திருப் புள்ளிருக்குவேளூர்


திருப் புள்ளிருக்குவேளூர்
(வைத்தீசுவரன் கோயில்)


     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

         தேவாரப் பாடல்களில் திருபுள்ளிருக்குவேளூர் என்று குறிப்பிடப்பட்டுள்ள இத்திருத்தலம் தற்போது வைத்தீசுவரன்கோயில் என்று வழங்கப்படுகிறது.

     இத்திருத்தலம் சென்னையில் இருந்து இரயில் பாதையில் 270 கி.மி. தூரத்தில் இருக்கிறது.

     சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மி. தூரத்தில் உள்ளது.

     மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீசுவரன்கோயிலுக்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரியது.


இறைவர்              : வைத்தியநாதர்

இறைவியார்           : தையல்நாயகி

முருகன்              : செல்வமுத்துக்குமாரர்

தல மரம்             : வேம்பு

தீர்த்தம்               : சித்தாமிர்த குளம்

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - கள்ளார்ந்த பூங்கொன்றை,
                                      2. அப்பர் - 1. வெள்ளெருக்கரவம் விரவும்,                                                        2. ஆண்டானை அடியேனை


        
திருமுறைகளில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடனும், இன்று வைத்தீசுவரன்கோயில் என்றும் விளங்கும் இத்திருத்தலம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற தலங்களில் மிகச் சிறப்பு பெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும்.

     சடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம் (இருக்கு), முருகவேள் (வேள்), சூரியனாம் (ஊர்) ஆகிய நால்வரும் இறைவனை வழிபட்ட திருத்தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

     பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோயிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டி தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோவிலில் கிடைக்கும் திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.

         நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும், மேற்கிலும் ராஜகோபுரங்களுடனும், ஐந்து பிராகாரங்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் உள்ள 7 நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்கு காணப்படும் வேப்ப மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இந்த மரத்தினடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார். எதிரில் வீரபத்திரர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சந்நிதி. அடுத்து இடப்பால் சித்தாமிர்தகுளம் உள்ளது. மேற்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார். சுவாமி சந்நிதிக்கு நேரில் இரு கொடிமரங்கள் உள்ளன.

     சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள் வல்லானாகிய வைத்தியநாதப் பெருமானைக் கண்டு வணங்கி அவரின் பேரருளைப் பெற நாம் வாழ்வில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

         இறைவி தையல்நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் சந்நிதிக்கு அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

     அசுரன் சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்ற தலம் இதுவாகும். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமராசுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேட பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியன நடைபெறும். அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும்.

         தெற்குப் பிரகாரத்தில் சடாயு குண்டம் என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

         வடக்குப் பிரகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது. வீரபத்திரர், அண்ணபூரணி, தட்சினாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, நடராஜர் மற்றும் துர்க்கை சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. நடராச சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும், காரைக்காலம்மையாரும் உள்ளனர். ரிக் முதலிய நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவநாதர் முதலிய பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும், சஹஸ்ரலிங்கமும் வரிசையாகவுள்ளன.

         இத்தலம் நவக்கிரகங்ளில் அங்காரகனுக்கு (செவ்வாய்) உரிய தலமாகும். செவ்வாய் இத்தலத்தில் மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால் பக்தர்கள் பெருமளவில் இத்தலத்திற்கு வருகை தருகின்றனர்.

     இத்தலத்தில் நவகிரங்களுக்கு வலிமை இல்லை. நவகிரகங்கள் மூலவர் வைத்தியநாதசுவாமி கருவறைக்குப் பின்புறம் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம், ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர். இத்தலத்தில் மூலவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கோலக்கா உள் இருக்கும் புள் இருக்கும் ஓதும் புகழ் வாய்ந்த புள்ளிருக்கும் வேளூர்ப் புரிசடையாய்" என்று போற்றி உள்ளார்.

         காலை 5-30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 286
போற்றிய காதல் பெருகப்
         புள்ளிருக் கும்திரு வேளூர்,
நால்தடந் தோள்உடை மூன்று
         நயனப்பிரான் கோயில் நண்ணி,
ஏற்றஅன்பு எய்தவ ணங்கி,
         இருவர்புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி,
         அஞ்சொல் பதிகம் அணிந்தார்.

         பொழிப்புரை : உள்ளத்தெழும் விருப்பம் மேன்மேலும் மிக, `திருப்புள்ளிருக்கு வேளூரில்' நான்கு பெருந்தோள்களையுடைய முக்கண்ணுடைய பெருமான் வீற்றிருக்கும் கோயிலை அடைந்து, உரிய பேரன்பு பொருந்த வணங்கி, பறவையரசர்களான சம்பாதி சடாயு என்பவர்கள் வணங்கிச் செய்த வழிபாட்டின் பெருமையைப் பாராட்டிப் போற்றி, அழகான சொற்களால் அமைந்த திருப்பதிகத்தை இறைவர்க்கு அணிவித்தார்.

         குறிப்புரை : இத்திருப்பதியில் அருளிய பதிகம் `கள்ளார்ந்த' (தி.2 ப.43) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

     புள் - சம்பாதி, சடாயு எனும் பறவைகள். இருக்கு - மறைகள். வேள் - முருகன். இவர்கள் வழிபட்ட பதியாதலின் இப்பெயர் பெற்றது. முதற் பத்துப் பாடல்களிலும் இப்பறவைகள் ஆற்றிய இறைவழிபாட்டுச் சிறப்பும், இராவணனுடன் செய்த போர்ச் சிறப்பும் குறிக்கப்பட்டுள்ளன. `யோசனை போய்ப் பூக்கொணர்ந்து அங்கு, பூசனை செய்து இனிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே'! என வரும் பகுதி அவர்களின் ஆழ்ந்த பத்திமையை விளக்குவது ஆகும்.


2.043 திருப்புள்ளிருக்குவேளூர்        பண் - சீகாமரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கள்ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், கதிர்மதியம்,
உள்ளஆர்ந்த சடைமுடிஎம் பெருமானார் உறையும்இடம்,
தள்ஆய சம்பாதி சடாய்என்பார் தாம்இருவர்
புள்ஆனார்க்கு அரையன்இடம், புள்ளிருக்கு வேளூரே.

         பொழிப்புரை :தேன் நிறைந்த அழகிய கொன்றைமலர், கடு நாற்றத்தை உடைய ஊமத்தை மலர், ஒளி பொருந்திய திங்கள் ஆகியன உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்கு வேளூர்.


பாடல் எண் : 2
தையலாள் ஒருபாகம், சடைமேலாள் அவளோடும்,
ஐயம் தேர்ந்து உழல்வார்ஓர் அந்தணனார் உறையும்இடம்,
மெய்சொல்லா இராவணனை மேல்ஓடி ஈடுஅழித்துப்
பொய்சொல்லாது உயிர்போனான், புள்ளிருக்கு வேளூரே.

         பொழிப்புரை :ஒருபாகத்தே விளங்கும் தையல்நாயகியோடும் சடையின் மேல் பொருந்திய கங்கை நங்கையோடும் சென்று ஐயம் ஏற்று உழலும் அழகிய கருணையாளனும், உண்மை புகலாத இராவணனைப் பறந்து சென்று வலிமையை அழித்து அவனால் தாக்குண்டு, இராமனுக்கு நடந்த உண்மைகளைப் புகன்று உயிர்விட்ட சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர்.


பாடல் எண் : 3
வாசநலம் செய்துஇமையோர் நாள்தோறும் மலர்தூவ
ஈசன்எம் பெருமானார் இனிதாக உறையும்இடம்,
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்து, அங்கு ஒருநாளும் ஒழியாமே
பூசனைசெய்து இனிதுஇருந்தான், புள்ளிருக்கு வேளூரே.

         பொழிப்புரை :தேவர்கள் தலவாசம் செய்து நாள்தோறும் தீர்த்த நீராடி நறுமலர்தூவி வழிபட விளங்கும் ஈசனும், எம் தலைவனும் யோசனை தூரம் சென்று மலர்பறித்து வந்து ஒருநாளும் தவறாமல் சம்பாதியால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் இனிதாக உறையும் இடம் புள்ளிருக்குவேளூர்.


பாடல் எண் : 4
மாகாயம் பெரியதுஒரு மான்உரிதோல் உடைஆடை,
ஏகாயம் இட்டுஉகந்த எரிஆடி உறையும்இடம்,
ஆகாயம் தேரோடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருதுஅழித்தான், புள்ளிருக்கு வேளூரே.

         பொழிப்புரை :பெரிய தனது திருமேனியில் பெரியதொரு யானையினை உரித்து அதன்தோலை உடைவகையில் ஒன்றான மேலாடையாகப் போர்த்து மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும், சீதையைக் கவர்ந்து வானில் தேரோடு விரைந்து சென்ற இராவணனோடு போரிட்டுத் தாக்கி அவனைப் போகாதவாறு செய்ய முயன்ற சடாயுவால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.


பாடல் எண் : 5
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலும்இடம்,
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான், புள்ளிருக்கு வேளூரே.

         பொழிப்புரை :வேதகீதங்களை மிகுதியாகப் பாடும் அடியார்கள் கூடியிருந்து திருவடிகளைத் தொழுமாறு விளங்கி நிற்கும் ஒளிவடிவினனும், வெண்மணலைச் சிவலிங்கமாகத் திரட்டி வேதமந்திரங்களை ஓதி சடாயுவால் ஞானத்தோடு வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்குவேளூர்.


பாடல் எண் : 6
திறம்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறம்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமரும்இடம்,
மறம்கொண்டங்கு இராவணன்தன் வலிகருதி வந்தானைப்
புறம்கண்ட சடாயென்பான், புள்ளிருக்கு வேளூரே.

         பொழிப்புரை :சைவத்திறம் மேற்கொண்ட அடியவர்மீது தீவினைகளால் வரும் துன்பங்கள் வாராமே செய்பவனும், சிவதன்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும் தனது வீரத்தையே பெரிதெனக்கருதி வந்த இராவணனை மறத்தொடு போரிட்டுப் புறங்கண்ட சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் அமரும் இடம் புள்ளிருக்குவேளூர்.


பாடல் எண் : 7
அத்தியின் ஈர்உரிமூடி, அழகாக அனல்ஏந்தி,
பித்தரைப்போல் பலிதிரியும் பெருமானார் பேணும்இடம்,
பத்தியினால் வழிபட்டுப் பலகாலம் தவஞ்செய்து
புத்திஒன்ற வைத்துஉகந்தான், புள்ளிருக்கு வேளூரே.

         பொழிப்புரை :யானையை உரித்த தோலால் உடலை மூடிக் கொண்டு அழகாகக் கையில் அனலை ஏந்தி, பித்தர் போலப்பலியேற்றுத் திரியும் பெருமானும், பத்தியோடு வழிபட்டுப் பலகாலம் தவஞ்செய்து தன் அறிவை இறை உணர்வொடு பொருந்தவைத்து மகிழ்ந்த சம்பாதியால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் இடம் புள்ளிருக்குவேளூர்.


பாடல் எண் : 8
பண்ஒன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்இன்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவும்இடம்,
எண்இன்றி முக்கோடி வாழ்நாளது உடையானைப்
புண்ஒன்றப் பொருதுஅழித்தான், புள்ளிருக்கு வேளூரே.

         பொழிப்புரை :பண்பொருந்த இசைபாடும் அடியவர்கள் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி மிடற்றோனும், கணக்கில் அடங்காத மூன்று கோடி ஆண்டுகளை வாழ்நாளாகப் பெற்ற இராவணனொடு போரிட்டுப் புண்படும்படி செய்து அவன் வலிமையை அழித்த சடாயுவால் பூசிக்கப்பட்டவனுமாகிய சிவபிரான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர்.


பாடல் எண் : 9
வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்துஅவியச்
சாதித்த வில்லாளி, கண்ணாளன் சாரும்இடம்,
ஆதித்தன் மகன்என்ன அகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான், புள்ளிருக்கு வேளூரே.

         பொழிப்புரை :தன்னோடு பேதம் உற்ற அசுரர்களின் முப்புரங்களும் கொடிய கணையால் வெந்தவியுமாறு செய்த வில்லாளியும், கருணைக்கண்ணாளனும், ஆதித்தன் மகனாய் அகன்ற இந்நிலவுலக மக்களோடு பறவைவடிவாய்த் தோன்றி அறநெறி போதித்து வந்த சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபெருமான் சாரும்இடம் புள்ளிருக்குவேளூர்.


பாடல் எண் : 10
கடுத்துவரும் கங்கைதனைக் கமழ்சடைஒன்று ஆடாமே
தடுத்தவர்,எம் பெருமானார் தாம்இனிதாய் உறையும்இடம்,
விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென்று இராமற்காப்
புடைத்து, அவனைப் பொருது அழித்தான், புள்ளிருக்கு வேளூரே.

         பொழிப்புரை :சினந்து வேகமாக வருகின்ற கங்கையைத்தனது மணம்கமழும் சடை ஒன்றில் அதுவும் முற்றிலும் நனையாதவாறு தடுத்துத் தாங்கியவராகிய எம் தலைவரும், சீறிவந்த இராவணன் மயங்குமாறு சென்று இராமனுக்காக அவனைப்புடைத்து அவனோடு போரிட்டுத்தடுத்த சடாயுவால் வழிபடப்பெற்றவரும் ஆகிய சிவபெருமான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.

  
பாடல் எண் : 11
செடிஆய உடல்தீர்ப்பான், தீவினைக்குஓர் மருந்துஆவான்,
பொடியாடிக்கு அடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரை,
கடிஆர்ந்த பொழில்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே.

         பொழிப்புரை :குணமில்லாத இவ்வுடலொடு பிறக்கும் பிறப்பை நீக்கியருளுவானும், தீவினை காரணமாகவரும் நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்பவனும், மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியனும் ஆகிய சிவபெருமானுக்கு அடித்தொண்டு பூண்ட மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய கவுணியர்கோன் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் சொல்மாலையைச் சோம்பியிராமல் சொல்லி வழிபடவல்லவர்கட்கு மறு பிறப்பு இல்லை.

                                             திருச்சிற்றம்பலம்


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 189
ஆண்டஅரசு எழுந்தருள, கோலக் காவை
         அவரோடும் சென்றுஇறைஞ்சி, அன்பு கொண்டு
மீண்டுஅருளி னார்,அவரும் விடைகொண்டு இப்பால்
         வேதநா யகர்விரும்பும் பதிகள் ஆன
நீண்டகருப் பறியலூர், புன்கூர், நீடூர்,
         நீடுதிருக் குறுக்கை,திரு நின்றி யூரும்,
காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணி,
         கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.

         பொழிப்புரை : திருநாவுக்கரசர் எழுந்தருளவே அவருடன் சென்று திருக்கோலக்காவைப் பணிந்து அன்பு விடைபெற்று ஞானசம்பந்தர் திரும்பினார். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு மேலும் மறைமுதல்வரான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் பதிகளாய பெருமைமிக்க திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடுர், திருக்குறுக்கை வீரட்டம், திருநின்றியூர், காணும் தகைமையுடைய திருநனிபள்ளி என்ற இவை முதலான பதிகளைச் சேர்ந்து நெற்றிக்கண் உடையவரின் திருவடிகளை வணங்கி மேற்செல்பவராய்.

         குறிப்புரை : திருக்கோலக்காவில் அப்பர் அருளிய பதிகம் கிடைத்திலது. இனி இப்பாடலில் குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஆறனுள் திருக்கருப்பறியலூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. அடுத்து இருக்கும் திருப்புன்கூர், திருநீடுர் ஆகிய இரு பதிகளுக்கும் ஒருங்கியைந்தவாறு ஒரு பதிகம் உள்ளது. அது `பிறவாதே தோன்றிய`(தி.6 ப.11) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும்.

         திருக்குறுக்கை வீரட்டத்திற்கு இரு பதிகங்கள் கிடைத்து உள்ளன.  
1. `ஆதியிற் பிரமனார்` (தி.4 ப.49)- திருநேரிசை;
2. `நெடியமால்` (தி.4 ப.50) - திருநேரிசை.

         இவற்றுள் முன்னைய பதிகத்தில் பாடல் தோறும் வரலாறுகள் அமைந்துள்ளன. இரண்டாவது பதிகத்தில் இரண்டே பாடல்கள் உள்ளன. திருநின்றியூரில் அருளிய திருக்குறுந்தொகைப் பதிகம் `கொடுங்கண் வெண்டலை` (தி.5 ப.23) என்பதாம். திருநனிபள்ளியில் அருளிய பதிகம் `முற்றுணை ஆயினானை` (தி.4 ப.70) எனத் தொடங்கும் திருநேரிசையாம்.

         இனி, இப்பாடற்கண் நனிபள்ளி முதலா நண்ணி என வருதலின் வேறு பிற பதிகளும் தொழுது சென்றமை விளங்குகின்றது. அப்பதிகளும் பாடியருளிய பதிகங்களும்:

1.    திருக்குரக்குக்கா: `மரக்கொக்காம்` (தி.5 ப.75) – திருக்குறுந்தொகை.

2.     திருப்புள்ளிருக்கு வேளூர்:
(அ). `வெள்ளெருக்கு` (தி.5 ப.79) - திருக்குறுந்தொகை;
(ஆ). `ஆண்டானை` (தி.6 ப.54) - திருத்தாண்டகம்.

3.    திருவெண்காடு:
(அ). `பண்காட்டி` (தி.5 ப.49) - திருக்குறுந்தொகை
(ஆ). `தூண்டுசுடர்` (தி.6 ப.35) - திருத்தாண்டகம்.

4.    திருச்சாய்க்காடு:
(அ) `தோடுலாமலர்` (தி.4 ப.65) - திருநேரிசை.
(ஆ). `வானத்து இளமதியும்` (தி.6 ப.82) - திருத்தாண்டகம்.

5.     திருவலம்புரம்:
(அ). `தெண்டிரை` (தி.4 ப.55) - திருநேரிசை
(ஆ). `மண்ணளந்த` (தி.6 ப.58) - திருத்தாண்டகம்.

        
5. 079    திருப்புள்ளிருக்குவேளூர்          திருக்குறுந்தொகை
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வெள் எருக்கு அரவம்விர வும்சடைப்
புள்ளி ருக்குவே ளூர்அரன் பொன்கழல்
உள்இருக்கும் உணர்ச்சி இல் லாதவர்
நள்இ ருப்பர் நரகக் குழியிலே.

         பொழிப்புரை : வெள்ளெருக்கும், பாம்பும் விரவிய சடையொடு கூடிய புள்ளிருக்கு வேளூர்ச் சிவபெருமானின் பொன்னார் திருவடிகள் உள்ளத்துள் இருக்கும் உணர்ச்சி இல்லாதவர்கள் நரகக்குழியில் செறிந்திருப்பர்.


பாடல் எண் : 2
மாற்றம் ஒன்றுஅறி யீர்,மனை வாழ்க்கைபோய்க்
கூற்றம் வந்துஉமைக் கொள்வதன் முன்னமே,
போற்ற வல்லீரேல் புள்ளிருக்கு வேளூர்,
சீற்றம் ஆயின தேய்ந்துஅறும் காண்மினே.

         பொழிப்புரை : விடைசொல்லும் தெளிவில்லாதவராய் மனையில் வாழும் வாழ்க்கைபோய். கூற்றுவன் வந்து உம்மைக் கொள்ளுவதற்கு முன்பே புள்ளிருக்குவேளூரைப் போற்றும் வல்லமை உடையீரேல் சீறுதற்குரிய தீக்குணங்கள் தேய்ந்து அறும்; காண்பீராக.


பாடல் எண் : 3
அரும றையனை, ஆணொடு பெண்ணனை,
கருவி டம்மிக உண்டஎம் கண்டனை,
புரிவெண் நூலனைப் புள்ளிருக்கு வேளூர்
உருகி நைபவர் உள்ளம் குளிருமே.

         பொழிப்புரை : அரிய வேதங்களை உடையவனும், ஆணொடு பெண்ணாகியவனும், கரிய ஆலகாலவிடம் மிக உண்ட விருப்பத்திற்குரிய திருநீலகண்டனும், வெள்ளியமுப்புரி நூலனும் ஆகிய பெருமானைப் புள்ளிருக்குவேளூரில் உருகி நையும் அடியார்களின் உள்ளம் குளிரும்.


பாடல் எண் : 4
தன்உ ருவை ஒருவர்க்கு அறிவொணா
மின்உ ருவனை, மேனிவெண் நீற்றனை,
பொன்உ ருவனை, புள்ளிருக்கு வேளூர்
என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே.

         பொழிப்புரை : தன் உருவத்தை ஒருவர்க்கும் அறிய வொண்ணாத ஒளி உருவனும், மேனியில்பூசிய வெண்ணீற்றனும், பொன்னார் மேனியனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்கு வேளூர் என்று கூறவல்லவர்க்கு இடர்கள் இல்லை.


பாடல் எண் : 5
செங்கண் மால்பிர மற்கும் அறிவொணா
அங்கி யின்உரு ஆகி, அழல்வதுஓர்
பொங்கு அரவனை, புள்ளிருக்கு வேளூர்
மங்கை பாகனை, வாழ்த்த வரும்இன்பே.

         பொழிப்புரை : சிவந்தகண்ணை உடைய திருமாலுக்கும் பிரமனுக்கும் அறியவொண்ணாத அக்கினியின் உருவாகிக் கனலுகின்ற ஒப்பற்ற, பொங்கியெழும் அரவம் அணிந்த இறைவனாகிய புள்ளிருக்குவேளூரில் உமையொருபாகனை வாழ்த்த இன்பம் வரும்.


பாடல் எண் : 6
குற்றம் இல்லியை, கோலச் சிலையினால்
செற்ற வர்புரம் செந்தழல் ஆக்கியை,
புற்று அரவனை, புள்ளிருக்கு வேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.

         பொழிப்புரை : குற்றங்கள் இல்லாதவனும், அழகுமிக்க மேருமலையாகிய வில்லினால் சினந்தவர் முப்புரங்களைச் செந்தழலாக்கியவனும், புற்றரவம் கொண்டவனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்குவேளூரைப் பற்றும் வல்லமை உடையவர்களது பாவங்கள் கெடும்.


பாடல் எண் : 7
கையி னோடுகால் கட்டி, உமர்எலாம்,
ஐயன் வீடினன், என்பதன் முன்னம், நீர்
பொய்யி லாஅரன் புள்ளிருக்கு வேளூர்
மைஉ லாவிய கண்டனை வாழ்த்துமே.

         பொழிப்புரை : கைகளோடு கால்களையும் கட்டி உம்மைச் சேர்ந்தவரெல்லாம் எங்கள் ஐயன் இறந்தனன் என்று கூறுவதன்முன்பே, நீர் பொய்யில்லாத சிவபிரானும், புள்ளிருக்குவேளூர்த் திருநீலகண்டனுமாகிய பெருமானை வாழ்த்துவீராக.


பாடல் எண் : 8
உள்ளம் உள்கி உகந்து சிவன்என்று
மெள்ள உள்க வினைகெடும், மெய்ம்மையே,
புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.

         பொழிப்புரை : உள்ளத்தால் உள்ளி. உவப்புற்று \\\"சிவன்\\\" என்று மெல்ல உள்கினால் வினைகள் கெடுதல் மெய்மையே; சம்பாதி சடாயு ஆகிய புள்ளினார்பணிகின்ற புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுவீராக.


பாடல் எண் : 9
* * * * * * *
பாடல் எண் : 10
அரக்க னார்தலை பத்தும் அழிதர
நெருக்கி, மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்ப னார்உறை புள்ளிருக்கு வேளூர்,
விருப்பி னால்தொழு வார்வினை வீடுமே.

         பொழிப்புரை : இராவணனது தலைபத்தும் அழியும்படி நெருக்கிப் பெருமைமிக்க திருவடி மலர்களை நிறுவிய திருக்கயிலாயமலைத் தலைவர் உறைகின்ற புள்ளிருக்குவேளூரை விருப்பத்தினால் தொழுவார் வினை கெடும்.
                                             திருச்சிற்றம்பலம்



                           6. 054    திருப்புள்ளிருக்குவேளூர்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு,
         அடியோடு முடிஅயன்மால் அறியா வண்ணம்
நீண்டானை, நெடுங்களமா நகரான் தன்னை,
         நேமிவான் படையால்நீள் உரவோன் ஆகம்
கீண்டானை, கேதாரம் மேவி னானை,
         கேடுஇலியை, கிளர்பொறிவாள் அரவோடு என்பு
பூண்டானை, புள்ளிருக்கு வேளூ ரானைப்
         போற்றாதே, ஆற்றநாள் போக்கி னேனே.

         பொழிப்புரை :அடியேனை அடிமையாகக் கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் அனற்பிழம்பாய் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பல நாள்களை வீணாகக் கழித்து விட்டேனே.


பாடல் எண் : 2
சீர்த்தானை, சிறந்துஅடியேன் சிந்தை யுள்ளே
         திகழ்ந்தானை, சிவன்தன்னை, தேவதேவை,
கூர்த்தானை, கொடுநெடுவேல் கூற்றந் தன்னைக்
         குரைகழலால் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானை, பிறப்புஇலியை, இறப்புஒன்று இல்லாப்
         பெம்மானை, கைம்மாவின் உரிவை பேணிப்
போர்த்தானை, புள்ளிருக்கு வேளூ ரானைப்
         போற்றாதே, ஆற்றநாள் போக்கி னேனே.

         பொழிப்புரை :அடியேனுடைய உள்ளத்தில் சிறப்பாகக் கிட்டினவனாய் விளங்குகின்ற சிவனாகிய தேவதேவனாய், மிக நுண்ணியனாய், கொடிய நீண்ட வேலை ஏந்தி வந்த கூற்றுவனைத் திருவடியால் உதைத்து, முனிவனாகிய மார்க்கண்டேயன் கொண்ட யம பயத்தைப் போக்கியவனாய், பிறப்பு இறப்பு இல்லாத தலைவனாய், யானைத் தோலை விரும்பிப் போர்த்தவனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.


பாடல் எண் : 3
பத்திமையால் பணிந்து,அடியேன் தன்னைப் பன்னாள்
         பாமாலை பாடப் பயில்வித் தானை,
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை,
         எம்மானை, என்உள்ளத் துஉள்ளே ஊறும்
அத்தேனை, அமுதத்தை, ஆவின் பாலை,
         அண்ணிக்கும் தீங்கரும்பை, அரனை, ஆதிப்
புத்தேளை, புள்ளிருக்கு வேளூ ரானைப்
         போற்றாதே, ஆற்றநாள் போக்கி னேனே.

         பொழிப்புரை :அடியேன் பக்தியோடு வணங்கித் தன்னைப் பலநாளும் பாமாலைகளால் போற்றுமாறு பழக்கியவனாய், எல்லாத்தெய்வங்களும் துதிக்கும் தெய்வமாய், என் தலைவனாய், என் உள்ளத்து ஊறும் தேன் அமுதம் பசுப்பால், இனிய கரும்பு என்பன போன்று இனியனாய்ப் பகைவரை அழிப்பவனாய், ஆதிக் கடவுளாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.


பாடல் எண் : 4
இருள்ஆய உள்ளத்தின் இருளை நீக்கி,
         இடர்பாவம் கெடுத்து,ஏழை யேனை உய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டி, தன்போல்
         சிவலோக நெறிஅறியச் சிந்தை தந்த
அருளானை, ஆதிமா தவத்து உளானை,
         ஆறுஅங்க நால்வேதத்து அப்பால் நின்ற
பொருளானை, புள்ளிருக்கு வேளூ ரானைப்
         போற்றாதே, ஆற்றநாள் போக்கினேனே.

         பொழிப்புரை :என் இருண்ட உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தைப் போக்க அறிவற்ற என் துயரங்களையும் தீவினைகளையும் போக்கி, நான் கடைத்தேறுமாறு என் தெளிவற்ற மனத்தில் தெளிவு பிறப்பித்து, தன்னைப் போலச் சிவலோகத்தின் வழியை அறியும் உள்ளத்தை வழங்கிய அருளாளனாய், தொடக்கத்திலிருந்தே பெரிய தவத்தில் நிலைபெற்றிருப்பவனாய், நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் இவற்றிற்கு அப்பாற்பட்ட பொருளாய் உள்ள புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.


பாடல் எண் : 5
மின்உருவை, விண்அகத்தில் ஒன்றாய், மிக்கு
         வீசுங்கால் தன்அகத்தில் இரண்டாய், செந்தீத்
தன்உருவின் மூன்றாய், தாழ் புனலின் நான்காய்,
         தரணிதலத்து அஞ்சுஆகி, எஞ்சாத் தஞ்ச
மன்உருவை, வான்பவளக் கொழுந்தை, முத்தை,
         வளர்ஒளியை, வயிரத்தை, மாசுஒன்று இல்லாப்
பொன்உருவை, புள்ளிருக்கு வேளூ ரானைப்
         போற்றாதே, ஆற்றநாள் போக்கி னேனே.

         பொழிப்புரை :மின்னல் போன்று பிரகாசிக்கும் உருவினனாய், வானத்தில் ஒலி என்ற ஒரே பண்பாய், வீசும் காற்றில் ஒலி ஊறு என்ற இருபண்புகளாய், சிவந்த நெருப்பில் ஒளி, ஊறு, ஒலி என்ற முப்பண்புகளாய், பள்ளம் நோக்கிச் செல்லும் நீரில் சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற நான்கு பண்புகளாய், நிலத்தில் நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற ஐந்து பண்புகளாய்க் குறையாத புகலிடமாக நிலைபெற்ற பொருளாய், பவளக் கொழுந்தாய், முத்தாய், வளர் ஒளியாய், வயிரமாய், பொன்போலும் நிறமுடைய புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.


பாடல் எண் : 6
அறைஆர்பொன் கழல்ஆர்ப்ப அணியார் தில்லை
         அம்பலத்துள் நடமாடும் அழகன் தன்னை,
கறையார்மூ இலைநெடுவேல் கடவுள் தன்னை,
         கடல்நாகைக் காரோணம் கருதி னானை,
இறையானை, என்உள்ளத் துஉள்ளே விள்ளாது
         இருந்தானை, ஏழ்பொழிலும் தாங்கி நின்ற
பொறையானை, புள்ளிருக்கு வேளூ ரானைப்
         போற்றாதே, ஆற்றநாள் போக்கி னேனே.

         பொழிப்புரை :பொன்னாலாகிய கழல் ஒலிக்கத் தில்லை அம்பலத்துள் கூத்தாடும் அழகனாய், விடக்கறை பொருந்திய முத்தலைச் சூலப்படையனாய்க் கடலை அடுத்த நாகைக் காரோணத்தை உறைவிடமாக விரும்பியவனாய், என் உள்ளத்துள்ளே தங்கி நீங்காது இருந்தவனாய், ஏழுலகப் பாரத்தையும் தாங்குபவனாய், உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.


பாடல் எண் : 7
நெருப்புஅனைய திருமேனி வெண்ணீற் றானை,
         நீங்காதுஎன் உள்ளத்தின் உள்ளே நின்ற
விருப்பவனை, வேதியனை, வேத வித்தை,
         வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை, இடைமருதோடு ஈங்கோய் நீங்கா
         இறையவனை, எனைஆளுங் கயிலை என்னும்
பொருப்பவனை, புள்ளிருக்கு வேளூ ரானைப்
         போற்றாதே, ஆற்றநாள் போக்கி னேனே.

         பொழிப்புரை :நெருப்பினை ஒத்த சிவந்த திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனாய், என் உள்ளத்தினுள்ளே நீங்காது விரும்பி இருப்பவனாய், வேதம் ஓதுபவனாய், வேதத்தை நன்கு உணர்ந்தவனாய், வெண்காடு, துருத்தி, இடைமருது, ஈங்கோய்மலை இவற்றை நீங்காத இறையவனாய், என்னை ஆட்கொண்ட, கயிலாய மலையை உறைவிடமாகக் கொண்ட புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.


பாடல் எண் : 8
பேர்ஆ யிரம்பரவி வானோர் ஏத்தும்
         பெம்மானை, பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப் பானை,
         மந்திரமுந் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்துஅருள வல்லான் தன்னை,
         திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானை, புள்ளிருக்கு வேளூ ரானைப்
         போற்றாதே, ஆற்றநாள் போக்கி னேனே.

         பொழிப்புரை :ஆயிரம் திருநாமங்களை முன்னின்று உச்சரித்துத் தேவர்கள் துதிக்கும் பெருமானாய்த் தன்னை விடுத்து நீங்காத அடியவர்களுக்கும் என்றும் பிறப்பெடுக்கவாராத வீடுபேற்றுச் செல்வத்தை வழங்குபவனாய், மந்திரமும் அவற்றைச் செயற்படுத்தும் முறைகளும் மருந்துமாகித் தீராத நோய்களைப் போக்கியருள வல்லானாய், திரிபுரங்கள் தீப்பற்றிச் சாம்பலாகுமாறு திண்ணிய வில்லைக் கைக்கொண்டு போரிடுதலில் ஈடுபட்டவனான புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.


பாடல் எண் : 9
பண்ணியனை, பைங்கொடியாள் பாகன் தன்னை,
         படர்சடைமேல் புனல்கரந்த படிறன் தன்னை,
நண்ணியனை, என்னாக்கித் தன்ஆ னானை,
         நான்மறையின் நற்பொருளை, நளிர்வெண் திங்கள்
கண்ணியனை, கடியநடை விடைஒன்று ஏறும்
         காரணனை, நாரணனை, கமலத்து ஓங்கும்
புண்ணியனை, புள்ளிருக்கு வேளூ ரானைப்
         போற்றாதே, ஆற்றநாள் போக்கி னேனே.

         பொழிப்புரை :எல்லாப் பொருள்களையும் ஆக்கியவனாய்ப் பார்வதிபாகனாய், பரவிய சடையிலே கங்கையை மறைத்தவஞ்சகனாய், எனக்குத் துணையாய், உடன் நின்று என்னைத் திருத்தித் தன்னிடத்தினின்றும் நீங்காது அணைத்துக்கொண்டவனாய், நான் மறையின் சிறந்த பொருளாய், குளிர்ந்த வெண்பிறையை முடிமாலையாகச் சூடியவனாய், விரைந்து செல்லும் காளையை இவர்ந்த உலக காரணனாய், நாரணனாய், தாமரையில் தங்கும் பிரமனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.


பாடல் எண் : 10
இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்,
         எழுநரம்பின் இன்னிசைகேட் டு இன்புற் றானை,
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்,
         அலைகடலில் ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை, கண்அழலால் காமன் ஆகம்
         காய்ந்தானை, கனல்மழுவும் கலையும் அங்கை
பொறுத்தானை, புள்ளிருக்கு வேளூ ரானைப்
         போற்றாதே, ஆற்றநாள் போக்கி னேனே.

         பொழிப்புரை :இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கியவனாய், பின் அவன் எழுப்பிய நரம்பின் இசை கேட்டு மகிழ்ந்தவனாய், அடியார்களுடைய கொடிய நோய்களையும் தீவினைகளையும் போக்கியவனாய், அலைவீசும் கடலின் விடமுண்ட நீல கண்டனாய், நெற்றிக்கண் தீயினால் மன்மதனுடைய உடலை எரித்தவனாய், தீப்பொறி கக்கும் மழுப்படையையும் மானையும் அழகிய கைகளில் கொண்டவனாய், உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

                                             திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 18

  "கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும் மெய் சொல்லார், பசித்தவர்க்கு அன்னம் கொடார், குருசொன்னபடி நில்லார், அறத்தை நினையார், நின்நா...