திருக் கானூர்




திருக் கானூர்

        சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

         திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 6.5 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது. திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள விஷ்ணம்பேட்டை அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. செல்ல வேண்டும். விஷ்ணம்பேட்டை வரை நல்ல சாலை வசதி இருக்கிறது. கொள்ளிடக் கரையில் கோயில் மட்டும் தனியே உள்ளது.

இறைவர்                  : செம்மேனிநாதர், கரும்பேசுவரர்.

இறைவியார்               : சிவலோக நாயகி.

தீர்த்தம்                    : கொள்ளிடம்.

தேவாரப் பாடல்கள்         : 1. சம்பந்தர் - வானார்சோதி மன்னு
                                                        2. அப்பர்   - திருவின் நாதனும்

         ஆலயத்தின் குருக்கள் திருக்காட்டுபள்ளியில் வசிக்கிறார். அங்கிருந்து அவருக்கு வசதிப்பட்ட நேரத்தில் திருக்கானூர் வந்து தினசரி ஒரு வேளை பூஜை மட்டும் செய்துவிட்டுச் செல்கிறார். எனவே, திருக்கானூர் செம்மேனிநாதரை தரிசிக்க செல்பவர்கள் திருக்காட்டுப்பளியில் குருக்களை சந்தித்து அவரை கூட்டிக் கொண்டு ஆலயம் செல்வது தான் சிறந்தது. ஒருத்தராக செல்வதை விட நான்கைந்து பேர்களாகச் சேர்ந்து செல்வது நல்லது. மண் சாலையில் தனி நபராகச் செல்வது உசிதமில்லை. மாலை இருட்டிய பிறகு செல்வதும் உசிதமில்லை.

         கிழக்கு நோக்கிய சிறிய மூன்று நிலை இராஜகோபுரத்துடன் சுற்றிலும் மதிற்சுவருடன் இவ்வாலயம் விளங்குகிறது. ஆலயம் நல்ல நிலையிலுள்ளது. . பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், நாகர், மகாவிஷ்ணு, ஐயனார், சூரியன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர். உள் பிரகாரம் விசாலமாக உள்ளது. மூலவர் செம்மேனிநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவனுக்கு கரும்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மூலவர் விமானம் ஏகதளத்துடன் உருண்டை வடிவில் உள்ளது. பங்குனி மாதத்தில் (ஏப்ரல் 2,3,4 ஆகிய தேதிகளில்) இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தலத்திலுள்ள அம்மனின் விக்ரகம் சாளக்கிராமத்தால் ஆனது.

         ஒரு முறை அம்பிகை சிவனை நோக்கி தவமிருக்க பூமிக்கு வந்தார். தியானத்திற்கு ஏற்ற இடமாக இத்தலத்தை தேர்ந்தெடுத்து, சிவனை நோக்கி கடுமையாக தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அக்னிபிழம்பாக காட்சி தந்தார். இதனால் இத்தல இறைவன் செம்மேனிநாதர் என்றும், அம்மன் சிவயோகநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். கணவனும் மனைவியும் சேர்ந்து இத்தலம் வந்து வழிபட்டால், கருத்துவேறுபாடு இல்லாமல், ஒற்றுமையாக இருக்கலாம் என்பது நம்பிக்கை.

          1924-ல் வெள்ளம் வந்தபோது கோயில் முழுவதும் மூடிவிட்டது. அதன்மீது ஒரு கரும்பு மட்டுமே முளைத்திருக்கக் கண்டு, திரு. என். சுப்பிரமணிய ஐயர் என்பர் முயன்று தோண்டிப் பார்த்தபோது கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இப்பெருமானுக்கு கரும்பேஸ்வரர் என்று பெயராயிற்று.

          (திருக்கானூர் என்னும் ஊர்ப் பெயர் மாறி, இன்று மக்கள் குடியிருப்பு ஒரு சிலவே இருப்பதாலும், மணற் பகுதியை அடுத்திருப்பதாலும் மக்கள் இவ்விடத்தை மணல்மேடு என்றே வழங்குகின்றனர்.)

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தேய்க் களங்கு இல் வான் ஊர் மதி போல், மணியால் குமுத மலர் கானூர் உயர் தங்கக் கட்டியே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 307
மழபாடி வயிரமணித் தூண் அமர்ந்து
         மகிழ்கோயில் வலம்கொண்டு எய்தி,
செழுவாச மலர்க்கமலச் சேவடிக்கீழ்ச்
         சென்றுதாழ்ந்து, எழுந்து, நின்று,
தொழுதுஆடிப் பாடி, நறும் சொல்மாலைத்
         தொடை அணிந்து, துதித்துப் போந்தே,
ஒழியாத நேசமுடன் உடையவரைக்
         கும்பிட்டு,அங்கு உறைந்தார் சில்நாள்.

         பொழிப்புரை : அத் திருமழபாடியில் அழகிய வயிரமணித் தூண் ஆக வீற்றிருந்தருளும் பெருமானாரின் கோயிலை வலம் வந்து, செழுமையான மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிக் கீழே விழுந்து வணங்கி எழுந்து நின்று, தொழுதும் ஆடியும் பாடியும் நல்ல சொல்மாலைத் தொடை பாடிப் போற்றியும் வெளிப்போந்த நிலையில், இடையறாத அன்புடன் தம் தலைவரான இறைவரைக் கும்பிட்டு, அத்திருப்பதியில் சில நாள்கள் தங்கியிருந்தார் பிள்ளையார்.


பெ. பு. பாடல் எண் : 308
அதன்மருங்கு கடந்துஅருளால் திருக்கானூர்
         பணிந்து ஏத்தி, ஆன்ற சைவ
முதன்மறையோர் அன்பில் ஆலந்துறையின்
         முன்னவனைத் தொழுது போற்றி,
பதம்நிறை செந் தமிழ்பாடிச் சடைமுடியார்
         பல பதியும் பணிந்து பாடி,
மதகரட வரை உரித்தார் வடகரை மாந்
         துறை அணைந்தார் மணிநூல் மார்பர்.

         பொழிப்புரை : அப்பதியைக் கடந்து சென்றவர், திருக்கானூரைப் பணிந்து போற்றி, பெருமை பெற்ற ஆதிசைவர் இருக்கும் திருஅன்பிலாலந்துறை இறைவரை வணங்கிப் போற்றி, வளம் மிக்க சொற்களமைந்த செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடி, சிவபெருமானின் பல பதிகளையும் வணங்கிப் போற்றி, அருவியென மதத்தைச் சொரியும் மலையனைய யானையை உரித்த இறைவரின் `வடகரை மாந்துறையை\' அழகிய முப்புரிநூல் அணிந்த மார்பையுடைய சம்பந்தர் சென்று சேர்ந்தார்.

         குறிப்புரை : திருக்கானூரில் அருளிய பதிகம், `வானார் சோதி' (தி.1 ப.73) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்ததாகும்.

         திருஅன்பிலாலந்துறையில் அருளிய பதிகம், `கணை நீடெரி' (தி.1 ப.33) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்ததாகும். `சடை முடியார் பல பதியும் பாடி' என்பதற்கேற்பப் பிள்ளையார் வணங்கிய திருப்பதிகள் எவை என அறிதற்கியன்றிலது.


1.073   திருக்கானூர்                      பண் - தக்கேசி
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வான்ஆர்சோதி மன்னுசென்னி வன்னி புனங்கொன்றைத்
தேன்ஆர்போது தான்ஆர்கங்கை திங்க ளொடுசூடி,
மான்நேர்நோக்கி கண்டுஅங்குஉவப்ப மாலை ஆடுவார்
கானூர்மேய கண்ணார்நெற்றி ஆன்ஊர் செல்வரே.

         பொழிப்புரை :திருக்கானூரில் மேவிய கண்பொருந்திய நெற்றி யினை உடையவரும், ஆனேற்றை ஊர்ந்து வருபவருமாகிய செல்வர், வானத்தில் ஒளியோடு விளங்கும் சூரிய சந்திரர் போன்ற ஒளி மன்னும் சென்னியில் வன்னி, காடுகளில் பூத்த தேன் பொருந்திய கொன்றை மலர், தானே வந்து தங்கிய கங்கை, திங்கள் ஆகியவற்றைச் சூடி, மான் போன்ற மருண்ட கண்களையுடைய உமையம்மை கண்டு மகிழ மாலைக்காலத்தில் நடனம் புரிபவராவர்.


பாடல் எண் : 2
நீந்தல்ஆகா வெள்ளமூழ்கு நீள்சடை தன்மேல்,ஓர்
ஏய்ந்தகோணல் பிறையோடுஅரவு கொன்றை எழில்ஆரப்
போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தர்அவர் போலாம்
காந்தள்விம்மு கானூர்மேய சாந்த நீற்றாரே.

         பொழிப்புரை :காந்தள் செடிகள் தழைத்து வளர்ந்து பூத்து மணம் பரப்பும் கானூரில் மேவிய சந்தனமும் திருநீறும் பூசிய இறைவர், தடுக்க முடியாதபடி பெருகிவந்த கங்கையினது வெள்ளம் மூழ்கி மறைந்துபோன நீண்ட சடைமுடிமேல் பொருந்த வளைந்த பிறை மதியோடு, பாம்பு, கொன்றைமலர் ஆகியன அழகுதர வீதியுலா வந்து அழகிய மென் சொற்களால் இன்பம் தந்த மைந்தர் ஆவார்.


பாடல் எண் : 3
சிறைஆர்வண்டும் தேனும்விம்மு செய்ய மலர்க்கொன்றை,
மறைஆர்பாடல் ஆடலோடு மால்விடை மேல்வருவார்,
இறையார்வந்து என்இல்புகுந்துஎன் எழில்நலமும் கொண்டார்
கறைஆர்சோலைக் கானூர்மேய பிறையார் சடையாரே.

         பொழிப்புரை :கருநிறமான சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய பிறை பொருந்திய சடையினராகிய இறைவர், சிறகுகளோடு கூடிய வண்டுகளும் அவற்றால் உண்ணப்பெறும் தேனும் நிறைந்து செவ்விதாக மலர்ந்த கொன்றை மலர்களைச் சூடியவராய் வேதப்பாடல்களைப் பாடி ஆடுபவராய்ப் பெரிய விடைமேல் வருவார். அவ்வாறு வரும் இறைவர் என் இல்லத்தே புகுந்து என் அழகையும் நலத்தையும் கவர்ந்து சென்றார், இதுமுறையோ?.


பாடல் எண் : 4
விண்ஆர்திங்கள் கண்ணிவெள்ளை மாலை அதுசூடித்
தண்ஆர்அக்கோடு ஆமைபூண்டு தழைபுன் சடைதாழ
எண்ணாவந்து என்இல்புகுந்துஅங்கு எவ்வ நோய்செய்தான்
கண்ஆர்சோலைக் கானூர்மேய விண்ணோர் பெருமானே.

         பொழிப்புரை :இடம் அகன்ற சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய விண்ணோர் தலைவராகிய சிவபிரானார் வானகத்தில் பொருந்திய பிறைமதியைக் கண்ணியாகச்சூடி, வெண்ணிறமான மாலையை அணிந்து, குளிர்ந்த என்புமாலை, ஆமையோடு ஆகிய வற்றைப் புனைந்து தழைத்த சிவந்த சடைகள் தொங்க, என்னை அடைய எண்ணி வந்து என் இல்லம் புகுந்து, எனக்கு மிக்க விரகவேதனையைத் தந்து சென்றார். இது முறையோ?


பாடல் எண் : 5
தார்கொள்கொன்றைக் கண்ணியோடும் தண் மதியம்சூடி
சீர்கொள்பாடல் ஆடலோடு சேட ராய்வந்து
ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றுஎன் உள்வெந் நோய்செய்தார்
கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண் டத்தாரே.

         பொழிப்புரை :கருநிறம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய கறைக்கண்டர், கொன்றை மலர்களால் இயன்ற கண்ணி தார் ஆகியவற்றை அணிந்தவராய்க் குளிர்ந்த பிறைமதியை முடியில் சூடி, சிறப்புமிக்க ஆடல் பாடல்களோடு பெருமைக்குரியவராய் வந்து ஊர்கள்தோறும் திரிந்து, பலியேற்று, என் மனத்தகத்தே கொடிய விரகவேதனையைத் தந்து சென்றார்.


பாடல் எண் : 6
முளிவெள் எலும்பு நீறும்நூலும் மூழ்கு மார்பராய்
எளிவந்தார்போல் ஐயம்என்று என்இல்லே புகுந்துஉள்ளத்
தெளிவும்நாணும் கொண்டகள்வர் தேறல் ஆர்பூவில்
களிவண்டுயாயாழ்செய் கானூர்மேய ஒளிவெண் பிறையாரே.

         பொழிப்புரை :தேன் பொருந்திய மலரில் கள்ளுண்டு களித்த வண்டுகள் யாழ்போல ஒலி செய்யும் திருக்கானூரில் மேவிய ஒளி பொருந்திய வெண்பிறையை முடியிற் சூடிய இறைவர், காய்ந்த வெண்மையான எலும்பும் திருநீறும் முப்புரிநூலும் பொருந்திய மார்பினராய் எளிமையாக வந்தவர் போல வந்து, `ஐயம் இடுக` என்று கூறிக் கொண்டே என் இல்லத்தில் புகுந்து உள்ளத் தெளிவையும் நாணத்தையும் கவர்ந்து சென்ற கள்வர் ஆவார்.


பாடல் எண் : 7
மூவாவண்ணர், முளைவெண்பிறையர், முறுவல் செய்துஇங்கே
பூஆர்கொன்றை புனைந்துவந்தார், பொக்கம் பலபேசிப்
போவார்போல மால்செய்து,உள்ளம் புக்க புரிநூலர்,
தேஆர்சோலைக் கானூர்மேய தேவ தேவரே.

         பொழிப்புரை :தெய்வத்தன்மை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய தேவதேவராகிய சிவபிரானார், மூப்பு அடையாத அழகினர். ஒரு கலையோடு முளைத்த வெண்மையான பிறையை அணிந்தவர். அவர் கொன்றைமாலை சூடியவராய்க் காமக் குறிப்புத் தோன்றும் புன்சிரிப்புடன் என் இல்லம் நோக்கி வந்து, பொய்கலந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்து போவாரைப்போல் காட்டி என்னை மயக்கி என் உள்ளத்தில் புக்கொளித்த புரிநூலர் ஆவார்.


பாடல் எண் : 8
தமிழின்நீர்மை பேசி,தாளம் வீணை பண்ணி,நல்ல
முழவமொந்தை மல்குபாடல் செய்கை இடம்ஓவார்,
குமிழின்மேனி தந்தகோல நீர்மை அதுகொண்டார்,
கமழுஞ்சோலைக் கானூர்மேய பவள வண்ணரே.

         பொழிப்புரை :மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய பவளம் போன்ற நிறத்தினை உடைய பரமர், தமிழ்போன்று இனிக்கும் இனிய வார்த்தைகளைப் பேசி, தாளத்தோடு வீணையை மீட்டி, முழவம் மொந்தை ஆகிய துணைக் கருவிகளுடன் கூடிய பாடல்களைப் பாடி எனது இல்லத்தை அடைந்து, அதனை விட்டுப் பெயராதவராய் எனக்குக் குமிழம்பூப் போன்ற பசலை நிறத்தை அளித்து என் அழகைக் கொண்டு சென்றார்.


பாடல் எண் : 9
அந்தம்ஆதி அயனும்மாலும் ஆர்க்கும் அறிவரியான்,
சிந்தைஉள்ளும் நாவின்மேலும் சென்னியும் மன்னினான்,
வந்துஎன்உள்ளம் புகுந்துமாலை காலை ஆடுவான்,
கந்தமல்கு கானூர்மேய எந்தை பெம்மானே.

         பொழிப்புரை :மணம் நிறைந்த திருக்கானூரில் எழுந்தருளிய எந் தையாராகிய பெருமானார், அந்தத்தைச் செய்பவரும், யாவர்க்கும் ஆதியாய் இருப்பவரும் ஆவார். அயன், மால் முதலிய அனைவராலும் அறிதற்கரியவர். என் சிந்தையிலும் சென்னியிலும் நாவிலும் நிலைபெற்றிருப்பவர். அத்தகையோர் யான் காண வெளிப்பட்டு வந்து என் உள்ளம் புகுந்து மாலையிலும் காலையிலும் நடனம் புரிந்தருளு கின்றார்.


பாடல் எண் : 10
ஆமைஅரவோடு ஏனவெண்கொம்பு அக்கு மாலைபூண்டு,
ஆம்ஓர்கள்வர் வெள்ளர்போல உள்வெந் நோய்செய்தார்,
ஓமவேத நான்முகனும், கோள்நாக அணையானும்
சேமம்ஆய செல்வர்கானூர் மேய சேடரே.

         பொழிப்புரை :வேள்விகள் இயற்றும் முறைகளைக் கூறும் வேதங் களை ஓதும் நான்முகனும், வளைந்த பாம்பணையில் பள்ளிகொள்ளும் திருமாலும் தங்கள் பாதுகாப்புக்குரியவராகக் கருதும் செல்வராகிய கானூர் மேவிய பெருமானார், ஆமை, அரவு, பன்றியின் வெண்மையான கொம்பு என்புமாலை ஆகியவற்றைப் பூண்ட ஓர்கள்வராய் வெள்ளை உள்ளம் படைத்தவர் போலக் கருதுமாறு நல்லவர் போல வந்து எனக்கு மனவேதனையைத் தந்தார்.


பாடல் எண் : 11
கழுதுதுஞ்சும் கங்குல்ஆடும் கானூர் மேயானைப்
பழுதுஇல்ஞீன சம்பந்தன்சொல் பத்தும் பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்துநின்று
அழுதும்நக்கும் அன்புசெய்வார் அல்லல் அறுப்பாரே.

         பொழிப்புரை :பேய்களும் தூங்கும் நள்ளிரவில் நடனம் ஆடும் கானூர்மேவிய இறைவனைக் குற்றமற்ற ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன சொல்மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடித்தொழுது முப்பொழுதும் தோத்திரங்களைச் சொல்லித் துதித்து நின்று அழுதும் சிரித்தும் அன்பு செய்பவர்கள் அல்லலை அறுப்பார்கள்.

                                             திருச்சிற்றம்பலம்

---------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 301
பொங்கு புனல்ஆர் பொன்னியினில்
         இரண்டு கரையும், பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்குஇறைஞ்சி,
         தமிழ்மா லைகளும் சாத்திப்போய்,
எங்கும் நிறைந்த புகழாளர்,
         ஈறுஇல் தொண்டர் எதிர்கொள்ள,
செங்கண் விடையார் திருஆனைக்
         காவின் மருங்கு சென்று அணைந்தார்.

         பொழிப்புரை : திருப்பழையாற வடதளியினின்றும் வரும் வழியில் பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும் நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண் விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.

         குறிப்புரை : இத்திருப்பதியிலிருந்து திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப் பதிகளாவன:

1.    திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72) - திருநேரிசை.
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - திரு விருத்தம்.
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21) - திருக்குறுந்தொகை.
(ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89) – திருத்தாண்டகம்.

2.    திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13) - திருத்தாண்டகம்.

3.    திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71) - திருக்குறுந்தொகை.

4.    திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) - திருநேரிசை.

5.    திருப்பந்தணை நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10) - திருத் தாண்டகம்.

6.    திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90) – திருத்தாண்டகம்.

7.    திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73) – திருக்குறுந்தொகை.

8.    தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63)
 - திருக்குறுந்தொகை.

9.    திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) - திருக்குறுந்தொகை.

10.திருக்கருவிலிக் கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69)
- திருக்குறுந்தொகை.

11.திரு அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61)
- திருக்குறுந்தொகை.

12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87) - திருத்தாண்டகம்.

13. திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76)
- திருக்குறுந் தொகை.

14.திருஅன்பில்ஆலந்துறை: `வானம் சேர்` (தி.5 ப.80)                                                                      -திருக்குறுந்தொகை

15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86) - திருத்தாண்டகம்.

16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி: `மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84)
 - திருக்குறுந்தொகை.


5. 076 திருக்கானூர்                 திருக்குறுந்தொகை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
திருவின் நாதனும் செம்மலர் மேல்உறை
உருவ னாய்உல கத்தின் உயிர்க்குஎலாம்
கருவன் ஆகி முளைத்தவன் கானூரில்
பரமன் ஆய பரஞ்சுடர் காண்மினே.

         பொழிப்புரை : கானூரில் தெய்வச்சுடராகிய இறைவன் திருமகள் கணவனாகிய திருமாலும், சிவந்த தாமரை மலர்மேல் உறைகின்ற அழகுடையவனாகிய பிரமனும் ஆகி உலகத்தின் எல்லா உயிர்களுக்கும் கருவிலேயே உற்றுக் காப்பவனாகி முளைத்தவன் ஆவன்.


பாடல் எண் : 2
பெண்டிர், மக்கள், பெருந்துணை, நல்நிதி,
உண்டுஇன்றே என்று கவன்மின் ஏழைகாள்,
கண்டு கொள்மின்நீர் கானூர் முளையினைப்
புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே.

         பொழிப்புரை : அறிவற்றவர்களே! பெண்டிர், மக்கள் பெருந்துணையாகவுள்ள நல்ல செல்வம் இன்று உண்டு என்று மகிழாதீர்; தாமரையாகிய பொதும்பில் ஒதுங்கியே கானூர் முளையாகிய கடவுளை நீர் கண்டுகொள்வீராக; (அவரே பெருந்துணையாவார்).


பாடல் எண் : 3
தாயத் தார்,தமர், நல்நிதி, என்னும்இம்
மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்,
காயத் தேஉளன், கானூர் முளையினை
வாயத் தால்வணங் கீர்,வினை மாயவே.

         பொழிப்புரை : பங்காளியர், தம் சுற்றத்தார், நல்ல செல்வம் என்னும் இம்மாயத்திலே கிடந்து மயங்கவேண்டா; உம் உடலுள்ளேயே உள்ளவனாகிய கானூர் முளையாகிய பெருமானை உங்கள் வினைகள்கெட வாயாற் கூறிப் பரவி வணங்குவீராக.


பாடல் எண் : 4
குறியில் நின்றுஉண்டு கூறை இலாச்சமண்
நெறியை விட்டு, நிறைகழல் பற்றினேன்,
அறியல் உற்றிரேல் கானூர் முளையவன்
செறிவு செய்திட்டு இருப்பதுஎன் சிந்தையே.

         பொழிப்புரை : இரத்தற் குறிப்பொடு நின்று ஏற்று உண்ணும் ஆடையற்ற அமண்நெறியைவிட்டு நீங்கி எம்பிரான் அருள்நிறையும் கழலைப் பற்றினேன்; அதற்குக் காரணம் அறியலுறுவீரேல், கானூர் முளையாகிய கடவுள் என்சிந்தையில் செறிவு செய்திட்டிருப்பதே ஆகும்.


பாடல் எண் : 5
பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள்,
சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில்
அத்தன் பாதம் அடைதல் கருமமே.

         பொழிப்புரை : அறிவற்றவர்களே! பொத்தலை உடையதும், மண்சுவர் உடையதுமாகிய இழிந்த இக்குடிசையைத் தன்மெய் என்று ஒவ்வொருவரும் வியந்திடல் வேண்டா. சித்தர்களும் பத்தர்களும் சேர்கின்ற திருக்கானூரில் இறைவன் பாதம் அடைதலே உமக்குக் கருமம் ஆகும்.


பாடல் எண் : 6
கல்வி ஞானக் கலைப்பொருள் ஆயவன்,
செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை
எல்லி யும்பக லும்இசை வானவா
சொல்லி டீர்,நும் துயரங்கள் தீரவே.

         பொழிப்புரை : கல்வியும், ஞானமும், கலையும் ஆகியவற்றின் பொருளாயிருப்பவனும், செல்வம் மல்கும் திருக்கானூரில் இருப்பவனும் ஆகிய ஈசன் இரவும் பகலும் இசைந்து அருள்புரிய ஆனவாற்றை உம் துயரங்கள் தீரச் சொல்லுவீராக.


பாடல் எண் : 7
நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும்
காரும் மாருதம் கானூர் முளைத்தவன்
சேர்வும் ஒன்றுஅறி யாது திசைதிசை
ஓர்வும் என்றிலர் ஓடித் திரிவரே.

         பொழிப்புரை : நீரும், மண்ணும், தீயும், வெயிலும், முகிலும், காற்றும் ஆகிய அனைத்துமாகிக் கானூரில் முளைத்த கடவுளைச் "சேர்தும்" என்ற ஒன்றை அறியாது திசைதோறும் திசைதோறும் உணர்ச்சி சிறிதும் இலராய் ஓடித் திரிவர் உலகத்தவர்.


பாடல் எண் : 8
ஓமத் தோடுஅயன் மால்அறி யாவணம்
வீமப் பேரொளி ஆய விழுப்பொருள்,
காமற் காய்ந்தவன், கானூர் முளைத்தவன்,
சேமத் தால்இருப்பு ஆவதுஎன் சிந்தையே.

         பொழிப்புரை : வேள்விகளாலும். திருமாலும், பிரமனும் அறியாதவண்ணம் இடுகாட்டகத்தே பேரொளியாகிய உயர்ந்த பொருளும், காமனைக் காய்ந்தவனும் ஆகிய கானூர் முளைத்த கடவுள் என் சிந்தையே பாதுகாவலுக்குரிய இருப்பாகக் கொள்வன்.

பாடல் எண் : 9
* * * * * * * * * * * *
பாடல் எண் : 10
வன்னி கொன்றை எருக்குஅணிந் தான்,மலை
உன்னி யேசென்று எடுத்தவன் ஒண்திறல்
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன்,
கன்னி மாமதில் கானூர்க் கருத்தனே.

         பொழிப்புரை : இளமையுடைய மாமதில் சூழ்ந்த கானூர்க்கருத்தன், வன்னியும், கொன்றையும், எருக்கும் அணிந்த தனக்குரிய மலையைப் பெயர்த்தெடுக்க உன்னிச்சென்று எடுத்தவனாகிய இராவணனின் ஒண்திறல் தன்னை வீழும்படியாகத் தனி விரல் ஒன்றினால் வைத்து அடர்த்தவனாவன்.

                                             திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment

மேலோர் இயல்பு

“அன்னதா னஞ்செய்தல், பெரியோர்சொல் வழிநிற்றல்,      ஆபத்தில் வந்தபேர்க்கு அபயம் கொடுத்திடுதல், நல்லினம் சேர்ந்திடுதல்,      ஆசிரியன் வழிநின்றவ...