திரு அன்பில் ஆலந்துறை




அன்பிலாலந்துறை
(கீழ்அன்பில், அன்பில்,) 

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

         திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. வைஷ்ணவ திவ்விய தேசங்களில் ஒன்றான அன்பில் வடிவழகிய நம்பியின் ஆலயம் இத்திருத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது. அன்பில் மாரியம்மன் கோயிலும் அருகில் உள்ளது. திருச்சி மற்றும் லால்குடியில் இருந்து அன்பில் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

இறைவர்               : சத்தியவாகீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்ஆலந்துறையார்.

இறைவியார்           : சௌந்தரநாயகி.

தல மரம்                : ஆலமரம்.

தீர்த்தம்                : சந்திர தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - கணைநீடெரி மாலர.
                                      2. அப்பர்   -  வானஞ் சேர்மதி சூடிய.


         ஊரின் பெயர் அன்பில், கோயிலின் பெயர் ஆலந்துறை. இரண்டும் சேர்த்து அன்பிலாந்துறை ஆயிற்று.

     ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் விளங்கும் இத்தலத்தில் மூலவர் சத்யவாகீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புவாக எழுந்துள்ளார். பிரம்மா வழிபட்ட மூர்த்தம் ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீசுவரர் என்ற நாமமும் உண்டு.

     கோயிலின் உள்ளே சப்தமாதர், பிட்சாடனர், விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், முருகன் சன்னதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.

         இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செவி சாய்த்த விநாயகர் என்று பெயர். இதற்கு ஒரு கதையும்சொல்லப்படுகின்றது.

     ஒரு முறை திருஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை தரிசிக்க வந்தபோது கொள்ளிட நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சம்பந்தரால் கோயிலை நெருங்க முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்து வந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. திருஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக விநாயகர் தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தார். ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து விநாயகர் பாட்டை ரசித்த அக்காட்சியை சிற்பமாக வடித்தார் ஒரு சிற்பி. அச்சிலை இன்றும் எழிலுற இவ்வாலயத்தில் காட்சி தருகிறது. பார்த்து இன்புற வேண்டிய சிற்பம். காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு என்று நம்பிக்கை.

     வள்ளல் பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நானூறு கோலந் துறை கொண்ட கோவை அருள் கோவை மகிழ் ஆலந்துறையின் அணி முத்தே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 307
மழபாடி வயிரமணித் தூண் அமர்ந்து
         மகிழ்கோயில் வலம்கொண்டு எய்தி,
செழுவாச மலர்க்கமலச் சேவடிக்கீழ்ச்
         சென்றுதாழ்ந்து எழுந்து நின்று,
தொழுதுஆடிப் பாடி,நறும் சொல்மாலைத்
         தொடை அணிந்து துதித்துப் போந்தே,
ஒழியாத நேசமுடன் உடையவரைக்
         கும்பிட்டுஅங்கு உறைந்தார் சில்நாள்.

         பொழிப்புரை : அத்திருமழபாடியில் அழகிய வயிரமணித் தூண் ஆக வீற்றிருந்தருளும் பெருமானாரின் கோயிலை வலம் வந்து, செழுமையான மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிக் கீழே விழுந்து வணங்கி எழுந்து நின்று, தொழுதும் ஆடியும் பாடியும் நல்ல சொல்மாலைத் தொடை பாடிப் போற்றியும் வெளிப்போந்த நிலையில், இடையறாத அன்புடன் தம் தலைவரான இறைவரைக் கும்பிட்டு, அத்திருப்பதியில் சில நாள்கள் தங்கியிருந்தார் பிள்ளையார்.


பெ. பு. பாடல் எண் : 308
அதன்மருங்கு கடந்துஅருளால் திருக்கானூர்
         பணிந்துஏத்தி, ஆன்ற சைவ
முதன்மறையோர் அன்பில்ஆ லந்துறையின்
         முன்னவனைத் தொழுது போற்றி,
பதம்நிறைசெந் தமிழ்பாடி, சடைமுடியார்
         பலபதியும் பணிந்து பாடி,
மதகரட வரைஉரித்தார் வடகரைமாந்
         துறை அணைந்தார் மணிநூல் மார்பர்.

         பொழிப்புரை : அப்பதியைக் கடந்து சென்றவர், திருக்கானூரைப் பணிந்து போற்றி, பெருமை பெற்ற ஆதிசைவர் இருக்கும் திருஅன்பிலாலந்துறை இறைவரை வணங்கிப் போற்றி, வளம் மிக்க சொற்களமைந்த செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடி, சிவபெருமானின் பல பதிகளையும் வணங்கிப் போற்றி, அருவியென மதத்தைச் சொரியும் மலையனைய யானையை உரித்த இறைவரின் `வடகரை மாந்துறையை\' அழகிய முப்புரிநூல் அணிந்த மார்பையுடைய சம்பந்தர் சென்று சேர்ந்தார்.

         திருக்கானூரில் அருளிய பதிகம், `வானார் சோதி' (தி.1 ப.73) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்ததாகும்.

         திருஅன்பிலாலந்துறையில் அருளிய பதிகம், `கணை நீடெரி\' (தி.1 ப.33) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்ததாகும்.

         `சடை முடியார் பல பதியும் பாடி' என்பதற்கேற்பப் பிள்ளையார் வணங்கிய திருப்பதிகள் எவை என அறிதற்கியன்றிலது. பதம் - வளம் மிக்க சொற்கள்: மந்திரம் என்றலுமாம். மாந்துறை - ஊர்ப்பெயர். காவிரியின் வட கரையில் அமைந்திருத்தல் பற்றி அஃது அதற்கு அடைமொழியாயிற்று.


திருஞானசம்பந்தர்  திருப்பதிகம்

1.033 திருஅன்பிலாலந்துறை                     பண் - தக்கராகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கணைநீடு எரிமால் அரவம் வரைவில்லா
இணையா எயில்மூன் றும்எரித் தஇறைவர்
பிணைமா மயிலும் குயில்சேர் மடஅன்னம்
அணையும் பொழில்அன் பில்ஆலந் துறையாரே.

         பொழிப்புரை :நீண்டு எரிகின்ற தீயையும் திருமாலையும் அம்பாகக் கொண்டு பூட்டி வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கட்டிய மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் எரித்த இறைவர், தத்தம் பெடைகளோடுகூடிய பெரிய மயில்களும், குயில்களும் சேர்ந்து வாழும் அன்னங்களும் உறையும் பொழில் சூழ்ந்த அன்பிலாலந்துறையார் ஆவார்.


பாடல் எண் : 2
சடையார் சதுரன் முதிரா மதிசூடி
விடையார் கொடிஒன்று உடைஎந் தைவிமலன்
கிடைஆர் ஒலிஓத்து அரவத்து இசைகிள்ளை
அடைஆர் பொழில்அன் பில்ஆலந் துறையாரே.

         பொழிப்புரை :சடைமுடிகளோடு கூடிய சதுரப்பாடு உடையவராய் இளம்பிறையை முடிமிசைச் சூடி இடபக்கொடி ஒன்றை உடைய எந்தையாராகிய விமலர், வேதம் பயிலும் இளஞ்சிறார்கள் கூடியிருந்து ஓதும் வேத ஒலியைக் கேட்டு அவ்வோசையாலேயே அவற்றை இசைக்கின்ற கிளிகள் அடைதல் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட அன்பிலாலந்துறை இறைவராவார்.


பாடல் எண் : 3
ஊரும் அரவம் சடைமேல் உறவைத்துப்
பாரும் பலிகொண்டு ஒலிபா டும்பரமர்
நீர்உண் கயலும் வயல்வா ளைவராலோடு
ஆரும் புனல்அன் பில்ஆலந் துறையாரே.

         பொழிப்புரை :ஊர்ந்து செல்லும் பாம்பைச் சடைமுடிமேல் பொருந்த அணிந்து உலகம் முழுதும் சென்று பலியேற்று, இசை பாடி மகிழும் பரமராகிய பெருமானார், நீரின்வழி உணவுண்ணும் கயல்மீன்களை வயல்களிடத்துள்ள வாளை வரால் ஆகிய மீன்கள் உண்ணும் புனல்வளம் மிக்க அன்பிலாலந்துறையாராவார்.


பாடல் எண் : 4
பிறையும் அரவும் உறவைத் தமுடிமேல்
நறைஉண்டு எழுவன் னியுமன் னுசடையார்
மறையும் பலவே தியர்ஓ தஒலிசென்று
அறையும் புனல்அன் பில்ஆலந் துறையாரே.

         பொழிப்புரை :பிறைமதி, பாம்பு ஆகியவற்றைப் பகை நீக்கி ஒருங்கே பொருந்த வைத்த முடிமீது, நறுமணத்துடன் தோன்றும் வன்னித் தளிர்களும் மன்னிய சடையினர், வேதியர் பலர் வேதங்களை ஓத அவ்வொலி பல இடங்களிலும் ஒலிக்கும் நீர்வளம்மிக்க அன்பிலாலந்துறை இறைவராவார்.


பாடல் எண் : 5
நீடும் புனல்கங் கையும் தங் கமுடிமேல்
கூடும் மலையாள் ஒருபா கம்அமர்ந்தார்
மாடும் முழவம் அதிர மடமாதர்
ஆடும் பதிஅன் பில்ஆலந் துறையாரே.

         பொழிப்புரை :முடிமேல் பெருகிவரும் நீரை உடைய கங்கை நதியையும் தங்குமாறு அணிந்து, ஒருபாகமாகத் தம்மைத் தழுவிய மலைமகளைக் கொண்டுள்ள பெருமானார், பல இடங்களிலும் முழவுகள் ஒலிக்க, இளம் பெண்கள் பலர் நடனங்கள் புரியும் அன்பிலாலந்துறை இறைவராவார்.


பாடல் எண் : 6
நீறுஆர் திருமே னியர் ஊனம்இலார்பால்
ஊறுஆர் சுவை ஆகியஉம் பர்பெருமான்
வேறு ஆர் அகிலும் மிகுசந் தனம்உந்தி
ஆறுஆர் வயல்அன் பில்ஆலந் துறையாரே.

         பொழிப்புரை :திருநீறு அணிந்த திருமேனியரும், குற்றம் அற்றவர்களின் உள்ளங்களில் பொருந்திய சுவையாக இனிப்பவருமாகிய தேவர் தலைவர், வேறாகப் பெயர்ந்து வரும் அகில் மரங்களையும் உயர்ந்த சந்தன மரங்களையும் அடித்துவரும் ஆற்றுநீர் பாயும் வயல்களை உடைய அன்பிலாலந்துறை இறைவர் ஆவார்.


பாடல் எண் : 7
செடிஆர் தலையில் பலிகொண்டு இனிதுஉண்ட
படிஆர் பரமன் பரமேட் டிதன்சீரைக்
கடிஆர் மலரும் புனல்தூ விநின்று ஏத்தும்
அடியார் தொழும்அன் பில்ஆலந் துறையாரே.

         பொழிப்புரை :முடைநாற்றமுடைய தலையோட்டில் பலியேற்று அதனை இனிதாக உண்டருளும் தன்மையினைக் கொண்ட பரமனாகிய பரம்பொருள், மணம் பொருந்திய மலர்களையும் நீரையும் தூவி நின்று தன்புகழைத் துதிக்கும் அடியவர்களால் தொழப்படும் அன்பிலாலந்துறை இறைவராவார்.


பாடல் எண் : 8
விடத்தார் திகழும் மிடறன் நடமாடி
படத்து ஆர்அரவம் விரவும் சடைஆதி
கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரைஆர
அடர்த்தார் அருள்அன் பில்ஆலந் துறையாரே.

         பொழிப்புரை :ஆலகால விடக்கறை விளங்கும் கரிய கண்டத்தினரும், நடனமாடியும், படத்தோடு கூடிய அரவம் விரவும் சடையினை உடைய முதற்கடவுளும், கொடித்தேரைக் கொண்ட இலங்கையர் குலத்தலைவனாகிய இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்தவரும் ஆகிய சிவபிரான், அன்பர்கள் அருள் பெறுதற்குரிய இடமாக விளங்கும் அன்பில்ஆலந்துறை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளார்.


பாடல் எண் : 9
வணங்கிம் மலர்மேல் அயனும் நெடுமாலும்
பிணங்கி அறிகின்றி லர்மற் றும்பெருமை
சுணங்கும் முகத்துஅம் முலையாள் ஒருபாகம்
அணங்குந் நிகழ்அன் பில்ஆலந் துறையாரே.

         பொழிப்புரை :தாமரை மலர்மேல் விளங்கும் அயனும் திருமாலும், சிவபிரானின் பெருமையை வணங்கி அறியாது, தம்முட் பிணங்கித்தேடி அறியாதவராயினர். அப்பெருமான், சுணங்கு பொருந்திய முகப்பினை உடைய அழகிய தனத்தவளாய உமையம்மையை ஒருபாகத்தே அணங்காகக் கொண்டுள்ள அன்பிலாலந்துறை இறைவராவார்.


பாடல் எண் : 10
தறியார் துகில்போர்த்து உழல்வார் சமண்கையர்
நெறியா உணரா நிலைக்கே டினர்நித்தல்
வெறிஆர் மலர்கொண்டு அடிவீ ழும்அவரை
அறிவார் அவர்அன் பில்ஆலந் துறையாரே.

         பொழிப்புரை :தறிபோல ஆடையின்றி உள்ள சமணர்கள், நெய்த ஆடையினை உடலில் போர்த்து உழலும் புத்தர்கள், பரம் பொருளை முறையாக உணராததோடு, நிலையான கேடுகளுக்கு உரியவர்களாய் உள்ளனர். அவர்களைச் சாராது நாள்தோறும் மணமலர்களைச் சூட்டித் தம் திருவடிகளில் வீழ்ந்து தொழும் அடியவர்களை நன்கறிந்தருளும் பெருமானார் அன்பிலாலந்துறை இறைவராவார்.


பாடல் எண் : 11
அரவுஆர் புனல்அன் பில்ஆலந் துறைதன்மேல்
கரவா தவர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
பரவுஆர் தமிழ்பத்து இசைபா டவல்லார்போய்
விரவுஆ குவர்வா ன்இடைவீடு எளிதாமே.

         பொழிப்புரை :பாம்புகள் வாழும் நீர் வளம் உடைய அன்பில் ஆலந்துறை இறைவர்மேல் வஞ்சனையில்லாத மக்கள் வாழும் சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பரவிப்பாடிய இப்பத்துப் பாடல்களையும் இசையோடு பாட வல்லவர் மறுமையில் வானக இன்பங்களுக்கு உரியவர்கள் ஆவர். அவர்களுக்கு வீட்டின்பமும் எளிதாம்.
                                             திருச்சிற்றம்பலம்


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

     பழையாற வடதளி என்னும் திருத்தலத்தை வழிபட்டு, காவிரியின் இருகரையிலும் உள்ல திருத்தலங்களுக்குச் சென்று வணங்கிச் சாத்திய தமிழ்மாலைகளின் ஒன்று.....

பெரிய புராணப் பாடல் எண் : 301
பொங்கு புனல்ஆர் பொன்னியினில்
         இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்குஇறைஞ்சித்
         தமிழ்மா லைகளும் சாத்திப்போய்
எங்கும் நிறைந்த புகழாளர்
         ஈறுஇல் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருஆனைக்
         காவின் மருங்கு சென்று அணைந்தார்.

         பொழிப்புரை : பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும் நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண் விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.

         இத்திருப்பதியிலிருந்து திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப் பதிகளாவன:

1.    திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72) - திருநேரிசை.
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - திரு விருத்தம்.
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21) - திருக்குறுந்தொகை.
(ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89) – திருத்தாண்டகம்.

2.    திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13) - திருத்தாண்டகம்.

3.    திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71) - திருக்குறுந்தொகை.

4.    திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) - திருநேரிசை.

5.    திருப்பந்தணை நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10) - திருத் தாண்டகம்.

6.    திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90) – திருத்தாண்டகம்.

7.    திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73) – திருக்குறுந்தொகை.

8.    தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63)
- திருக்குறுந்தொகை.

9.    திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) - திருக்குறுந்தொகை.

10.திருக்கருவிலிக் கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69)
- திருக்குறுந்தொகை.

11.திரு அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61)
- திருக்குறுந்தொகை.

12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87) - திருத்தாண்டகம்.

13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76)
- திருக்குறுந் தொகை.

14.திருஅன்பில்ஆலந்துறை: `வானம் சேர்` (தி.5 ப.80)                                                                   -திருக்குறுந்தொகை

15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86) - திருத்தாண்டகம்.

16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி: `மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84)
- திருக்குறுந்தொகை.


திருநாவுக்கரசர் திருப்பதிகம்

5. 080  திருஅன்பிலாலந்துறை        திருக்குறுந்தொகை
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வானம் சேர்மதி சூடிய மைந்தனை,
நீநெஞ் சே,கெடு வாய்,நினை கிற்கிலை,
ஆன்அஞ்சு ஆடியை அன்பில்ஆலந்துறைக்
கோன்எம் செல்வனைக் கூறிட கிற்றியே.

         பொழிப்புரை : நெஞ்சே ! வானத்தைச் சேர்ந்த பிறை மதியைச் சூடிய மைந்தனாகிய சிவபெருமானை நினையும் வல்லமை உடையை இல்லை ; நீ கெடுவாய் , பஞ்சகவ்வியத் திருவபிஷேகம் கொள்வானாகிய திரு அன்பில் ஆலந்துறைக்கோனாம் எம் செல்வனைக் கூறிடும் வல்லமை பெறுவாயாக .


பாடல் எண் : 2
கார ணத்தர், கருத்தர், கபாலியார்,
வார ணத்துஉரி போர்த்த மணாளனார்,
ஆர ணப்பொருள் அன்பில்ஆலந்துறை
நார ணற்குஅரி யான்ஒரு நம்பியே.

         பொழிப்புரை : அன்பிலாலந்துறையில் திருமாலுக்கும் அரியாராகிய ஒப்பற்ற நம்பி , உலககாரணரும் , கருத்தில் உள்ளவரும் , பிரமகபாலம் கொண்ட கையினரும் , யானை உரிபோர்த்த மணாளரும் , வேதப்பொருள் ஆயவரும் ஆவர் .

  
பாடல் எண் : 3
அன்பின் ஆன்அஞ்சு அமைந்துஉடன் ஆடிய
என்பின் ஆனை உரித்துக் களைந்தவன்,
அன்பி லானை,அம் மானை,அள் ஊறிய
அன்பி னால்நினைந் தார்அறிந் தார்களே.

         பொழிப்புரை : அன்பினால் பஞ்சகவ்வியம் ஐந்துடன் திரு முழுக்குக் கொண்டவனும் , எலும்புடைய யானையின் உரியை உரித்துக்களைந்தவனும் ஆகிய , அன்பில் ஆலந்துறையில் உள்ள அம்மானை , நெஞ்சில் அள்ளூறி அன்பினால் நினைந்தவர்களே அறிந்தவர்கள் .


பாடல் எண் : 4
சங்கை உள்ளதும், சாவதும் மெய்,உமை
பங்க னார்அடி பாவியேன் நான்உய்ய
அங்க ணன்எந்தை அன்பில்ஆலந்துறைச்
செங்க ணார்அடிச் சேரவும் வல்லனே.

         பொழிப்புரை : உள்ளதும் ஐயம் ; சாவதேமெய் ; ஆதலால் உமை பங்கரும் , அழகிய கண்ணை உடையவரும் , எந்தையும் , அன்பிலாலந் துறையில் சிவந்த கண்ணை உடையவருமாகிய பெருமான் அடிகளைப் பாவியேன் நான் உய்யச் சேரவும் வல்லனே !.


பாடல் எண் : 5
கொக்குஇ றகர் குளிர்மதிச் சென்னியர்
மிக்க அரக்கர் புரம்எரி செய்தவர்
அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை
நக்கு உருவரும் நம்மை அறிவரே.

         பொழிப்புரை : கொக்கிறகை உடையவரும் , குளிர் மதிப் பிறையினைச் சடையிற் கொண்டவரும் , சினம்மிக்கு அரக்கர் முப்புரங்களை எரித்தல் செய்தவரும் , அக்கினை அரைக்கசைத்தவருமாகிய அன்பிலாலந்துறையில் திகம்பர உருவினராம் இறைவர் நம்மை அறிவர் .


பாடல் எண் : 6
வெள்ளம் உள்ள விரிசடை நந்தியைக்
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார்,
அள்ள லார்வயல் அன்பில் ஆலந்துறை
உள்ள வாறுஅறி யார்சிலர் ஊமரே.

         பொழிப்புரை : கங்கையாகிய வெள்ளம் உள்ள விரிசடையோடு கூடிய நந்தியாகியபெருமானைக் கள்ளமுள்ள மனத்தவர் காணும் திறமை இல்லாதவர்கள் ; சேறு நிறைந்த வயலை உடைய அன்பிலாலந் துறையின்கண் உள்ளவாறு சில ஊமையர் அறியார் .


பாடல் எண் : 7
பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும்
உறவு எலாம்சிந்தித்து உன்னி உகவாதே
அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மறவா தேதொழுது ஏத்தி வணங்குமே.

         பொழிப்புரை : பிறவியாகிய பொய்ப்பிணக்கில் அழுந்தினாலும் உறவெல்லாவற்றையும் சிந்தித்து எண்ணி மகிழாமல் , அறவடிவாகிய எம்பெருமானது அன்பிலாலந்துறையை மறவாது தொழுது ஏத்தி வணங்குவீராக .


பாடல் எண் : 8
நுணங்கு நூல்அயன் மாலும் இருவரும்
பிணங்கி எங்கும் திரிந்துஎய்த்தும் காண்கிலா
அணங்கன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
வணங்கும், நும்வினை மாய்ந்துஅறும் வண்ணமே.

         பொழிப்புரை : நுண்ணிய நூல் பல கற்ற பிரமனும் திருமாலுமாகிய இருவரும் மாறுபட்டு எங்கும் திரிந்து இளைத்தும் காணும் திறமையற்றனர் ; அணங்கினை ஒருபாகம் உடைய இறைவன் அன்பிலாலந்துறையை நும் வினைகள் மாய்ந்து அறும் வண்ணம் வணங்குவீராக .


பாடல் எண் : 9
பொய்எ லாம்உரைக் கும்சமண் சாக்கியக்
கையன் மார்உரை கேளாது எழுமினோ
ஐயன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மெய்யன் சேவடி ஏத்துவார் மெய்யரே.

         பொழிப்புரை : எல்லாப் பொய்யும் உரைக்கும் சமணரும் , சாக்கியருமாகிய சிறுமை உடையவர்கள் பேச்சைக் கேளாது எழுமின் ; ஐயனும் எம்பெருமானும் அன்பிலாலந்துறையில் எழுந்தருளியுள்ள மெய்யனுமாகிய இறைவன் சேவடி ஏத்துவார் மெய்யர் ஆவர் .


பாடல் எண் : 10
இலங்கை வேந்தன் இருபது தோள்இற்று
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்
அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
வலங்கொள் வாரை,வா னோர்வலம் கொள்வரே.

         பொழிப்புரை : இலங்கை அரசனாம் இராவணன் இருபது தோள்களும் இற்றுச் சுழலும்படியாகத் திருக்கயிலை மாமலை மேல் திருவிரலை ஊன்றியவன் ஆகிய கொன்றைமாலை யணிந்த பெருமானுடைய அன்பிலாலந்துறையை வலங்கொண்டு வழிபடுவாரைத் தேவர்கள் வலம் கொண்டு வணங்கிப் போற்றுவர் .


                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

நல்லவரால் நன்மை

  “பாலினொடு தேன்வந்து சேரில்ருசி அதிகமாம்,     பருகுநீர் சேரின் என்னாம்’ பவளத்தி னிடைமுத்தை வைத்திடிற் சோபிதம்,     படிகமணி கோக்கின்என்னாம்;...