பெருவீரரும் , சித்தராகத் திரிபவரும் , அன்பர் பலர் தொழுதேத்தும் பைஞ்ஞீலியில் உறையும் அத்தரும் , தொழுவார் வினை தீர்ப்பவரும் ஆகிய அப் பெருமானைத் தொழும் வல்லமை உடையவர் நல்லவர் ஆவர் .


பாடல் எண் : 3
விழுது சூலத்தன், வெண்மழு வாட்படை,
கழுது துஞ்சுஇருள் காட்டகத்து ஆடலான்,
பழுதுஒன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர், தம்வினை தூளியே.

         பொழிப்புரை : நிணம் பொருந்திய சூலத்தையும் , வெண் மழு வாளையும் படைக்கலமாக உடையவனும் , பேய்களும் தூங்குகின்ற நள்ளிருளில் சுடுகாட்டில் ஆடலை உடையவனும் , பைஞ்ஞீலியில் உறையும் பரமனும் ஆகிய பெருமானைப் பழுது ஒன்றும் இன்றித் தொழுது செல்பவர் வினைகள் பொடியாகும் .


பாடல் எண் : 4
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே
நின்ற சூழல் அறிவுஅரி யான்இடம்,
சென்று பாரிடம் ஏத்துபைஞ் ஞீலியுள்
என்றும் மேவி இருந்த அடிகளே.

         பொழிப்புரை : திருமாலும் பிரமனும் தம்மிலே ஒன்றித் தேட முற்பட்டும் திருவடியும் திருமுடியும் நின்ற சூழல் அறிய அரியவனாய் விளங்கிய பெருமான் வீற்றிருக்கும் இடம் , பூதங்கள் சென்று ஏத்துகின்ற பைஞ்ஞீலியாகும் . இத்தலத்திலேயே அடிகள் என்றும் மேவியிருப்பது .


பாடல் எண் : 5
வேழத் தின்உரி போர்த்த விகிர்தனார்,
தாழச் செஞ்சடை மேல்பிறை வைத்தவர்,
தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார்,
யாழின் பாட்டை உகந்த அடிகளே.

         பொழிப்புரை : வேழத்தின் தோலை உரித்துப் போர்த்த விகிர்தரும் , செஞ்சடைமேல் தாழுமாறு பிறை வைத்தவரும் , தாழைகள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த பைஞ்ஞீலித் தலத்து உறைபவரும் ஆகிய பெருமான் யாழ்க்குப் பொருந்திய பாடலை உகந்த அடிகள் ஆவர் .


பாடல் எண் : 6
குண்டு பட்டுக் குறிஅறி யாச்சமண்
மிண்ட ரோடு படுத்து உய்யப் போந்து,நான்
கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
அண்ட வாணன் அடிஅடைந்து, உய்ந்தனே.

         பொழிப்புரை : உடல் பெருக்கிக் குறிக்கோளையறியாச் சமண் மிண்டரோடு பொருந்தி உய்யப்போந்து நான் , கரும்புகள் நிறைந்த வயல் சூழ்ந்த பைஞ்ஞீலித்தலத்து எழுந்தருளியுள்ள தேவதேவன் திருவடிகளை அடைந்து உய்ந்தேன் .


பாடல் எண் : 7
வரிப்பை ஆடுஅரவு ஆட்டி, மதகரி
உரிப்பை மூடிய உத்தம னார்,உறை
திருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள்போய்
இருப்பர் வானவரோடு இனிது ஆகவே.

         பொழிப்புரை : வரிகளை உடைய படத்தினைப் பொருந்தி ஆடும் அரவத்தை ஆட்டி மதச் செருக்குடைய யானையின் உரியை மெய்ப்பையாக மூடிய உத்தமனார் உறைகின்ற திருப்பைஞ்ஞீலித் தலத்தைத் திக்குநோக்கித் தொழுபவர்கள் வானவர்களோடு இனிதாக இருப்பர் .


பாடல் எண் : 8
கோடல் கோங்கம் புறவுஅணி முல்லைமேல்
பாடல் வண்டுஅசை கேட்கும்பைஞ் ஞீலியார்,
பேடும் ஆணும் பிறர் அறி யாததோர்
ஆடு நாகம் அசைத்த அடிகளே.

         பொழிப்புரை : செங்கோடலும் , வெண்கோடலும் , கோங்கமும் ஆகிய பூக்கள் புறவுநிலமாகிய முல்லைநிலத்தை அணிசெய்தலால் , வண்டிசைக்கும் பாடல் கேட்கின்ற பைஞ்ஞீலித் தலத்து இறைவர் பேடும் ஆணும் ஆகிய பிறர் அறியாத இயல்பினர் , ஆடும் பாம்பைக் கட்டிய ஒப்பற்ற அடிகள் ஆவர் .


பாடல் எண் : 9
கார்உலாமலர்க் கொன்றைஅம் தாரினான்,
வார்உ லாமுலை மங்கையொர் பங்கினன்,
தேர்உ லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்மினே.

         பொழிப்புரை : கார்காலத்துப் பொருந்திய கொன்றை மலர்களாலாகிய தாரினை அணிந்தவனும் , கச்சுப் பொருந்திய தனங்களை உடைய உமைமங்கையை ஒரு பங்கில் உடையவனும் , பொழில் நுகரவருவோர் இவர்ந்துவந்த தேருலாவுகின்ற பூம்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய ஆரா அமுதை அடைந்து உய்வீர்களாக .


பாடல் எண் : 10
தருக்கிச் சென்று தடவரை பற்றலும்,
நெருக்கி ஊன்ற நினைந்து, சிவனையே
அரக்கன் பாட, அருளும்எம் மான்இடம்,
இருக்கை ஞீலிஎன் பார்க்கு இடர் இல்லையே.

         பொழிப்புரை : அரக்கனாகிய இராவணன் செருக்கினை உற்றுத் தடவரையாகிய திருக்கயிலாயத்தைப் பற்றுதலும் , நெருக்கித் திருவிரலால் ஊன்ற , சிவனையே நினைந்து அவன்பாட அவனுக்கு அருள்புரியும் எம்மான் இடம் பைஞ்ஞீலி என்றுரைப்பார்க்கு இடர்கள் இல்லை .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         தம்பிரான் தோழர் திருப்பாச்சிலாச்சிராமத்தில் பெருமானைத் தொழுது பொருள் பெற்றுச் சின்னாள் தங்கி, அருகிலுள்ள பதிகளை வணங்கிய பின்னர், காவிரியின் இரு மருங்கிலுமுள்ள தலங்களை வணங்கிக்கொண்டு திருப்பைஞ்ஞீலி சென்று, திருக்கோபுரம் இறைஞ்சி வலங்கொண்டு கங்காளமூர்த்தியைத் தரிசித்து, பெருமான் பலிக்கு எழுந்தருளும் திருவடிவைக் கண்ட மகளிர் மையல் கொண்டு வினவிய கூற்றாக அமைத்துப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். 84)

பெரிய புராணப் பாடல் எண் : 83
அப்பதி நீங்கி அருளினால் போகி,
         ஆவின்அஞ்சு ஆடுவார் நீடும்
எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி,
         இறைவர்பைஞ் ஞீலியை எய்திப்
பைப்பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப்
         பாங்குஅமர் புடைவலம் கொண்டு
துப்புஉறழ் வேணி யார்கழல் தொழுவார்
         தோன்றுகங் காளரைக் கண்டார்.

         பொழிப்புரை : அப்பதியினின்றும் நீங்கித் திருவருட் சார்பாய்ச் சென்று, பசுவினிடத்துப் பெறும் ஐந்து பொருள்களையும் விரும்பித் திருமுழுக்காடிடும் பெருமான் எழுந்தருளி இருக்கும் காவிரியின் இரு மருங்கிலுமுள்ள எல்லாப் பதிகளையும் வணங்கி, சிவபெருமான் உறைகின்ற திருப்பைஞ்ஞீலியை அடைந்து, அங்குப் பாம்பினை அணிந்த இறைவரின் கோயில் கோபுரத்தை வணங்கி, உட்புறமுள்ள திருச்சுற்றில் வலமாக வந்து, பவளம்போலும் செஞ்சடையைக் கொண்ட இறைவரைத் தொழுது, அவர் தமக்கு முன்னதாகத் தோன்றும் கங்காள வேடமுடைய பெருமானாரைக் கண்டார்.

         எப்பெயர்ப் பதியும் என்றது திருச்செந்துறை, திருவாலந்துறை, திருத்துடையூர், திருப்பராய்த்துறை முதலியனவாக லாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).


பெ. பு. பாடல் எண் : 84
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம்
         பொழிதர, கைகுவித்து இறைஞ்சி,
வண்டுஅறை குழலார் மனங்கவர் பலிக்கு
         வரும் திரு வடிவு கண்டவர்கள்
கொண்டது ஓர் மயலால் வினவுகூற்று ஆக,
         குலவு சொல் "கார்உலாவிய" என்று
அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய
         விடங்கராம் அருந்தமிழ் புனைந்தார்.

         பொழிப்புரை : கண்ட அளவில் அவர் கண்கள் காதலினால் நீர் வெள்ளம் பொழிந்திடக் கைகளைக் கூப்பி, வண்டுகள் பாடும் மலர்களைச் சூடிய பெண்களின் மனம் கவரும்படி அவர்பால் பிச்சை ஏற்கின்ற பெருமானாருடைய அவ்வடிவைக் கண்டு அவர்கள் அப்பெருமானாரிடம் கொண்டதொரு மயக்க மிகுதியால், வினாவிடும் கூற்றாக விளங்கும் சொற்களையுடைய `காருலாவிய நஞ்சை' எனத் தொடங்கும் பதிகத்தால், தேவாதி தேவர்க்கெல்லாம் தலைவர் ஆன இறைவரைப் போற்றிப் பாடல்தொறும், `ஆரணிய விடங்கராம் இவர்' என அமையும் அப்பதிகத்தைப் பாடி நிறைவு செய்தார்.

         இம்முதற் குறிப்புடைய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.36). ஆரணிய விடங்கர் - காட்டை இடமாகக் கொண்டு தாமே தோன்றிய திருவடிவை உடையவர். இத்தொடர் பாடல் தொறும் நின்று, பெருமானை விளிக்கும் தொடராக அமைந்துள்ளது.


7. 036   திருப்பைஞ்ஞீலி              பண் - கொல்லி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கார் உலாவிய நஞ்சை உண்டுஇருள்
         கண்டர், வெணதலை ஓடுகொண்டு
ஊர் எலாந்திரிந்து என்செய் வீர்,பலி
         ஓர் இடத்திலே கொள்ளும் நீர்,
பார்  எலாம்பணிந் து உம்மை யேபர
         விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்,
ஆரம் ஆவது நாக மோசொலும்,
         ஆர ணீய விடங்கரே.

         பொழிப்புரை : கருமை நிறம் பொருந்திய நஞ்சினை உண்டமையால் இருண்ட கண்டத்தினையுடையவரே , நிலவுலகமெல்லாம் உம்மையே வணங்கித் துதித்துத் தொண்டுபுரியும் பெருமையுடைய , திருப்பைஞ்ஞீலி இறைவரே , காட்டில்வாழும் அழகரே , நீர் வெண்மையான தலையோட்டினைக் கையிற்கொண்டு ஊரெலாந் திரிந்து என்ன பெறப் போகின்றீர் ? இவ் வோரிடத்திற்றானே நீர் வேண்டிய அளவின தாகிய பிச்சையைப் பெற்றுக்கொள்வீர் ; அது நிற்க ; உமக்கு முத்து வடமாவது , பாம்புதானோ ? சொல்லீர் .


பாடல் எண் : 2
சிலைத்து நோக்கும்வெள் ஏறு செந்தழல்
         வாய பாம்புஅது மூசுஎனும்,
பலிக்கு நீர்வரும் போது, நுங்கையில்
         பாம்பு வேண்டா பிரானிரே,
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும்
         மன்னு கார்அகில் சண்பகம்
அலைக்கும் பைம்புனல் சூழ்பைஞ் ஞீலியில்
         ஆர ணீய விடங்கரே.

         பொழிப்புரை : இறைவரே , மலையின்கண் பிறந்த , ` சந்தனம் , வேங்கை , கோங்கு , மிக்க கரிய அகில் , சண்பகம் ; என்னும் மரங்களை அலைத்துக்கொண்டு வரும் , தண்ணிய நீர் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கின்ற , காட்டில் வாழும் அழகரே , நுமது வெள் விடை முழக்கமிட்டுச் சினந்து பார்க்கின்றது ; சிவந்த நெருப்புப் போலும் நஞ்சினைக் கொண்ட வாயினையுடைய பாம்பு , ` மூசு ` என்னும் ஓசையுண்டாகச் சீறுகின்றது ; ஆதலின் , நீர் பிச்சைக்கு வரும் போது கையில் பாம்பையேனும் கொண்டுவருதல் வேண்டா .


பாடல் எண் : 3
தூய வர்கண்ணும் வாயும் மேனியும்
         துன்ன ஆடை சுடலையில்,
பேயொடு ஆடலைத் தவிரும் நீர்,ஒரு
         பித்த ரோஎம் பிரானிரே,
பாயும் நீர்க்கிடங்கு ஆர்க மலமும்
         பைந்தண் மாதவி புன்னையும்
ஆய பைம்பொழில் சூழ்பைஞ் ஞீலியில்
         ஆர ணீய விடங்கரே.

         பொழிப்புரை : எம்பெருமானிரே , பாயுந் தன்மையுடைய நீரைக் கொண்ட அகழியில் நிறைந்துள்ள தாமரைகளும் , அதன் கரையில் , மாதவியும் , புன்னையும் பொருந்திய ` சோலைகள் சூழ்ந்த திருப் பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள , காட்டில் வாழும் அழகரே , நீர் , கண்ணும் , வாயும் , மேனியும் அழகியராய் இருக்கின்றீர் ; ஆயினும் , தைத்த கோவணத்தை உடுத்து , சுடலையில் பேயோடு ஆடுதலை ஒழிய மாட்டீர் ; நீர் ஒரு பித்தரோ ? அவற்றை விட்டொழியும் .


பாடல் எண் : 4
செந்த மிழ்த்திறம் வல்லி ரோ,செங்கண்
         அரவம் முன்கையில் ஆடவே
வந்து நிற்கும் இதுஎன்கொ லோ,பலி
         மாற்ற மாட்டோம் இடகிலோம்,
பைந்தண் மாமலர் உந்து சோலைகள்
         கந்த நாறுபைஞ் ஞீலியீர்,
அந்தி வானமும் மேனி யோ,சொலும்
         ஆர ணீய விடங்கரே.

         பொழிப்புரை : பசிய, தண்ணிய, சிறந்த பூக்களை உதிர்க்கின்ற சோலைகள் நறுமணம் வீசுகின்ற திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளி இருப்பவரே. காட்டில் வாழும் அழகரே, நீர் மகளிர் மனத்தைக் கவர்தற்கு , ` இயல் , இசை , நாடகம் ` என்னும் முத்தமிழிலும் வல்லிரோ ? நும் மேனியும் அந்தி வானம் போல்வதோ ? சொல்லீர் , அவை நிற்க ; நீர் , உமது முன்கையில் பாம்பு நின்று படம் எடுத்து ஆடும்படி வந்து நிற்பது என் ? இதனால் , நாங்கள் கொண்டுவந்த பிச்சையை இடாது போக மாட்டேமும் , இடமாட்டேமும் ஆகின்றேம் .


பாடல் எண் : 5
நீறு நும்திரு மேனி நித்திலம்,
         நீல்நெ டுங்கண்ணி னாளொடும்
கூற ராய்வந்து நிற்றி ரால்,கொணர்ந்து
         இடகி லோம்பலி, நடமினோ,
பாறு வெண்தலை கையில் ஏந்திப்பைஞ்
         ஞீலி யேன் என்றீர், அடிகள்நீர்
ஆறு தாங்கிய சடைய ரோ,சொலும்
         ஆர ணீய விடங்கரே.

         பொழிப்புரை : தலைவரே , காட்டில் வாழும் அழகரே , நீர் , அழிந்த வெண்மையான தலையோட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு , ` யான் இத் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்றீர் ; உமது திருமேனியில் உள்ள நீறு முத்துப்போல வெள்ளொளியை வீசுகின்றது . ஆயினும் , கரிய நீண்ட கண்களையுடைய பெண் ஒருத்தி யோடும் கூடிய பாதி உருவத்தை யுடையிராய் வந்து நிற்கின்றீர் ; அதன் மேலும் நீர் , கங்கையைச் சுமந்த சடையை உடையவரோ ? சொல்லீர் ; இதனால் , உமக்கு நாங்கள் பிச்சையைக் கொணர்ந்தும் இடேமாயினேம் ; நடவீர் .

  
பாடல் எண் : 6
குரவம் நாறிய குழலி னார்வளை
         கொள்வ தேதொழில் ஆகி,நீர்
இரவும் இம்மனை அறிதி ரே,இங்கே
         நடந்து போகவும் வல்லிரே,
பரவி நாள்தொறும் பாடு வார்வினை
         பற்று அறுக்கும்பைஞ் ஞீலியீர்,
அரவம் ஆட்டவும் வல்லி ரோ,சொலும்
         ஆர ணீய விடங்கரே.

         பொழிப்புரை : நாள்தோறும் பாடிப் பரவுவாரது வினைகளைப் பற்றறச் செய்யும் திருப்பைஞ்ஞீலி இறைவரே , காட்டில் வாழும் அழகரே , நீர் , குராமலரின் மணத்தை வீசுகின்ற கூந்தலையுடைய மகளிரது வளைகளைக் கவர்ந்துகொள்வதே தொழிலாய் , இங்குள்ள இல்லங்களை இரவிலும் வந்து அறிகின்றீர் ; அதனால் , நள்ளிரவில் இங்குநின்றும் நடந்துபோகவும் வல்லீரோ ? அதுவன்றிப் பாம்பு ஆட்டவும் வல்லீரோ ? சொல்லீர் .


பாடல் எண் : 7
ஏடு லாமலர்க் கொன்றை சூடுதிர்,
         என்பு எலாம்அணிந்து என்செய்வீர்,
காடு நும்பதி, ஓடு கையது,
         காதல் செய்பவர் பெறுவதுஎன்,
பாடல் வண்டு இசை ஆலுஞ் சோலைப்பைஞ்
         ஞீலி யேன் என்று நிற்றிரால்,
ஆடல் பாடலும் வல்லி ரோ,சொலும்
         ஆர ணீய விடங்கரே.

         பொழிப்புரை : காட்டில் வாழும் அழகரே , நீர் , ` யான் , பாடு தலையுடைய வண்டுகள் இசையை முழக்குகின்ற சோலைகளை யுடைய திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சையிடுமின் ` என்று சொல்லி வந்து நிற்கின்றீர் ; நீர் , இதழ்கள் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடுகின்றீர் ; அதனோடு ஒழியாது , எலும்புகளை யெல்லாம் அணிந்து என்ன பெறப்போகின்றீர் ? அதுவன்றி , நும் ஊரோ , காடு ; நும் கையில் இருப்பதோ , ஓடு ; இவ்வாறாயின் உம்மைக் காதலிப்பவர் பெறும் பொருள் யாது ? இந்நிலையில் நீர் , ஆடல் பாடல்களிலும் வல்லீரோ ? சொல்லீர் .


பாடல் எண் : 8
மத்த மாமலர்க் கொன்றை வன்னியும்
         கங்கை யாளொடு திங்களும்
மொய்த்த வெண்தலை கொக்கு  இறஃகொடு
         வெள் எருக்கம் உம்  சடையதாம்,
பத்தர் சித்தர்கள் பாடி ஆடும்பைஞ்
         ஞீலி யேன், என்று நிற்றிரால்,
அத்தி ஈர்உரி போர்த்தி ரோ,சொலும்
         ஆர ணீய விடங்கரே.

         பொழிப்புரை : காட்டில் வாழும் அழகரே , நீர் , ` யான் அடியார்களும் , சித்தர்களும் பத்திமிகுதியால் திருப்பாடல்களைப் பாடிக் கொண்டு ஆடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்று சொல்லிவந்து நிற்கின்றீர் ; ` ஊமத்தை , கொன்றை ` என்னும் இவற்றின் சிறந்த மலர்களும் , வன்னியின் இலையும் , கங்கையும் , பிறையும் , அவற்றொடு நெருங்கிய வெண்டலையும் , கொக்கிறகும் , வெள்ளெருக்கும் உம் சடையிலே உள்ளன ; அவைகளே யன்றி , யானையை உரித்த தோலையும் மேனிமேல் போர்த்துக் கொள்வீரோ ? சொல்லீர் .

  
பாடல் எண் : 9
தக்கை தண்ணுமை தாளம் வீணை
         தகுணிச்சம் கிணை சல்லரி
கொக்க ரைகுட முழவி னோடு இசை
         கூடிப் பாடிநின்று ஆடுவீர்,
பக்க மேகுயில் பாடுஞ் சோலைப்பைஞ்
         ஞீலி யேன் என்று நிற்றிரால்,
அக்கும் ஆமையும் பூண்டி ரோ, சொலும்
         ஆர ணீய விடங்கரே.

         பொழிப்புரை : காட்டில் வாழும் அழகரே , நீர் , ` யான் , எப்பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்று சொல்லி வந்து நிற்கின்றீர் . நீர் , ` தக்கை , தண்ணுமை , தாளம் , வீணை , தகுணிச்சம் , கிணை , சல்லரி , சங்கு , குடமுழா ` என்னும் இவற்றொடு கூடி , பல இசைகளைப் பாடிக் கொண்டு முன்வந்து நின்று ஆடுவீர் ; ஆயினும் , அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது , எலும்பையும் , ஆமையோட்டையும் அணிந்து கொண்டீரோ ? சொல்லீர் .


பாடல் எண் : 10
கையொர் பாம்பு,அரை ஆர்த்தொர் பாம்பு,
         கழுத்தொர் பாம்பு, அவை பின்புதாழ்
மெய்எ லாம்பொடிக் கொண்டு பூசுதிர்,
         வேதம் ஓதுதிர் கீதமும்,
பைய வேவிடங் காக நின்றுபைஞ்
         ஞீலி யேன் என்றீர் அடிகள்நீர்,
ஐயம் ஏற்கும் இது என்கொ லோ,சொலும்
         ஆர ணீய விடங்கரே.

         பொழிப்புரை : தலைவரே, காட்டில் வாழும் அழகரே, உமக்குக் கையில் ஒரு பாம்பு ; அரையில் , கட்டிய ஒரு பாம்பு ; கழுத்தில் ஒரு பாம்பு ; அவையெல்லாம் பின்புறமும் ஊர்கின்ற மேனி முழுவதும் நீற்றினால் பூசியுள்ளீர் ; அதனோடு வேதம் ஓதுகின்றீர் ; இவற்றோடு இசையும் உம்மிடத்தில் மெல்ல அழகியதாய்த் தோன்ற வந்து நின்று, `யான் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்` என்கின்றீர் ; பிச்சை எடுக்கும் இக்கோலம் எத்தன்மையதோ ? சொல்லீர் .


பாடல் எண் : 11
அன்னம் சேர்வயல் சூழ்பைஞ் ஞீலியில்
         ஆர ணீய விடங்கரை,
மின்னும் நுண்இடை மங்கை மார்பலர்
         வேண்டிக் காதல் மொழிந்தசொல்,
மன்னு தொல்புகழ் நாவல் ஊரன்,வன்
         தொண்டன் வாய்மொழி பாடல்பத்து,
உன்னி இன்இசை பாடு வார்,உமை
         கேள்வன் சேவடி சேர்வரே.

         பொழிப்புரை : அன்னங்கள் தங்குகின்ற வயல்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள , காட்டில் வாழும் அழகராகிய இறைவரை , தோன்றி மறைகின்ற நுண்ணிய இடையினையுடைய மங்கையர் பலர் காதலித்து அக் காதலை வெளிப்படுத்திய சொற்களை யுடைய , நிலைபெற்ற பழைய புகழினையுடைய திருநாவலூரில் தோன்றினவனாகிய வன்றொண்டனது வாய்மொழியான இப் பாடல்கள் பத்தினையும், மனத்தில் புகக்கொண்டு , இனிய இசையாற் பாடுபவர் , உமாதேவிக்குக் கணவனாகிய சிவபிரானது செவ்விய திருவடியை அடைவர் .

                                             திருச்சிற்றம்பலம்



1 comment:

  1. பராய்த்துறை மேவிய பரனே போற்றி சீராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
    திருச்சி ER.HIGH SCHOOL 1965 BATCH
    திருச்சி பட்டவர்த்ரோடு மூர்த்தி சி
    மொபைல் 6383233043
    தமிழ்நாடு சித்தர்கள் ஜீவசமாதி முகவரி த 6383233043

    ReplyDelete

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...