திருப் பழுவூர்
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
அரியலூர் - திருச்சி சாலை வழித்தடத்தில்
அரியலூரிலிருந்து சுமார் 12 கி.மி. தொலைவில்
கீழப்பழுவூர் உள்ளது.
கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து
நிலையத்தில் இருந்து மிக அருகில் இத் திருக்கோயில் இருக்கிறது. சாலையோரத்தில்
கோயில் வளைவு உள்ளது.
திருச்சியிலிருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் நேரடிப் பேருந்து
வசதிகள் உள்ளன.
இறைவர்
: வட மூலநாதர் (வடம்-ஆலமரம்), யோகவனேசுவரர்,ஆலந்துறையார்
இறைவியார்
: அருந்தவ நாயகி
தல
மரம் : ஆல மரம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - முத்தன் மிகுமூவிலை
பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும்.
இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது. இவ்வூர்
மேலப்பழுவூர், கீழைப்பழுவூர் என்ற
இரு பிரிவாக உள்ளது. கீழப்பழுவூரில் தான் பாடல் பெற்ற திருக்கோயில் உள்ளது.
ஒரு முகப்பு வாயிலுடனும், அதையடுத்து கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடனும் காட்சி
அளிக்கிறது. முகப்பு வாயிலின் இருபுறமும் நந்திதேவர் வீற்றிருக்கிறார். இராஜகோபுரத்தைக்
கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.
வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி
உள்ளது. அம்பாள் சந்நிதி ஒரு சுற்றைக் கொண்டு தனிக் கோயிலாகவே காணப்பெறுகிறது.
அம்பாள் இங்கு ஸ்ரீயோகதபஸ்வினி என்னும் திருநாமம் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி
தருகிறாள். தமிழில் இந்த அம்பாளுக்கு அருந்தவ நாயகி என்று பெயர். யோகக் கலையையும் திருமண வரத்தையும் ஒருசேர
அளிப்பவள் இவள். அகிலாண்ட நாயகியாம் அன்னை பார்வதிதேவி ஆதியில் தவம் புரிந்த
புண்ணிய திருத்தலம் திருப்பழுவூர். இதன் காரணமாக இத்தலம் யோக வனம் எனப்பட்டது.
சுவாமியை தரிசிக்க திறந்தவெளி மண்டபம்
தாண்டி உள்ள ஒரு வாயில் வழியே உள்ளே சென்றால் மகா மண்டபம் உள்ளது. அதன் இருபுறமும்
உள் பிராகாரத்திற்கான விசாலமான வழிகள் உள்ளன. அடுத்து, இடைமண்டபமும் கருவறையும் அமைந்துள்ளன.
கருவறை வாயிலின்மேல் சயனக்கோலத்தில் திருமாலின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக
வடிக்கப்பட்டுள்ளது. கருவறையுள் கருணாமூர்த்தியாய் மூலவர் ஸ்ரீவடமூலநாதர்
அருள்பாலிக்கின்றார். புற்று வடிவாய், மண்
லிங்கமாக சதுர ஆவுடையாரின் நடுவே அபூர்வ தோற்றத்துடன் அருட்காட்சி தருகிறார்.
புற்று மண்ணால் ஆன சிவலிங்கமானதால் இவருக்கு அபிஷேகத்தின்போது குவளை
சாற்றப்படுகின்றது. மிகவும் அரிய தரிசனம் இது.
இடை மண்டபத்தின் வலப்புறத்தில், அன்னை இங்கு அருந்தவம் புரிந்ததன்
அடையாளமாக தவக்கோலத்தில் இருக்கும் தவசம்மன் ஸ்தாபிக்கப்பட்டுள்ளாள். கருவறை
சுற்றில் சப்த ரிஷிகள், உமைபங்கர்,சப்தமாதா, காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, பஞ்சபூத லிங்கங்கள், கஜலட்சுமி, கால சம்ஹார மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வச்சிலைகள்
நிறுவப்பட்டுள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
திருக்கோயிலுக்கு வெளியே தல மரமான
ஆலமரம் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. தலதீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும்
கொள்ளிடமும் விளங்குகின்றன.
பரசுராமர், தந்தை உத்தரவிட்டதின் பேரில் தன் தாயைக்
கொன்ற பழிதீரும் பொருட்டு வழிபட்ட தலம் இதுவாகும். மேலப் பழுவூரில் உள்ள மற்றொரு
சிவாலயத்தில் (பசுபதீஸ்வரம்) ஜமதக்னி முனிவருக்கு சிலா உருவம் உள்ளது. பங்குனியில்
நடைபெறும் விழாவில் மூன்றாம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள ஜமத்கனி
முனிவருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "துன்னுகின்ற நாய்க்கும்
கடையேன் நவை தீர, நல் கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே" என்று போற்றி உள்ளார்.
காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 231
அண்ண
லார்திரு அரத்துறை அடிகளை வணங்கி,
நண்ணு
பேர்அரு ளால்விடை கொண்டுபோய், நடங்கொண்டு
உள்நி
றைந்தபூங் கழலினை உச்சிமேல் கொண்டே,
வெண்நி
லாமலர் நித்திலச் சிவிகைமேல் கொண்டார்.
பொழிப்புரை : பெருமையுடைய
திருவரத்துறை இறைவரை வணங்கி, பொருந்திய அவரது
பெருந் திருவருளினால் விடைபெற்றுக் கொண்டு சென்று, உள்ளத்தில் ஆனந்தக் கூத்தியற்றி
ஆட்கொண்டருளிவரும் அழகிய திருவடிகளைத் தலைமீது கொண்ட வண்ணம், வெண்மையான நிலவு ஒளி வீசும் முத்துச் சிவிகையின்
மீது இவர்ந்தருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 232
சிவிகை
முத்தினில் பெருகுஒளி திசைஎலாம் விளக்க,
கவிகை
வெண்மதிக் குளிர்ஒளி கதிர்செய்வான் கலப்ப,
குவிகை
மேல்கொண்டு மறையவர் குணலையிட்டு ஆட,
புவி
கைம்மாறு இன்றிப் போற்றவந்து அருளினார் போந்தார்.
பொழிப்புரை : சிவிகையில்
பதிக்கப்பெற்ற முத்துக்களினின்றும் பெருகும் ஒளி எத்திசைகளையும் விளக்கவும், மேலே கவித்த முத்துக் குடையின்
வெண்மையான மதிபோன்ற ஒளி, கதிரவனின் ஒளி
பரவுகின்ற வானத்தில் கலக்கவும்,
குவித்த
கைகளைத் தலை மேற்கொண்டு தம்மைச் சூழ்ந்துவரும் அந்தணர்கள் மகிழ்ச்சி மீதூர்வால்
குணலைக் கூத்து இட்டு மகிழ்ந்து ஆடிவரவும், கைம்மாறு வேண்டாக் கடப்பாட்டுடன் உலகைக்
காப்பதற்கு என்றே தோன்றிய பிள்ளையார் எழுந்தருளினர்.
பெ.
பு. பாடல் எண் : 233
மறை
முழங்கின, தழங்கின வண்தமிழ், வயிரின்
குறை
நரன்றன, முரன்றன வளைக்குலம், காளம்
முறை
இயம்பின, இயம்பல ஒலித்தன, முரசப்
பொறை
கறங்கின, பிறங்கின போற்றுஇசை
அரவம்.
பொழிப்புரை : மறைகள் முழுங்கின; வளமையுடைய தமிழ் மறைகள் ஒலித்தன; பல்வேறு வகையான ஊதுகொம்புகளின் ஒலிகள்
ஒலித்தன; சங்கின் கூட்டங்கள்
முழங்கின; எக்காளங்கள்
பிள்ளையாரின் முறையான மெய்க் கீர்த்திகளைக் கூறி ஒலித்தன; மற்றும் பலவகை இயங்களும் ஒலித்தன; முரசுபோன்ற பெரிய இயங்கள் பலவும்
ஒலித்தன; அடியார்தம்
போற்றியுரைகளின் ஒலி, இவ்வொலிகளுக்
கெல்லாம் மேலாக ஒலித்தது.
பெ.
பு. பாடல் எண் : 234
உடைய
பிள்ளையார் வரும்எல்லை உள்ளஅப் பதியோர்
புடை
இரண்டினும் கொடியொடு பூந்துகில் விதானம்
நடைசெய்
காவணம் தோரணம் பூகநல் கதலி
மிடையும்
மாலைகள் நிறைகுடம் விளக்கொடு நிரைத்தார்.
பொழிப்புரை : ஆளுடைய பிள்ளையார்
வரும் இடங்களில் எல்லாம், ஆங்காங்குள்ள
ஊரவர்கள் இருமருங்கிலும் கொடிகளுடன் அழகிய துகில்களையும், நடைக்காவணங்களையும், தோரணங்களை, பாக்கு, வாழை, நெருங்கிய மாலைகள் போன்ற இவற்றால்
செய்யும் அணிவகைகளையும், விளக்குடன் நீர்நிறை
குடங்களையும் நிரல்பட வைத்து எதிர்கொண்டார்கள்.
பெ.
பு. பாடல் எண் : 235
அனைய
செய்கையால் எதிர்கொளும் பதிகள்ஆ னவற்றின்
வினை
தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப்
புனையும்
வண்தமிழ் மொழிந்துஅடி பணிந்துபோந்து அணைந்தார்
பனை
நெடுங்கை மா உரித்தவர் மகிழ்பெரும் பழுவூர்.
பொழிப்புரை : அவ்வகையில் தம்மை
எதிர்கொண்ட திருப்பதிகளில் வினைவயத்தால் வரும் பிறவிகளை நீக்கியருளும் இறைவரின்
திருக்கோயில்களுக்குச் சென்று புனையும் வளமை கொண்ட தமிழ்ப் பதிகங்களைப் பாடி, இறைவரின் திருவடிகளை வணங்கிச் சென்று, பனை போன்ற நீண்ட கையையுடைய யானையை
உரித்த சிவபெருமான் வீற்றிருக்கும் `திருப்பழுவூர்' என்ற திருப்பதியைப் பிள்ளையார்
அடைந்தார்.
எதிர் கொண்ட பதிகள் எவை
எனத் தெரிந்தில.
பெ.
பு. பாடல் எண் : 236
அங்குஅணைந்து
இளம்பிறை அணிந்த சென்னியார்
பொங்குஎழில்
கோபுரம் தொழுது புக்கபின்
துங்கநீள்
விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்
பங்கயச்
சேவடி பணிந்து பாடுவார்.
பொழிப்புரை : அங்குச் சென்று
பிறைச் சந்திரனைச் சூடிய திருச்சடையையுடைய இறைவரின் பெருகும் அழகுடைய திருக்
கோபுரத்தை வணங்கிக் கோயிலுள் புகுந்து, பின்பு, பெரிய விமானத்தைச் சூழ்ந்து வலம் வந்து, திருமுன்பு சென்று, தாமரை போன்ற திருவடிகளைத் தொழுது
பாடுவாராய்,
பெ.
பு. பாடல் எண் : 237
மண்ணினில்
பொலிகுல மலையர் தாம்தொழுது
எண்இல்சீர்ப்
பணிகள்செய்து ஏத்தும் தன்மையில்
நண்ணிய
வகைசிறப் பித்து நாதரைப்
பண்ணினில்
திகழ்திருப் பதிகம் பாடினார்.
பொழிப்புரை : இந்நிலவுலகில்
சிறந்து விளங்கும் அந்தணர் குலத்தில் வந்த மலையாளர்கள் தொழுது, எண்ணற்ற பல சிறந்த பணிகளைச் செய்து
போற்றி வரும் பான்மையைச் சிறப்பித்து, இறைவரைப்
போற்றிப் பண் இசையால் விளங்கும் திருப்பதிகத்தைப் பாடினார்.
இவ்விடத்து அருளிய
பதிகம் `முத்தன்மிகு
மூவிலைநல்' (தி.2 ப.34) என்ற தொடக்கம் உடைய இந்தளப் பண்ணமைந்த
பதிகம் ஆகும். இப்பதிகத்தில் 4,
5, 7, 9, 11
ஆகிய பாடல்களில் மலையாளர்கள் வழிபட்டமை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. `அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும், பந்தமலிகின்ற பழுவூர் அரனை' (தி.2 ப.34) எனவரும் திருக்கடைக்காப்பில் இவர்களின்
பணி தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.
2.034 திருப்பழுவூர் பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
முத்தன்,மிகு மூவிலைநல் வேலன்,விரி நூலன்,
அத்தன்,எமை ஆள்உடைய
அண்ணல்இடம் என்பர்
மைத்தழை
பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு
சித்தர்பயில் கின்றபழு வூரே.
பொழிப்புரை :இயல்பாகவே பாசங்களில்
நீங்கியவன், மூவிலை வடிவானவேலை
உடையவன், விரிந்த வேதங்களை
அருளியவன், தலைவன். எம்மை ஆளாக
உடைய முதல்வன். அவனது இடம் கரிய தழைகளை உடைய பெரிய பொழிலின் மணம் கமழ்வதும், பத்தர் சித்தர் பயில்வதுமான பழுவூர்
என்பர்.
பாடல்
எண் : 2
கோடலொடு
கோங்குஅவை குலாவுமுடி தன்மேல்
ஆடுஅரவம்
வைத்தபெரு மானதுஇடம் என்பர்,
மாடமலி
சூளிகையில் ஏறிமட வார்கள்
பாடல்ஒலி
செய்யமலி கின்றபழு வூரே.
பொழிப்புரை :வெண்காந்தள் மலரும்
கோங்கமலரும் சூடிய, முடி மேல் ஆடும்
அரவினையும் அணிந்துள்ள, பெருமானின் இடம், பெண்கள் மாடங்களின் உச்சியில்
ஏறிப்பாடும் ஒலி நிறைந்துள்ள பழுவூர் என்பர்.
பாடல்
எண் : 3
வாலிய
புரத்தில்அவர் வேவவிழி செய்த
போலிய
ஒருத்தர்,புரி நூலர்இடம்
என்பர்,
வேலியின்
விரைக்கமலம் அன்னமுக மாதர்
பால்என
மிழற்றிநடம் ஆடுபழு வூரே.
பொழிப்புரை :பெரிய முப்புரங்களைத்
தமது இல்லமாகக் கொண்ட அவுணர் வெந்தழியுமாறு கண் விழித்த கோலத்தைக் கொண்ட ஒப்பற்றவரும்,முப்புரி நூலணிந்தவருமான சிவபெருமானது
இடம், வயல்களில் முளைத்த
தாமரைமலர் போன்ற முகத்தினராய மகளிர் பால் போல இனிய சொற்களால் பாடல்பாடி நடம்
புரியும் பழுவூர் என்பர்.
பாடல்
எண் : 4
எண்ணுமொர்
எழுத்தும் இசை யின்கிளவி தேர்வார்,
கண்ணுமுதல்
ஆயகட வுட்குஇடமது என்பர்,
மண்ணின்மிசை
ஆடிமலை யாளர்தொழுது ஏத்திப்
பண்ணின்ஒலி
கொண்டுபயில் கின்ற பழுவூரே.
பொழிப்புரை :எண், எழுத்து, இசை இவற்றை ஆராய்வார் கருதும்
முதற்பொருளாய கடவுளின் இடம், மலையாள அந்தணர்
உலகில் பாடியாடித் தொழுது ஏத்திப்பாடி வழிபடும் பழுவூர் என்பர்.
பாடல்
எண் : 5
சாதல்புரி
வார்சுடலை தன்னில்நட மாடும்
நாதன்,நமை ஆளுடைய
நம்பன்இடம் என்பர்,
வேதமொழி
சொல்லிமறை யாளர்இறை வன்தன்
பாதம்அவை
ஓதநிகழ் கின்றபழு வூரே.
பொழிப்புரை :இறந்தவர்களை
எரிக்கும் சுடலையில் நடனமாடும் நாதனும் நம்மை ஆளாக உடைய நம்பனும் ஆகிய சிவபெருமானது
இடம் மறையாளர் வேதங்களை ஓதி இறைவனின் திருவடிப் பெருமைகளைப் பாடும் பழுவூர்
என்பர்.
பாடல்
எண் : 6
மேவுஅயரும்
மும்மதிலும் வெந்துஅழல் விளைத்து,
மாஅயர
அன்றுஉரிசெய் மைந்தன்இடம் என்பர்,
பூவையை
மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள்
கற்பொடு பொலிந்தபழு வூரே.
பொழிப்புரை :தங்கள் மீது
மேவுதலால் துயர் செய்வனவாகிய மும்மதில்களையும் வெந்தழலால் அழித்தும், யானையை அயருமாறு செய்து அதன் தோலை
உரித்துப் போர்த்தும் வீரம் விளைவித்த சிவபிரானது இடம், நாகணவாய்ப் பறவைக்கு இறைவன் புகழைக்
கற்பித்துப் பேசவைக்கும் பெண்கள் கற்பொடு விளங்கும் பழுவூர் என்பர்.
பாடல்
எண் : 7
மந்தணம்
இருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை
யாடுசிவ லோகன்இடம் என்பர்,
அந்தணர்கள்
ஆகுதியில் இட்டஅகில் மட்டுஆர்
பைந்தொடிநன்
மாதர்சுவடு ஒற்றுபழு வூரே.
பொழிப்புரை :இரகசிய ஆலோசனைகளுடன்
மாமனாகிய தக்கன் செய்த வேள்வி அழியுமாறு செய்த சிவபெருமானது இடம், அந்தணர்கள்செய்த வேள்விகளால் அகிலின்
மணம் கமழ்வதும் அணிகலன்கள் அணிந்த அழகிய பெண்களின் காலடிச் சுவடுகள் உடையதுமான
பழுவூர் என்பர்.
பாடல்
எண் : 8
உரக்கடல்
விடத்தினை மிடற்றில்உற வைத்து,அன்று
அரக்கனை
அடர்த்துஅருளும் அப்பன்இடம் என்பர்,
குரக்கினம்
விரைப்பொழிலின் மீதுகனி உண்டு
பரக்குறு
புனல்செய்விளை யாடுபழு வூரே.
பொழிப்புரை :வலிய கடலிடை எழுந்த
நஞ்சினை மிடற்றிடை வைத்துள்ளவனும்,
அக்காலத்தில்
இராவணனை அடர்த்து அருள் செய்ததந்தையும் ஆகிய சிவபிரானது இடம், குரங்குகள் மணமுடைய பொழிலின் மீது
ஏறிக்கனிவகைகளை உண்டு நீர் பரவிய வயல்களில் விளையாடும் பழுவூர் என்பர்.
பாடல்
எண் : 9
நின்றநெடு
மாலும்ஒரு நான்முகனும் நேட,
அன்றுதழ
லாய்நிமிரும் ஆதிஇடம் என்பர்,
ஒன்றும்இரு
மூன்றும்ஒரு நாலும் உணர்வார்கள்
மன்றினில்
இருந்துஉடன் மகிழ்ந்தபழு வூரே.
பொழிப்புரை :உயர்ந்து நின்ற
திருமாலும் நான்முகனும் தேடுமாறு அன்று அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த தலைவனது இடம், சிவபரம் பொருளாகிய ஒருவனையும், நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும்
உணர்ந்தவர்கள் பொது இடங்களிலிருந்து மகிழ்ந்துறையும் ஊராகிய பழுவூர் என்பர்.
பாடல்
எண் : 10
மொட்டைஅமண்
ஆதர்,துகில் மூடுவிரி
தேரர்,
முட்டைகள்
மொழிந்தமுனி வான்தன்இடம் என்பர்,
மட்டைமலி
தாழைஇள நீர்அதுஇசை பூகம்
பட்டையொடு
தாறுவிரி கின்றபழு வூரே.
பொழிப்புரை :முண்டிதமான தலையை
உடைய அமணர்களாகிய அறிவிலிகளும் ஆடையைவிரித்து உடலைப் போர்த்த தேரர்களும் ஆகிய
குற்றமுடையோர் கூறுவனவற்றை ஏலாத இறைவனது இடம், மட்டைகள் நிறைந்த தென்னையினது
இளநீர்களும் கமுகமரங்களின் பாக்குப் பட்டைகளோடு கூடிய பாக்குக் குலைகளும் நிறைந்த
பழுவூர் என்பர்.
பாடல்
எண் : 11
அந்தணர்க
ளானமலை யாளர்அவர் ஏத்தும்
பந்தமலி
கின்றபழு வூர்அரனை ஆரச்
சந்தமிகு
ஞானம்உணர் பந்தன்உரை பேணி
வந்தவணம்
ஏத்தும்அவர் வானம்உடை யாரே.
பொழிப்புரை :மலையாள அந்தணர்கள்
ஏத்தும் அருளுறவு நிறைந்த பழுவூர் இறைவனை ஞானசம்பந்தன் மனம் ஆரச்சந்த இசையால்
பாடிய இப்பாடல்களை விரும்பித்தமக்கு இயன்ற இசையோடு ஏத்தித் தொழுபவர் சிவலோகம் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment